சின்னு என்கிற சின்னசாமியும் அக்கீ என்கிற அக்கீசியாவும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2025
பார்வையிட்டோர்: 3,063 
 
 

அத்தியாயம 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம் – 5

அன்று ஞாயிற்றுக்கிழமை.

விடியல் இதமாயிருந்தது. சின்னசாமி கட்டிலில் புரண்டுகொண்டிருந்தான்.

நினைவுகளின் சுகம் காட்டருவி போல் பெருகிவரும் நேரத்தில் சிணுங்கும் கைப்பேசி. கொட்டாவி விட்டவாறு “ஹலோ” என்றான்.

“சின்னசாமி! சாமிநாதன் பேசறேன்… குட் மார்னிங்”

“சார்.. சார்.. அங்கிள்! குட் மார்னிங்” என்றவாறு வாரிச் சுற்றிக்கொண்டு, போர்வையை உதறிவிட்டு எழுந்தான்.

“அங்கிள்.. இன்னைக்குப் போலாமா?”

“ஓஓ.. அக்கீசியா வீட்டுக்கா.. ம்ம் … அதுக்கு முன்னாலே உங்கிட்டக் கொஞ்சம் பேசணுமே”

“அப்படியா.. மாமா ஏதாச்சும் சொன்னாரா?”

“நோ நோ.. அவரு ரெண்டு நாள் ஊருலே இல்லே.. அது இருக்கட்டும்.. இப்ப நீ என்ன பண்றே?”

“சொல்லுங்க அங்கிள்.. இன்னைக்கு ஃபிரீதான்”

“ஓகே.. டிபன் எல்லாம் முடிச்சிட்டு… வீட்டுக்கு வர்றியா.. அட்ரஸ் வாட்ஸாப்லே ஷேர் பண்றேன் “

சின்னசாமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. மாமாவும் இல்லை. இவர் எதற்கு தனியாக ஆவர்த்தனம் பண்ணவேண்டும்…

ஒரு டவுன் பஸ்ஸில் ஏறி.. ஆயில் மில் ஸ்டாப்பில் இறங்கி… பசுவையா சாலையில் சிறிது தூரம் கடந்து.. மூன்றாவது குறுக்கு சாலையில் நுழைந்தவன் சற்று நேரம் தாமதித்தான்.

மூலையில் ஓர் அடுக்கு மாடிக்குடியிருப்பு ஒரு செடியைப் போல் மெல்ல எழும்பிக்கொண்டிருந்தது. இவன் ஒதுங்கி நின்றுகொண்டிருப்பதை, அங்கிருந்த ஒருவன் — கட்டிட மேஸ்திரியாகத்தான் இருக்கவேண்டும் –

பார்த்தான்.

“தம்பி.. என்னவேண்டும்? கான்ட்ராக்டரைப் பார்க்கணுமா?”

கான்ட்ராக்டர் ?

“இல்லேங்க.. சாமிநாதன் சார் வீடு…”

“அவருதாம்பா.. பில்டிங் கான்ட்ராக்டர்… அங்கே தெரிது பாரு.. மூணாவது வீடு..அதுதான்”

“எதுங்க.. அங்கே ஒரு பொண்ணு நாயைப் பிடிச்சிட்டு நின்னுட்டு இருக்கே, அதுவா?” என்றான் சின்னசாமி, தன் பார்வையை எட்ட வீசியவாறு.

“அதேதான்!”

“தேங்க்ஸ்”

சாமிநாதன் வீட்டு கேட் அருகே போய் நின்றான்.

நாயும் அவளும் ஒருசேர அவனைப் பார்த்தார்கள்.

“யாரைப் பார்க்கணும்? ” – அவள் தேன்குரலில் கேட்டாள்.

“சாமிநாதன் சார்”

“ஓ.. என் அப்பாதான்.. உள்ளே போய் உட்காருங்க.. வருவாரு”

அவன் தயங்கித்தயங்கி சுவரோரமாக ஒதுங்கினான். அவள் புரிந்து கொண்டவளாய், “தைரியமாக வாங்க… நாயி ஒண்ணும் பண்ணாது” என்றாள்.

“அது நாய்க்குத் தெரியுங்களா?” என்றான் சின்னசாமி.

அவள், அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு ‘களுக்’கென்று சிரித்தாள்.

சின்னசாமி ரசித்துக் கொண்டே உள்ளே போனான். விசாலமான வரவேற்பு அறையில் மூலைக்கு மூலை சாம்பல் நிறத்தில் சோஃபா செட்டுகள். மாடர்ன் ஆர்ட் போல் வழிந்து கொண்டிருக்கும் சன்னல் திரைகள் .ஒரு மூலையில் மேல்மாடிக்கு நெளிந்து செல்லும் படிக்கட்டுகள். தரை பூரா அரக்குக் கலரில் விலையுயர்ந்த கார்பெட். அடேயப்பா.. மனுஷன் பணத்தை வாரி இறைத்திருக்கவேண்டும். மாமாவுக்கு இப்படியொரு நட்பா… ஆச்சரியத்தில் அசைவற்று அமர்ந்திருக்கும்போது —

அவனைக் கடந்து “டாடி…டாடி” என்று கூவியவாறே அந்த இளம் மான் படிக்கட்டுகளில் தாவித் தாவி ஓடிற்று. நொடியில் அவன் விழிகளில் அக்கீசியாவும், ரூபிணியும் படபடப்புடன் பட்டாம்பூச்சி கணக்காய் வந்து போனார்கள்.

“வாங்க தம்பி!” – வாய் நிறைய சிரிப்புடன் சாமிநாதன் படிக்கட்டுகளில் இறங்கி வந்தார்.

“ரோகிணி! எங்கே போற.. இங்க வா.. போய் காஃபி, கொரிக்கறதுக்கு ஏதாச்சும் எடுத்திட்டு வா.. அம்முக்குட்டி போய்ட்டாளா?”

“இல்லே டாடி.. கிச்சன்லே வேலையே இன்னும் தீரலை”

“ஓ.. அப்படியா.. அவளை எடுத்திட்டு வரச் சொல்லு… நீ இங்கே வாம்மா”

அவள் தோற்றமே கொஞ்சம் ரம்மியமாகத்தான் இருந்தது. சின்னு உறைந்துதான் போனான். அவள் குழைந்தவாறே அவனுக்கு எதிர்புறமுள்ள சோஃபாவில் ஒடுங்கினாள்.

“சின்னசாமி! என்னோட ஒரே டாட்டர்.. பேரு ரோகிணி.. லண்டன்லே பிசினஸ் ஸ்கூல்லே படிச்சு முடிச்சிட்டு வந்திருக்கா… ம்ம்”

சின்னசாமி சிலிர்த்துப்போனான். எதிரில் இருப்பது ஸ்ட்ராபெரியா? ப்ளம்ஸா?

“என்ன பேரு… சின்னசாமியா?”

இந்தப் பெயரைக் கேட்டதும் அவளுக்கு வியப்பாகவும் சிரிப்பாகவும் இருந்தது. காஃபி தின்பண்டம் வந்தது.

அப்போது —

பில்டிங் சைட்டிலிருந்து ஓர் ஆள் ஓடி வந்தான்.

சார்.. யாரோ ரெண்டு பார்ட்டி வந்திருக்காங்க.. உங்களைப் பார்க்கணுமாம்… ரொம்ப அவசரம்”

“தம்பி பேசிட்டிருங்க.. இப்ப வந்தர்றேன் சாமிநாதன் ‘மடமட’வென்று வெளியேறினார்”

அவனுக்கு இலச்சையாக இருந்தது. எதற்கு இந்த பில்டப்? அவன் எதிர்பார்த்து வந்தது வேறு. அவள் என்ன பேசுவாளோ… வெளிநாட்டில் படித்தவள். நாகரீகம் தெரிந்தவள். என்ன பதில் சொல்வது? சுதாரித்துக் கொண்டான்.

“ப்ளீஸ்.. காஃபி எடுத்துக்குங்க.. சூடு ஆறீரும்”

அவள் பேசிய முதல் வார்த்தை. இந்த இளைஞனிடத்தில் என்ன பேசுவது.. அப்பா வேற பேசிட்டிருங்கன்னுட்டுப் போய்ட்டாரு! அவளும் சிறிதுநேரம் தலைகுத்தியிருந்தாள். இரண்டு பேரும் ‘பெரிய மனுஷ’த்தனமா குடும்ப வரலாற்றைப் பற்றிப் பேசினார்கள்.

“லண்டன்லே எம்பிஏ முடிச்சிருக்கீங்க.. ஜாப் ட்ரை பண்ணலியா?”

“கண்டிப்பா வேலைக்குப் போகணும்.. நல்ல கம்பெனியாப் பார்த்திட்டிருக்கேன்”

“இங்கயா.. ஃபாரின்லையா?”

“ஏதோ ஒரு பக்கம்.. ஃபிரெண்ட்ஸ் எல்லாம் யுகே வரச் சொல்லறீங்க .. எனக்கு அப்பாவே தனியா விட்டுட்டு போக மனசில்லே.. அம்மா கேன்ஸர்லே இறந்துட்டாங்க.. அப்பாவுக்கு எம்மேலே ரொம்பப் பிரியம்… இங்கயே இருக்கத்தான் சொல்லுவாரு.. இன்னும் ஃபியூச்சர் பிளான் பத்தி யோசிக்கலே..

“நீங்க என்ன பண்ணப்போறீங்க?” என்றாள் ரோகிணி.

“நானும் பிஜி பண்ணலாம்னுதான் இருக்கேன்.. அப்பத்தான் நல்ல எதிர்காலம்… இல்லீங்களா”

“ஸ்யூர்!”

சாமிநாதன் உள்ளே நுழைந்தார்.

“ஸாரி தம்பி… ரெண்டு பார்ட்டி வந்துட்டாங்க.. ஒரு அபார்ட்மெண்ட் புக் ஆகியிருக்கு”

“நீங்க சிவிலா ஸார்”

“ஆமா தம்பி எதோ பழைய சிவிலுன்னு வச்சுக்கோயேன்!” சிரித்தவாறு அவன் அருகே வந்து அமர்ந்தார்.

ரோகிணி குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அப்புறம் தம்பி.. தமிழ் லிட்டரேச்சேர் படிக்கறியாமே.. அதுலே இன்டெர்ஸ்ட்டா”

“ஆமா சார்”

“என்னப்பா நீ.. சாரு மோருன்னுட்டு… அங்கிள்ன்னு சொல்லேன்” என்றவாறு அவன் தோள்மீது கை போட்டார்.

‘என்ன இது.. இந்த ஆளு நூலு விடறதைப் பார்த்தா.. பயமாயிருக்கு! இவ ஒரு ஹைஃபை கேர்ள்! லண்டன்லே காய்ச்ச காஸ்ட்லி பழமாட்டா இருக்கா.. இவ செட் ஆகாது!’ அவன் எண்ணங்கள் தாறுமாறாய் ஓடின. ஆனால் அவள் முறுவலில் ஒரு கணம் சொக்கித்தான் போனான்.

“அங்கிள்.. நான் பி ஜி பண்ணிட்டு டாக்டரேட் பண்ணனும்… அப்புறம் காலேஜ்லே வாத்தியாராப் போகணும்.. இதுதான் என்னோட ஆம்பிஷன்!”

“உன்னோட பேரன்ட்ஸ் என்ன சொல்றாங்க?”

“அவங்க உம் பிரியம்போல படின்னுட்டு பூனா போய்ட்டாங்க.”

“இப்ப எங்கே தங்கியிருக்க?” என்று அக்கறையுடன் கேட்டார் சாமிநாதன்

வாடகைக்கு ரூம் எடுத்து இருப்பதைச் சொன்னான்.

“ஏப்பா.. ஒரு யோசனை.. எதிர்த்தாப்புலே ஒரு போர்ஷன் காலியா இருக்கு.. வந்துறேன்.. உன் மாமாகிட்டேக்கூட நல்ல பார்ட்டியா இருந்தாச் சொல்லச் சொன்னேன்”

“வேண்டா அங்கிள்.. ஒரு தனி ஆளுக்கு எதுக்கு அவ்வளவு பெரிய போர்ஷன். வாடகை அதிகமா இருக்குமே”

“அட போப்பா நீ.. என்டயர் போர்ஷன் என்னோடது.. உன்னை வாடகை கொடுன்னு கேட்டனா.. சும்மாகிடக்கிற வீட்டை யூஸ் பண்ணனும்… அவ்வளவுதான்! இல்லேன்னு வச்சுக்க… வீடு பாழாப் போயிரும்”

“அதுக்கு ஒரு நல்ல பார்ட்டியாப் பார்த்து வாடகைக்கே விட்றலாமே!” என்றான் சின்னசாமி வெகுளியாக.

“என்ன தம்பி நீ.. புரிஞ்சிக்காம இருக்கறியே” என்று தலையில் அடித்துக்கொண்டார் சாமிநாதன்.

ரோகிணி எழுந்து அவனையே ஓரக்கண்ணால் வெட்டியவாறே கடக்க முயன்றாள்.

“அம்மா ரோகிணி.. அம்முக்குட்டி கிட்டச் சொல்லி லஞ்சுக்கு ஏற்பாடு பண்ணு.. போ”

சின்னசாமி உடனே இருக்கையை விட்டெழுந்தான்.

“தம்பி! நீ போகக் கூடாது.. இரு, லஞ்சு முடிச்சிட்டு மெதுவாப் போலாம்”

‘அங்கிள் வேண்டாம்.. இன்னொரு நாளைக்கு வர்றேன் .. ஒரு அவசர வேலை இருக்கு”

அப்பொழுது — யாரோ காலிங் பெல் அடித்தார்கள்.

ரோகிணி ஓடிப்போய் கதவை நீக்க- அங்கே- வரதராசன் – சின்னசாமியின் மாமா நின்றுகொண்டிருந்தார்.

“அட… என்னப்பா தம்பி! இது நம்ம வீடா நினைச்சுக்க.. எப்படியும் இது சாப்பிடற நேரம்தானே!”

சாமிநாதன் கெஞ்சலாய் அவனையே பார்த்தார்.

ரோகிணிக்கு வேடிக்கையாயிருந்தது.

‘தம்பி ரொம்பத்தான் பிகு பண்ணுதே!’

‘எப்படியாச்சும் இவனை அமுக்கி சாப்பிட வைக்கணுமே’ சாமிநாதன் தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தார்.

“ஏம்மா.. இங்க வா! டீவீயை ஆன் பண்ணி டிவிடியப் போட்டு, நீ லண்டன் பூராப் பார்த்ததைப் போட்டுக்காட்டு! நீ அங்கே நெறைய கல்ச்சுரல் ப்ரோக்ராமெல்லாம் பண்ணியிருக்கியே … எல்லாத்தையும் போட்டுக் காட்டு.. தம்பி பாக்கட்டும்!” என்ற சாமிநாதன் “வாப்பா… வரதா!” என்று வரதராசனை வரவேற்றார்.

‘என்னமோ நடக்குது.. அதுவும், என்னமாய் நடக்குது!’ – சின்னசாமி நெகிழ்ந்து போனான்.

ரோகிணி அவனருகே அமர்ந்தவாறு, லண்டன், மான்செஸ்டர், டப்லின், எடின்பர்க் என்று சின்னசாமியை ஒரு சுற்றுலாப் பயணியாக மாற்றினாள்.

அந்த இன்பச் சுற்றுலாவில் அவன் சொக்கித்தான் போனான்.

“என்னங்க… இதெல்லாம் பார்த்திருக்கீங்களா… எந்த சந்தேகமும் கேட்கமாட்டேங்கறீங்க?” ஓரக்கண்னால் அவனைப் பார்த்தவாறு அதரங்களை விரித்தாள்.

“என்னங்க ஜோக் அடிக்கிறீங்க… இந்த இடத்தையெல்லாம் நான் எப்படீங்க .. ஆனா ஒண்ணு” சின்னசாமி கொக்கி போட்டான்.

“ஆனா ஒண்ணா? அதென்னங்க?”

“அதிலே ஒண்ணைமட்டும் பார்த்திருக்கறேன்”

“அந்த ஒண்ணுதான் என்னங்கறேன்”

“நீங்கதான்!”

அவள் வெட்கினாள்.

“என்னோட ப்ரோக்ராமெல்லாம் எப்படியிருக்கு.. ரசிச்சீங்களா?”

“என்னங்க இப்படிக் கேட்கறீங்க… உங்களுக்கு நல்ல ஃபோட்டோ பேஸ்!”

“தேங்க்யூ… தேங்க்யூ!”

“இயற்கை, பெண்களுக்குக் கொடுக்கிற முதல் பரிசே அழகு தாங்க!”

“அப்படீங்களா கவிஞரே” – ரோகிணி வழிந்தாள்.

‘ரொம்ப வழியாதே, அழகியே! முதன்முதலில் திருப்பி எடுத்துக்கறதும் அதைத்தான்!’ – மனதில் நினைத்துக் கொண்டான் சின்னசாமி.

அத்தியாயம் – 6

சின்னசாமிக்கு ஒரே ஆச்சரியம். எல்லாம் சொல்லி வைத்தமாதிரியிருந்தது. என்னமோ எல்லோரும் சேர்ந்து ‘பிளாக் மெயில்’ பண்ணுவது போலிருந்தது. அப்படியென்றால் அக்கீசியாவைப் பற்றிய கனவு? இவர்கள் எந்த வகையிலும் உதவமாட்டார்கள் என்றுதான் அவனால் அப்போதைக்கு நினைக்கத் தோன்றியது. சின்னசாமி இங்கு வந்த விஷயம் மாமா வரதராஜனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்படித்தான் சின்னசாமியும் எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால், சின்னசாமியின் வருகையைக் குறித்து சாமிநாதன் ஏற்கனவே சொல்லிவைத்திருந்தார்!

ஆனால், அவரது நடவடிக்கை வேறு மாதிரியிருந்தது.

“என்ன சின்னசாமி, இந்தப் பக்கம்?” என்றவாறு, வாங்கிவந்த பழங்கள் நிரம்பிய பையை” இந்தம்மா ரோகிணி” என்று அவளிடம் கொடுத்தார்.

“என்ன மாமா நீங்க.. அங்கிள் வரச்சொன்னாரு.. அதனாலே வந்தேன்”

அடடே.. எப்பப்பா அங்கிள் ஆனே!” என்று சாமிநாதனைப் பார்த்து முறுவலித்தார்.

இந்தக் காட்சியில் ரோகிணியின் பூமுகமும் தனித்துவமாக விகசித்தது.

வரதராஜனும் சாமிநாதனும் அருகருகே அமர… எதிர்புறம் சின்னசாமி.

அவன் நிலைமை இருதலைக்கொள்ளிபோல் இருந்தது.

“அப்புறம் சாமி! தம்பி என்ன சொல்லுது?” — சற்று தொலைவில் டைனிங் டேபிள் அருகே ஒதுங்கியிருந்த ரோகிணியை ஓரக்கண்ணால் பார்த்தவாறே.

அவள் ஓர் அழகி. சேக்ஸ்பியரின் டெஸ்டிமோனா மாதிரி! ஒருவேளை அவள் மோகன விழிகள் வலையை விசிறியிருந்தால் … சின்னசாமியென்ன, இந்நேரம் எத்தனையோ மீன்கள் சிக்கியிருக்கும். எந்த அதிசயமும்

நடந்தமாதிரி தெரியவில்லையே… அந்தக்கணத்தில் சாமிநாதனால் அப்படித்தான் புரிந்துகொள்ள முடிந்தது.

“தம்பி சொல்றதப் பார்த்தா.. முதல்லே பி.ஹெச்.டி முடிக்கணுமாம்”

“ம்ம். நல்லதுதான்… அக்காகிட்டப் பேசறேன்… அவங்க பூனாவிலே இருக்காங்க” என்றார் வரதராசன்.

“அப்புறம்.. ஆப்போசிட்லே ஒரு பிளாட் சும்மாவே கெடக்குது.. தம்பிகிட்டச் சொன்னேன்”

“அப்படியா… நல்லதுதான்… எதுக்கு வெட்டியா வாடகை கொடுக்கணும்.. பேசாம வந்துரு சின்னசாமி” என்று அவனைப்பார்த்துச் சொன்னார் வரதராசன்.

“இல்லை மாமா.. இப்ப காலேஜ் முடியப்போகுது.. பி.ஜி.லே சேர்றப்போ யோசிக்கறேன்.. சீக்கிரத்திலே பூனா கெளம்பிடுவேன். வந்து பார்த்துக்கலாம்” என்றான் சின்னசாமி எச்சரிக்கையாக.

“ஏம்மா ரோகிணி… லன்ச் ரெடியான்னு கேளு”

“டாடி.. இன்னும் அரைமணி நேரம் ஆகுமாம்”

“சரி.. இங்க வா… தம்பியக் கூட்டிட்டு போயி அந்த வீட்டைக் காட்டிட்டு வா… ரூம் சாவியே எடுத்திட்டு போ! நாங்க கொஞ்சம் பேசிட்டு இருக்கோம் “என்றார் சாமிநாதன்.

ரோகிணி சாவியை எடுத்துக் கொண்டு வாசலுக்குப் போனாள்.

‘ஆனது ஆச்சு.. என்னதான் நடக்குதுன்னு பாக்கலாமே’ சின்னசாமி திடமாய் அவளைப் பின் தொடர்ந்தான்.

“என்ன சாமி.. நம்ப பிளான்?”

“எனக்கு நம்பிக்கை இல்லேன்னு தோணுது.. எம் பொண்ணுக்கு ரெண்டு மனசு.. ஒண்ணு, லண்டன் போயி அவ ஃபிரெண்ட்ஸோட சேர்ந்து வேலை பாக்கணும்.. அதோட என்னைவிட்டுப் பிரிறதுக்கும் மனசில்லே.. நீ இருக்கறதுனால மெல்லக் காயை நகர்த்திப் பாக்கலாம்னு” என்றார் சாமிநாதன், வெள்ளைவெளேர் இளந்தாடியை நீவிக்கொண்டே.

“அவனும் சின்னப் பையன்தான்… இப்பக் கல்யாணப் பேச்சை பேசறதே நல்லாவும் இல்லையே!”

“அப்ப மால்லே பார்த்தமே ஒரு பொண்ணு அதுக்கு என்ன அர்த்தம்?

“ஓ… அக்கீசியாவா? அவனுக்கு அந்தப் பொண்ணு மேலே ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கும்னு நெனைக்கிறேன்” என்றார் வரதராசன்.

“அந்தத் தம்பியெ இங்கே வரச் சொன்ன போதே, அவங்க வீட்டுக்குப் போறதைப் பத்திப் பேசறதுக்குன்னுதான்னு நெனைச்சிருப்பான்!” என்றார் சாமிநாதன்.

“சரி.. இப்ப என்ன செய்யலாம்?”

“அந்த நாவலாசிரியரேப் பாக்கலாம்னு அப்பச் சொன்னேன்.. இப்ப அதைவிட இது முக்கியமாப் படுது. சரிப்பா.. லஞ்சு முடிச்சிட்டுப் பேசிப்பார்ப்போம்”

ரோகிணியும் சின்னசாமியும் பிளாட்டுக்குள் நுழைந்தார்கள். ஒவ்வொரு அறையாகக் காட்டினாள்.

“பிடிச்சிருக்கா?” – ரோகிணி பக்கவாட்டில் அவனைப் பார்த்தவாறு கேட்டாள்.

“பிடிச்சிருக்கு”

“எதைச் சொல்றீங்க? ” -அவள் பார்வை திறந்திருந்த சன்னலுக்கு அப்பாலிருந்தது.

“எல்லாமேதான்!”

“எல்லாமேதான்னா?”

“இப்போதைக்கு ஒண்ணுன்னு வச்சுக்குங்களேன்!”

“அப்புறம்?”

“அப்புறம் ஒருத்தருக்கு இவ்வளவு பெரிய பிளாட் தேவையான்னு யோசிக்கறேன்”

“ஒருத்தர் ரெண்டுபேரா ஆச்சுன்னா தேவைதானே!” – அவள் ‘களுக்’ கென்று சிரித்தாள்.

அவன் மனசுக்குள் ரசித்தான்.

“ரெண்டு பேரா வந்தா இவ்வளவு பெரிய பிளாட் ரொம்ப சின்னதாப் போயிரும்!”

“நீங்க இலக்கியம் படிக்கிறீங்க… நல்லாப் பேசறீங்க”

சிறிது நேரம் மௌனம். அந்த ‘பிரேக்’கும் தேவைதானே.

“நீங்க பால்கனிலே வெய்ட் பண்ணுங்க.. ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்” என்றவாறே பாக்கெட்டிலிருந்த செல்போன், டயரி ,பேனா எல்லாவற்றையும் எடுத்து மேசைமீது வைத்துவிட்டுக் கடந்து சென்றான், சின்னசாமி.

அடுத்த நிமிடம் —

கைபேசி கிணுகிணுத்து நின்றுவிட்டது.

ரோகிணி அதையெடுத்து, அழைப்பு எங்கிருந்து என்று பார்த்தாள்.

முகப்பில் ‘அக்கீசியா ‘ என்றிருந்தது.

அதற்குள் சின்னசாமி முகத்தைத் துடைத்தவாறு வெளியே வந்தான்.

“உங்களுக்கு கால்.. அக்கீசியா”

“சரி.. அப்புறம் பேசிக்கறேன்”

“யாருன்னு தெரிஞ்சுக்கலாமா”

“தாராளமா… காலேஜ் மேட்”

“கேர்ள் பிரண்டா?”

“ஏன்.. இருக்கக் கூடாதா”

“ஒய் நாட்? அப்பத்தான் நாட்கள் இன்டெரெஸ்டாப் போகும்!” என்று சிரித்தாள் ரோகிணி.

“உங்களுக்கு? லண்டனிலே பாய் பிரண்ட் ஏதாச்சும்?”

அவள் பிரதியுத்தரமாக ஏதும் சொல்லாமல் “வாங்க.. லஞ்சு ரெடியாயிருச்சு.. டாடி கூப்பிடறாரு” என்றாள்.

‘இவள் காஸீவலாக இருக்கிறாள். இவளோட அப்பாதான் ஏதோ ‘கேம் ‘ஆடற மாதிரி தெரிது!’

சின்னசாமி சுதாரித்துக் கொண்டான். செல்வம்,செல்வாக்கு, வசதி, வாய்ப்பு.. இவையெல்லாமே மனிதனை, இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கவைத்த்துப் பதற்றப்பட வைத்து விடுகிறது. ஆனால் சின்னசாமி நிதானமாக இருந்தான். இதுபோன்ற ‘தொல்லை’களை சமாளித்தாகவேண்டும். இனி… சாமிநாதனை ஒதுக்கிவிட்டு, எப்படியாவது மாமாவை அக்கீசியா வீட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டும். மனதில் திட்டம்போட்டவாறு, சாப்பிடப்போனான். ஆயிற்று. லஞ்சு முடிந்தது. அவன் எதிர்பார்த்த ‘மாமா’ அங்கு தென்படவில்லை. தேநீரில் பால் கலப்பதுபோல், இருவரும் ஒன்றுபோலவே பேச ஆரம்பித்தார்கள். ரோகிணி, அவள் சிநேகிதியைப் பார்க்க வெளியே சென்றுவிட்டாள். சின்னசாமி ‘சிறை’ வைக்கப்பட்டான். கண்ணாடிக் குவளையை உடைப்பதுபோல், வரதராசன் போட்டு உடைத்தார் மாமாவா இப்படிப் பேசுகிறார்.. அவனுக்கு வியப்பாக இருந்தது. சின்னசாமி ஆணியடித்ததுபோல் உட்கார்ந்திருந்தான்.

“சின்னசாமி! இவனை வச்சிட்டே சொல்றேன்… நீ ரோகிணியைக் கல்யாணம் பண்ணிக்கலாம். நல்ல எடுப்பான பொண்ணு. சாமிநாதன் என்னோட பால்ய சிநேகிதன்… இருக்கறது ஒரே பொண்ணு… அதுவும் அம்மா இல்லாத பொண்ணு… இவனுக்கென்ன… இன்னும் இளமையோடதானே இருக்கான்.. பொண்ணுக்காக அவன் வேற மேரேஜ் பண்ணிக்கல.. லண்டனுக்கு அனுப்பி நல்லாப் படிக்கவச்சிருக்கான்.. நீங்க ரெண்டுபேரும் பேசிட்டீங்கல்லே.. ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்கிட்டிருப்பீங்க.. வசதிக்கொண்ணும் கொறைச்சல் இல்லே.. உன்னோட அப்பா அம்மாகிட்டே நான் பேசிக்கிறேன்.. அப்புறம்… நீ வேலைக்குப் போகணும்னு அவசியமில்லே.. இருக்கற பில்டிங் ஒர்க், ரியல் எஸ்டேட் இதையெல்லாம் பார்த்தாலே போதும்.. உன் வாழ்க்கை நல்ல இடத்திலே செட்டில் ஆகணும்கிறதுதான் என்னோட விருப்பம்.. அன்றைக்கு மால்லே பாத்த பொண்ணு ஃபேமிலியெல்லாம் ஏணி வச்சாக்கூட எட்டாது.. நீ என்ன சொல்றே சின்னசாமி?”

அவனுக்கு ஒரு வினாடிகூட அங்கிருக்கப் பிடிக்கவில்லை. ‘என்ன தரங்கெட்ட பேச்சு… ஒரு பொண்ணோட ஃபேமிலியை முழுசாத்

தெரிஞ்சக்காம, இப்படியா பேசறது… ச்சே!’ மாமாவின் இடது கரத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தான்.

“மாமா! நீங்க ஏன் இப்படி பிளாக்மெயில் பண்ணறீங்க… எனக்கு இப்பக் கல்யாணம் பண்ற வயசா.. நீங்களே சொல்லுங்க.. அப்படியே நான் அவசரப்பட்டாலும் நீங்க எனக்கு புத்திசொல்ல வேண்டாமா.. திருப்பித்

திருப்பி இதையேதான் சொல்லுவேன்… நான் மேலே படிக்கணும் … இரண்டாவது, அப்பா அம்மாகிட்டக் கேக்காமே எந்தப் பொண்ணையும் கட்டிக்கமாட்டேன்.. அப்பாகிட்டப் பேசிப்பாருங்க.. இப்ப அவனுக்கு

என்ன அவசரம்னுதான் சொல்லுவாரு… அந்தப் பொண்ணு அக்கீசியாவை விரும்பறது உண்மைதான்.. அதுக்காக இப்பவே கல்யாணம் பண்ணி வையுங்கன்னு அடம்பிடிக்கிறேனா.. சொல்லுங்க.. இப்பவே இன்னொரு காரியத்தையும் சொல்லிடறேன்… எனக்கு இந்த வசதி வாய்ப்பிலேயெல்லாம் வேண்டாம். அது பேரிலயெல்லாம் ஈர்ப்பு இல்லே!

வீட்டோட மாப்பிள்ளையா இருந்துட்டு, சுகத்தை அனுபவிக்கறதுலே எனக்கு உடன்பாடில்லே, மாமா!” – சின்னசாமி முழங்கினான்.

வரதராசனால் எதுவும் பேசமுடியவில்லை.

பின்னர் சாமிநாதன் உள்ளறையிலிருந்து சாவகாசமாக வந்தார். அவருக்குத் தெரியும். ரெண்டு பேரையும் கட்டாயப்படுத்தமுடியாது. சின்னசாமியைப் பிடித்திருக்கிறது. ஆனால் அவன் விருப்பத்துக்கு எதிராக எதுவும் செய்யமுடியாதே!

குதிரையை வம்பு பண்ணி தண்ணீரைக் குடிக்கவைக்க முடியாது.

வரதராஜனும் சின்னசாமியும் உள்ளே வந்தார்கள்.

என்ன பேசியிருப்பார்கள் என்பதை சாமிநாதன் ஓரளவுக்குப் புரிந்து கொண்டார்.

நல்லவேளை ரோகிணி இந்தக் கூட்டத்தில் இல்லை.

“என்ன வரதா! நீ அவசரப்பட்டுப் பேசி தம்பி மனசை நோகடிச்சிட்டே போலிருக்கு”

வரதராஜன் அமைதியாக சோபாவில் படர்ந்தார்.

“என்னப்பா நீ… உனக்காகத்தான் பேசினேன்.. உனக்கு தம்பி மேலே ஒரு நல்ல ஒப்பீனியன் வந்திருச்சு.. அது எனக்குத் தெரியும்.. அப்புறமென்ன விருப்பத்தைத் தெரிஞ்சிக்கலாம்னு..”

“அது சரிப்பா.. அக்கீசியா பேமிலியப் பத்தி சரியாத் தெரியாம நம்ம பேசறது சரியாப்பா” என்று சாமிநாதன் சொன்னதும், சின்னசாமி குறுக்கிட்டான்.

“கரெக்ட் அங்கிள்… மாமா பாட்டுக்கு எதையெதையோ பேசறார். நான் எவ்வளவுக்கெவ்வளவு அக்கீசியாவை விரும்பறேனோ அதை விட அதிகமாவே அந்தப் பொண்ணு என்னை நேசிக்குது! ஆனா மேரேஜைப் பத்தி இப்ப நான் எதையும் யோசிக்கலே.. என்ன அங்கிள் நீங்க உத்தியோகம் புருஷ லட்சணம் இல்லையா.. எனக்கு மேரேஜுன்னு நடந்தா குறைஞ்சது

அஞ்சு வருஷமாவது ஆகும்! லைஃப்லே செட்டில் ஆகறதுக்கு முன்னாடி எத்தனையோ யோசிக்க வேண்டியிருக்கு.. கேர்ள்ஸுக்கு சரி… நீங்க அவசரப்படறதுலே நியாயமிருக்கு.. அதற்காக நான் யாருக்கும் இப்பவே வாக்குக் கொடுக்கமுடியாது.. உண்மையா நேசிக்கறவங்களா இருந்தா காத்திட்டுதான் இருக்கணும்.. இதுக்கு பேரன்ட்ஸ் ஒத்துக்கணும்.. ஒத்துக்கவைக்கணும்! அக்கீசியா வீட்லே ஒரே ப்ரஸ்ஸர்.. ஒரு பக்கம் அவளோட அம்மா நாவல் எழுதிட்டு இருக்காங்க.. அவங்க அப்பா தங்கப்பன் சாருக்கு எத்தனை புரோக்கர் தெரியுமோ அத்தனை பேருகிட்டேயும் சொல்லி மாப்பிள்ளை பார்த்திட்டுருக்கார்! அவ என்னைப் பத்தி இதுவரைக்கும் அவங்ககிட்ட மூச்சு விடலை.. நான் காலேஜ் ஸ்டூடெண்ட்.. என்னைப் பத்தி அப்படியென்ன அவ சொல்லிறமுடியும்..

இப்பச் சொல்லுங்க அங்கிள்…. ரெண்டுபேருமே நல்லாப் புரிஞ்சிருப்பீங்கன்னு நெனைக்கிறேன்” நீண்ட பெருமூச்சு விட்டான் சின்னசாமி.

– தொடரும்…

– 2023

சந்திரா மனோகரன் சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *