க்ளாஸ்மேட்ஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2024
பார்வையிட்டோர்: 2,198 
 
 

மருதாச்சலத்தைப் பார்த்தே மூன்று – நான்கு வருடங்களாகிவிட்டன. கடைசியாக அவனது மகளின் திரட்டுச் சீருக்குப் போனபோது பார்த்தது. அதற்குப் பிறகு குமரேசன் கிழக்கு மின்னாத் தலை வெச்சுப் படுக்கவில்லை.

மருதாச்சலமும் இந்தப் பக்கம் வரவில்லை. முன்பு காய்கறி மண்டிக்கு திரிகூடத்துக்கு வந்துகொண்டிருந்தான். அப்போதாவது மண்டியிலோ, வழித்தடத்திலோ தட்டுப்படுவான்; அல்லது திரும்புகாலில் ஒரு எட்டு இவர்களின் வீட்டுக்கு வந்து இவனைச் சந்தித்துவிட்டுப் போவான். விலை அதிகமாகக் கிடைக்கிறது என்று வெள்ளாமைக் காய்கறிகளை பேச்சிபாளையம் மண்டிக்கும், ஏரிக்கடவு மண்டிக்கும் கொண்டு செல்லத் துவங்கியதிலிருந்து அவனும் மேற்கு மின்னாக் கால் நீட்டிக் கூட படுப்பதில்லை போலிருக்கிறது.

ஒவ்வொரு சமயம் அவனது ஞாபகம் வரும்போது போகணும், போகணும் என்று நினைப்பதுதான். வார நாட்களில் வேலைக்குப் போய் வரவே நேரம் சரியாக இருக்கும். விடுமுறை நாட்களில் கல்யாணம் காட்சி, ஒறம்பறைக்குப் போக வர என்று பொழுதுகள் கழிந்துவிடும். வேலை, குடும்பம் – குட்டிகள் என்று ஆகிவிட்ட பிறகு அதன் பாடுகளுக்கே நேரம் போதுவதில்லை. பழைய நட்புகளைப் புதுப்பித்துக்கொள்ளவோ, பால்ய கால நண்பர்களைச் சந்தித்து அளவளாவவோ எங்கே நேரம் இருக்கப்போகிறது!

போகணும் என்று உறுதியாக நினைத்தால் போக முடியாமல் அல்ல. ஞாயிறிலோ, ஏதேனும் விசேஷமாக உள்ள மற்ற விடுமுறை நாட்களிலோ போய் வந்துவிடலாம். ட்டீவீயெஸ்ஸை முறுக்கினால் பத்து நிமிடத்துக்குள் சென்றுவிடக் கூடிய அண்மைதான். ஏனோ அப்படி அழுத்தமாகத் தேட்டம் எழவில்லை; அதனால் போகவில்லை என்பதே முழு உண்மை.

அன்று ஞாயிற்றுக் கிழமை. கோடை விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு மனைவி பிறந்த வீடு போயிருந்தாள். காலையில் சலூன், மதியம் ஒரு திருமண வரவேற்பு, பிற்பகலில் தூக்கம் என்று பொழுது கழிந்திருந்தது. ஐந்து மணி வாக்கில் விழித்தவன், முகம் கழுவிவிட்டு வந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான். காஃபியோடு வந்த அம்மா, “குட்டீசுக இல்லாம வீடே விறோச்சுன்னு இருக்குது. இல்லாட்டி ரெண்டுகளும் ஓரியாடீட்டு ஒரே ரவுசாக் கெடக்கும். ட்டீவிக்கும் ஓய்வு ஒளிச்சலே இருக்காது” என்றபடி டம்ளரை நீட்டினாள்.

காஃபி குடித்தபடி அது பற்றி யோசித்துக்கொண்டிருக்கையில்தான் தனது பள்ளிக் காலங்களும் நினைவு வந்து, மருதாச்சலத்தைப் பார்த்து வரலாமே என்று தோன்றியது.

தொலைக்காட்சியை அணைத்து, சட்டையை மாட்டிக்கொண்டு, “மருதாச்சலத்தைப் பாத்துட்டு வந்தர்றம்மா. ராத்திரிக்கு சாப்பாடு வேண்டாம். அங்கயே சாப்புட்டுக்கறேன். ரொம்ப வருசத்துக்கப்பறம்

பாக்கறோம். பாடு பளமை பேசீட்டு, வர்றக்கு லேட்டானாலும் ஆகும். நீயும் ஐயனும் சாப்புட்டுட்டுப் படுத்துக்குங்கொ” என்றுவிட்டு, ட்டீவீயெஸ்ஸைக் கிளப்பினான்.


வெயில் தாழ்ந்திருந்தது. கிழக்கு நோக்கிய பயணம் என்பதால் முகத்தில் அடிக்கவும் இல்லை. மருதாச்சலத்தைப் பார்க்கப் போகிறோம் என்பதால் உண்டான நினைவில், வழித் தடங்களெங்கும் காக்கி – வெள்ளை, நீலம் – வெள்ளை ஞாபகங்கள்.

உழவுக்காட்டிலிருந்து அரசு உயர் நிலைப் பள்ளிக்கு மாரப்பகவுண்டனூர் போக வேண்டும். ஐந்து கிலோ மீட்டர். இங்கிருந்து பேருந்து வசதி இல்லை. நடராஜா சர்வீஸ் அல்லது மிதிராணி சர்வீஸ்தான். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பள்ளிக்கு வருகிற மாணவ மாணவிகள் பெரும்பாலானவர்களும் நடந்தேதான் பள்ளிக்கு வருவர். பள்ளி மாணாக்கர்களுக்கு அரசு இலவச மிதிவண்டி வழங்குவதற்கு முந்தைய காலகட்டமான எண்பதுகளின் இறுதி மற்றும் தொண்ணூறுகளின் துவக்கம். மிகச் சிலருக்கு மட்டுமே மிதிவண்டி இருக்கும். கிழக்கே ஏரிக்கடவிலிருந்து மாரப்பகவுண்டனூருக்குப் பேருந்து உள்ளதால் அந்த மார்க்கத்தில் உள்ளவர்கள் சிலர் பேருந்தில் வருவார்கள். அதிலும் மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருகிற சிலர், பேருந்துக்கு செலவழிக்க சொற்ப தொகையும் கொடுக்க இயலாத நிலையில் இருப்பதால் நடராஜா சர்வீஸ்தான். பள்ளி மாணாக்கர்கள் மஞ்சள் பைக்கட்டையோ ஒயர் கூடையையோ சுமந்துகொண்டு, இரண்டு முதல் ஐந்து – ஆறு கிலோ மீட்டர் வரை நடந்து படித்த காலம் அது.

இவர்களின் செட்டில் குமரேசனும், ‘பொடுசு’ முருகானந்தமும் உழவுக்காட்டுக்காரர்கள். ராஜாமணி – பெரியாக்கவுண்டனூர். குறிஞ்சிநாதன் – துலுக்குவார்பட்டி. ‘டுர்றி’ வெங்கிட்டான் – கோழிக்குட்டை. இவர்கள் எல்லோருக்குமே பள்ளிக்கூடம் ஐந்து – ஆறு கிலோ மீட்டர் ஆகும்.

மாணவ மாணவிகளுக்கு பொதுவாக காலைப் பயணம் இறுக்கமானது. அப்போது அவர்களின் நடையே சற்று விரைப்பாகவும், பேச்சு குறைவாகவும் காணப்படும். வீட்டுப்பாடம், மனப்பாட ஒப்பிப்பு, வகுப்புச் சோதனை, மாதாந்திரத் தேர்வு உள்ளிட்ட பதற்றத்தோடும், அடிக்கிற ஆசிரிய – ஆசிரியைகள் குறித்த பயங்களோடும் செல்வார்கள். மாலைப் பயணம் விடுதலைக் களிப்பு மிக்க வீடு திரும்பல் என்பதால் வேடிக்கை, விளையாட்டு, சாகசம், மகிழ்ச்சி, உற்சாகம் ஆகியவை கொண்டதாக இருக்கும். பேச்சு விரும்பிகளான மாணவிகள் வார்த்தைகளைத் தலைகீழாகப் பேசுவது, இரண்டாவது எழுத்துகளை மாற்றிப் பேசுவது என்று புதிது புதிதாக ரகசிய மொழிகளைக் கண்டுபிடித்துப் பேசியபடி வருவார்கள். நடுநிலை வகுப்பு சாது மாணவர்கள், மாணவிகளோடு சேர்ந்து, கேட்பாரற்றுக் கிடக்கிற சப்பாத்திக் கள்ளிப் பழம் பறித்தும், எலந்தைப் பழம், நவ்வாப் பழம் பொறுக்கியும் தின்பர். வீர சாகச மாணவர்களோ வழியோரத் தோட்டங்களிலிருந்து அந்தந்த

விளைச்சல் காலங்களுக்கு ஏற்ப மாங்காய், மக்காணி, கரும்பு ஆகியவற்றைத் திருடித் தின்பதில் வல்லமை காட்டுவார்கள்.

எல்லாக் காலத்திலும் வேலிகளில் விளைகிற ஒடக்காய்களை அடிப்பதற்கென்றே சில குழுக்கள் இருக்கும். அதில் பேர் பெற்றது இவர்களின் குழு. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பில் பாதி வரை ஒடக்காய் அடிப்புப் புனிதப் போர் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதன் பிறகு பெரிய பையன்கள் ஆகிவிட்டதால் அதை விட்டுவிட்டனர். மேலும், அப்போதுதான் வகுப்பு மாணவிகள் ஒவ்வொருவராக வயசுக்கு வரத் துவங்கியதால், மருதாச்சலம், குமரேசன், ராஜாமணி ஆகிய கடைசி பெஞ்சுகளின் கவனம் அது பற்றிய ஞானத் தேடலில் ஈடுபடலாயிற்று. அந்த நினைவுகள் குமரேசனுக்குள் அலையாடி முகத்தில் யாரும் காணாப் புன்முறுவலை உண்டாக்கின.


நாய்க்கனூரில் கிராமத்துக்கு வெளியே மருதாச்சலத்தின் தோட்டம். களத்து வீட்டின் காரை வாசலில் ட்டீவீயெஸ்ஸை நிறுத்துவதற்குள் பட்டை கட்டிய நாய் பாய்ந்தோடி வந்து, “ஆர்ரா நீயி? எதுக்குடா இங்க வந்த?” என்று கருப்புக் கொடி காட்டியது.

மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றிருந்த மாடு கன்றுகளை ஒட்டிக்கொண்டு அப்போதுதான் திரும்பியிருந்த மருதாச்சலத்தின் ஐயன், அதுகளுக்குத் தண்ணி காட்டிக்கொண்டே நாயை அதட்டி அமைதிப்படுத்தினார்.

நெற்றியில் சன் ஷேட் போட்டு குமரேசனை ஏறிட்டுவிட்டு, “அட நாசகாரா…! நீயா?! நாங் கூட ஆரோ எவுரோன்னு நெனச்சுட்டன். ஏன்டா கட்டித்தீனீ,… இருக்கறமா செத்தமான்னு எட்டிக் கூடப் பாக்காம இத்தன வருசமா எங்கடா போய்த் தொலைஞ்ச?” என்று வழக்கம் போலவே செல்லத் திட்டுதல்களோடு ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்.

அவரிடம் போய் நின்று குசலம் விசாரித்துக்கொண்டிருப்பதற்குள் வீடு கூட்டி விளக்குப் போட்டுக்கொண்டிருந்த அம்மாவும் வந்து, ‘”ஏன்டா,… தடம் தெரிஞ்சுதா; இல்ல,… ஆருகட்டயாவது கேட்டுக் கேட்டு வந்தயா? நின்னா நெடுஞ் செவுரு; உளுந்தாக் குட்டிச் செவுருங்கற கோப்புல, வந்தா ஒரு வரவு; போனா ஒரே போக்குன்னு இருக்கறீங்களேடா, ரெண்டு பேரும். கடைசியா புள்ளையோட சீருக்கு வந்தவனல்லொ நீயி? வருசம் நாலாயிப் போச்சு. இன்னி அவ கண்ணாலத்துக்குக் கூப்புட்டாத்தான் வருவானாட்டிருக்குதுன்னு நானுஞ் சொல்லீட்டேதான் இருப்பேன்” என்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தாள்.

மருதாச்சலமும் இவனும் ஆறாம்ப்பு முதல் பத்தாம்ப்பு வரை ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். ஒம்பதாம்ப்பில் ஒரு சலக்காவும், பத்தாம்ப்பில் (மறு தேர்வையும் சேர்த்து) ரெண்டு சலக்காவும் ஒன்றாகவே தோற்று, கல்வித் தெய்வம் கலைவாணிக்கு விமோச்சனம் கொடுத்தவர்கள்.

அதற்குப் பிறகு மருதான் பார்த்துக்கொள்ள விவசாயம் இருந்தது. குமரேசனுக்கு வேலையா, தொழிலா? சக வெட்டி ஆப்பீசர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக்கொண்டிருப்பதும், வெட்டி ஆப்பீசர் பேரவையின் தலைமையகமான ஆல் இன்டியா டெய்லர் கடையில் பொழுது போக்குவதும்தான் முழு நேரக் கடமை. அப்போது மாசத்துக்கு ஒரு வாட்டியேனும் ஐயனின் லொடக்ளாஸ் சைக்கிளையோ, வாடகை சைக்கிளையோ எடுத்துக்கொண்டு, மருதானைப் பார்க்க வந்துவிடுவான். காட்டில் வேலைகள் இல்லாத சமயம் மருதானும் அது போலவே குமரேசனைப் பார்க்க ஓசி சைக்கிள் எடுத்துக்கொண்டு உழவுக்காட்டுக்கு வருவான்.

வேலைக்குப் போகத் தொடங்கி, வயது கூடி, பொறுப்புகள் தலைக்கேறிய பிறகு, இம் மாதிரியான உல்லாசப் போக்குவரவுகள் அருகிவிட்டன. கல்யாணம் என்ற மகா மந்திரம், கணவன் என்ற மனிதனை, குடும்பம் என்ற மோளி சுமக்கும் கழுதையாக ஆக்கிவிட்ட பிறகு, உல்லாசத்துக்கோ ஓய்வுக்கோ வாய்ப்பேது? காதுகுத்து, திரட்டுச் சீர், கல்யாணம், பெரிய காரியம் (இழவு) என்று நல்லது – பொல்லதுகள் சம்பவிக்கும்போதுதான் சுற்றம் – நட்பு, சொந்த – பந்தம் என இருப்பதே ஞாபகம் வருகிறது.

இங்கேயும் மருதாச்சலத்தின் ‘மோளிகள்’ இல்லை என்பது, செருப்புகளும் சத்தஞ் சள்ளுகளும் இல்லாதபோதே தெரிந்தது. என்றாலும் வாங்கி வந்ததை என்ன செய்ய? ட்டீவீயெஸ் கவரில் இருந்த தீனிப் பொட்டலங்களை எடுத்து அம்மாவிடம் கொடுத்தான்.

“குட்டீசுகல்லாம் ஊருக்குப் போயிருக்கற நாளுப் பாத்து நீயும் வந்திருக்கற பாரு, இத்தனைய வாங்கீட்டு! தேது,… ஆசுவத்திரி ஜங்சன்ல காம்ப்ளக்சு, பேக்கரியெல்லாம் வந்துச்சாமா?! அங்க வாங்குனதாக்கு?” என்றவள், “தேன் வந்த கால்லயே நிக்கற? குக்கு!” என்று திண்ணையில் தடுக்கு எடுத்துப் போட்டாள்.

குழந்தைகள், குடும்பம், பண்ணையம் உள்ளிட்ட விசாரிப்புகளை முடித்துக்கொண்டு, “இவனெங்கியோ சித்த மிந்தித்தான், ‘ஒரு சோலி, உப்ப வந்தர்றன்’னுட்டு பைக்கெடுத்துட்டுப் போனான். வந்துருவானிரு. அதுக்காள நானு காப்பித் தண்ணி வெச்சுட்டு வாறன்” என்றபடி அடுப்படிக்குள் நுழைந்துவிட்டாள்.


கால்நடைகளை மாட்டுச்சாளையில் கட்டி முடித்து, கை கால் முகம் கழுவி, உருமால் துண்டால் ஈரம் துடைத்துக்கொண்டே வந்த ஐயனும் அவனருகே அமர்ந்துகொண்டார்.

“வேச காலம் இப்பத்தான் தொடங்கியிருக்குது. அதுக்காளயே வெயிலு வாட்டி வளவெடுக்குதே! வெளிய தலை காட்டவே பாங்கில்ல. அதுக்கொசரம் ஊட்டுக்காளயே இருக்க முடியுமா? காட்டுல வெள்ளாமை இல்ல, வேலை இல்லீன்னாலும் மாடு கன்னுகளை மேய்க்கறக்குப் போயித்தான ஆகோணும்?

அடிக்கற வெயிலுக்கு நம்முளுக்கும் மாட்டுத் தோலாட்ட இருந்தாத்தான் தாங்க முடியும்” என அவர் சொல்ல,

“ஆமாங்யா! இங்கீன்னாலும் தேவுல, சென்னை, மதுரைலல்லாம் நூறு டிகிரிக்கு மேல கொளுத்துதாமா. நாடு முளுக்கவே வெயிலுக்கு நூத்துக்கு மேல சனம் பலியாயிருச்சு” என்றான் இவன்.

திகைத்த அவர், “அங்கொண்ணு இங்கொண்ணு, அஞ்சு பத்துன்னு போகும்; இப்ப இந்தளவுக்குப் போயிருச்சா? மளை – தண்ணி இல்ல; வெயிலு மட்டும் கொன்னெடுக்குது. இப்புடியே போனா இங்கியும் பஞ்சம் வந்து, நாமளும் எலிக்கறி திங்க வேண்டீதுதானாட்டிருக்குது” என சொல்லிக்கொண்டிருக்கையில் காப்பியும், தின்பண்டங்களும் வந்தன.

“இப்பத்தான் வீட்டுல காப்பி குடிச்சுட்டு வாறன்” என்க,

“அதுக்கென்னொ,… உன்னொரு கிளாசு குடிக்கறக்கு வகுத்துல எடமில்லாதயா போயிருச்சு? ஒண்ணுக்கூத்துனாத் தீந்துருது” என்றவர், “இந்த வாட்டி ஆரு நாக்காலியப் புடிப்பாங்கொ? நம்ம கெதி என்னாகும்? குடியானவீகளுக்கு மானியம் கீனியம் சேத்திக் குடப்பாங்ளா? கடன் தள்ளுபடி பண்ணுனாலும் ஆகும்” என அரசியல், விவசாயப் பாடு பழமை பேசலானார்.

கோழிகள் கூடடைகிற நேரத்தில் புடுபுடுவென மருதாச்சலமும் வந்தான். அசலூர் போய்விட்டு வெகு நாள் கிருமிச்சு வருகிற எசமானிடம் கொனிவது போல நாய் அவனிடம் கொனிந்தது. பிறகுதான் தெரிந்தது, அவன் ‘கேட்ச்’ வீசிய வறுக்கிகளுக்கான கொனிச்சல் அது என்று.

நான்கு வருடங்களுக்குப் பிறகு குமரேசனைப் பார்க்கிற அதி உவகையோ, எதிர்பாராமல் வந்ததின் இன்ப அதிர்ச்சியோ அவனிடத்தில் இல்லை. “எப்படா வந்த? வந்து நெம்ப நேரமாச்சா? அட,… அப்புடீன்னா ஒரு ரிங்கு உட்டிருக்க வேண்டீதுதானொ?” என்று அடிக்கடி சந்தித்துக்கொண்டிருப்பவர்களைப் போலவே சாதாரணமாகப் பேசினான்.

எத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் அந்த இடைவெளியே தெரியாதபடி பேசுவதும், பழகுவதும் மருதாச்சலத்தின் குண விசேஷங்களில் ஒன்று. நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு சந்திக்கையில் அவன் பேசுகிற விஷயங்களும் போன வாரம் பேசியதின் தொடர்ச்சி என்பது போலவே இருக்கும்.

“’டுர்றி’ய அடிக்கடி தடத்துல பாப்பன்டா குமரேசா. ஒம்பதாப்பு படிக்கீல கூட ஊள மூக்கு ஒளுக்கீட்டு, டுர்று டுர்றுன்னு உறிஞ்சீட்டிருந்த அவன்தான் உப்பொ எங்க வார்டுல மெம்பரு; தெரியுமல்லோ? கூத்தப் பாரு!

“டேய் குமரேசா,… வேலுமணி ஸாரு செத்துப்போயிட்டாராமாடா; தெரியுமா? ஆர்ட்டட்டேக்காமா. அடீன்னாலும் அடி, அவருகட்ட வாங்குனதுதான்டா அடி; ஏன்டா குமரேசா? அப்பறம், புஸ்பலதா டீச்சர் – நாவகமிருக்குதா அதெல்லாம்? ஊடுமுட்டி இப்ப எங்கடா இருக்கறான்? என்ன பண்றான்? தொப்புளானுக்கு எத்தனை கொளந்தீகொ? அவனுக, நம்ம செட்டு,

எல்லாஞ் சேந்து எத்தனை ஒடக்காய்கள அடிச்சிருப்போம்; ஏன்டா குமரேசா? எத்தனை காட்டுல மாங்கா – மக்காணி திருடியிருப்போம்!

“ஏன்டா,… உப்பூமு பள்ளிக்கொடத்துப் பசங்கொ ஒடக்கா அடிக்கறானுகளாடா? நம்மளையாட்டவே அரை உசுரா அடிச்சுப் போட்டு,… அதுக வாயில மண்டுடறானுகளா? தெங்க, நம்ம வாரிசுக கான்மென்டுக்குப் பஸ்சுல போயிட்டு பஸ்சுல வாறதாச்சு! அதுக ஒடக்காய்களக் கண்டுதுகளா, கள்ளிப் பளத்தக் கண்டுதுகளா? நாம போனாப்புடி நம்ம ஐஸ்கூலுக்குப் போற பசங்ககட்டத்தான் கேட்டுப் பாக்கோணும். ஆனாட்டி அவுங்குளும், இப்ப இந்த ரூட்டுல பஸ்சு ஓடறதுனால, பஸ்சுலயே போயிட்டு வந்தர்றாங்கொ. நம்மளையாட்ட நடந்து போற வேலையே இல்ல. அப்பறம் எப்புடி ஒடக்காய் அடிக்கறது?”

இருட்டியது முதல் சுமார் முக்கால் மணி நேரம் விடாமல் பேசிக்கொண்டேயிருந்தான். அவனது நினைவூட்டல்களால் அந்தப் பள்ளி நாட்களை மறுபடியும் வாழ்ந்த மாதிரி இருந்தது.


கெடைல குக்கி நெம்ப நேரமாச்சே என்று அக்கட்டால எந்திரிச்சுப் போய் மறைவாக தம் அடித்துக்கொண்டிருந்தனர். அப்போதும் அந்தப் பழைய நாட்களையும் உடன் படித்தவர்களையுமே நினைவுகூர்ந்துகொண்டிருந்தான்.

*ஒருக்கா பஸ்சுல கௌசியப் பாத்தன்டா குமரேசா. அப்ப ஆளு எப்புடி கிச்சன்னு, ஒல்லியா, ஸ்கூல்லயே அளகு ராணியா இருப்பா! அவளை நெனைச்சுக் ‘கெடா வெட்டாத’ கடைசி பெஞ்சுப் பசங்க உண்டா? கற்பனைக்கு, கனவுக்கெல்லாம் கொளந்தை பொறக்கும்னா, கௌசிக்கு இருவது கொளந்தை, புஸ்பலதா டீச்சருக்குப் பாஞ்சு கொளந்தை எம் மூலமாவே பொறந்திருக்கும்டோவ்! கௌசிக்கு டென்த்து மூஞ்சதுமே கலியாணமும் ஆயிருச்சு. ஆறே மாசத்துல பீத்தைப் பன்னியாட்ட ஆயி, அடுத்த வருசமே குட்டியும் போட்டுட்டால்லொ! உப்பொ தலையெல்லாம் நரையுளுந்து, கெள்டாட்ட இருக்கறா. கெள்டாட்ட என்னொ,… கெள்டேதான்! பதனாறுலயே கலியாணமாயி,… பதனேள்லயே புள்ளை பெத்துட்டால்லோ…! அந்தப் புள்ளைக்குப் பதனெட்டு வயிசுல கலியாணம் மூச்சுக் குடுத்து, ரெண்டு வருசத்துல அதுக்கும்மிப்ப ஒரு கொளந்தையாமா!? கௌசி நுப்பத்தேள்லயே அம்மத்தாளாயிட்டா?! வெங்கொடுமைதான்!”

குமரேசனுக்கு அதைக் கேட்கவும் ஞாபகம் வந்து, “ஆமா,… ஒரு புள்ளை,… சங்கராயம்பாளையம்னு நெனைக்கறேன்,… நம்ம கூட பத்தாம்ப்பு படிக்கீலயே கல்யாணமாயிருந்துச்சே! தாலியோடவே ஸ்கூலுக்கு வருமே! வாத்தியாருக கூட கலியாணமான புள்ளைன்னு அதைய அடிக்காம உட்டுருவாங்களே! அதுவும் இப்ப அம்மத்தாளாத்தானே இருக்கும்!?” என்றான்.

“ஆமாமா. பொம்பளைகளுக்குப் பதனஞ்சுலருந்து நாப்பத்தஞ்சு முட்டும்தான் ஃபீல்டு. அதுக்குள்ள ஆடி அனுபவிச்சுக்க வேண்டீதுதான். அதுக்கப்பறம் அவளுகளுக்கு ஃபீல்டும் அவுட்டாயிரும்; அம்மத்தா –

அப்பத்தாளாவும் ஆயிருவாளுகொ. ஆம்பளைக தொண்ணூறானாலும் தொண்ணூறு டிகிரிக்குக் கொறைவிருக்காது.”

“நம்முளுக்கும்தான் நாப்பத்தஞ்சாச்சு…”

“அதுக்கென்றா??? பொம்பளைகளுக்குத்தான்டா நாப்பத்தஞ்சுல இளமை முடியுது. ஆம்பளைகளுக்கு அப்பத்தான் இளமை முறுக்கம்.”

குமரேசன் கிளுகிளுத்துத் தலையாட்டிக்கொண்டான்.

உடன் படித்த மற்ற தாவணிகளையும் நினைவுகூர்ந்துகொண்டு திரும்பும்போது மணி எட்டரை. சாப்பாடும் தயார்.

“நீ வந்தவன் வந்தே; நாயத்துக் கெளைமையும் வேற. வெடியாலயோ மத்தியானமோ வந்திருந்தீன்னா கோளி – கீளி அடிச்சிருக்கலாம். இன்னைக்கு இங்க குட்டீசுகளும்மில்லன்னுதான் கவுச்சி வெக்கில. இப்ப நீ வரவும், மொட்டுன்னாலும் வறுத்து வெக்கலாம்னு வறுத்து வெச்சேன்” என்று ஆம்லெட்டுகள் சகிதம் பரிமாறினாள் மருதாச்சலத்தின் அம்மா.

சாப்பிட்டு முடித்த பிறகு மறைவாகச் சென்று மறுபடியும் ஒரு தம். பிறகு மீண்டும் திண்ணையில் சற்று நேர அளவளாவல். ஒன்பதே கால் ஆகிவிட்டதால் கிளம்பத் தயாரானான்.

“ஊட்ல வேற அவளும்மில்லியா,… பட்டாசுட்டு நாளாயிப் போச்சுடா குமரேசா. நீ வாறக்கு மிந்தி, ஜிங்கிலி ஒண்ண ரெடி பண்றக்குத்தான் போயிருந்தேன். நீயும்மங்க வட்டுக் காஞ்சுட்டுத்தான இருப்ப? இன்னைக்கு தீவாளி கொளுத்தீட்டுப் போயர்லாம் எடு!” என்றான், ரகசியமாக.

அடப் பாவி! இவ்வளவு நேரம் இந்த நோம்பியைச் சொல்லாமல் பழங்கதையை மட்டும் பேசிக்கொண்டிருந்தானே என்றிருந்தது. கடந்த காலத்தில் வாழ்ந்தால் மட்டும் போதுமா? நிகழ்காலத்திலும் வாழ வேண்டுமல்லவா!

மருதாச்சலத்தோடு கவுச்சி நாயங்களைப் பேசிக்கொண்டிருந்ததில் இவனுக்கும் உடம்பு முறுக்கமாகத்தான் இருந்தது. மேலும், இவனும் இன்னும் தாண்டுகாலன், கடவு முட்டிதான். ஆனால், குடும்பப் பெண்களிடம்தான் போவான். வியாதி எச்சரிக்கை மட்டுமன்றி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் கூட, விபச்சாரிகளிடம் செல்வது மனசுக்குப் பிடிப்பதில்லை. கண்டவர்களும் புழங்குவது என்ற அருவருப்பு.

எனவே, “என்னெச்சா இருந்தா நமக்கு ஆகாது” என்றான்.

”உன்னையப் பத்தித்தான் நமக்குத் தெரியுமே! இது என்னெச்சில்ல; ப்ரைவேட் ரூட்டு; அதுவும் சிறுகால் தடம். காசு – கீசு ஒண்ணும் வாங்காது. வேண்டீவங்கன்னா மட்லும் போகும். நம்ம காட்டுக்கு வேலைக்கு வர்றதுதான். இங்க குடி வந்து ரெண்டு மூணு வருசம் இருக்கும். அப்பப்ப போயிட்டு வருவேன். ஒவ்வொருக்காலைக்கு அதே கூப்புடும். அவுங்க சாளைக்கே போயர்லாம். சவுரீமா இருக்கும். காது கேக்காத பாட்டியும்மு, அதும் மட்லுந்தான்.”

பிறகென்ன?

“நீங்க படுத்துக்குங்மோ! நான் சித்த நேரம் இவங்கூடப் பேசீட்டு, தாட்டியுட்டுட்டு வந்தர்றன்.” வீட்டில் பொருந்தமாகப் பொய் சொல்லிவிட்டு மருதாச்சலம் பைக் எடுத்துக்கொண்டான். குமரேசன் ட்டீவீயெஸ்ஸில் பின்தொடர்ந்தான்.


மருதாச்சலத்தின் தோட்டத்திலிருந்து இரண்டு நிமிடத் தூரத்தில், எல்லையற்ற இருள்வெளி நடுவே, மின் விளக்கொளி கசிகிற அந்த ஒண்டிச் சாளை. வாகனங்களைச் சற்று இப்பால், இருளில் நிறுத்திக்கொண்டனர். மருதாச்சலம் ஆரனை ஒரு தனி தினுசில் அடித்து சமிக்ஞை காட்டிவிட்டு எஞ்சினை அணைத்தான். குமரேசனும் அணைத்துவிட்டான். சாளையில் படல் திறந்து மங்கலான டார்ச் வெளிச்சம் அசைந்தது. பதில் சமிக்ஞை.

“சித்தெ இர்றா. நாம் போயி நம்ம பிரண்டு ஒருத்தனும் இருக்கறானுங்கறத சொல்லீட்டு வந்தர்றன். திப்புரு திப்புருன்னு ரெண்டு பேராப் போனா ஆரோ எவுரோன்னு நெனைச்சு மெரளிக்கை ஆனாலும் ஆயிரும்” என்றுவிட்டுப் போனவன், சில நிமிடங்களுக்குப் பிறகு வந்து, வாவெனக் கூட்டிச் சென்றான்.

ஓலைச் சாளை இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முன் பாகத்தில் ஒரு பாங்கிழவி, கூனிக் குறுகி குறட்டை விட்டுக்கொண்டிருந்தது. குறட்டை இல்லாவிட்டால் அதன் மூச்சே சந்தேகமாகியிருக்கும். உள் பாகத்தில் ஒற்றைப் பாய், விரிப்பும் தலைகாணியுமாகக் கிடந்தது. அந்தப் பெண் இவ்வளவு நேரம் சும்மா படுத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

அங்கே உட்கார வேறு இருக்கைகள் இல்லாததால் அருகே அவள் உதறி விரித்த வெற்றுப் பாயில் அமர்ந்துகொண்டனர்.

மங்கலான எல்.ஈ.டி. விளக்கொளியில் அந்தப் பெண் கன்னங்கரேலென நிழலோவியம் போலிருந்தாள். தலையில் நரைத் துவக்கம். வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். சாந்தமான முகம். குமரேசனைப் பார்த்து ஸ்நேக பாவத்துடன் புன்னகைக்க, அவனும் அவ்வாறே முயற்சித்தான்.

ஆழ்ந்த மனப் பதிவை ஏற்படுத்தும் அந்த முகத்தை எங்கோ, எப்போதோ பார்த்திருப்பது மாதிரி இருந்தது. அல்லது யாருடைய சாயலிலாவது இருக்கிறாளா? நன்கு பழக்கப்பட்ட மாதிரி ஓர் எண்ணம். யார், அல்லது யாருடைய சாயல் என்பது பிடி கிடைக்கவில்லை. அவளும் அவனை அதே மாதிரி உற்று நோக்கிவிட்டு, “நீங்க ஒளவுக்காடா?” என்று கேட்டாள். “ஆமா,…!?” என்றான் கமா, ஆச்சரியக்குறி, கேள்விக்குறி சகிதம்.

சட்டென்று பூரித்த முகத்தோடும், அடையாளம் கண்டுபிடித்த மகிழ்ச்சியோடும், “குமறேசுதான?!” என்று கேட்டாள்.

இப்போது அவனுக்கும் அவளை அடையாளம் தெரிந்துவிட்டது. இடையின ‘ர’கரத்தை வல்லின ‘ற’கரமாக உச்சரிக்கிற, தன்னுடைய பெயரைக் கூட ‘றங்கநாயகி’ என்றே சொல்கிற, ரங்கநாயகி.

உழவுக்காடு துவக்கப் பள்ளியில் நாலாம்ப்பு வரை அவனோடு படித்தவள். ஆசிரியர் அகில இந்திய வானொலியில் வாராந்திர ‘சிறுவர் உலகம்’ நிகழ்ச்சியை மாணவர்களுக்காக வைக்கும்போது, அதில் பாட்டுகள் வந்தால் எழுந்து நின்று, பாவாடையை இரு புறமும் விரித்துப் பிடித்துக்கொண்டு, தலையை ஆட்டி ஆடுவாளே,… அந்த ரங்கநாயகி.

உழவுக்காட்டில் இவர்களது வீடு உள்ள கிழக்கு வீதியில், மாரியம்மன் கோவில் பக்கம் குடியிருந்த, குரும்பக்கவுண்டரின் பண்ணையத்து ஆளான சடையப்பனின் மகள். குமரேசனோடும், தோழர் தோழிகளோடும், மணல் வீடு கட்டியும், சோறு சாறு ஆக்கியும், அப்பா அம்மா விளையாட்டு விளையாடிய ரங்கநாயகி. பல சமயங்களில் இவன் அப்பாவாகவும், அவள் அம்மாவாகவும் இருந்திருக்கின்றனர்.

அவளது தந்தையின் அகால மரணத்தால் படிப்பை நிறுத்தியதோடு, அம்மாவுடன் அவளது ஊருக்கே போய்விட்டாள். அதற்குப் பிறகு என்ன ஆயிற்று? இங்கே எப்படி வந்தாள்?

“அம்மாவும் மூணு வருசத்துக்கு மிந்தி செத்துப்போச்சு, குமறேசு. மாமனுக ரெண்டு பேரு இருக்கறாங்கொ. அவிக ஊட்ல கொஞ்ச நாளு இருந்தேன். செரிப்பட்டு வல்ல. அந்தப் பக்கம் படுத்திருக்குதல்லோ,… அது எங்க பெரிய பாட்டிதேன். அதுக்கு எம் மேல நெம்ப பாசம். அது இங்க தனியா, என்னையாட்டவே அனாதியா இருந்துதா,… நானு இங்க வந்து ஒட்டீட்டேன்” என்றவள், எதிரே விரிக்கப்பட்டிருந்த, சற்று முன்பு அவள் படுத்திருந்த பாயில் உட்கார்ந்துகொண்டு, “உனக்கு எத்தனை கொளந்தீக குமறேசு? எத்தனாவது படிக்குதுக?” என்றெல்லாம் விசாரித்தாள்.

“உனக்குக் கல்யாணம்…?” என்று கேட்டான்.

ஆழ்ந்த பெருமூச்சுடன், “எனக்கு செவ்வா தோசம். அதுக்கு இதே தோசமிருக்கற மாப்பளைதான் கட்டோணும்; இல்லாட்டி விவகாரமாயிப் பிரிஞ்சுருவாங்களாமா. மாப்பளை செத்துப் போயிருவான்னும் சொல்றவீக சொல்றாங்கொ. எனக்கு செவ்வா தோச மாப்பளை அமையவே இல்ல. அமைஞ்ச ஒண்ணு ரெண்டு பேரும், புள்ளை அட்டைக் கரியா, தொட்டாலே ஒட்டிக்குமாட்ட இருக்குதுன்னுட்டுப் போயிட்டாங்கொ. அந்த வெசனத்துலயேதான் அம்மாவும் படுக்கையாயி, போயிச் சேந்துருச்சு. அப்பறம் இப்ப இப்புடித்தேன்,… அப்பப்போ ஒவ்வொருத்தரு கூட கலியாணம். இன்னைக்கு உங்க ரெண்டு பேர்த்து கூடயுமு” என்று விரக்தியாகச் சிரித்தாள்.

குமரேசனுக்கு தர்மசங்கடமாயிற்று.

“செவ்வா தோசத்துக்காரங்களுக்கு உணர்ச்சி ஜாஸ்தியா இருக்கும்கறது செரித்தான்டா குமரேசோவ்! ரங்கநாயகி அந்த விசியத்துல படு ஜோரு! நாம ஒண்ணும் பண்ண வேண்டாம்; அவளே எல்லாம் பண்ணீருவா. அவளோட வேகத்துக்கும், வித்தைக்கும் தாக்குப் புடிச்சம்னாப் போதும்.

நின்னு வெளையாடுவா. சாமானியமான ஆளுக தாக்குப் புடிக்க முடியாதுறோவ்! நாமளே என்னைக்காச்சு வர்றதுன்னால செரி. அடிக்கடின்னா முடியாது. கல்யாணமாயிருந்தா புருசன் பாடு பெரும் பாடாயிருக்கும். ஆறே மாசத்துல, கோமணத்தைக் காணம், குருவியக் காணம்னு ஓடியிருப்பான்” என்றான் மருதாச்சலம், சிரித்துக்கொண்டே.

அவள் வெட்கப்பட்டு, “அய்யே…! கொஞ்சம் சும்மா இருங்க!” என நெளிந்தாள்.

“தோசத்துக்குப் பரிகாரம் ஏதாச்சும் இருக்குமே! அதை செஞ்சீங்ளா?” குமரேசன் கேட்டான்.

“அதெல்லாம் எத்தனையோ செஞ்சு பாத்தாச்சு குமறேசு. செவ்வாக்கெளமை தவறாம செவ்வாய்க்குப் பூசை போட்டோம். செவ்வாயி முருகனோட அம்சமாமா. அதனால பளனி மலை, மருதமலை, உங்கூருக்கு வடக்கூருல இருக்கற காத்தான்பதிமலைன்னு, முருகன் இருக்கற மலை மலையா ஏறி எறங்குனோம். கந்த சஷ்டி பாடிப் பாடி தொண்டையே தேஞ்சிருக்கும். ஒரு புரோஜனமும் இல்ல.”

குமரேசனுக்கு அவளின் நிலை மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியது. அதைவிட, தனது குழந்தைக் கால விளையாட்டுத் தோழியைப் பாலியல் இணையாக எண்ணவே இயலவில்லை. எழுந்துகொண்டான்.

“ஏன்டா?” மருதாச்சலம் கேட்டான்.

“இல்லடா! எனக்கு மனசு செரியில்ல. நான் வீட்டுக்குப் போறேன்.”

“மனசெல்லாம் செரியாயிரும். ரங்கநாயகி செரி பண்ணீருவா. நீங்க ரெண்டு பேரும் எலிமென்ட்ரீஸ் க்ளாஸ் மேட்டுக வேற…! அப்பா – அம்மா வெளையாட்டு நெஜமாவே இன்னைக்கு ஆடலாம்” என வற்புறுத்தினான்.

அவனிடம் எதுவும் சொல்லாமல் குமரேசன் வெளியேறினான். மரியாதைக்காகவாவது ரங்கநாயகியிடம் சொல்லிவிட்டுப் போகவேண்டும் என்பது கூட தோன்றவில்லை.

பின்னாலேயே விரைந்து வந்த ரங்கநாயகியும் வாசலில் நின்று, “இவ்வளவு தூரம் வந்துட்டு ஏன் குமறேசு திடீர்னு போகோணுங்கற? இரு!” என்று கையைப் பிடித்தாள்.

அவளது பிடியை விடுவித்துவிட்டு, அலைபேசி ஒளியில் இருளுக்குள் நடந்து, சாவியைச் செருகி வண்டியைக் கிளப்பினான். தான் இருளோடு இருளான பின்பும் அவள் அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது.

– பொற்றாமரை இணைய இதழ், ஜூலை – ஆக. 2024.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *