ராகு கேது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2024
பார்வையிட்டோர்: 861 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என் குழந்தைக்கு பொம்மை வைத்துக்கொண்டு விளையாடும் வயது வருமுன்னமே என் மனைவி ஒரு ‘செல்லுலாயிட்’ பொம்மை வாங்கிக்கொண்டு வந்துவிட் டாள். பணநெருக்கடியான நிலைமையில், அடுத்த வாரத்திற்கு அரிசி வாங்க வைத்திருந்த தொகையை இவ்விதமாய் செலவழித்ததைப்பற்றி முதலில் சண்டை போட்டேன். பிறகு அப் பொம்மையின் அழகையும் அமைப்பையும் கவனித்ததில், பணப் பஞ்சத்தின் ஞாப கமே மறந்துவிட்டது. அதனுடைய மழமழப்பான உடலும், கன்னங்களின் ரோஜாச் சிவப்பும், அதிருஷ் டப்பள்ளமிருக்கும் முகவாய்க்கட்டையும், சிரித்து மயக் கும் நீலநிறக் கண்களும் என் நெஞ்சைக் கொள்ளை கொண்டன. 

ஆகவே, அந்த பொம்மையை என் மேஜையின் மேலேயே வைத்துக்கொண்டுவிட்டேன்-சதா பார்த்து ஆனந்திக்கலாமென்று. 

அம்புலு-என் ஒரு வயதுப் பெண்-‘செல்லுலாயிட் பொம்மையின் பேரில் பொறாமைகொண்டோ என் னவோ, தானும் என் மேஜையின்பேரில் உட்கார வேண்டுமென்று பொருள்படும்படி ஊமையழுகையாக அழுது தீர்க்கத் துவக்கிவிட்டாள். அதை உத்தேசித்து அவளையும் என் மேஜையின் மேலேயே உட்காரவைத் துக் கொள்வது வழக்கம். 

இப்படியிருக்கும்பொழுது, அம்புலுவுக்கு ஊசி போல பல் முளைக்க ஆரம்பித்தது ஒரு விஷயத்தில் ஆபத் தாகிவிட்டது. அதுவரையில் பொம்மையின் காலையும் கையையும் பிடுங்கி இழுத்து விளையாடிக்கொண்டிருந்த வள் பொம்மையைக் கடிக்க ஆரம்பித்துவிட்டாள் முக்யமாய், முள் இலவமரத்தினுடைய பூவின் சிகப்புப்போன்ற பொம்மையின் வாயையும் அழகிய மூக்கையும் அடிக்கடி கடிக்கவே, பொம்மை மூக்கரையனைப் போலானதல்லாமல், வாயில் ஒரு துவாரமும் ஏற் பட்டு நிஜமான வாய் மாதிரியே ஆகிவிட்டது. 

பொம்மைக்கு இந்த கதி வந்த சில தினங்களுக்குள், ஒரு நூள் அதைக் குழந்தை வேகமாய் இழுத்து விளையா டியபொழுது பொம்மையின் தலையும் உடலும் வேறாகி விட்டன. எவ்வளவோ யுக்தி செய்துபார்த்தும் என்னால் அவைகளைச் சேர்க்கக்கூடவில்லை. பொம்மையின் தலை யொரு பக்கமும் உடலொரு பக்கமும் கிடக்கவே, எனக்கு ஏதோ திகிலுண்டாயிற்று. கொல்லைப்புறத்தில் அவற்றை எறிந்துவிட்டு வரலாமென்று எழுந்திருந்தேன். 

‘நன்னாயிருக்கு ! கிழிஞ்ச கூடைக்குக் கடுதாசி போட்டு அடுப்புக்கறி வாரி வைக்கறேன். புதுப் பொம் மையை எறியறேன்கரேளே. கீழே வைங்கோ, சொல் றேன். அதை நான் புளிபோட்டு ஒட்டிவிடரேன்.’ என்று என் மனைவி ஆக்ஷேபித்தாள். 

மனைவியுடன் எதிர்க்கட்சி பேசுவது கொஞ்சம் முன் யோசனையற்ற காரியமென்று எனக்குத் தெரியும். 

‘கண் காணாமல் வைத்துவிடுகிறேன் ; பிறகு எடுத் துக்கொள் என்று சொல்லிவிட்டு வெந்நீர் அடுப்பிற்கரு கில் ஒரு மாடத்தில் வைத்தேன். திரும்பிக் கூடத்திற்கு வந்த பிறகும்கூட அந்த மூக்கின் அவலக்ஷணமும் திறந்த வாயும், முண்டமான பொம்மையின் கோரமும் என் மனதைவிட்டு அகலவில்லை… 

அன்று ஞாயிற்றுக்கிழமை. மத்யானமாய் பித்தத் தலைவலி வரும்போலிருந்தது. புஸ்தகம் படித்துத் துன் பத்தை மறக்க முயன்றும் படிப்பு ஓடவில்லை. வெளியே போவோமென்றால், உச்சிக்காலத்துச் சூரியன் கொழுந்து விட்டெரிந்தான். சற்று கட்டிலிலாவது படுத்துப் புரளுவோமென்று கட்டிலருகில் போனேன். எதிரில், கதவில்லாத அலமாரி ஒன்றில் கழுத்தில்லா ஜடா முனி போல் செல்லுலாயிட் பொம்மையின் முண்டம் உட் கார்ந்திருந்தது. பக்கத்தில் உருண்டு கிடந்த பொம்மைத் தலை என்னைப் பார்த்து இளித்தது. என் மனைவி யைக் கூப்பிட்டு, ‘இந்த அபசவ்யத்தை இங்கே யார் கொண்டுவந்து தொலைத்தது?’ என்று சினந்தேன். 

‘அன்னிக்கே பிடிச்சு இங்கேதானே இருக்கு. அம்புலு இதுதான் வேணும்னு கத்தரா. ஒரு பொம் மைக்கு ரெண்டாச்சோன்னோ ! கொழந்தைக்கு சந்தோ ஷம் தாங்கல்லே` என்றாள் மனைவி. 

‘அதிருக்கட்டும். விளையாடாத வேளையில் வெந்நீர் மாடத்திலே இருக்கக்கூடாதோ?’ என்றேன். 

‘இதோ ஓட்டப்போரேனே பொம்மையை ? புளி யங் கொட்டையை ஊரவச்சிருக்கேன். சாயங்காலமா பசையாகும். அப்பறம் ஒட்டணும் ; அதுக்காகத்தான் இங்கே வச்சிருக்கேன்’ என்று சமாதானம் சொன்னாள். 

நான் பேச்சை வளர்க்கவில்லை. என்ன பிரமாதம். முற்றத்தின் பக்கமாய்த் திரும்பிப் படுத்துக்கொண்டால் போயிற்றென்று எண்ணி, பொம்மைக்கு முதுகு தெரி யும்படி படுத்துக்கொண்டேன். ஆயினும் என் முதுகின் வழியாய் இரண்டு நீலக் கருங்கண்கள் என்னைக் கூர்ந்து நோக்கின. மனது சற்று கலவரமடைந்தது. 

அதற்குள் என் மனைவி இடுப்பில் குழந்தையுடனும், வலது கையில் ஈயம் பூசிய அடுக்குடனும் வந்து, ‘அடுத் தாத்துக்குப்போய் தோசைமா அறைச்சிண்டு வரேன்’ என்று சொன்னாள். 

குழந்தையை விட்டுவிட்டு நீ மட்டும் போய் வா’ என்றேன். 

‘தலைவலின்னேளே. கொஞ்சம் தூங்குங்கோ. அம்புலுவை இங்கே விட்டா விஷமம் செய்யும்’ என்று வாசற்கதவைச் சாத்திக்கொண்டு வெளியே போய்விட்டாள். 

அப்பொழுது, ஓடினால் துரத்துவது என்ற பழ மொழி ஞாபகத்திற்கு வரவே, அலமாரியைப் பார்த்துப் படுத்துக்கொண்டால் பொம்மை என்னசெய்யமுடியு மென்று திரும்பிப் படுத்துக்கொண்டேன். ஒரு கரப்பு முண்டத்தின் கழுத்தில் உட்கார்ந்து, குதிருக்குள் நெல் இருக்கிறதா என்று பார்ப்பதுபோல், என்னவோ பரி சோதித்தது. பொம்மையின் தலை பக்கத்தில் உருண்டு கிடந்தது. ஆ! என்னே அந்நீலக்கண்களின் பார்வை ! எனக்கிருந்த அவ்வளவு தைரியமும் ஓடிவிட்டது. எழுந் திருந்து கொல்லைக் கிணற்றடியில் வேப்பங் காற்று வாங் கலாம் என்று கிளம்பினேன். 

•கொராக்’ என்று சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ‘செல்லுலாயிட்’  பொம்மையின் தலை நிமிர்ந்து உட்கார்ந்திருப்பதுபோல் பொம்மையின் கழுத்து அலமாரிப் பலகையில் பொருந்தியிருந்தது. இதென்ன ஆச்சர்யம் என்று யோசிப்பதற்குள், ‘அப் பேன்!’ என்று யாரோ கூப்பிட்டதுபோலிருந்தது. சுற்றுமுற்றும் ஒருவரையும் காணோம். 

‘இங்குதானப்பேன்’ என்று இரண்டாவது தரம் சப்தமெழுந்தபொழுது பார்த்தேன். இரண்டு நெல்லளவு திறந்திருந்த பொம்மையின் வாயானது அதிக மாக விலக, அதினின்றும் பேச்சுப் புறப்பட்டது. 

இதென்ன விசித்திரமாயிருக்கிறதே என்று மறுபடி கட்டிலில் உட்கார்ந்தேன். 

‘அப்படி உட்காரு. ராகு கேது கதை தெரியுமோ?’ என்றது. பொம்மையின் தலை கேள்வி கேட்டது ஒரு காரணம் ; என்னை முட்டாளாக்கி அவ்வளவு லகுவான சாதாரணமான கேள்வி கேட்டது மற்றொரு காரணம். சரியாகப் பதில் சொல்லக்கூடாதென்று நினைத்து தெரியாது என்றேன். 

‘அப்படியென்றால் கதையைக் கேள்’ என்று தொடங்கிற்று. 

அதிமதுரம் என்னும் கிராமமொன்றுண்டு. அதில் நாணுவய்யரென்ற மிராசுதார் ஒருவர் இருந்தார். அவ ருக்கு ஒரே பெண் சுவர்ணாம்பாள் ; அவருடைய மனைவி தங்கம்மாள் குழந்தை பிறந்த பத்தாவது நாளே சிவலோக பிராப்தி அடைந்தாள். அதில் நாணுவய்ய ருக்கு மனது மிகவும் உடைந்துவிட்டது. ஆனால், தாயா ரைப் புகைப்படம் பிடித்ததுபோன்ற குழந்தையைப் பார்த்து ஒருவாறு தேறுதல் அடைந்து காலம் கடத்தி வந்தார். 

சுவர்ணாம்பாளுக்கு எட்டு வயதானபொழுது நாணு வய்யருக்கு நாற்பத்திஐந்து வயது. தவிர அவருக்கு ஏதோ வியாதி; ஆஸ்பத்திரியில் நீர்ரோகமென்று சொல்லிவிட்டார்கள். அதுமுதற்கொண்டு அவருக்குக் கவலை அதிகரித்தது. தனக்கு வியாதி முற்றி உயிருக்கு முடிவு வரும் முன்னமே, எப்படியாவது பெண்ணுக்குக் கல்யாணம் செய்துவிடவேண்டுமென்ற அவா ஏற்பட் டது. அதிருஷ்டவசமாய் நல்ல இடத்தில் ஒரு வரன் கிடைத்தது. மாப்பிள்ளை மூன்றுதரமும் ஆறாவது பாரம் தேறாமல் ஊருடனே வசித்துவந்தான். ஆனால் ஏராளமான ஐவேஜி. மாப்பிள்ளை லக்ஷ்மணன் லக்ஷண மாயும் இருந்தான். 

ஆகவே வெகு சீக்கிரத்தில், சுவர்ணாம்பாளுக்கு வெகு விமர்சையாய் அதிமதுரத்தில் கல்யாணம் நடந் தது. கல்யாணம் ஆனபிறகு மாப்பிள்ளையை இரண்டு மாதம் வரையில் நாணுவய்யர் வீட்டில் வைத்துக்கொண் டிருந்தார். சுவர்ணத்திற்குக் கல்யாணமென்றால் கழுத் தில் அதிகப்படியாகத் திருமங்கலியம் ஏறியிருந்ததைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. ஒருவேளை, குழந்தை கள் மரக்கட்டை பொம்மைகளுக்குக் கல்யாணங்கள் செய்வதுபோல், ஏதோ ஒரு வேடிக்கையென்று நினைத் திருக்கலாம். 

ஏனெனில் அடிக்கடி, லக்ஷ்மணனைப் பார்த்து ‘கட் டம் விளையாட வா, ஆம்படையான்’ என்று தொந்தரவு செய்தாள். 

முதலில் லக்ஷ்மணனுக்குக் கொஞ்சம் வெட்கமா யிருந்தது. நாளாக நாளாக அதுவும் மறைந்தது. மாப் பிள்ளையும் பெண்ணும் சந்தோஷமாக விளையாடினார்கள். பல்லாங்குழி, புளியம்விரை, சொர்க்க படம்; இல்லை யென்றால் கதைப் புஸ்தகம், பாட்டு-இப்படியெல்லாம் காலம் கழிப்பார்கள். இரண்டு மாதம் கழித்து மாப் பிள்ளை ஊருக்குப் போய்விட்டான்… 

ஆறு மாதங்களுக்குப் பிறகு, நாணுவய்யர் ஒருநாள் கொல்லையில் வாழைமரங்களிலுள்ள சரகுகளையெல்லாம் பிடுங்கிச் சீர்செய்துகொண்டிருந்தார். சுவர்ணம் கூடத்திலிருந்து கொல்லைப்புறம் ஓடிவந்து, ‘அப்பா! தபால்காரன் தந்தி கொண்டுவந்திருக்கிறான், என்றாள். கிராமாந்தரங்களில் தந்தியென்றால் நடுக்கம்தான். உடம்பெல்லாம் ஒருதரம் குபீரென்றுவிடும். மார்பு படபடக்கும். தெருப்புறம் வந்து கை விரல்கள் நடு நடுங்க நாணுவய்யர் தந்தியைப் பிரித்துப் பார்த்தார். இடி விழுந்ததுபோல் ‘லக்ஷ்மணனை நல்லபாம்பு கடித்து விட்டது’ என்று ஒரு வாக்யமிருந்தது.உடனே மூர்ச்சை யாகிவிட்டார். தெளிந்து எழுந்திருந்தபொழுது, குழந்தை தந்தியை வைத்துக்கொண்டபடியே ‘என்னப்பா உடம்பு? தந்தியில் என்ன எழுதியிருக்கு ?’ என்று கேட்டாள். தகப்பனார் என்ன பதில் சொல்லுவார்? 

மறு ரயிலில் தகப்பனாரும் பெண்ணும் சம்பந்தி வீட் டிற்குக் கிளம்பிவிட்டார்கள். சம்பந்தி வீட்டு வாசலி லேயே எல்லாம் மனித யத்தனங்களுக்கு மிஞ்சிவிட்ட தென்று தெரிந்தது; திண்ணையில், ஒரே கூட்டமும் கூக்குரலும்தான். பட்டுப்போன தென்னைபோல அங்கு சம்பந்தி உட்கார்ந்திருந்தார். நாணுவய்யரைப் பார்த் ததும் ‘ஹோ’வென்றலறினார். நாணுவய்யரும் புலம்பி னார். தகப்பனாரைப் பார்த்து சுவர்ணமும் அழுதாள்.’ 

இந்தக் கட்டத்திற்கு வந்ததும் பொம்மை கொஞ் சம் பேச்சை மெதுவாய் தழுதழுத்த குரலில் சொல்லி, கடைசி வார்த்தைகள் வந்ததும் பெருமூச்சு விட்ட படியே நிறுத்திற்று. அதனுடைய நீல விழிகள் கரைந்து வருவதுபோல் அதன் கன்னங்களின்மீது கண்ணீர் வடிந் தது. எனக்கும் துயரம் எழுந்தது. நெஞ்சை அடைத் தது. எப்படியாவது வேறு திக்கை நோக்கிப் பேச்சைத் திருப்பவேண்டி, ஆமாம். ஏழெட்டு வயதென்றால் கல்யாணம் செய்யக்கூடாதே. சட்ட விரோத மாயிற்றே ? என்று வினவினேன். 

‘அந்தச் சட்டமெல்லாம் அப்புறம்தான் வந்தது. பாக்கி விஷயத்தைக் கேளு’ என்று மேலே சொல்லிற்று. 

‘லக்ஷ்மணன் இறந்த ஒருபிறைக்குள் நாணுவய்யரின் நீர்ரோகம் முற்றி மரணத்தை விளைவித்தது. சுவர்ணத் தின் புருஷன் இறந்ததில் அவளுக்குத் துயரமொன்றும் தெரியவில்லை. வானத்தில் ஒரு மின்னல் தோன்றி மறைந்ததுபோலிருந்தது ; அவ்வளவுதான். ஆனால் தகப்பனாரை இழந்தபோது தன்னுயிரே போவது போன்ற அளவிடமுடியாத துக்கம் புயல்போலெழுந் தது. ஐப்பசி மாதத்து அடைமழை மேகம்போல் சுவர் ணத்தின் மனதை இருளாக்கிவிட்டது. 

மறுபடியும் பொம்மை பேச்சை நிறுத்தியது. திரும்ப ஏதோ ‘கொராக்’ என்று சப்தம் கேட்டது. 

‘என்ன அந்த சப்தம்?’ என்றேன். 

*வெட்டியாகக் கேள்வி கேட்காதே. கேளு கதையை’ என்று பின்னும் சொல்லிற்று. 

‘மறதியென்பதில்லாவிட்டால் உலகம் நின்று போகும். சுவர்ணம் நாளடைவில் துக்கத்தை மறந்து விட்டாள். அப்பொழுது, பழய உறவைக் கொண்டா டிக்கொண்டு அங்கு ஒரு கிழவி வந்து சேர்ந்தாள். தனக் கும் ஒரு துணை வேண்டுமல்லவாவென்று நினைத்து, கிழவியைத் தன்னுடன் வசிக்கும்படி சுவர்ணம் கேட் டுக்கொண்டாள்.. 

இப்படிச் சில வருஷங்கள் சென்றன. வயது ‘பதி னாறு ஆயிற்று. வயது வந்ததும், என் கன்னங்களின் ரோஜாவைப்போல் அவள் தேகமுழுவதும் காந்தி வீசி யது. அவளுடைய வாய் மாதுளை முத்துப்போல் செக் கச்செவேரென்றிருந்தது. யௌவனத்தின் வெருண்டு மயக்கும் மான் கண்கள் பிறந்தன. அழகு கொஞ்சிற்று. அவளைப் பார்த்துவிட்டு அடிக்கடி கிழவி சொல்லுவாள்: நெல் பழுத்த சமயத்திலே, மழை பெய்யராப்பலெ. ஒன் கிளி அழகு யாருக்குப் பிரீதி ! கண்ணில் மணல் விழுந்தாப்பலே உறுத்தரது. துக்கிரி அதிருஷ்டம், புருஷனை தொடச்சூட்டுது ! 

பாவம் ! சுவர்ணத்தின் பேரில் என்ன பிசகு ? அவள் அழகிற்காவது லக்ஷ்மணன் இறந்ததற்காவது அவளா பொறுப்பு? 

இப்படி இருந்துவரும் நாளில், தென்னிந்திய நாடக மேடையில் கீர்த்திபெற்ற சபாபதி அதிமதுரத்திற்கு வந்தான். 

சபாபதியைப்பற்றி சுவர்ணம் பராபரியாகக் கேள் விப்பட்டிருந்தாள். சிறிய பெண்ணாக இருந்தபொழுது ஒருதரம் பார்த்ததாக ஞாபகம். சாதாரணமாக, வெறும் ஊர்வலத்தையும் கரகத்தையும் பார்க்கப் பிரி யப்படும் ஜனங்கள் சபாபதியைப் பார்க்க விரும்புவதில் என்ன ஆச்சர்யம் ? 

அதற்கு ஒரு நல்ல தருணமும் வாய்த்தது. சபாபதி யின் நண்பனொருவன் அவனை உத்தேசித்து ஒரு விருந் தளித்தான். ஊரிலுள்ளோர் அனைவரையும் அதற்கு அழைத்திருந்தான். சபாபதி நாடகமேடை சக்ரவர்த் தியாயிருந்ததைத் தவிர, உண்மையில் அழகிலும் அப் படியே இருந்தான். மாலையில், ஊரிலுள்ளோர் அவ னைப் பாடச்சொன்னார்கள். அவனுடைய பாட்டு எல் லோரையும் நினைவழித்தது. அவனுடைய கீதத்தைக் கேட்ட பிறகு, மரத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருக் கும் படகானது கயிறறுந்தால் உல்லாசமாய் ஜலத்தில் போகுமே. அதுபோல் சுவர்ணத்தின் மனம் தன் தளை களையெல்லாம் அப்புது உற்சாகத்தில் தெறித்தெறிந்து விட்டது. 

சபாபதியோவெனில், சபையில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தபோதிலும், பலமுறை கவர்ணத்தை நோக்கி திரும்பினான். அப்படியிழுத்தது அவளுடைய அழகுக் காந்தம் ! கூட்டம் கலைந்து சுவர்ணம் வீட்டுக் குப் போகுங்கால் இருவருடைய கண்களும் கலந்தன. 

வளர்ப்பானேன்? இப்பால் இருவருக்கும் நீதி வழுவிய காதலுண்டாகிவிட்டது. 

நாட்கள் கழிந்தன. சபாபதிக்கும் சுவர்ணத்திற் கும் நட்பு உண்டாகி, இரண்டு மாதத்திற்கு மேலிருக்கலாம். 

ஒரு நாள் காலையில் கிழவி பெண்ணைப் பார்த்து ‘என்னம்மா ! உடம்பெல்லாம் ஒரு மாதிரி இருக்கே- வயத்திலே வலி கிலியா ?’ என்று சாதாரணமாகக் கேள்வி கேட்டாள். 

அவ்வார்த்தைகள் விஷம் தோய்ந்த அம்புபோல் சுவர்ணத்தின் உள்ளத்தில் பாய்ந்தன. ‘ஒன்றுமில்லை’ என்று பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். 

அன்றையதினம் சாயங்காலமாய் தனிமையில் அவ் வார்த்தைகளைப்பற்றி நினைத்தபொழுது கட்டுப்பாட்டை மீறியதற்குத் தண்டனை வந்துவிட்டதாகத் தோன் றிற்று. ஊரில் சந்தி சிரிக்காமல் மானத்தை எப்படிக் காப்பாற்றுவதென்ற ஒரே கேள்விதான். மறுபடி சிந் தித்தாள். தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டால் உண்டாகக்கூடிய துணிச்சல் சுவர்ணத்தின் உள்ளத் தில் பிறந்தது. கிழவியிடம் போய் தைரியமாய் விஷயத் தைச் சொல்லவே, ‘அடி பாவி ! தலையில் கல்லைப் போட் டாயே ?’ என்று பலவாறாக முதலில் தூஷித்தாள். 

பிறகு பாட்டி ரகசியமாய் பல வழிகளில் வைத்யம் செய்தாள். ஒரு மாதம் சென்றது. பெண்ணின் முகத் தில் சோபை அதிகப்பட்டது. இதர 

அதிகப்பட்டது. இதர அடையாளங் களும் கொஞ்சம் தலைகாட்டின. கிழவியின் வைத்யம் பிரயோஜனப்படவில்லை. ஆகவே, எங்கேயாவது நகரத் தில் வசித்துவிட்டுப் பிறகு ஊர் திரும்பலாமென்று தீர்மானித்துக்கொண்டு அதிமதுரத்தைவிட்டுக் கிளம்பி விட்டார்கள். 

அதுமுதல் நம்முடைய ஊரில்-உன்னிடம் தெருவைச் சொல்லக்கூடாது-அவர்களிருவரும் ஒரு தனி ஜாகையில் வசித்துவருகிறார்கள்.’ 

இந்த இடம் வந்ததும் சற்று நிறுத்தி, ‘அன்றொரு நாள் காலையில், பஜனை சுற்றிவரும்பொழுது, தெருவில் ஒரு ஆண் குழந்தை முண்டமும் தலையுமாகக் கிடந்தது என்று ஊர் அமக்களப்பட்டதே தெரியுமா?’ என்று வினவிற்று. 

‘அந்த இழவையெல்லாம் யார் கண்டது ? கேள்வி தான். பாரத தேசத்து தர்மக்கொடி, கற்பின் கீர்த்தி, மண்ணில்-சாக்கடையில்-புரட்டி எடுக்கப்படும் கலி காலம் ! ஹும் ! சிவ, சிவ’ என்று சொல்லித் தலையில் அடித்துக்கொண்டேன். 

‘அப்பேன் ! ரொம்ப விசும்பாதே ! கொஞ்சம் தயை, ஈரம், அன்பு இவைகளிருக்கட்டும் நெஞ்சத்தில். காமன் செய்தான் ; சுவர்ணம் கேவலம் கருவி. வெள் ளத்தில் புரண்டோடும் துரும்படா, தெரிந்ததா?’ என்று சொல்லியவண்ணமே நீலக்கண்களினின்றும் நீர் விடுத்தது. என்னையறியாமலே எனக்கும் கண்களில் ஜலம் வந்துவிட்டது. 

‘அப்பேன்! உயிரும் அதன் லீலையும் சாஸ்திர வரம்பு, பேனா வரம்பு, பீரங்கி பயம், தூக்குமரத் தண்டனை-இவைகளுக்கெல்லாம் சளைக்காது. ஒடுங்காது, தலை வணங்காது. உங்கள் வீட்டுப் பூவரசமரம் அடுத்த வீட்டு இரண்டாங்கட்டில் பழுத்த இலைகளை உதிர்க்கக் கூடாது என்று தடுக்க ஒரு சட்டம் போடு பார்க்கலாம். அப்பேன் ! இயற்கையை ஜெயிப்பது கஷ்டம். ஆகை யால், உங்கள் வாய்களுக்கெல்லாம்…’ 

‘ஆமாம், இதெல்லாம் சொல்லுவதின் பொருள் விளங்கவில்லையே ?’ என்று இடைமறித்துக் கேட்டேன். 

‘அதைத்தானப்பா சொல்லவருகிறேன். அது ரகசியம். சத்யமாய் வெளியிடாதே. சுவர்ணம் இந்த ஊரிலேதான் பிள்ளைபெற்றாள். அப்பொழுது கிழவி ஒரு யோசனை சொன்னாள்… 

அப்பேன் ! நமது தேசத்தில் மானம் பெரிதல்லவா? திருட்டுத்தனமாய், உள்ளத்தால் மலை மலையாய்ப் பாவங்கள் செய்யலாம். எல்லா நீதிகளையும் விதிகளை யும் நம்முடைய முறையற்ற செய்கைகளால் காலைவாரி விட்டுவிடலாம். அதைக் கேட்பாரில்லை. ஆனால், வாய்ப் பேச்சில் மட்டும் வழக்கங்களையும், தர்ம போதங்களையும் விட்டுக் கொடுக்காமலிருந்தால் போதும்-நல்ல பெயர் வந்துவிடும். 

சுவர்ணத்திற்குப் பிள்ளை பிறந்ததென்று சொன்னே னல்லவா ? அதை அப்படியே எடுத்துக்கொண்டு கிழவி வெளியே போய்விட்டாள்.. 

‘என்னவோ ராகு கேது கதை தெரியுமா என்று ஆரம்பித்துவிட்டு இந்தப் பாழாய்ப்போன கதையை எடுத்தாயே, நியாயமா?’ என்று உருக்கமாய்க் கேட்டேன். 

‘அதையே தான் சொல்லிவருகிறேன் கேள். அமிருத கலசத்திலிருந்து தேவர்கள் எல்லோருக்கும் அமிருதம் வழங்கப்பட்டபொழுது, துரதிருஷ்டவசமாக சுவர் ணாம்பாளுக்குக் கிடைக்கவில்லை. கைம்பெண்கள் அசுரர் களாம், தெரிந்ததா? என்ன இருந்தாலும், அப்பேன் ! அசுரர்களுக்கும் ஆசை என்பது உண்டு. எல்லோரையும் போல் வெளிப்படையாய் இன்பமனுபவிக்க முடியாம லிருந்ததால், சுவர்ணம் ரகசியமாய் இன்பத்திலீடுபட்டு விட்டாள். அதன் விளைவாக ஏற்பட்ட குழந்தையைக் கடைசியாக வெளியே எடுத்துக்கொண்டுபோன கிழவி, கரண்டியால் ராகு கேதுபோல் இரண்டு பாகங்களாக்கித் தெருவிலே போட்டுவிட்டாள். அதுதானப்பா! இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்வரையில், நடக்க இட மிருக்கும் வரையில் நமது தேசம் முன்னுக்கு வராது 

இவ்வார்த்தைகளைக் கேட்டு ‘சிவ, சிவ’ என்று காது களைப் பொத்திக்கொண்டேன். 

பொம்மை மேலும் சொல்லிற்று. 

‘என்றைய தினத்தில் ஏந்த நேரத்தில் அந்தக் கிழவி இக்கிராதகச் செயலைச் செய்தாளோ, அதே கணத்தில், உன் மேஜையின் மீது ஜோராய் உட்கார்ந்திருந்த எனக்கு நெஞ்சாங்குழியில் ஏதோ படக்கென்று அறுந்து விட்டது. அதனால்தான் மறுநாள் குழந்தை அம்புலு என்னை எடுத்து விளையாடியபோது தலை வேறு உடல் வேறாகிவிட்டது-விளங்கிற்றா அப்பேன்! ‘சிவ சிவ’ என்பவற்றையெல்லாம் ஆற்று வெள்ளத்தில் போடு. உனக்குள்ளது பிறனுக்கும் என்று கருது. பூத தயை…’ 

பின்னும் பொம்மை ஏதாவது சொல்லியிருக்கும். அதற்குள், ‘என்ன அலமாரியைப் பாத்துண்டு பூஜை பண்ராப்பலெ உட்கார்ந்திருக்கேள்? தலைவலி தேவ லையா ?’ என்று திடுக்கிடும்படி பின்னால் வந்து கேள்வி போட்டாள் என் மனைவி. நான் யாதொரு பதிலும் சொல்லவில்லை. 

அப்போது அலமாரியில் முன்போல் ‘கொரக்’ என்று சப்தம் கேட்டது. பார்த்தேன். பொம்மையின் தலைக்குள்ளிருந்து ஒரு சிறிய கரப்பு வெளியே ஓடிற்று. அத்துடன் தலை உருண்டு அலமாரியிலிருந்து கீழே விழுந் தது. உடனே அந்த பொம்மையின் தலையையும் முண் டத்தையும் அப்படியே கையிலெடுத்துக்கொண்டுபோய், கொல்லைப்புறத்து வாய்க்காலில் எறிந்துவிட்டுத் திரும்பி னேன். என் காரியத்தைப் பார்த்து என் மனைவி கால் மணி நேரம் தோசைமாவும் கையுமாய் ஸ்தம்பித்து நின்று ‘கண்ணில் என்ன ஜலம் ?’ என்றாள். என்னவென்று சொல்வது? 

நான் பாட்டுக்கு அம்புலுவுடன் ‘கில்லாப்பிறண்டி’ ஆட ஆரம்பித்தேன்.

– பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 1944, ஹிமாலயப் பிரசுரம். இரண்டாம் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை. இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகையில் வெளியானவை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *