அம்மா காத்திருக்கிறாள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2025
பார்வையிட்டோர்: 4,360 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பங்குனி மாதத்துப் படை படைக்கிற வெய்யலில் கஞ்சனூர் கப்பி ரஸ்தாவில், கானல் நீர் தவழ்ந்து விளை யாடிக் கொண்டிருந்தது. 

பாலதண்டாயுதபாணி ஸ்டோர் அதிபர் சம்மந்தம் பிள்ளை தன்னுடைய கனடப்பூட்டை மூன்றாவது முறை யாக இழுத்துப் பார்த்தார். பிறகு திருப்தியடைந்த முகத் துடன் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருந்த கடைச் சிப்பந்திகளைப் பார்த்துத் தலையை அசைத்தார். அவர்கள் விடைபெற்றுச் சென்றனர். கடைச் சாவியை இடையில் சொருகிக் கொண்டு, குடையை லிரித்துப் பிடித்த வண்ணம் அவரும் மத்தியானச் சாப்பாட்டிற்கு நடையைக் கட்டினார். 

வெறிச்சோடிக் கிடந்த சாலையும், அதில் மாய மானைப் போல் தோன்றித் தோன்றி, மறைந்தும் மிதந்தும் சென்று கொண்டிருந்த கானல் காட்சியும், பிள்ளைக்குத் தன்னுடைய வாழ்க்கையைக் குத்திக் காட்டு வது போலிருந்தது. அந்த நினைப்பு வந்த போது இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல் ஒரு உணர்ச்சி மூண்டது. உதடுகள் அவரையும் அறியாமல் ‘கருணாகரா’ என்று உதட்டுனுள்ளேயே ஒலி எழும்பின. தாங்க முடியாத புத்திரபாசம் கணப் பொழுதிற்குள் பேரலை போல் நெஞ்சத்தினுள் கிளர்ந்தெழுந்து அவரை புரட்டி எடுத்தது. நடையின் வேகம் குன்றி அவர் தடுமாறினார். 

லட்சக்கணக்கான சொத்து; ஏழுதலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். ஆனால் அப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டியவன்; தவமிருந்து பெற்றபிள்ளை. தள்ளாத காலத்தில் தங்களை புறக்கணித்து விட்டு ஓடிப் போய்விட்டானே! 

சம்பந்தம்பிள்ளை கஞ்சப் பேர் வழித்தான். ஆனால் அதற்காகப் பணத்தின் பின்னால் ஓடுபவர் என்று அர்த்த மல்ல. வீண் ஆடம்பரமும், படாடோபமும் அவரிடம் கிடையாது. அவரைப் பார்த்தால் மளிகைக் கடைக் குமாஸ்தா என்றுதான் அறியாதவர்கள் எண்ணுவார்களே தவிர லட்சாதிபதியான பாலதண்டாயுதபாணி புரவிஷன்ஸ் அதிபர் என்று சொன்னால் கூட நம்ப மாட்டார்கள். அத்தனை அடக்கம். 

கஷ்டப்பட்டு தானே சேர்த்த சொத்து. அதனால் பணத்தின் அருமை தெரியாதவர். எதிலும் கண்டிப்பும் நேர்மையும் எதிர்பார்ப்பவர். ஆனால் அதுவே அவரு டைய துன்பத்திற்குக் காரணமாக அமைந்து விட்டது. 

தன்னுடைய கடையில் வேலை செய்யும் ஒவ்வொரு சிப்பந்தியும் ஹரிச்சந்திரனாக இருந்தே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் அவர். இப்படி இல்லாதவனுக்கு அங்கே வேலை இல்லை. ஒவ்வொரு சிப்பந்திக்கும் கடின மான பரீட்சை வைத்துத்தான் இறுதியில் தன் ஸ்டோரில் ‘பெர்மனெண்ட்’ ஆக்குவார். 

இப்படித் தனக்குச் சம்பந்தம் இல்லாதவர்களிடம் நேர்மையும் சத்தியமும் வேண்டுமென்று எதிர்பார்ப்பவர், தன் சொந்த மகனிடம் இவற்றை எல்லாம் எதிர்பார்த் தால் அதில் தவறு என்ன? 

ஆனால் கருணாகரன் தோற்றுவிட்டான்.ஆம்! அவரது பரீட்சைசையில் அவரிடம் அவன் தோற்றுப்போனான். 

அப்பா மற்றவர்களிடம் செய்வது போல், ‘பணத்தைப் பருப்பு மூட்டைக்குப் பின்னால் போட்டுவிட்டு’, ‘எடுக்கிறானா பார்க்கலாம்’. என்று வழக்கமாக வேவு பார்க்கிறவரைக்குமெல்லாம், கருணாகரன் காத்திருக்க வில்லை. அப்பாவின் பைக்குள்ளே அவர் இல்லாதபோது கையை விட்டுவிட்டான். இதனால் பிள்ளை பண விஷயத்தில் இன்னும் அதிகக் கண்ணும் கருத்துமாய் இருக்கத் தலைப்பட்டார். மறந்தும் மணிபர்ஸை சட்டைப் பையோடு ஆணியில் மாட்டுவதில்லை. பைய னைக் கடைக்குவர அனுமதித்தாலும், கல்லாப் பெட்டிப் பக்கமே அண்ட விடுவதில்லை. கருணாகரன் எடுக் கிறானோ இல்லையோ, “எடுத்துவிடுவான்; எடுத்து விட்டால் என்ன செய்வது?’ என்கிற பயம் அவர் மனத்தில் ஊறிவிட்டது. வரவர கணவருடைய இந்தப் போக்கைக் கண்டு காமாட்சி மிகவும் மனம் வருந்தினாள். யாருக்காக இத்தனை சொத்தும்? 

ஒருநாள் கருணாகரன் நாலணாவைக் கேட்காமல் எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் சென்றுவிட்டான். 

‘சின்னப் பையன் தானே; ஏதோ அறியாத்தனம். மேலும் இவ்வளவு சொத்துக்களையும் ஆண்டு அனுபவிக்கப் போகிறவன் அவன்தானே’ என்று லேசாகக் கண்டித்து விட்டிருக்கலாம். ஆனால் வெறும் வாயை மெல்லுகிற பிள்ளையா விட்டு விடுபவர்? 

தூணில் கட்டிவைத்து முழங்கா லுக்குக்கீழ் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார். திருட்டுப் பிழைப்பு ஒரு பிழைப்பா! 

காமாட்சி குறுக்கேவந்து நின்றுகொண்டு கத்தினாள் 

”என் ஒரே பிள்ளை இவன். இனியும் இவன்மீது ஒரு அடி விழுந்தால் நான் கிணற்றில் போய் விழுந்து விடுவேன்” என்று ஆவேசம் வந்தவளைப்போல் கூறினாள். 

பிள்ளை கோபத்தோடு பிரம்பினை இரண்டாக முறித்து மனைவியின்முன் வீசி எறிந்தார். “இன்றோடு இவன் யாரோ நான் யாரோ. இவனுக்கும் எனக்கும் உள்ள சம்பந்தம் அற்றுவிட்டது” என்று கூறியபடி துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெளியே சென்றுவிட்டார். 

எவ்வளவு பெரிய வார்த்தைகள்- அன்று கோபத் தோடு கூறிய வாக்குத்தான் எத்தனை தூரம்-காலத்தால் மெய்யாகிவிட்டது, அதைத்தான் அப்போது அவர் நினைத்குக் கொண்டிருந்தார். 

‘லட்ச ரூபாய்க்குமேல் சம்பாதித்து வைத்திருக்கிறேன் என்ன பயன்? இத்தனை சொத்துக்கும் உரியவனை ஆண்டு அனுபவிக்க வேண்டியவனை நாலணா காசுக்காக நாயைப்போல் அடித்து அவன் வீட்டை விட்டே ஓடிப் போகக் காரணமாகிவிட்டேனே?’ என்றுதான் அவர் உள் மனம் சதா உறுத்திக்கொண்டே இருந்தது. அதன் காரணமாக காணாமற் போன கருணாகரனைப் பற்றிப் பத்திரிகைகளில் எல்லாம் விளம்பரம் கொடுத்துப் பார்த்தார். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் கடிதங்கள் எழுதிக் கேட்டார். கை சளைத்ததுதான் மிச்சம். 

ஒரு நண்பர் வந்து “மதுரை சித்திரைத் திருவிழாவில் கருணாகரனைப் பார்த்தேன்” என்று கூறினார். காமாட்சியும் அவரும் அன்று இரவு வண்டிக்கே மதுரை பயணமானார்கள். ஆனால் அழகர் ஆற்றில் இறங்குகிற திவ்ய சேவைதான் கிட்டியதே தவிர கருணாகரன் கண்ணில் படவே இல்லை. வருஷங்கள்தான் ஓடின. 

பிறகு பட்டணத்தில் எக்ஸிபிஷனில் பார்த்ததாக நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவர் கூறினார். பட்டணத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த பலனாகத் தானிருந்து ; பையனைக் காண முடியவில்லையே! 


ஆனால் – அன்று வீட்டை அடைந்ததும் அவருக்கு அப்படியொரு நற்செய்தி காத்திருக்குமென்று பிள்ளை எதிர்பார்க்கவே இல்லை. 

பாதி சாப்பிடும்போது காமாட்சியம்மாள், பம்பாயி லுள்ள தன் தம்பி தாமோதரனிடமிருந்து வந்திருக்கும் கடிதத்தைப் பற்றிக் கூறினாள். அதில் கருணாகனைப் பார்த்ததாக எழுதியிருப்பதை கேட்டதும், சாப்பிடும் போதே அவர் கடிதத்தை வாங்கிப் பார்த்தார். 

கையலம்பியதும், “புறப்படு காமாட்சி, பம்பாய் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடலாம். எனக்கு என்னவோ இந்தத் தடவை நிச்சயம் அவன் என் கண்ணில் படுவான் போலத் தோன்றுகிறது”, என்று நம்பிக்கையும், உற்சாகமாய்க் கூறினார். ஆனால் காமாட்சியம்மாள், அவருடன் செல்ல விரும்பவில்லை. 

“என் துரதிர்ஷ்டமோ, என்னவோ, நான் கூட வந்தாலே அவன் அகப்பட மாட்டேன் என்கிறான் மதுரைக்கும், திருச்சிக்கும், மதராஸுக்கும் இப்படி ஊர் ஊராய் என்னையும் சேர்த்துக் கொண்டு அலைந்தது போதும். இந்தத் தடவை நீங்கள் தனியே பம்பாய் போய் விட்டு; வரும்போது மகனோடு வந்து சேருங்கள்” என்று கூறிவிட்டாள். 

அதன்பிறகு இரவு வண்டிக்கே பிள்ளை தனியாகப் பம்பாய் புறப்படுவது முடிவாகிவிட்டது. 


மனைவி இல்லாமல் மகனை தேடிப் புறப்படுவது அவருக்குப் புது அனுபவமாக இருந்தது. வழியெல்லாம் தனிமையில் மகனைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார். 

இன்றைக்கெல்லாம் இருந்தால் கருணாகரனுக்கு இருபது வயது இருக்கும் இந்த எட்டு வருஷங்களில் அவன் யுவனாக எப்படி வளர்ந்து மாறியிருப்பானோ! நல்ல நாகரிகம் தெரிந்தவனாகத்தான் இருப்பான். எங்கெல்லாமோ சுற்றித் தானாக உழைத்து, இங்கே வந்து என்ன வேலையில் இருக்கிறானோ. அவ்வளவு பெரிய பட்டணத்தில் அவனை எப்படித்தான் தேடிக் கண்டு பிடிக்கப் போகிறேனோ” என்றெல்லாம் விசாரப்பட்டுக் கொண்டே பிள்ளை பம்பாய் வந்து சேர்ந்தார். 

ஸ்டேஷனுக்கு அவரை வரவேற்க தாமோதரன் வந்திருந்தார். புதிதாக வந்திருக்கும் பிள்ளையிடம், பலநாள் பழகியதுபோல் தாமோதரத்தின் குழந்தைகள் “மாமா…மாமா… ” என்று ஒட்டி உறவு கொண்டாடின. முக்கியமான விஷயத்தைப்பற்றிப் பேச்சு திரும்பியது. தாமோதரன் கூறினார்: 

“ஒரு வாரத்திற்கு முன்பு நானும் என் மனைவியும் ‘அரோராவில்’ ஒரு படம் பார்க்கப் போயிருந்தோம். உயர் வகுப்பு டிக்கட் வாங்குகிற கியூவை எதேச்சையாகக் கவனித்தேன். சாட்சாத் கருணாகரனேதான். பிரமாத மாக டிரஸ் செய்துகொண்டு ஆள் பார்ப்பதற்கு ராஜா மாதிரி நின்று கொண்டிருந்தான். கறுப்புக் கண்ணாடி வேறே! என்ன இருந்தாலும் பழக்கமான முகம் மறந்தா போகும்? 

ஏதோ ஒரு பெரிய கம்பெனியில் நல்லவேலையில்தான் இருக்க வேண்டும் என்று மட்டும் புரிந்தது. ‘சரி’ அவனை இப்போதே விசாரித்துவிடலாமா, அல்லது தியேட்ட ருக்குள் போய் சாவதானமாகப் பேசிக் கொள்ளலாமா’, என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே திடீ ரென்று அவனைக் காணவில்லை. 

“இப்படிக் காத்திருந்து, காத்திருந்து எதிர்பாராத விதமாக ஒருநாள் கண்டும் பேசமுடியாமல் போய் விட்டது. ஆனாலும் ஒன்று – கருணாகரன் நிச்சயமாக பம்பாயில், அதுவும் இந்த வட்டாரத்தில்தான் எங்காவது வசிக்கவேண்டும். கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன்தான் உங்களுக்குக் கடிதம் எழுதினேன்” என தாமோதரன் கூறி முடித்தார். 

அதைக் கேட்டதும் அப்போதே கருணாகரனைக் கண்டுவிட்டது போலவும், அவனோடு கஞ்சனூருக்குச் சென்று இறங்கும் தன்னைக் காமாட்சி ஆரத்தி சுற்றி வரவேற்பது போலவும் அவர் உள்ளத்தில் கனவுகள் பெருக்கெடுத்து ஓடின. அந்தக் கனவின் இறுதியை, மிகவும் அருமையாக பிள்ளை முடித்திருந்தார். 

ஊருக்குப் போனதுமே, ஒரு கால்கட்டையும் கட்டி, தன் கடைச் சாவியையும் அவன் கையில் ஒப்புவித்து விடுகிறார். அவர்கள் அடுக்கடுக்காகப் பெற்றுப்போடும் பேரன் பேத்திகளைக் கொஞ்சிக்கொண்டே காமாட்சியும் தானும் இறுதி நாட்களைக் கழித்துவிடுவது- இதுதான் அந்தக் கனவின் முடிவு. 

ஆனால் இதெல்லாம் நனவாக வேண்டுமானால்… 

மழையையும், வெய்யிலையும், பசியையும், தாகத்தை யும் பாராமல், பம்பாய் வீதிகளில் பிள்ளை, மகனைத் தேடி அலைந்து கொண்டிருந்தார். தாமோதரனும் அவருக்குப் பூரணமாக உதவி செய்தார். மாமாவோடு ஆரம்பத்தில் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டுத் தேடினார்; ஆபீஸ் நண்பர்களிடம் எல்லாம் அடையாளம் சொல்லி வைத்திருந்தார். 

இதற்குள் பம்பாய், அந்தச் சுற்றுவட்டாரம் எல்லாம் தனக்கு ஓரளவு பழக்கம் ஆகிவிட்டதுபோல் சம்பந்தம் பிள்ளைக்குத் தோன்றியது. ஆனால், அவர் தனியே வெளியே வெகு நேரம் வரைச் சென்று வருவதை தாமோதரன் விரும்பவில்லை. 

“மாமா, கருணாகரனைத் தேடிப் பிடித்து உங்கள் கையில் ஒப்புவிக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்கள் ஊருக்குப் புதிசு. தனியே போகக்கூடாது. இந்த பம்பாய் பொல்லாத ஊர். பஸ்ஸும் லாரியும் எமனாகத் திரியும், மேலும் பணத்தோடு ஒருவன் தனியே அகப்பட்டால் அபேஸ்தான்” என்று தாமோதரன் எச்சரிக்கை செய்து, பயமுறுத்திக் கூடப் பார்த்தார். ஆனால், அவர் கேட்டால்தானே! 

“என்னை ஒரு பயல் அசைக்க முடியாது மாப்பிள்ளே. நான் கேடிக்குக் கேடி; நல்லவனுக்கு நல்லவன். என்னைப் பற்றிக் கவலைப்படாமெ ஆபீஸுக்குப் போங்க” என்று சமாதானம் கூறி அனுப்பிவிட்டார். ஆனால் உண்மையில் ஒருநாள், தாமோதரன் கவலைப்பட்டது போலவே ஆகிவிட்டது. 

பொடி நடையாகவே, பம்பாயின் அழகை ரசித்த வண்ணம், மகனைத்தேடிப் புறப்பட்டுப் போய்க் கொண்டே இருந்துவிட்ட பிள்ளைக்குத் ‘திக்’கென்றது. இரவு மணி ஏழு. 

தன்னுடைய பொடி நடை பெரு நடையாகி வெகு தூரம் வந்துவிட்டதையும்; எதிரே ஒரு சினிமாக்கொட்டகை  இருப்பதையும் கண்டார். அரோரா” என்ற அதன் பெயரைப் படித்ததும் அன்று தாமோதரன் கூறியது அவரது நினைவிற்கு வந்தது. 

‘ஒருவேளை அதிர்ஷ்டவசமாக இன்றும் கருணாகரன் இங்கே சினிமா பார்க்க ஏன் வந்திருக்கக் கூடாது? உள்ளே போய்ப்பார்த்துவிட்டால் என்ன? என்கிற எண்ணம் தோன்றவுமே மறுகணம் பிள்ளை ஓர் உயர்ந்தவகுப்பு டிக்கெட் வாங்கிக்கொண்டு தியேட்டருக் குள் நுழைந்து விட்டார். உயர்ந்த வகுப்பு என்றால்- உயரமான இடத்தில், இருக்கும். அங்கிருந்து பார்த்து மகனைத் தேடுவது சுலபமல்லவா-என்பது அவர் எண்ணம். ஆனால், அவர் துர் அதிர்ஷ்டம் அன்று அவன் வரவே இல்லை. 

படம்விட்டு சிறிதுதூரம் பழக்கப்பட்டவர் போல் வந்து கொண்டிருந்த பிள்ளை, ஒரு சதுக்கத்தில் வழி தெரியாமல் தடுமாறினார். போவோர் வருவோரிடம் எல்லாம் தான் போக வேண்டிய இடத்தை விசாரித்துக் கொண்டே நடந்தார். சிலர், தாங்களும் அங்கேயே போவதாகக்கூட அழைத்தார்கள். ஆனால் பிள்ளையா ஏமார்ந்துவிடக் கூடியவர்? 

ஊருக்குத் புதிது-வழி தெரியாத ஆசாமி என்று புரிந்துகொண்டு, உதவி செய்வதுபோல ‘நாங்களும் அதே இடத்திற்குத் தான் போகிறோம்’ என்று கூறி ஏமாற்றி அழைத்துச் செல்கிற எத்தனை கதைகளை அவர் கேட்டிருக்கிறார்! விவரத்தை மட்டும் தெரிந்து கொண்டு யாரையும் பின்பற்றாமல், அவரவர்கள் கூறிய வழிப்படி நடந்து சென்று கொண்டிருந்த பிள்ளைக்குத் திடீரென்று தூக்கி வாரிப்போட்டது. 

பம்பாயில் சுவர்க்கமும் நகரமும் இத்தனை அருகில் தான் இருக்குமா? சற்று முன்புவரை தேவலோகம் போல் ஒளி வீசிக் கொண்டிருந்த இடமெலாம், கடந்து எப்ப டியோ கும்மிருட்டான சந்தடியற்ற தாராவி பகுதிக்கு அவர் வந்து சேர்ந்து விட்டார். குடிக்கும், கொலைக்கும், கொள்ளைக்கும் இந்தப் பகுதிப் பெயர் பெற்ற இடமாயிற்றே! 

அவர் உடல் நடுங்கியது. இரவு மணி பனிரெண்டுக்கு மேல் இருக்கும். குடிசைகள் கொண்ட அப்பகுதியில், அத்திக் கனியாக-எங்கோ மூலைக்கொரு கம்பத்தில்-மின்விளக்கு தொங்கிக் கொண்டிருந்தது. சாக்கடை நாற்றமும், கொசுக்களின் ரீங்காரமும் குடலைப்புரட்டி எடுக்க அந்தப்பேட்டை பகுதி வழியே அவர் போய்க் கொண்டிருந்தார். 

சட்டென்று எதையோ நினைத்துக் கொண்டவர் போல் பிள்ளை தன் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். அப்பாடா! சிங்கப்பூர் பெல்டும், அதனுள் இருக்கும் கத்தை கத்தையான நோட்டுகளும் பத்திரமா யிருந்தன. 

இருந்தாலும் அப்போதுதான் அவருக்கு- அந்த அகால வேளையில் தாராவிக்கு வந்துவிட்ட பிறகு- முதன்முதலாக பயம் தோன்றியது. பம்பாயைப்பற்றி தாமோதரன் வர்ணித்த பயங்கரமான வரிகள் மீண்டும் நினைவுக்குவந்து அவர் நெஞ்சைக்கலக்கின. அதேநேரம்- 

கையில் கத்தி பளபளக்க “கபர்தார்-ரூப்யா தோ; நஹிதோ…மர்கயா…ஜரூர்” என்று பயங்கரமான குரலில் மிரட்டிய வண்ணம், காலனைப்போல் எதிரில் வந்து நின்று விட்டவனை கண்டு பிள்ளை ஒரு கணம் நடுங்கியே போனார். ஆயினும் அவர் தன்னுடைய அச்சத்தை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டு ஆளை நோட்டம் விட்டார். 

எங்கே எப்படி பதிலுக்குத் தாக்கி மடக்கலாம் என்பதிலேயே அவர் மனம் லயித்திருந்தது – இடையிலே கைலி அதைச் சுற்றி ஒரு தடித்த தோல்பில்டு, கையிலே கத்தி, கழுத்திலே தாயத்து அதன் மேல் ஒரு கைக்குட்டை, கன்னத்திலே ஒரு ஒரு கறுப்பு பெரிய மச்சம். நீண்ட மீசை, கண்களிலே முகமூடி வேறு-இத்யாதி அவலட்சணத்திற்கு கிரீடம் வைத்தாற்போல் தலையிலே முண்டாசு வேறு! 

தொழிலுக்கேற்ற நல்ல உடம்புதான்-என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கேடி ஹிந்தியில் மிரட்டினான்: “மரியாதையாய் பணத்தையெல்லாம் கழட்டாவிட்டால் உயிரோடு போகமாட்டாய்” என்று. 

பாஷை அவ்வளவாகப் புரியாவிட்டாலும்பிள்ளைக்கு அரையும் குறையுமாக விஷயம் ஓரளவு விளங்கிவிட்டது— பணம் போன பிறகு உயிர் எதற்கு? பணம்தானே ஜீவ நாடி. அதை இவனிடம் கொடுத்துவிட்டுப் போவ தாவது!”-பிள்ளையும் சளைக்கவில்லை. கோபத்தோடு தான் கூறினார். 

“என்னிடம் சல்லிக்காசு கிடையாது. நீ எது வேண்டு மானாலும் செய்து கொள். ஆனால் என்னைக் கொன் றால் உனக்குத்தான் நஷ்டம்; கத்தியை அலம்ப சோப்பு வாங்கக்கூடக் காசு தேறாது!”-என்று துணிந்து அவ னுக்குப் புரிந்தாலும் சரி, புரியாவிட்டாலும் சரி-நேரம் போனால் சரி; அதற்குள் யாராவது உதவிக்கு வரமாட் டார்களா என்று – அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சமயம் பார்த்து “குபீர்” என்று மூக்கில் முஷ்டியால் பலக்க ஒரு குத்து விட்டுவிட்டு “போலீஸ்… போலீஸ்” என்று உரக்கக் கத்தியபடி ஓட்டம் பிடித்தார். 

பிள்ளையினுடைய இந்தியத் திடீர் தாக்குதலைச் சற்றும் எதிர் பாராத எதிரி – மூக்கின் வலி தாங்கமாட் டாமல் கத்தியபடி இரையை நழுவ விட்ட விலங்கைப் போல-ஆவேசத்தோடு அவரைத் துரத்திக்கொண்டு ஓடினான். அந்தப் பிராந்தியம் முழுவதும் எதிரொலிக்க அலறிய பிள்ளையின் அபாயக் குரலைக் கேட்டோ என் னமோ, எங்கோ தொலைவில் இரண்டு போலீஸ் ஊதல் கேட்டது. 

பிள்ளையும் திருடனும் ஒரு திருப்பத்தில் கட்டிப் புரண்டு கொண்டிருக்கும் போது திடீரென்று ஒளி வெள் ளத்தைப் பாய்ச்சிய வண்ணம் போலீஸ் லாரி ஒன்று அவர்கள் எதிரில் வந்து நின்றது. அதிலிருந்து குதித்த இரு ஜவான்களிடம் பிள்ளை ‘லபக்’ கென்று கேடியைப் ‘பிடித்துக் கொடுத்து விட்டார். 

போலீசார் கேடியை வானில் தள்ளிவிட்டுத் திரும்பு வதற்குள். பிள்ளை அங்கிருந்து நைஸாக நழுவி ஓட்டம் பிடிக்கப் பார்த்தார். 

‘ஆமாம். காரியம் முடிந்து விட்டது. இனி நமக் கேன் வம்பும் தும்பும்? மகனைத் தேடி வந்த இடத்தில், சாட்சி, சம்மன் கோர்ட்டு என்று வேறு அலைய வேண் டுமா? ஏதோ இந்தக் கண்டத்திலிருந்து தப்பினோமே, அதுவே போதும்’ என்பதுதான் பிள்ளையின் எண்ணம். ஆனால் போலீஸ் விட்டு விடுமா? 

“எங்கே போறீங்க சார், நீங்களும் ஏறுங்க வண்டி யிலே” – என்றார் ஒரு ஜவான். 

“நான் எதுக்கப்பா அங்கேயெல்லாம் வரணும். அது தான் கேடியைப் பிடிச்சுக் கொடுத்திட்டேனே. எனக்கு ஒன்றும் நஷ்டமில்லே. என்னை விட்டு விடுங்க, நான் ஊருக்குப் புதிசு” என்று கெஞ்சினார் பிள்ளை. 

“அதெல்லாம் முடியாது. ஸ்டேஷனுக்கு வந்து ஸ்டேட்மெண்ட் கொடுத்திட்டுப் போயிடுங்க” என்று அவரையும் பிடிவாதமாக ஏற்றிக்கொண்டு, வான் ‘கிங்ஸ்வே’யை நோக்கிப் பறந்தது. 

அது ஒரு சிறிய போலீஸ் நிலையம். கேடியை லாக் அப்பில் அடைத்தார்கள். யாரையோ அழைத்து வரவோ எதற்காகவோ வான் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. 

கேடியைப் பூட்டி வைத்திருக்கும் அறைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பெஞ்சியில் பிள்ளை தன் தலை விதியை நினைத்து உட்கார்ந்து கொண்டிருந்தார்• தாமோதரன் தன்னைக் காணாமல் என்ன கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறானோ என அவர் மனம் தவித்தது. அவரைத் தவிர அந்த அறையில் யாருமில்லை. இருந்த மேஜையும், பெஞ்சும் நாற்காலிகளும் காலியாக இருந்தன. 

வான் புறப்படுவதற்கு முன்பு எதற்கோ அவர்கள் “தன்னை சரியான அதிர்ஷ்டசாலி’ என்று கூறிக் கைக் குலுக்கிவிட்டுச் சென்றதையும், வாசலில் பீடி பற்றவைத்த வண்ணம், இரு ஜவான்கள், ‘கிழவனுக்கு அடிச்ச யோகத் தைப் பார்த்தியா?’ என்று பேசிக் கொள்வதையும் கேட்டு ஒன்றும் புரியாமல் ஒரேயடியாகக் குழம்பிக் கிடந்தார் பிள்ளை. அப்போது தான் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. 

“இங்கே கொஞ்சம் வாருங்களேன்” என்று தணிந்த குரலில் யாரோ அழைப்பது கேட்டு பிள்ளை அதிர்ந்து போய்த் திரும்பிப் பார்த்தார். 

லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்த கேடிதான் அவரை அப்படிக் கூப்பிட்டு, அருகில் வரும்படிச் சைகை காட்டினான் பிள்ளைக்கு உடம்பெல்லாம் ஒருகணம் உதறல் எடுத்தது. எதற்காகக் கூப்பிடுகிறான்? 

“அப்பா, பயப்படாமல் வாருங்களேன்; ஒரு விஷயம்.” 

“அப்பாவா? பயப்படாமல் வருவதா? இது என்ன கூத்து.இவனுக்கு நான் எந்த ஜாமத்தில் அப்பாவாக இருந் தேன். மெல்ல உறவு கொண்டாடி அழைத்து. அருகில் வந்ததும் ‘லபக்’கென்று கழுத்தைப் பிடித்து நெரித்து பழி தீர்த்துக் கொள்ளத்தான் அழைக்கிறானோ” 

இப்படி அவர் எண்ணிக் கொண்டிருப்பதற்குள் அந்தக் கேடி மீண்டும் கூப்பிட்டான். 

“அப்பா! இன்னும் என்னை உங்களுக்குப் புரிய வில்லையா? நான் தான் அப்பா கருணாகரன். அம்மா கஞ்சனூரில் தான் இருக்கிறாளா, அல்லது கூடவே அழைத்து வந்திருக்கிறீர்களா? வானில் ஏறும்போதே உங்களை நான் அடையாளம் கண்டு கொண்டு விட்டேன் அப்பா” 

பிள்ளைக்கு ஓர் உலுக்கு உலுக்கியது. கூர்ந்து கவனித் தார். பொய் மீசையையும், போலி மச்சத்தையும் இப்போது கேடியிடம் காணவில்லை. அவன் தன் மகன் கருணாகரன் தான் என்பதற்கு அதற்கு மேல் அவருக்கு எவ்வித விளக்கமும் வேண்டியிரூக்கவில்லை. பரபரப்புடன் வாசலை எட்டிப் பார்த்தார். அந்த இரு ஜவான்களும் அரட்டையோடு சுருட்டு இழுக்கும் சவாரஸ்யத்தில் இருந்தனர். 

பிள்ளையவர்கள் அந்த முரட்டுக் கம்பிக் கதவில் தலையை மோதிக்கொண்டு; கருணாகரா, கடைசியில் இங்கேயும் உனக்கு நான்தானாடா எமனாக வர வேண்டும்? அங்கே உன் அம்மா உன்னை “எப்பப் பார்க்கப் போகிறேன்; எப்பப் பார்க்கப் போகிறேன்’ என்று காத்திருக்கிறாளே. அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன்? அவள் முகத்தில் போய் எப்படியடா விழிப்பேன்” என்று அழும்போதே கருணாகரன் அவர் வாயைப் பொத்தி, சூழ்நிலையை உணர்த்தி மெதுவாக ஆனால் சற்று அழுத்தமாகவே கூறினான்: 

“அப்பா, இங்கே நீங்கள் என் தந்தையுமல்ல; நான் உங்கள் மகன் கருணாகரனும் அல்ல. இங்கு என் பெயர் தன்ராஜ். பிரசித்தி பெற்ற பாங்க் மோசடி, வழிப்பறித் திருடன்.என்னைப் பிடித்துத் தருபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் இனாம் தருவதாக இந்த இலாகாவே அறிவித்திருக் கிறது. ஆனால் அந்த அதிர்ஷ்டம் இதுவரை யாருக்கும் வாய்க்கவில்லை. உங்கள் குரலைக் கேட்டபிறகு சண்டை போடவோ; உங்களைத் தாக்கவோ முடியாமல் ஏதோ ஒருசக்தி-ஒருவித உணர்வு என்னைத் தடுத்தது. நான் உங்களிடம் வசமிழந்துவிட்டேன். அதற்குக் காரணமும் இப்போது புரிந்துவிட்டது. சரி, நேரமாயிற்று. நான் கூறியதெல்லாம் ஞாபகமிருக்கட்டும். வாக்குமூலத்தில் நீங்கள் யாரோ ; நான் யாரோ என்பதை மறந்து: விடாதீர்கள். பரிசை வாங்க மறந்துவிடாதீர்கள். கண்டிப் பாகப் பெற்றுக்கொண்டு செல்லுங்கள். மறக்காமல் அம்மாவிடம் கூறுங்கள்; “விரைவிலேயே உன் மகன் நல்லவனாகக் திருந்தி தானே உன்னைத் தேடி வருவான்?’ என்று. இப்படி அவன் கூறிக் கொண்டிருக்கும்போதே வாசலிலே கேட்ட பூட்ஸ் ஒலியைக் கேட்டு கருணாகரன்’ என்னும் தன்ராஜ் சட்டென்று அந்த அறையின் மூலையில் சென்று முடங்கிவிட்டான். 

பிள்ளையும் அந்தக் குறிப்பையுணர்ந்து, பளிச்சென்று தன்னுடைய பெஞ்சில் அமர்ந்துவிட்டார். 

பூட்ஸ் ஒலியைத் தொடர்ந்து ஒரு ‘வான்’ வந்து நின்றது. அதிலிருந்து சிலர் இறங்குவதையும் பிள்ளை உணர்ந்தார். 

மகன் கட்டளை இட்டிருக்கிறானே! 

குளமாயிருந்த விழிகளைச் சட்டென்று பிறர் அறியா வண்ணம் துடைத்துக்கொண்ட பிள்ளையவர்கள் அந்த ‘லாக்’அப்பையே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந் தார். பிரளயமாக உள்ளத்தினுள் பெருக்கெடுக்கும் சோகத்தில் அவருக்கு மட்டும்தானா பங்கு? இதயமே வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது. 

“காமாட்சி…! நீ இன்னும் கொஞ்ச காலம் காத் திருக்க வேண்டியதுதான்…”- என்று மெல்ல அவரது உதடுகள் முணுமுணுத்தன. 

– தினமணி சுடர்.

– மலருக்கு மது ஊட்டிய வண்டு, முதற் பதிப்பு: டிசம்பர் 1992, காயத்திரி பப்ளிகேஷன், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *