மீனலோசனி




(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதுவும் அந்த வீட்டு வாசலில்!
‘சஞ்சீவி! வாரண்டில் கையெழுத்துப் போட்டு விட் டேன். நாளைக்கே கோர்ட்டுக்கு வரவேண்டுமா?’
அமீனா சஞ்சீவி நாயுடு தலையை ஆட்டினான்.

‘இரண்டு நாளில் எப்படியாவது டிக்ரியைத் தீர்த்து விடுகிறேன். இல்லாவிட்டால் மூன்றாவது நாள் என்னைக் கோர்ட்டில் ஆஜர் செய்துவிடலாம்.
சஞ்சீவி நாயுடுவுக்கு நாராயணனுடைய குடும்பத்தை நன்றாய்த் தெரியும். எனவே சரியென்று போய்விட் டான்
மாடியில் மஸ்லின் திரையிட்ட பலகணிக்குப் பின் னால் நின்று அவனை எதிர்பார்த்துத் தவித்துக்கொண்டிருந் தாள் மீனலோசனி. தெரு வாசலில் அவன் வந்த பொழுது அவள் அடைந்த பூரிப்பு அவனுக்குத் தடங்கல் ஏற்பட்டதும் மறைந்துபோயிற்று. நடப்பது இன்ன தென்று தெரியவில்லை. பேச்சும் கேட்கவில்லை. என்ன தடங்கல் ஏற்பட்டிருக்கக்கூடும்?
இந்த நிலையில் மாடிக்கு நாராயணன் வந்ததும் வராததுமாய் ‘அவன் யார்? என்ன தகரார்?’ என்று கேள்விகளை நெறித்தாள். உண்மையை எல்லோராலுமே பேச முடியுமா? அல்லது எப்பொழுதுமே பேச முடியுமா? அல்லது எல்லோரிடமும் சொல்ல முடியுமா?
‘ஒன்றுமில்லை. பழயநாள் வீடு கூட்டி மகனொருவன். ஏதோ அவசரமாம். கடன் கேட்டான். நாளைப் போக மறுநாள் ஆகட்டுமென்றேன்’ என்றான் நாராயணன்.
மீனலோசனியின் தவிப்புத் தீர்ந்தது.
ஒரு மணி நேரம் சென்றிருக்கும். ‘இன்னும் அந்த காலேஜ் பிள்ளையோடு கொஞ்சிக்கொண்டிருக்கிறாயா?’ என்று வெடுவெடுப்புடன் கேட்டுக்கொண்டே ஒரு கிழக் குரல் மாடிப் படி ஏறி வந்தது. அதைத் தாங்கிய கிழவி அடுத்தாற்போல் மாடி அறைக்கு வந்து சேர்ந்தாள். ஒரு நிமிஷம் நாராயணனை வெறிக்கப் பார்த்துவிட்டு மீன லோசனியின் தாயார் அவளைத் தனியாய் அழைத்து ‘லோசனி! வீணாய்ப்போகாதே…நீ செய்கிறது காட்டில் நிலவு எரிக்கிறாப்போலிருக்கிறது ..உனக்கு நல்ல புத்தி வரவேணும்…சலங்கை வண்டி வர நேரமாச்சே. தெரிய வேண்டாம்?… இந்தக் கொஞ்சலில் ஆயிரத்தில் ஒரு பங்கு செட்டிக்கு…’ என்று பலதரப்பட்ட பொருள்கள் தொனிக்கப் பேசினாள்.
‘நீ மரியாதையாய்ப் போகிறாயா இல்லியா? செட்டி யாம் மட்டி.. பொல்லாத பணம்!’ என்று பெண் சீறி விழுந்ததும் கிழவி உதட்டைப் பிதுக்கிக்கொண்டே கீழே இறங்கிச் சென்றாள், பெண்ணின் பிடிவாதத்தை அறிந் தவளானபடியால்.
2
மூன்றாவது நாள் அந்த வீட்டில் ஒரே அமளியாய் இருந்தது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிழவியோடு பேசிக்கொண்டிருந்தார்.
‘யார் மீது சந்தேகம்?’
‘ஒரு அசட்டுக் காலேஜ் பையனைத் தவிர இங்கே வேறு யாரும் வருவதுகூட சிடையாது.’
‘செட்டியார்கூட வருவதில்லையா?’
‘எனக்குத் தெரியாது மகள் சமாசாரம்’ என்று சம் மந்தமற்றவள்போல் நடித்தாள் கிழவி.
‘போகட்டும். அப்படியிருக்கும்போது?’
‘அந்தப் பையனைச் சொல்ல நியாயமில்லை.’
‘ஆனால் பையன் பணக்காரனா?’
‘யார் கண்டது ? ஏழையாய்த்தானிருப்பான். ஏனென்றால் நான்காம் நாள் இரவு ஏழு மணி இருக்கும். வழக்கம் போல் வீட்டு ரேழித் திண்ணையில் படுத்திருந் தேன். இவன் எப்பொழுதும்போல் வந்தான். யாரோ கச்சேரி சேவகன் ஏதோ வாரண்டு ஒன்று இவனிடம் கையெமுத்து வாங்கினான். இரண்டு நாட்களில் கணக்கை எப்படியேனும் தீர்த்துவிடுவதாக இவன் சொல்லியிருக் கிறான். அவ்வளவு தான் தெரியும்.’
‘சரிதான் … அந்தப் பையனாகத்தானிருக்கும்- வேறு யாரும் வராமலிருக்கும்பொழுது என்று சொல்லிவிட்டு கிழவியிடம் வாக்குமூலம் வாங்கினார் சப் இன்ஸ்பெக்டர்.
வீட்டு எஜமானர் ஐயப்பன் செட்டியார் வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும், மாப்பிள்ளைக்குப் பிறர் முன்னிலையில் காட்டப்படவேண்டிய மரியா தையை முன்னிட்டு கிழவி காமரா அரைப்பக்கம் ஒதுங்கி நின்றாள்.
‘என்னையா போலீஸ் புலி ! என்ன ஆயிற்று ?’ என்றார் செட்டியார்.
ஒன்றும் நிச்சயப்படவில்லை. யாரோ ஒரு பையன் மீது சந்தேகப்படக்கூடும் என்று கிழவி சொல்வதிலிருந்து ஏற்படுகிறது.’
‘காலேஜ் பையனா?’
‘அப்படித்தான் சொன்னாள்.’
‘எனக்குத் தெரியுமே…அவ்வப்பொழுது எனக்குத் தகவல் வந்சிருக்கிறது. நான் குழம்பிக்கொண்டிருந் தேன். இனி அவனை விடப்படாது, தெரிகிறதா?’ என்று சப் இன்ஸ்பேக்டர் தோளைப் பிடித்து ஒருதரம் குலுக் கினார் செட்டியார்.
‘அதற்கென்ன பார்ப்போம்’ என்று சிரித்தார் சப் இன்ஸ்பெக்டர்
3
மூன்று நாளாக நாராயணனுக்குப் பைத்தியம் பிடித்ததுபோலிருந்தது, மீனலோசனியின் வீட்டிற்குப் போகக் கால் எழவில்லை. தன் செய்கையின் காரணமாக தன்னை வெறுத்துக்கொண்டிருந்தான், ஆனால் அவன் புத்திமட்டும் அவன் வெறுப்படைவதைப் பற்றி ஆட்சே பணைகளை கிளப்பிக்கொண்டேயிருந்தது.
‘அதற்கென்ன? மானம் போகக்கூடிய முடை. தகப் பனாரைப் போய் பணம் கேட்பதா? இல்லாவிட்டால் சிவனே என்று ஜெயிலுக்குப் போய்விடுவதா?…தெய்வா தீனம் போல, அந்தப் பிறையில் இரண்டு வாரத்திற்கு மேற்பட்ட காலமாய்க் கிடந்த அந்த நகை அன்றும் கிடந்தது. ஏன் அதை உபயோகப்படுத்திக்கொள்ளக் கூடாது? அதை விற்கப் போவதென்னவோ இல்லை. வெறுமனே அடகு வைத்துப் பணத்தை வாங்கி முடையை அடைத்துவிட்டால், அடுத்த வாரத்திற்குள் எப்படியாவது நகையை மீட்டு வந்து இருந்த இடத்தில் வைத்துவிட்டால் என்ன மோசம் வந்துவிடக்கூடும்? இவ்வளவு நாளாகத் தேடாத நகையை இப்பொழு தொன்றும் திடீரென்று தேட நியாயமில்லை அப்படித் தேடினால் கூட என்ன பிரமாதம்? காதலின் வன்மையை நம்பி உண்மையை அவளிடம் மாத்திரம் சொல்லிவிட் டால் போகிறது. இச்சிறு உதவிகூட புரியத் தயாராக இல்லாத காதலி வெங்காயத்தோலை விட திராபை….. இப்படியெல்லாம் எண்ணினால், செய்தால் ஒன்றும் பிரமாத நஷ்டம் விளைந்துவிடப் போவதில்லை. ஏன் உள்ளத்தைப் புண்படுத்திக் கொள்ளவேண்டும்?’
நான்காவது நாள் அவன் புத்தியின் ஆட்சேபணையை அவன் மனமும் ஒருவாறு ஒப்புக்கொண்டுவிட்டது. அவன் வீட்டை விட்டுக் கிளம்பினான்.
இவனைக் கண்ட மீனலோசனியின் கண்ணில் வழக் கம் போன்ற மகிழ்ச்சியைக் காணோம். அவள் பேச்சிலும் ஒரு ஸ்வரம் குறைந்திருந்தது.
‘என்ன மீனலோசனி! என்னவோபோல் இருக் கிறாயே?’
‘ஏன் வைர முருகைக் காணோம்…பழைய காலத்து நகை. அம்மாவுடையது.’
நாராயணனுடைய உறுதி கலைந்துபோய்விட்டது. தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. உடனே உண்மை யைச் சொல்லிவிடலாமா அல்லது பின்பு சொல்ல லாமா என்ற குழப்பம், யாதொரு முடிவும் தட்டுப்பட வில்லை. ஆனால் வெளிப்படையாக ஒன்றையும் காட்டிக் கொள்ளாமல் ‘அதற்கு என்ன செய்திருக்கிறாய்?’ என்று பரிவுகொண்டதுபோல் கேட்டான்.
அந்தக் கேள்வி அவள் மனதில் பதியவில்லை. அலை பட்ட மனதில் இந்தக் கேள்வி எப்படிப் பதியும்?
‘இந்த நாணுவா? வெல்வெட்டைப்போல் எவ்வளவு மிருது! எவ்வளவு அழகு! இந்த நெஞ்சில் விஷமிருந்தால் நிச்சயம் வெளியே தெரியவேண்டுமே. பொய்யும் வஞ்ச கமும் இருக்காது. ஆனால்.. அம்மா சொன்னாளே; நாணுமீது அவளுக்கு அன்பென்று சொல்வதற்கில்லை. அதற்காக இப்படிப் பழி சுமத்திவிடுவாளா?… அன்று தான் நாணு யாரோ ஒருவனோடு பேசினான். ஏதோ கடன் கேட்பதாகச் சொன்னான். மூன்று நாளாக வேறு வர வில்லை. என்னவோ யார் கண்டது…?மானம் பெரிது என்று எதாவது செய்திருந்தால்…? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இவ்வளவு தொல்லை ஏற் பட்டிருக்காது சை! இதென்ன பிதற்றல், மனது மட் டும் குரங்குதான். என்னவோ செட்டி எழவு எடுத்து விட்டான் …. முட்டாள் மீனலோசனியாகிவிட்டேன் போல் இருக்கு.
‘அதற்கென்ன செய்திருக்கிறாய் என்று கேட்டேனே?’ என்று திரும்பக் கேட்டான் நாராயணன்.
அவள் பதில் சொல்வதற்குள் வெளியே பூட்ஸ் காலின் ஒசை கேட்டது. அடுத்தாற்போல ஒரு ஹெட் கான்ஸ்டேபிளும் கிழவியும் உள்ளே வந்தனர்.
‘உங்களைப் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழைத்துவரும் படி உத்தரவு செய்திருக்கிறார்’ என்றான் ஹெட் கான்ஸ்டேபிள் நாராயணணைப் பார்த்து.
நாராயணன் திகைப்படைந்தான். ஒரு நொடி மீன லோசனியின் முகத்தையும் விழியையும் பார்த்தான். அங்கு பரிவின் நிழலைக்கூடக் காணோம். மேலே செய்யக் கூடிய தென்ன? உறுதிகொண்ட குரலில் ‘இதோ வந் தேன்’ என்று புறப்பட்டான்,
மீனலோசனி தன்னந்தனியாய் இருந்தாள். அவளை அறியாமலே அவளுடைய.கண்கள் மஸ்லின் திரையிட்ட பலகணி வழியே தெருவில் போய்க்கொண்டிருந்த நாரா யணன் கான்ஸ்டேபிள் இவர்களைப் பின்தொடர்ந்தது. பார்வை தெருக்கோடிமட்டில்தானே என்றால் எண்ணிய இடத்தைப்போய்
அடையும் மனதொன்றிருக்கிற தல்லவா?
4
விசாரணைக்கு முதல்நாள் இரவுதான் நாராயணனுடைய தகப்பனாருக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்தன; நாராயணன் சொல்லிக்கொண்டிருந்தான். முழுவதும் நடந்தபடியே சொல்ல இயலுமா?
‘நான் தெரியாமல் செய்துவிட்டேன். அந்த வீட்டுக்குப் போக்குவரத்து உண்டு. அதன் விளைவாக தண்டனையாக அந்தப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு விட்டது.’
‘ரொம்ப சந்தோஷம்.’
‘நான் கேசுக்காக ஏதாவது உதவிசெய்ய வேண்டு மென்று கேட்க வரவில்லை என் குற்றத்தை தங்களிடம் சொல்லிவிட வேண்டுமென்ற ஒரே ஆசை. நாளாக ..’
வாக்கியம் முடிவதற்குள் தகப்பனார் அவ்விடம் விட்டுப் போய்விட்டார்.
மறுநாள் காலையில்தான் அவருடைய மனோபாவம் ஒருவாறாக விளங்கிற்று,
‘தம்பி! இது குலவாசனைபோலும். எங்கள் தாத்தா இப்படித்தான் ஒரு ஆசைநாயகனாய் இருந்தாராம்.’
வேப்பிலை இப்பேச்சைவிட ரொம்ப இனிப்பு என்ற எண்ணம் பிறந்தது நாராயணனுக்கு.
ஆனால் அதெல்லாம் பழங்கதை . கிளம்பு பாரிஸ் டர் வீட்டுக்கு’ என்ற உத்திரவைக் கேட்டதும், தகப் பனார் சொற்படி கேட்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.
5
விசாரணை நேரம். கச்சேரியில் ஒரே கூட்டம். சாட்சிப்பெட்டியில் மீனலோசனி ஏறி பிரமாணம் செய்த பொழுது இரைச்சல் அடங்கிவிட்டது. பிராஸிகியூடிங் இன்ஸ்பெக்டர் முதல் கேள்வியைப் போட்டார்.
கல்லறையைச் சூழும் சப்தம் நிலவிற்று. திடீரென்று கச்சேரியைச் சேர்ந்த தோட்டத்திலிருந்து காதற்குரல் கேட்டது. ‘க்காவு க்காவு!’ பிரிவின் பிறவிக் கவி ஒலமிட்டுக்கொண்டிருந்தான். அவ்வோலம் அவள் நெஞ்சத்தில் தைத்தது. அவள் கையெழுத்திட்டுக் கொடுத்த கம்ப்ளெய்ன்டின் விளைவுதானே இவ்வளவும்?
‘அம்மா! கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண் டாமா?’ என்று நாஸுக்காய்ச் சொன்னார் பிராசிகியூடிங் இன்ஸ்பெக்டர்,
பிறகு அவள் ஏதோ சாட்சியம் கொடுத்து முடித் தாள். அதைக்கொண்டு நாராயணனுக்கு ஒன்றும் மோசம் வரக் கூடியதல்ல. ஆனால் நாராயணனும் நகையுமாய் பார்த்ததாக இதர சாட்சிகள் சொன்னால் மாஜிஸ்ட்ரேட் என்ன செய்யக்கூடும்? செட்டியார் பணம் அந்த சாட்சிகளுக்குப் போன விஷயம் மாஜிஸ்ட் ரேட் எப்படி அறியக்கூடும்?
நாராயணன்மீது குற்றச்சாட்டுப் படிக்கப்பட்டது. தான் குற்றவாளியல்ல என்று வாதித்தான்.
பத்து தினக்களுக்குப் பிறகு அவன் தரப்பிலும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. லாபம் ? மகனுக்கு மூன்று மாதம் தண்டனை விதிக்கப்பட்ட விஷயத்தை அறிந்த தந்தை ஜாமீனுடன் கோர்ட்டுக்குச் சென்றார். நாராயணன் சொன்னான். இனி ஒன்றும் தேவையில்லை. கர்மத்தின் பலனை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஞானமேனும் உதிக்கும். அப்பீல் பேச்சைத் தள்ளுங்கள்.’
‘போடா மடையா ! கர்மமாம் புடலங்காயாம் ! அப்பீல் கொடுத்துவிட்டுத்தான் மறுகாரியம்.’
6
ஜாயிண்டு மாஜிஸ்ட்ரேட் அப்பீலைக் கேட்டுக் கொண்டிருந்தார். கச்சேரி வெளியே வராந்தாவில் ஏதோ ஆட்சேபணை சமாதானம். பிறகு கவலை தோய்ந்த முகத்தோடு கூடிய அழகி ஒருத்தி உள்ளே நுழைந் தாள் .ஒரு நிமிஷம் அங்குமிங்கும் பார்த்தாள். ஜாயி ண்டு மாஜிஸ்ட்ரேட் பாட்டுக்கு உட்கார்ந்திருந்தார், நாராயணன் தன்னுடைய வக்கீலுக்குப் பின்னால் கனவில் சிரிப்பவனைப்போல் உட்கார்ந்திருந்தான். பெண் நுழைந் ததும் வக்கீல் பேச்சை நிறுத்திவிட்டார்.
அந்த நிசப்தத்தில் கேட்டது’ பழய குயிலின் குரல். ஆற்றங்கரைக்கு அப்பாலிருந்து. ‘க்காவு ! க்காவு!’ காதல் தீப்பிடித்து தணிய ஏங்கும் பிரிவினையின் குரல்! அவள் காதிலும் அக்குரல் விழுந்தது. தன் கையிலிருந்த மனுவை மாஜிஸ்ட்ரேட்டிடம் துணிவுடன் நீட்டினாள்.
ஜாயிண்டு மாஜிஸ்ட்ரேட் அதை வாங்கி பன்முறை படித்தார். அம்மனு அவரைக் கலங்க அடித்துவிட்டது. கலவரமடைந்த காதலி ஒருவள் தன் செய்கையின் பிச கை உணர்ந்து அதன் வினைவைமட்டும் இப்பொழுது தடுக்கப் பார்க்கிறாள். இது கலை உலகிலும் நீதி தர்மத் திலும் ஏற்கக்கூடியது, அழகியது. ஆனால் சட்டத்தில் இதற்கு இடமுண்டா? சட்டம் கவனிப்பது செய்கையை; உணர்ச்கிக்குக் கௌரவம் ஏது? இருந்தாலும் சட் டத்தை அமுலுக்குக் கொண்டுவருவோர் மனிதர் தானே? இரக்க மேலீட்டில் இரண்டொரு வார்த்தை யேனும் சொல்லுவது அவருடைய கடமையென்று நினைத்தார்.
அம்மா! ரொம்ப அனுதாபப்படுகிறேனென்று சொல்வதைத் தவிர நான் செய்யக்கூடியதொன்றும் காணோம். நாம் சட்டத்திற்கு அடிமைகள்;குற்றவாளியை இப்படியே விட்டுவிடுவது என்பது சட்டமறியாத விஷயம்.’
நாராயணனை மீட்க வந்த மீனலோசனியின் மனக் கோட்டை இவ்விதம் இடிந்து வீழ்ந்ததும் கனவில் நடப் பவளைப்போல் வீடு திரும்பினாள்.
7
அன்று முன்னிரவிலேயே அவள் படுக்கைக்குச் சென்றுவிட்டாள். ஜன்னலின் மஸ்லின் துணியைத் விட்டு வெளியே பார்த்தாள். வானத்து இருள் பெருக் கில் நக்ஷத்திரங்கன் தத்தளித்துக்கொண்டிருந்தன.
சிற்சில சமயம், மனவேதனையில் வாய் தானே முணு முணுக்க ஆரம்பித்துவிடும். அவள் பேசிக்கொண்டிருந் தாள். ‘என் இன்பத்திற்கு நானே நமனாகி இருக்கவேண் டியதில்லை…செட்டியார் முழுவதும், அம்மா ஓரளவும் கம்ப்ளெய்ன்ட் கொடுக்கும் எல்லைக்கு என் மனத்தை தூண்டிவிட்டனர். இனி? நாணுவைப்பற்றி கண்ணீரும் கனவும் தான் மிச்சம். நான் செய்ததை அழிக்க எனக்கு சுதந்திரமில்லையாம், மாஜிஸ்ட்ரேட் சொல்லுகிறார். நாம் எல்லாம் சட்டத்தின் அடிமைகளாம். ரொம்ப பேஷ் ! மீனலோசனி……
நேரம் கழிந்தது. நகரம் முழுவதும் தூக்கத்தின் திரைக்குள் மறைந்தது, வண்டி காடிகளின் ஓசை எட் டாக்கையில் தேய்ந்தன. ஆனால் அவளுக்கு மட்டும் தூக் கம் வரவில்லை. இரவின் அற்புதங்கள் அவள் புலன்கள் மீது வந்து மோதின. எங்கோ இருந்து திகிலடைந்த ஒரு குருவியின் குரல், அல்லது இருளைப் பெருக்கித்தள்ள முயலுவதுபோன்ற தென்னையின் தலையசைப்பு, அல்லது விலங்கிட்ட முரட்டுக் கைதி ஒருவன் கலாட்டா செய் வதுபோல் மணிக்கொருமுறை எழுந்து ஒடுங்கும் தாஸின் ஓசை……நேரம் தொலையாதா?
வெள்ளி முளைத்து. தாரகைக் கூட்டம் சவம்போல் வெளுத்த வேளையில் தூக்கம் அவளை வந்து கவ்வியது.
சூரியன் மரக்கிளைகளுக்கு மேலே வந்த பிறகுதான் அவள் விழுத்தெழுந்தாள். ஒன்றிலும் பற்றில்லை. காபியை மாடியிலேயே வரவைழத்துச் சாப்பிட்டாள்.
•தூ! என்ன கசப்பு! என்ன கசப்பு!’
‘அப்படியா’ என்று கேட்டுக்கொண்டே வந்தான் நாராயணன். ஜாயிண்டு மாஜிஸ்ரேட்
அவனுக்குச் சாதகமாகத் தீர்ப்புச் சொல்லிவிட்ட நிமிஷம் கால்கள் இங்கு இழுத்து வந்தன.
‘நாணு!….. நல்ல வேளை! நாணு!’ என்று சொல் லிக்கொண்டே பாய்ந்து போய் அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.
அந்த அணைப்பிலிருந்து நாராயணன் மெதுவாக விடு வித்துக் கொண்டான். அந்தச் செய்கையில் அவளுக்கு விகற்பம் தோன்றவில்லை. ஆர்வம் மிஞ்சிவிட்டதென்று அவன் ரஸிகத் தன்மையோடு தெரிவிப்பதாக நினைத் தாள். ஆனால் அடுத்தாற்போல் ‘நான் திருடினேன் மறுக்கவில்லை. காதல் அது இது என்று கொஞ்சிச் சொன்னவளுக்கு என்னால் ஒரு நகை நஷ்டமானால் என்ன மூழ்கிவிடும்! என்று கேட்ட பொழுதுதான் அவன் செய்கை வெறுப்பின் விளைவு என்று அறிந்தாள்.
‘நாணு? சத்தியமாகத் சொல்லுகிறேன்-நீ எடுத்திருக்கமாட்டாய், தெரியும்.’
‘கேள். ஒரு வார்த்தை; அன்பின் மீது பாரத்தைப் போட்டு அதை எடுத்தேன், ஒரு முடையை அடைக்க வேண்டி. நீ என்னை திருடனாக்கிவிட்டாய். போகட்டும் இப்பொழுதாவது என் செய்கையின் தன்மையை அறிவாயல்லவா?-இதோ திருடன் நகையைத் திருப்பித் தருகிறான் பார்-இந்தா.
மீனலோசனி முன்னே நகர்ந்தாள். நீட்டிய நகையை வாங்கிக்கொள்ளவல்ல; அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க.
‘நாணு ! நாணு! நானாகக்குற்றம் சாட்டவில்லை. கிழவி சொன்னாள்–அவள்கூட இல்லை. செட்டியார் ஐயா நிச்சயமாய்ச் சொன்னார்-எனக்கு மூளை குழம்பிப் போச்சு…’
‘செட்டியார் ஐயா’ என்ற பேச்சைக் கேட்ட நாரா யணன் பித்தனைப்போலானான்.
‘ஹ ஹ ஹா ! செட்டியார் ஐயாவா?- சபாஷ் உன்னை விலைகொடுத்து ஒரு எஜமானர் வாங்கியிருக் கிறாரா?’
(நகையை அவளிடம் எறிந்துவிட்டு) ‘வெட்கக்கேடு அன்பைத் தேடி இவ்விடம் வந்தேன். யாரோ செட்டி யார் குறுக்கிடுகிறார். எஜமான் காதலனை ஒழிக்கப் பார்த்த கதை-நீ ஒரு கைதேர்ந்த தொழிலாளி….
‘நாணு! நாணு! இப்படியெல்லாம் பேசாதே-சத் தியமாய்ப் பஞ்சபூத சாட்சியாய் சொல்லுகிறேன்- ஆசை ஒன் மேலே; ஆத்மா ஒன்மேலே-உடம்பைத் தள்ளு–அறு குலதர்மத்துக்குக் கட்டுப்பட்டது.நாணு!’
மீனலோசனி விம்மி அழுதுகொண்டே நெடுஞ்சாங் கிடையாக அவன் காலில் விழுந்தாள்.
‘அம்மா! எனக்கு வேதாந்தம் தெரியாது. இங்கே செட்டியாரே அமுல் நடத்தட்டும். நமஸ்காரம் தாஸி யம்மா.’
மறுவினாடி அவனைக்காணோம்; அவன் பேச்சுமட்டும் கோவில் மணிகளைப்போல் அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன.
அன்றிரவே நாராயணனும் அவனுடைய தகப்ப னாரும் ஊரைவிட்டு பட்டிணத்திற்குக் கிளம்பிய விஷயம் யாருக்கும் தெரியாது.
பட்டிணமடைந்த மூன்றாம் நாள் மாலை கடற்கரை யோரத்தில் நாராயணன் தன் நண்பன் ஒருவனோடு காற்று வாங்கிக்கொண்டிருந்தான். கடல் எப்போதும் போல் ஓலமிட்டுக்கொண்டீருந்தது.
‘தினமனிப் பேப்பர் அரையணா!’
நண்பன் ஒரு இதழை வாங்கி மௌனமாய்ப் புரட் டிக்கொண்டிருந்தான். நாராயணனுடைய பார்வையும், நெஞ்சமும் வானமும் கடலும் முத்தமிடும் ரேகையைத் தாண்டிச் சென்றிருந்தது. ‘நாணு உங்களூர் விஷயம், கேள்’ என்றதும் நாராயணன் காரணமின்றி திடுக் கிட்டுப் போனான்.
‘…நீ எங்கிருந்தாலும் (சரி.உன் பேச்சு என்னைத் தின்றுவிட்டது. ஆசையென்பது உடலைப் பொறுத்த தல்ல என்ற தத்துவம் உனக்கும் உன்னைப்போன்ற வர்க்கும் புரியாது. நான் உன்னை எள்ளளவும் ஏமாற்ற வில்லை. காசுக்காக அவனிடம் வேஷம் போட்டேன். அது என் ஜாதி தர்மம்; வேறு பிழைக்க வழி; ஐந்து அறிவையும் ஆத்மாவையும் உனக்குக் காணிக்கையாக்கி இருந்தேன். நீ அவற்றை மதிக்கவில்லை. இனி மதிக்க வேண்டிவரும். உனக்கில்லாமல் நான் வேறு யாருக்காக வாழவேண்டும்?…
இக்கடிதம் நேற்று காவேரியும் அரசலாறும் பிரியும் கலுங்கில் சிக்கிய ஒரு சவத்தின் புடவைத் தலைப்பில் இருந்தது. ஆற்றில் விழுந்த அழகி தாஸி வகுப்பைச் சேர்ந்த யுவதியென்று, தெரிகிறது. ஊரெங்கிலும் இதே மேச்சா யிருக்கிறது.’
‘பாவம்’ என்றான் நண்பன்.
நாராயணன் மூச்சுவிடவில்லை. வானமும் கடலும் தழுவும் திக்கை நோக்கிப் பெருமூச்செறிந்தான்.
– பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 1944, ஹிமாலயப் பிரசுரம். இரண்டாம் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை. இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகையில் வெளியானவை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |