கடமை கடமை





(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
டாக்டர் சுந்தரம் அந்த ஆஸ்பத்திரிக்கு கடடையாற்ற வந்து சுமார் ஆறுமாதகாலங்களாகி விட்டன. ஆனால் அவருடைய மனசை அங்குள்ள மற்ற டாக்டர்களுக்கோ அல்லது நேர்ஸ்மார்களுக்கோ அறிந்து கொள்ளமுடியவில்லை. அவர் மற்றவர்களுடைய பார்வைக்கு ஒரு அதிசய மனிதராகவே தோன்றினார்.

டாக்டர் சுந்தரம் கடமையாற்றத் தொடங்கிய அந்த ஆறு மாதங்களில் ஒரு நாளேனும் ஆஸ்பத்திரிக்கு வராமல் பங்களாவில் இருக்கவில்லை. எந்நேரம் பார்த்தாலும் ஆஸ்பத்திரியில் அவரைக் காணலாம். ஓயாமல் அவர் ‘வார்ட்டைச்” சுற்றிப் பார்வையிட்டுக் கொண்டே இருப்பார். அதனால் அவரின் கீழ் வேலைபார்க்கும் டாக்டர்களுக்கும், அப்போதிக்கரிமார்களும் மற்றும் ஆஸ்பத்திரிச் சிப்பந்திகளுக்கும் பெருத்த சங்கடமாய் இருந்தது. அவர்கள் அவரை ஒரு ‘புதுமைமனிதர் ” என்று கூறத்தொடங்கினார்கள். டாக்டர் சுந்தரத்துக்கு வயது சுமார் முப்பது இருக்கும். நல்ல வசீகரமான தோற்றம், விசாலமான நெற்றி, நெற்றியில் சில சுருக்குகள் நெளிந்து நெளிந்து உழுதுவிட்ட வயலைப்போல காணப்பட்டன. முகத்தில் எந்நேரமும் புன்முறுவல் தவழ்ந்து கொண்டிருக்கும். எப்பொழுதும் அவருடைய அகன்று விரிந்த நீல விழிகள் எதையோ சிந்தித்துக் கொண்டேயிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டும்.
டாக்டர் சுந்தரத்துக்கு அழகான மனைவி இருந்தாள். நல்ல அழகான குழந்தை ஒன்றும் இருந்தது. ஆனால் அவர் என்றைக்கும் தமது மனைவியுடன் கூடி உலாத்தவோ அல்லது கடற்கரைக்கோ போவதில்லை. அவர் மனைவியை வெளியிற் பார்ப்பதே அபூர்வம்.
எந்த நேரமும் பங்களாவில் தான் செய்யக்கூடிய வேலைகளைச் செய்து கொண்டே இருப்பாள். குழந்தையைக் கவனிப்பாள். தன் கணவனை அழைத்துக்கொண்டு சினிமாவுக்குப் போகவோ தெருவில் உலாத்தவோ அவள் போவதில்லை. டாக்டர் அவளை அப்படி அழைத்துக் கொண்டு போவதும் இல்லை.
இவை அனைத்தும் அங்குள்ளவர்களுக்கு பெருத்த வியப்பை உண்டுபண்ணிவிட்டது. அவர்கள் எதைச் செய்யமுடியும். எதையும் கண்டும் காணாமற் பேசவும் மனப்பயம். எப்படியோ அவர் ஒரு பெரிய டாக்டர். அவரிடத்தில் காணப்படும் குறை நிறைகளை அவர் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள் பேசக் கூசுவது இயல்புதானே. ஒவ்வொருவரும் தங்கள் மனதில் பெரிய டாக்டரைப் பற்றி பலவிதமான அபிப்பிராயங்களை வைத்துக்கொண்டு நல்ல மனிதரைப் போல தங்கள் வேலைகளைச் செய்தார்கள்.
டாக்டர் சுந்தரம் ஆஸ்பத்திரிக்கு வந்த பிறகு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. பல பெரும் பிரிவுகளிலிருந்தும் நோயாளிகள் தினமும் அங்கு வந்து குவிந்து கொண்டே இருந்தார்கள். அதனால் அந்த ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் அத்தனை பேருக்கும் மூச்சைவிடக்கூட அவகாசமில்லை. ஓயாமல் ஓடியாடி தங்கள் தங்கள் கடமைகளைச் சுறுசுறுப்பாகச் செய்யவேண்டியிருந்தது.
டாக்டர் சுந்தரத்தின் பொறுமையான குணமும்? நிறைந்த அன்பும் பொதுமக்களின் மனசைக் கவர்ந்துவிட்டது. டாக்டர் சுந்தரத்தை அவர்கள் வாயார வாழ்த்தினார்கள். வானுயரப் புகழ்ந்தார்கள். அவர் அந்த ஆஸ்பத்திரிக்கு வந்த நாள் தொடக்கம் அங்கே வருகிற நோயாளிகளுக்கு நல்ல காலம் பிறந்தது. அவர் அங்கே வருகிற ஒவ்வொரு நோயாளியையும் தனது சொந்தமானவர்களை பரிசோதனை செய்து பார்ப்பதைப் போல எம்மட்டோ அக்கறையாய் பார்த்து வந்தார். அதனால் ஊரவர்கள் “ஒரு புண்ணியவான் டாக்குத்தர் இப்போது வந்து இருக்கிறார். அவர் வந்த பிறகுதான் எங்களின்ரை ஊரிலே வருத்தம் குறைஞ்சது. அவரின்ரை பெஞ்சாதி பிள்ளைகளுக்கு கடவுள் ஒரு குறையும் விடமாட்டார்” என்று அவரைப் புகழ்ந்து பேசினார்கள்.
அன்று டாக்டர் சுந்தரம் பகல் ஒரு மணி வரைக்கும் நோயாளர்களைப் பரிசோதனை செய்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மருந்து வகைகளை எல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டுச் சாப்பிட பங்களாவுக்குப் போனார்.
பங்களாவுக்கு வந்தவர் தமது பகற் சாப்பாட்டை முடித்துவிட்டுச் சிறிதுநேரம் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு பேப்பர் வாசித்தார். அவருக்குப் பக்கத்தில் அவர் அன்பு மனைவி வந்து இருந்து அவர் பார்த்து விட்டுக் கொடுத்த பேப்பரை வாங்கி வாசித்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அங்கே வந்த தந்திக்காரன் தந்தி ஒன்றை டாக்டரிடம் கொடுத்து அவர் கையெழுத்தை வாங்கிக் கொண்டு போனான். டாக்டர் தந்தியைப் பிரித்து வாசித்தார். தந்தியில் ‘தாயாருக்கு மிகவும் கடுமையான வருத்தம். உடனே வரவும்” என்று இருந்தது. அதை வாசித்ததும் அவர் முகம் சிறிது வாட்டமுற்று விட்டது. எப்படியோ! பெற்ற தாய்க்கு வருத்தம் கடுமை என்றால் மனம் கலங்காமல் இருக்க முடியமா?
கணவனின் முகம் வாடிவிட்டதைக் கண்ட அவர் மனைவி அகல்யா அவரைப் பார்த்து “இஞ்சாருங்கோ! அது என்ன தந்தி. ஆருக்குச் சுகவீனம்!” என்று மிக்க அக்கறையோடு கேட்டாள்.
“அம்மாவுக்கு வருத்தம் கடுமையாம். எங்களை உடனே வரட்டுமாம்” என்றார் டாக்டர். “என்ன மாமிக்கு வருத்தம் கடுமையோ? அப்ப வெளிக்கிடுங்கோ போவம்” என்று பரபரப்போடு கூறினாள் அகல்யா.
“அகல்யா நாங்கள் நினைத்த உடனே போகக் கூடிய வேலை அல்ல – இந்த வேலை. உம் சரி நான் எதற்கும் ஒருக்கால் ஆஸ்பத்திரிக்குப் போய் பார்த்துவிட்டு வருகிறேன். நீ வெளிக்கிடு” என்று கூறிவிட்டு தமது ‘ஸ்டெலஸ் கோப்பை யும் கையில் எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அவர் எதிரில் நர்ஸ் கமலா மூச்சு வாங்க! வாங்க! ஓடிவந்தாள். அவள் ஓட்டமாய் ஓடிவருவதைக் கண்ட டாக்டர் சுந்தரம் கமலாவைப் பார்த்து “மிஸ் கமலா, என்ன சங்கதி? யாருக்காவது வருத்தம் கடுமையா?” என்று மிக்க கரிசனையோடு கேட்டார்.
“ஓம் டாக்டர் ஒரு பெண்ணுக்கு மிகவும் ஆபத்து. அவளுக்கு குழந்தை பிரசவிக்க வேண்டிய நேரம் தவறிவிட்டது. தயவு செய்து நீங்கள் அவளைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்” என்றாள் நர்ஸ் கமலா.
நர்ஸ் கமலா கூறியவற்றைக் கேட்ட டாக்டர் சுந்தரத்தின் சிந்தனையில் உதித்த எண்ணம் எல்லாம் எங்கோ மாயமாய் மறைந்ந்து விட்டன. அவர் நேரே பிரசவ வாட்டிற்குப் போனார். அங்கே இரண்டாவது டாக்டர் விசுவநாதனும் சில நர்ஸ்மார்களும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் டாக்டர் சுந்தரத்தைக் கண்டதும் அந்தக் ‘கேஸ்’ மிகவும் ஆபத்தான ‘கேஸ்’ என்று அந்தப்பெண்ணைத் தப்பவைக்க வேண்டுமானால் உடனே சத்திரசிகிச்சை அளிக்கவேண்டும்.
என்றும் கூறினார்கள். டாக்டர் சுந்தரம் உடனே அந்தப் பெண்ணைச் சத்திர சிகிச்சை அளிக்கும் அறைக்கும் கொண்டு போகுமாறு கூறிவிட்டு, அவர் சத்திரசிகிச்சை செய்ய ஆயத்தமானார்.
மிக்க கவனத்தோடு டாக்டர் சுந்தரம் சத்திரசிகிச்சையை அந்தப் பெண்ணுக்கு வெற்றிகரமாக செய்து முடித்தார்.
குழந்தை “குவா குவா” என்று அழுதது. ஆனால் இனித் தாய்க்கு சுய அறிவு வரும் வரைக்கும், அவளுக்குப் பக்கத்திலிருந்து முக்கியமான சில சிகிச்சைகளைச் செய்ய வேண்டும். அதனால் அவளைக் “கவனித்துக் கொள்ளுங்கள்” என்று டாக்டர் விசுவநாதனிடம் கூறிச்சென்ற டாக்டர் சுந்தரத்தின் மனசு நிம்மதி அடையவில்லை. அந்தப்’ பெண்ணின் உயிர் அவர் கையில்தான் தங்கியிருப்பது போன்ற மனப்பிரேமை ஏற்பட்டு அவரை அங்காலே செல்ல விடாது தடுத்து விட்டது.
மீண்டும் அவர் திரும்பி வந்து அவள் உடம்பிலுள்ள உஷ்ணநிலையை பரிசோதித்துப் பார்த்தார். உஷ்ண நிலை மிக மந்தமாக இருந்தது. உடனே அவர் அங்கு நின்ற நர்ஸ்மாரிடம் அவள் உடம்பில் உஷ்ணம் குறையாமல் இருக்க சுடுதண்ணீர் ‘டியூப்புக்களை’ அவள் உடம்புக்கு அணையாக வைக்கும்படி கூறிவிட்டு, அவரும் அந்த இடத்திலேயே இருந்து கொண்டார்.
இரவு சுமார் பத்து மணியளவில் அந்தப் பெண்ணுக்கு சுய அறிவு வந்தது. அதன் பிறகு அவளுக்கு செய்ய வேண்டிய சிகிச்சை முறைகளை எல்லாம் அங்குள்ள நர்ஸ்மாரிடம் கூறிவிட்டு அவர் தனது பங்களாவை நோக்கி வந்து கொண்டிருந்தார். அகல்யா சாயந்தரம் மூன்று மணியிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் தனது கணவனது வரவை எதிர்பார்த்துப் பார்த்து ஏமாந்து போனாள். அவளுக்கு மனசு அலுத்துவிட்டது. அவள் அதுவரைக்கும் உடுத்து இருந்த உடையைப் போய் உள்ளறையில் மாற்றிக்கொண்டு வெளி விறாந்தைக்கு வந்து வழியைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
சுவர்க்கடிகாரத்தில் மணி பத்து அடித்து நிழிஷங்களும் மூன்றாகி விட்டன. அகல்யாவுக்கு தனது கணவரின் போக்கு ஒன்றும் புரியாத புதிராகவே இருந்தது. “தாயாருக்கு வருத்தம் கடுமை, உடனே வாருங்கள்” என்று தந்தி வந்துங் கூட அவர் ஆஸ்பத்திரியை விட்டு வரவில்லையே என்று என்பதை எண்ண அவள் மனம் துணுக்குற்றது. பெற்ற தாயாரைக் காட்டிலும் அந்த உத்தியோகம் ஒரு பெரிதா? என்று அவள் மனதில் எண்ணிக்கொண்டாள். அப்பொழுது அங்கு வந்த டாக்டர் சுந்தரம் ‘அகல்யா நான் உன்னை நெடுநேரம் காத்துக் கொண்டு இருக்க வைத்துவிட்டேன். என்ன செய்கிறது ஆஸ்பத்திரியில் மிக ஆபத்தான கேஸ் ஒன்று இந்த நேரம் பார்த்துதான் வந்து சேர்ந்தது. அதை நான் கவனிக்காது போனால் நான் என் கடமையை சரிவரச் செய்யாதவன் ஆவேன். நான் இல்லாவிட்டால் மற்றவர்களால் எதுவும் செய்ய முடியாது. இவை யாவும் நமக்கு கடவுளின் சோதனை. இனி நாங்கள் இந்த அவசரக் காலத்தின்படி வெளியே செல்ல முடியாது. இன்னும் என்ன! விடிய ஏழுமணித்தியாலங்கள் தானே இருக்கிறது. விடியட்டும் போவோம். என்று கூறினார்.”
“இது நல்ல கடமை தான்” உங்கள் அம்மாவுக்கு வருத்தம் கடுமை என்று தந்திவந்து இருக்கிற இந்த நேரத்தில் இதை எல்லாம் பார்க்கலாமா? நாளைக்கு மாமிக்கு ஒன்றானால் உங்களை ஊரவர் என்ன எல்லாமோ சொல்லிக் குறை பாடுவார்கள்.,” என்றாள் அகல்யா.
“அகல்யா, நாம் ஊராருக்குப் பயந்து நமது கடமையைத் தவற விடக்கூடாது. ஊராருக்கு என்ன! எலும்பு இல்லாத நாவால் எதையும் பேசுவார்கள். அதை எல்லாம் நாம் காதிற் போட்டுக் கொள்வது தான் பிசகு எவன் ஒருவன் கடவுளுக்குப் பயந்து தனது பணியைக் கண்ணியமாகச் செய்கிறானோ அவனே கடமையை சரிவரச் செய்த கனவானாவான்” என்றார் டாக்டர்.
எடுத்ததற்கெல்லாம் “கடமை, கடமை” என்று கூறிக்கொள்ளும் அவள் கணவனுடைய பிடிவாத குணத்தைக் கண்டதும் சரி, இப்ப நீங்கள் போய் உங்கள் உடையை மாற்றிக் கொண்டு வாருங்கோ! சாப்பிட” என்றாள்.
மறு நாள் அதிகாலையில் டாக்டர் தனது மனைவி குழந்தையுடன் தனது பெற்றார் வீட்டுக்குப் போனார். அங்கே அவர் கண்ட பரிதாபகரணமான காட்சி அவரைக் கதிகலங்க வைத்தது. அவர் தாயார் நல்லமணி அன்று இரவே இறந்து போய்விட்டாள்.
டாக்டரைக் கண்டதும் அங்கு கூடி நின்ற சுற்றத்தவர்கள் அவரைச் சுற்றி வளைந்து கொண்டு “நீங்கள் நேற்று தந்தி கிடைத்தவுடன் வந்து இருந்தால் உங்கள் தாயாரின் கண்ணில் விழிக்க இருந்தது. அதை நீங்கள் தவற விட்டதால் உங்கள் தாயார் முகத்தில் விழிக்க உங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை என்றார்கள்.
டாக்டர் அவர்களிடம் எதுவும் பேசவில்லை. அவர்கள் அன்று ஆஸ்பத்திரியில் இரண்டு ஜீவன்களை மீட்பதற்காக எவ்வளவோ பிரயாசித்தனர். ஆனால் அந்த நேரத்தில் இங்கே அவர் தாயார் நல்ல மணியின் உயிர் பிரிந்து விட்டது. என்ன நிகழ்ந்தாலும் மனிதன் கடமையைச் செய்ய தவறக் கூடாது என்பது அவர் இலட்சியம் அல்லவா? அதனால் அவர் தனது தாயாருக்கு அதற்குப் பிறகு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய ஆயத்தமானார். அவர் கண்களில் கண்ணீர் சுரந்து வழிந்தது.
கச்சாயில் இரத்தினம்
மூத்தசிறுகதை எழுத்தாளர்களில் அமரர் கச்சாயில் இரத்தினம் ஒருவராவார். கடமை கடமை, விலங்குச்சுழி, சித்திரைநிலவு, மனமாற்றம், நாகசஞ்சீவி முதலான நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளார். வன்னியின்செல்வி அவரின் சரித்திர நாவலாகும். அவருடைய மகள் மலரன்னை படைப்பாளி.
– 29.04.1962
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.