வதைப்படலம்





(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்டுக்கோட்டை! தன் பெருமைக்கு ‘பேரிலே’ கட்டியம் சொல்லும் ஊர், பாரம்பரியமிக்க கிராமம்.ஆனால் இன்று, இவ் ஊரில் காடும் இல்லை! கோட்டையும் கிடையாது!!!
ஒரு காலத்தில் இவை இருந்திருக்கலாம். சாதகப்பட்சியைப் போல் ஒரு துளி மழைக்காக வானத்தைப் பார்த்து… பார்த்து ஏங்கி ஆண்டியாகி விட்ட ஊர்வாசிகளுக்கு இந்த காட்டுக்கோட்டை வீரப் பிரதாபங்களெல்லாம் அர்த்தமற்ற, வேண்டாத கதையாகிப் போய்விட்ட காலம்!
பொய்த்த வானத்தை நம்பிக்கையோடு பார்த்து ஏமாந்து, நெஞ்சில் சரளைக்கற்கனை வடுவாக்கிக் கொண்ட வானம் பார்த்த பூமியாகி… “வெளைஞ்சா காட்டுக்கோட்டை இல்லாட்டி வெறும் கோட்டை” இதுதான் இப்போது காட்டுக்கோட்டை கிராமத்தின் எழுத்தில் வரையாத சிலாசாசனமும் செப்பேடும்.
காட்டுக்கோட்டையை ஏழ்மையின் கோட்டையாக்கி விட்ட பஞ்சம், கோவனத்தையும் பிடுங்கிக்கொள்ள நோய்களையும் துணைக்கழைத்துக் கொண்டு உலா வருகின்றது.
எல்லா ஊர்களிலுமே காணப்படும் சிறு மலையினைப் பற்றிய பொதுக் கதையான “அனுமார் சஞ்சீவி மலையைக் கொண்டு வரும் போது அதிலிருந்து உடைந்து விழுந்த துண்டு தான் இந்த மலையாகும்” என்று கூறப்படும் குரு மலையினை மேற்கு திசையில் அரணாகக் கொண்டு காட்டுக்கோட்டைக் கிராமம் தெற்கு வடக்கில் கிடத்திய பிணமாகக் கிடக்கிறது.
வானம் பொழிந்தால் கூட, நஞ்சை பயிருக்குமே கிணற்றுப் பாய்ச்சல் மட்டும் போதாது. கம்மாங்கரையில் இருந்த பாசனம் கிடைத்தாலே ‘மகசூல் தேறும்’ இப்பொழுது வானம் பொய்த்துப் போய் மேகம் சாப்பல் தட்டி வருட க்கணக்கில் அலையும்போது புஞ்சைப் பயிரைப்பற்றியெல்லாம் பேசவும் வேண்டுமா?… மேட்டு நிலங்களிலெல்லாம் வேலிக்கருவேலச் செடிகள் வளர்ந்து எஞ்சியுள்ள கால்நடைகளின் நாவிலும் ‘செடில்பூட்டி’ விடுகின்றன. நாக்கு அழகி, தலை உதறலெடுத்து நிற்கும் எலும்புக்கூட்டு உருப்படிகளை யார் வாங்குவார்கள்?
உப்புக்கண்டத்தில் சாப்பிட மாமிசம் வயிற்றில் பொருமி… ஊதிக்கிடக்கின்றது.
சேரத்தண்ணி காணாத மேனிகள் அரிப்பெடுத்து மொச்சைக் கொட்டை.. மொச்சைக்கொட்டையாய சொரி… சிறங்கு போட்டு தடிக்க, இரத்தம்… சீழ்.. வடிய..
பசி…. பசி… பஞ்சாய் பறந்தவர்களை வெம்மை தகித்து அம்மை வெளையாண்டு வர’ குடும்பம், குடும்பமாக படுக்கையில் வீழ்கின்றனர்.
“கொடை எடுத்து அம்மனுக்கு குளிரவார்த்து, சக்திக்கரகம் பாளித்து வேப்பிலை தேர்கட்டி இழுத்தால் அம்மா கோபம் தணிவாள்” அபிப்பிராயம் தெரிவித்ததோடு தனது கஞ்சிக்கும் சேர்த்தே மடிப்பிச்சை எடுக்கப் புறப்பட்ட சிவனாண்டிக் கிழவனை, அடுத்த கிழமையே ஊரின் சனத்தொகையை பாதியாகக் குறைப்பதற்கு சபதமெடுத்துந்வியூகம் அமைத்த வாந்திபேதி வரவேற்று கம்பங் கஞ்சை மறக்கச் செய்கின்றது.
வாந்தி.. வயிற்றோட்டம் மள.. மளவெனச் சரியும் பிணங்களை இடுகாட்டிற்கு தூக்கிச் சென்றவர்களில் சிலர் திரும்பி வரும் வழியிலேயே வாந்தி இரத்த வயிறோட்டம் கண்டு வீடு வந்து சேராமலேயே அவர்களும் போக வேண்டியதாகி விட்டது.
கொள்ளைநோய்…காலரா.. ஊரே பிணவாடை வீசிக்கிடக்கின்றது.
இழவு வீடுகளிலெல்லாம் மாரடித்து ஒப்பாரி வைத்து களைகட்டச் செய்யும் ‘கறுப்பாயிக் கிழவி’ தனக்கு ஒரு ஒப்பாரி வைக்கக்கூட ஆள் இல்லாமல் வண்ணாரத் தெருவின் தொங்கலில், ஊர்மனையைக் காத்து நிற்கும் சங்கிலிக் கறுப்பன் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள குடிசையில் செத்து நாதியின்றி அழுகிப்போய் வீச்சம் வரவே குடிசையோடு எரிக்க வேண்டியதாகி விட்டது.
“ஜே.. ஜே.. என்றிருந்த ஊர் இப்பொழுது இப்படி சீ..சீ.. என்று சின்னப்படுகிறது.
வெள்ளிக்கிழமை காலையில வயித்தில என்னமோ செய்யுது? என்று ஆரம்பித்த ரெங்கையா கிழவனை அன்று மாலையிலேயே ரத்தமும் சீழுமாக அடக்கம் செய்துவிட்டு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கின்றான் பேரன் கணபதி.
‘டென்டனுக்கு.. டென்டனுக்கு…’ அவன் அழுகைக்கு சுருதி சேர்ப்பது போல் ஒத்த தப்புவின் ஒசை ஓட்டைக் குடிசையைப் பிய்த்துக் கொண்டு கோடியில் தாளம் போட்டது. சாவுத்தப்பா இல்லியே.. தப்படிச்சி.. கேதம் சொல்லி, ஒப்பாரி வைச்சி.. நீர்மாலை எடுத்து கோடி போட்டு சவம் அடக்கிற நேரமா இது..? ஊரே கொள்ளை நோயில கொல நடுங்கிக் கிடக்குதே.. இல்ல… இல்ல… தமுக்கடிச்சி தண்டரா போடுறாங்க….” காதைத் தீட்டிக் கொண்ட கணபதி தப்புக்காரனை தொடர்ந்தான்.
“டென்டனுக்கு… னக்கு.. னக்கு” என்று அடித்துக் கொண்டு தப்புக்கார காத்தான் “டன்..டன்..டன்” என அடித்து நிறுத்தினான்.
தப்புச் சத்தத்தைக் கேட்டு பள்ளர் தெரு, பறையன் தெரு, சங்கிலியர் தெரு, குடியானவன் தெரு என்றெல்லாம் பிரியும் அந்த ஊர் சந்தியில் பலர் கூடினர். சிறிது நேரத்தில் காத்தானைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிட்டது.
இதனால் ஊர் சனங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இப்பவும் நம்ம ஊர்லேயும், பக்கத்து ஊர்களிலேயும் பஞ்சம் பசியோட கொள்ள நோயும் வந்து பெருவாரியான சனங்க செத்துப் போனாங்க. நம்ம கஷ்டமெல்லாம் எப்போது தீருமின்னு தெரியல. அதனால ஊர்விட்டு ஊர்போய் தேசம் விட்டு தேசம் போய் புத்தியுள்ள ஜனங்க பஞ்சம் பொளைக்கிறாங்க. அதனால ஆத்தூர் தாலுக ஆனையம் பட்டியில் இருக்கும் கருக்குவேல் கங்காணி கண்டிச் சீமையில உள்ள, காப்பித்தோட்டம், தேயிலைத்தோட்டம், கோச்சிரோடு போடுகிற வேலைகளுக்கு ஆள் கூட்டுராரு… அந்தக் கண்டிச் சீமையிலேயும் இந்த வெள்ளைக்காரன் கொடிதான் பறக்குது. கண்டிச்சீமையில தாயில்லாத புள்ளையும் பொளச்சிக்கிறாளாம். தேயிலைத் தூர்ல தேங்கா மாசியெல்லாம் கூடகெடைக்கிதாம். தலைக்கு கெழமைக்கு காப்பொச பர்மா அரிசி.. வெள்ளிப்பணம்…” தப்புக்கார காத்தான் கட்டியக்காரனாக விவரித்து நின்றான். இப்போது ஊரில் முக்கால் வாசிக்கும் அதிகமானோர் அங்கு கூடி, கசமுசவென பேசிக் கொண்டனர்.
காத்தான் மீண்டும் ஒரு தடவை தப்பை அடித்துவிட்ட, ‘ஆதலால் சனங்களே, ஆனையம்பட்டி பெரியாணிக்கு உதவிய நாம், ஊர்ல இருக்கும் சின்னக்கங்காணி முனுசாமி ஐயாக்கிட்ட பெயரைப் பதிந்து கொள்ளுங்கள்… டென்டனுக்கு… டென்டனுக்கு…” தண்டரா போட்டகாத்தான் இருளில் தலைமறைந்து போனாலும், பசியால் கூட்டைவிட்டு பறந்துவிடத்துடிக்கும் உயிரை தடுத்துவிடும் சஞ்சீவியென ஒத்தை தப்புவின் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது.
காத்தானின் அலங்கார ஆவர்த்தனத்திற்கு ஊர் சனம் தாளம் போட்டு பஞ்சநடை நடந்தது. ஆகதமான தப்பு ஒலி அனாகத நாதமாக ஒலிக்கும் போது….
“வேறு கதி…”
மேட்டுத்தெரு முனுசாமி சின்னக்கங்காணியாகி, செல்லமாக சின்னாணியாக விஸ்வரூபமெடுத்து நிற்க ஆள்திரட்டும் தர்பார் அமர்க்களமாக நடக்கின்றது.
உறவைப் பிரிந்து; உணர்வைத்துறந்து, ஊரைப்பிரிந்து ஊரைப் பிரிக்கும் கடலையும் தாண்டி ஒன்றாகவே சாவோம் என்ற முடிவோடு பயணப் படுவோரை சடங்கு முதல் சாதிவரை பார்த்து பிரிவு பிரிவாக பட்டியல் போட்டுக் கொண்டு ஆனையம் பட்டிக்கு புறப்படத்தயாரானான் சின்னாணி.
பசி… பஞ்சம், பட்டினி எல்லோருக்கும்.. பசி.. பசிக்கும் வயிறும் ஒன்றுதான் குலம், கோத்திரம், வர்ணாசலம் என்ற பாகுபாடு மட்டும் வேறுவேறாக…
“கும்பிடுறேங்க சாமி”… பிந்தி வந்த ஆராயி கைகூப்பியபடி நின்று கொண்டிருந்தாள். நாலு பிள்ளைகளின் தாயாக இருந்த போதிலும் கட்டு குலையாமல் இருந்த அவள் உடம்பு தற்போது தளர்ந்துபோய் இருக்கின்றது. ‘கும்பிடுறேங்க சாமி’ ஆராயியின் குரல் மீண்டும் இழைக்கின்றது. கூப்பிய கையிடன் நாலு பிள்ளைகளின் தாய்.
அந்த இருட்டிலும் சின்னக்கங்காணியின் கழுகுப்பார்வை ஆராயியை அலசுகின்றது.
“என்ன… ஆராயி…? கங்காணியின் குரல் சாரங்கமாக ஒலிக்கின்றது. சாமி என் மகன் கணபதியையும், கண்டிச்சீமைக்கு கூட்டிப்போங்க..’ சின்னக்கங்காணியார் பதில் கூறவில்லை. பதிலுக்குச் சிரித்தார். தொடர்ந்தும் சிரித்துக் கொண்டே பக்கத்திலிருக்கும் மாயாண்டியைப் பார்த்தார். மாயாண்டி கோரஸாக சிரித்தான்.
சின்னக்கங்காணி சிரித்தால், மாயாண்டியும் சிரிக்க வேண்டும். முறைத்தால் முறைக்க வேண்டும்.
பதில் கூறாது சிரித்துக்கொண்டே இருக்கும் கங்காணியின் காலில் தானும் விழுந்து கும்பிட்டதோடு மகன் கணபதியையும் அப்படி செய்யும்படி கூறினாள். பதினாறு வயது பூர்த்தியடைந்ததும் ஒரு சிறுவனைப் போன்ற தோற்றத்தையுடைய கணபதி, கங்காணியின் காலில் மிகவும் பவ்வியத்துடன் சாஸ்டாங்கமாக விழுந்தான்.
“என்ன புள்ள வெளயாடுறியா..” குரலில் விநோதமான சீற்றம்… இந்த சின்னப் பயலை கூடிப்போய் நான் என்ன செய்ய? உன் புருஷன் சன்னாசி அந்த குப்பமேட்டு சிவளாயியை கூட்டிக்கிட்டு சிலோனுக்கு ஓடிப் போயிட்டான்னு ஊர்ல.. டொம்மு… டொம்முன்னு கெடக்கு’
“ஐயையோ என் தலபுள்ள சத்தியமா சொல்றேன்.. நான் வேணும்னா எந்த கோயில்லேயும் சத்தியம் செய்யுறேன். என் புருஷன் ஒரு நாளும் அப்படி செய்யாது. அந்த குப்பத்து சிறுக்கி செவளாயி எவனோட போனாளோ.. கொள்ளயில போவா… என் புருஷனோட போனதிற்கு என்ன சாட்சி இருக்கு..? ஜயன் வீட்டுமாடு கன்ன மேச்சிக்கிட்டு இருந்த என் புருஷன் மாட்டேன்னு ஒதுங்கிக்கிறவும் ஜயனுடைய தென்னந்தோப்பில யாரோ தேங்காயை புடுங்க இவருதான் புடுங்கினார்ன்னு பொய்குத்தம் சாட்டி கட்டி வைச்சி அடிச்சபடியால; அவமானம் தாங்காம போயிட்டாரு.
இவுங்க பாட்டனும் கண்ண மூடிட்டாரு. நான் இந்த நாலு புள்ளகளையும் வச்சிக்கிட்டு என்னா பண்ணுறது… சாமி எப்படி சரி எம்புள்ளயள கூட்டி போங்க…”இப்போது விசித்து விசித்து அழும் அவளது குரல். ஓ… என்ற அழுகையாக பெரிதாகக் கேட்டது.
“இது நல்ல கதை, உன் புருஷனை தேடவா வெள்ளைக்காரன் எங்களுக்கு பணம் கொடுக்கிறான்? சரி… சரி… என் கையை கடிச்சாலும் பரவாயில்லை. ஏதோ புண்ணியமா போவுது. ஆனா சொல்பேச்சி தட்டக்கூடாது. கண்டிச் சீமையில கெப்டன் பான்ஸ்துரை கோச்சுரோடு போடுறான். அங்க தனி ஆள் ‘ஒண்டி’களுக்கு வேலை இருக்கு… இப்ப தோட்டங்கள்ல வேலைக்கு குடும்பமாத்தான் கேட்கிறாங்க… கோச்சிரோடு போடுற இடத்தில கல்லுடைக்க, மண்தூக்க இப்படிப்பட்ட வேலைகள் இருக்கு பரிதாபப்பட்டு இவன் பேரையும் பதிஞ்சிக்கிறேன். மாயாண்டி சன்னாசி மகன் கணபதின்னு காட்டுக்கோட்ட பெரட்டில போட்டுக்க. ஞாயிற்றுக்கிழமை காலையில் நாலு பெரட்டு ஆளு புறப்படுறாங்க. அதுல இவளையும் சேர்த்துக்கச் சொல்லு.. சனிக்கிழமை சாயந்திரமா வந்து செலவுக்கு பணம் வாங்கிக்க. எல்லாம் கடன் தான். என்ன மாயாண்டி புறப்படுவோமா…” சின்னக் கங்காணியின் சில்லரைக்கங்காணி மாயாண்டி, அரிக்கன் விளக்குடன் தலையசைக்க இருவரும் நடக்கின்றனர்.
கணபதி தன் தாயை பின் தொடர்ந்து குப்பத்திற்கு நடந்தான்.
“நீ கண்டிச் சீமைக்குப் போய் எப்படியும் உங்க அப்பாவை தேடி கண்டு பிடிச்சு அப்பாவை உடனே இங்க அனுப்பி வைச்சிரு… நான் பிறகு தம்பி தங்கச்சிமார்களையும் கூட்டிகிட்டு கண்டிக்கு வந்திடுறேன்… பார்த்தியா கங்காணியார்க்கு எப்படி எளகின மனசு. அவரு பேச்சை தட்டாம நடந்துக்கப்பா..” ஆராயி புதுத்தெம்புடன் கூறினாள்.
“நீ பயப்படாத அம்மா நான் எப்படியும் நம்ம அப்பாவை தேடிக்கிட்டு வந்திடுறேன். தம்பி தங்கச்சிமார்களை கவனமாக பார்த்துக்க. நான் அங்க இருந்து உங்களுக்கு பணம் அனுப்பி வைக்கிறேன்” கணபதி நம்பிக்கை ஊட்டினான்.
அன்று இரவு அவர்கள் குடிசையில் ஒரு கவளம் சோறு பெரும் விருந்தாக அமைந்தது.
ஞாயிற்றுக்கிழமை ஊர்கள் பலவற்றிலும் இருந்து கண்டிச்சீமையைப் பற்றி பூத்துக்குலுங்கும் கனவுகளுடன் நீ முந்தி.. நான் முந்தி.. என்று வந்த வந்தவர்கள் ஒன்றாகக் கூடி நடந்தார்கள். ஒரு “புழுதிப்பட்டாளம்” கடலை நோக்கி விரைந்தது. தன் நெருங்கிய உறவுக்கார வீரமுத்துவிடம் கணபதியை ஒப்படைத்த ஆராயி கண்கலங்கி நின்றாள். கண் கலங்கி நிற்கும் ஆராயியை ‘நீ பயப்படாததங்கச்சி… நான் என் மகனா நெனச்சி பாதுகாத்து இருப்பேன்’ என்று தைரியம் கூறிதேற்றி வீரமுத்து கணபதியை தன்னோடு சேர்த்துக் கொண்டு நடந்தான். வீரமுத்து ஆராயிக்கு சகோதர முறையானவன்.
நடை…நடை…நடை கால்கள் தேய்ந்து விடுமோ என்று அஞ்சும்படியான நடைமுள்குத்தி… புண்பட்டு… கால்கள் கெஞ்சி புலம்பினாலும் தொடர்ந்து நடை நீண்ட நெடும் பயணநடை. “எவ்வளவு நேரம் தான் கண்டி கதிர்காமக் கந்தனை நினைத்துப் பாடுவது..” பெரியோர்கள் இடையில் தங்கும் இரவுகளில் இராமாயணக் கதையைக் கூறிக்களைப்பபைப் போக்கினார்கள்.
இடைக்கிடை குக்கிராமங்களின் சந்திகளில் சாலையோரத்தில் மரநிழலில் கஞ்சித் தொட்டில்கள் “நடை பட்டாளத்தின் களைப்புத்தீர, கம்பனிகாரர் ஏற்பாட்டில்;” பரிதாபி வருஷம் பரதேசம் போறோம் என்று கஞ்சி குடித்தாறிய ஒருவன் பஞ்சகும்மி பாடினான். “பஞ்ச கும்மியும் தெம்மாங்கும்” கஞ்சி சுவைபடாத இன்னுமொருவன் சலித்துக்கொண்டான்.
இராமாயணக் கதையில் கடல் தாண்டும் படலம் வரும் முன்னரே நடைப்பட்டாளத்தினர் தனுஷ்கோடியை வந்து சேர்ந்து விட்டனர். அத்தனை உத்வேகமான நடை, கடலையே காணாத பலர் முதலில் கடலைக் கண்டனர். கடலை மட்டுமா கப்பலையும் பார்த்தனர். கப்பலை தொட்டுப்பார்த்தனர். தோணியில் ஏறி கப்பலில் அமர்ந்து பயணத்தைத் தொடர்ந்தனர்.
தண்ணீரில் தள்ளாடும் பாய்க்கப்பலில் பயணம் தொடர… பாய்க்கப்பல் மெதுவாக ஓடியது.. தூரத்தே தெரியும் இராமேசுவரம் கோயில்.. சுகமான கடற்காற்று அரவணைக்க நடை பயணத்தில் களைத்துப்போன அனைவருமே நித்திரையில் ஆழ்ந்தனர்.
பொழுது புலரும் முன்னர் மறுகரையினை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் பாய்கப்பலில் ஏறியவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு கலங்க’ சிறிதுசிறிதாக ஆரம்பித்த மழை பெருமழையாக.. பேய்மழையாக அடம்பிடித்துக் கொண்டு பெய்ய…
வெறிகொண்டு ஆடும் அலைகள், நீர்ச் சுழிகள் தண்ணீர் காட்டில் திசையும் தடுமாறிப்போக இடையிடையே கடலே பிளவுறும்படியாக இடியோசை வானத்தை பிளந்து காட்டும் மின்னல்கள். ஆட்டம் போடும் படகிற்கருகில் ஒரு மின்னல்வெட்டு “சாட்டையை சொடுக்குவது போல’ சொடுக்குகின்றது. அரண்டு போய்க்கிடக்கும் கணபதி வீரமுத்துவை கட்டி அணைத்துக் கொள்கின்றான். எல்லாருமே, அருச்சுனா…. அருச்சுனா சொல்லுங்க”அருச்சுனா.. அருச்சுனா’ கப்பலே அதிரும் படியாக அருச்சுனா கோஷம் கேட்கின்றது.
தலைசுற்றி வாந்தி எடுத்தபலர், இப்போது அதிலேயே வீழ்ந்துவிட்டனர். மயக்கமடையாதோர் தெய்வங்களை துணைக்கழைத்து உயிர்ப்பிச்சை வேண்டி நின்றனர். பாய்க்கப்பலுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம்.
கப்பலோட்டி கட்டளையிட்டான். கப்பலின் நடுமரத்தில் அம்புபோல் விரைந்தேறிய ஒருவர் ‘பாயை’ அறுத்துவிட்டு ‘விர்’ ரென்று இறங்கினார். சற்று நேரத்திற்கெல்லாம் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்த அந்த பாய்க்கப்பல் வேகம் தணிந்து கட்டுக்கடங்கியது. காற்றின் வேகமும் தணிய, அலைகளும் அடங்கி ஓய்ந்தன.
பாய்க்கப்பல் நிதானமாக மிதந்து கொண்டிருந்தது. கிழக்கும் வெளுத்துக்கொண்டுவர துவண்டுகிடந்த அனைவரும் எழுந்து நின்றனர். அமைதி பிறந்து நிற்கும் போது… அந்த அமைதி நிலவியது. சிறிது நேரம் தான்; பாய் இழந்து நிற்கும் கப்பலை ஒரு பாரிய மலை ஒட்டி உரசி சேர்த்து இழுப்பது போல மெது மெதுவாக இடதுபக்கமாக சரிய… என்ன இது புதிதா.. தெரியாமல் விளங்காமல் ஐயோ… ஐயோ’ கப்பல் மூழ்கப் போகுதா…? அவலமாக கத்துகின்றனர்.
“கூனிப்பொடி மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்து.. மலை மலையாக குவிந்து கப்பலை ஒட்டுது… உடனே அந்த மூலையில் அடுக்கி வச்சிருக்கும்… தவிட்டு மூட்டைகளை கடலில் கொட்டுங்கள்.. தவிட்ட கடலில் போடுங்க…’ கப்பலோட்டி அவசரப்படுத்தினான்.
அந்த அவசரக் குரலைவிட அவசர அவசரமாக ஒரு மூலையில் தயாராக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தவிட்டு மூடைகளை எடுத்து அவிழ்த்து கடலில் கொட்டினார்கள்… தவிட்டு மூடைகளை கொட்டிக் கொண்டே இருந்தார்கள். தவிடு கடலில் மிதந்தது. கடற்பரப்பில் தவிட்டுக்கோலம்.. பாய்க்கப்பலில் மலையென படிந்த கூனிப்பொடிகள் கலைந்து கடலில் மிதக்கும் தவிட்டை உண்ண விரைந்தன.. அலைகளில் தவழும் தவிட்டை உண்டு… உண்டு…
கப்பல் ஒரு குலுங்கு… குலுங்கி திசை திரும்பி ஓடியது.. சிறிது நேர ஓட்டத்திற்குப பின்னர் கரைதெரிந்தது. கரையைக் கண்ட கப்பல் பயணிகள் கையெடுத்துக் கும்பிட்டனர்.
அன்று நண்பகலுக்கு முன்னேயே தட்டப்பாறையில் முட்டிவைத்துப் பொங்கியவர்கள். மறுநாள் காலையிலேயே மலைநாட்டை நோக்கி நடந்தனர். கப்பல் பயணத்தில் இறுதிப்பயணம் சென்றுவிட்ட சிலர் மன்னார் மணலில் அடங்கி விட நோய்வாய்ப்பட்டோர் பின் தங்கி நடந்து வந்தனர்.
மீண்டும் “ஒரு நடை பாரதம் தொடங்கியது. அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் புழுக்கள் நெளியும் மனித சடலங்களையும், எலும்புக்கூடுகளையும் வழித்தடமாகக் கொண்டு நடந்தனர்.
உயிர் காடுகளைக் கடந்து, ஈரவலயக் காடுகளில் புகுந்த போது அட்டை போன்ற ஜந்துக்கள் தொற்றி இரத்தம் குடித்தன.
ஆங்காங்கே ‘முட்டி வைத்து’ ஆக்கிய போது மிஞ்சிய பழைய சோற்றை அடுத்த நேரச் சாப்பாட்டிற்கே வைத்துக்கொண்டனர். நடை பயணத்தில் களைத்தோர் பிந்தி வந்த கூட்டத்தில் சேர்க்கப்பட்டு தொத்த பயலுகள்’ என்று கேலி செய்யப்பட்டனர்.
பத்து தினங்கள் இரவு பகல்.. நடை பயணத்தில் கழித்த பின்னர் குழுக்கள் பன்னாமத்தை அடைந்தனர். மலைநாட்டின் வாசலென விளங்கிய பன்னாமம் அழகிய சிறு கிராமம். நாற்புறமும் சுற்றிலும் முடிச்சு விழுந்த மலைகள் ‘கறுத்தை ரோடு’ ஒன்று அங்கிருந்த புறப்பட்டுச் சென்றது.
வெள்ளைக்கல் தொட்டகமம் ஆட்டுப்பட்டி, தாம்பர வள்ளி பன்னாமம் தமிழ்மணம் அடுத்தடுத்து தமிழ் குடிகள் வாழ்ந்தனர். பன்னாமத்தில் மாரி குடியிருந்தாள்.
மதுரை மீனாட்சியை ‘கையெடுத்து’ துதித்தவர்களுக்கு பன்னாமத்து முத்துமாரி அடைக்கலம் கொடுத்தாள்.
பன்னாமம் வந்து சேர்ந்தோரை மீண்டும் நாலு குழுக்களாகப் பிரித்தனர். முதல் மூன்று குழுக்களும் குடும்பத்தவர்களாக விளங்க, நாலாவது குழு “தனிக்கட்டைகளைக்” கொண்டதாக அமைந்தது. நாலாவது குழு “கோச்சு றோட்டு” வேலைக்கென தெரிவு செய்யப்பட்டதாகும்.
குழுக்களைப் பிரித்த கங்காணி மனம் குமுறி நிற்கின்றார். “இந்த பயணத்தில் ‘சேதாரம்’ பெரிதாக அமைந்துவிட்டது. ஆளை திரட்டுவதை விட உயிரோடு கொண்டு வந்து சேர்ப்பதே மலையாக அமைகிறது. எப்படி சரிக்கட்டுவது? …தலை சுற்றுகிறது!” கங்காணியார் தலையைச் சுற்றி தலைப்பாகையைக் கட்டுகிறார்.
முதற்குழு வாட்டசாட்டமாக அமையவே பதுளைக்கு அனுப்பப்பட்டது. ஏனையவை பன்னாமத்திற்கு பக்கத்தில் உள்ள தோட்டக்களுக்கு அனுப்பப்பட்டது. இதனால் ஒன்றாக சேர்ந்து வந்த பலர் பலவாறு பிரிந்து போய்விட்டனர்.
மாயாண்டி கணபதியை தனது கையடக்கத்தில் வைத்திருந்தது; நாலாவது குழுவிலேயே அமர்த்திக் கொண்டான்.
“ஏன்டா… இந்த ஊரை பன்னாமம்னு சொல்லுறாங்க. ஆனா இந்த ஊர்ல ஆளுகள மாத்தி மாத்தி தலையே அனுப்புறாங்க” சகாக்களை பிரிந்த ஒருவன் மன உளைச்சலில் கூறினான்.
“ஆமா நாம்மா ஒன்னா வந்தவங்களை மாத்தி அனுப்பின ஊர்… மாத்தளை. பன்னாமம் இல்ல…” பகிடியாகக் கூறினான்.
‘மத்தளை’ ‘நல்ல பெயர்’ எல்லோருமே சிரித்தனர். அவர்கள் துயரத்திலும் சிரிப்பை மறக்கவில்லை.
ரயில் ரோட்டுக்கு தெரிவு செய்யப்பட்ட குழு தனியாக நடையைக் கட்டியது. கணபதி வீரமுத்துவை நிழல் போலத் தொடர்ந்தான். வழி நெடுக சேறும் சகதியும் குன்றும் குழியுமாக ஏறி இறங்க வேண்டியிருந்தது. பனிமூட்டத்தை துளாவிக் கொண்டு வழி தேடிச் செல்வோரை தூவானம் வரவேற்றது.
இருபுறமும் படரும் தோட்டங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வானளாவி நிற்கும் ஈரவலயக் காடுகள் அழிய கோப்பி, தேயிலை, றப்பர் தோட்டங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. தோட்டங்களுக்கு நடுவே ரயில்ரோடு உருவெடுத்துக் கொண்டிருந்தது. ரயில் பாதைக்கிடையில் ‘கேம்ப்’ அடித்து தொழிலாளர் தங்குவதற்கு வசதி செய்திருந்தார்கள். ஒவ்வொரு ‘கேம்பிலும்’ இருநூறு பேருக்கும் குறையாமல் இருந்தனர்.
சல்லிக்கற்கள் உடைத்தல், பாதை வெட்டுதல்…. மண் நிரப்பல் மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதைகளை அமைத்தல், பாலம் கட்டுதல், தொங்கு பாலம் அமைத்தல் முதலான வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
கொத்தனார்கள், ‘ஆண்கல்’, ‘பெண்கல்’, ‘அலிக்கல்’ பார்த்து பச்சிலை மூலிகைக் கொண்டு பாரிய கற்பாறைகளை பிளந்து கொண்டிருந்தனர். மலைகளையே சிலைகளாக்கிக் கொண்டிருந்த சிற்பிகளின் உளிச்சத்தம் தேனிசையாக அருவிகளின் ஆலாபனையில் கேட்டுக் கொண்டிருந்தது. இடைக்கிடை கல்லு வெடிச்சத்தம் பயமுறுத்தியது.
கணபதியும் வீரமுத்துவும் சிங்கமலை சுரங்கத்திற்கு அடுத்ததாக கட்டப்படும் பாலத்தில் வேலைசெய்வதற்காக அனுப்பப்பட்டனர். இடையில் தங்கிய கேம்புகளிலும் சந்தித்த ஆட்களிடமும் சன்னாசினை விசாரித்தபடியே இருவரும் சென்றனர்.
இரவு… தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கின்றது…. தூங்காமல்… சின்னகங்காணி முனுசாமியும், மாயாண்டியும், கேம்புகளுக்கு மத்தியிலுள்ள “வாடியில்” வாடிப்போய் மந்திராலோசனை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு குடம் கித்துள் கள்ளில் இன்னும் சிரட்டைக் கள்ளே எஞ்சியிருக்கின்றது.
யோசனை… யோசனை… எப்படி இடிந்த பள்ளத்தை நிரப்புவது…? ‘எப்படி இந்த பள்ளத்தை நிரப்புவது….?’ உருப்படியாக ஒன்றும் தட்டுப்படவில்லை. முட்டிக்கள்ளு முடிந்ததே ஒழிய ‘போதையோ’ பாதையோ தெரியவில்லை.
வெள்ளைக்கார பான்ஸ் துரையின் முகத்தை நினைக்கும் போது தலைக்கேறிய போதை இறங்கி போகின்றது. கைநீட்டி வாங்கிய வெள்ளிப்பணம் கொஞ்ச நஞ்சமா…?
குறித்த காலத்தில் பாலத்தை எப்படி கட்டி முடிப்பது..? யோசனையில் மூழ்கி துயரப்பட்டு மௌனத்தில் ஆழ்ந்துபோன கங்காணியின் மௌனத்தளைகளை உதறுவது போல, மாயாண்டி.. ‘ஐயோ கங்காணியாரே.. கங்காணியாரே குரலில் உற்சாகம் ததும்பியது.
முனுசாமி நம்பிக்கையோடு, கங்காணியாரே! ம்…சொல்லு’
கங்காணியாரே நாம்ம கட்டாத பாலம் இல்ல… மறிக்காத ஆறு இல்ல… நிரப்பாத பள்ளம் கெடங்கு இல்ல… பள்ளம் மட்டும்தான் இப்படிசோதனையா போச்சி… மண்நிரப்ப… நிரப்ப… இடிஞ்சி போவுது… இப்படி ஒரேயடியா இடியறதுக்கு ஒரு காரணம் இருக்கு.. இப்பதான் எனக்கும் அது மனசில படுது. இந்த இடத்தில் ஒரு முனி பாய்ச்சல் இருக்கு… அதுதான் இப்படி… இங்க இருந்து பாருங்க… ஏழு மலைகள் ஒரே தொடர்ச்சியா தெரியுதே அது எழு கன்னிமார் இருக்கிற மலையா இருக்கும்… இங்க இருந்து ஒரு முனி பாய்ச்சல் அங்க போவுது. முனிப்பாய்ச்சலின் வழி சரியா இந்த இடத்திலதான் அமையுது. ரெண்டொரு தடவ என் கனவிலேயும் இது தட்டுப்பட்டிச்சி.. அதலாதான் பாலத்தை கட்ட விடாம தடுக்குது… அதுதான் இந்த சோதனை எல்லாம்… முனியை நம்ம வழியில வராமதடுக்க ஒரு வழி இருக்கு…. முனியை திருப்திப் படுத்த ஒரு வழி இருக்கு… ஒன்னு செய்யனும்.
“என்னா செய்யனும்… உடனே சொல்லு…” கங்காணியின் குரலில் பதற்றம்… எனினும் தெம்பு இழைந்தது. சோர்ந்து கிடந்தவர் துள்ளி எழுந்து நிற்கிறார்.
நாற்புறமும் நோட்டம் விட்ட பின்னர். மாயாண்டி, கங்காணியின் காதில் கிசுகிசுக்கிறான். கங்காணியின் முகம் வியப்பால் விரிகின்றது. ‘செஞ்சா சரி வருமா?.. அப்படி செஞ்சா சரியா? மாயாண்டி.. மாயாண்டி.. குரல் இழைகின்றது. “ஆமா.. ஆமா எங்க பாட்டா முந்தி ஒரு கதை சொன்னிச்சி… ஏழு அண்டா புதையல் எடுக்க செஞ்சாங்களாம்… சரி வந்திச்சாம்…”
மீண்டும் இருவரும் கிசுகிசுகின்றனர். கங்காணி மாயாண்டியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு திட்டம் போடுகிறார். இப்போது தலைக்கேறுவது போதையா புத்தியா தெரியவில்லை.. தெளிவில்லை. இருவருக்குமே தெரியவில்லை. வெள்ளைக்காரனிடம் வாங்கிய வெள்ளிப்பணத்திற்கு வகை சொல்ல வழிகிடைத்து விட்டது… பாலத்தைக் கட்டி விடலாம்.
அடுத்த நாள் சின்ன கங்காணி அவசர வேலையாக வீரமுத்துவை ‘உதுமான் கந்த’ சுரங்ககேம்புக்கு அனுப்ப, வீரமுத்து தான் திரும்பி வரும்வரை கணபதியை பத்திரமாக இருக்கும்படி கூறிவிட்டுச் செல்கின்றனர்.
வீரமுத்து அங்கேயும் தன் தகப்பனைத்தேடி வருவான் என்ற நம்பிக்கை கணபதிக்கு வளர்ந்தது. வீரமுத்து உதுமான் கந்தைக்கேம்பிற்கு புறப்பட்டுப் போனான். அங்கேயும் கணபதியின் தகப்பனைப் பற்றி விசாரித்தபடியே சென்றான்… சன்னாசியை தேடியவன், கறுத்த வாட்டசாட்டமான கறுப்பரும் அங்கே ரயில்ரோடு போடும் வேலைகளில் ஈடுபட்டிருப்பதை கண்டு வியந்து போனான்.
‘யார் இவுங்க…? என்றான். “காபிரியன்”… கடிச்சிடு வான்கள்” என்று ஒருவன் பயம் காட்டினான். அன்றுமாலை சில்லறைக்கங்காணி மாயாண்டி, கணபதிற்கு தெரிவித்த செய்தி, அவனை ஆடுபாலத்தில் வைத்து தாலாட்டியது. ‘ஆயா… அப்பா இருக்கிறாராம். நாளைக்கு அவரை பார்க்கப் போறேன். உங்களையும் தங்கச்சிமார்களையும் கூட்டிவர அப்பாவை அனுப்பி வைக்கிறேன். நாளைக்கு அப்பாவை பார்ப்பேன். நான் கடல் கடந்து தேடி வந்ததைக் கண்டு சந்தோஷப் பட போறார்” கணபதி களிப்பில் மிதந்தான். நாளை காலை கொட்டகல கேம்பில் இருக்கும் அவன் அப்பா சன்னாசியைப் பார்க்கப் போக வேண்டும். அதிகாலையிலேயே…
“இந்த மாயாண்டி சின்ன கங்காணிக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு… அப்பாவைத் தேடி கண்டு பிடிச்சிட்டாரே…”
மகிழ்ச்சி கிச்சு கிச்சு மூட்ட, தூக்கம் வரவில்லை. கண்ணா மூச்சு வெளையாடுகின்றது. கணபதி எப்போது விடியும்.. ஆவலோடு விழித்தபடியே.. விடியல்.. கணபதி விடியலின் கதிராக எழுந்து… புறப்பட…
ஞாயிற்றுக்கிழமை விடியற்பொழுது; சூரியப்பந்து மேகத்திரையில் ஒளிந்து கிடக்கின்றது. கேம்புகளிலுள்ளோர் எழுந்திருக்க மனமன்றி எலும்பைக் குத்தும் குளிரில் சுருண்டு கிடக்கின்றனர். மாயாண்டி கூறிபடி கணபதி குளிரையும் பொருட்படுத்தாது, குளித்துவிட்டு கொட்டகலகேம்பிற்கு புறப்பட தயாராக நிற்கின்றான்.
திட்டு திட்டாக இருட்டு மேகம் திரை; போட்டு நிற்கின்றது.
“கணபதி…” மாயாண்டியின் பாசக்குரல்
“வந்துவிட்டீங்களா… இதோ புறப்பட்டுட்டேன்…” கங்காணியாரே..கணபதி பணிந்து பவ்வியமாகக் கூறினார்.
“கணபதி பொழுது விடியறத்திற்குள்ள நாம இங்கிருந்து புறப்படத்தான் காச்ச மலையைத் தாண்டி கொட்டகல கேம்பிற்குள் பகல் சாப்பாட்டிற்கு முந்தி போயிறலாம். அங்க முதல்ல உங்க அப்பாவை கண்டு பேசுவோம். பிறகு, பெரிய கங்காணியார் கிட்ட சொல்லி ரெண்டு பேரையும் ஒரே கேம்பில சேர்ந்திருயறேன்… நீ காலையிலே குளிச்சியா ஒரு பூஜை நேர்த்திக்கடன் இருக்கும்….”
“ஆமா… நீங்க சொன்னபடி குளிச்சிட்டேன்…” கணபதியின் குரலிலும் தூய்மை மெல்லிய இருளுக்கு மெருகேற்றிபடி இருவரும் நடந்தனர். ஒரு காதம் நடந்திருப்பார்கள். அவர்கள் பாதையில் ஒரு முடக்கு, அங்கே இருவர் இருளோடு இருளாக நின்றனர். அந்த இருவரும் இவர்களைத் தொடந்து நடந்தனர். பின்பு நாலெட்டு தூரம் தான் நடந்திருப்பர். ‘கணபதி இந்த புது வேட்டியைக் கட்டிக்க உங்க அப்பாவை புதிசா பார்க்கப் போற இல்ல… புது வேட்டி கட்டிக்க… அப்பதான் மதிப்பா இருக்கும்…” முதல்ல இந்த இடத்தில சாமி கும்பிட்டுட்டு போவோம்” வாஞ்சையோடு தரும் வேட்டியை வாங்கிக் கட்டிக் கொண்டான். “இந்தா விபூதியைப் பூசு” கூட வந்த இருவரும் இப்போது அவன் நெற்றியில் விபூதியைப் பூசி, சந்தனத்தை அப்பி, குங்குமப்பொட்டை வைத்தனர்.
கணபதிக்கு புதிராக இருந்தது. அப்பாவைப் பார்க்க சாமி கும்பிட… நல்லது எத்தனை உபசரணை, அப்பாவை நேரில் பார்த்துவிட்டது போல மகிழ்ச்சியில் தோப்புக்கரணம் போட்டு விழுந்து கும்பிட்டான்.
“இந்த தேசிக்காயை கையில் வைச்சிக்க…” வணக்கம் முடிய மாயாண்டி கணபதியின் கையில் கொடுத்து ‘இதுவரை காணாமல் இந்த ஆள, முதல் தடவையா காணப் போறோம் இல்லியா… அதுதான்…. இதெல்லாம்…. நான் முந்தியே வச்ச ச நேர்த்திக்கடன்…. நேர்த்தி வச்சா மறக்காம செஞ்சிடனும்…”
கணபதி எலுமிச்சம் பழத்தை வாங்கி கையில் வைத்துக் கொண்டான். கூட வந்தவன் செம்பிலிருந்த தண்ணீரை சிறுவனின் தலையில் தெளித்து கொட்டினான். கணபதி தலையைச் சிலிர்த்தான். தண்ணீர் விசிறி தெறித்தது. எதற்கும் சம்மதமாக சிலிர்த்தான். தலையை ஆட்டினான். அது சம்மதம் தான் என்ற சாடையைக் காட்டியது.
“இப்பபோவோம்..”
மாயாண்டி முன்னே நடக்க, நால்வரும் பள்ளத்தில் இறங்கி நடக்கின்றனர். “இந்த குறுக்குப் பாதை, இதுலபோனா சுருக்கா போயிறலாம்” குறுக்குப் பாதையோ என்னவோ… அப்பா கிட்ட போனா சரி” கணபதி வாய் திறக்கவில்லை.
சிலிர்த்தோடும் அருவியின் ஓரத்தில், இறங்கி புதிதாக பாலம் கட்ட ஆழமாக குழி தோண்டி இருக்கும் பகுதிக்குள் இப்போது நடந்து கொண்டிருந்தனர். பாதாளக்குழியின் ஒரமாக இருளைத் தடவியபடி நால்வரும் நடக்கும்போது….
முன்னால் சென்று கொண்டிருந்த மாயாண்டி நின்று திரும்பிப்பார்த்து, கணபதி இப்படி நில்லு…” குரலில் நடுக்கம் எனினும் அதட்டி வந்தது.
“நம்ம எங்க அப்பாவைத்தானே பார்க்கப் போறோம்…?” கேள்வியா… நடுக்கமா….
“ஆமா…நீ உன் தாய்க்கு தலைமகன் தானே… இந்தப் பக்கம் பாரு… திரும்பு… ஆமா… திரும்பு…” மாயாண்டி ஒரே பாய்ச்சலாக பாய்ந்து அசுரனாகமாறி ஆழக்கிடங்கினுள் கணபதியைத்தள்ளி விட,
ஒரு கணம் நடந்தது என்ன என்பதை நிதானிக்க முடியாத கணபதி நிலைகுலைந்து கால்கள் இடறி தலைகுப்புற சரிந்து “ஐயோ அம்மா… அப்பா… அப்பா’ கணபதியின் அபயக்குரல் பாழுங்கிடங்கிலிருந்து வெளியே வரவில்லை.
இடிந்து கிடக்கும் பாழுங்கிடங்கினுள்… ஆழக்குழியில் பள்ளத்தில் தலைக்குப்புற அப்பாவைத்தேடி… தேடி கணபதி,
இருட்டிலிருந்து வெளிப்பட்ட கங்காணி முனுசாமி பதறும் குரலி “போடு சம்பிராணியை போடு சாம்பிராணியை’ துரிதப்படுத்தினான்.
மாயாண்டி எலுமிச்சம்பழத்தை வெட்டி நான்கு திசையிலும் வீசிக் கொண்டிருந்தான். தணல் சட்டியில சாம்பிராணியைத் தூவி, பள்ளத்திற்கும், மேட்டிற்குமாக ஆட்டி காட்டிவிட்டு குழியினுள் வீசி எறிந்தனர் கூட வந்ததோர்.
‘வால் முனியே உனக்கு நரபலி. தாய்க்கு தலைமகனை காவு கொடுத்திட்டேன். இரத்தப்பலி கொடுத்திட்டேன். இந்த பலிலை ஏத்துக்கிட்டு இனி பாலத்தைக் கட்டவிடு… குழியை இடிய விடாதே… பாலத்தைக்கட்டவிடு…’ வெற்றிலையில் சூடத்தைக் கொளுத்தி சுடரை நாலா திசைகளிலும் காட்டிய முனுசாமியின் நா.. முணுமுணுக்கின்றது கைகள் நடுங்குகின்றன.
அப்போது மற்றவர்கள் அதள பாதாளத்தில் தலை சிதறி குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கும்; கணபதியின் மீது பெரிய பெரிய பாறாங்கற்களை தம் தலைக்கு மேலே தூக்கி தூக்கி… “முனியே பலியை ஏத்துக்க… ஏத்துக்க” என்று சரமாரியாகப் போட்டுக் கொண்டே இருந்தனர்.
– மல்லிகை, மாத்தளை மாவட்ட சிறப்பிதழ்.
– அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.
![]() |
சிறுகதை, நாவல், நாடகம், கவிைன ஆகிய இலக்கியத் துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள வடிவேலன், இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். கதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவர் எழுதி தமிழகத்தில் வெளியான சில கதைகள் அங்கு மறுபிரசுரமும் செய்யப்பட்டன. வடிவேலனின் 12 சிறுகதைகள் அடங்கிய 'வல்லமை தாராயோ!' என்னும் சிறு கதைத் தொகுதி மலையக வெளியீட்டகத்தின் பிரசுரமாக வெளிவரவுள்ளது. 'தோட்டக் காட்டினிலே…' என்னும்…மேலும் படிக்க... |