நியாயத் தீர்ப்பு நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 3, 2025
பார்வையிட்டோர்: 6,878 
 
 

நியாயத் தீர்ப்பு நாளில் உலக மதங்களைச் சேர்ந்த ஆத்திகவாதிகள் அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி. காரணம், 95 சதவீதமான ஆத்திகவாதிகள், நரக வாயில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

முதல் நரகம், இரண்டாம் நரகம் என மொத்தம் ஏழு நரகங்கள் இருந்தன. அவரவர் செய்த பாவங்கள், குற்றங்கள் ஆகியவற்றின் தன்மை மற்றும் அளவுக்கு ஏற்ப நரகங்கள் விதிக்கப்படும்.

நியாயத் தீர்ப்பு அளிப்பதற்காக கடவுள் தனது நீதியாசனத்தில் வீற்றிருந்தார்.

எல்லா மதத்தவர்களும் அங்கே இருந்ததால், இவர் தன்னுடைய மதத்தின் கடவுள்தானா, மாற்று மதத்தின் கடவுளா என்கிற சந்தேகம் ஒவ்வொருவருக்கும் இருந்தது.

“அனைத்து மதத்தின் கடவுளும் நானே!” என்று சொன்ன கடவுள், அனைத்து மதக் கடவுள் உருவங்களாகவும் காட்சியளித்து, அருவமாகவும் தன்னை வெளிப்படுத்திக் காண்பித்தார்.

“அப்படியானால் அனைத்து மதங்களிலும் சொல்லப்படுகிற கடவுள், நீங்கள் ஒருவர்தானா?” என்று கேட்டனர், அனைத்து மத நம்பிக்கையாளர்களும்.

“ஆம்! இந்த உண்மையை ஞானியர்கள் பலரும், பல காலமாக சொல்லியும், நீங்கள் ஏற்கவில்லை. நான் வேறு வேறு என்று உங்களுக்குள் சண்டையும், கலவரங்களும், மத வன்கொடுமைகளும், மத பயங்ரவாதங்களும் செய்ததால்தான் இங்கே வந்திருக்கிறீர்கள். உண்மையை உணர்ந்து, அதற்குத் தகுந்தபடி செயல்பட்டிருந்தால் உங்களுக்கும் ஞானிகள், மகான்கள், யோகிகள் மற்றும் உண்மையான பக்தர்கள் போல சொர்க்கம் கிடைத்திருக்கும்!”

“இப்போது நாங்கள் உணர்ந்துகொண்டோம் கடவுளே!” கூட்டக் குரல்கள் எழுந்தன.

“இப்போது உணர்ந்து பலனில்லை! இது வரை நீங்கள் செய்த பாவங்களுக்கும், குற்றங்களுக்கும் உரிய தண்டனையை, அவரவருக்கான நரகத்தில் அனுபவித்தே தீர வேண்டும்!”

நியாயத் தீர்ப்பு தொடங்கியது.

வேதங்கள், பிற புனித நூல்கள் ஆகியவற்றில் எழுதப்பட்டுள்ளவற்றையும், பூசாரிகள், மத அறிஞர்கள், மதப் பிரச்சாரகர்கள் போன்றவர்கள் சொல்வதையும், உண்மைதானா என்று ஆராயாமலும், அதில் தவறுகள் இருந்தால் தட்டிக் கேட்காமலும், அப்படியே கடைபிடிக்கிற நம்பிக்கையாளர்கள் முதலாவதாக அழைக்கப்பட்டனர்.

“நீங்கள் பாவிகள் அல்ல; ஆனால் தவறிழைத்தவர்கள். நம்பிக்கை என்பது சரியானதாகவும். உண்மையானதாகவும் இருக்க வேண்டும். வெற்று நம்பிக்கைகளை விட, உண்மைதான் முக்கியமானது. ஆனால் நீங்களோ, உண்மையைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. மாறாக, உங்களுக்கு சொல்லப்பட்ட பொய்க் கருத்துகளை. நம்பிக்கைகள் என ஏற்று, கடைபிடித்தீர்கள். ஆகவே, முதல் நரகம் உங்களுக்கு” என்றார் கடவுள்.

இரண்டாவதாக மூட நம்பிக்கையாளர்கள் அழைக்கப்பட்டனர்.

“நீங்கள் நம்பிக்கை என்ற பெயரில் கடைப்பிடித்த மூட நம்பிக்கைகளில் எந்த விதமான ஆன்மிகமோ, இறைத் தன்மையோ, உண்மையோ, தத்துவமோ எதுவும் கிடையாது. உங்களது மூட நம்பிக்கைகளால் உங்களுக்கு மட்டுமன்றி, உங்களைச் சார்ந்தவர்களுக்கும் பலவிதமான இழப்புகள், துன்பங்கள், கொடுமைகள் ஆகியவற்றை செய்துகொண்டீர்கள். நீங்கள் ஏராளமான தவறுகள் செய்ததோடு, அவ்வப்போது குற்றங்களையும் பாவங்களையும் செய்திருக்கிறீர்கள். எனவே, இரண்டாவது நரகம் உங்களுக்கு.”

மூன்றாவதாக மதவாதிகளும், மத துவேஷிகளும்.

“மதங்கள், மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக ஞானியர்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால் மதவாதிகள் அதன் காரண காரியத்தை விளங்கிக் கொள்ளாமல், அவரவர் மதங்களே பெரிது என்று மதவாதம் புரிந்தனர். இது உண்மையில் மதத்துக்கு விரோதமானது. எனவே, மத விரோதக் குற்றம் உங்களைச் சாரும். அதே போல, மத துவேஷிகள் வன்மையாக தண்டிக்கத்தக்கவர்கள். தன்னுடைய மதம் போலவே மற்றவர்களுடைய மதத்தையும் மதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல், மற்ற மதங்களையும், மற்ற மதக் கடவுள்களையும் இழிவுபடுத்திப் பேசுகிறவர்கள், துவேஷப் பிரச்சாரம் செய்கிறவர்கள் யாவரும் என்னுடைய விரோதிகளில் கடைநிலையில் இருப்பவர்கள். எனவே, மதவாதிகளுக்கும் மத துவேஷிகளுக்கும், கடுமையான சித்ரவதைகள் கொண்ட மூன்றாவது நரகத்தை விதிக்கிறேன்.”

அதற்குப் பிறகு கட்டாய மத மாற்றம், வஞ்சக மத மாற்றங்கள் ஆகியவற்றைச் செய்பவர்கள், மதத் தீவிரவாதிகள், மத பயங்கரவாதிகள் மற்றும் புனிதப் போராளிகள் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

“கட்டாய மற்றும் வஞ்சக மத மாற்றம், மாற்று மதத்தவர்களை அழித்தொழித்தல், பல விதமான மத வன்கொடுமைச் செயல்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள், புனிதப் போர், பாலியல் வன்கொடுமை, கொலை, கூட்டப் படுகொலை, கொள்ளை, அடிமைப்படுத்துதல் உட்பட, மதத்தின் பெயராலும், என் பெயராலும் செய்யப்படும் அனைத்து விதமான குற்ற, பாவ, வன்கொடுமைச் செயல்கள் எதுவும் மதத்தையோ என்னையோ சார்ந்ததல்ல. ரத்த வெறி பிடித்த கொடூரக் காட்டுமிராண்டிகளான இவர்களுக்கு, அவர்கள் செய்ததை விட நூறு மடங்கு கொடூர தண்டனைகள் வழங்கப்படுகிற நான்காவது நரகத்தை விதிக்கிறேன்.”

அடுத்ததாக மத அடிப்படைவாதிகள்.

“மதவாதிகள், மத வெறியர்கள், மதத் தீவிரவாதிகள், புனிதப் போராளிகள், மத பயங்கரவாதிகள் போன்றவர்கள் உருவாவதற்கு அடிப்படைக் காரணமே இந்த மத அடிப்படைவாதிகள்தான். இவர்கள் மத அடிப்படைவாதத்தால் தத்தமது மதத்தில் உள்ளவர்களையே அடிமைத்தனமாக நடத்துவதோடு, மாற்று மதத்தவர்கள் மீதான மத துவேஷம், மத வெறி, மதத் தீவிரவாத தாக்குதல், மதக் கலவரம், மதப் போர் உள்ளிட்ட அனைத்திற்கும் மூல காரணமாக இருக்கின்றனர். எனவே, இவர்களுக்கு இந்தக் கொடுமைகளின் 200 மடங்கு சித்திரவதைகளையும், துன்பங்களையும் வழங்கும்படியாக ஐந்தாவது நரகத்தை விதிக்கிறேன்.”

அதன் பிறகு அங்கே பூசாரிகள், கள்ள சந்நியாசிகள், மத அறிஞர்கள், மதப் பிரச்சாரகர்கள் ஆகியோர்தான் மிச்சமிருந்தனர்.

“பக்தர்களை என்னிடம் நெருங்க விடாமல் தடுப்பதில் முதலிடம் வகிப்பவர்கள் பூசாரிகள். அவர்கள் எனது இடைத் தரகர்கள் என்று சொல்லிக்கொண்டு பக்தர்களை ஏய்ப்பவர்கள். என் பெயரால் இவர்கள் மக்களை ஏய்ப்பது மட்டுமன்றி, என்னையும் வஞ்சிக்கின்றனர். கள்ள சந்நியாசிகளோ, பில்லியன் கணக்கான சொத்து சேர்த்து, சகல சுக போகங்களையும் அனுபவிக்கின்றனர். பாலியல் லீலைகள், வல்லுறவு, கொலை உள்ளிட்ட பஞ்சமா பாதகங்களும் இவர்களால் செய்யப்படுகின்றன.

“மத அறிஞர்களோ, மத நம்பிக்கைகள் என்ற பெயரில் தவறானவற்றை மக்களுக்கு போதித்தனர். வேதங்கள், புனித நூல்கள் ஆகியவற்றின் மெய்ப் பொருள் அறியாமலும், மெய்யியல் உண்மைகளை மறைத்தும், தவறான விளக்கங்கள் கூறி, வெற்று நம்பிக்கைகளையும், மூட நம்பிக்கைகளையும்

விதைப்பவர்கள் இவர்கள். மக்களிடமிருந்து உண்மையையும், என்னையும் மறைத்த பெரும் குற்றம் இவர்களைச் சாரும். இந்த மத அறிஞர்கள்தான் மத அடிப்படைவாதத்திற்கும் காரணம். எனவே, மத பயங்கரவாதிகளை விடவும் கொடூரமானவர்கள் இவர்கள்.

“மதப் பிரச்சாரகர்கள், இன்னமும் கூட ஒரு படி அதிகமான கொடும் பாவிகள். உண்மை அறியாத மக்களுக்கு உண்மையை அறிவிப்பதுதான் உண்மையான மதப் பிரச்சாரம் ஆகும். ஆனால் இவர்கள், மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும் என்கிற நோக்கம் அறவே இல்லாமல், தத்தமது மதத்தைப் பரப்ப வேண்டும், மதத்திற்கு ஆள் சேர்த்த வேண்டும் என்பதிலேயே குறிக்கோளாக இருந்தனர். இப்படி இவர்கள் செய்த தவறுகளால்தான் உலகம் முழுதும் மதவாதம், மத துவேஷம், மதத் தீவிரவாதம் ஆகியவை பரவின.

“எனவே, பூசாரிகள், கள்ள சந்நியாசிகள், மத அறிஞர்கள், மதப் பிரச்சாரகர்கள் ஆகியோருக்கு நரகத்தின் அதி கொடூர தண்டனைகள் வழங்கப்படுகிற ஆறாவது நரகத்தை விதிக்கிறேன்.”

இந்தத் தீர்ப்புகளைக் கேட்டுவிட்டு ஒவ்வொருவரும் கூச்சலிட்டு, அழுது புலம்பி, கடவுளிடம் மன்றாடினர்:

“கடவுளே! நீங்கள் சொன்ன பாவங்கள், குற்றங்கள் யாவுமே, எங்களுக்கு எங்களின் வேதங்கள் மற்றும் பிற புனித நூல்களில் இருந்து அறியப்பட்டவைதான். மேலும், தீர்க்கதரிசிகள், உங்களது தூதர்கள், புதல்வர்கள், பேரர்கள், அவதாரங்கள் போன்றவர்கள்தான் இதையெல்லாம் எங்களுக்கு போதித்தனர். அவற்றின்படியேதான் நாங்கள் இவற்றையெல்லாம் செய்தோம்.”

கடவுள் சொன்னார்:

“நான் எந்த மதத்தையும் தோற்றுவிக்கவில்லை. மதத்தைத் தோற்றுவித்தது மனிதர்கள்தான். நான் சாமானிய மக்களுக்கு வெளிப்படுத்தாத பேருண்மைகள் மற்றும் ப்ரபஞ்ச ரகசியங்களை, ஞானிகள் மூலமாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாகவும் மக்களுக்கு வெளிப்படுத்தினேன் என்பது உண்மைதான். அந்த உண்மையான ஞானிகளும், தீர்க்கதரிசிகளும் சொர்க்கத்தில் உள்ளனர். ஆனால், நான் மட்டுமே கடவுளின் தீர்க்கதரிசி, நான் கடவுளின் ஒன்றுவிட்ட புதல்வன், நான் கடவுளின் மாமனார், சகலை, நான் அவதாரம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்த எந்த மனிதர்களும் எனக்கு எவ்வித உறவினரும் அல்ல. மாற்று மதத்தவர்களையோ, மதத்தை ஏற்காதவர்களையோ கொல்லும்படியாக, நான் எந்த மனித ஓநாய்களையும் ஏவிவிடவும் இல்லை. அப்படிப்பட்ட கள்ளத் தீர்க்கதரிசிகளையும், கள்ள இறை

உறவினர்களையும், கொடூரங்களின் உச்ச தண்டனைகள் வழங்கப்படுகிற ஏழாவது நரகத்தில் ஏற்கனவே அடைத்துவிட்டேன்!”

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *