கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 4, 2024
பார்வையிட்டோர்: 2,525 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்றுதான் அர்ச்சுனனை ஆசுபத்திரியிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். 

பதினைந்து நாட்களுக்கு முன்பு அவன் ஆசுபத்திரிக்கு வந்த பொழுது குண்டு அடிபட்டு அவன் வலதுகை நொறுங்கி தோள் பட்டையிலிருந்து அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது மூர்ச்சையான நிலையில் அவனைக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். 

டாக்டர் அப்பொழுது செய்யக்கூடிய காரியமாக இருந்தது ஒன்றே ஒன்றுதான். அடிபட்டவருடைய சம்மதத்தைக் கேட்போம் என்றால் அவருக்கு சுய உணர்வு இல்லை. பெற்றோர்கள் அருகில் இல்லை தாமதம் செய்வதற்கும் இடம் இல்லை. அபாயத்தைக் கருதி டாக்டர் வலதுகையை அறுவை சிகிச்சை செய்து எடுத்துவிட்டார். 

மாலை ஆறு மணிக்குத்தான் அர்ச்சுனனுக்கு சுய உணர்வு திரும்பிற்று. அப்பொழுது சுற்று முற்றும் பார்த்தான். வலது கைப்புறம் பார்த்தான். வலதுகை காணவில்லை. கட்டு போட்டிருந்தது. அப்பொழுது தான் நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. டாக்டர் பூட்ஸ் ஓசை கேட்டது. தொடர்ந்து டாக்டர் அறைக் குள் நுழைந்தார். அபாயமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்த அவசரத்தை அவனுக்கு விளக்கிக் கூறினார். 

“வலதுகை போனால் போல என்று சொல்லு வார்கள், இதை விட மோசமாக நேரவில்லையே என்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி குணமாகி விடும் கவலைப் படவேண்டாம்” என்று ஆறுதல் கூறினார். 

எவ்வித வருத்தமுமின்றி நோயாளி நன்றி என்று பதிலளித்ததுடாக்டருக்கே வியப்பாக இருந்தது. 

டாக்டர் சொன்னபடியே புண் ஆறி அன்று ஆசுபத்திரியிலிருந்து அனுப்பி விட்டார்கள். 

பாதுகாப்பு இலாகாவில் ராணுவத்தைச் சாராத உத்யோகம் ஏற்கப் போவதாக அர்ச்சுனன் சொன்ன பொழுது அவன் தந்தை சம்மதிக்கவில்லை. குடும்ப நிலையையும் குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கை யும் அவன் சுட்டிக்காட்டிய பொழுது பதில் சொல்லத் தெரியாமல் தந்தை தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார். தடுத்து சொல்லக் கூடிய நிலைமையில் அவர் இல்லை. அவர் நடத்தி வந்த சின்ன மளிகை வியாபாரம் நொடித்துப்போய் பிழைப்புக்கே வழி இல்லாமல் இருந்தது. வீட்டிலே அர்ச்சுனனைத் தவிர மூன்று பெண் குழந்தைகளும் ஒரு நொண்டிப் பையனும் தன் மனைவியும் இருந்தனர். வெறும் கையை வைத்துக் கொண்டு தின்பண்டங்களை மந்திரவாதி வரவழைக்கிறானே, அந்த மாதிரியா நடத்த முடியும்? குடும்பம் இந்த நிலையில் அர்ச்சுனனின் யோசனையைத் தகப்பனாரால் நெடு நேரம் எதிர்க்க முடியவில்லை. எட்டாக்கையாக இருந்த போதிலும் நல்ல சம்பளம். மகனை நம்பாவிட்டால் குடும்பம் ஓடாது என்பதை எல்லாம் எண்ணி தந்தை அர்ச்சுனன் போக்கிலேயே விட்டுவிட்டார். 

அர்ச்சுனன் வேலைக்கு அமர்ந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. குடும்பத்தை சூழ்ந்திருந்த தரித்திரம் விலகி விட்டது. வீட்டில் அமைதி குடிகொண்டு விட்டது, 

இப்பொழுது வந்தது ஒரு கடிதம் சுருக்கமான கடிதம்தான். மாலையில் உலாவப் போனபோது யாரோ கலகக்காரன் குண்டை வீசி எறிந்ததில் கை ஊனமாகி விட்டதாகவும், ஆசுபத்திரியில் கையை எடுத்து விட்டதாகவும், மற்றபடி உடல் நலமென்றும் அதில் கண்டிருந்தது. கடிதத்தைப் பார்த்த தந்தைக் கும் குடும்பத்தாருக்கும் வேதனை தாங்கவில்லை. 

அன்றிரவே தகப்பனார் ரயிலில் ஏறிவிட்டார். மூன்று நாள் ரயில் பிரயாணத்திற்குப் பிறகு நேரே ஆசுபத்திரிக்குப் போய்ச் சேர்ந்தாந் அங்கே அர்ச் சுனனைக் காணவில்லை. மனதில் திக் என்றது. மூன்று நாட்களுக்கு முன்பு அவனை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என்ற செய்தி கிடைத்த பிறகுதான் அவர் மனம் கொஞ்சம் ஆறுதல் அடைந்தது. 

ஆசுபத்திரியிலிருந்து அவன் அறைக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது அவன் இடது கையில் ஏதோ புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தான். வலது கையில்லாத மகனைக் கண்டதும் தந்தை கண்ணீர் வடித்தார். அர்ச்சுனன் கொஞ்சமும் கலங்காமல் தந்தையை வரவேற்று நடந்ததை எல்லாம் தெளிவாக் கினான். 

மறுநாள் அர்ச்சுனன் அலுவலக அதிகாரி ஒருவர் அவனைப் பார்ப்பதற்காக அங்கு வந்தார். “நல்ல காலம் கையோடு போயிற்று” என்று அர்ச்சுனனைத் தேற்றிய அதிகாரி தகப்பனாரைக் கண்டதும் இது யார் என்று அர்ச்சுனனை விசாரித்தார். 

“என் தந்தை. செய்தி எட்டியதும் உடனே வந்திருக்கிறார்” என்றான் அர்ச்சுனன். 

”நியாயந்தானே! ஏதோ கடவுளருளால் இதோடு விட்டது” என்று தந்தையை நோக்கிக் கூறினார். 

“இந்தப் பையனால்தான் எங்கள் குடும்பம் நடக் கிறது என்று உங்களுக்குத் தெரியுமோ என்னவோ? இனிமேல் எப்படியோ” என்று சொல்லிக் கொண்டே தகப்பனார் கண்ணீர் விட்டார். 

“வருத்தப் படவேண்டாம். உங்கள் பையன் ஆபீசில் வேலை செய்ய முடியாவிட்டாலும் அவனுக்கு இப்பவே உதவித் தொகை கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்து மேலாவுக்கு எழுதி இருக்கிறோம். உங்கள் பையனைப் போல் திறமையும் தெளிவும் கொண் டவர்களை எங்கள் ஆபீசில் யாரையும் கண்டதில்லை” என்றார் அதிகாரி. 

“உங்கள் அன்புக்கு நாங்கள் எப்படி நன்றி சொல் வது என்றே தெரியவில்லை” என்றார் தந்தை. அதுவரை யில் மௌனமாக இருந்த அர்ச்சுனன் குறுக்கிட்டான். 

“என்னைப் பார்க்க நீங்கள் என் அறைக்கு வந்தீர்களே நன்றி. ஆனால் ஒரு சந்தேகம். ஏதோ உதவிப் பணத்திற்கு சிபார்சு செய்திருப்பதாக சொன்னீர்களே-” 

“ஆமாம்” என்றார் அதிகாரி.

“எதற்காக?” 

“வலது கை இல்லாவிட்டால் ஆபீசில் அப்புறம் எப்படி வேலை செய்ய முடியும்? இதற்காக ஒன்று மில்லாமல் வீட்டுக்கு அனுப்பி விடுவதா? இந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்காக விதிகளில் வழி சொல்லப்பட்டிருக் கிறது. அதன்படி தான் சிபாரிசு செய்திருக்கிறோம். 

“செய்த வரையில் நன்றி,ஆனால் ஒன்று. வலது கை இல்லா ததினால் மோசம் ஒன்றும் வந்துவிடவில்லை” என்று சொல்லி நிறுத்தி விட்டு அர்ச்சுனன் அறைக்குள் சென்று கடுதாசு பேனாவை எடுத்து வந்தான். அதி காரிக்கு செய்கையின் பொருள் புரியவில்லை. தந்தைக் கும் புரியவில்லை. 

“ஆபீசு மாதிரி எது வேண்டுமானாலும் சொல்லுங் கள் எழுதிக் காட்டுகிறேன்” என்று அர்ச்சுனன் சொன் னதைக் கேட்டு அதிகாரி திகைப்பு அடைந்தார். திகைப் புடனேயே அதிகாரி காரியாலய பாணியில் வாயால் ஒரு உத்தரவு போட்டார். அர்ச்சுனன் எவ்வித தயக்கமோ தாமதமோ இன்றி அதை அப்படியே எழுதி முடித்து விட்டு காரியாலயத்தில் கை எழுத்துக்கு வைக்கும் மாதிரி தன் இடது கையால் அவர் முன் வைத்தான். அதைப் பார்த்ததும் அதிகாரியின் திகைப்பு ஆச்சரிய மாக மாறி விட்டது. வலது கையால் எழுதினால் எவ்வளவு அழகாக இருக்குமோ அவ்வளவு இருந்தது. தாங்க மாட்டா மகிழ்ச்சியுடன் அதிகாரி தகப்பனார் பக்கம் திரும்பிக் கூறினார்: “உங்கள் பையனுக்கு நீங்கள் சிறுவயது முதல் நல்ல பயிற்சி அளித்திருக்கிறீர்கள். அதற்கு உங்களைப் பாராட்டாம லிருக்க முடியாது. 

“நான் ஒரு பயிற்சியும் அளிக்கவில்லை. உண்மை யைச் சொன்னால் இவன் பையனாக இருந்த பொழுது இவனுடைய ஒவ்வொரு காரியமும் எனக்கு வினோத மாக இருந்தது. ஒரு செம்பு ஜலம் கொண்டு வா என்றால் இரண்டு கையிலும் இரண்டு செம்பு ஜலம் கொண்டு வருவான். சில்லரை விஷயங்களில் மட்டு மல்ல. பள்ளிக்கூட விஷயத்திலும் கூட அப்படித் தான். எழுத்துப் பயிற்சிக்காக காபி நோட்டில் எழுதுவார்களே அதற்கு இவன் இரண்டு நோட் புத்தகத்தில் எழுதுவான். வலது கைக்கு ஒரு நோட்’ இடது கைக்கு ஒரு நோட், வயது வந்த பிறகும் அப் படித்தான் செய்து கொண்டு வந்தான். இப்பொழுது பார்த்தால்தான் இதெல்லாம் அவனுடைய சாதனைகள் என்று தெரிகிறது” என்றார் தந்தை. “இதை எல்லாம் பார்த்த பிறகு சிபாரிசு கடிதத்திற்கு ஒரு திருத்தம் அனுப்ப வேண்டும் போலிருக்கிறதே என்றார் அதிகாரி. 

“ஒரு மணிக்கு வந்து டைப் அடித்துத் தருகிறேன்” என்றான் அர்ச்சுனன். 

“இடது கையினாலா? என்று சிரித்துக் கொண்டே அதிகாரி விடை பெற்றுச் சென்றார். 

– 1934 முதல் 1968 வரையில் ஹனுமான், சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை ஆகும்.

– காக்கைகளும் கிளிகளும், முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *