விண்ணின்று மீளினும்…





சங்கர நாராயணசாஸ்திரிகள் வீட்டின் முன்விறாந்தையில் தன் பூணூலைச் சற்றே தளர்த்தி அதை வயலின் வில்லாக முதுகுக்குக் குறுக்காகப் பிடித்து மேலுங்கீழுமி;த்துச் சொறிந்துகொண்டு நிற்கவும் பெரிய “வணக்கம்” போட்டுக்கொண்டு வந்த தபாற்காரன்; அவரிடம் இளநீலக்கவரிலான கடிதம் ஒன்றைக்கொடுத்தான். சாஸ்த்திரியாரிடம் வழக்கமில்லைத்தான் எனினும் அவரின் சீமந்தப்புத்திரன் அனந்து என்ற அனந்தகிருஷ்ணன் அமெரிக்காவிலிருந்து அனுப்பிய கடிதத்தைப்பார்த்த சந்தோஷத்தில் சிலவேளை சந்தோஷம் (வெகுமானம்) ஏதாவது வெட்டலாமென்றொரு மெலிதான நப்பாசையில் ஒரு விநாடி அவ்விடம் தாமதித்தான். அவரோ அவன் நிற்பதையே கண்டுகொள்ளாதவராய் ஆவலோடு கடிதத்தைப்பிரித்து ஓசை நயத்துடன் படிக்கத்தொடங்கினார், சில்லறை எதுவும் பெயரப்போவதில்லை என்பதை உய்த்துக்கொண்ட தபாற்காரன் மெல்ல அவ்விடங்கழன்றான். சாஸ்த்திரிகள் கைகள் வாழ்க்கை பூரா தட்ஷிணை, கிரயம், பாகம், சம்பாவனை, காணிக்கை என்று வாங்கியே பழக்கப்பட்டவையன்றி கொடுத்தல் எனும் கிரியையின் பழக்கமோ பரிச்சயமோ அற்றவை.
சம்பிரதாய பல்லவி முடியவும் எடுத்த எடுப்பிலேயே அனந்து அனுபல்லவியில் எழுதியிருந்த விஷயம் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திடுப்பென ஓசையையும், ராகத்தையும் ‘மியூட் ‘ பண்ணின்டு வேறுயாராவது நிற்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தார். பின் ஈஸிச்சேரில் போயமர்ந்து கொண்டு மனதோடு வாசிக்கலானார். மேலே படிக்கப் படிக்க `நம்ப அனந்துவா இதை எழுதியது’ என்று அவரால் நம்பமுடியாமலிருந்தது.
உள்ளுர்ப்புரோகிதங்களுடன் மிகவரட்சியாய் இழுபட்டுக் கொண்டிருந்த அவர்கள் குடும்ப ஜீவனம் அனந்து படித்து ஆளாகி கனிமநிறுவனமொன்றில் உத்தியோகமும், அடுத்த ஆண்டே ஜப்பான் அரசு வழங்கிய ஸ்கொலஷிப்பும் கிடைத்தபின்னாலேயே செழிக்கத்தொடங்கியது. ஜப்பான் படிப்புக்களை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்குப் போய் அங்கு பிளாடெல்பியா பல்கலைக்கழகத்தில் கனிமத்துறையில் ஆய்வுகள் செய்யும் ஒரு குட்டி விஞ்ஞானியாகிவிட்ட அனந்துவுமோ சின்ன வயதிலேயே படிப்பில் கெட்டிக்காரன் மாத்திரமல்ல, பெற்றாருக்கு அடங்கின பிள்ளை என்றும் பெயரெடுத்துக்கொண்டவன். இல்லாவிட்டால் தனக்கு முப்பத்தைந்து வயதாகியும் கல்யாணமாகாமலிருப்பதைப் பொருட்படுத்தாமல் இன்னமும் தேமே என்றிருப்பானா. சம்பாதிக்கத்தொடங்கிய பின்னால் இரண்டு அக்காள்மாருக்கும் முதலில் திருமணங்களாகட்டும் பிறகு தான் பண்ணிக்கலாம் என்றுதானிருந்தான். சாஸ்த்திரிகள்தான் ‘சுமையோடசுமையாய் தங்கச்சி மைதிலியையும்; கரையேற்றிட்டு கொஞ்சம் நிலம் வாங்கி ஒருவீடுங்கட்டிட்டா நாங்கள் இனிக்குறையொன்றுமில்லை என்று சந்தோஷமாக ஒரு மூலைல ஒக்கார்ந்திடுவோம்…. நீயும் ஃப்றீயாயிடுவாய் ராஜா’ என்று சொல்லிக்கொண்டு அவன் வாழ்க்கை அஜந்தாவில் நிகழ்ச்சிகளைப் மேன்மேலும் புகுத்தியதால் அவனும் ‘ஆணை காட்டில் அனலையும் விழுங்குவேனென்று’ விழுங்கிக் கொண்டு விட்டான்.
இந்த ஆவணிமாத ஆரம்பத்தில் கோடைவிடுமுறை ஆரம்பிக்கிறதாயும் இரண்டு மாதலீவிலே வருவதாகவும் போனமாதங்கூட எழுதியிருந்தான். இந்தமுறை அவன் திருமணத்தை முடித்தே தீருவதென்று சாஸ்த்திரியாருங்கூட நல்ல பசையுள்ள இடங்களாகப்பார்த்து ஐந்தாறு ஜாதகங்களும் வாங்கிப்பொருத்தமெல்லாம் பார்த்துவைத்துக்கொண்டு எந்தப்பெண்ணைப்பிடிக்கிறதோ அவனே வந்து தேர்வு செய்யட்டும் என்று தயாராகத்தானிருக்கிறார்.
அதற்குள்ளாக அவனிப்போது எழுதியிருப்பதை வாசிக்க அவருக்கு தலையில் தணலை வாரிக்கொட்டியிருப் பதைப் போலிருக்கிறது.
‘பாகீ….பாகீ…. ‘ என்று உள்ளே மனைவியைக் கூப்பிட்டார்.
‘என்ன காப்பிதானே…. சித்தே பொறுங்கோன்னா…. ‘ பாகீரதியம்மாள் உள்ளிலிருந்து குரல் கொடுத்தார்.
‘காப்பியுமில்ல…. மண்ணுமில்ல வந்து அனந்து என்னா எழுதியிருக்கான்னு பாருடி…. ‘
‘ஏன்னா அனந்து கடிதம் வந்துதா…. ஏர்ப்போட்டுக்கு எப்போவரணுமின்னு எழுதியிருக்கானா…. ‘
‘அடா அசடூ…. அவன் வரப்போறதேயில்லையாம்…. தான் வேறு பொண்ணு பார்த்திருக்கிறானாம்…. கூசாமல் எழுதியிருக்கான்டி நாய்ப்பய…. ‘
‘அபச்சாரம்…. அபச்சாரம்…. என்னா ஸொல்றேள்…. வெள்ளைக்காரிய கட்டிக்கப்போறானாமா…. இதுதான் ஐஞ்சுவருஷமின்னேயே நான் அடிச்சுண்டேன் அவனுக்குமொரு கால்கட்டு போட்டிடலாம்னு கேட்டேளா…. இனி அடிக்கழுவாதவள ஆத்துல வைச்சு யாரு மாரடிக்கறது…. ? ‘ அலறினாள்.
‘அந்தளவுக்குப் போயிடுவானாடி நம்ம பய…. எல்லாம் இந்தியப்பொண்ணுதான்…. அதுவும் பிராமணப்பொண்ணுதானாம்…. ஏதோ பெரீய்ய்ய படிப்பெல்லாம் படிச்சு அமெரிக்காவுல விண்வெளி ஆராய்ச்சி பண்றதாம். என்னென்னவோவெல்லாம் எழுதியிருக்கான்டி நீயே படிச்சுப்பார்…. ‘ கடிதத்தைநீட்டினார்.
‘நேக்கு எங்கேன்னா எழுத்தெல்லாம் தெரியறது…. எல்லாம் சித்தெறும்புகளாட்டம் புகார் புகாரா தெரியிறது…. சித்த நீங்களே படியுங்கோ…. ‘
இதற்குள் ஆபீஸூக்குப் புறப்பட்டுவிட்ட கணவனை வழியனுப்புவதற்காக வெளியில் வந்த மைதிலி அப்பா கையில் வெளிநாட்டுக் கடிதமிருப்பதைப் பார்த்துவிட்டு ‘ ஏம்பா அண்ணா கடிதமா…. ‘ என்றாள் ஆவலுடன்.
‘அவன் கடிதமல்லடி வேட்டு….‘
‘என்னப்பா ஸொல்றேள்…. ?‘
‘அற நனஞ்சப்பறம் குளிரென்ன கூதல் என்னா…. இந்தா நீயே உரக்கப்படி அவன் எழுதியிருக்கறத எல்லாரும் நன்னா கேட்கட்டும் ‘ என்று கடிதத்தை அவளிடம் நீட்டினார்.
‘ என்னப்பா பயமுறுத்தறேள்….‘
‘அட…. படிடீன்னா…‘
அன்பான அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நமஸ்க்காரத்துடன் எழுதிக்கொள்வது;
நான் இங்கு செளக்யம். அங்கும் உங்களுடைய ஷேமத்திற்கும் பகவான் அருள் பாலிக்கட்டும்!
இங்கு தமிழ்ப்பெண்ணொருத்தி அஸ்றனோடிக்ஸ்ல பி.எச்டி எல்லாம் பண்ணிட்டு ஸ்பேஸ் அட்மினிஸ்டிறேஷன் துறையில விஞ்ஞானியாயிருக்கா. சைதன்யா என்று பேர். சைதுன்னு கூப்படறது. வடமாள், முப்பது வயசு , ஆத்ரேயகோத்ரம், ரோகிணி நட்ஷத்ரம்.
சமீபத்தில பத்திரிகைலகூடப் படிச்சிருப்பீங்களே விண்வெளிக்குப்போயிட்டு வந்த முதல் இந்தியப்பெண்ணென்று அவதான். இன்டர்நெட் மூலமா அவ நட்புக்கிடைத்தது. அப்புறம் நேரில பார்த்துப்பழகிய பின்னால என்னைக் கட்டிக்க ரொம்ப இஷ்டமாயுள்ளா. அவ ஜாதகத்தின் காப்பி பின்னிணைத்துள்ளேன். உங்கள் சம்மதம் , பொருத்தம் என்பன எப்படியென்று அறிய ஆவலாயுள்ளேன்.
மைதிலியையும் மாப்பிள்ளையும் ஷேமம் விசாரித்தேனென்று சொல்லவும்.
பின்னர் விபரமான கடிதம் எழுதுகிறேன்.
இப்படிக்கு
உங்கள் அன்பையும் ஆசீர்வாதங்களையும் நாடும்
அன்புமகன்
அனந்தகிருஷ்ணன்
‘என்னா சைதுன்னு கூப்பிடுவானாமா…. ரொம்பத்தான் நெருங்கிப்பழகிட்டாங்களோ…. ‘ என்று பாகீரதியம்மாள் நெட்டுயிர்க்க
‘அண்ணா அத்தனை பெரிய ஸ்டாரையே மடக்கிட்டாரா…. அதிஸ்டக்காரன்தான்…. ‘ என்று மைதிலி வாயைப்பிளந்தாள்.
‘அவ உலகம் வியக்கறமாதிரி பெரீய்ய்ய ஸ்டாராவே இருந்துட்டுப்போகட்டும்…. ஆனா அது கலியாணத்துக் கெல்லாம் சரிப்பட்டுவராது…. ‘
‘ஏன்னா…. ‘
பாகீரதியம்மாள் கேட்க எல்லாரும் சாஸ்த்திரியாரின் முகத்தைப்பார்த்தனர்.
‘நானும் பேப்பர்ல படிச்சதுதான். மூணு வேத்து ஆம்படையாளோட விண்வெளியில மூணுமாசம் சஞ்சாரம் பண்ணிட்டு வந்த பொண்ணை இந்த ஆத்தில மருமகளாக்கிக்கிறதா…. ஹூம்…. ‘
‘இதென்ன ஸொல்றேள் மாமா…. ஸ்பேஸ் ரிசேர்ச்ஸுக்கு ஆத்து ஆம்பளகள கூட்டிண்டெல்லாம் போகமுடியும்…?’
என்ற மருமகன் கிண்டல்டிக்கவும் , மைதிலி கலகலவென்று சிரிக்கவும், சாஸ்த்திரிகள் கண்களில் ஜுவாலை கனன்றது. மாமானின் முறைப்பைப் பொருட்படுத்தாது அவன் ஆபீஸுக்குக் கிளம்பி ஸ்கூட்டரை உதைத்தான்.
சிரிப்பவர்களைப் பற்றியெல்லாம் சாஸ்த்திரிகளுக்குக் கவலையில்லை. மூக்குப்பொடியைச்சிட்டியைத் திறந்து ஒரு சிட்டிகை எடுத்து ஆழமாக உறிஞ்சிவிட்டு லெட்டர்பாடை எடுத்து மேசையில் வைத்துக்கொண்டு நிதானமாக எழுதலானார்.
அருமை மகன் அனந்துவுக்கு,
நீ அனுப்பிய ஜாதகம் பார்த்தேன், அது கொஞ்சமும் உனக்குப் பொருந்தி வரவில்லை. அதோட அந்தப்பொண்ணுக்கு ஆயுசுபலம் வேறு கம்மியாயிருக்கு. அவ விண்வெளிப்பயணம் இதுகளிலயெல்லாம் ஈடுபடுறா எங்கிறதும் அதைத்தான் உறுதிப்படுத்திறது. இங்கு உனக்கு ரம்பை ரதிகளாட்டம் பெண்கள் ஐந்தாறுபேரைப் பார்த்து வைத்திருக்கிறேன். விடுமுறைக்கு வந்துபார்த்து ஒருத்தியை நீயே இஷ்டம்போலத் தேர்ந்தெடுத்துக் கொள். உனக்குச் சிறப்பான பெண்ணைத் தேர்ந்து திருமணத்தை ஜமாய்த்துவிட நாங்களாய்ச்சு. அம்மாவும் தங்கையும் அதுதான் நல்லதுங்கறா.
இவ்விடம் எல்லோரும் ஷேமம்.
உனக்கு எல்லா ஐஸ்வர்யங்களும், செளக்யமும் கிட்ட எம் ஆசீர்வாதங்கள்.
இப்படிக்கு உன்
– அப்பா.
– 06.12.1997 பெர்லின். பாலம் – ஜனவரி 1998.