மனிதர்களில் இவன் ஒரு ரகம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2024
பார்வையிட்டோர்: 1,161 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இல்யாஸ், 38 வருடங்கள் ஆசிரிய சேவை புரிந்துவிட்டு, 1996 டிசம்பரில் இளைப்பாறினார். 

கல்முனைப் பிரதேச கல்விக் காரியாலயம், கொழும்பு ஓய்வூதிய அலுவல்கள் திணைக்களம், வடக்கு – கிழக்கு மாகாண சபை என்று அவரது ஓய்வூதிய ‘பைல்’பந்தாய் உதைபட்டு இறுதி நடவடிக்கைக்காக, கல்முனைப் பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு வந்திருந்தது. 

ஓய்வூதியம், தனக்கு விரைவிலே கிடைத்து விடுமென்று தான் அவர் ஆரம்பத்திலே எண்ணியிருந்தார். ஆனால், இவ்வாறு எட்டு மாதங்கள் நீளுமென்று அவர் கனவிலும் நினைத்திருக்க வில்லை. 

இப்போது, ஓய்வூதிய ‘பைல்’ கல்முனைப் பிரதேச செய லாளர் அலுவலகத்துக்கு வந்திருப்பதைப் பார்த்ததும், ‘காரியம் விரைவிலே கைகூடும்’ என்ற நம்பிக்கை மீண்டும் அவருள் துளிர்த்தது. புதிய உத்வேகத்தோடு செயற்படலானார் அவர். 

‘ஓய்வூதிய நிலுவைப் பணம் ரூபாய் அறுபத்தையாயிரம் வரும். அதில், சுமார் பதினையாயிரத்தை ‘குருசெத’க் கடனுக்குச் செலுத்திவிட்டு மீதி ஐம்பதினாயிரம் ரூபாவையும் மாப்பிள்ளைக்கு கைக்கூலியாகக் கொடுக்கலாம். அத்தோடு,கலியாணச் செலவுக் காக, வீட்டிலே சேமித்து வைத்திருக்கின்ற ஏழாயிரம் ரூபாவையும் எடுத்தால் தனது மகளின் திருமணத்தை ஒருவாறு நிறைவேற்றி விடலாம்’ என்று எண்ணியவராய் அந்தப் பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு மூன்று தினங்களாய் அலைந்தார். 

பிரதேச செயலகத்தில் ஓய்வூதியம் சம்பந்தமான விடயங் களுக்குப் பொறுப்பானவர் துடிதுடிப்பான ஓர் இளைஞன்தான். பெருந்தொகையானோர் ஒரே காலத்தில் பென்ஸனில் நின்று விட்டதால் அவனுக்கும் வேலைப் பளு தலைக்கு மேல். என்றாலும், பாம்பாய் சீறிச் சினந்து கொள்ளாமல், வருபவர்களை யெல்லாம் சாந்தப் படுத்தி முடியுமானவரை விரைவாய் வேலை களைச் செய்து முடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். 

கண்ணைக் கட்டி வந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல வந்து நின்ற இல்யாஸையும் அவன், அன்போடு அரவணைத்துக் கொண்டான். 

“வாங்க சேர்… இருங்க சேர்…” என்று உட்கார வைத்து ஒன்று ஒன்றரை மைல் தூரத்துக்கப்பாலிருந்து சைக்கிளில் ஓடி வந்த அலுப்பையும் மையொற்றுத்தாள் போல் அப்படியே ஒற்றியெடுத்து விடுவான். 

அவன், இல்யாஸை இன்னும் அலையவைக்க விரும்ப வில்லை. 

நாலாவது நாள், காரியாலயத்துக்குள் பம்பரமாய்ச் சுழன்று இல்யாஸினது ஆகஸ்ட் மாத ஓய்வூதியக் காசோலையை யும் ஏழு மாதங்களுக்குரிய ஓய்வூதிய நிலுவைக் காசோலை யையும் கையளித்து அவர் நெஞ்சில் பாலை வார்த்தான். 

“இவ்வளவு வேலையையும் செய்த உங்களுக்கு ஒரு ரீயாவது வாங்கித்தரவேண்டும் போல் இருக்கு. வாங்க தம்பி, கொஞ்சம் வெளியில போய் வருவம்.” அந்த இளைஞனை இல்யாஸ் அழைத்தார். 

“சேர்…நான் என்ட கடமையைத்தான் செய்தன். கொஞ்சம் உங்கட நிலைய உணர்ந்து மனிதாபிமானத்தோட செய்தன். அவ்வளவுதான். எனக்கு நீ வாணா. நீங்க சந்தோசமா போயிட்டு வாங்க சேர்…” 

இல்யாஸ், அந்த இளைஞனை முழுமையாக அப்படியே பார்த்தார். 

குறைந்தது ஒரு ‘சிகரட்’டையாவது வாங்கிப் பற்றவைத்து விட்டு வேலைகளை முடித்துக் கொடுக்கின்ற பலரைக்கண்ட அவருக்கு அந்த இளைஞனின் செய்கை ஆச்சரியத்தை ஊட்டியது மட்டுமல்ல, அவனைப் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்ற ஓர் உண்மையையும் உணர வைத்தது. 

இல்யாஸ், அந்த இளைஞனுக்கு நன்றியைத் தெரிவித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார். 

அவர், பெற்றிருந்த இரு காசோலைகளும் இலங்கை வங்கிக்குரியவை. ஆனால், அவருக்கு மக்கள் வங்கியில்தான் நடைமுறைக் கணக்கு ஒன்று இருந்தது. 

அவர், ஓவ்வூதிய நிலுவைக் காசோலையை தன்னிடம் வைத்துக் கொண்டு, ஆகஸ்ட் மாத ஓய்வூதியக் காசோலையை மட்டும், இலங்கை வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவரிடம் கொடுத்து அதனை உடனேயே காசாக்கிக் கொண்டார். அப் போதே அந்த நிலுவைக் காசோலையையும் அவரிடம் கொடுத்து அதற்குரிய பணத்தையும் இல்யாஸ் பெற்றிருக்கலாம்தான். ஆனால், மக்கள் வங்கியில் எட்டு மாதங்களாகச் செலுத்தப்படா மலிருந்த, ‘குருசெத’க் கடனைச் செலுத்த வேண்டியிருந்ததால், ‘அந்த நிலுவைக் காசோலையை அங்கே தனது நடைமுறைக் கணக்கில் இட்டு, அக்கடனை வங்கி கழித்துக் கொண்டதன் பின் மீதியை எடுத்துக் கொள்வதுதான் நல்லது. அப்படிச் செய்வதுதான் வங்கி முகாமையாளருக்கும் தன் மேல் ஒரு நல்ல அபிப்பிரா யத்தை ஏற்படுத்தும்; அவருக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்’ என்று இல்யாஸ் எண்ணினார். அதனால்தான் அவர், தனக்குத் தெரிந்த அந்த நபரிடம் நிலுவைக் காசோலையைக் கொடுக்கா மல் தவிர்த்துக் கொண்டார். 

அவர், கையிலிருந்த நிலுவைக் காசோலையை மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொண்டார். களிப்பு மத்தாப்பாய் வெடித்துச் சொரிந்தது. மகளின் திருமணம் நிறைவு பெறுவது போலவே விழிகளில் காட்சிகள் வந்து வந்து போயின. 

அவர், விரைவாய் அடி பதித்து அந்த மக்கள் வங்கிக் கிளையை அடைந்தார். அங்கே, அலுவலகத்திற்கு வெளியே, வாடிக்கையாளர்களும், மற்றவர்களும் மொய்த்துக் கிடந்தனர். அவர்களை ஊடறுத்து முன்னே நகர்ந்தார். 

வங்கியின் உள்ளே, வடபுறமாய் அலுவலகத்துள் பிர வேசிக்கும் வழியின் கரையைத் தொட்டவாறு வங்கி முகாமை யாளரின் அறை சற்று நீண்டு கிடந்தது. அவ்வறைக்கு அலுவலகப் பக்கமாக சுவருக்குப் பதிலாய் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. 

அவ்வறையில், மேற்குத் திசையில் சுவர்ப் பக்கமாகப் போடப்பட்டிருந்த ஒரு பெரிய மேசையின் முன்னே சுழலும் ஆசனத்தில் உட்கார்ந்து விரைவாகச் செயற்பட்டுக் கொண்டி ருந்தார் வங்கி முகாமையாளர். இடையிடையே அவரின் பார்வை, கண்ணாடியை ஊடறுத்து மேலோட்டமாக அலுவலகத்தின் செயற்பாடுகளைப் பதிவு செய்து கொள்ளவும் தவறவில்லை. 

அவரின் முன்னே, ஐந்து, ஆறு பேர் நின்றிருந்தனர். அவர்களோடு இல்யாஸும் சென்று இணைந்து கொண்டார். ஒவ்வொருவரின் சந்திப்பும் நிகழ்ந்து கொண்டிருந்தது. இறுதியாக இல்யாஸின் முறை வந்தது. அவர், தனது விடயங்களை தெளிவாக எடுத்துச் சொன்னார். 

“சேர்… நான் பென்ஸன்ல நிண்டு சரியா எட்டு மாதம். இவ்வளவு காலமும் எனக்குப் பென்ஸன் பணம் கிடைக்கல்ல. இப்பதான் அது கிடைச்சிருக்கு. அதோட, அரியஸ் செக்கையும் வேறயாத் தந்திருக்காங்க. இவ்வளவு காலமும் எனக்குப் பென்ஸன் கிடைக்காதத்தாலதான் சீராகக் கட்டுப்பட்டு வந்த என்ட ‘குருசெத’ கடன் இடை நடுவில் கட்டுப்படாம விடுபட்டிட்டு கட்ட வேண்டிய இந்த எட்டு மாதக் காசையும் இப்ப கட்டிரன். மத்த மீதிக்காச ஒவ்வொரு மாதமும் நான் ஒழுங்காக் கட்டிரன். இஞ்சதான் பென்ஸன் எடுக்கிறத்துக்கும் ஒழுங்குகள் செஞ்சிருக்கன். இன்னாரிக்கி என்ட பென்ஸன் அரியஸ் செக். என்ன மாதிரி நடந்து கொள்ற…” என்றார். 

மெல்லிய புன்முறுவல் வங்கி முகாமையாளரின் இதழ் களில் ஓடியது. அவர், வலது கையை மேலே தூக்கி கண்ணாடி ஊடாகச் சுட்டிக் காட்டியவாறு, “அன்னாரிக்கார் ஹிதாயத்துள்ளா, அவரிடம் கேளுங்க” என்றார்; மேசையிலிருந்த ஒரு ‘பைலை’ எடுத்து அதற்குள் மூழ்கினார். 

இல்யாஸோ, முகாமையாளர் சுட்டிக்காட்டிய வங்கி ஊழிய ரான ஹிதாயத்துள்ளாவிடம் சென்றார். 

அவனோ, இல்யாஸின் விடயத்தை முழுமையாகக் கேட்ட றிந்து கொண்டான். ஓய்வூதிய நிலுவைக் காசோலையை வாங்கி, அவரது நடைமுறைக் கணக்கில் வைப்புச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டான். 

“எப்படியோ, இன்டைக்கு உங்கட காசோலைய இலங்கை வங்கிக்கு அனுப்பி நீங்க உங்கட காச நாளைக்கே இஞ்ச எடுக்கக்கூடியதாக ஒழுங்குகளைச் செய்திருவம். ‘குருசெத’க் கடன் சம்பந்தமான உங்கட கணக்குகளையும் பார்க்கணும். எல்லாத்துக்கும் நாளைக்கு வாங்க.வரக்குள்ள, ‘குருசெத’ சேமிப்புக் கணக்குப் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு வாங்க” என்றான் வங்கி ஊழியர் ஹிதாயத்துள்ளா. 

இல்யாஸ், திருப்தியோடு அங்கிருந்து வெளியேறினார். 

அவர், மறுநாள் காலை 10.00 மணியளவில் அந்த வங்கி ஊழியரை மீண்டும் வங்கியில் சந்தித்தார். 

”குருசெதக் கடனுக்கு நான் கட்டவேண்டிய எட்டு மாதக் கடனையும் செலுத்தி விட்டு, மீதிக் காசையும் எடுக்கவேண்டும். எப்படிச் செய்வம்? இண்டைக்குக் காசெடுக்கலாம்தானே?” என்று அவனை அன்போடு பார்த்தார். 

வங்கி ஊழியரின் வதனத்தில் ஆதரவு ஒளி அஸ்தமித் திருந்தது. 

“உங்கட செக் மாறி வந்திருக்கு. காசில பிரச்சினயில்ல. ஆனா, நீங்க எடுத்த ஐம்பதினாயிரம் ரூபா ‘குருசெத’க் கடன்ல, நீங்க செலுத்த வேண்டிய பாக்கிகள் எல்லாத்தையுமே கழித்து உங்கட கணக்க அப்படியே முடிச்சிட்டம். வங்கி முகாமையாளர் அப்படித்தான் செய்யச் சொன்னார். நாங்க உங்கட கணக்குகள யெல்லாம் சரியாகப் பார்த்தே கழித்திருக்கிறம். இப்ப நீங்க காசெண்டு எடுக்கிறதா இருந்தா, அதில மிஞ்சின காச மட்டும்தான் எடுக்கலாம்” என்றான் வங்கி ஊழியர் ஹிதாயத்துள்ளா. கணக்குப் பதிவுப் புத்தகத்தையும் விரித்துக் காட்டினான். 

அவரது ஓய்வூதிய நிலுவைக் காசிலிருந்து ரூபாய் 43837.90 கழிக்கப்பட்டிருந்தது. 

அதைப் பார்த்ததும் இல்யாஸுக்கு இந்த உலகமே வெடித்துச் சிதறுவது போலிருந்தது. ‘பக்’ கென்று தொண்டை கம்மிக் கொண்டது. மனம் மகளின் திருமணத்தை எண்ணியிருக்க வேண்டும். கண்கள் கலங்கிக் கொண்டன; வதனமும், கடும் வெயிலில் பட்ட தளிர் போல் வாடிப்போயிற்று. 

வங்கி ஊழியருடன் மேலும் உரையாட விரும்பவில்லை இல்யாஸ். அவர், வலிந்து அடிவைத்து மீண்டும் வங்கி முகாமை யாளரின் அறையில் நுழைந்தார். 

முகாமையாளரோ, அவரைக் கண்டும், காணாதவர் போல் செயற்பட்டுக் கொண்டிருந்தார். இல்யாஸ், அவரின் எதிரில், மேசையின் அருகில் வந்தபோது நடிப்பதைத் தவிர்த்துக் கொண்டார். ஏற்கனவே, முன் ஆயத்தத்தோடு இருந்த அவர், வெறும் பார்வையை மட்டும், இல்யாஸின் பக்கமாக வீசினார். 

“சேர்… முழுவதையும் வெட்டியிருக்கு. நான் சொன்னான சேர்… ‘இப்ப அந்த கட்டவேண்டிய எட்டு மாதக் கடனையும் கட்டிறன்… மத்தக் கடன பிறகு ஒழுங்கா ஒவ்வொரு மாதமும் கட்டிறன்’ என்டு. நீங்க கவனிக்கல்லியே. இந்தப் பணத்த மையமாகக் கொண்டு என்ட குடும்பம் முக்கியமான பணியொன்றையும் எதிர்பார்த்துக்கிட்டிருக்கு. நான் சொன்னபடி அந்தக் கடனக் கட்டிப்போட்டு அதில மிஞ்சிற ஐம்பதினாயிரம் ரூபாக் காசையும் எடுத்து என்ட மகளுக்கு நாங்க பேசி வச்சிருக்கிற மாப்பிள்ளைக்கு கைக்கூலியாகக் கொடுக்கலாம். அத்தோட, கலியாணச் செலவுக்கு வீட்டில சேத்து வச்சிருக்கிற காசையும் எடுத்தா என்ற மகள்ள கலியாணத்த ஒரு மாதிரியா நடத்தி முடிச்சிரலாமெண்டு எண்ணியிருந்தன். நேரத்தோட அதற்கான சில ஒழுங்குகளையும் செய்து வைத்திருந்தன். வெண்ணெய் திரண்டு வரக்குள்ள தாழி உடைந்தது போலாயிற்றே… சே…” என்றுவிட்டு மிகவுமே கலங்கிப்போய் நின்றார் இல்யாஸ். 

வங்கி முகாமையாளர், அதனைக் கருத்திலே எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. அவர், எப்போதோ தனது உள்ளத்தைக் கல்லாக்கிக் கொண்டிருக்க வேண்டும். கொஞ்சம் கூட அனுதாபமின்றியே கூறினார்: 

“நீங்க பென்ஸன்ல நிண்டிட்டிங்கல்லவா… இன்னும் அந்தக் கடன் இருக்கப்படா… பென்ஸனுக்கு முதல்லதான் அந்தக் கடன் உங்களுக்கு உருத்து. இதோடயே எல்லாத்தையும் செற்றில் பண்ணத்தான் வேண்டும். அதுக்கொண்டும் செய்ய ஏலா. நீங்க எந்தக் கத கதைச்சும் நான் கேக்க ஆயத்தமில்ல.” வார்த்தை களைக் கனலாகவே வீசியெறிந்தார் வங்கி முகாமையாளர். 

பென்ஸன்காரரென்றால், ஓரப் பார்வைகள்தான் இனி விழுமோ? வங்கி முகாமையாளரின் நடவடிக்கைகளும் அதையே பிரதி பலித்தன. 

இல்யாஸ், அவரின் அறையிலிருந்து தள்ளாடியவராக வெளியிலே நகர்ந்தார். அவரின் மனக்கண் முன் மகளின் திரு மணக் கோட்டை இடிந்து சரிவது போல் தோன்றியது. 

ஆறு மாதங்கள் விரைந்தன. 

ஒரு தினம், அந்த வங்கி முகாமையாளர், தனது நண்பரோடு இளைப்பாறிய ஆசிரியரான இல்யாஸின் இல்லத்திற்கு வந்திருந்தார். 

வங்கி முகாமையாளரின் நண்பர், இல்யாஸைப் பார்த்ததும், 

“நீங்க இப்ப வீட்டில இருக்கிங்களோ… இல்லாட்டி வெளியிலயள் பெய்த்திர்ரீங்களோ…என்டு யோசித்துக் கொண்டு தான் நாங்க வந்த…நீங்க இருந்ததும் நல்லதாப் பேய்த்து” என்றார். 

இருவரும் தன்னைப் பார்ப்பதற்காகத்தான் வந்திருக் கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட இல்யாஸோ, “ஆ…’ என்றவாறு தலையையும் மெல்ல அசைத்துக் கொண்டார். அத் தோடு, இதழ்களில் உயிரற்ற ஒரு புன்முறுவலையும் நெளிய விட்டுக் கொண்டார். 

இருந்தும் இல்யாஸுக்கு, வங்கியிலே கொஞ்சமும் ஈவிரக்கமற்ற வகையிலே நடந்து கொண்ட அந்த வங்கி முகாமை யாளரைப் பார்க்கப் பார்க்க கோபமும், வெறுப்பும், எரிச்சலும் பொங்கிப் பொங்கி எழுந்து அவரை நிலை குலையச் செய்து கொண்டிருந்தன. 

எப்படித்தானிருந்தாலும், தனது வீட்டுக்கு வந்தவரிடம், அவற்றை வெளிப்படுத்துவது தகாது என்பதை உணர்ந்து தன்னை ஆற்றிக் கொண்டார் இல்யாஸ். 

அதே வேளை, வங்கி முகாமையாளரின் நண்பரும், அவ ருக்கு அறிமுகமான ஒருவராகவுமிருந்ததால் அவரின் முகத்தில் அறைந்தது போல் நடந்து கொள்ளவும் அவர் விரும்பவில்லை. 

இதற்கிடையில், அந்த வங்கி முகாமையாளருக்கோ, இல்யாஸைப் பார்த்ததும், நெஞ்சு, ‘திக்கு திக்கு’ என்று வேகமாக அடிக்கத் தொடங்கியது. திக்குமுக்காடியவராக விழித்தார். 

இப்போது இல்யாஸுக்கு, தர்மசங்கடமாகப் போய்விட்டது. 

அவர், நிலைமையைச் சமாளித்துக் கொண்டு அவ்விரு வரையும் வீட்டின் முன் ஹோலுக்குள் அழைத்து வந்தார். 

இரு சாராருக்குமிடையில் உரையாடல்கள் ஆரம்பமாகின. 

வங்கி முகாமையாளரின் நண்பரே பேச்சைத் தொடங்கினார். 

அவர், வங்கி முகாமையாளரைச் சுட்டிக் காட்டியவாறு சில விடயங்களை எடுத்துச் சொன்னார்: 

“மாஸ்டர், இவர் என்ட நல்ல நண்பர். இவர்ர மகன்ட ரியூசன் விசயமாத்தான் நாங்க இஞ்ச வந்த… இவர்ர மகன் நல்ல கெட்டிக்காரன். இப்ப ஓயெல் வகுப்பில படிக்கார். வாற டிசம்பரில் சோதின எடுக்கவிருக்கார். வகுப்பில அவரே எட்டுப் பாடங்கள்ளயும் ‘டி’ எடுப்பார் என்டும் எல்லாரும் எதிர்பாக்காங்க. தன்ட மகன்ட படிப்பில மிகவும் அக்கறையாக இருக்கின்ற என்ட நண்பரும், நேரத்தோடயே தன்ட மகன, கெட்டிக்கார ஆசிரியர் களுக்கிட்ட, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்கள்ள ரியூசனுக்கும் விட்டிட்டார். அதற்குக் கொஞ்ச நாளைக்குப் பொறகு இவரு தன்ட மகனுக்கு ஏனைய பாடங்களைப் போல தமிழ்மொழிப் பாடத்திலயும் ஒரு ரியூசன ஒழுங்கு செய்து கொடுத்திர வேண்டு மெண்டு எண்ணி ஒரு நல்ல ஆசிரியரத் தேடி பலருக்கிட்டயும் விசாரித்திருக்கார். எல்லாரும் இவருக்கிட்ட, நீங்க தமிழ் மொழி யில பெற்றிருக்கிற புலமையையும், திறமையையும் எடுத்துச் சொல்லி, உங்களுக்கிட்ட தமிழ்மொழியில ரியூசன் எடுத்தா கட்டாயம் அப்பாடத்தில ‘டி’ எடுக்கலாம் என்டும் கூறியிருக் காங்க. இவர், ஒரு நாள், இந்த விசயமா எனக்கிட்ட விசாரித்த போதும் நானும் அப்படித்தான் சொல்லியிருக்கன். அதனால… இவரும் உங்களுக்கிட்டயே தன்ட மகன அப்பாடத்தில ரியூ சனுக்கு விட்டிர வேணுமிண்டு சரியான விருப்பமாயிருந்தார். என்டாலும் இவர், ‘குருசெத’ கடன் விசயமா வங்கியில உங்க ளோட மிகவும் கண்டிப்பா நடந்து கொண்டதால, உங்களுக்கிட்ட வாறத்துக்கும் இவருக்கு ஒரு விதமான பயமாவும் இருந்திச்சி. என்ன செய்ற எப்படி நடந்துக்கிற என்டு ஒரேயே யோசித்துக்கிட்டு மிருந்தார்…நான்தான், ‘மாஸ்டர் நல்ல ஆள். என்னோடயும் பழக்கம். நான் விசயங்களச் சொன்னாக் கேட்டுக்குவார். ரியூ சனுக்கு ஒழுங்கு செய்துக்கலாம்’ என்டு இவர உங்களுக்கிட்ட கூட்டிக் கொண்டு வந்த. இப்ப நாலஞ்சி நாளைக்கு முதல்ல இவர் எனக்கிட்ட வங்கியில நடந்த அந்தக் குருசெத’க் கடன் சம்பந்தமான சம்பவங்கள எடுத்துச் சொன்னவுடன, நானும், இவர் தங்களோட நடந்து கொண்ட முறய எண்ணிப் பார்த்து இவரில் மிச்சம் கோபப்பட்டன். ‘உதவ வேண்டிய ஒரு நல்ல விசயம்; உதவியிருக்கலாம். சே… நீங்க என்ன மனிசன்…’ என்டு அவடத்திலயே இவருக்கு நல்லா ஏசியும் போட்டன். ஏதோ இவரும் உங்கட அந்த விசயத்தில யோசிக்காம நடந்துக்கிட்டார்… தயவு செய்து இவர மன்னிச்சிக்கிட்டு இவர்ர மகனுக்கு தமிழ் மொழிப் பாடத்த கொஞ்சம் நல்லாச் சொல்லிக் கொடுத்திருங்க” என்று விட்டு ஓய்ந்தார் வங்கி முகாமையாளரின் நண்பர். 

தைரியத்தை வரவழைத்துக் கொண்ட வங்கி முகாமை யாளரும், கனிந்து வந்த இச்சந்தர்ப்பத்தைக் கைவிட விரும்ப வில்லை. 

“மாஸ்டர், அந்தக் ‘குருசெத’க் கடன் விசயமா நான் வங்கியில உங்களோட நடந்து கொண்ட முறய ஆற அமர யிருந்து எண்ணிப்பார்த்த பொழுது, எனக்கும் சரியான மனவருத்த மாகத்தான் இருந்திச்சி. நான் மனந்திறந்து சொல்றன்… நீங்க வங்கிக்கு வந்த அந்தக் காலப் பகுதியில வீட்டில ஏற்பட்ட ஒரு சின்னப் பிரச்சின காரணமாக என்ட மன நிலையும் அவ்வளவு நல்லதா இருக்கல்ல. அதோட, ‘குருசெத’க் கடன் எடுத்த சிலர், சில மாதங்களாக கடன் கட்டாமலுமிருந்ததால அவர்கள்ளயும் என்ட மனம் வெறுப்படைந்துமிருந்தது. இந்த நிலையில நீங்களும் எனக்கிட்ட வந்துக்கிட்டு நிண்டிங்க. நானும் வேற எதையுமே யோசிக்கல்ல; உங்களச் சிக்காறாகவே பிடிச்சிக்கிட்டன். அப்ப நீங்க எனக்கிட்ட எவ்வளவோ சொல்லியும் அது ஒண்டுமே எனக்கு ஏறல்ல. அப்படியே முழுக்கடனையும் உங்கட பென்ஸன் நிலு வைக் காசோலையிலரிந்து கழிக்க நடவடிக்க எடுத்தன். தயவு செய்து என்ன மன்னித்துக் கொண்டு என்ட மகனுக்கு தமிழ்மொழிப் பாடத்தச் சொல்லிக் கொடுங்க. இப்ப உங்களுக்கு வேணுமின்டா ஐம்பதினாயிரம் ரூபாவுக்கு வேற ஒரு கடன் தாறன். நாலஞ்சி நாளைக்குள்ள அத எடுக்கிறத்துக்குரிய ஒழுங்குகளயும் செய் யிறன்” என்றார் வங்கி முகாமையாளர். 

“இனி எந்தக் கடனும் எனக்கு வேணா… என்ட மகள்ள கலியாணத்துக்காகத்தான், நான் கட்ட வேண்டிய அந்த எட்டு மாத குருசெதக் கடன மட்டும் கழித்துக் கொண்டு மிச்சக் காசக் கேட்டன். அப்படி நீங்க அதத் தந்திருந்தா, ஒரு ஐம்பதினாயிரம் ரூபா போல எனக்குக் கிடைச்சிருக்கும். மாப்பிள்ளையும் கைக் கூலியா ஐம்பதினாயிரம் ரூபாக் காசிதான் கேட்டார். குடுத்திருந்தா மகள்ள கலியாணமும் அன்று நடந்திருக்கும். நான் அத அவருக்கு குடுக்க ஏலாமப் போனத்தால அவர், வேற ஒரு இடத்தில கலி யாணம் முடிச்சிட்டார். எனக்கு இனி என்னத்திக்குக் கடன். பொதுவா… நான் கடன் எடுக்க எப்பயும் விரும்பிறல்ல. நான் எடுத்த அந்தக் குருசெத கடன்கூட, மகள்ள வீட்டத் திருத்திறத்துக் காக என்ற பொஞ்சாதிர வற்புறுத்தலுக்காகத்தான் எடுத்த. சரி… அந்தக் கடன் விசயத்த விடுங்க. உங்கட மகன் நல்ல கெட்டிக் காரப் பிள்ளையாகவுமிருக்கு… நான் கட்டாயம் அவருக்கு தமிழ் மொழிப் பாடத்தப் படிப்பித்துக் கொடுக்கன். நீங்க ஒண்டும் யோசிக்க வேணா… அவர வரச்சொல்லுங்க… அவருக்கு, வேற இடங்கள்ளயும் ரியூசன் இருக்கிறத்தால நேரத்த ஒழுங்கு படுத்திக்க வேணும். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உங்களுக்கு இன்னுமொரு விசயத்தையும் சொல்லிவைக்க வேண்டும். நான் உங்கட மகனுக்குக் கொடுக்கிற இந்த ரியூசனுக்குக் கூலியா பணத்தையோ அல்லது வேறு எதையோ நீங்க எனக்கு தந்திரப்பொடா… அப்படி நீங்க எனக்கு ஏதாவது தர முயற்சித்தா, அண்டையோடயே உங்கட மகன்ட ரியூசன் நிண்டிட்டு என்கிறத்தயும் நீங்க நினப்பில வச்சிக்கங்க.” 

இளைப்பாறிய ஆசிரியரான இல்யாஸின் இவ்வார்த்தை களைச் செவிமடுத்த வங்கி முகாமையாளர் அப்படியே பிரமித்துப் போனார். 

இல்யாஸ், மனிதனா? அல்லது தெய்வமா? என்பது அவ ருக்கு விளங்கவில்லை. 

சில வினாடிகளில், தன்னைச் சுதாகரித்துக் கொண்டு நிமிர்ந்தார். இருந்தும், இல்யாஸை நன்கு நேரே பார்க்க அவருக்கு நாணமாகவிருந்தது. 

“மாஸ்டர், நான் உங்கட விருப்பம் போலவே நடந்து கொள்வன். எப்படியோ, நீங்க என்ட மகனுக்கு ரியூசன் கொடுக் கணும். இப்ப அவர், மெற்ஸ் ரியூசனுக்குப் போயிருப்பார். வந்தவுடன நான் அவர உங்களுக்கிட்ட அனுப்பிவைக்கன்” என்று விட்டு அமைதியானார் வங்கி முகாமையாளர். 

அவருக்கு, இல்யாஸுடன் இன்னும் சில வார்த்தைகள் பேச வேண்டும் போலிருந்தது. என்றாலும், வார்த்தைகள், பாரிச வாத நோயாளர் போல் வெளிவரவியலாமல் தொண்டைக்குள் கிடந்து தவித்தன. 

இவ்வேளையில், வங்கி முகாமையாளரின் நண்பர், இல்யாஸை ஊன்றி நோக்கினார். 

“மாஸ்டர், நீங்க, உங்கட மகள்ள கலியாணத்திக்கு உதவ முன்வராத ஒருவருக்கு எந்தப் பிரதிபலனையுமே எதிர்பார்க்காது உதவி புரிய முன்வருவதென்பது ஒரு பெரிய விசயம். எனக்கு, நினைத்துப் பார்த்தாலே தேகமெல்லாம் புல்லரிக்குது…” 

இளைப்பாறிய ஆசிரியரான இல்யாஸோ, ஆழமான கங்கை போல் சலனமின்றிக் காட்சி தந்தார். 

– தினகரன் வாரமஞ்சரி, 1998 ஒக்டோபர் 18.

– சாணையோடு வந்தது… (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2007, முகாமைத்துவ தொழில்நுட்பக் கல்லூரி, இலங்கை.

யூ.எல்.ஆதம்பாவா உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *