உலகங்கள்
(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
துறந்த கேற்றை மூடப் போனபோ தான் அது கண்களிற் பட்டது. நாக்கிளிப் புழு. ஒரு கிழமையாய்ப் பெய்த மழையில் திளைத்துக் கொழுத்து, மேலே வந்திருந்தது. நெளிந்து நெளிந்து அவஸ்தைப்பட்டது. தெரியாத்தனமாய்க் காலிலோ, எறும்பு வாயிலோ, கோழியின் கண்ணிலோ பட்டா லும் பாவம்…ஒரு குச்சியால் எற்றத் தூக் கியபோது ஒரு யோசனை வந்தது. இது மரு மகனுக்குப் பிரயோசனமான விளையாட்டுப் பொருளாய் அமையலாம்.

மீண்டும் உள்ளே போய், ஒரு கடதா சித் துண்டை எடுத்து வந்தான். அதை மெல்லத் தூக்கிப் போட்டு, நோ காமல் மடித்து சைக்கிள் கூடைக்குள் வைத்தான்.
அக்கா வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், சரையைக் கையில் வைத்துக்கொண்டு மரு மகனைக் கூப்பிட்டான். குடுகுடுவென்று ஓடி வந்த குஞ்சுவுக்கு வியப்புத் தாளவில்லை.
“அம்மா, மாமா பாம்புக் குட்டி கொண்டு வந்திருக்கிறார்…” – பரபரப்பு மாறாமல் அதையே ஆச்சிக்கும் திருப்பிச் சொன்னான்.
“பாம்புக்குட்டி இல்லை ராசா, இது நாக்கிளிப்புழு..”
”கொம்மானுக்கும் வேலையில்லை, உனக்கும் வேலையில்லை…” என்றபடி அம்மா.
“தம்பி, அத்தான் நேற்றைக்கு வாறதெண்டு சொல்லிப் போட்டுப் போனவர். இன்னுங் காணேல்லை. ஒருக்கா மாமி வீட்டை போய்ப் பாத்துக் கொண்டு வாறியா?”- அக்காவின் கண்கள் கலங்குவன போல் தெரிந்தன.
“இண்டைக்கு வந்திடுவர்.. பயப்பிடாதை…”
“வவனியாவிலை முந்தநாள் ஏதோ பிரச்சனை எண்டும் பேப்பரிலை கிடந்தது…”
“மாமா, மாமா நாக்கிளிப்புழு வெளியாலை விழப் போகுது…”
“பொறு, வாறன்” – எங்கோ தேடி ஒரு பழைய ஜாம் போத்தல் எடுத்துக் கழுவி, தழை உக்கின மண்ணாக நிரப்பிக்கொண்டு வந்தான்.
“ஏன் மாமா, உது?”
“இது இருக்கிறதுக்கு…”
”நாக்கிளிப்புழு எங்க இருக்கும்?”
“மண்ணுக்குள்ளை…”
“அப்ப, இதை என்னெண்டு பிடிச்ச நீங்கள்?”
“வெளியிலை வந்துது, பிடிச்சன்-”
“ஏன் வெளியிலை வந்துது?”
“மழைக்கு வந்திருக்கும் …” என்றபடி, புழுவைப் போத்தல் மண் மேற் போட்டான்.
“இனிப்பார், இது துளைச்சுக்கொண்டு உள்ளுக்குப் போகும்.”
“எப்பிடி? அதுக்குக் கையிருக்கா…?”
“இல்லை, தலையாலை துளைக்கும்…”
“அதின்ர கண்ணுக்குள்ளை மண் போகாதே?”
“அதுக்குக் கண்ணில்லை…”
குஞ்சு, போத்தலைத் தூக்கிக் கட்டிலில் வைத்துவிட்டுத் தானும் அதையே பார்த்தபடி பக்கத்தில் குந்திக் கொண்டான்.
அக்கா வந்தா.
“போறதெண்டா, வெய்யிலுக்கு முன்னம் போட்டு வாவன்?”
“ஓ”
“நேற்றுப் பின்னேரம் அங்கயிருந்து வரப்பிந்தியிருந்தா மாமி வீட்டிலை நிண்டிருப்பர். ஆனா, விடிஞ்சு இவ்வளவு நேரமாச்சே…”
அக்காவைப் பார்க்கப் பாவமாயிருந்தது.
“வராட்டி, தபால் ஏதும் வந்ததோ எண்டு கேள்..”
”மாமா, துளைக்குது”
“பொறு, தேத்தண்ணி கொண்டு வாறன், குடிச்சிட்டுப் போகலாம்”
“ஹெய்யா.. போகுது, மாமா..”
“போத்திலைத் தட்டாமல் பார்”
தேநீரைக் குடித்துக் கொண்டிருக்கும் போது குஞ்சு கேட்டான்:
“மாமா, இது எப்பிடிக் கத்தும்?”
“அது கத்திறதில்லை, ராசா…”
“என்ன சாப்பிடும்?”
“மண்தான்”
“இஞ்ச பாருங்கோ, எவ்வளவு போட்டுதெண்டு…”
அரைவாசிக்கு மேல்.
அம்மாவிடமும் அக்காவிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்
“வடிவா விசாரிச்சுக் கொண்டு வா…”
சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது, படலை யடியில் மோட்ட பைக் சத்தங் கேட்டது.
அத்தான்தான்.
உள்ளே திரும்பி, “வந்திட்டார்….” என்றான், அக்காவிடம்.
“ஏதும் பிரச்சினையே? ஏன் பிந்தினது?…” என்றபடி முகம் மலர்ந்த அக்கா வந்தா.
“அப்பா ..” படியேறிக் கொண்டிருந்த அத்தானை நோக்கிச் சந்தோஷமாய்க் கத்தினான், குஞ்சு.
”…நாக்கிளிப்புழு, முழுக்க உள்ளுக்குப் போட்டுது…”
– ஈழமுரசு (2ம் ஆண்டு மலர்), 1986.
– இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: அக்டோபர் 1988, வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம்.