கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 17, 2025
பார்வையிட்டோர்: 5,047 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-33

28. சோறா, சுதந்திரமா?

ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்தில் ஒதுங்கியிருந்த உள்மண்டபத்தில் பலர் கூடியிருந்தனர். அங்கு கூடியிருந்த வர்கள் அனைவரும் பல்லவ நாட்டைச் சார்ந்த பல துறை களின் தலைவர்கள். எல்லாருக்கும் மையமாக தரணி கொண்ட போசர் அமர்ந்திருந்தார். அங்கு கூடியிருந்தவர் களில் இரணியவர்மர், குறுநில மன்னரான காடகமுத்தரை யர், பல கடிகைகளைச் சேர்ந்த தலைவர்கள், வணிக சபைத் தலைவர்கள், ஆகியவர்கள் மிக முக்கியமானவர்கள். அந்தக் கூட்டத்தில் ராஜன் நம்பூதிரியும், பல கடிகைகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலரும் இருந்தனர். 

பல்லவச் சக்ரவர்த்தி மரணமடைந்த செய்தி வந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, பராமாச்சாரியின் ஆசிரமத்தில் அந்தக் கூட்டம் இரவில் கூடியது. சூழ்நிலையைக் கவனித் தாலே, அது ஓர் இரகசியக் கூட்டம் என்பது புலனாகி விடும்.

சற்று விலகியபடி அமர்ந்திருந்தார் யோகி பரமாச்சாரி. கூட்டத்தின் நடுநாயகமாக விளங்கிய தரணிகொண்ட போசர் பேசத் தொடங்கினார். 

“முதலில் நாம் எல்லாரும் யோகி பரமாச்சாரிக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம். இங்குள்ளோரில் பலர் யோகியைச் சந்தேகத்தோடு பார்த்திருப்பீர்கள். இன்று இவருடைய ஆசிரமத்திலேயே இப்படி ஒரு கூட்டம் நடைபெறுதைக் கண்டு வியப்புற்றிருப்பீர்கள். நாட்டில் மனித சுதந்திரம் பறிக்கப்பட்டு, அராஜகம் தாண்டவமாடு வதைக் கண்ட யோகியாரின் மனம் வருந்தியது. பரமாச்சாரி போதிக்கும் நெறிகளின் அடிப்படையே சுதந்திரந்தான். சுதந்திரத்துக்கு இன்று ஆபத்து வந்திருக்கும்போது, யோகி யார் நமக்கு உதவ முன் வந்திருக்கிறார். இந்த ஆசிரமந்தான் அரண்மனையின் சந்தேகம் விழமுடியாத இடம். யோகி பரமாச்சாரிக்கு உங்கள் சார்பில் நன்றி கூறுகிறேன்” என்றார், தரணிகொண்ட போசர். 

இதைக் கேட்டு ருத்திர பரமாச்சாரி சொன்னார்- “ஆனந்த மயமான வாழ்க்கைதான் படைப்பின் லட்சியம். சுதந்திரம் பறிபோய்விட்டால், அங்கு தெய்வத்துக்கு இடமில்லை. நான் மகாராணியிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிவிட்டேன். ஆனால் மகாராணியால் சித்திரமா யனை எதிர்த்துச் செயல்பட முடியவில்லை. அவளால் தனித்து இயங்க இயலாது. பாவம், அவளுடைய நிலை, பரிதாபத்துக்குரியதுதான். இங்கே கூடியிருக்கும் நீங்கள், சுதந்திரப் போராட்டத்துக்காக இந்த ஆசிரமத்தைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.” 

கூட்டத்தில் சற்று நேரம் மௌனம் நிலவியது. எல் லாரும் தரணிகொண்ட போசரைத்தான் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்தாம் இரகசியமாக அந்தக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். ஐந்து நாட்களாக காஞ்சி நகரில் மயான அமைதி குடிகொண்டிருந்தது; வீதிகளில் மக்களின் நடமாட்டம் இல்லை. எந்தச் சமயத்திலும் யாரும் சிறைப்படலாம் என்ற நிலை. சித்திரமாயனின் சந்தேகத்துக் குள்ளான பல தலைவர்கள் சிறைப்பட்டு விட்டார்கள். புதிய தலைவர்கள், பல துறைகளுக்கு மகாராணியால் நியமிக்கப்பட்டிருந்தார்கள். கோயில்களில் கூட ஜன நட மாட்டம் இல்லை. காஞ்சி நகரை பீதி கவ்வியிருந்தது. வீதி களில் படைவீரர்களின் காலடி ஓசைதான் பிரதானமாக இருந்தது. அந்தச் சூழ்நிலையில் தான் ஆசிரமத்தில் அந்தக் கூட்டம் கூடியிருந்தது. 

தரணிகொண்ட போசரின் பார்வை ஒரு முறை அந்த மண்டபம் முழுவதும் சுழன்றது. தொண்டையை செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார். 

“இப்போது காஞ்சி மாநகரில் என்றும் காணாத அமைதி நிலவுகிறது. மகாராணியின் திரிதத்துவம் பற்றி இரண்டு நாழிகைகளுக்கு ஒரு முறை தெருத் தெருவாகப் பறை யறைந்து தெரிவிக்கிறார்கள். மகாராணியின் சிந்தனையில் தோன்றிய திரிதத்துவம் நகர் முழுவதும் அறிவிக்கப்பட்டு விட்டது. பல்லவ நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இம்மூன்றுக்கும் குறை வில்லாதபடி அரசு கவனிக்கப் போவதாக அறிவித்திருக் கிறார்கள். வறுமைப்பட்டிருக்கும் மக்கள் பலர் இதைக் கேட்டு உற்சாகமாயிருக்கிறார்கள்.” 

பேச்சை நிறுத்திவிட்டுக் கூட்டத்தினரை உற்றுப் பார்த்தார். பிறகு கேட்டார்: “மனிதனுக்குச் சுதந்திரம் எதற் காகத் தேவை ? மகாராணி அறிவித்திருக்கும் திரிதத்துவப் படி, உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க வீடும் கிடைத்துக் கொண்டிருந்தால் போதாதா?” 

பௌத்த கடிகையைச் சேர்ந்த ஒரு மாணவன் எழுந்து நின்றான். “வயிறு ஒன்றுதான் லட்சியம் என்று எண்ணும் ஜென்மங்களுக்குப் போதும். ஆனால், நாம் எல்லாரும் மனிதர்கள்” என்றான் படபடப்புடன். அவனுடைய வார்த்தைகளில் தொனித்த ஆத்திரம் எல்லாரையும் சிலிர்க்க வைத்தது. 

வடமொழிக் கடிகையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் எழுந்து நின்றான். “எங்கள் கடிகைத் தோட்டத்தில் ஒரு நாள் பன்றி ஒன்று பொறியில் அகப்பட்டுக் கொண்டது. பொறிக் குள் அங்குமிங்குமாக ஓடித் தப்பிச் செல்ல முயன்றது. பொறிக் கதவின் அருகே ஓடி, மூங்கில் கழியை முட்டி முறிக்க முயன்றது. பன்றியினுடைய மூக்கில் இரத்தம் கசிந்தது. அப்போதும் அது தன்னுடைய முயற்சியை விடவில்லை. உள்ளே உறுமிக்கொண்டே சுற்றிச் சுற்றி வந்தது. கதவை மோதியது. அதற்கு வேண்டிய உணவு பொறிக்குள் இருந் தது. அந்த உணவைத் தின்ன வந்ததால் தானே பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டது. அகப்பட்ட பிறகு, அந்த உணவைப் பன்றி திரும்பிக்கூடப் பார்க்க வில்லை ! உணவைத் தின்றுகொண்டு பொறிக்குள்ளேயே சுகமாகத் தூங்குவோமே என்ற எண்ணம் அதற்கு வரவில்லை. பொறி யிலிருந்து விடுதலை பெறவே போராடிக்கொண்டிருந்தது. சுதந்திரம் பறிபோனதும் அந்தப் பன்றி உணவைக்கூட மறந்துவிட்டது. மனிதன், பன்றியைவிடக் கேவலமான வனா?” என்று கோபத்தோடு கேட்டான். “வயிறு ஒன்று தான் பிரதானமா?” என்றான். 

அந்தக் கேள்வி மண்டபத்திலிருந்த அனைவரின் இதயங்களிலும் புகுந்து வெறியை ஊட்டியது. 

அடுத்திருந்தராஜன் நம்பூதிரி எழுந்து, “மானமுள்ளவர் களுக்குத்தாம் சுதந்திரத்தின் தன்மையும், அருமையும் புரியும். வயிறுதான் பிரதானம் என்னும் தத்துவத்தின் அடிப் படையில் அமையும் ஆட்சியில்தான், மனித சுதந்திரத்துக்கு இடமில்லை. நாமல்லாரும் வெறும் சோற்றுப் பிண்டங்கள் அல்ல,நமக்கென்று நாகரிகம் உண்டு; கலாச்சாரம் உண்டு; பண்பாடு உண்டு. எல்லாமே சுதந்திரத்தின் அடிப்படையில் உருவானவை. திருநாவுக்கரசர் சோற்றை மட்டும் பெரி தென்று கருதியிருந்தால், சமணராகவே மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியின் அரண்மனையில் சுகமாக வாழ்ந்திருக் கலாம். ஆனால், தனி மனிதனின் உரிமைக்காக இந்தப் பல்லவ நாட்டிலேயே போராடி வெற்றி கண்டவர். அந்தப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. இப்போது தொடரு கிறது. ஆட்சி எந்தத் தத்துவத்தின் அடிப்படையில் நடை பெற்றாலும் சரி, நாட்டில் தனி மனிதனின் மேம்பாட்டையும் உணர்வுகளையும் மதிக்கவில்லையென்றால் அந்த ஆட்சியை ஒழித்துக் கட்டுவது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்” என்றான். 

ராஜன் நம்பூதிரியின் பேச்சு, உணர்ச்சியைத் தூண்டி யது. எல்லாருக்குமே உள்ளத்தில் துணிவும், தெம்பும் ஏற்பட்டன. தரணி கொண்ட போசர் சொன்னார்-“இளம் இரத்தங்களின் சுதந்திர வேட்கை என்னையே இளைஞனாக மாற்றிவிடும் போலிருக்கிறது. இங்கு கூடியிருக்கும் அனை வரும் ஒரே சிந்தையில் தானிருப்பீர்கள். பல்லவச் சக்ரவர்த் திகள் யாரும் இதுவரை அதிகாரம் முழுவதையும் தாங்களே ஏற்றுக்கொண்டதில்லை. பல வாரியங்கள் மூலமும் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மூலமும் தான் அதிகாரங்களைப் பரவலாக்கி, ஆட்சி நடத்தினார்கள். மக்களின் சுதந்திரத்தின் மீது அக்கறை கொண்டிருந்தார்கள். அரசகுலத்தைச் சார்ந்தவன், வீதியில் ஒரு பெண்ணைத் தொட்டு அடித்து விட்டான் என்பதற்காக அவனுக்குத் தண்டனை வழங்கினார், சித்திரமாயனின் பாட்டனார். இன்று ஆட்சி முறையே தலைகீழாக மாறி, மக்களின் சுதந்திரம் முழுமையாகப் பறிக்கப்பட்டு விட்டது. இப் போது, பெண்களை வழிமறித்துக் கற்பழிக்கும் அளவுக்கு கொடுமை நிகழ்கிறது. அராஜகத்தை எதிர்த்து மக்கள் போராட வேண்டிய கட்டம் வந்துவிட்டது. போருக்குச் சென்றிருந்த படை, காஞ்சியை நெருங்குவதற்குள் நாம் ஒரு முடிவை காஞ்சியில் உண்டாக்கி விட வேண்டும். எதற்கும் திட்டமும், ஒழுங்கு முறையும் வேண்டும். இந்தப் போராட் டத்துக்கு ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவுக்கு நாம் துணையாக நிற்போம். சுதந்திரத்துக்காக நாம் தியாகம் செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது.” 

இந்த யோசனையை அனைவரும் ஏற்றனர். போராட் டக்குழுத் தலைமையை தரணிகொண்ட போசர் ஏற்றுக் கொண்டார். இரணியவர்மரும், காடக முத்தரையாரும் அந்தக் குழுவில் முக்கிய பங்கு வகிக்க இசைந்தனர். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்தது. ஒவ்வொருவராக சந்தேகத்துக்கு இடமின்றி ஆசிரமத்தைவிட்டு வெளியேறிச் சென்றனர். வழக்கமாக இரவு அந்த நேரத்தில்தான் யோகி யின் போதனைகளைக் கேட்க வரும் மக்கள், ஆசிரமத்தி லிருந்து கலைந்து செல்வார்கள். ஆகையால், இரகசிய கூட்டத்துக்கு வந்தவர்கள், வெளியேறிச் சென்றது யாருக் கும் சந்தேகத்தை உண்டு பண்ணவில்லை. 


திருநாவுக்கரசர் மடத்தின் வெளித் திண்ணையில் இரவு உணவுக்குப் பிறகு சைவ யாத்ரீகர்கள் வம்பளந்து கொண்டிருந்தார்கள். தாடி வளர்ந்திருந்த ஒரு சந்நியாசி, வைணவர்களையும், வைணவமதத்தையும் திட்டிக்கொண் டிருந்தார். சைவத்துக்கு ஈடு எதுவும் இல்லையென்று அடித்துச்சொன்னார். ஒருதூணில் சாய்ந்தவாறு கண்களை மூடி அமர்ந்திருந்த ஓர் இளம் சந்நியாசி விழித்து அவரைப் பார்த்து, “சுவாமிகளே, சைவமடத்துச் சோறு இரவுக்கு கிடைத்தாகி விட்டது. நன்றியைச் செலுத்துவதற்கு வைண வத்தை இங்கே ஏசி என்ன பயன் ? இங்கு எல்லாருமே சைவர்கள்தாம். பேசாமல் தூங்கும். வேண்டுமானால், அடுத்த தெருவில் போய் விஷ்ணு கோயிலுக்கு முன்னால் நின்று ஏசிவிட்டு வாரும்” என்றார். 

தாடிச் சந்நியாசி அவரை உறுத்துப் பார்த்தார். அவர் தலையில் ஜடாமகுடம் தரித்து விபூதி பூசிருத்திராட்சமாலை களை தலையிலும் கழுத்திலும் அணிந்து, சிவப்பழமாகக் காட்சியளித்தார்: 

“சின்னச்சுவாமிகளுக்கு எந்த ஊரோ?” என்று இளம் சந்நியாசியிடம் கேட்டார், தாடிச் சந்நியாசி. 

“எல்லா ஊரும் என்னுடைய ஊர்தான், சுவாமிகளே. உறக்கம் வரவில்லையென்றால், நாவுக்கரசர் பாடல் ஏதா வது தெரிந்தால் பாடும். கேட்டுக் கொண்டே தூங்குகிறேன்; வீணாக விவாதம் பண்ணி, மற்றவர்களின் உறக்கத்தைக் கெடுக்காதீர்” என்றார், இளம் சந்நியாசி. 

“ஆமாம், உறக்கத்தை இப்போதே தூங்கி அனுப வித்துக் கொள்வோம். இனிமேல் நன்றாக உறங்கக்கூட முடியாமல் போய்விடும்” என்றார், தாடி சந்நியாசி. 

சற்றுத் தள்ளி படுத்திருந்த ஒரு யாத்திரிகர், தலையைத் தூக்கிப் பார்த்து “ஏன் உறங்க முடியாது?” என்று கேட்டார். 

“நாடு போகிற போக்கு சரியில்லையே. மகாராணியின் அடக்குமுறை தீவிரமாகிவிட்டது. பேசினால் கூட சிறையில் அடைத்து விடுவார்கள். முதன்மந்திரி கூட பதவி விலகிவிட்டாராம்.” 

“சத்திரங்களை மூடி விட மாட்டார்களே?” என்று கவலையோடு கேட்டார் படுத்திருந்த யாத்ரீகர். 

“யார் கண்டார்கள்? மகாராணிக்கு ருத்திர பரமாச்சாரி ஆசிரமத்தில்தான் அபிமானம் விழுந்திருக்கிறது. நாளை சைவக் கோயில்களையும், சத்திரங்களையும் மூடச் சொல்லி உத்தரவு பிறப்பித்தால் என்ன செய்வது?” 

“அப்படி உத்தரவு வந்தால் சைவ சத்திரங்களுக்கு மட்டும்தான் வருமா? வைணவ சத்திரங்களையும் மூடச் சொல்லி உத்தரவு வரத்தானே செய்யும்.” 

“உமக்கு சைவ சத்திரங்கள் மூடினாலும் பரவாயில்லை, வைணவ சத்திரங்கள் மூடாமலிருந்து விடக்கூடாது. தீவிர மான சைவர்தாமய்யா நீர்” என்றார், இளம் சந்நியாசி. 

“இரண்டு சத்திரங்களும் மூடினால்தான் என்ன ? பரமாச்சாரியின் ஆசிரமத்தில் சோறு போட்டால் சரிதான்” என்று கூறியபடியே மீண்டும் தலையைத் தாழ்த்திப்படுத் துக் கொண்டார் யாத்ரீகர். 

“சோறு கண்ட இடம் சொர்க்கம். இன்று இரவு உமக்குச் சோறு கிடைத்தாயிற்று. இனி நாளைக் காலை தானே இது பற்றிக் கவலைப்பட வேண்டும். காஞ்சியில் சோற்றுக்குப் பஞ்சமில்லை. நிம்மதியாகத் தூங்கும்” என்றார், இளம் சந்நியாசி. பிறகு தூணருகே படுத்தார். பக்கத்திலிருந்த தாடிச் சாமியாரும் படுத்தார். 

சற்று நேரத்தில் மடத்தில் அமைதி நிலவியது. எல்லா ரையும் உறக்கம் தழுவியது. குறட்டை ஒலிகள், ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருந்தன. இளம் சந்நியாசி தூங்காமல் வெளியே வீசிக்கொண்டிருந்த நிலவொளியைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று அருகே படுத்திருந்த தாடிச் சாமியார், அவரைத் தொட்டதை அறிந்து திடுக்கிட்டார். அவருடைய காதருகே, தாடிச் சாமியார், “ராஜன் நம்பூதிரி உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்” என்றார். 

இளம் சந்நியாசி திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். தாடிச் சாமியார் இரகசியமாகச் சொன்னார். “பயப்பட வேண்டாம், உதயசந்திரன். உம்மை மாலையிலிருந்து தொடர்ந்து வருகிறேன். உம்மைப் பத்திரமான இடத்துக்கு அழைத்துச் செல்லத்தான் வந்திருக்கிறேன். ஓசைப்படுத் தாமல் என் பின்னோடு வாரும்.” 

உதயசந்திரனுக்கு சந்தேகம் எழுந்தது. அரண்மனை ஒற்றனாயிருப்பானோ என்று நினைத்தான். அவனுடைய தயக்கத்தைக் கண்ட தாடிச் சந்நியாசி, “சந்தேகப்பட வேண் டாம். தரணிகொண்ட போசர் அனுப்பித்தான் தேடி வந்தி ருக்கிறேன். பத்திரமான இடத்துக்குத்தான் கூட்டிச்செல்கி றேன். ராஜன் நம்பூதிரியும் அங்குதானிருக்கிறார். என்னைத் தொடர்ந்துவாரும்” என்று இரகசியமாகக் கூறிவிட்டு, மடத் தின் திண்ணையிலிருந்து எழுந்து வாசலுக்குச் சென்றார். 

உதயசந்திரன் சுற்றுமுற்றும் கவனித்தான். எல்லாரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். எழுந்து வாசலுக்குச் சென் றான். தாடிச் சாமியார் தெருவில் இறங்கி ஒரு மரத்தின் நிழ லில் ஒதுங்கி அவனுக்காகக் காத்து நின்றார். இருவரும் மேற்குத் திசையில் நடக்கத் தொடங்கினர். நிலவு காய்ந்து கொண்டிருந்தது. மரங்களின் நிழல்களிலும், கட்டடங்களின் நிழல்களிலும் மறைந்தவாறு தாடிச் சந்நியாசி நடந்தார். உதய சந்திரன் அவரைத் தொடர்ந்து சென்றான். 

நடுநிசியாதலால், வீதிகள் வெறிச்சோடியிருந்தன. எங்காவது குதிரையின் குளம்பொலி கேட்டால், தாடிச் சந்நி யாசி நிழலில் அசையாமல் நின்று உற்றுக் கவனித்தார். தேரோடும் வீதியைக் கடந்து, ஒரு சந்து வழியாக நடந்து சென்ற போது, மூன்று பேர் குதிரைகளில் எதிரே விரைந்து வந்ததைக் கண்டதும் தாடிச் சாமியார் உதயசந்திரனின் கையை இறுகிப் பற்றியபடி கட்டடத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார். குதிரைகள் அவர்களை நெருங்கியதும், முதலில், முன்னால் வந்த குதிரை நின்றது. அதைத் தொடர்ந்து மற்ற இருகுதிரைகளும் நின்றன. முதல் குதிரையிலிருந்தவர்,தாடிச் சாமியாரிடம், “சுவாமிகளே, நள்ளிரவில் எங்கே இப்படி சீடனுடன் கிளம்பி விட்டீர்?” என்று கேட்டார். 

“என் சீடனைத் தேடி அழைத்துக்கொண்டு போகி றேன்.” 

“ஏன்? உம்மை விட்டு ஓடிவிட்டானா?” 

“ஆமாம் ஐயா, சிவனைவிட விஷ்ணுதான் உயர்ந் தவன் என்று இவன் மனதை யாரோ கெடுத்துவிட்டார்கள். விஷ்ணு கோயிலில் படுத்திருந்தான். தேடிப் பிடித்து அழைத்துச் செல்கிறேன்.” 

குதிரையிலிருந்தவர் சிரித்தார். “சிவன்தான் பெரியவர் என்று ஒப்புக்கொண்டு விட்டானா உம்முடைய சீடன்?” என்று கேட்டு, உதயசந்திரனைக் கூர்ந்து பார்த்தார். உதயசந்திரன், நிழலில் இன்னும் பதுங்கித் தலையைக் குனிந்து கொண்டான். 

“விடுவேனா? சிவனுக்கு மிஞ்சிய கடவுள் ஏது ? என்னவோ இவன் கெட்ட காலம், இவன் புத்தி இப்படித் திரிந்து விட்டது.” 

“ஜாக்கிரதையாக இரும், இல்லையென்றால் ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்துக்கு ஓடிவிடப் போகிறான். சீடன் இளைஞனாகத் தெரிகிறான். பரமாச்சாரியின் ஆசிரமத்தில் பெண்களும் உண்டு. காதல் பண்ணுவதுதான் அவருடைய மதக்கோட்பாடாம். உம்முடைய சீடனை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்” என்று கூறிவிட்டு குதிரையைக் கிளப்பினார். பிறகு சட்டென்று திரும்பி, “இரவில் வீதியில் யாரும் நடமாடக்கூடாது என்று உத்தரவு இடப்பட்டிருக்கிறது தெரியாதா உமக்கு ?” என்று கேட்டார். குரலில் கடுமை தொனித்தது. 

“தெரியும். ஆனால் துறவிகளுக்கும் அந்த உத்தரவு உண்டா என்ன?” என்று கேட்டார் தாடிச் சந்நியாசி. 

“ஏன்? துறவிகளும் மனிதர்கள்தாமே? சீக்கிரம் சத்திரத் துக்குப் போய்ச் சேரும். இரவில் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது” என்று கூறிவிட்டு குதிரையில் விரைந்து சென்றார். மற்ற குதிரை வீரர்களும் சென்று மறைந்தனர். 

“இவர்தாம் கோட்டைத் தளபதி சுந்தரவர்மர். பார்த்தீரா காஞ்சியில் அடக்குமுறை எப்படி இருக்கிறதென்று. வீதியில் நடமாடக்கூட அனுமதி பெறவேண்டும்” என்று கூறியபடி நிழலில் ஒதுங்கியவாறு நடந்தார் தாடிச் சந்நியாசி. 

உதயசந்திரனை அழைத்துக்கொண்டு சென்ற சந்நி யாசி அவனை ருத்திரபரமாச்சாரியின் ஆசிரமத்துக்குள் கூட்டிச் சென்றார். உள்ளே கூடியிருந்தவர்களைக் கண்டு உதயசந்திரன் திகைப்புற்றான். ராஜன் நம்பூதிரியுடன் இலங்கை வீரர்களான தேவசோமாவும், களுபந்தாவும் இருந் ததைக் கண்டான். தாடி சந்நியாசியைக் கண்டதும், தரணி கொண்ட போசர் எழுந்து விரைந்து வந்தார். உதயசந்தி ரனின் வேஷத்தைக் கண்டதும் அவருக்குச் சிரிப்பு வந்தது. 

“நல்ல வேளையாக வந்து சேர்ந்தாய். கடைசியில் என்னுடைய ஒற்றன் உன்னைக்கண்டுபிடித்து, பத்திரமாக கொண்டு வந்துவிட்டான். உன்னைப் பற்றித்தான் கவலை யாக இருந்தது. சித்திரமாயன் உன்னைக் கொன்று விட்டானோ என்று நினைத்தோம். ராஜன் நம்பூதிரிக்கு சதா உன்னைப்பற்றிய கவலைதான்” என்றார். 

ராஜன் நம்பூதிரி பாய்ந்து வந்து உதயசந்திரனைக்கட்டி யணைத்துக் கொண்டான். “உன்னை இழந்து விட்டேனோ என்று நினைத்துப் பதறிக் கொண்டிருந்தேன். இப்போது தான் எனக்கு உயிர் வந்தது. எப்படியோ அரண்மனையிலிருந்து தப்பி வந்தாயே” என்றான். 

தேவசோமாவும், களுபந்தாவும் ஓடி வந்து உதயசந்திரனின் கரங்களைப்பற்றிக்கொண்டனர். அவர்களைக் கண்டு உதயசந்திரன் குழப்பமடைந்தான், வாய்விட்டே கேட்டு விட்டான். 

“நீங்கள் இருவரும் முதன் மந்திரியைக் கொல்லச் சதி செய்தவர்களாயிற்றே, இங்கே எப்படி வந்தீர்கள்?” 

“இவர்கள்தாம் இப்போது நமக்கு உதவப்போகி றார்கள். நாளை சித்திரமாயன் மீது குற்றம் சாட்டப்படும் போதுஇவர்கள்தாம் கண்கண்ட சாட்சிகள். சுகததாசாவை சித்திரமாயனின் ஆட்கள் அம்பெய்து கொன்றுவிட்டதால், இவர்கள் அவனுக்கு எதிரியாக மாறிவிட்டார்கள். முதன் மந்திரியும் இவர்களை மன்னித்து, ஏற்றுக்கொண்டு விட்டார்” என்றான் ராஜன் நம்பூதிரி. 

அன்று வெகுநேரம், போராட்டத்தின் தன்மை பற்றி யும், திட்டம் பற்றியும் ஆசிரமத்தில் ஆலோசனை நடை பெற்றது. எல்லாரும் கலைந்து சென்ற பிறகு ராஜன் நம்பூதிரி யும், உதயசந்திரனும் ஆசிரமத்தின் மேல்மாடி முற்றத்தில் படுத்துக் கொண்டனர். அப்போது உதயசந்திரன் தன்னு டைய அனுபவங்களைக் கூறினான். 

சோறு கிடைக்காமல் பசியால் வாடியதையும் ஒற்றர் களிடம் சிக்காமலிருக்க அவன் பட்ட கஷ்டங்களையும் சொன்னான். அரண்மனையிலிருந்து சுரங்கவாயில் வழி யாக அவன் தப்பிய பிறகு, பல வேடங்கள் தரித்துத் திரிந்தான். கடைசியில், சிவனடியார் வேடந்தான் அவனை நன்கு பாதுகாத்தது. சைவ சத்திரங்களில் உணவு கிடைத்தது. 

எல்லாவற்றையும் கேட்ட ராஜன் நம்பூதிரி சொன் னான் – “இப்போது உன்னுடைய முதல் எதிரி சின்ன ராணிதான். ஒரு பெண் எதை வேண்டுமானாலும் பொறுத்து மன்னித்து விடுவாள். இந்த மாதிரியான அவ மானத்தை மன்னிக்கவே மாட்டாள். ஆயுள் முழுவதும் மறக்கவே மாட்டாள். சித்திரமாயன் உன்னை மன்னித் தாலும், சின்னராணி உன்னை மன்னிக்கவே மாட்டாள். லீனாவை எண்ணிக்கொண்டுதான் ராணியிடம் அலட்சி யமாக இருந்திருக்கிறாய்.” 

“லீனாவின் அருகில் இருக்கும்போது எனக்கு ஏற்படும் உற்சாகமும், ஆனந்தமும் மகாராணியின் அருகில் இருந்த போது இல்லையே. அவள் அதிகார தோரணையில் என்னைப்பயன்படுத்த முனைகிறாள் என்ற எண்ணந்தான் தோன்றியது. என்னை அவள் ஆத்மார்த்தமாக நேசிப்ப தாகத் தெரியவில்லை. ஒரு போகப் பொருளாக என்னைப் பயன்படுத்திவிட்டு எறிந்து விடத்தான் நினைக்கிறாள்.” 

“பின்னே உன்னை அரியணையில், அவள் பக்கத்தில் அமரச் செய்வாள் என்று எதிர்பார்த்தாயா?” என்று சிரித் தான் ராஜன் நம்பூதிரி. 

“சீச்சி, ஒரு ராணிக்கு ஆசை நாயகனாக இருப்பதை விட குடிசையில் வாழும் ஒருத்தியின் இதயத்தில் ஆட்சி செய்வது மேல்.” 

“காதலனாகவும் இருக்க வேண்டும்; அதே சமயம், ஆசை நாயகனாகவும் இருக்கத் தெரியவேண்டும். சந்தர்ப் பங்கள்தாம் வாழ்க்கையில் முக்கியம். நாம் வாழ்கின்ற விதத் துக்கும் வாழவேண்டிய விதத்துக்கும் சம்பந்தமே இல்லை. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு நடைமுறைக்குத் தேவை யானதைச் செய்யாமல் கொள்கைகளையும், தத்துவங் களையும் பிடித்துக் கொண்டு, அந்த ஒழுங்கு முறையி லேயே நடக்கப் பார்ப்பவன், தன்னுடைய மேன்மைக்குப் பதிலாக அழிவையே தேடிக்கொள்வான்” என்றான், ராஜன் நம்பூதிரி 

“சின்னராணிக்கு நான் இசைந்திருக்க வேண்டும் என்கிறாயா?” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டான், உதயசந்திரன். 

“அதிர்ஷ்டம் எப்போதாவதுதான் தென்படும். அந்தச் சந்தர்ப்பத்தில் சமுதாய ஒழுக்க நியதிகளை ஆராய்வதில் பயனில்லை. அதிர்ஷ்ட தேவதை, ஒரு பெண். அவளை அடிமைகொள்ளவேண்டுமானால் நெறிமுறைகளை உதறி விட்டு பலவந்தமாகத்தான் அவளை ஆட்கொள்ள வேண் டும். நின்று,யோசித்து நெறிகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பவனை அவள் மதிப்பதில்லை. துணிச்சலும், வேகமும் உள்ளவனிடம் தான் அதிர்ஷ்டதேவதை தன்னை விட்டுக் கொடுப்பாள்” என்றான் ராஜன் நம்பூதிரி. பிறகு சொன்னான் – “நீ சற்று வளைந்து கொடுத்திருந்தால், இப்படி உயிருக்குப் பயந்து இங்கே வந்து ஒளிந்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அரண்மனையில், சொகுசான இடத்தில் பயமின்றி இருந்திருக்கலாம். அதிர்ஷ்டத்தை உதறி விட்டாய். இப்போது உயிருக்காக ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறாய்.” 

“எனக்கு அந்த அதிர்ஷ்டம் வேண்டாம்.” 

“தனிப்பட்ட முறையில் உனக்கு அந்த அதிர்ஷ்டம் தேவையில்லாமலிருக்கலாம். இதையே இன்னொரு கோணத்தில் சிந்தித்துப் பார். சின்னராணியின் அபி மானத்தை நீ ஏற்றிருந்தால், இப்போது அரண்மனைக்குள் உன் செல்வாக்கைப் பயன்படுத்தி, எங்கள் போராட்டத்தை சுலபமாக்கியிருக்க முடியும். நாட்டின் நன்மைக்காக நீ ஏதாவது செய்திருக்க முடியும். உன் விருப்பத்தை சின்ன ராணியால் ஒதுக்க முடியாது. அப்படி ஒரு விதத்தில், இந் நாட்டுக்கே பயன்தரக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை உதறி விட்டாய்” என்றான், ராஜன்நம்பூதிரி. 

“என்னுடைய சுயதர்மத்தைப் பற்றி நீ அக்கறையே கொள்ளவில்லை போலிருக்கிறது” என்றான் உதயசந்திரன் எரிச்சலுடன். 

“ஒரு பெரிய நன்மைக்காக சுயதர்மத்தைக் கொஞ்சம் விட்டுக் கொடுப்பதில் தவறென்ன? சுயதர்மம் என்பது, ஒரு வகையில் சுயநலத்தை ஒட்டியதுதான்.” 

“நான் சுயநலம் பார்க்கவில்லை. எந்தச் சமயத்திலும் உயிரைத் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறேன். ஆனால், ஒரு பெண்ணின் போகப் பொருளாக என்னை ஆக்கிக் கொண்டு, என் மனசாட்சியைக் கொன்று, நான் யாருக்கும் உதவியாக இருக்கமுடியாது. உன்னோடு இந்த மாதிரித் தரையில் முடங்கிப்படுப்பதை, அரண்மனையில் மஞ்சத் தில் படுப்பதைவிட மேலாக எண்ணுகிறேன். இதில் கிடைக் கும் ஆன்ம திருப்தியை ராணியின் அரவணைப்பில் நான் காண முடியாது” என்றான், உதயசந்திரன். 

“நான் பொதுவாக வாழ்க்கையின் வெற்றிக்கான யதார்த்த நிலையைச் சொன்னேன். திருப்தி என்பது, அவரவர் மனதைப் பொறுத்தது. எப்படியோ உன்னை உயி ரோடு காண முடிந்தது எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது. நிலைமை எப்படி முடியுமோ தெரியவில்லை. இந்தப் போராட்டத்தில் அழிவு ஏற்பட்டாலும், நாம் இருவரும் சேர்ந்தே அழிவோம்” என்றான் ராஜன் நம்பூதிரி. “எனக்கு ஒரு உதவி வேண்டுமே” என்றான் உதய சந்திரன். 

“என்ன?” 

“டெங்லீயின் தோட்டத்திலிருந்து என்னைப் பிடித்துப் போனது யாருக்கும் தெரியாது. மறுநாள் காலையில் என்னைக் காணாது லீனா பதறியிருப்பாள். அங்கு யாரை யாவது அனுப்பி, எனக்கு ஆபத்து இல்லை என்று தெரி விக்க வேண்டும்.” 

காலையில் இரணியவர்மரிடம் சொல்லி ஏற்பாடு செய்யலாம். இப்போது நிம்மதியாகத் தூங்கு. நீ நன்றாக தூங்கிப் பல நாட்களாகிவிட்டன” என்றான், ராஜன் நம்பூதிரி. 

29. ஆராய்ச்சி மணி ஒலித்தது! 

அரண்மனையில், மகாராணியின் முன்னிலையில், மந்திராலோசனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. புதிதாக முதன்மந்திரி பதவியை ஏற்றிருந்த அச்சுதபட்டர், மகாராணி யின் அருகில் பவ்வியமாக அமர்ந்திருந்தார். சித்திரமாயன் சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். புதிதாகப் பதவிகளில் அமர்ந்த பல துறைகளைச் சேர்ந்த தலைவர்களும், சுந்தரவர்மரும் அங்கிருந்தனர். 

ஊர்க்காவல் படைத்தலைவர் எழுந்து, “மக்கள் அடங்கி விட்டார்கள். ஒரே நாளில் எந்தக் கலவரமும் இல்லாமல் செய்துவிட்டேன்” என்று பெருமையுடன் கூறினார். 

“பதவி விலகிய தரணி கொண்ட போசர் ஏதோ சதித் திட்டம் போடலாம் என்று நினைக்கிறேன்” என்றான், சித்திர மாயன். 

“பல் பிடுங்கப்பட்ட பாம்பு. இளவரசர் இனி அவரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. இப்போது தரணி கொண்ட போசர், தியானப் பயிற்சியில் மனதைச் செலுத்துவதாகத் தகவல் கிட்டியது. அடிக்கடி பரமாச் சாரியின் ஆசிரமத்துக்குப் போய் வருகிறார்” என்றார், அச்சுதபட்டர். 

“இளவரசர் அரியணை ஏறுவதற்கு நாள் குறித்து விடலாமே” என்றார், சுந்தரவர்மர். 

அப்போது மகாராணி சொன்னாள்: “காஞ்சியில் அமைதி நன்கு நிலவட்டும். போர்க்களம் சென்றிருந்த படை காஞ்சிக்குத் திரும்பியதும் பட்டம் சூட்டலாம்.” 

“இப்போது காஞ்சியில் அமைதி நிலவுகிறது. எவனும் அரசுக்கு எதிராகப் பேசக்கூட முடியாதபடி அடக்கி விட்டேன்” என்றார், ஊர்க்காவல் தலைவர். 

“தெற்கேயும், வடக்கேயும் சிலநகரங்களில் கலவரங்கள் தோன்றியிருப்பதாய் செய்திகள் வந்திருக் கின்றன. நகரத்தலைவர்களில் சிலரை நீக்கிவிட்டுப்புதிதாக நாம் நியமித்து அனுப்பிய தலைவர்களை அந்த நகரங் களுக்குள்ளேயே வர விடாமல் மக்கள் தடுத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன” என்றாள், மகாராணி. 

“மகாராணியார் அது பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். ஆரம்பத்தில் மக்கள் ஏதாவது எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். பிறகு ஓய்ந்து விடுவார்கள். பிறகு மறந்து கூட போய்விடுவார்கள். நாம் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் போதும். அந்தந்த நகரங்களுக்கு ஏதாவது சலுகைகள் காண்பித்து விட்டால் மக்கள் அடங்கி விடுவார் கள். சத்திரங்களில் சோறு போட்டலே போதும். மக்கள் திருப்தியடைந்துவிடுவார்கள்” என்றார், அச்சுதபட்டர். பிறகு, சொன்னார், “மகாராணியாரின் சிந்தனையில் தோன்றிய மாபெரும் தத்துவத்தை, மக்கள் புகழ்கிறார்கள். மகாராணியாரின் திரிதத்துவம், நாடு முழுவதிலும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஏரிக்கரையருகே வாழும் கூலிக்காரர்களும், ஏழைமக்களும் திரிதத்துவ அறிவிப்பைக் கேட்டு மகாராணியாரைப் பார்வதியின் அவதாரம் என்றே கொண்டாடுகிறார்கள்.” 

“வடமொழிக் கடிகையில் இன்னும் மாணவர்கள் கோபத்துடனிருப்பதாக ஒற்றர்கள் தகவல் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்றான், சித்திரமாயன். 

“அது ஒரு பிரச்சினையே அல்ல. இளவரசர் பட்டம் சூட்டியதும், அந்தக் கடிகையையே ஒழித்து விடலாம்” என்றார், அச்சுதபட்டர். 

“காஞ்சியில் வைதீகர்களான சைவர்களும், வைணவர் களும் அதிருப்தியோடிருக்கிறார்கள். அவர்களைத் திருப்திப் படுத்திவிட்டால் நல்லது” என்றார், சுந்தரவர்மர். 

“அவர்களுக்கு என்ன குறை?” என்று மகாராணி கேட்டாள். 

“ருத்திர பரமாச்சாரிக்குச் சலுகை காட்டுவதுதான் வைதீகர்களின் அதிருப்திக்குக் காரணம்.” 

“இன்றே மக்களுக்கு ஓர் அறிவிப்பு விடுங்கள். காஞ்சி வைதீகப் பெருமக்களின் ஆசியை இளவரசர் வேண்டுகிறார் என்றும், முடிசூட்டு விழாவுக்குப் பிறகு, வைதீகர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்றும் அறிவுயுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்த வைதீகர்களை ஒடுக்குவது பெரிய காரியமல்ல” என்றாள், மகாராணி. 

“முடிசூட்டு விழாவுக்கு முன், சிறைப்பட்டிருப் பவர்கள் அனைவரையும் கழுவேற்ற வேண்டும். அவர்கள் உயிரோடிருக்கும் வரை எங்கிருந்தாவது எதிர்ப்புத் தோன்றிக் கொண்டேயிருக்கும்” என்றான் சித்திரமாயன். 

“மகாராணியார் உத்தரவு பிறப்பித்தால், இன்றே அனைவரையும் கழுவேற்றிவிடுகிறேன்” என்றார், சுந்தர வர்மர். 

“அவர்களில் சிலர், நம்மிடம் விசுவாசத்தோடிருக்க நினைக்கலாம். மன்னிப்புக் கேட்டு விடுதலையை விரும்பு பவர்களை மட்டும் விடுதலை செய்து விட்டு, மற்றவர்களை கழுவேற்றி விடலாம். இன்னும் இரண்டு நாட்களுக்குள் யார் யார் மன்னிப்புக் கேட்டு நம்மிடம் விசுவாசமாக இருக்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்து சொல்லுங்கள்” என்றாள், மகாராணி. 

“எப்படியும் நாலைந்து தினங்களுக்குள் நம்முடைய படை காஞ்சிக்குத் திரும்பி விடும். முடிசூட்டு விழாவை அதன்பின் வைத்துக் கொள்ளலாம். பொருத்தமான நாளை அரண்மனை ஜோஸ்யரிடம் கேட்டுத் தெரிவியுங்கள்” என்றான்,சித்திரமாயன். 

மந்திராலோசனை முடிந்து எல்லாரும் வெளியேறி யதும் சித்திரமாயனிடம், “தப்பி ஓடி விட்டானே உதய சந்திரன் இன்னுமா பிடிபடவில்லை?” என்று கேட்டாள், பிரேமவர்த்தினி. 

“தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றான், சித்திர மாயன். 

“நீ ஏவிய ஒற்றர்கள் பிடிப்பதற்குள், மேகலாவின் மெய்காவலர்கள் அவனைப் பிடித்து இங்கே கொண்டு வந்து விட்டார்களாமே! உன்னிடம் அவனை ஒப்படைக் கும்படி மேகலா அனுப்பி வைத்தாளாம். அதற்குள் தப்பி விட்டானே!அவனுக்கு எப்படி சுரங்கப் பாதையின் இரக சியம் தெரிந்தது?” என்று வியந்து கேட்டாள் பிரேம வர்த்தினி. 

“அதுதான் எனக்கும் புரியவில்லை. அவனைத் துரத்திக்கொண்டு சென்ற வாணராயனை, சுரங்கப்பாதைக் காவலாளி வெட்டிக்கொன்று, உதயசந்திரனைத் தப்பவிட்டி ருக்கிறான். அரண்மனைக்குள்ளேயே நமக்கு வேண்டாத வர்கள் இருக்கிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றான்,சித்திரமாயன். பிறகு சொன்னான். “வாண ராயனை இழந்தது என் வலக்கரத்தை இழந்தது போலிருக் கிறது. உதயசந்திரனுக்கு சுரங்கப்பாதையை அந்தக் காவ லாளிதான் காட்டியிருப்பான். அந்தக் காவலாளியை சுரங்கவாசல் சிவலிங்கத்துக்குப் பலியிட்டாகிவிட்டது.” 

”உதயசந்திரனை எப்படியும் பிடித்து தண்டித்தே ஆக வேண்டும்”. 

“விரைவில் அகப்பட்டே தீர்வான். அவனுடைய நடவடிக்கைகள் பற்றி அவனுடைய சீனக் காதலிக்குத் தெரிந் திருக்கும். அவளைச் சிறைப்படுத்தி விசாரிக்க வீரர்களை அனுப்பியிருக்கிறேன். இன்றே அவனைப் பற்றிய விவரங் களை அவளிடமிருந்து கறந்துவிடலாம்” என்றான் சித்திர மாயன். 

திடீரென்று மணியோசை அப்போது கேட்டது. இருவரும் திடுக்கிட்டனர். தர்மாசன மண்டபத்தின் ஆராய்ச்சி மணியின் ஒலி வெகுநேரம் காஞ்சி நகர் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. மக்கள் திகைப்புடன் வீட்டு வாசல்களில் வந்து நின்று மணியோசையைக் கவனித்தனர். 

சித்திரமாயனின் மனத்தில் இனம்புரியாத பீதி சூழ்ந்தது. மகாராணி குழம்பிய மனத்தோடு மணியோசையை உற்றுக் கேட்டாள். 

பல்லவ ஆட்சியில் தர்மாசனம் மிக முக்கியமானது. இந்தக் காலத்தில் டில்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட் மாதிரி ஓர் அமைப்பு தர்மாசனம் என்பது. பல்லவ சாம்ராஜ்யத்தின் அரியணையில் வீற்றிருக்கும் சக்கரவர்த்திதான், தர்மாசனத் தில் வீற்றிருந்து தீர்ப்புக் கூற வேண்டும். நகரங்களில் உள்ள அறங்கூர் மன்றம் என்ற வழக்கு மன்றங்களில் கூறப்படும். தீர்ப்பை எதிர்த்து முறையிட வேண்டுமானால்,தர்மாசனத் தில்தான், மன்னர் முன்னிலையில் முறையிடவேண்டும். அரச குடும்பத்தைச் சார்ந்த எந்த நபர் மீதாவது குற்றம் சாட்டி நீதி பெற வேண்டுமானாலும், தர்மாசன மன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும். அவ்விதம் அரச குடும்பத்தார் மீது குற்றம் சாட்டி நியாயம் கேட்க வேண்டிய பிரஜை முதலில் தர்மாசன மண்டபத்தில் தொங்கிய ஆராய்ச்சிமணியை அடிக்க வேண்டும். ஆராய்ச்சி மணி ஒலிக்கிறது என்றால், அரச குடும்பத்தைச் சேர்ந்த யார் மீதோ பெரும் பழி சுமத்தப்படுகிறது என்று பொருள். 

ஆராய்ச்சி மணி ஒலித்து, கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. அப்போது சக்ரவர்த்தி இராசசிம்மன் ஆண்டு வந்தார். இப்போது போர்க்களத்தில் மரணமடைந்த பரமேஸ்வரவர்மரின் தந்தை அவர். அதாவது சித்திரமாயனின் தந்தையைப் பெற்ற பாட்டனார், சைவநாயன்மார் அறுபத்துமூவரில் காடவர்கோன்கழற் சிங்க நாயனார் என்பவர் இவரே. காஞ்சியில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்தி னார். அப்போது, கும்பாபிஷேகக் கூட்டத்தைக் கண் காணித்துக் கொண்டிருந்தான் சக்கரவர்த்தியின் தம்பி விக் கிரமவர்மன். கோயில் வாசலில் கூட்டம் கட்டுக்கடங் காமல் போகவே, விக்கிரமவர்மன் கூட்டத்தை ஒழுங்கு படுத்த விரைந்தான். அப்போது இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை விக்கிரமனின் குதிரை இடித்துக் கீழே தள்ளிவிட்டது. கீழே விழுந்த அந்தப் பெண் ஏதோ ஏசிவிடவே, கோபமடைந்த விக்கிரமவர்மன், அவளுடைய கன்னத்தில் ஒங்கி அடித்துவிட்டான். 

மறுநாள், அந்தப் பெண்ணே தர்மாசன மண்டபத் துக்குப் போய் ஆராய்ச்சி மணியை அடித்தாள். வழக்கை விசாரித்த சக்கரவர்த்தி, “ஒரு பெண்ணை ஒரு ஆண் கை நீட்டிப்பொதுஇடத்தில் அடித்தது மாபெரும் குற்றம். அது வும் ராஜ வமிசத்தைச் சேர்ந்தவன் செய்து விட்டான். இன்று ஒலித்த ஆராய்ச்சி மணியின் ஒலி, என் ஆட்சியில் ஏற்பட்டு விட்ட களங்கம். நீ என்ன தண்டனை விதிக்கும்படி கோரு கிறாயோ, அதை விக்கிரமவர்மனுக்கு அளிக்கிறேன்” என் றார். 

அதைக் கேட்டு அந்தப் பெண், நெகிழ்ந்து விட்டாள். “கைலாசநாதர் கோயிலுக்கு நாற்பது நாட்கள் நடந்து சென்று விக்கிரமவர்மன் தீபங்களை ஏற்ற வேண்டும். பெண்ணைத் தீண்டி அடித்த பாவத்தை அவ்விதம் கழுவிக்கொள்ளட் டும்” என்றாள். 

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இப்போது தர்மாசன மண்டபத்து மணி ஒலித்ததைக் கேட்டுக்காஞ்சி நகர் பரபரப் படைந்தது. பிரேமவர்த்தினி தர்மாசனத்தில் அமர்ந்து நீதி வழங்க வேண்டும். அவளைத் தர்மாசன மண்டபத்துக்கு அழைத்துச் செல்ல முதன் மந்திரி அச்சுதபட்டர் வந்தார். மகாராணி மிகுந்த பதற்றமுற்றவளாய், அவருடன் தர்மாசன மண்டபத்துக்குச் செல்ல எழுந்தாள். 

ஜெயவாரணம் என்ற பட்டத்து யானையின் மீது மகாராணி தர்மாசன மண்டபத்துக்குச் சென்றபோது, வீதி களின் இருமருங்கிலும் மக்கள் கூடி நின்றனர். வழக்கமாக ஜெயவாரணத்தில் ஆரோகணித்து சக்கரவர்த்தியோ அல்லது மகாராணியோ வீதியில் பவனி வந்தால், மக்கள் உற்சாகமடைந்து, ஆரவாரம் செய்வார்கள். மன்னர் விஷ்ணுவின் அம்சம் என்று மக்கள் கருதி, வணங்கி நிற்பார் கள். ஜெயவாரணத்தின் கம்பீர நடையையும், மகாராணி பிரேமவர்த்தினியின் கவர்ச்சியையும் கண்டு உற்சாக மடைந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்யவேண்டிய மக்கள், அன்று மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்; வீதியில் பட்டத்து யானையின் மணியோசையும், குதிரைகளின் குளம்பொலி ஓசையும், பரிவாரங்களின் கொம்பு ஊதிய ஓசையும் தவிர, வேறு எந்த ஆரவாரமும் இல்லை. மகாராணிக்கு மக்களின் மௌனம் மனக்கலக் கத்தை அளித்தது. ஏதோ ஒரு மயான ஊர்வலம் மாதிரி உணர்ந்தாள். தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த ஆராய்ச்சி மணியின் ஒலியை நெருங்க நெருங்க, அவள் மனத்தில் விவரிக்க இயலாத சஞ்சலம் தோன்றியது. 

தர்மாசன மண்டபத்தினருகே மக்கள் திரண்டிருந்தனர். மகாராணி யானையிலிருந்து இறங்கி, மண்டபத்தினுள் சென்றபோது, அங்கு ராஜன் நம்பூதிரி மணியை அடித்துக் கொண்டிருந்தான். மகாராணி மண்டபத்தினுள் சென்றதும் மணியடிப்பதை நிறுத்தினான். எங்கும் நிசப்தம் நிலவியது. அந்தச் சூழ்நிலை மகாராணிக்கு நடுக்கத்தைக் கொடுத்தது. 

தர்மாசனத்தில் அவள் அமர்ந்ததும் முதன் மந்திரி அச்சுதபட்டர் முன்னால் வந்து நின்றார். ஒரு பக்கத்தில், ராஜன் நம்பூதிரி நின்று கொண்டிருந்தான். மண்டபம் முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. மண்டபத் துக்கு வெளியே வீதியிலும் பெருங்கூட்டமிருந்தது. எல்லா ருடைய முகங்களிலும் பயம் கலந்த ஓர் ஆர்வமிருந்தது. என்ன நடைபெறப் போகிறதோ, குற்றம் யார் மீது சுமத்தப் படுகிறதோ என்பதே புரியாமல் மக்கள் திகைப்புடனிருந்தனர். 

முதன் மந்திரி, தொண்டையைச் செறுமிக் கொண்டார். “ஆராய்ச்சி மணியை அடித்து, தர்மம் தவறாத பல்லவ சாம்ராஜ்யத்தின் நீதியைக் கோருபவர் இங்கே வரலாம்” என்றார். 

அவர் கூறியதை ஓர் அறிவிப்பாளன் உரத்தக் குரலில் திரும்பக்கூறினான். 

ராஜன் நம்பூதிரி மகாராணியின் முன்னால் போய் நின்று வணங்கினான். 

“இளைஞனே, உன்னுடைய பெயர்?”-மந்திரி கேட்டார் 

“ஸ்ரீராஜன் நம்பூதிரி.” 

“உன்னுடைய குறையைச் சொல்லலாம்.” 

ராஜன் நம்பூதிரி இரைந்து பேசினான். “மகாராணி அவர்களே, மூன்று குற்றச்சாட்டுகளைத் தங்கள் முன்னால் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று கற்பழிப்பு…” 

இதைக் கேட்டவுடன் கூட்டத்தில் வியப்பொலிகள் எழுந்தன. கசமுசவென்று பேச்சொலி கிளம்பியது. 

”மற்றொன்று, அதனால் அந்தப் பெண்ணுக்கு ஏற் பட்ட மரணம். மூன்றாவது குற்றச்சாட்டு, முன்னாள் முதன் மந்திரியான தரணி கொண்ட போசரைக் கொல்லச் சதி செய்தது…” 

பிரேமவர்த்தினியின் உடல் சிறிது நடுங்கியது. உள் ளூர பயம் சூழத் தொடங்கியது. கூட்டத்தில் பெரும் கூச்சல் கிளம்பியது. வியப்புக் குரல்களும் கண்டனக் குரல்களும் கலந்து ஒலித்தன. அச்சுதபட்டர் கூட்டத்தினரை அமைதி யாக இருக்கும்படிக் கையை அசைத்தார். பிறகு, ராஜன் நம்பூதிரியைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். 

“உன்னுடைய குற்றச்சாட்டை அறங்கூர் அவையத் தில் கூறியிருக்கலாமே, ஏன் வீணாக தர்மாசன மண்டபத்து ஆராய்ச்சி மணியை அடித்தாய். அரச குலத்தைச் சேர்ந்தவர் கள் மீது குற்றம் சுமத்தும் சந்தர்ப்பத்தில்தான் இந்த ஆராய்ச்சி மணியை அடிக்கலாம்” என்றார். 

“விதிமுறைகளையும், நடைமுறைகளையும் தெரிந்து கொண்டுதான் மணியை அடித்தேன்” என்றான் ராஜன் நம்பூதிரி. 

“ஓ…! இளைஞனே, கொடுமைக்கு உள்ளான பெண் உன்னைச் சேர்ந்தவளா? உனக்கு உறவா?” 

“இல்லை.” 

“நீ சாட்டியிருக்கும் குற்றங்களுக்கும் உனக்கும் சம்பந் தமே இல்லை. சம்பந்தமில்லாத நீ, ஆராய்ச்சி மணியை அடித்தது பெருங்குற்றம்” என்று கோபத்துடன் கூறினார், அச்சுதபட்டர். 

மக்கள் திகைப்புற்றனர். பலர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். கூட்டத்திலிருந்து சிலர் எழுந்து நின்று, கூச்சலிட்டனர். படைவீரர்கள் பாய்ந்து வந்து கூட்டத்தினரை அடக்கினர். 

“ஆராய்ச்சி மணி, குற்றம் சாட்டத்தானே தவிர, இன்னார்தான் குற்றம் சாட்ட வேண்டும் என்ற விதியில்லை” என்றான் ராஜன் நம்பூதிரி. 

“ஒரு கொடுமை இழைக்கப்பட்டிருந்தால், அந்தக் கொடுமையால் துன்புற்றவர்கள்தாம் தர்மாசனத்தில குற்றம்சாட்டமுடியும்” என்றார், மந்திரி. 

“மனிதாபிமானத்தைக் கருதி, கொடுமையை அறிந்த எவருக்கும் குற்றம் சாட்ட உரிமை உண்டு. 

“கிடையாது, கொடுமைக்கு உள்ளானதாக நீ கருது பவர்களே, அந்தச் செயலை கொடுமையாக எண்ணாது, மன்னித்து விலகியிருக்கும் போது, உனக்கு எங்கிருந்து உரிமை வந்தது?” 

ராஜன் நம்பூதிரி மகாராணியைப் பார்த்து, “மகாராணி அவர்களே,நான் குற்றம் சாட்டிய கொடுமைகளை யாரும் மன்னித்து ஒதுங்கிவிடவில்லை” என்றான். 

“அப்படியானால், அவர்களே குற்றத்தை எடுத்துக் கூற இங்கே வந்திருக்கலாமே” என்றாள், பிரேமவர்த்தினி. 

“மகாராணி அவர்களே, கொடுமைக்குள்ளானவர்கள் பயமின்றிக் குற்றம் சாட்டும் நிலையில் இன்று ஆட்சி இல்லை. தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை வெளியே கூறினால், மேற்கொண்டும் தங்களுக்கு கொடுமை இழைக்கப்படலாம் என்று பயந்து நடுங்கும் அளவுக்கு நாட்டில் அடக்குமுறை இருக்கிறது. சுதந்திரம் இல்லாத மக்களுக்கு ஆராய்ச்சி மணியை அடிக்கத் துணி வில்லை. ஆகவே, அவர்கள் சார்பில் நான் அடித்தேன்.” 

அச்சுதபட்டர் குறுக்கிட்டுக் கேட்டார், “முதன் மந்திரி யைக் கொல்ல சதி நடைபெற்றதாகக் கூறினாயே, தரணி கொண்ட போசர் கூடவா குற்றத்தை எடுத்துரைக்கப்பயப் படுகிறார்?” 

“பயப்படவில்லை. அலட்சியப் படுத்திவிட்டார். ஆனால், ஒரு நாட்டுப் பிரஜைக்கு நாட்டின் முதன் மந்திரி மீது அக்கறை உண்டு. முதன் மந்திரியின் உயிருக்கு ஆபத்தை உண்டு பண்ணக் கூடியவர்களை எந்தப்பிரஜை யும் குற்றம் சாட்டலாம்.” 

“நீ கூறும் கொடுமைகளை நேரில் கண்டவர்களைக் கொண்டு வந்து நிரூபிக்க முடியுமா?” 

“நிரூபிக்கத்தானே ஆராய்ச்சி மணியை அடித்தேன். கற்பழிப்பின் போது உடனிருந்து உதவி, அவள் மரண மடைந்தபின், அவள் உடலை அகழியில் வீசியவனையும்; முதன் மந்திரியின் கொலைச் சதியை நேரடியாகத் தெரிந்து கொண்டவர்களையும் மகாராணியாரின் முன்பு இப்போதே கொண்டு வந்து நிறுத்துகிறேன்” என்றான், ராஜன் நம்பூதிரி. 

“இளைஞனே, உன் வாதம் செல்லாது. யாருக்காகவோ இங்கே வந்து வீணாக, தர்க்கம் செய்து கொண்டிருக்கிறாய். பாதிக்கப்பட்டவர்கள் யாரோ, அவர்கள், நேரடியாக தர்மா சனத்தின் முன் வந்து, நீதி வழங்கும்படி கேட்டால்தான், தர்மாசனத்தின் தீர்ப்புக் கிடைக்கும். உனக்கு இங்கே வந்து நிற்க உரிமை இல்லை, நீ, போகலாம்” என்றார், அச்சுத பட்டர். 

ராஜன் நம்பூதிரியின் கண்கள் கோபத்தால் சிவந்தன. அச்சுதபட்டரை உறுத்துப் பார்த்தான். பிறகு மகாராணியை நோக்கி, “மகாராணி அவர்களே, நான் பாதிக்கப்பட்டிருப்ப தால்தான் நேரடியாக தர்மாசனத்தின் முன் நிற்கிறேன்” என்றான். 

“உனக்கும் இந்தச் குற்றச்சாட்டுக்கும் நேரடித் தொடர்புகிடையாது. நீ பாதிக்கப்பட்டவன் அல்லன்” என் றார், மந்திரி. 

“தொடர்பு இருக்கிறது. நேரடியான பாதிப்பு இருக்கிறது. இப்போது நான் இந்நாட்டின் பிரஜை. வடமொழிக் கடிகை யின் மாணவன். என்னை ஆள்பவர் யாராயிருந்தாலும், அவருக்கும் எனக்கும் நேரடி தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. அந்தத் தொடர்பு, என்னைப்பாதிப்பதால், இங்கே நீதி கேட்க எனக்கு உரிமை இருக்கிறது.” 

“ஓ…நீ மகாராணியையே குற்றம் சாட்டுகிறாயா?” என்று அச்சுதபட்டர், கோபத்தோடு கேட்டார். 

“இல்லை, இந்த சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக முடி சூட்டி, என்னையும் மற்ற பிரஜைகளையும் இனி ஆளப் போகிற இளவரசர் மீது குற்றம் சாட்டுகிறேன். இளவரசர் சித்திரமாயன் குற்றவாளி” என்றான், ராஜன் நம்பூதிரி. 

இதைக் கேட்டு மக்கள் கூட்டம் அதிர்ச்சியடைந்தது. கூட்டத்தில் சலசலப்புத் தோன்றியது. குற்றவாளி யார் என்பது பற்றிய செய்தி, மண்டபத்தையும் தாண்டி, வீதியை அடைந்தபோது, மக்கள் கூட்டம் கொதிப்படைந்து கூக்குர லிட்டது. சூழ்நிலையே சூடேறி தகித்தது. 

அச்சுதபட்டர், மிகுந்த கோபத்துடன், ராஜன் நம்பூ திரியை எரித்து விடுபவரைப் போல் உற்றுப் பார்த்தவாறு, “சிந்தித்துத்தான் சொல்கிறாயா? இளவரசர் இந்நாட்டின் சக்ரவர்த்தியாக முடி சூடப் போகிறவர். அவசரப்பட்டு பெயரைக் குறிப்பிட்டு விட்டாய்” என்றார். குரலில் நடுக்கம் இருந்தது. “இதனுடைய விளைவை எண்ணிப் பார்த்தாயா? குற்றம் நிரூபிக்கப்படவில்லையென்றால், நடுத்தெருவில் நீ கழுவேற்றப்படுவாய். உன்னுடைய உடலை காகமும், நரியும் தின்னும். சக்கரவர்த்தி மீதே பழி சொல்ல உனக்கு என்ன துணிச்சல்” என்றார். 

“மந்திரி அவர்களே, இந்தத் துணிச்சல், இந்த நாட்டுப் பிரஜை ஒவ்வொருவனுக்கும் இருக்கும் அளவுக்கு, இந்நாட்டில் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் நான் இங்கே வந்து நிற்கிறேன். எனக்கு எது நேர்ந் தாலும் அக்கறை இல்லை. என்னையும், இந்தப் பிரஜை களையும் ஆளப்போகிறவர், கொடிய குற்றவாளியாக இருக்கக்கூடாது. இந்நாட்டு மக்களின் சக்கரவர்த்தி, நேர்மை யானவராக, ஒழுக்க சீலராக இருக்க வேண்டும்.” 

கூட்டத்தினர் ஆரவாரம் செய்தார்கள். 

“வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று பல குரல்கள், பல திசைகளிலிருந்து எழுந்தன. 

மகாராணியின் உடல் நடுங்கியது. கண்களில் பயத் தின் சாயல் நன்கு தெரிந்தது. நடுங்கும் குரலில் அவள் கேட்டாள். 

“நீ சாட்டும் குற்றத்தை உன்னால் நிரூபிக்க முடியுமா?” 

“மகாராணி அவர்களே, இப்போதே, குற்றங்களைக் கண்ணால் கண்டவர்களைத் தங்கள் முன் கொண்டு வருகி றேன்” என்று கூறிய ராஜன் நம்பூதிரி, கூட்டத்தில் ஒரு திசையை நோக்கி, “நாகப்பா” என்று கூவினான். கூட்டத்தி லிருந்து ஒருவன் எழுந்து, தலைப்பாகையைக் கழற்றி வைத்துவிட்டு, மகாராணியின் முன் வந்து வணங்கி நின்றான். 

“மகாராணி அவர்களே, கற்பழிக்கப் படுவதற்காகப் பெண்ணை வழி மறித்துக் கடத்திச் சென்றவன் இவன். பெண்ணை இளவரசனிடம் ஒப்படைத்தான். அந்தப் பெண் அவமானம் பொறுக்காமல் மண்டபத்தின் மாடியி லிருந்து தலைகீழாக விழுந்து தற்கொலை செய்த பிறகு, அவள் உடலை அகழியில் வீசியவனும் இவன்தான். இவனை விசாரியுங்கள். முழு விவரமும் கிடைக்கும்” என்றான், ராஜன் நம்பூதிரி. 

நாகப்பன் நடந்த விபரங்களைக் கூறக் கூட்டத்தினரிடையே கோபக் கூச்சல்களும், கண்டனச் சொற்களும் எழுந்தன. 

நாகப்பன் பேசி முடிந்ததும், இரண்டு வீரர்கள் அவனைக் கைது செய்தனர். உடனே கூட்டத்தினர் அதை எதிர்த்துக் கூச்சலிட்டனர். 

அச்சுதபட்டர் கூட்டத்தினரைப் பார்த்து, “குற்றம் புரிய உடந்தையாக இருந்தவனும் குற்றவாளிதான். ஆகவே இவனைச் சிறைப்படுத்துவது தவறல்ல” என்றார். 

கூட்டத்தினர், “அவனைக் கொன்று விடுவார்கள், கொன்றுவிடுவார்கள்” என்று கூக்குரலிட்டனர். 

ராஜன் நம்பூதிரி, மகாராணியிடம், “மகாராணி அவர் களே, தங்களுடைய தீர்ப்புக்கு முன்பு நாகப்பனுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடக் கூடாது. குற்றவாளியை விட, குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவனுக்குக் குறைந்த தண்டனை வழங்குவதுதான் தர்மம். தீர்ப்பு வழங்கும் வரை, நாகப்பனை தினமும் அறங்கூர் மன்றத்துக்கு கொண்டு வந்து மக்களுக்குக் காட்ட ஏற்பாடு செய்யவேண்டும். அவனைக் காவலர்கள் கொன்று விடுவார்களோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்” என்றான். 

மகாராணி தலையை அசைத்து, அவனுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள். 

அதன் பிறகு ராஜன் நம்பூதிரி கூட்டத்தை நோக்கி, “தேவசோமா…” என்று இரைந்து கூப்பிட்டான். அவன் கூட்டத்திலிருந்து எழுந்து வந்து, மகாராணிக்கு வணக்கம் செலுத்தினான். 

மகாராணியின் முன்னிலையில் அவன் கூறிய விவரங் களைக் கேட்டு மக்கள் வியப்பிலாழ்ந்தார்கள். சுகததா சாவை இளவரசரின் ஆட்கள் மறைந்திருந்து அம்பெய்து கொன்ற சம்பவத்தைக் கூறியபோது, தேவசோமா கண் கலங்கினான். 

தேவசோமா கூறி முடித்த உடன் அவனையும் சிறைப்படுத்த வீரர்கள் நெருங்கினார்கள். ராஜன் நம்பூதிரி தடுத்தான். “இவன் சதிச் செயலில் கலந்து கொண்டவன் அல்லன். இளவரசரின் அழைப்பின் பேரில் சென்றவன். சதியில் இவன் ஈடுபடவில்லை. இவன் ஒரு சாட்சியே. இவனைச் சிறைப்பிடிப்பது நியாயமில்லை” என்றான். அவன் கூறியதை மக்கள் கூட்டமும் ஆமோதித்து, கூச்ச லிட்டது. மகாராணி தேவசோமாவைச் சிறைப்பிடிக்க வேண்டாம் என்று ஆணையிடவே, வீரர்களும் விலகிச் சென்றனர். 

அச்சுதபட்டர், மக்கள் கூட்டத்தை நோக்கிச் சொன் னார்: “இங்கே கூறப்பட்ட குற்றச் சாட்டுகளும், விவரங் களும் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது. இனி தான் இதுபற்றி ஆராய வேண்டும். ஒரு பக்கத்துக் குற்றச் சாட்டை மட்டுமே மகாராணியார் கேட்டுள்ளார். இன் னொரு பக்கத்துப் பதிலையும் மகாராணியார் கேட்டு, தீர விசாரித்த பிறகு, தீர்ப்பு வழங்குவார்கள். 

கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. “இன்றே விசாரிக்க வேண்டும்…இளவரசரை இங்கே அழைத்துவாருங்கள்… நீதி வேண்டும்…. நியாயம் வேண்டும்…” என்று பல குரல்கள் பல திசைகளிலிருந்து ஒலிக்கத் தொடங்கின. 

அச்சுதபட்டர், மக்களை நோக்கி கையை உயர்த்தி, “அமைதியாக கலைந்து செல்லுங்கள். இப்போது நாம் சக்ரவர்த்தியின் மரணச் செய்தி கேட்டு, துக்கம் அனுஷ்டிக் கிறோம். மகாராணியார் பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார். இவ்வேளையில் நீங்கள் அவரை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்கக் கூடாது. மகாராணியார் விரைவில் வழக்கை தீர ஆராய்ந்து, தீர்ப்பு வழங்குவார்கள். இப்போது எல்லாரும் அமைதியாகச் செல்லுங்கள்” என்றார். பிறகு, மகாராணியை அழைத்துச் சென்று யானையின் மீது ஏற்றி விட்டு, அவர் தம்முடைய இரதத்தில் ஏறிச் சென்றார். 

தர்மாசன மண்டபத்தைச் சுற்றி நின்ற கூட்டத்தைக் கலைந்து செல்லும்படி வீரர்கள் கூவிக் கொண்டிருந்தனர். ஆனால் கூட்டம் கலையாமல் குமைந்து கொண்டே யிருந்தது. பலர் பலவிதமாகப் பேசி, விவாதித்துக் கொண்டிருந்தனர். 

30. காஞ்சிப் புரட்சி 

ஆராய்ச்சி மணியை அடிக்க அன்று காலையில் ராஜன் நம்பூதிரி, தர்மாசன மண்டபத்துக்குப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், இரணியவர்மரின் படைவீரர்கள், சாதாரண உடையில் ஒவ்வொருவராக தர்மாசன மண்ட பத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினர். எந்தக் காரணத் திலாவது ராஜன் நம்பூதிரிக்கு ஆபத்து விளையுமானால், அவனைக் காப்பாற்றிக் கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும் என்பது இரணியவர்மரின் உத்தரவு. அதே சமயம், மக்களுக்கு அரசின் படை வீரர்களால் ஏதாவது கொடுமை நேருமானாலும், கூட்டத்தோடு கூட்டமாக இருந்து, படைவீரர்களைத் தாக்கி விரட்டி, மக்களைக் காக்க வேண்டும் என்றும் இரணியவர்மர் உத்தரவிட்டிருந்தார். 

போராட்டக் குழுவினர், அன்று பெரிய போராட் L டத்தை எதிர்பார்த்தனர். ராஜன் நம்பூதிரி, தர்மாசன மண்ட பத்தில் குற்றச்சாட்டை அறிவிக்கும்போது, அவனைப் படைவீரர்கள் தாக்கலாம் என்றும், மக்கள் கோபம் கொண்டு கலகம் விளைவிக்கலாம் என்றும் எதிர்பார்த்துத் தான் இரணியவர்மரின் படைவீரர்கள் அனுப்பப்பட்டி ருந்தனர். அவ்விதம் ஏதாவது கலகம் விளையுமேயானால் அரசு படைவீரர்களில் பெரும்பாலானோரைத் தாக்கி வீழ்த்திவிட்டால், அரசுக்கு நடுக்கம் ஏற்பட்டுவிடும். அந்தக் குழப்பத்தில், அரசு அதிகாரிகளையும், அச்சுதபட்ட ரையும் கூடத் தாக்கி வீழ்த்திவிட இரணியவர்மரின் வீரர்கள் தயாராயிருந்தனர். 

ராஜன் நம்பூதிரி, தர்மாசனத்துக்குச் செல்லப் புறப் பட்டபோது, உதயசந்திரனும் உடன் வருவதாகக் கூறினான். ஆனால், தரணிகொண்ட போசர் தடுத்து விட்டார். அவன் வெளியே செல்வது ஆபத்து என்பதால், அவனை பரமாச்சாரியின் ஆசிரமத்திலேயே இருக்கும்படி கூறினார். 

ராஜன் நம்பூதிரி சென்று இரண்டு நாழிகைக்குப் பிறகு, உதயசந்திரன் ஆசிரமத்தின் மாடியிலிருந்தவாறு தோட் டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

ஆசிரமத்தின் மத்திய கட்டடத்தில் ருத்திர பரமாச்சாரி சீடர்களுக்குத் தியானப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். ஆசிரமத்துச் சீடர்கள், வெளி உலகின் பாதிப்பு ஏதுமின்றித் தியானப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு உதய சந்திரன் வியப்படைந்தான். 

ஓ…! எவ்வளவு அமைதியாக, ஆனந்தமாக இருக் கிறார்கள்! உலகம் முழுவதுமே ஓர் ஆசிரமமாக மாறினால் பிரச்சினைகள் ஏது? துக்கம் ஏது? உலகத் துன்பங்கள் எதையுமே அண்டவிடாது, யோகம் பயின்ற சீடர்களைக் கண்டு பொறாமைகொண்டான். 

ஆசிரமத்துக்குள்ளிருக்கும் ஆனந்தமயமான உணர்வு கள் ஏன் வெளி உலகில் இல்லை ? ஓ…. உலகத்தை எப்படி யெல்லாம் பேராசை கொண்ட மூடர்கள் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அந்த ஆசிரமத்தில், ஒரு பகுதியில் எல்லாரும் இன்ப உணர்வுகளில் திளைத்திருக்கும்போது, அதே ஆசிரமத்தின் மற்றொரு பகுதியில் தான் மட்டும் துன்பத்தைச் சுமந்து கொண்டிருக்கும் விதியை எண்ணிக் குமைந்தான் உதய சந்திரன். 

ஆசிரமத்தின் கட்டடத்துக்குள் பதுங்கிக் கிடந்தது அவனுக்கு மனச் சங்கடத்தை உண்டு பண்ணியது. சிவனடி யாராகச் சுற்றித் திரிந்த போதிருந்த உற்சாகம் கூட அப்போது அவனிடம் இல்லை. லீனாவை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. 

அப்போது அவனுடைய பார்வை தோட்டத்துக்குள் வேகமாக வந்த இரதத்தின் மீது விழுந்தது. திடுக்கிட்டு எழுந்து மாடி விளிம்பில் போய் நின்று பார்த்தான். டெங்லீ யின் இரதம் அது. பரபரப்படைந்தவனாய், கீழே இறங்கி ஓடி னான். உதயசந்திரனைக் கண்டதும் டெங்லீ, அவனைக் கட்டிப் பிடித்தவாறு ஓவென்று கதறினார். அவருடைய அழுகைக் குரல் கேட்டு ஆசிரமத்தினுள்ளிருந்த தரணி கொண்ட போசரும், இரணியவர்மரும் வெளியே ஓடி வந் தனர். 

“லீனாவைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள்” என்று கதறினார், டெங்லீ. 

“ஆ…எங்கே? எதற்காக ?”- உதயசந்திரன் பதறியபடிக் கேட்டான். 

“உன்னைத் தேடி வந்தார்கள். லீனாவிடம் உன்னைப் பற்றி விசாரித்தார்கள். நீ இருக்கும் இடம் தெரியாது என்று சொன்னோம். அவர்கள் நம்பவில்லை. அவளை விசாரிப் பதற்காக இழுத்துக் கொண்டு போனார்கள். நான் குறுக்கே போய் தடுத்தேன். என்னை கீழே தள்ளிவிட்டுக் குதிரையில் சென்றுவிட்டார்கள்.” 

“எங்கே கொண்டு போயிருக்கிறார்கள்?” 

“தெரியவில்லையே. என்னை கீழே தள்ளியவன், மண்டபத்துக்குப் போங்கள் என்று கூறியது கேட்டது” என்றார், டெங்லீ. 

“அகழியை அடுத்த காளிகோயில் மண்டபமாகத் தானிருக்கும். அங்குதான் சித்திரமாயன் ஒற்றர்கள் இப் போது செயல்படுகிறார்கள்” என்றார், இரணியவர்மர். 

இதைக் கேட்டதும் உதயசந்திரன் வாசலை நோக்கிப் பாய்ந்தான். அவனைத் தொடர்ந்து இரணியவர்மரும், தரணிகொண்டபோசரும் விரைந்தனர். 

“நீ அங்கே போவது ஆபத்து” என்றார், தரணி கொண்ட போசர். 

அவர் சொன்னது உதயசந்திரனின் மனத்தில் உறைக்க வில்லை. வாசலில் நின்று கொண்டிருந்த பல குதிரைகளில் ஒரு குதிரையை மரத்திலிருந்து அவிழ்த்து, அதன் மீது பாய்ந்து ஏறினான். யாரையும் எதிர்பாராமல் குதிரையில் விரைந்தான். 

இரணியவர்மர், ஆறு வீரர்களை அவன் பின்னே துணைக்கு அனுப்பிவைத்தார். அந்த வீரர்கள், உதய சந்திரனைத் தொடர்ந்து குதிரைகளில் விரைந்தனர். 

டெங்லீ, விம்மி அழுதுகொண்டிருந்தார். அவரை அணைத்தவாறு தரணிகொண்டபோசர், ஆசிரமத்துக்குள் அழைத்துச் சென்றார். 

“இவன் பத்திரமாக இங்கே இருக்கிறான். பயப்பட வேண்டாம் என்று காலையில் உங்கள் தூதன் வந்து சொன்னபோது, அவள் எவ்வளவு உற்சாகமாக இருந்தாள். ஒரு நாழிகைகூட அவளுடைய உற்சாகம் நீடிக்கவில் லையே, இழுத்துக் கொண்டு போய்விட்டார்களே. என்ன துன்பப்படுகிறாளோ?” என்று டெங்லீ, அழுதார். 

“பயப்படாதீர்கள். உதயசந்திரனோடு நம் வீரர்களும் போயிருக்கிறார்கள். அவளை மீட்டுக் கொண்டு வந்து விடுவார்கள். தைரியமாயிருங்கள்” என்று தேற்றினார், இரணியவர்மர். 

உதயசந்திரனும், வீரர்களும் காளி கோயில் மண்ட பத்தை அடைந்தபோது, அங்கிருந்த நாலைந்து வீரர்கள் இவர்களைக் கண்டதும் மண்டபத்தின் பின்புறம் வழியாகக் குதிரைகளில் ஏறித் தப்பி மறைந்துவிட்டனர். 

உதயசந்திரன் பதைபதைப்புடன் மண்டபத்துக்குள் ஓடினான். உள்ளே யாருமில்லை. கருகிய முடியின் நாற்றம் வந்துகொண்டிருந்தது. மண்டபத்தின் ஒவ்வொரு பகுதி யாக ஓடிச் சென்று பார்த்தான். கீழ்ப்பகுதிகளில் யாரு மில்லை. மேல்மாடத்துக்குச் செல்லும் படிகளில் விரைந்து ஏறிய போது, கருகிய முடியின் நாற்றம் அதிகரித்தது. மேல் மாடத்தில், ஓர் அறைக்குள் அவன் நுழைந்த போது, ஆவென்று அலறினான். அவனுடைய அலறலைக் கேட்ட வீரர்கள், மாடிக்கு ஓடினார்கள். 

அந்த அறையில், லீனா, இரு கைகளும் கட்டப்பட்டு ஒரு கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தாள். உடலில் அசை வில்லை. தலை, தொங்கிக் கிடந்தது. முகமெல்லாம் தீக் காயங்கள், தலைமுடி எரிந்து, கருகியிருந்தது. உதய சந்திரனும், உடன் வந்த வீரர்களும் கட்டுகளை அவிழ்த்து அவளைக் கீழே இறக்கினார்கள். அவளை மடியில் போட்டுக்கொண்டு உதயசந்திரன் விம்மியழுதான். 

“லீனா, ஒரு முறை என்னைப் பாரேன்… நான் வந்து விட்டேன். லீனா, ஐயோ, என்னைப் பார்க்கவே மாட் டாயா?” அவளுடைய முகத்தோடு முகம் வைத்துக் கதறினான். அவளுடைய உடலில் அசைவில்லை. மூச்சு மட்டும் மிக மெல்லியதாக வந்து கொண்டிருந்தது. உடல் முழுவதும் தீக்காயங்களிருந்தன. 

“பாவிகள், உடல் முழுவதையும் சுட்டுப்புண்ணாக்கி விட்டார்களே, எப்படித் துடித்தாயோ” என்று அழுதான். 

அவளுடைய உடல் இலேசாக அசைந்தது. “லீனா, லீனா… நானிருக்கிறேன் பார். இதோ, என்னைப் பாரேன்” அவளுடைய முகத்தை வருடினான். 

லீனாவின் கண்கள் மெல்லத் திறந்தன. பரக்கப்பரக்க விழித்தாள். கடைசியில் பார்வை அவன் மீது நிலைத்தது. உதடுகள் விரிந்தன. ஏதோ பேச முயன்றாள். திணறினாள். அவன் கையை மெல்ல வருடினாள். அவள் முகத்தில் திடீ ரென்று மலர்ச்சி தோன்றியது. அவனைப் பார்த்து, புன்னகைப்பது போல் இருந்தது. 

“உங்களைப் பற்றி விசாரித்தார்கள். சித்திரவதைப் பண்ணினார்கள்…” என்று முனகினாள். மேற்கொண்டு பேச முடியவில்லை. உடல், ஒரு முறை அதிர்ந்தது. பிறகு, அடங்கிவிட்டது. அவனை விழித்துப் பார்த்தபடியே உயிரை விட்டு விட்டாள். 

உதயசந்திரன் அழவில்லை. அவளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவளுடைய கைகளை எடுத்துத் தன் கை களுக்குள் வைத்துக்கொண்டான். 

“இதற்கு நான் பழிவாங்குகிறேன் லீனா. உன்னை இக் கதிக்கு ஆளாக்கிய அந்த நச்சுப் பாம்பு சித்திரமாயனின் தலையை வெட்டி, உன்னுடைய மருக்கொழுந்துச் செடிக்கு உரமாகப்போடுகிறேன்” என்று சபதம் செய்தான். 

அவனுடைய சபதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த இரணியவர்மரின் வீரர்கள், அவனுடைய கண்களில் தெரிந்த உக்கிரத்தைக் கண்டு நடுங்கினர். 

லீனாவைத் தூக்கித் தோளில் சாய்த்துக்கொண்டு, உதயசந்திரன் எழுந்தான். அவனுக்கு உதவி செய்ய வீரர்கள் விரைந்தனர். உதயசந்திரன், அவர்களைத் தடுத்துவிட்டு, லீனாவைத் தோளில் சுமந்தவாறே குதிரையில் ஏறினான், தர்மாசன மண்டபத்தை நோக்கி விரைந்து செலுத்தினான். 


தர்மாசன மண்டபத்தைச் சுற்றி மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. ராஜன் நம்பூதிரியின் குற்றச் சாட்டுகளுக்கு மகாராணி தீர்ப்புக் கூறுவாளா, மாட்டாளா, என்பதைப் பற்றிப் பலர் விவாதித்துக் கொண்டிருந்தனர். குற்றச்சாட்டுகள் உண்மையென்று நிரூபணமாகிவிட்டால், பிறகு என்ன நடக்கும் என்பதைப்பற்றி பலர், பலவிதமாகச் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில், மண்ட பத்தை நோக்கி, ஒரு குதிரை விரைந்து வந்ததைக் கண்டு கூட்டத்தினர் திகைத்தனர். குதிரையின் மீதிருந்த உதயசந்தி ரன், தோளில் லீனாவைச் சுமந்திருந்ததைக் கண்ட ராஜன் நம்பூதிரி, பதற்றத்துடன் குதிரையை நோக்கி ஓடினான். 

குதிரையிலிருந்து இறங்கிய உதயசந்திரன், லீனாவின் உயிரற்ற உடலை, தோளில் சுமந்தவாறு கூட்டத்தினி டையே நடந்து சென்றான். கூட்டம் விலகி வழிவிட்டது. தர்மாசன மண்டபத்தின் மீது ஏறி, லீனாவின் உடலை மெல்லக் கீழே இறக்கித் தரையில் கிடத்தினான். மக்கள் பதற்றத்துடன் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

தர்மாசன மண்டபத்தின் முன்பு லீனாவைக் கிடத்தி விட்டு நிமிர்ந்த உதயசந்திரன், கூட்டத்தை வெறிக்கப் பார்த்தான். அவனருகே ஓடிவந்த ராஜன் நம்பூதிரி, லீனா வின் உடலைப் பார்த்து விக்கித்து நின்றுவிட்டான். அந்த இட டத்துக்கு விரைந்து வந்த தேவசோமாவும், களுபந்தாவும் பேச்சின்றி சிலையாக நின்றனர். கூட்டம், விவரம் புரியாமல் திகைத்தபடி, மண்டபத்தின் முன் மேடையில் நின்று கொண்டிருந்த உதயசந்திரனையும், அவன் காலடியில் தீப் புண்களால் கருகியிருந்த லீனாவின் உடலையும் மாறி, மாறிப்பார்த்துக் கொண்டிருந்தது. 

கூட்டத்தைப் பார்த்து திடீரென்று உதயசந்திரன், ஆவேசத்தோடு பேசினான்: 

“காஞ்சி மக்களே, ஒரு அபலைப் பெண்ணுக்கு நேர்ந்தக் கதியைப் பாருங்கள். என்னைக் கைது செய்ய முடிய வில்லை என்பதற்காக இவளைச் சித்ரவதை செய்து கொன்று விட்டான், இந்நாட்டு இளவரசன். இரத்த வெறி கொண்ட சித்திரமாயன் ஆட்சியில், ஒரு பிரஜையாக வாழ் வதற்கு உங்களுக்கு வெட்கமாயில்லை? இதே போல், உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் கொடுமை நேர வெகு நேரமாகாது. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? சீன நாட்டிலிருந்து மணமுள்ள மருக்கொழுந்துச் செடிகளை, பல்லவ நாட்டுக்குக் கொண்டு வந்து, மேம்பட வாழலாம் என்று நம்பி வந்தவளுக்கு, இந்தப் பல்லவ இளவரசன் இழைத்திருக்கும் கொடுமையைப் பாருங்கள். இவனையா இந்நாட்டின் ராஜாவாக ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? இவன் ஒரு கொடியராஜநாகம். பாம்பாவது சத்தியத்திற்குக் கட்டுப்படும். பாம்பை விடக் கொடிய ராட்சசனுக்குக் கீழா நீங்கள் வாழப் போகிறீர்கள் ? உங்கள் தன்மான உணர்வு செத்தொழிந்து விட்டதா? சொல்லுங்கள். இன்னுமா நீங்கள் சித்திரமாயனின் ஆட்சியை விரும்புகிறீர்கள்? இந்தக் கயவனா உங்களுக்கு சக்கரவர்த்தி…? மகேந்திரவர்மரும், நரசிம்மவர்மரும், ராச சிம்ம பல்லவரும் ஏறிய அரியா சனத்தில் இந்த ராட்சசனை ஏற்றவா போகிறீர்கள்?” 

கூட்டம் கொந்தளித்தது. “இல்லை… இல்லை… சித்திர மாயன் ஆளக்கூடாது…” என்று கூட்டம் ஆர்ப்பரித்தது. 

உதயசந்திரன், “இப்போதே கிளம்புங்கள், தன்மான முள்ளவர்கள், கொதித்தெழுங்கள். வாழ ஆசையுள்ள வர்கள், புறப்படுங்கள், சுதந்திரத்தை விரும்புபவர்கள், போர்க்கோலம் பூணுங்கள். சித்திரமாயனை இந்த நாட்டை விட்டு ஓட்டுங்கள். இந்தப் பெண்ணைப் போல் நீங்களும் செத்து விழுவதற்குள், சித்திரமாயனைப் பழி வாங்குங்கள். உங்கள் வீட்டுப் பெண்களின் மானத்தைக் காக்க, வாளேந் துங்கள். உடலில் ஒரு சொட்டு இரத்தம் இருக்கும் வரை, சுதந் திரத்துக்காகப் போராடுங்கள்” என்றான். 

அவனிடமிருந்து சொற்கள், உணர்ச்சி அலைகளாகப் பரவி, கூட்டம் முழுவதையும் ஆட்கொண்டு விட்டன. கூட்டத்திலிருந்து தேவசோமா, “புறப்படுங்கள், அரண் மனைக்கு. இதற்கு நீதி கேட்போம். பழி வாங்குவோம்” என்று கூவிக்கொண்டே, முன்னால் நடந்தான். மக்கள் கூட்டம், அவனைத் தொடர்ந்து செல்லத் தொடங்கியது. களுபந்தாவும், அவனுடன் சேர்ந்து கொண்டான். மக்கள் கூட்டம், வெறிக் கூச்சலிட்டவாறு, அரண்மனையை நோக்கிப் பாய்ந்தது. 

லீனாவை நம்பூதிரியிடம் ஒப்படைத்து விட்டு உதயசந்திரன், கூட்டத்தோடு கலந்து ஓடினான். பழி உணர்ச்சி அவனைப்பூரணமாக ஆட்கொண்டிருந்தது. 

பயங்கரப் புயல் நகரத்தைத் தாக்குவது போலிருந்தது, மக்கள் கூட்டத்தின் பாய்ச்சல். மக்கள் பெருவெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருந்தார்கள். கைகளில் கிடைத்த ஆயுதங் களை எடுத்துக்கொண்டு கூச்சலிட்டபடி ஓடிய கூட்டத்தி னரிடையே, இரணியவர்மரின் படை வீரர்களும் சாதாரண உடைகளில் போய்க் கொண்டிருந்தார்கள். 

கூட்டம் தேரோடும் வீதியைக் கடந்து, படை வீதியை நெருங்கியதும் திடீரென்று கூட்டத்தின் ஒரு பகுதி திசை திரும்பி, சிறைச்சாலையை நோக்கிப் பாயத் தொடங்கியது. கூட்டத்தின் முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் ‘சிறைச்சாலையைத் தகர்ப்போம்” என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். 

கோட்டையைப்போல் அமைந்திருந்த சிறைச்சாலை யின் வாயிற்கதவு, அடைக்கப்பட்டிருந்தது. வெளியே சில வீரர்கள் காவலிருந்தனர். பெருங்கூட்டம் இரைச்சலிட் வாறு சிறைச்சாலையை நெருங்கியதும், காவல் வீரர்கள் திகைப்புற்றனர். சிறைச்சாலையின் வாயிலில் அகழிக்குக் குறுக்கே இருந்த மரப்பாலத்தை உயரே தூக்க முயன்றனர். ஆனால், அதற்குள் கூட்டம் பாலத்தில் புகுந்துவிட்டது, பாலம் கிடுகிடுவென ஆடியது. பாலத்தைக் கடந்து சென்றவர்கள், வாசலில் நின்ற காவலர்களைத் தாக்கி அகழியில் எறிந்தனர். பிறகு சிறைச்சாலையின் கதவை உடைக்கத் தொடங்கினர். 

அந்தச் சமயம் அரசின் படை வீரர்கள் அணிவகுத்து அங்கு வரவே மக்கள் கூட்டத்தில் குழப்பம் தோன்றத் தொடங்கியது. தேவசோமா, உரத்த குரலில், “படையை பாலத்தில் விடாதீர்கள். மறியுங்கள்” என்று கூவினான். 

கூட்டம் இரைந்து கொண்டு படையை எதிர்த்தது. சிறைச்சாலையின் வாசலில் இரத்தம், சேறாகப் பெருகியது. அகழிநீர், செந்நீராக மாறியது. காயம்பட்டு வீழ்ந்த மக்களை இரண்டு வீதிகளுக்கு அப்பாலிருந்த ருத்திர பரமாச்சாரியின் ஆசிரமத்திலும், பௌத்த விஹாரத்திலும் கொண்டு சேர்த்தனர். 

இரத்தம் சிந்தச் சிந்த, மக்களின் வெறி ஏறிக்கொண்டே இருந்தது. கூட்டத்தினிடையே இருந்த இரணியவர்மரின் வீரர்களும் தாக்கியதால் அரசுப் படைவீரர்கள் பலர் வெட்டுண்டு சாய்ந்தனர். இரண்டு நாழிகைக்குள் அரசுப் படை சிதறி ஓடத் துவங்கியது. இதற்குள் சிறைக்கதவை உடைத்து விட்டார்கள். கூட்டம் சிறைச் சாலைக்குள் சாடியது. உள் முற்றத்திலிருந்து எதிர்த்த காவலர்களை கூட்டம் பிய்த்து எறிந்து விட்டது. 

சிறைச்சாலையினுள் புகுந்த கூட்டம் ஒவ்வொரு பகுதியாக நுழைந்து, கதவுகளை உடைத்து, உள்ளே அடைபட்டிருந்தவர்களை வெளியேற்றத் தொடங்கியது. உள்ளே இருந்த கைதிகள் விபரம் புரியாமல் திகைத்தனர். கைதிகளை விலங்குகளுடனேயே சிறைச்சாலையின் மேல்மாடத்துக்கு அழைத்துச் சென்றனர். 

சிறைச்சாலையின் மற்றொரு பகுதியில் நுழைந்தவர்கள் திடுக்கிட்டனர். ஓர் அறையில் சோர்ந்துபோய் அமர்ந் திருந்தவரைக் கண்டு பதை பதைத்தனர். 

ஓ… சமஸ்கிருத கடிகைத் தலைவர், ஜேஷ்டபதி சோமயாஜி… மகா ஞானிக்குக் கூட இந்த நிலையா… 

கதவை உடைத்து, உள்ளே புகுந்து கடிகைத் தலை வரை மிக்க மரியாதையுடன் வெளியே அழைத்து வந்தனர். அந்தப் பகுதியில் இன்னும் பல அறைகளில் பல துறைகளில் தலைவர்களாகப் பணியாற்றிவர்கள் அடைக்கப்பட்டிருந் தனர். ஓர் அறையில் நான்காவது மந்திரியாகப் பணிபுரிந்த விஷ்ணுசர்மன் இருந்தார். அவர்கள் எல்லாரையும் மக்கள் விடுவித்து வெளியே அழைத்து சென்றனர். 

குற்றம் புரிந்து சிறைப்பட்டிருந்த கைதிகளை மேல் தளத்துக்கு அழைத்துச் சென்ற கூட்டம் கைதிகளிடம் அவர்கள் செய்த குற்றங்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டது. பிறகு, ஒவ்வொரு கைதியையும் மேல் தளத்தி லிருந்து அகழியில் தள்ளியது. ஒவ்வொரு கைதியும் கை களில் விலங்கோடு அகழியில் வீழ்ந்ததை வெளியே இருந்து வேடிக்கை பார்த்த கூட்டம், ஆரவாரம் செய்தது. 

பெண்ணைக் கற்பழித்துக் கொன்ற கொடுமைக்காக உதவியாக இருந்த நாகப்பனை கீழே அகழியுள் தள்ளிய போது, “பெண்ணை அகழியிலே தூக்கிப் போட்டாயே பாவி, இப்போது நீ விழு அகழியிலே” என்று கூறித் தள்ளினர். 

அகழியில் முதலைகள், இரைகளைப் பாய்ந்து கவ்வி யதைப் பார்த்துக் கூட்டம் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது. 


இதே நேரத்தில், அரண்மனையில் மகாராணி பிரேமவர்த்தினியும் சித்திரமாயனும் பேசிக்கொண்டிருந்தார்கள். 

“என்னை இக்கட்டான நிலையில் கொண்டுவந்து வைத்துவிட்டாயே. தர்மாசனத் தீர்ப்பை நான் எப்படி வழங்குவது? குற்றச்சாட்டுகளைப்பற்றி எப்படித்தான் நான் விசாரிப்பது?” என்று கேட்டாள் மகாராணி. அவளுடைய குரலில் தொனித்த வெறுப்பையும், கோபத்தையும் சித்திர மாயன் கவனித்தான். 

“நீங்கள் தர்மாசன மண்டபத்துக்குப் போனதே தவறு. தர்மாசனத்தில் இதுவரை சக்ரவர்த்திகள் தாமிருந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்களே தவிர, பெண்கள் அமர்ந்ததில்லை. இதைச் சொல்லியே நீங்கள் தீர்ப்புக்கூற மறுத்துவிடலாம்” என்றான். 

“இதை முதலிலேயே மந்திரி அச்சுதபட்டர் சொல்லி யிருந்தால், மண்டபத்துக்கே போயிருந்திருக்கமாட்டேன்” “அச்சுதபட்டர் ஒரு முட்டாள்” என்றான், சித்திர மாயன் கோபத்தோடு. 

“நான் தர்மாசனத்துக்காக நீதி வழங்காவிட்டாலும் சாட்டப்பட்ட குற்றங்களுக்கு நீ, பதில் சொல்லியாக வேண்டுமே” என்றாள், மகாராணி. 

சித்திரமாயன் சிரித்தான். “சின்னம்மா, எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா, மக்களின் குற்றச்சாட்டுக்கு ஒரு சக்கரவர்த்தி பதில் சொன்னாரென்று ?” என்று கேட்டான். 

“மக்கள் இதுவரை குற்றம் சாட்டத் துணியவில்லை. இப்போது துணிந்து குற்றம் சாட்டும்போது…” 

”குற்றம் சாட்டிய நாக்கை அறுத்தெறிய வேண்டும்” என்று கோபத்தில் இரைந்து கத்திய சித்திரமாயன், வாசலில் நின்ற காவலாளியிடம் அடுத்த அறையில் காத்திருக்கும் அச்சுதபட்டரை அழைத்து வரும்படி உத்தரவிட்டான். அச்சுதபட்டர், பயந்தவாறு உள்ளே வந்தார். 

“தர்மாசன மண்டபத்தில் குற்றம் சாட்டினானே அவனை இந்த இரவுக்குள் இங்கே கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள்” என்றான், சித்திரமாயன். 

“அவன் இரணியவர்மரின் பாதுகாப்பில் இருக்கிறான்” என்றார், அச்சுதபட்டர். 

“அப்படியானால் இரணியவர்மரையும் சேர்த்தே இங்கே பிடித்து வாருங்கள்” என்று இரைந்தான். 

“போர்க்களம் போயிருந்த நம்முடைய படை, விரை வில் வந்து சேர்ந்து விட்டால் நாம் நினைப்பது எதையும் சாதித்துவிடலாம். இப்போது நம்மிடமிருக்கும் சொற்ப வீரர் களைக் கொண்டு இரணியவர்மரை எதிர்ப்பது நல்லதல்ல” என்றார், அச்சுதபட்டர். 

சித்திரமாயன் கோபத்தில் பொறுமினான். “இரணிய வர்மரை ராஜத் துரோகக் குற்றத்துக்கு கழுவேற்ற வேண்டும், படை வந்து சேர இன்னும் எத்தனை நாட்கள் ஆகும்?” – எரிச்சலோடு கேட்டான்: 

“இன்றைக்கு ஐந்தாம் நாள் வந்து சேர்ந்துவிடும்.” “தர்மாசனத்தில் அமர்ந்து சக்ரவர்த்திகள் தாம் நீதி வழங்குவது சம்பிரதாயம். பெண்கள், தர்மாசனத்தில் ஏறியதில்லையே” என்றான், சித்திரமாயன். 

“அரியணையில் யார் இருக்கிறார்களோ அவர்கள் தர்மாசனத்தில் அமரவேண்டும்” என்றார், அச்சுதபட்டர். 

“இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு தர்மாசனத்தின் தீர்ப்புக் கூறப்படாவிட்டால்கூட, சக்ரவர்த்தியாக முடிசூடப் போகும் நீ, மக்கள் முன்னால் ஒரு குற்றவாளியாக காட்சி அளிப்பது நல்லதல்லவே. ஆராய்ச்சி மணிக்குச் செவி சாய்க்க வேண்டுமே” என்றாள், மகாராணி. 

“இந்த மக்கள் எல்லாவற்றையும் விரைவில் மறந்து விடுவார்கள். என்னுடைய முடிசூட்டு விழாவின்போது, சில வரிகளைக் குறைப்பதாக அறிவித்தாலே போதும், மக்கள் திருப்தியடைந்து விடுவார்கள். மக்கள் வெறும் சோற்றுப் பிண்டங்கள்தாம். சோறு போட்டாலே போதும்.” 

சித்திரமாயன் சொல்லி வாய் மூடுமுன், ஊர்க்காவல் படைத் தலைவர் வந்திருப்பதாக, ஒரு காவலாளி வந்து அறிவித்தான். அவரை உள்ளே அனுப்பும்படி உத்தர விட்டாள், மகாராணி. 

ஊர்க்காவல் படைத் தலைவர் பரபரப்புடன் உள்ளே வந்தார். அவருடைய கண்களில் பீதி படர்ந்திருந்தது. அறை யினுள் நுழைந்த போதே பதற்றத்துடன், “சிறைச்சாலையை தாக்குகிறார்கள். மக்கள் கூட்டம், கட்டுக்கடங்கவில்லை” என்றார். 

இதைக் கேட்டதும் சித்திரமாயன் சீறியெழுந்தான். பளீரென்று, காவல் படைத் தலைவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். “ஒரு படைக்குத் தலைவராயிருக்க வெட்க மாயில்லை?” என்று இரைந்து கத்தினான். 

காவல் படைத் தலைவர், பதறி நடுங்கியபடி நின்றார். “இன்னும் ஏன் இங்கே நிற்கிறீர் ? காஞ்சி நகர் மக்கள் அனை வருமே அழிந்தாலும் கவலை இல்லை. அரசுக்கு எதிராக ஒரு துரும்பு கூட அசையக்கூடாது” என்றான், சித்திர மாயன். காவல்படைத்தலைவர், தலை குனிந்தவாறு வெளியேறினார். 

“மக்கள், சிறைச்சாலையைத் தகர்க்கிறார்களாம், சொல்ல வந்துவிட்டார்” என்று உறுமினான், சித்திரமாயன். 

எங்கோ கடல் அலைகளின் ஓசை கேட்பது போலி ருந்தது. பிரேமவர்த்தினி உற்றுக் கேட்டாள். சமுத்திரம் போல் அலைமோதி வரும் மக்கள் கூட்டத்தின் ஒலி, அரண்மனைக் கோட்டையையும் தாண்டி, அரண்மனைக்குள் புகுந்து அவளை நடுங்க வைத்தது. 

– தொடரும்…

– 1985, தினமணி கதிரில் தொடர்கதையாக வெளிவந்தது.

– மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: மே 1995, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

ர.சு.நல்லபெருமாள் ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர். 1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *