கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 23, 2024
பார்வையிட்டோர்: 3,562 
 
 

அந்த மாமரத்தில் பூக்கள் பூத்த கிளைகளை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தாள். எண்ணச்சொல்லிச் சென்றவன் அவள் கணவன். காலையில் அவன் வெளியே புறப்படும்போது, அவள் தனிமையில் ஏதாவது சிந்தித்துத் தன்னை வருத்திக் கொள்ளக்கூடும் என்று அப்படியொரு பொழுதுபோக்கை அவளுக்குச் சொல்லிச் சென்றான். ஏன் அவள் சிந்தித்து வருந்தவேண்டும்? கடந்த இரண்டு நாட்களாக அவள் எதிர்பார்த்த வீடு அமையவில்லை அவனும் அவளுக்காக எங்கெங்கோ அலைகிறான் ஆனால் கிடைக்கவில்லை. இன்றாவது கிடைத்துவிட்டது என்ற நல்ல செய்தியைக் கொண்டுவருவான் கணவன் என்ற எதிர்பார்ப்போடு இதோ மாம்பூக் கிளைகளை எண்ணிக் கொண்டிருக்கிறாள். வீடு என்பது வெறும் கனவு மட்டுமல்ல அதையும் தாண்டி அவசியம் ஆனது. ஒரு வீட்டில்தான் குடும்பம் நிறைவடைகிறது, தலைமுறை தழைக்கிறது, மழலைகளின் எதிர்காலம் உருவாக்கப்படுகிறது, வீடு இல்லையென்றால் குடும்பம் எது?

இந்தப் பிரபஞ்சம் இயற்கை. இங்கே ஓரறிவு உயிர்கள் தொடங்கி, உயரெண்ணிக்கை அறிவுயிர்கள்வரை எல்லோரும் எதிர்பார்ப்பது அதிகபட்சம் மகிழ்ச்சி என்ற ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். பிற அனைத்தும் “மகிழ்ச்சி” என்ற அந்த ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்துகொள்கிறது. அவளும் மகிழ்ச்சியை எதிர்பார்க்கும் உயிர்களுள் ஒருத்தியாய் இந்த இயற்கையில் இணைந்திருப்பவள். வீடு தேடும் படலம் மட்டும் இல்லாதிருந்திருந்தால் அவள் இந்நேரம் அதிக மகிழ்ச்சியில் இருந்திருப்பாள் பூக்கள் பூத்துக்குலுங்கும் அந்த மாமரத்தைப்போல. ஒவ்வொருநாளும் வீடு தேடிவிட்டு வரும் கணவனிடம் அவள் எதிர்பார்ப்பது ஒற்றை பதில்தான், அது “கிடைத்துவிட்டது” என்பது, ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்வது எத்தனை கொடுமையானது என்று அவள் இப்போது உணர்கிறாள். தன்னால் இயலவில்லை என்பது அவளுக்கு ஒரு குறையாக இருப்பினும் அந்தக்குறைக்கு இயற்கையும் பொறுப்பு என்று அவள் நம்பினாள். ஏற்கனவே பார்த்துவைத்த வீட்டை அன்று வந்த கடும்புயல் கொண்டு போகுமென்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. அந்தப் புயலில்தான் எத்தனை எத்தனை சேதம்.. அப்பப்பா நினைத்துப் பார்க்கையில் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு, ஆடுகள், மாடுகள் என்று எத்தனை உயிரினங்கள்…? எத்தனை மரங்கள்…? மனிதர்களின் சராசரி வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது. நினைவுகளின் ஊடே பூக்கிளைகளை எண்ணுவதிலும் அவள் கவனமாக இருந்தாள்.

இன்று தன் தொழில் செவ்வனே நிறைவேறியதென்று தன் கதிர்களைச் சுருக்கிக்கொண்டு ஆதவன் புறப்பட்ட காரணத்தால் மேற்கு வானம் சிவப்புடுத்தியிருந்தது. சூரியகாந்திகள் மேற்கில் தன் தலைவனுக்கு விடை கொடுத்துவிட்டுத் தலைவனைப் பிரிந்த சோகத்தில் நின்றன. அலரப் போகும் ஆனந்தத்தில் அரும்பாக அல்லிகள் செழித்து நிமிர்ந்து நின்றன, ஆனால் அவளோ தன் கணவன் இன்னும் திரும்பவில்லையே என்ற கவலை, தன் சிவந்த கண்களில் பளபளக்க, இங்குமங்குமாகத் தலையைத் திருப்பி அவன் வரும் திசைகளை ஆவலோடும், சற்றே படபடப்போடும், கோடிக் கனவுகளோடும் நோக்கினாள். பொதுவாக வெளிச்சம் இருக்கும் வேளையிலேயே திரும்புபவன் இன்று இருட்டப் போகும் நேரம் ஆகியும் ஏன் இன்னும் திரும்பவில்லை? என்ற கேள்விக்கொக்கி மனதைத் துளைத்துக்கொண்டிருக்க, அங்கே யாரோ வருவது போல் தெரிகிறதே அது வெறும் தோற்றப்பிழையாக இருந்துவிடாமல் தன் கணவனாக இருக்கவேண்டுமென்று கூர்ந்து கவனித்தாள்… ஏமாற்றமே மிஞ்சியது. பார்த்துப் பார்த்து சோர்வடைந்த கண்கள் சிறிது ஓய்வு கேட்கும் நேரம் அவளுக்குப் பின்புறமாக வந்து நின்று அவளை ஆச்சர்யப்பட வைத்தான் கணவன். அவன் வரவால் அமைதி கொண்டவள், நிம்மதிப் பெருமூச்சாக நாசி விடைக்கக் காற்றை உள்ளிழுத்தாள் பின் வெளியேற்றி நாசியை இயல்பு நிலைக்குத் திருப்பினாள். “இனிமே லேட்டா வந்தா அர்ச்சனா சுவீட்டோடதான் வரணும்” என்று கணவனுக்குக் கட்டளையிடுபவளாக அவள் இல்லை. “கிடைச்சுதா?” என்பதுதான் அவளின் முதல் வார்த்தையும், ஒரே வார்த்தையும், கேள்வியுமாக இருந்தது. அவன் எந்த ஆரவாரமும் கொள்ளாமல் இல்லை எனும் தோரணையில் தலையை இடம் வலமாகத் திருப்பினான். கணவன் திரும்பவில்லையே என்றிருந்த கவலை நிலைகடந்துபோக இப்பொழுது கணவனைக் காண்கையில் அவளுக்குக் கோபமே மிஞ்சியது, “இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் நமக்காக ஒரு வீடு இல்லையா?”, பதில் தரவேண்டிய கட்டாயம் அவனை இப்பொழுது பேச வைத்தது, “கோபப்படாம நான் சொல்றதக் கொஞ்சம் அமைதியா கேட்பியா?”

“நீ சொல்றதுக்காக நான் பொறுக்க முடியாது… இன்னும் ஒரு நாள்தான் அதுக்குமேல என் கையில எதுவும் இல்ல…”

“இது நல்லா இருக்கே, நானா புயலை வரச்சொன்னேன்? நானா பார்த்து வச்ச வீட்டை துவம்சம் பண்ணிட்டுப் போகச் சொன்னேன்? எதெதுக்குத்தான் நான் பொறுப்பேத்துக்கறது?”, என்று சலித்துக்கொண்டான்.

“பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, என் நிலைல இருந்துபார் உனக்குப் புரியும். என்ன செய்யுறது? இயற்கை ஆணை ஒரு மாதிரியும் பெண்ணை வேறமாதிரியுமில்ல படைச்சிருக்கு”. என்று தன்னை நொந்துகொண்டவளின் அருகில் சென்று ஆறுதல் வார்த்தைகள் மொழிந்தான்.

“இப்படி சொன்னா எப்படி… இந்தா மொதல்ல இதைச் சாப்பிடு.. நீ பசியோட இருப்ப”, என்று அவளின் பசியாற்ற முனைந்தவன் மீது கோபப்பார்வை ஒன்றைச் செலுத்திவிட்டுத் தன் தலையைத் திருப்பிக்கொண்டாள்.

“எப்பவும் சீக்கிரம் வர்ற நான் இன்னிக்கு மட்டும் ஏன் இவ்வளவு தாமதமா வந்தேன்னு நீ கேட்கவே இல்லையே…”

“அதான் வந்துட்டியே… இப்ப நான் கேட்கிறதால ஏதாவது மாறிடப் போகுதா? போ போ… உன் தேவைக்கு நீ எங்க ஊர் சுத்தப் போனியோ? நீ உண்மையாவே வீடு தேடுனியான்னு எனக்கு சந்தேகமா இருக்கு…”

“பாத்தியா… என்மேலையே உனக்கு சந்தேகமா.. சரி கேளு.. ஒரு வீடு பார்த்தேன் அது இங்க பக்கத்துல இல்ல, சூரியகாந்தித் தோட்டத்துக்கு அந்தப்பக்கம் கொஞ்ச தூரம் போகணும், அதுனாலதான் இவ்வளவு நேரமாச்சு, வீடும் நாம தேடுற மாதிரியான வீடுதான் ஆனாப்பாரு அந்த வீட்டுல நாம எதிர்பார்க்கிற மாதிரி சூழ்நிலை இல்ல… “

இவர்களின் இந்த சலசலப்பைப் புரிந்துகொள்ள மனமில்லாமல் அல்லிகள் மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன. பாதிச் சந்திரன் தடாகத்தில் மிதந்துகொண்டிருந்தது, பனியுடுத்திப் புற்கள் நிமிர்ந்து நின்றது, பாலொளி எங்கும் பரவி இருட்டுக்கு நிலவு நிறம் பூசிக்கொண்டிருந்தது, அவள் மலர்ந்திருக்கும் அல்லிகளை நோக்கினாள், அந்த அல்லியின் அருகில் அடுத்தநாள் மலரக் காத்திருக்கும் ஒரு புது மொட்டின் மீது தனது பார்வையைப் பதியவைத்து விழித்துக்கொண்டிருந்தாள். அவளை அமைதிப் படுத்தும் முயற்சி

முயற்சியாகவே நிற்க அன்று முழுதும் அலைந்த காரணத்தால் அவன் உறங்கிப் போனான். உறங்கிக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்து அவள் தனக்குள்ளேயே பேசிக்கொண்டாள், “எனது கோபம் நியாயமானதுதானே?, நீயும் எனக்காக அலைகிறாய், எனக்கது புரிகிறது, ஆனால் காலத்திடம் அந்தப் புரிதல் இல்லை. எனக்குத் தெரியும் நீ என்மீது கோபம் கொள்ள மாட்டாய், எனது வார்த்தைகளில் வேகம் இருந்தாலும் என் மனதில் உன்னைப் பற்றிய புரிதல் உண்டு என்பது உனக்கும் புரியும்.” விடியும் பொழுது தங்கள் தேவைக்கு ஒரு வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவள் உறங்க முன்வந்தாள்.

பின் தூங்கி முன்னெழுந்தவளின் குரல்கேட்டு விழித்துக்கொண்டான், தானே முன்வந்து அவள் பேசியதிலிருந்து அவளின் கோபம் நேற்றே விடைபெற்றுவிட்டதைப் புரிந்துகொண்டு, “நம்பிக்கையோட இரு இன்னைக்கு கண்டிப்பா வீட்டைக் கண்டுபிடிச்சுட்டு மதியத்துக்குள்ள வறேன்” என்று அவளுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு உற்சாகமாய்ப் புறப்பட்டான்.

நேற்று தென்திசைப் பாதையில் சென்று வந்ததால் இன்று வேறு திசை நாடுவோம் என்று தோன்றவே கிழக்கைத் தேர்வு செய்தான். கீழைத்திசையில் சிறிது தூரம் சென்றான் மனித நடமாட்டம் அதிகம் இல்லாத அந்தத் தெருவை தூரத்திலிருந்து பார்த்தபொழுது தெருவின் ஓரங்களில் அடசலாக நிறைய மரங்கள் தென்பட்டன “எப்படி இந்த மரங்கள் புயலுக்குத்தப்பியது?” என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டு சற்று முன்னோக்கி விரைந்தான் இங்கொன்றும் அங்கொன்றுமாக செங்கற்கட்டிடங்கள் கண்ணில் பட்டன கட்டிடங்களின் பின்புறமும் மரங்கள்! “புயலை இந்தத்தெரு புறக்கணித்துவிட்டதோ? இல்லை, புயல் இங்கே வர மறுத்துவிட்டதா? எதுவானால் என்ன நமக்குத்தேவை வீடு” என்று எண்ணிக்கொண்டு கட்டிடங்களில் பார்வையைச் செலுத்தினான். அவனின் உள்ளுணர்வு அந்தத்தெருவில் வீடு கிடைக்குமென்று உறுதியளித்தது.

அவளிடம் சொல்லிச்சென்றதுபோல மதிய வேளை வீடு திரும்பினான், படபடவெனத் தன் மகிழ்ச்சியை அவளிடம் வெளிப்படுத்தினான், அவளுக்கும் ஆனந்தம் மனதில் கரைபுரண்டோடியது. எங்கே காலம் தன் ஆசையைப் பொய்யாக்கி விடுமோ என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தவள் இப்போது உற்சாகமாக உல்லாச ராகம் இசைத்தாள். “சரி சரி கிளம்பு ஒவ்வொரு நிமிடமும் பொன்னானது, போனா வராது”, என்று அவளை உடனடியாகக் கிளம்பும்படி வற்புறுத்தினான்.

“சரி எவ்வளவு தூரம் போகணும்?” என்று கேட்டவளுக்கு கீழைத்திசையில் அவன் சென்று வந்த தூரத்தை விளக்கினான், தூரத்தை அறிந்துகொண்டபின் “இது நாம இப்ப இருக்குற இடத்துக்கு பக்கம் தானே? எப்படி இவ்வளவு நாள் உன் கண்ல படாமல் போச்சு?”

“அதுதான் எனக்கும் புரியல. பக்கத்துல கிடைக்காதுன்னு எதோ நம்பிக்கைல, நான் இன்னிக்குவரை தேடாமல் இருந்திருக்கேன்”, அவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு “முட்டாள் முட்டாள்” என்று திட்டவேண்டும்போல இருந்தது அவளுக்கு இருந்தாலும் அடுத்த கணம் அவனின் வெகுளித்தனத்தை ரசித்தவளாய், “அங்க சூழ்நிலை எப்படி இருக்கு?”, என்று வினா தொடுத்தாள்.

“நாம எதிர்பார்க்கிற மாதிரிதான்..” என்று மகிழ்ச்சி பொங்கப் பாடலாய்ப் பாடி பதிலளித்தான்.

இருவரும் அவன் பார்த்துவந்த வீட்டை நோக்கிப் பயணம் புறப்பட்டனர், வீட்டை அடைவதற்குச் சற்று முன் அவளை நிற்கச்சொன்னான், “ஏன்?” என்றாள், காரணத்தைச் சொன்னான், “நல்லாக் கேட்டுக்க நான் வெளியிலே இருந்து அந்த வீட்டுக்காரன வம்புக்கிழுக்கறேன், அவன் வெளியில வந்ததும் சண்டை போட்டுக்கிட்டே தூரமாப் போயிடுறேன், அவனும் என்னுடன் சண்டைபோட்டு வெல்லும் மும்முரத்தில் என்னுடன் வந்துடுவான். நீ அந்த நேரம் வீட்டுக்கு உள்ள போய் அங்க இருக்குற அவங்களோட முட்டையில ஒண்ணை கீழே தள்ளிவிட்டுட்டு உன் முட்டையை இட்டுட்டு சத்தமில்லாம நம்ம இடத்துக்குப் போயிடு, கொஞ்ச நேரம் நான் அந்த வீட்டுக்காரன சமாளிச்சுட்டு பிறகு நம்ம இடத்துக்குத் திரும்பிடறேன்”. என்று தன் சோடிக் குயிலிடம் திட்டத்தை விளக்கிவிட்டு காக்கையிடம் வம்பிழுக்கப் பறந்தது ஆண்குயில்.

– வலஞ்சுழி இணையதளத்தில் பதிவாகி, ஆண்டு 2022 ல் வலஞ்சுழி வலைத்தளம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை.

– ஆண்டு 2024 ல் வெளியான ‘அத்தனையும் பச்சை நிறம்’ சிறுகதைத் தொகுப்பில் பதிவாகியிருக்கும் கதை.

என் பெயர்: மீ.மணிகண்டன் புனைப்பெயர்: மணிமீ தந்தை பெயர் ந.மீனாட்சி சுந்தரம் தாயார்: மீ.பானுமதி சொந்தவூர்: கல்லல், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா வசிப்பிடங்கள்: கல்லூரிக்காலம் வரை தமிழகத்திலிருந்த நான் பின்னர் தொழில் நிமித்தமாகப் பல நாடுகளில் வசித்து வருகிறேன். 1996 - 2000 சவுதி அரேபியா 2001 - 2014 குவைத் 2015 முதல் அமெரிக்கா அடர்த்தியாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரம் தாங்கும் சில இரவு வானம்போலப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *