சாணையோடு வந்தது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 13, 2024
பார்வையிட்டோர்: 916 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த அறையில் தென்புறச் சுவரோடு ஒட்டியவாறு போடப்பட்டிருந்த கட்டிலிலே, விரிக்கப்பட்டிருந்த மெத்தையிலே சோர்ந்துபோய்ப் படுத்திருந்தார் சதாத். 

சுமார் ஐந்து ஆறு வருடங்களாக அந்த அறையிலே தான் இளைப்பாறிய அதிபர் சதாத்தும் அவரது மனைவி றினோ ஸாவும் தமது இரு புதல்விகளோடும் ஒரு புதல்வனோடும் வாழ்ந்து வந்தனர். 

சதாத்தும்,றினோஸாவும் தாம் குடியிருந்த வீடு வளவை தமது மூத்த மகளுக்கும் மருமகனுக்கும் சீதன ஆதனமாகக் கையளித்துவிட்டு, தாம் வேறு ஒரு வீடு வளவு வாங்கிக்கொண்டு போகும் வரை வசிப்பதற்காய், அதே வளவில், அவர்களது வீட்டின் வடபுற அந்தத்திலுள்ள வெளிக் கதவின் எதிரே-கிழக்கு நோக்கி ஏழு எட்டு அடிகளுக்கு அப்பால் உருவாக்கிக் கொண்ட ஓர் அறைதான் அது. 

பத்தடி அகலமும், இருபதடி நீளமுமான அந்த அறையிலே வீட்டுக்குத் தேவையான மிக அத்தியாவசியப் பொருட்களில் பலவிருந்தன. 

சமையலும் அதற்குள்ளேயே. 

பொதுவாக, அவ்வறை ஒரு வீடாகவே செயற்பட்டு வந்தது. அந்த அறையின் கட்டிலிலே சோர்ந்து போய்ப் படுத்திருந்த சதாத்துக்கு, சற்று முன் நடந்த அந்தச் சம்பவத்தை நினைக்க நினைக்க வேதனை நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. 

இப்படி நடக்குமென்று கனவில் கூட நினைத்திருக்க வில்லை அவர். 

அன்று அதிகாலையிலேயே கண் விழித்துக்கொண்ட சதாத், கட்டிலிலே வலது புறம் இடது புறம் என்று மிக அவதானமாக புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார். 

வயிறு உளைவது போலிருந்தது. மெத்தையில் கைகளை ஊன்றி விரைவாய் நிமிர்ந்து கால்களை தரையிலே பதித்து எழுந்து நின்றார். 

மலம் வெளியிலே வந்து விடுவது போன்ற உணர்வு அவருக்கு. அதனை வலிந்து அடக்கியவராய் தனது இரு கைகளாலும் சாரணை தூக்கிப் பிடித்துக் கொண்டு வெளியிலே செல்ல தன்னால் இயன்ற அளவு வேகமாய் எட்டி அடி வைத்தார். 

ஐந்து ஆறு அடிகள்தான் வைத்திருப்பார் சதாத். அவரை யும் மீறிக்கொண்டு மலம் வெளியேறிவிடுகிறது. அதனால், அவ் வறையின் வாசல் பக்கக் கதவை ஒட்டியவாறு அமைக்கப்பட் டிருந்த சீமெந்துப் படியும், அதனைத் தொட்டவாறு கிடந்த மணல் தரையின் ஒரு பகுதியும் அசுத்தமடைகிறது. 

அவ்வறையின் முன்னே, குப்பை கூளங்களைப் பெருக்கிக் கொண்டிருந்த அவரின் மனைவி றினோஸா அதனைக் காண்கிறாள். “ஈர்க்கு வாருவல் கட்டை’ நின்றவிடத்திலேயே விட்டுவிட்டு, வில்லிலிருந்து விடுபட்ட அம்பு போல தன் கணவனிடம் விரைந்து வந்தாள். 

அவள், சிவப்பு வண்ணச் சட்டையும் நிறங்கலங்கிப்போன பச்சைப் பாதிச் சேலையும் அணிந்திருந்தாள். 

சேலைத் தலைப்பும், இடது புறமாய் நிலத்தைத் தொட்டுக் கொண்டிருந்த சேலையின் ஒரு பகுதியும் இடுப்புப் பாவாடைக்குள் புதைக்கப்பட்டிருந்தன. 

அவள் அணிந்திருந்த மஞ்சல் நிறப் பாவாடையும் கால் பக்கமாய் தரிசனம் தந்தது. 

அவள், தனது இரு கைகளையும் இடுப்பிலேயே ஊன்றிக் கொண்டாள். அசுத்தமடைந்த பகுதியையும் தனது கணவனையும் மாறி மாறிப் பார்த்தாள். 

அங்கு கிளம்பிய துர் வாடையும், அவளது மூக்கைக் கசக்கி விட்டிருந்தது. 

மூக்கையும் முகத்தையும் அருவருப்போடு சுருக்கிக் கொண்டாள். 

கண்களிலிருந்து தீப்பொறிகள் பறந்தன. 

“என்ன வேலயப் பாத்தீங்க… நீங்களும் ஒரு மனிசனா… சீ..”காறி உமிழ்ந்தாள் றினோஸா. 

ஒடுங்கிப்போனார் சதாத். அவளை நிமிர்ந்து பார்ப்பதற்குக் கூட கஷ்டமாகவிருந்தது அவருக்கு. 

”புள்ள… நான் என்ன வேணுமிண்டா செய்த… உங்களுக் கும் நல்லாத் தெரியுமில்லவா… எனக்கு மூல ஒப்றேசன் செய்து இண்டைக்கு மூணு நாள்தானே… முழுமையாக இன்னும் ஆற வில்லை. மலம் வெளியேறுவதற்கான உணர்வு வந்தவுடனேயே… விரைவாய் எழுந்து என்னால் இயன்ற அளவு வேகமாய் எட்டி அடி வைத்ததுதான்… இயலாமற் போய்விட்டது. நான் என்ன செய்யிற…” 

“நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறத்துக்கு ஆயத்த மில்ல… உங்கட அசமந்தப் போக்காலதான் இப்படி நடந்த… இண்டைக்கி நாளைக்கி மௌத்தாகிற பொணமாரிந்தாலும் கூட இந்த வேல செஞ்சிருக்கமாட்டா… சீ… இதெல்லாம் என்ட தலை யெழுத்து…” 

றினோஸா பொரிந்து தள்ளினாள். நுதலில் விழுந்து கிடந்த கேசத்தை மேலே ஒதுக்கி விட்டுக் கொண்டாள். இடது புறமாய் தமது மகளின் வீட்டின் அருகாமையில் வைக்கப்பட்டிருந்த ஒரு மண்வெட்டியை எடுப்பதற்காய் விரைந்தாள். சதாத்தோ, தலையைத் தொங்கவிட்டவாறு கிணற்றடிப் பக்கமாக நடந்தார். 

சற்று முன் நடந்த இந்தச் சம்பவத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த சதாத்துக்கு மேலுமொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. 

அப்பொழுது, கனிஷ்ட வித்தியாலயம் ஒன்றின் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார் சதாத். 

அன்று, ஆசிரியர்களது சம்பள தினம். அதிபர் சதாத்தும் தனது சம்பளத்தைப் பெற்றுக் கொண்டார். 

அவர், பாடசாலைக் ‘கென்ரீன்’ கணக்கை முடித்து விட்டு பாடசாலை விட்டு வரும் வழியில் முஸாதிக் டெக்ஸ்டைல்ஸில் தனக்கு ஒரு லோங்ஸ் சீலையும், சேர்ட்டும் வாங்கிக்கொண்டு அறையை எட்டினார். 

இன்னும் பாடசாலைவிட்டு தமது பிள்ளைகள் அறைக்கு மீளாததால் அங்கு அமைதி ஆட்சிபீடமேறியிருந்தது. 

‘இஞ்ச… என்ன செய்யிறிங்க…” என்றவாறு திறந்துகிடந்த கதவு வழியால் அறைக்குள் நுழைந்தார் சதாத். 

அறையில், சமையலில் ஈடுபட்டிருந்த றினோஸா, தனது கணவனின் வருகையை உணர்ந்து சத்தம் வந்த பக்கமாய் திரும்பிப் பார்த்தாள். 

அவர், உள்ளே, கதவின் பக்கமாகவிருந்த மேசையின் அருகாமையில் நின்றிருப்பதைக் காண்கிறாள். 

சீலைக்கடை ‘பேக்’ ஒன்றும் கையிலிருந்ததை அவதானிக் கத் தவறவில்லை அவள். 

தனது மனைவியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்ட சதாத், டயறியையும், சீலைக்கடை பேக்கையும் மேசையில் வைத்துவிட்டு நிமிர்கிறார். 

அறைக்குள் மிதந்து வந்த இறைச்சிக் கறி மணம் நாவில் நீரை ஊறவைக்கிறது. 

”புள்ள இஞ்ச வாங்க… இன்னாங்க…” 

மனைவியை அழைக்கிறார். 

அவளோ, கறியை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைக்கிறாள். 

“இன்னா வாறன்…” என்று குரல் கொடுத்தவாறு கண வனிடம் விரைகிறாள். 

“இண்டைக்கு சம்பளம் எடுத்த இன்னாங்க…” 

தன் பக்கமாக வந்து நின்ற தனது மனைவியிடம் சம்பளத் தைக் கொடுக்கிறார். அவளும், அதை வாங்கிக் கொள்கிறாள். 

“என்ட லோங்ஸெல்லாம் நல்லாப் பழசாப் போச்சி…அதுவுமில்லாம… சின்னதாகவும் போச்சி… சேட்டுகளும்… இரண்டு வருசங்களுக்கு முன்பு தச்சதுகள்… ஏதாவது நல்ல பங்சன்கள் வந்தா போட்டுக்குப் போறத்துக்கும் நல்ல ஒரு சேட்டுமில்லாம லிருக்கி… அதனால… ஒரு லோங்ஸிச் சீலையும், ஒரு சேட்டும் வாங்கினன்… பள்ளிக்கொடம் கலஞ்சி வாற வழியில முஸாதிக் டெக்ஸ்டைல்லதான் வாங்கினன்… பள்ளிக்கொடத்தில் ‘கென்ரின்’ கணக்கும் முந்நூத்திச்சொச்சம் வந்திச்சி… அதுக்கும் முந்நூறு ரூபாய் கொடுத்தன்… எல்லாமாக சம்பளத்தில ஆயிரத்து நாநூறு ரூபா கழிஞ்சிட்டு… இப்ப ஒங்களுக்கிட்ட ஏழாயிரத்து அறுநூத்தி ஐம்பது ரூபா இருக்கி…” 

உயிரற்ற ஒரு குறு நகையை இதழ்களிடையே படரவிட்ட வாறு தன் மனைவியைப் பார்த்தார் சதாத். 

”சம்பளத்த அப்படியே கொண்டு வந்து தந்திருக்கிங்களாக் கும் எண்டு நினைச்சன்… நல்லா விளையாடிட்டுத்தான் வந்திருக் கிங்க… கடக்கார சல்மாவுக்கு சாமான் வாங்கின காசி குடுக் கணும்… அரிசிக்காரனுக்கும் கொடுக்கணும்… சீட்டுக்காசி ஆயிரத்து ஐந்நூறு ரூபா கொடுக்கணும்… இரண்டு பேருக்கு கடன் காசும் கொடுக்கணும்… நீங்க தந்திருக்கிற காசிக்குள்ள இதயெல்லாம் பங்கு வைக்க ஏலா… அப்படிப் பங்கு வைக்கிறதாயிருந்தாலும் இன்னும் ஆயிரத்துக்கு மேலான் காசி தேவைப்படும்… அது மட்டு மில்ல… அடுத்த சம்பளம் வாறவரைக்கும் செலவெளிக்கிறத்துக்கும் காசி வேணும்… நீங்க நம்மிட நிலையப்பத்தி கொஞ்சமாவது யோசிக்கல்லியா… கன்டின்ல வயிறு முட்டத்தான் திண்டு தள்ளியிருக்கிங்க… அதவிட்டாலும், நாசமத்த லோங்ஸிச் சீலையும் சேட்டும் இப்பதான் எடுக்கணுமா… இன்னும் கொஞ்சக் காலம் போனத்துக்குப் பொறகு எடுத்திருக்கலாமே… இப்ப நாம திடீரென்று இளந்தாரியாப் போயிட்டமா என்ன…? நீங்க பாத்துக் கிட்டு வந்திருக்கிற வேலைகள நெனச்சா எனக்கு வெசர்தான் வருகிது… இத வச்சிக் கொண்டு நான் என்ன செய்யிற… உங்கட சம்பளத்த நீங்கதான் வச்சிக்கங்க…” 

வார்த்தைகளை, பட்டாசுக்கட்டு வெடிப்பது போல வெடித் துத் தள்ளிய றினோஸா, கையிலிருந்த காசை தனது கணவனின் பக்கமாய் மேசையிலே வீசி எறிந்து விடுகிறாள். 

‘இந்த முற நம்மிட நிலையைச் சமாளிக்க நமக்குத் தேவையான அளவு நான் ஒரு ஆளுக்கிட்ட கடன் வாங்கித் தாறன்… பெரிசா யோசிக்க வாணா… நான் அக்கடன பொறவு பாத்துக்குவன்’ என்று தனது மனைவியிடம் சொல்ல நினைத்த சதாத், அவளின் வார்த்தைகளாலும் செயற்பாட்டினாலும் வாய டைத்துப் போய் சிலையாய்ச் சமைந்தார். 

இந்நிகழ்வும் சதாத்தின் நினைவுக்கு வந்து அவரின் வேதனையை மேலும் பெருக்கியது. 

“ம்..ஹு….” நெடு மூச்சொன்றை விட்டுக் கொண்டார் சதாத். 

‘மனைவியோடு கிடந்து ஒரேயே கஷ்டப்பர்ரதாத்தானி ருக்கு… அவள்ள வெளியழகில மயங்கி ஒருத்தர்ர சொல்லையும் கேளாம என்ட விருப்பத்துக்கு முடிச்ச கலியாணம் இது. இதப்பத்தி ஒருத்தருக்கிட்டயும் ஒண்டும் கதைத்துக் கொள்ளவும் ஏலா. அது மட்டுமில்ல… நமக்கு வயதுமாப் போச்சி… பிள்ளைகளும் நாலுபேர் இருக்கு… ஒரு பொம்பிளப்பிள்ள கலியாணம் முடிச்சிக்கிட்டிருக்கு… இன்னும் இரண்டு பொம்பிளப்பிள்ளைகள் ஏயெல்ல படிச்சிக்கிட் டிருக்காங்க… ஒரு ஆம்பிளப்பிள்ள ஓயெல்ல படிச்சிக்கிட்டிருக்கார். என்னால ஒரு பக்கத்திலயும் பிசகிக்க ஏலாமலிருக்கு… சாணை யோடு வந்தது சந்தக்கோட என்பது போலக் கிடந்து கழிஞ்சு போறதுதான்…’ 

சதாத்தின் மனம் கிடந்து புலம்பியது. 

அவர், கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் வலது புறமாய் மெல்லத் திரும்பிப் படுத்தார். 

அதன் பின்பு, சதாத்தின் வாழ்வு அதிக காலம் நீடிக்கவில்லை. 

மூன்று தினங்கள்தான் கடந்திருக்கும். மாரடைப்பினால் மரணத்தைத் தழுவிக் கொண்டார் சதாத். 

அவரின் ஜனாஸா, அவரும் அவரது மனைவியும் பிள்ளை களும் வாழ்ந்த அந்த அறையிலேயே வைக்கப்பட்டிருந்தது. அந்த அறையின் வாசல் பக்கக் கதவு திறந்து கிடந்தது. அதற்கு எதிரே, வடபுறச் சுவரோடு ஒட்டியவாறு இடப்பட்டிருந்த கட்டிலிலே வைக்கப்பட்டிருந்த ஜனாஸாவை, உற்றார், உறவினர், நண்பர்கள், அறிமுகமானோர் என்று பலரும் தரிசித்துக் கொண்டிருந்தனர். காலையிலிருந்து மதியம் வரை வளவு, சனங்களால் நிரம்பி வழிந்தது. 

பலர் தரிசித்துவிட்டுச் சென்றும் கூட இன்னும் அங்கு சனங்கள் குறையவே இல்லை. 

சதாத்தின் பிள்ளைகள் அவ்வறையின் பின்னால் நின்ற கறிவேப்பிலை மரத்தடியில் கிடந்து அழுது புலம்பினர். 

“எங்கட ஈமான் பெத்த வாப்பா…எங்களையெல்லாம் விட்டிட்டுப் போயிட்டிங்களா… இனி எங்களுக்கு யாரிருக்கா…” 

பிள்ளைகளின் அழுகையும் புலம்பலும் அங்கு நின்ற அனைவரையும் கலங்க வைத்துக் கொண்டிருந்தன. 

அவ்வறையின் அந்தத்தில் – கிழக்குப் புறமாய் ‘ஸ்கிறீன்’ இட்டு ஏற்படுத்திக் கொண்ட ஒரு மறைப்புக்குள் இருந்து கொண்டு தாழ்ந்த குரலிலே அழுது கொண்டிருந்தாள் றினோஸா. 

“எங்கட சீதேவி… எங்களையெல்லாம் விட்டிட்டுப் போயிட் டீங்களா…இனி நாங்க என்ன செய்வோம்… அல்லாஹ்…” என்றும் அவள் புலம்பினாள். 

அவளை, பெண்கள் பலர் மொய்த்துக் கொண்டிருந்தனர். சிலர், அவளுக்கு ஆறுதல் புகன்றனர். 

ஜனாஸாவின் கால் பக்கமாக எரிந்து கொண்டிருந்த ஊதுபத்திகளின் வாசம் அறை முழுவதும் நிறைந்து வெளியிலும் கரைந்து கொண்டிருந்தது. 

முற்றத்தில்-மேற்குப் புறமாய் செழித்து வளர்ந்திருந்த ‘பாம்றி’ மரங்களின் பக்கமாய், சதாத்தின் நண்பரான பாறூக் ஆசிரியரின் மனைவி பரீனா, தனது உறவு முறைப் பெண் ஒருத்தியுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். 

“றினோஸா …ஒரே அழுதுக்கிட்டுத்தானிருக்கா… புருசன்ல மிச்சம் இரக்கமா இருந்திருப்பா போல….”

பரீனாவின் உறவு முறைப் பெண் வினவினாள். 

“இரக்கமா… மாசாலக் கொளறுவ… அவட கொளறுவய அறியாமக் கிடக்கு… அந்த மனிசன் சதாத் பிறின்ஸிபல் ஒரு தங்கமான மனிசன். அந்த மனிசனப் போட்டு மிச்சம் கஷ்டப் படுத்திப் போட்டா… சீ… இவளும் ஒரு பெண்ணா…?” 

பரீனா சற்றுச் சூடாகவே பதில் கூறினாள். 

பரீனாவின் உறவுமுறைப் பெண்ணோ எதுவுமே பேசாது அதிர்ந்து போய் நின்றாள். 

குறிப்பு: ‘சாணையோடு வந்தது சந்தக்கோட’ என்பது முஸ்லிம்களிடையே வழங்கி வருகின்ற ஒரு பழமொழி. 

– 2002 ஆகஸ்ட் 18.

– சாணையோடு வந்தது… (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2007, முகாமைத்துவ தொழில்நுட்பக் கல்லூரி, இலங்கை.

யூ.எல்.ஆதம்பாவா உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *