ஐ.ஸி.எஸ்.
கதையாசிரியர்: ந.பிச்சமூர்த்தி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 1,292
(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
[வீட் டுச் சமையலறை. இடுப்பில் நாலுமுழச் சவுக் கத்தைக் கட்டிக்கொண்டு சாமிநாதன் நிற் கிறார். வாசற்படியில் பையனும் பெண்ணும் நிற் கிறார்கள். கிண ற்றங்கரையண்டை சாமிநாதன் மனைவி பங்கஜம் புன்சிரிப்புடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். சமையலறையிலிருந்து பார்த்தால் பங்கஜத்தைத் தெரியும்.]
பையன்: அப்பா, நீயே இன்னிக்கு அம்மாவாகணும். சாமிநாதன் : ஏண்டா?
பையன் : அம்மாவுக்கு லீவாமே.

சாமி : எனக்குச் சமைக்கத் தெரியாதேடா. கிளப் பிலே இருந்து சாப்பாட்டை வரவழைக்கிறேனே.
பெண் : எங்களுக்கு எலிப்புழுக்கையும் கூழாங்கல் லும் பாகற்காய்க் கறியும் பிடிக்காது.
பையன் : என்னப்பா பிரமாதப் படுத்தறே. நளன் கூட அம்மா மாதிரி ஆக்டு பண்ணினானாம்; புஸ்தகத்திலே போட்டிருக்கே.
சாமி : நளன் புடைவையைப் பாதியாக் கிழிச்சான். என்கிட்டே புடைவை இல்லையே.
பையன் : அதெல்லாம் எனக்குத் தெரியாது: வாத்தி யாரைக் கேக்கணும். நீ அம்மா ஆகப்போறயா இல்லையா? இல்லேன்னா நாங்க பட்டினியாக் கிடந்து செத்துப் போறோம்.
பெண் : நான் கூடத்தான்.
சாமி: இதென்னடா சனியன் ! தொலையுங்கோ பள் ளிக்கூடத்துக்கு. நானே சமைக்கறேன். அப்பறம் அப் பிடி இப்பிடி இன்னேளோ கல்கண்டுப் பாராவிலே போட்டுடுவேன்.
பங்கஜம்: (இருந்த இடத்தில் இருந்துகொண்டே) சமத்தோ இல்லியோ ! நாழியாயிடுத்து. போங்கோ பள்ளிக்கூடம்.
[பையனும் பெண்ணும் பூட்ஸை மாட்டிக் கொண்டு ‘டக்’ ‘டக்’ என்று வெளியே போகி றார்கள்.]
சாமி: மகா சனியனாப் போச்சு. ஐ.ஸி. எஸ். உத் யோகம் ஒண்ணுதான் பாக்கி.
பங் : அதையும் கொஞ்சம் பாக்கறதுதானே? வருஷம் முந்நூத்தி அறுபத்தி அஞ்சு நாளிலே மாசம் மூணு நாள் பார்க்கக்கூடாதா?
சாமி : பேஷா . நாலு நாள் நீ ஆபீஸுக்குப் போய் உத்தியோகம் பார்த்துவிட்டு வாயேன்.
பங்: நீங்க வெள்ளைக் கடுதாசைக் கறுப்புக் கடுதாசா ஆக்கறதை நாங்களும் பண்ணுவோம். ஒரு குறைதான்: எங்கப்பா என்னையும் படிக்கவச்சிருந்தால் –
சாமி: அதுதான் நானும் சொல்றேன். ஐ. ஸி. எஸ். உத்யோகம் பார்க்கிறதற்கும் படிப்பு வேண்டாமா?
பங்: வேண்டாம். அடுப்பங்கரையிலே நுழையற வழக்கம் ஒண்ணு இருந்தாலே அது வந்துடும். நீங்கதான் அடுப்பங்கரை எந்த லோகத்தில் இருக்குன்னு கேட்கற பேர். இப்போ, வாச்சபோது தெரிஞ்சுக்கறதுதானே?
சாமி : நாடகத்திலே சொல்லறாப்போல, அப்படியே ஆகட்டும். ஆமாம், எந்த அடுப்பை மூட்ட?
பங்: மூணுநாலு அடுப்பு இருக்கு. எதை வேணு மானாலும் மூட்டலாம்.
சாமி : அடுத்த ஆத்துக்குப் போய் அரைமணி அக்கப் போர் பேசிவிட்டு, அரைப்பொறி நெருப்பைப் பந்தோ பஸ்து பண்ணி ஊதி எடுத்துக்கொண்டு வரத் தெரியாதே.
பங்: குறும்பாய்ப் பேசாதிங்கோ. உங்களை யார் போகச் சொன்னா? மண் அடுப்பிலே அரைபாட்டில் மண் ணெண்ணெயை ஊத்தினால், ஒரு நெருப்புக்குச்சி செலவு; வீட்டையே பத்த வச்சுடலாமே!
சாமி: மண் அடுப்பைப் பத்த வச்சிட்டு அகௌரவம் பண்ணப்படாது. பருப்பு, ரஸம்,குழம்பு, கறி இவ்வள வும் சமைக்காதபோனால் அடுப்புக்கு என்னமாயிருக்கும்! சிவனேன்னு கரி அடுப்பை மூட்டி வெறும் சாதத்தைச் சமைச்சு இறக்கினாலே ராஜா இல்லையா?
பங்: எது வேணுமானாலும் செய்யுங்கோ.
[பூ, பூ என்று ஊது குழாயால் அடுப்பை மூட்டும் சத்தம் கேட்கிறது.]
பங்: உங்களைத்தானே?
சாமி: ஏன்?
பங்: நாளைக்குக் கொஞ்சம் மண்ணெண்ணெய் இருக்கட்டும். சமைக்கற உள்ளே செவந்து போயிட்டுதே!
சாமி : அதான், டின்னிலே எண்ணெயிருக்கே.
பங்: அந்தத் தைரியமா? கூரைக்கட்டு. டின் வைக்க டு இல்லாமெ போயிடப்போறது?
சாமி: ஆனால் கரி அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊத் தறதில்லையா?
பங்: பேசப்படுமா? உரிமட்டைநாரை நாலு பிச்சுப் போட்டாப் பிசாசு மாதிரி பிடிச்சுக்கறது.
சாமி: இனிமேல் உரிமட்டைநாரைத் தேடக் கோயி லுக்குப் போயிட்டு வறேன்; போடி போ! (இன்னும் பல மாய் அடுப்பை ஊதிவிட்டு) ஆமாம். அடுப்பிலே எந்தப் பாத்தரத்தை ஏத்தறது?
பங்: நன்னாயிருக்கு! அடுக்குள்ளே ஆயிரம் வெங்கலப் பானை இருக்கு. ரெண்டு, மகாமகத்தப்போ வாங்கினேனா? மதுரையில் முக்கால்படி வெங்கலப்பானை நீங்க வாங்கிக் கிண்டு வந்தேளோ-
சாமி: அந்த ராமாயணம் தெரிஞ்சுதான் எதுன்னு கேக்கறேன். பாத்திரக்கடைக்காரனுக்கும் புத்தி கிடையாது. எல்லா வியாபாரத்திலும். நாஸுக்குக் கிளம்பி யிருக்கு. இவன்கள் ட்டும் பத்தாம் பசலியிலேயே உக்காந் திருக்கான்கள். ஜில்லுன்னு ஒவ்வொரு வெங்கலப்பானை வயத்துலேயும் கால்படி அரைப்படின்னு வெட்டி வச்சுட் டால், அப்படியே வியாபாரம் அள்ளுமே…… இதோ பாரு இதுவா?
பங்: அட எழவே! இரண்டரைப்படி வெங்கலப் பானையைத் தூக்கிண்டு வறேளே!
சாமி : இதைப் பாரு.
பங் : அட ராமச்சந்திரா! கால்படி வெங்கலப் பானையா போரும்?
சாமி : அப்பறம் எனக்குக் கோபம் வரும். எதுன்னு சொல்லேன்.
பங்: அதான் ஒருபடி வெங்கலப்பானேன்னு கிளிப் பிள்ளைக்குச் சொல்றாப்போலச் சொல்றேனே.
சாமி : நீ ஒரு படின்னு சொல்லவே இல்லை. போகட் டும். இதுவா?
பங் : அதில்லே. சாமி: இதுவா?
பங் : அதுவும் இல்லை. அது முக்கால்படி.
சாமி : ரொம்ப பேஷ்! அத்வைத விசாரணை அடுக் குள்ளே நடக்கிறது! எல்லாம், நேதி’, ‘நேதி’, ‘இதில்லே இதில்லே’ என்று தள்ளுவாளாமே, அதுமாதிரி இருக்கு. கடைசித் தடவை : இதுவா?
பங் : அப்பாடா! மிச்சம் அங்கே இல்லைபோல இருக்கு! இப்போவானும் கண் தெரிஞ்சுதே!
சாமி : கண்ணுக்கு ஸர்டிபிகேட் டாக்டர் இன்னா குடுக்கணும்? இதை அடுப்புலே வெக்கவேண்டியது தானே?
பங் : அவசரப்படாதிங்கோ. சாதத்தை ரெண்டு தினுசாப் பண்ணலாம்; தெரியுமோ?
சாமி : ஓ! அளிஞ்சு களிமாதிரி ஒண்ணு; அப்புறம் நறுக்கரிசியாய் ரெண்டு.
பங்: எனக்குக் கிண்டல் பிடிக்காது. இதைக் கவ னிச்சுக் கேளுங்கோ: வெங்கலப்பானையிலே ஜலத்தை வச்சுக் கொதி வரவிட்டு அரிசியைக் களைஞ்சு போடலாம். இல்லாட்டாக் கணக்கா அரிசியும் ஜலமுமாப் போட்டு அப்படியே அடுப்பிலே ஏத்திவிடலாம். ரெண்டாவது சொன்னதுதான் ஒங்களுக்கு லாயக்கு. கஞ்சி வடிக்கவும் வேண்டாம்; காலிலே கொட்டிக்கவும் வேண்டாம்.
சாமி : அப்படியே செய்யறது. அரிசி எவ்வளவு போட?
பங் : அரிசிமூட்டையிலே சின்னப் படியாய் ஒண்ணு இருக்கும். அதாலே ரெண்டு எடுத்துப் போட்டு ரெண்டு சிறாங்காயை எடுத்துடுங்கோ. மல்லிகைப்பூ மாதிரி சாதம் இருக்கும்.
சாமி : இதோ ஆச்சு.
[அரிசியை ஜலத்துடன் போட்டு அடுப்பில் வைத்துவிட்டுப் பாடுகிறான்]
ராகஸுதா ரஸ பானமு சேஸி ரஞ்சுலு ஓமனசா (ராக)
யாக யோகத் தியாக போக பலமு ஸங்க (ராக)
ஸதாசிவ மயமகு நாத ஓங்காரஸ்வர
விதுல ஜீவன்முக்துலனு தியாகராஜு தெலிஸி (ராக)
பங் : இதென்ன அடுப்பங்கரையிலே பாட்டு! சாதம் தானாகவே வேகுமோ? ஒரு கிளறு கிளறுங்கோ?
சாமி : நீதான் அடுப்பிலே வச்சால் கனகாம்பரமோ மல்லிகைப் பூவோ ஆயிடும் இன்னியே?
பங்: அப்புறம் தீஞ்சு போயிடும்.
சாமி: கிளர்றேன்.
(வெண்கலப் பானையைக் கரண்டியால் கிளறும் சத்தம் கேட்கிறது. பிறகு ஒரு பாட்டு.]
நந்த வனத்திலோ ராண்டி—அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி-அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி (நந்த)
பங்: பாடாதிங்கோ; கவனப் பிசகாய்ப் போயிடும். அப்பறம் என்னைப் பாடுவேள். சாதத்தைப் பாத்து ஒரு பருக்கையை நசுக்குங்கோ. வெந்திருக்கா, இல்லியா தெரியும்.
சாமி : சாதத்தைப் பார்த்தேன்.
பங் : எப்பிடி இருக்கு?
சாமி: முப்பத்தி அஞ்சாம் வாரம் ஓடுகிற சினிமாக் கொட்டகை தெரியுமா?
பங்: அம்மா வயத்திலே பொண் பொறந்தது தெரி யும். ஒரு சினிமாவா, எழவா!
சாமி: ஆனால் வாரத்துக்கு எத்தனை தரம் சினிமாப் பார்த்தால் சினிமா பார்த்தாப்போலே இருக்கும்?
பங் : சண்டைக்கு வராதிங்கோ. சாதம் எப்பிடி இருக்குன்னு கேட்டால் சினிமாக் கொட்டகை என்கி றேள்; பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு ரெண்டுபணம் என்கிறேள்.
சாமி: நான் சரியாத்தான் பேசறேன். அந்தக் கொட் டகை ஜன்னலண்டை டிக்கட் வாங்கக் கூட்டம் திண்டா டும் பாரு, அந்த மாதிரி அரிசி யெல்லாம் அரைச்சாதமாய் வெங்கலப்பானை வாயண்டை வந்து முழிக்கிறதுகளே!
பங்: நாசமாப் போச்சு! கவிமாதிரி சக்கரவட்டமாப் பேசறேளே ; ஒங்களை எவ்வளவு அரிசி போடச் சொன்னேன்?
சாமி : (ஒரு நிமிஷம் தயங்கிவிட்டு) நீதான் சொல்லேன்.
பங்: அப்படி வாங்கோ வழிக்கு. அரிசியும் கிரோஸி னாயில் இன்னு பாத்தேளோ? கணக்கு வழக்குக் கிடை யாதா? ஒங்களைச் சின்னப் படியாலே ரெண்டு போட்டு, ரெண்டு சிறாங்கா அரிசியை எடுக்கச் சொன்னேன். என்ன பண்ணித் தொலைச்சேளோ?
சாமி : ஒரு வேளை ரெண்டு சிறாங்கா எடுக்க மறந்து போயிருப்பேன். இப்பத்தான் ஞாபகம் வந்தது.
பங்: நல்லவேளை! சின்னப் படிக்குப் பதில் பட்டணம் படியாலே போடாத போனேளே.
சாமி : இப்பொ என்ன செய்யறது? சொல்லு,
பங்: அந்தச் சாதத்தைக் கொஞ்சம் கிளறித் தட்டுலே எடுத்து வச்சிட்டு, வெங்கலப் பானையிலே ரெண்டு சேர் ஜலம் விடுங்கோ. கொதி வந்து சாதம் சரியாயிடும்.
சாமி: தட்டுலே வக்கறதை?
பங் : (சிரித்துக்கொண்டே) நீங்கதான் சாப்பிடணும். சாமி : இல்லாதபோனால் காக்காய்க்குப் போடலாம். பங்: பார்த்தேளா, தப்புச் செய்தால் சாஸ்திரம் ஞாபகம் வறது.
(டக் டக்கென்று பூட்ஸ் சத்தம் கேட்கிறது.) சாமி: இதென்ன? அதுக்குள்ளே இவாள் வந்துட்டா! பையன் : அப்பா, இன்னிக்கு லீவ். யாரோ செத்துப்
பெண் :
போய்ட்டாளாம்.
சாமி . நல்லதாப் போச்சு!தட்டை எடுத்துக்கிண்டு
வாங்கோ.
பெண் : எனக்கு ரஸம் சாதந்தான் வேணும். சாமி : ரஸமும் கிடையாது, குழம்பும் கிடையாது.
(பையன் தட்டுகளைக் கொண்டுவந்து சத்தப் படுத்தி வைக்கிறான்.)
பையன் : அதெல்லாம் வேண்டாம் அப்பா; இருக் கறதைப் போடு.
பெண் : அப்படீன்னா எனக்கு மொளகுபொடி பண் ணிப் போடு: சாப்பிடறேன்.
சாமி : சரி, ஒழிஞ்சு போ.
(அம்மியில் அரைக்கப் போகும்பொழுது உறி யில் உடம்பு தட்டுப்பட்டு பாத்திரங்கள் லொட புட வென்று விழுகின்றன.)
பங்: சண்டையிலே வெடிகுண்டு போடுவாளாமே, அதுமாதிரி ஒரு நாள் சமையல்லேயே வீடு நிர்த்தூளிப் படறதே? நாளைக்குப் பாத்திரம் இருக்கட்டும்.
சாமி: பாத்திரம் இருக்கும். தலைதான் இருக்காது. பங்: அடாடா! ரத்தம் வந்துட்டுதா? ஜாக்கிரதை யாய்ப் போகப் படாதோ!
சாமி: நல்லவேளை ; ரத்தம் வரல்லே. இந்தச் சனியன் கள் வெறும் சோத்தை மோர் போட்டுத் தின்னூட்டுப் போறதா, பாறேன்…. நாக்கு நீளம்!
பங் : குழந்தைகளைக் கோவிச்சுக்காதிங்கோ. வருஷம் முந்நூத்தி அறுபத்தி அஞ்சு நாள் நான் சமைக்கறேன். மூச்சு விடறதா? மோரும் சாதம் எனக்குக்கூடத்தான் பிடிக்காது. உங்களுக்கும் பிடிக்காது.
(அம்மியில் அறைக்கும் சத்தம்.]
சாமி: வந்து உட்காருங்கோ.
(வெண்கலப்பானையில் கரண்டியைப்போட்டுச் சாதத்தைக் கிளறும் சத்தம்.)
பையன் : என்னப்பா, சாதம் இப்பிடி இருக்கே?
பெண் : அம்மா ! அப்பா க்ஷுரான்னம் பண்ணியிருக் கார், திருட்டுத்தனமா!
பங்: என்னடி அசடே, ஒளர்றே! ஓங்களைத்தானே! சாதம் எப்பிடி இருக்கு?
சாமி: கொஞ்சம் அளிஞ்சுபோயிட்டாப்போல இருக்கு.
பங் : அப்போ சாதத்துலே பாலை ஊத்திச் சக்கரை போடவேண்டியதுதான். பகல்வேளையா இருந்தாலும் பாலும் சாதம் சாப்பிடுவோம். நன்னாச் சாதம் சமைச் சேள்! ஒங்களுக்குக் கட்டோடே அளிஞ்சாப் பிடிக்காதே.
சாமி : அதான், நான் கிளப்புக்குப் போகப்போறேன்.
பங்: அப்பவே சொன்னேனே. போகட்டும். வெங்காய சாம்பார் இருக்கறதாப் பாத்து எடுப்பு வரவழை யுங்கோ!
– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |
