சுமந்தவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 20, 2024
பார்வையிட்டோர்: 1,019 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘என்னைச் சுமந்தவள் நான் பிறந்ததும், தான்பட்ட வேதனையை மறந்து தாமரை முகம் காட்டியவள் நான் சிரித்தால் சிரித்து – அழுதால் அழுது எனக்கு அமுதூட்டிய பெருமாட்டி – என் தாய் – என் தெய்வம் – என்றைக்காவது ஒருநாள் என்னைவிட்டுப் பிரிந்துவிட்டால்! 

அம்மவோ! அதை நினைக்கவே என் நெஞ்சுக்குத் தெம்பில்லை. இந்தத் தள்ளாத வயதிலும் எவ்வளவு சுறு சுறுப்பு! எத்துணை குடும்பக் கவலை! ஒருக்கணம் அந்த எலும்புக் கால்களுக்குத் தான் ஓய்வு இருக்காதா ? கொல்லைப்புறம் – கூடம் – அடுக்களை – தெருவாயில் மாடிப்படி – இப்படி எங்காவது ஒரு இடத்தில் கீழேகிடக்கும் துரும்பையாவது எடுத்து வெளியே போட்டுத் தூய்மைப்படுத்தும் பணியில் துருதுருவென்று இருக்க எப்படித்தான் முடிகிறதோ! 

உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்துவிட்ட அந்தத் திருவுருவம் ஒரு நாள் நீங்காத்துயில் கொள்ள நேரிடுமே; அந்த வேதனையை எவ்வாறு தாங்கிக் கொள்ளப்போகிறேனோ, தெரியவில்லையே! எலும்பும் தோலுமாக ஒரு கிழம் கிடப்பது வீடு முழுதும் விளக்கேற்றி வைத்ததுபோல ஒளிமயமாய் திகழும். குஞ்சு குளுவான்கள் நிறைந்த குடும்பத்தையே தாங்கிக் கொண்டிருக்கும் தூண் அந்தப் படுகிழம் தான்! அந்தப் பழுப்பு இலையின் நிழலிலே நாங்கள் காணும் குளிர்ச்சியை இழந்துவிடுவதற்கு எப்படித்தான் மனம் வரும்!” 

இத்தகைய நினைவுகளோடு தாழ்வாரத்தில் உலவிக் கொண்டிருந்தேன். தாயின் அன்புக்கரத்தின் தழுவல் இல்லாத பாலைவனம் போன்ற ஒருவறண்ட எதிர்காலத்தைக் கற்பனை செய்து களைத்துப்போய் மெலிந்த பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது என் நெஞ்சம். தாயில்லாத வீடு – தாய் அளிக்காத உணவு – தாயின் அன்புமொழி கேட்டு இன்பம் பெற முடியாத செவிகள் தாயின் அருள் முகம் காண இயலாத விழிகள் – தாயில்லாத நான் – இவைகள் எல்லாம் எனக்கு வருங்காலத்தில் புயல் – பூகம்பம் – சூறாவளி எனத்தக்க பெரும் சுழற்சிக் கொந்தளிப்புகள் அல்லவா ? 

தாயின் மீதுள்ள பாசம் மட்டும் மனிதனை ஏன் இவ்விதம் ஆட்டிப் படைக்கிறது ? வாட்டிவதைக்கிறது ? தாய் என்ற சொல்லுக்கு இவ்வளவு மகிமை ஏன் ? மதிப்பு ஏன்? உண்மையிலேயே தாய் என்றால் யார்? தாய்க்குரிய லட்சணங்கள்தான் என்ன ? பெற்றுவிட்டால் அவள் தாயாகிவிடுவாளா ? பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் தாய்கள்தானா? 

இந்தக் கேள்விகளுக்கு விடைகாண வேண்டுமென்ற அவா, உள்ளத்தில் கொடிகட்டிப் பறந்தது. 

அப்போது என் தாயார் மெல்ல மெல்ல என் பக்கம் வந்து நின்று, என் முகத்தை அன்பு கசிய உற்றுப்பார்த்து, 

“ஏம்ப்பா! ஒரு மாதிரியிருக்கிறாய்?” என்று ஆவலைக் கொட்டினார்கள். 

“ஒன்றுமில்லையம்மா! உட்காருங்கள்!” என்றேன். என்னை உட்கார வைத்தவாறு அவர்களும் உட்கார்ந்தார்கள். 

“அம்மா! ஒரு சந்தேகம் – நீங்கள் விளக்கவேண்டும்” என்றேன். 

“என்னடா கண்ணு; ஓயாமல் படிக்கிறாய் ஊருக்கெல்லாம் பேசுகிறாய் – என்னிடத்தில் வந்து சந்தேகம் கேட்கிறாய்?” என்று அம்மா கொஞ்சினார்கள். 

“ஓயாமல் படிக்கிறவன் – ஒப்பற்ற மேதை – உலகு புகழ் நிபுணன் – என்றெல்லாம் உயரத்தில் நிற்கிறவனுக்குக் கூட சில சமயங்களில் தாயின் அருமை தெரிவதில்லையே ; அந்த அடிப்படையில் எழுந்ததுதான் இந்தச் சந்தேகம்” 

“ம்! மேலே சொல்லு!” என்றார்கள் தாயார். 

“தாய்மை என்றால் என்ன? தாய் என்றால் யார் ? பெற்றவள் தாயா? பேணி வளர்த்தவள் தாயா ? இதற்கு எனக்கு விளக்கம் வேண்டும்!” 

தாயின் கண்களில் புது ஒளி தோன்றியது. அமைதியாகப் பதில் சொன்னார்கள். 

“நடந்த கதையொன்றைச் சொல்கிறேன் கேள்! கதையைக் கேட்டால் உன் சந்தேகம் நீங்கும். விளக்கம் கிடைக்கும் !” என்றவாறு கதை சொல்லத் தொடங்கினார்கள். தாயார் கூறிய கதை இது தான்: 


“அண்ணா ! எனக்கு இப்போது திருமணமே வேண்டாம். தயவு செய்து என்னைத் தொந்திரவு செய்யாதீர்கள் விட்டுவிடுங்கள்” 

“தம்பீ ! திருமணம் என்ன தீக்குண்டமா ? ஏன் இப்படி நடுங்குகிறாய் ? இதோ நானும் உன் அண்ணியும் மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்த வில்லையா?” 

“திருமணமே கூடாது என்று கூறவில்லை, அண்ணா! இப்போது தேவையில்லை என்கிறேன். என்னதான் வசதிகள் இருந்தாலும் மாதம் நூறு ரூபாய் சம்பாதிக்கிறேன் என்ற கௌரவம் இல்லா விட்டால் எனக்கு யார் அண்ணா திருப்தியோடு பெண் கொடுப்பார்கள்?” 

“பணக்கார வீட்டுப் பெண் – படித்த பெண் வேண்டாமே! உன் அண்ணி சொல்வது போல டெய்லர் ஏகாம்பரத்து மகள் மரகதத்தைக் கட்டிவிட்டால் என்ன ?” 

“நல்ல வேடிக்கை! சந்திரன் தம்பி சேகருக்குப் பெரிய இடங்களில் பெண் கிடைக்க வில்லை. காரணம், மாப்பிள்ளை வேலையெதுவும் பார்க்க வில்லையென்று பணக்கார வீடுகளில் மறுத்துவிட்டார்களாம் என்று ஊரெல்லாம் பேசுவார்கள். வேண்டாம் அண்ணா! அப்பா வைத்துவிட்டுப்போன சொத்திலே வாழ்க்கை நடத்தாமல் உன்னைப்போல மாதம் நானும் நாலு காசு சம்பாதிக்கிறேன். அதற்குப் பிறகு பெரிய வீட்டுப் பெண்ணே எனக்குக் கிடைக்கும்!” 

“மரகதம், தங்கமான பெண். அவளைத்தான் உனக்குக் கட்டவேண்டுமென்று உன் அண்ணி துடியாய்த் துடிக்கிறாள். அண்ணியின் மனம் கோண நீ நடக்கமாட்டாய் என்று நம்பியிருக்கிறாள். பிறகு உன் இஷ்டம்!” 

“அண்ணீ! என்மீது உனக்கு வருத்தமா ? நான் சொல்வது உனக்குப் புரிய வில்லையா, அண்ணீ?” 

“சௌந்தரீ! சேகரிடம் நீயே பேசு! என் உயிரை வாங்காதீர்கள். நீங்களே ஒரு முடிவு செய்யுங்கள். நான் வருகிறேன்!” 

“சேகர்! பார்த்தாயா, உன் அண்ணா வருத்தத்தோடு போவதை! எங்கள் மனம் குளிர நீ திருமணம் செய்து கொண்டால் என்ன குடிமுழுகிவிடும் தம்பி ?” 

“அண்ணீ! போயும் போயும் டெய்லர் ஏகாம்பரத்தின் பெண்ணையா ? பரம ஏழை அவன்! அந்த ஐதர் காலத்துத் தையல் மிஷின் தான் அவனுக்குச் சொத்து!” 

“ஆனால் – தையல் மிகவும் அழகப்பா!” 

“அந்தத் தையலை நீதான் புகழவேண்டும்.. சட்டை தைக்கக் கொடுத்தால், பையை முதுகில் வைப்பான்; கையைக் கழுத்தில் வைப்பான்!” 

“நான் சொல்வது அவன் தையலையல்ல தம்பி! அவன் பெற்ற தையல் இருக்கிறாளே மரகதம் – அவளைச் சொல்கிறேன். அவள்கூட எவ்வளவு அழகாகச் சோளி ரவிக்கை யெல்லாம் தைக்கிறாள் தெரியுமா ? இப்போது எனக்கு வேண்டியதை யெல்லாம் அவள்தான் தைத்துத் தருகிறாள். தம்பீ! மரகதம்- ரொம்ப நல்ல பெண். உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள அவளுக்குக் கொள்ளை ஆசை. உன் பேச்சை எடுத்தாலே நாணிக்கோணி புன்னகை புரிவாள். அடேடே, உனக்குக்கூட வெட்கம் வந்துவிட்டதே! சரி… சரி…. உனக்கும் ஆசையிருக்கிறது அண்ணனிடம் சொல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு இத்தனை நாளும் மறுத்திருக்கிறாய். தம்பீ! சேகர்! சொல்லு! திருமண ஏற்பாட்டையெல்லாம் கவனிக்கும்படி உன் அண்ணனிடம் சொல்லி விடட்டுமா?” 

“சரியண்ணி; எல்லாம் உங்கள் இஷ்டம்!” 

டெய்லர் ஏகாம்பரத்தின் பெண்ணுக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்று உற்றார் உறவினர் பேசிக்கொண்டார்கள். யார் கட்டப் போகிறார்கள் இந்த ஏழை வீட்டு எழிலரசியை என்று வாய்ப்புக் கிட்டாதவர்கள் எல்லாம் வாய் பிளந்து கிடந்தார்கள். இப்போது அவர்கள் வாய்மூடிற்று. 

சேகரும் மரகதமும் வாழ்க்கைச் சகடத்தைச் சேர்ந்து உருட்டத் தலைப்பட்டார்கள். மரகதத்தின் அன்பும் பண்பும் குடும்பப் பொறுப்பை உணர்ந்து அவள் நடந்து கொண்ட தன்மையும் சேகரின் மனதில் இன்பத்தைப் பொழிந்த வண்ணமிருந்தன, மரகதம் வீட்டுக்கு வந்த பிறகுதான் அதுவரையில் வீட்டில், குடும்பத்தில் ஏதோ ஒரு பெரிய குறை இருந்தது அவனுக்குப் புரியத் தொடங்கியது. அண்ணனும் அண்ணியும் மனநிறைவோடுதான் வாழ்ந்து வருகிறார்கள் என்று அவன் எண்ணியிருந்தான். மரகதம் வந்த பிறகுதான் குடும்ப வாழ்க்கை எப்படியிருக்க வேண்டுமென்ற இலக்கணத்தை அவன் அறிந்து கொண்டான். தன்னுடைய வாழ்க்கைக்கும் அண்ணனுடைய வாழ்க்கைக்கும் இருக்கிற பெருத்த வேறுபாட்டை அவனால் உணர முடிந்தது. அதற்காக அவன் அண்ணன் மீது ஆழ்ந்த அனுதாபங் கொண்டான். 

வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்புகிற சந்திரன் களைத்துப்போய் சாப்பாட்டு மேசையருகே உட்காருவான். “எனக்கு ஒரே அலுப்பாயிருக்கிறது! மரகதம்! சாப்பாட்டைக் கொஞ்சம் எடுத்து வைத்து விட்டுப் போ! அவர் போட்டுக் கொள்வார்!” என்று சௌந்தரி கூறுவாள். 

அதைக் கேட்டுச் சந்திரன், எந்த முகமாற்றமும் அடைவதில்லை. மரகதம், சந்திரனுக்கு நேராக அதிகமாகப் போகமாட்டாள். சாப்பாட்டை எடுத்துப் போய் மேசையில் வைத்துவிட்டு வந்து விடுவாள். சந்திரன், தானே பரிமாறிக் கொண்டு, பசியாறுவான். 

மரகதம் வந்தபிறகு, வீட்டு வேலைக்காரிக்கும் சமையற்காரிக்கும் சம்பளம் கணக்கு தீர்க்கப்பட்டு அவர்கள் அனுப்பப்பட்டார்கள். எல்லா வேலைகளுமே மரகதத்தின் தலையில் விழுந்தது. சௌந்தரியின் நோக்கம், மரகதத்திற்குத் தெளிவாகப் புரிந்து விட்டது. தன்னை, சேகருக்குத் திருமணம் செய்துவைக்க சௌந்தரி தலைகீழ் நின்றதற்குக் காரணமே, வீட்டுக்கு ஒரு நல்ல வேலைக்காரியும் சமையற்காரியும் சம்பளமில்லாமல் கிடைப்பாள் என்பதற்காகத் தான் என்பதை மரகதம் உணர்ந்து கொண்டாள். அந்த மன உளைச்சலை அவள் தன் கணவனிடம் வெளியிடவில்லை. குடும்பத்தில் தன்னால் குமுறல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவள் கொதிப்பை அடக்கிக்கொண்டு கூனிக் கிடந்தாள். சௌந்தரியோ அந்த வீட்டு மகாராணிபோல ஆர்ப்பாட்டங்கள் நடத்திவந்தாள். மரகதம் படும் கஷ்டங்களைக் கண்ட சந்திரன், சௌந்தரியிடம் ஒரு நாள் மனம் விட்டுப் பேசிவிட்டான். 

“என்ன இருந்தாலும் அவளும் இந்த வீட்டு மருமகள் தானே! அவளை இப்படிக் கஷ்டப் படுத்தலாமா?” என்று சௌந்தரியிடம் மெதுவாகக் கேட்டான், அடக்க உணர்ச்சியுடன்! 

“எனக்கு வேலை செய்வதற்காகத்தான் ஒரு ஏழை வீட்டுப் பெண்ணை உங்கள் தம்பிக்குக் கட்டிவைக்க நான் முயற்சி செய்தேன். இல்லாவிட்டால், எனக்கிருக்கிற உடம்புக்கு இந்த வீட்டில் வேலை செய்தால் சீக்கிரம் சாக வேண்டியதுதான்!” – என்று கண்ணீர் வடித்தாள் சௌந்தரி. 

“அழாதே! கர்ப்ப ஸ்திரீ இப்படிக் கண் கலங்கக் கூடாது! மரகதமும் கர்ப்பமாயிருக்கிறாளே, அளவுக்கு மீறி ஓய்வின்றி வேலைகளைச் செய்து கஷ்டப்படுவாளே யென்று தான் சொன்னேன்.” 

“அய்யோ பாவம்! தம்பி மனைவிமீது எவ்வளவு அக்கரை! அந்த அக்கரையில் பாதி என்னிடம் காட்டக் கூடாதா?” 

என்று முகத்தை நீட்டிக் கொண்டு சௌந்தரி எழுந்து போய் படுக்கையில் படுத்துக் கொண்டாள். 

பிறகு சந்திரன் சமாதானப் படலத்தை ஆரம்பிக்க முதலில் சரணாகதிப் படலத்தில் வீழ்ந்தான். 


மரகதமும், சௌந்தரியும் ஒருவார இடைவெளியில் அழகான பெண் குழந்தைகளுக்குத் தாய்களாயினர். தான் பெற்ற செல்வத்தின் அருகே படுத்திருந்த செளந்தரியின் கண்கள் எதிரில் உள்ள சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அவளது திருமணப்படத்தின் மீது பாய்ந்தன. பாய்ந்த கண்கள் அந்தப் படத்தின் மீதே நிலைத்து நின்றுவிட்டன. சந்திரனுக்கு அருகே கட்டுக் குலையாமல் கனிமரமென நிற்கும் தன் அழகைக் கண்டு சௌந்தரி பெருமை கொண்டாள். பொன்னாற் செய்த சிலைபோல் நிற்கின்ற தோற்றமும் எடுப்பான உடற்கட்டும் – எழில் சிந்தும் முகமும் – அவளுக்கு திடீரென ஏதோ ஒரு பீதியை ஏற்படுத்திவிட்டன என்பது அவள் முகத்தில் பளிச்சிட்ட விகாரத்திலிருந்து தெரிந்தது. உள்ளத்தில் புயல் ஆரம்பமாகிவிட்டது. 

‘சௌந்தரி ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்டாள். வயிற்றுக்குள்ளேயிருந்தபோதே அந்தக் குழந்தை அளித்த வேதனையால் ஏற்கனவே அவளது உடல் இளைத்துப் போய்விட்டது. இனி இந்தக் குழந்தை, பால் என்ற பெயரால் அவள் ரத்தத்தையெல்லாம் வேறு உறிஞ்சி, அவளது உடற்கட்டையும் குலைத்துவிடும்.” 

இப்படி ஒரு அச்சம் ஊட்டும் அவலக் குரல் ஓநாயின் தொனியை வெல்லும் விதத்தில் அவள் நெஞ்சத்தின் ஒரு மூலையில் எழுந்து ரத்த அணுக்களில் எல்லாம் எதிரொலித்து அவளை நடுக்கம் கொள்ளச் செய்தது. 

எழுந்து நின்று நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள். அறையில் மாட்டப்பட்டிருந்த ஹாலிவுட் சினிமா நடிகைகளின் அரை ஆடைப் படங்களை, வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். முழங்கால் அளவுத் தண்ணீரில் நின்று கொண்டு முரளீதரனிடம் தாங்கள் இழந்த ஆடைகளைத் திரும்பக் கேட்கும் கோபிகளின் படங்களைப் பொறாமையுடன் நோக்கினாள். மீண்டும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாள். “குழந்தைக்கு பால்கொடுக்க ஆரம்பித்தால் எழிற்கட்டுக் குலைந்துவிடும் – இளமை அழிந்துவிடும்!” என்று அவள் நெஞ்சம் மீண்டும் புலம்பி விம்மியழுதது. 

விழிகள் வேறு திசையில் திரும்பின. ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில் நுழைந்த பார்வை தூரத்தில் மாட்டுத் தொழுவத்தில் தாய்ப் பசுவிடம் பால் குடிக்கும் கன்றின் மீது விழுந்தது. கன்றின் முதுகில் தாய்ப்பசு, தனது நாக்கினால் நக்கிக் கொண்டிருக்கிற காட்சியையும் அவள் கண்கள் கண்டன; தோட்டத்துச் சுவரின் பக்கம் ‘கிரீச்’ என்ற ஒரு ஒலி! அங்கே பார்த்தாள். குரங்கு, தன் குட்டியைத் தூக்கிக்கொண்டு மதில் மேலிருந்து மரத்திற்குத் தாவியது. கூடத்து மூலையில் “உச் உச்!” என்ற சப்தம் கேட்டது. பார்த்தாள். அவர்கள் வீட்டு நாய், தன்னுடைய ஐந்து குட்டிகளிடமும் தன் பால் சுரப்புப் பையை ஒப்படைத்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. மேலே “மியா மியாவ்” என்று ஒலி காதைப் பிளந்தது. பார்த்தாள். குட்டிகள் புடைசூழ வீட்டுப் பூனை பரண்மீது தன் படுக்கையை அமைத்துக் கொண்டு தன் குழந்தைகளின் சங்கீதத்தில் மெய் மறந்து கிடந்தது. அந்தப் பூனை அந்த வீட்டுக்கு வந்து இப்போது மூன்றாவது தடவையாக அரை டசன் குட்டிகளைப் போட்டுப் பால் கொடுக்கும் வேலையைக் கவனித்து வருகிறது என்பதும் அவளுக்குத் தெரியும். 

போர்க்களத்துக் கூச்சலில் எங்கேயோ ஒரு வீணையின் நரம்பு லேசாக அதிர்ந்த ஒலி கேட்பதுபோல அவளது இருதயத்துப் பேய்க் கூச்சலினிடையே ஒரு மெல்லிய குரல் அதிர்ந்தது: 

“நாயும் பூனையும் மாடும் குரங்கும்கூட தங்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கின்றனவே அவைகளுக்குள்ள தாய்மை உணர்ச்சிகூட உனக்குக் கிடையாதா?” 

அந்த ஈன சுரத்தை உடனே அடக்கிவிட்டு வெறிச் சத்தம் காதைச் செவிடுபடுத்தும் வகையில் முழங்கியது. 

“நாயும் பூனையும் மாடும் குரங்கும் தன் பிள்ளைகளுக்குப் பால் கொடுக்கின்றன. ஆனால் அவைகளின் அழகு குலைவதைப் பற்றியோ – இளமை குன்றுவதைப் பற்றியோ அவைகளுக்குக் கவலை கிடையாதே! அவைகள் கடற்கரையில் போய் நாலு பேரோடு உலவப்போகின்றனவா? சினிமாவுக்கு நாள் தவறாமல் செல்ல வேண்டியவைகளா? நண்பர்களுடன் ‘பிக்னிக்’ போகவேண்டிய சங்கடந்தான் அவைகளுக்கு உண்டா? எடுப்பும் சிறப்பும் பொருந்த அஜந்தா ஓவியங்களைப் போலவும், மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் போலவும் ஆடையை நெகிழ விட்டுக் கொண்டு வாலிபப் பருவத்தின் வனப்பையெல்லாம் வாரியிறைத்த வண்ணம் விருந்துகளில் கேளிக்கைகளில் வந்து அமரும் பெரிய மனிதர் வீட்டுப் பெண்களுக்கு நடுவே எள் முனையளவு இளமையையும் இழந்து விடாமல் காட்சியளிப்பதுதான் இந்தக் காலத்துப் பெண்களுக்குக் கௌரவம். அதை விட்டு, ‘தாய்மை’ என்ற ஓர் அர்த்தமற்ற வார்த்தையைக் காப்பாற்றுவதற்காக நாலு பேர் மத்தியில் தலைகுனிந்து உட்கார்ந்திருக்க வேண்டுமோ ? உன் எழிலைப்பார்! இளமையைக் காப்பாற்று! மாம்பழ மேனிபடைத்தவளே! மண்ணாக்கிவிடாதே பருவத்தின் பூரிப்பை!” 

இறுதியில் இளமைக்கு வக்கீல் வேலை பார்த்த பேய்க்குரல்தான் வெற்றி பெற்றது. தாய்க்குரல் தந்தியறுந்த யாழ்போல் ஆயிற்று. 

அதன் விளைவு, மரகதம் – தன் மகளுக்கு மட்டுமல்லாமல் சௌந்தரியின் செல்விக்கும் பால் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். இரண்டு குழந்தைகளுக்கும் அவளே தாயாக விளங்கினாள்! 

“ஏழைப் பெண் மரகதத்தை சேகருக்கு மனைவியாக்கியது எவ்வளவு நல்லதாயிற்று பார்த்தீர்களா?” – என்று பரவசத்துடன் சந்திரனைத் தழுவினாள் சௌந்தரி. 

அந்த அணைப்பில் அவன் கண்ட சுகத்தில் “நீ புத்திசாலியடி என் தங்கமே!” என்று உளறினான் சந்திரன். 

மழலை பருகிட வேண்டிய தாய்ப்பாலை, மருந்து பருகியது. பருவத்தின் பொலிவு குலையாத சௌந்தரி, தன்னைக் கண்ணாடியில் ஏற இறங்கப் பார்த்துக் கொண்டு பெருமிதத்துடன் நாலு பேர் மத்தியில் நடந்தாள். கணவனுடன் கடற்கரைக்குச் சென்றாள். 

மரகதம் படும் கஷ்டத்தை இனியும் சகித்துக் கொள்ளச் சேகர் தயாராக இல்லை. மரகதத்தைத் திருமணம் செய்து கொள்ள அவன் முதலில் விரும்பவில்லை என்பது உண்மைதான். அவள் அழகில்லாதவள் அல்ல. குடும்பத்திற்குத் தகுதியற்ற பெண்ணல்ல. ஆனால் ஏழை. அதனால் அவன் தபங்கினான். ஏழைப்பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது கூடாது என்ற கொள்கை உடையவனல்ல அவன். தன்னுடைய வீட்டுச் சூழ்நிலைக்கு ஒரு பெரிய வீட்டுப பெண் வந்தால்தான் அவள் மற்றவர்களுக்குச் சமமாக வாழ முடியும். ஏழையாயிருந்தால் அடிமையாக வேண்டியதுதான் என்ற காரணத்தினாலேதான் மரகதம் தன்னை விரும்புகிறாள் என்று சௌந்தரி கூறிய பிறகு அவனையறியாமல் அவள்மீது ஒரு பிரியம் ஏற்பட்டு விட்டது. அது கல்யாணத்தில் வந்து முடிந்து இருவரும் ஒரு குழந்தைக்குப் பெற்றோராகவும் ஆகிவிட்டனர். 

அவன் எதிர்பார்த்தபடி மரகதம் அந்த வீட்டில் சர்வ சாதாரணமாக நடத்தப்பட்டாள். அண்ணனிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கும் மதிப்புக்கும் ஊறு தேடக் கூடாதே என்பதற்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்து வந்தான். அந்தப் பொறுமை அணையையும் உடைத்துக் கொண்டு ஒரு நாள் குமுறியெழுந்து விட்டான். 

முதல் நாள் இரவு சந்திரனின் குழந்தைக்கு லேசாகக் காய்ச்சல்; சேகர் குழந்தைக்கு வயிற்று நோய். 

இரண்டும் மாறி மாறி இரவெல்லாம் அழுது தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்தன. மரகதம் கண்ணை மூடவில்லை. இரண்டு தொட்டில்களையும் ஆட்டுவதும் ‘ஆராரோ’ பாடுவதும் – பிணிக்கு மருந்து தருவதும் – தூக்கி வைத்துக் கொண்டு உலாவுவதும்தான் அவளுக்கு இரவு முழுதும் வேலை. 

குழந்தைகள் போட்ட கூச்சலைக் காதிலே வாங்கிக்கொள்ளாமல் சந்திரனும், சௌந்தரியும் தங்கள் படுக்கையறையிலேயே வெகு நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். 

அந்தக் கொடுமையைச் சேகரால் சகிக்க முடியவில்லை. தன் மனைவி கஷ்டப்படுவதை நினைத்து அழுவதா? அல்லது பெற்ற குழந்தையைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிற வன்னெஞ்சர்களை நினைத்து அழுவதா?- 

பொழுது விடிந்தது. குழந்தைகளோடு கஷ்டப்பட்ட மரகதம், விடிந்த பிறகு சற்று அயர்ந்து தூங்கிவிட்டாள். அதனால் சௌந்தரிக்கு ‘பெட் காபி’ கிடைக்கவில்லை. ஆத்திரங்கொண்ட சௌந்தரி, மரகதத்தை மிகச் சூடான வார்த்தைகளில் போட்டு வறுத்து எடுத்தாள். 

மரகதம் எதுவும் பதில் பேசாமல் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கவலை யெல்லாம் அந்தக் குடும்பத்தில் தன்னால் எந்தக் கலகமும் வந்துவிடக் கூடாது என்பதுதான்! சௌந்தரியின் ஏசற்கணைகளுக்கு எதிர் நிற்க முடியாமல் திக்குத் தெரியாமல் திண்டாடும் மான்போல் மிரளமிரள விழிக்கும் மரகதத்தைக் கண்டு துடித்துவிட்ட சேகர் அண்ணியின் மீது எரிதழலென வார்த்தைகளை அள்ளி வீசினான். 

” மரகதம், எனக்கு மனைவி, உங்களுக்கு வேலைக்காரி அல்ல. உங்கள் குழந்தையை வளர்க்கும் பால்காரி அல்ல!” என்று உறுமினான். 

“சரிதான் நிறுத்து! பெரிய ராஜகுமாரியைப் போய் கல்யாணம் செய்து விட்டாயாக்கும்!” என்று சௌந்தரி செய்த கிண்டலுக்குச் சபாஷ் கூறி சந்திரன் அங்கே வந்து விட்டான். சௌந்தரியின், சேதமடையாமல் கட்டிக் காக்கப்படும் யௌவனத்தின் நீங்காத அடிமையல்லவோ அவன்! ஆகவே அவள் பக்கம் நின்று தான் நியாயம் பேசினான். 

அண்ணன் தம்பிகளுக்கிடையே வார்த்தைகள் முற்றிப் போய், கை கலப்புவரையில் சென்று, இருவரும் துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு மரண 

மரண முகப்புவரையில் நடப்பதற்குத் துவங்கிவிட்டனர். யார் வெடிக்கிற தோட்டா, முதலில் யார் மார்பில் பாயப் போகிறது என்ற பயங்கரமான நிலைமை உருவாகிவிட்டது. 

அந்தச் சமயத்தில் குறுக்கே விழுந்து அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றும் தோல்வி கண்ட மரகதம், அறையில் போய் நிம்மதியாகப் படுத்துக் கொண்டிருந்த சௌந்தரியிடம் ஓடி “எப்படியாவது இருவரையும் சமாதானப்படுத்துவோம் வா!” என்று அலறினாள். 

செளந்தரி, மரகதத்தின் தலைமயிரைப் பிடித்து இழுத்து அவள் கன்னத்திலே அறைந்து ஓவென்று கத்த ஆரம்பித்தாள். 

“சின்ன புத்திக்கார நாயே! ஏழை வீட்டு எச்சில் இலையே! நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தது என் குற்றம்!” 

இப்படிப் படபட வென்று ஆவேசம் கொண்டு கத்திக் கொண்டிருந்த சௌந்தரி, திடீரென்று இருமத் தொடங்கினாள். இருமல் நிற்கவில்லை. இருமி முடிந்ததும் மயக்கம் வந்து விட்டது. செளந்தரி கீழே விழுந்து விட்டாள். 

மரகதம் பயந்துபோய் “அய்யோ! ஓடி வாருங்கள்!” என்று கூச்சலிட்டாள். குறிபார்த்த துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த அண்ணனும் தம்பியும் பரபரப்புடன் ஓடிவந்தார்கள். சண்டையை மறந்து விட்டு சேகர், டாக்டர் வீட்டுக்குப் பறந்து சென்றான். 

டாக்டர், நீண்ட நேரம் பரிசோதித்துவிட்டு “ இது டி.பி. எலும்புருக்கி நோய்! ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று மருந்து எழுதிக் கொடுத்து விட்டுப் போய்விட்டார். 

சௌந்தரி, விழித்துக் கொண்டுதான் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். எதிரேயுள்ள நிலைக் கண்ணாடியில் ஒரு எலும்பு உருவம் நிற்பதுபோல் தெரிந்தது. அவளுடைய பருவப் பூரிப்புக்கு ஒளியூட்டிக் காட்டிய அதே நிலைக் கண்ணாடியில்தான் அவள் அந்த உருவத்தைக் கண்டாள். கைகால்கள் பிரம்புக் குச்சிகள் போல் இருந்தன. கன்னங்களில் உள்ள குழியில் இரண்டு எலுமிச்சம் பழங்களைத் தாராளமாக வைக்கலாம். கண்கள் இருந்த இடம் என்று அடையாளம் காட்ட இருபள்ளங்கள். வெளுப்பேறித்தும்பை மலர் போன்று காட்சி யளிக்கும் உதடுகள். அழுகிய பழத்தைக் கம்பிலே கோர்த்து வைத்தது போலத் தலையும் கழுத்தும்! அது யாருடைய உருவம் ? எங்கே இளமைப் பருவம் ? சௌந்தரி, கேள்வி கேட்டு முழங்கினாள். அந்த உருவத்தின் முகம், சௌந்தரியைப் போலவே தோற்றமளித்தது. 

“அய்யோ! நானேதான்! அந்த எலும்புக் கூடு நானே தான்! க்ஷயரோகம் எனக்குத் தந்த பரிசு இந்த உருவம்தான்! அய்யோ, என் அழகு எங்கே ? இளமை எங்கே? கட்டுக் குலையாத மேனி எங்கே ? எல்லாம் பாழ்தானா ? பாழ்தானா?” 

எனத் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதாள் சௌந்தரி. அந்த அழுகை கடைசி வரையில் நிற்கவேயில்லை. 


அதற்குப் பிறகு மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. எலும்புருக்கி நோய் மருத்துவ மனையில் படுக்கையோடு படுக்கையாகத் தேய்ந்த சந்தனக் கட்டைபோல் கிடக்கிறாள், சௌந்தரி! 

அவள் வளர்த்த அழகை – காப்பாற்றிய இளமையை கண்களுக்குத் தெரியாத கிருமிகள் சிறுகச் சிறுக அரித்துத் தின்று கொண்டிருந்தன. அவள் கண்கள் நீரைப்பொழிந்து கொண்டிருந்தன. தான் பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்க மனம் வரவில்லை அவளுக்கு! கிருமிகளுக்குத் தன் உயிரையே கொடுக்கத் தயாராகிவிட்டாள். 

இப்போது அவள் இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் ஆசையெல்லாம் தன் குழந்தையை ஒரு முறை பார்க்க வேண்டும் என்பதுதான்! குழந்தை, தன்னை “அம்மா!” என்று ஒரு முறை அழைக்கவேண்டும் என்பதுதான். 

அதோ, சந்திரன் – சேகர் – மரகதம் – குழந்தைகள் ஐவரும் வந்துவிட்டார்கள். 

தன் குழந்தையை அருகே அழைக்கிறாள். அது வர மறுக்கிறது. கைகளை மெதுவாகத் தூக்கிக் குழந்தையின் தோளில் போட்டுத் தழுவ முயலுகிறாள். குழந்தை, அவள் கைகளை உதறித் தள்ளிவிட்டு “அம்மா!” என அழுதபடி மரகதத்திடம் ஓடுகிறது. 

சௌந்தரியின் கண்கள் குளமாகின்றன. “என்ன, மரகதமா உனக்கு அம்மா ? நான்தானே உன்னைப் பெற்றேன்!” என்று விக்கிவிக்கி அழுதாள் சௌந்தரி. 

அதற்கு அந்தக் குழந்தை பதில் கூறவில்லை. அவளைக் கோபமாகப் பார்த்தது. அந்தப் பார்வைக்கான அர்த்தத்தை இதோ, என் தாயார் சொல்கிறார்கள். 

“பெற்று விடுவதால் ஒருத்தி தாயாகிவிட முடியாது! பிள்ளையை வயிற்றில் சுமந்தேன் என்பதும், பெற்றேன் என்பதும் வலியச் சென்று செய்யும் காரியம் அல்ல! 

வயிற்றில் கரு, உருவான பிறகு பத்துமாதம் சுமந்துதான் தீரவேண்டும். சுமந்த பிறகு பெற்றுத்தான் தீர வேண்டும். சுமப்பதும் பெறுவதுமாகிய இரண்டு வேலைகளைச் செய்துவிடுவதாலேயே தாய்க்குரிய அந்தஸ்து யாருக்கும் வந்துவிடாது. பிரியமுடன் பேணிவளர்த்து – கண் திறந்து ஆளாக்கிவிட்டு – எறும்பு கடித்தாலும் சகிக்க முடியாமல் பாசங்கொண்டு ஒட்டிவாழ்கிறாளே; பாதுகாக்கிறாளே; அவள்தான் தாய்! உண்மையான தாய்! சுமந்து பெற்றவள். தன் பிள்ளைக்காகத் தன்னைத் தியாகம் செய்தால், அவளுக்குப் பெயர் பெற்ற தாய்! பெறாதவள் பிள்ளைபோல் வளர்த்தால் அவள் பெயர் 

பெயர் தான் பெற்றவள். பிள்ளையைப் பேணி வளர்க்காவிடில் அவள் தாயல்ல; “சுமந்தவள்” அவ்வளவுதான்!

– 16 கதையினிலே, முதற் பதிப்பு: டிசம்பர் 1995, திருமகள் நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *