பதச்சோறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2024
பார்வையிட்டோர்: 2,045 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொதிக்கும் உலைப்பானையிலிருந்து ஒரு சோற்றையெடுத்துப் பதம் பார்க்கிறவர்கள், அந்தப் பருக்கையைத் தேடிப் பொறுக்கி யெடுப்பதில்லை. விரலில் அகப்படுவதை அழுத்தி நசுக்கி மொத் தச் சோற்றுக்கும் பத நிலைமையைப் பரிசோதிக்கிறார்கள். புதிதா கச் சமைக்கப்படும் ஒரு சமூகத்திலும் இதே நிலைமைதான். அந்தச் சமூகத்தின் பக்குவத்தைப் பரிசோதிக்கும் கால சக்தியின் விரல்கள், அதற்காகத் தேடிப் பார்த்து ஒரு தனி நபரைப் பொறுக்கியெடுப்பதில்லை. விரல்களினிடுக்கிலே சிக்கியவனை அல்லது சிக்கிய வளைக்கொண்டு சமூகத்தின் பத நிலைமையை அறிந்து கொள்ளுகிறது. நான் காலத்தின் விரல்களில் சிக்கிய சோறுதான் போலிருக்கிறது” என்ற அளவுக்குக் குமுதம் தன் நிலையைப் புரிந்துகொண்டிருந்தாள். 

அவளது தாய் மங்கையர்க்கரசி திடீர் திடீரென்று உணர்ச்சி வேகத்துடன், அந்தச் சிக்கலைப்பற்றிப் பேசத் தொடங்கும் போதெல்லாம் குமுதம் அதே மனோ நிலையிலிருந்து தான் பதில் சொல்லி வாதாடுவாள். 

“அம்மா! அந்த மகாபுருஷரை ஏன் குறை சொல்லுகிறாய்? உலகம் முழுவதையும் உய்விக்க வந்த காந்தி என் ஒருத்தியை மாத்திரம் வெற்று வாழ்க்கைக்கு ஆளாக்கி விட்டுவிட்டார் என்று சொல்லுவது பொருந்துமா?” என்று தாயின் முணுமுணுப்பு களுக்குப் பதில் சொல்லுவாள். 

“உங்கள் காந்தியை நான் என்ன குறை சொல்லிவிட்டேன்? உன் விதி அப்படியிருந்தால் அதற்கு யாரைக் குறை சொல்லித் தான் என்ன பயன்?” என்பாள் மங்கையர்க்கரசி. 

“பார்த்தாயா! மறுபடி ஆரம்பித்து விட்டாயே. இது விதியல்ல அம்மா. அதைக்கூட மாற்றிவிடும் காலவேகம் என்கிற ஒரு மகாசக்தி. ஆறாயிரம் மைல்களுக் கப்பாலிருக்கிற ஒரு அன்னிய ஜாதியாரின் அடிமைகள் என்று விதிக்கப்பட்டிருந்த, நாற்பதுகோடி மக்கள் தலையெழுத்தை ஒரே நொடியில் அழித்து, அவ்வளவு பேர்களும் ‘சுதந்திரர்கள்’ என்று எழுதிய சக்தி அது என்று பிரசங்கம் செய்வாள் குமுதம். 

மங்கையர்க்கரசி, “நான் எப்படிச் சொன்னாலும் அதை மடக்கி அப்படியில்லை இப்படியென்கிறாய். நான் உன்னைப்போலக் கல்வியெல்லாம் படித்தவளில்லை. எங்கள் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்ததெல்லாம் தான் சரியென்று நம்புகிறவள். இவ்வளவு சட்டம் பேசுகிறவள் நீதான் எனக்குப் புரியும் பாஷையில் சொல் லேன். உன் புருஷன் எதற்காக இப்படி எல்லாம் வம்பு செய்ய வேண்டும்? நீ எதற்காக இப்படி வீம்பு பிடிக்க வேண்டும்? என்று கேட்பாள். 

குமுதம், “நூறுதடவை சொல்லியாகிவிட்டது.உனக்கு அது பிடிக்க வில்லை. அதனால் புரியவில்லை யென்கிறாய். இன்னொரு தடவையும் சொல்லுகிறேன். அவர் உன் மருமகன். இந்த தேசத்திலே வெள்ளைக்காரன் படைத்துவிட்டுவிட்டுப்போன ஜாதி. நான் காந்தி மகாத்மா சமைக்கத் தொடங்கிய புதிய பாரத ஜாதி. இரண்டும் முதல் கலப்பிலே ஒட்டமுடியாமல் தத்தளிக்கின்றன. அவ்வளவு தான்” என்பாள். 

“உங்கள் மகன் பாபு? அவன் என்ன ஜாதி?” என்று குரலிலே கோபம் தொனிக்கக் கேட்பாள் மங்கையர்க்கரசி. 

குமுதத்திற்கு அந்த தொனி நன்றாகத் தெரியும். ஆயினும் பொறுமையை இழக்காமல் நிதானமாக அவன்தான் புதிய பாரத சமூகத்தின் முதல் தலைமுறை யென்று நம்பிக்கொண்டிருக்கிறேன்” என்பாள். 

மங்கையர்க்கரசி மகளைப் பரிதாபத்துடன் பார்த்து, “நீ இந்நேரம் சொன்னதில் எனக்கு ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. புருஷனும், பெண்சாதியும்தான் மனது ஒத்துக்கொள்ளவில்லை. நீ கோர்ட்டுக்குப் போய், உங்களப்பா சொல்லுகிறபடி ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்தால் என்ன? உங்கள் காந்தி விரதமே வீணாகிப் போய்விடுமோ?” என்பாள். 

குமுதம் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிடும். அதைக் கண்ட மங்கையர்க்கரசியின் நெஞ்சம் பதைத்துப்போகும். ஏற் கெனவே நொந்துபோயிருந்த மகள் உள்ளத்தைக் கிளறிவிட்டு விட்டோமே என்று பச்சாத்தாபம் எழும். மகள் அருகில் போய் “உன் கதியை நினைத்தால் வயிறு கொதிக்கிறது. அந்த வேகத்திலே ஏதாவது சொல்லிவிடுகிறேன். நீ செய்வதெல்லாம் சரியாகத்தானிருக்குமென்று மனத்துக்குத் தெரிகிறது. இருந்தா லும் அஞ்ஞானம் அதை உடனே மறைத்து விடுகிறது” என்று குமுதத்தின் கூந்தலைக் கோதுவதுபோல விரலையோட்டுவாள். 

குமுதம் சிரித்துக்கொண்டே ‘< என் அஞ்ஞானி அம்மாவைத் தான் எனக்குப் பிடித்திருக்கிறது என்று தாயின்மேல் செல்ல மாகச் சாய்வாள். 

குமுதம் சொல்வது போலத் தாய் மகளுக்கிடையில் இந்த மாதிரித் தர்க்க வாதம் இதுவரை நூறுதடவை கூட நடந்திருக் கும். மங்கையர்க்கரசி அப்போதைக்குப் பேச்சை நிறுத்துவாள் ; ஆனால் மறுபடியும் சமயம் வந்தவுடன் பழைய தோரணையி லேயே தொடங்கி விடுவாள். 


அன்று இருவரும் அந்த மாதிரியான ஒரு வாதப் பிரதி வாதத்திற்கு ஏற்ற மனோநிலையில் இல்லை. உள்ளூர இருந்த பதைப்பை வெளியில் காட்டாமலிருக்க இருவரும் ரொம்ப ரொம்ப சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். 

மங்கையர்க்கரசி கூடத்தின் ஒருபுறத்திலிருந்த ஸோபாவில் உட்கார்ந்திருந்தாள். குமுதம் மறுகோடியிலிருந்த மேஜையடி நாற்காலியில் உட்கார்ந்து ஒரு புஸ்தகத்தைப் பிரித்துப் பிடித்துக்கொண்டு படிக்க முயன்றாள். கண்கள் புஸ்தகத்திலே ஊன்றிய மாதிரி யிருந்தன. ஆனால் அந்தப் பக்கங்களிலிருந்த ஒரு எழுத்துக்கூட அவள் மனத்தில் பதியவில்லை. அவளது வலது கைவிரல்கள் புஸ்தகத்தின் தாள்களைக் கோதிக்கொண்டிருந்தன அடிக்கடி முகத்தை புஸ்தகத்திலிருந்து நிமிர்த்தி எதிரில் சுவரின் மேலிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே யிருந்தாள். அப்படிப் பார்த்துத் திரும்பும்போது அவளது விழிகள் மேஜை மேலிருந்த டெலிபோனின் புறம் ஓடிவிட்டுத் திரும்பின. 

மணி பன்னிரண்டரை என்று காட்டின கடிகாரத்தின் முட்கள். குமுதம் உள்ளக் கொந்தளிப்பை அடக்க முடியாத எல்லையை எட்டி விட்டாள். எழுந்து தாயிடம் போய் “மணி பன்னிரண்டரை யாகிறது. 

“இன்னுமா தீர்ப்புச் சொல்லாமலிருப்பார்கள்?” என்றாள். அவள் குரல் நடுங்கியது. 

“ஜட்ஜு சொன்னவுடன் உங்களப்பா போனில் சொல்லு கிறேன் என்று சொல்லியிருக்கிறாரே. கவலைப்படாமல் இப்படி உட்காரு, தெய்வம் நம்மைக் கைவிட்டு விடாது” என்றாள் மங்கையர்க்கரசி பரிவுடன். 

குமுதம் அவளருகில் உட்கார்ந்தாள். துக்கம் அவளையும் மீறிப் பொங்கியது. கண்கள் நீர் சொரியத் தொடங்கி விட்டன. மங்கையர்க்கரசி துடித்துப் போனாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, வேடிக்கையாக, உங்களப்பா சொல்லுவதுபோல அவ்வளவு தர்க்க நியாயம் பேசும் நீயும் ஒரு அஞ்ஞானிதான். ‘ என்ன முடிவு வந்தாலும் நாம் சரியான வழியில் போக வேண் டியது. அவ்வளவு தான் நம்முடைய பொறுப்பு என்று எங்களுக்கு மட்டும்தான் உபதேசமா? அது உனக்குமில்லையா? என்றாள். 

குமுதம் கண்ணீரைத் துடைக்கவும் முயலாமல் “பாபுவை நினைத்தால் அடிவயிற்றில் என்னவோ செய்கிறதம்மா. குப்பென்று நெருப்புப் பிடிப்பது போல இருக்கிறது” என்று தாயின்மேல் சாய்ந்தாள். 

மங்கையர்க்கரகி பதில் சொல்லாமல் அவளை அணைத்துக் கொண்டு அவள் தலையை வருடினாள். 


பதினைந்து வருஷங்களுக்குமுன் மகாத்மா காந்தியைத் தரிசிக்க குமுதத்தை அழைத்துக் கொண்டு போனபோது தம் மகளின் வாழ்க்கையில் இவ்வளவு பெரியதொரு புயல் அடிக்குமென்று சிவசங்கர முதலியார் நினைக்கவேயில்லை. 

1934ம் வருஷத்தில் காந்தி ஹரிஜன நிதி வசூலுக்காகத் தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்தார். அவர் விஜயம் செய்த ஊர்களிலெல்லாம், மக்கள் வெள்ளம்புரண்டு வருவது போலத் திரண்டு சென்று அவரைத் தரிசித்தார்கள். 

அந்த வேகம் அப்போது பதினான்கு வயதுச் சிறுமியாக இருந்த குமுதத்தையும் வளைத்து இழுத்தது. தந்தையிடம், காந்தியைப் பக்கத்திலிருந்து பார்க்கும்படிக் கூட்டிக் கொண்டு போகச் சொல்லிக் கெஞ்சிக் கொஞ்சினாள். 

சிவசங்கர முதலியார் அவளிடம் ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்து ‘” இதை மகாத்மாவிடம் கொடுத்து உன் புத்தகம் ஒன்றில் கையெழுத்து வாங்கிக் கொள். அப்போது அவரை உன்னால் முடிந்தவரைக்கும் பார்த்து விடு” என்று சிரித்துக் கொண்டே சொல்லி அழைத்துச் சென்றார். 

குமுதம் கையெழுத்து வாங்குவதற்கு ஒரு புஸ்தகம் தேடினாள். பாரதி உரையெழுதிய கீதைதான் கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். 

கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு தந்தையும் மகளும் முன் வரிசைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். காந்தி ஹிந்தியில் பேசியதை ஒருவர் தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார். குமுதம் பாதி புரிந்தும் புரியாமலும் அதைக் கேட்டாள். நிதி வசூல் ஆரம்பமாயிற்று. யார் யாரோ என்ன வெல்லாமோ காணிக்கை செலுத்தினார்கள். 

குமுதம் எழுந்து அவரருகில் போய் நோட்டைக் கொடுத்துப் புஸ்தகத்தைக் காட்டி, அதில் கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்டாள். 

காந்தி அவளைக் கருணை வழியும் கண்களால் ஏற இறங்கப் பார்த்து “என் கையெழுத்துக்கு விலை ஐந்து ரூபாய் தானென்று உனக்கு யார் சொன்னது” என்று கேட்டார் இங்கிலீஷில். 

இரண்டாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்த குமுதத் திற்கு அது புரிந்தது. குளறிய இங்கிலீஷில் எங்களப்பாதான் சொன்னார்” என்றாள். 

“அதற்குமேல் கொடுக்க முடியாத ஏழைகளுக்குத்தான் அந்த விலை. உன்னைப்பார்த்தால் பணக்காரியாகத் தோன்று கிறது. இதோ கையில் வளைகள், காதில் தோடு, கழுத்தில் சங்கிலி எல்லாம் அணிந்திருக்கிறாயே. இடைக்குத் துணிகூட இல்லாத ஏழை ஹரிஜனங்களுக்கு அதை யெல்லாம் நீ கொடுத்துவிடக் கூடாதா?” என்றார் காந்தி. 

குழந்தை முன்பின் யோசிக்காமல், தயங்காமல் நகைகளைக் கழற்றினாள். 

காந்தி பொக்கை வாயை நிறையத்திறந்து சிரித்துக் * கொஞ்சம் பொறு; இதையெல்லாம் கழற்றி என்னிடம் கொடுத்துவிட்டு நீ வீட்டுக்குப் போய் வேறு நகைகள் போட்டுக் கொள்ளக் கூடாது. அதற்குச் சம்மதித்தால்தான் இவற்றை என்னிடம் கொடுக்கலாம் ” என்றார். 

குமுதம் “சம்மதம்” என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள். 

“உன்னுடைய பெற்றோர்கள் நீ நகை போட்டுக்கொள்ள வேண்டுமென்றால்?” என்றார் காந்தி. 

“உங்களுக்கு வாக்குக் கொடுத்திருப்பதைச் சொன்னால், சரி போட்டுக் கொள்ள வேண்டாமென்று சொல்லி விடுவார்கள்”

“நாளை உனக்குக் கலியாணமாகும் போது உனக்குக் கணவனாக வருகிறவர் சொன்னால்?” 

“கலியாணத்திற்கு முன்பே எனக்கு நகையணியா விரதம் என்பதை அவரிடம் சொல்லிவிடச் சொல்லுவேன். என் விரதத் தோடு என்னை ஏற்றுக் கொள்ளச் சம்மதிக்கிறவரைத்தான் மணந்துகொள்வேன்” என்று திடமாகப் பதிலளித்தாள் குமுதம். 

காந்தி, ஒருகணம் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். இரண்டு ஜதைக் கண்களும் சந்தித்தன. குழந்தையின் உள்ளத் திலிருந்த உறுதியை, அவளது விழிகளில் கண்டு காந்தி அவள் கொடுத்த புஸ்தகத்தைப் பிரித்தார். அது கீதை யென்று கண்டவுடன் இன்னொரு முறை அவள் முகத்தைக் கவனித் தார். அவர் முகத்தில் ஒரு அபூர்வமான புன்னகை பூத்தது. 

புஸ்தகத்தின் முகப்புப் பக்கத்தில் “மேற்கொண்ட விர தத்தை நடத்தி முடிக்க நீ எந்தத் தியாகத்திற்கும் சித்தமாக இருக்க வேண்டும். அதற்கு வேண்டிய மனோபலத்தை இந்த கீதை ஒன்றுதான் உனக்குக் கொடுக்கவல்லது என்று எழுதி அதன் கீழே ” எம். கே. காந்தி’ என்று கையெழுத்திட்டு அவளிடம் கொடுத்தார். 

தன் மகளுடன் அந்த மகாபுருஷன் அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த பெருமையில், சிவசங்கர முதலியாருக்குத் தலைகால் புரியவில்லை. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதைக் கூட அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. குமுதம் நகை களைக் கழற்றிக் கொடுத்ததைப் பார்த்தார். காந்தியின் பொக் கைவாய்ச் சிரிப்பைப் பார்த்தார். அவ்வளவு தான். 

குமுதம் திரும்பி வந்தவுடன் அவள் கையிலிருந்த புஸ்தகத்தை வாங்கி, காந்தியின் கையெழுத்திருந்த பக்கத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு மூடி வைத்தார். 

மூன்று வருஷங்களுக்குப் பிறகுதான் அந்தச் சம்பவத்தின் பொருளும் பலாபலன்களும் அவருக்குப் புரியத் தொடங்கின. குமுதத்தின் பதினேழாவது வயதில் அவளுடைய மணத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கினார். 

இதோ இதழவிழ்ந்து மலரப் போகிறது என்று காட்டும் குமுதமொக்கைப் போலவே யிருந்தாள் குமுதம். சாதாரண ஒற்றை வர்ணச் சேலை யுடுத்து, கொஞ்சம் அழுத்தமான நிறத் தில் ரவிக்கை யணிவாள். கூந்தலைச் சீவிச் சடை பின்னி அதில் மலர் சூடி அவள் நிற்பதைப் பார்த்தால், யாரோ வனதேவதை வழி தவறி நாகரிகத்திற்குள் வந்துவிட்டது போலத் தோன்றும். 

அவளுடைய இயற்கை எழிலுக்கு ஏற்றபடி நகைநட்டுகள் போட்டு அலங்கரித்துப் பார்ப்பதற்கில்லையே யென்று ஏங்கினாள் மங்கையர்க்கரசி. சிவசங்கர முதலியாருக்கும் உள்ளூர அந்த மனக்குறை யுண்டு. 

ஆலயத்திற்குச் சென்று ஆண்டவன் முன்னிலையின் பரிசுத்த வாழ்க்கை விரதம்பூண்டு வெளியேறுகிறவர்களே சில நிமிஷங் களில் தங்கள் விரதத்தை மறந்து விடுகிறார்கள். மனிதக் காந்தியின் முன் மேற்கொண்ட விரதம் மட்டும் நிலைத்து நிற்கு மென்று என்ன நிச்சயம்? 

குமுதம்-காந்தி சந்திப்பைப் பற்றிச் சிவசங்கர முதலியார் அப்படித்தான் நினைத்திருந்தார். குழந்தை ஏதோ விளையாட்டுப் போக்கில் அவரிடம் சொல்லி விட்டாள். காலத்துடன் மனம் மாறத்தானாக அலங்கார ஆசை பிறந்துவிடும் என்று நம்பினார். ஆனால் காலத்துடன் அவள் மன உறுதி பலமடைந்ததைத்தான் கண்டார். 

காந்தியைச் சந்திக்குமுன் தனது பிராயத்திற்கேற்ற மனப் பாங்கிலிருந்தவள், மிக மிக விரைவில் உள்ளூர வளர்ந்து ஒரு பக்குவ நிலையை எய்தி விட்டதைக் கண்டார். படபடக்காமலும், சிந்தனையிலே தடுமாற்றமில்லாலும் அவள் தமக்கே எட்டாத எல்லையிலிருந்து பேசியதைக் கேட்க அவருக்கும் பெருமையாகத் தானிருந்தது. 

ஆனால் அவளுடைய விரதம், தந்தை யென்ற முறையில் தான் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்குத் தடையாக வருவதை எண்ணும்போது அவருடைய பொறுமை தடுமாறியது. 

முதல் முதலாக அவர் தமது உறவினரிலேயே ஒரு மருமகனைத் தேடிப் பேச்சுத் தொடங்கியவுடனேயே தமது நிலைமையிலிருந்த சிரமத்தை உணர்ந்தார். சகஜமாகப் பிள்ளை வீட்டார், பெண்ணுக்கு நகைகள் போடுவதைப் பற்றிக் கேட்டார்கள். முதலியார் காந்தி சம்பவத்தை விளக்கிச் சொல்லி குழந்தைக்கு நான் செய்யக்கூடியதை யெல்லாம் நிலமாக சீதனம் எழுதிவைக்கப் போகிறேன்” என்றார். 

பிள்ளை வீட்டாருக்குச் சப்புத் தட்டி விட்டது. அதில் ஒரு அம்மாள் “தாலியும் சிறகும்கூட நகைதானே. அதையாவது கட்டிக்குவாளா இல்லையா?” என்று ஏளனமாகக் கேட்டாள். 

முதலியார் மனம் புண்ணாகிவிட்டது. ஆயினும், அந்த அனுபவம் அப்போதுதான் ஆரம்பித்திருக்கிறதென்பதை யுணர்ந்து பதில் சொல்லாமல் எழுந்து வந்துவிட்டர். 

அதன் பின்னர் மூன்று இடங்களில் மாப்பிள்ளை தேடினார். ஒரு இடத்தில் அவருக்கே திருப்தியில்லை. 

இன்னொரு இடத்தில் “பெண் நகை போட்டுக்கொள்ள முடியாதென்றால், அந்தத் தொகையை எங்களிடம் ரொக்கமாகக் கொடுத்துவிட வேண்டும்” என்று நிபந்தனை போட்டார்கள். 

அதாவது நகை யணியாத பெண்ணைக் கட்டிக்கொள்ள உங்கள் மகனுக்கு நான் கைக்கூலி கொடுக்க வேண்டுமென்கிறீர் கள் ; இல்லையா?” என்று படபடத்துப் பேசி விட்டு வெளியேறினார். 

மூன்றாவது இடத்தில் பேச்சுவார்த்தை யெல்லாம் முடிந்து கடைசியாகக் குமுதத்தின் விரதவிஷயம் வெளி வந்தவுடன் “காந்தி கட்சிக்கும் எங்களுக்கும் ரொம்ப தூரம் என்று அவருக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டார்கள். 

இதிலேயே இரண்டு வருஷங்கள் கழிந்து விட்டன. மகளுக்குக் கலியாணமே ஆகப்போவதில்லை என்று கருதத் தொடங்கிவிட்டாள் மங்கையர்க்கரசி. 

குமுதம் தான் மேலே படித்து ஏதாவது உத்தியோகம் தேடிக் கொள்ளுவதாகச் சொல்லிப் பெற்றோரைச் சமாதானம் செய்ய முயன்றாள். ஆனால் அவர்களுக்கு அதில் திருப்தியில்லை. ‘கலியாணம் ஆகும் வரை வேண்டுமானால் படி. அப்புறம் உன்னை மணந்துகொண்டவன் இஷ்டம்தான். உன்னை யாருக் காவது கட்டிக்கொடுக்காமல் எங்கள் பொறுப்புத் தீராது’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் முதலியார். 

அந்த சமயத்தில்தான் சென்னையிலிருந்து ஷண்முகசுந்தரத் தின் பெற்றோர்கள், யாத்ராமார்க்கத்தில் அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். விருந்தாளிகளாக வந்தவர்கள் சம்பந்தி களாக மாறினார்கள். 

பெற்றோர் அழைப்பின் மேல் நேரில் வந்து குமுதத்தைப் பார்த்த ஷண்முகசுந்தரம் ஒரே நொடியில் அவளை மணக்க இசைந்தான். அவள் காந்திக்குக் கொடுத்த வாக்கைக் காப் பாற்றுவதற்குத் தான் தடையாக இருப்பதில்லை என்றும் உறுதியளித்தான். 

குமுதத்தின் மணவாழ்க்கையில் முதல் ஆறு வருஷங்கள் மிக மிக இன்பமாகக் கழிந்தன. மணமான மூன்றாம் வருஷம் அவள் ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள். குழந்தைக்கு மோகன் என்று பெயர் வைத்தார்கள். எல்லோரும் அவனை பாபு என்று செல்லப்பெயரால் அழைத்தார்கள். 

குமுதத்தின் பதிபக்தி உள்ளூரக் கனிந்த பிரேமையிலிருந்து வளர்ந்தது. அதன் இனிமை முழுவதையும் உணர்ந்த ஷண்முக சுந்தரம் அவளை மனைவியாக அடைந்ததில் தனக்கு நிகரேயில்லை யென்று பெருமிதம் கொண்டிருந்தான். 

அவன் தந்தைக்குச் சென்னையில் பெரிய வியாபாரம். மணத்திற்குப் பிறகு அவன் அதில் அதிக கவனம் செலுத்தி, இரண்டே வருஷங்களில் அதன் பொறுப்பு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்ளும் நிலைமையை அடைந்தான். அவன் தந்தை எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டார். 

பணத்திற்குச் சொந்தமாக ஒரு இயல்பும் கிடையாது. அது போய்ச்சேரும் ஆளைப்பொறுத்து அதற்குத் தன்மை பிறக்கிறது என்பது ஒரு கட்சி. பணம் இயல்பாகவே மனித மனத்தை நேர் வழியிலிருந்து திருப்பிக் கீழ்நோக்கி இழுத்துச் செல்லும் சக்தி படைத்திருக்கிறது என்பது இன்னொரு கட்சி. 

ஷண்முகசுந்தரம் விஷயத்தில் இரண்டாவது கட்சிதான் சரி யென்று ரூபித்துவிட்டது அவனையடைந்த பணம். யுத்த கெடு பிடியில் அவனுடைய வியாபாரம் அமோகமாகப் பெருகியது. அதிலும் கணக்குக்குக் கொண்டுவராமல், கள்ளச் சந்தை லாப மாக ஏராளமாகச் சம்பாதிக்க வழிகள் தோன்றின. ஷண்முக சுந்தரம் அந்த வழிகளில் இறங்கினான். 

ஆரம்பத்தில் குமுதத்திற்கு அது தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை யறிந்தபோது அவள் மனம் மிகுந்த வேதனையடைந்தது. கணவனிடம் ஜாடைமாடையாகப் பேசினாள் பலனில்லை. 

“இதெல்லாம் என் வியாபார விஷயம். நீ தலையிடக் கூடாது” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். 

அவன் அதோடு நின்றிருந்தால் நிலைமை இவ்வளவு சீர்கெட் டிருக்காது. தான் கள்ள மார்க்கெட்டில் சம்பாதித்த பணத் தைப் பயன்படுத்திக் கொள்ளப் புதிதாக ஒரு வழி கண்டு பிடித் தான். குமுதம் நகைகள் அணிய வேண்டுமென்று சொன்னான். அவள் மறுத்தபோது ”நீ அதையெல்லாம் போட்டுக்கொள்ளா விட்டால் என்ன? உனக்காகவென்று நகைகள் வாங்கித்தான் தீரவேண்டும். பின்னால் சமயோசிதம் போல நான் அதைப் பணமாக மாற்றிக் கணக்குக்குக் கொண்டுவர வழிசெய்து கொள்ளுவேன்” என்றான். 

குமுதம் அதற்கும் இணங்கவில்லை. அங்கிருந்துதான் அவர் கள் வாழ்க்கையில் கரகரப்புத் தட்டத் தொடங்கியது. குழந்தை மோகன் பாபுதான் கரகரப்பு, கலகமாக முற்றாமல் காப்பாற்றி வந்தான். 

ஆனால் இரு வெவ்வேறு திசைகளில் திரும்பிப் புறப்பட்டு விட்ட உள்ளங்கள் எத்தனை நாளைக்குத்தான் அம்மாதிரிச் செயற்கைப்பூச்சில் ஒட்டிக்கொண்டிருக்க முடியும்! 

தான் கணவன்; என் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, நான் சொல்லுகிறபடி நடக்க, செய்யக் கடமைப்பட்டவள் அவள்: என் வார்த்தையை அவள் மறுப்பதா?” என்ற அகங்காரம் தோன்றி அதிவேகமாக வளர்ந்தது, ஷண்முகசுந்தரம் மனத்தில். தினசரி வாழ்க்கையில், சிறு சிறு காரியங்களில்கூட அவன் காட் டிய அந்த மனோபாவத்தைக் கண்டு குமுதம் கலங்கினாள். என்ன நேர்ந்தாலும் காந்திக்குக் கொடுத்த வாக்கைக் கைவிடுவதில்லை யென்ற உறுதி மாத்திரம் அதிக பல மடைந்தது. 

அதே நிலைமையில் இருவரும் ஒதுங்கி ஒதுங்கி ஒரு வருஷம் தள்ளிவிட்டார்கள். அந்த அசட்டுக் கசப்பு நிலையை நீடிக்க விடாமல் காப்பாற்ற இந்திய சர்க்காரின் வருமான வரி விசா ரணைக் கமிட்டி நியமன அறிவிப்பு வெளி வந்தது. யுத்த காலத் தில் கொள்ளை லாபம் அடித்துவிட்டு அதற்குரிய வருமான வரி யைச் செலுத்தாமல் ஏமாற்றியவர்களைக் கண்டு பிடிப்பதுதான் கமிட்டியின் பொறுப்பு. 

அந்த அறிக்கையைப் படித்த ஷண்முகசுந்தரம் பயந்து விட்டான். குமுதத்திடம் நகைகள் வாங்கும் விஷயத்தை அதிக மாக வற்புறுத்தத் தொடங்கினான்; 

“நான் கழுதை மாதிரி நகை சுமக்கச் சம்மதித்தாலும், அதிகமானால் ஐம்பதினாயிரம் அல்லது ஒரு லட்சத்திற்கு நகைகள் வாங்கலாம். உங்கள் இருட்டடி லாபம் அதற்குமேல் நாலைந்து மடங்கு இருக்குமே. அதற்கென்ன செய்வீர்கள்?” என்று கேட்டுவிட்டாள் குமுதம். 

ஷண்முகசுந்தரம், “அது என் கவலை. நான் சொல்வதை மாத்திரம் நீ செய்தால் போதும் என்றான். 

குமுதம், அன்றுவரை நேருக்கு நேர் பதில் சொல்லி வாதாடி யவளல்ல. அன்று என்னவோ அவளுக்குப் பேசித்தான் தீர வேண்டும் போலிருந்தது. அன்னிய ஆதிக்கம் ஒழிந்து நாட்டை நாமே ஆளும் உரிமை வேண்டுமென்று போராடி னோம். இன்னும் சில மாதங்களில் நம்முடைய சொந்த சர்க் கார் ஏற்பட இருக்கிறது. அது நடக்கப் பணம் கொடுக்க நாம் தயாராக இல்லை. உங்களைப் போன்றவர்கள் வெள்ளைக்காரனே இருந்துவிட்டுப் போகட்டும் என்று நேரடியாகச் சொல்லிவிட லாமே இப்படிச் செய்வதற்கு” என்றாள். 

ஷண்முகசுந்தரத்தின் அகங்காரம் அவன் மனிதத்தன்மைக்கே திரையிட்டுவிட்டது. அவனை ஆட்டிவைத்த பணம் சீறிக்கொண்டு எழுந்து அவனைத் தூண்டியது. ‘சீ நாயே வாயை மூடு’ என்று அவள் கன்னத்தில் அடித்துவிட்டான். 

அன்றுவரை அவன் குமுதத்தை அடி என்று கூடச் சொன்னதில்லை. அதனால் அவனுடைய அந்த நடத்தை அவனையே குலுக்கிவிட்டது. தான் செய்தது தவறுதான், மிருகத் தனம் தான் என்று உணர்ந்தான். அதுவே அவனுடைய ஆத்தி ரத்தையும் எரிச்சலையும் அதிகரிக்கக் காரணமாயிற்று. தன்னை அப்படி மிருகத்தனத்திற்குத் தாழ்த்தியது அவளுடைய தூய்மை யும், உறுதியும் தான் என்று கருதினான். அதனால் அவளைக் கண்டாலே அவன் நெஞ்சில் வெறி பிறந்தது. 

திடீரென்று ஒருநாள் அவனையும் குழந்தை பாபுவையும் ரயி லேற்றி, அவளுடைய பிறந்த வீட்டுக்கு அனுப்பினான். அவள் அங்கே போய் இறங்கும்போது அவள் விலாசமிட்ட கடிதமொன்று காத்திருந்தது அவளுக்காக. 

“உன் வீட்டுக்காரர் கையெழுத்து, நீ அங்கிருக்கும்போதே இங்கே எதற்காக இப்படிக் கடிதம் போட்டிருக்கிறார் என்பது விளங்காமல் திகைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று அதை அவளிடம் கொடுத்தார் சிவசங்கர முதலியார். 

குமுதத்திற்கு அதில் என்ன எழுதியிருக்குமென்பது ஒருவாறு தெரிந்துவிட்டது. பிரித்துப் பார்த்தாள். 

“நீ என் மனைவி. என் உத்தரவின்படி நடக்கக் கடமைப் பட்டவள் என்பதை நிச்சயமாக உணர்ந்து அதற்குச் சித்தமாக இருப்பதாகக் கடிதம் எழுதிவிட்டு இங்கே திரும்பிவந்தால் போதும்” என்று எழுதியிருந்தான் ஷண்முகசுந்தரம். 

குமுதம் தன் பெற்றோரிடம் நடந்ததை யெல்லாம் விவரமாகச் சொன்னாள். “மணத்தின் போது நீ நகை போட்டுக்கொள்ள மாட்டாய் என்பது தெரிந்துதானே அதற்கு இசைந்தான்? இன்று இப்படி வாக்கு மீறுவதுதான் அழகா? அதைக் காரணம் காட்டி உன்னை வாழாவெட்டியாக்க முயலுவது சரிதானா என்று கேட்டு எழுதுகிறேன். இல்லாவிட்டால் நானே நேரில் போய் கேட் கிறேன்” என்று குதித்தார் முதலியார். 

குமுதம் அவரைச் சமாதானம் செய்து “இப்போது நீங்கள் என்ன செய்தாலும் அவருடைய பிடிவாதம் தான் வலுக்கும் அப்பா. கொஞ்சம் பொறுமையாக இருந்தால் தானாக மனம் இளகிவிடுவார். அவர் சுபாவம் எனக்கு நன்றாகத் தெரியும்” என்றாள். 

ஆனால் அவள் ஷண்முகசுந்தரத்தின் சுபாவத்தைச் சரியாகத் தெரிந்துகொள்ளவேயில்லை யென்பதைத்தான் காலம் காட்டியது. ஒரு வருஷம் வரை அவனிடமிருந்து கடிதமே வரவில்லை. குமுதம் எழுதிய கடிதங்களுக்கும் பதிலில்லை. 

அவள் பிறந்த வீட்டுக்கு வந்து சரியாக ஒரு வருஷம் ஆன அன்று காலையில் அவள் தந்தை சிவசங்கர முதலியாருக்குச் சென்னை ஹைகோர்ட்டில் இருந்து ஒரு சம்மன் வந்தது. 

சென்னை ஷண்முகசுந்தர முதலியார் தன் மகனைத் தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடவேண்டுமென்று கோர்ட்டில் மனுச் செய்துகொண்டிருப்பதாகவும், தற்சமயம் குழந்தையை வைத் திருக்கும் குமுதம் பையனுடன் கோர்ட்டில் ஆஜராகித் தன் கட்சியைத் தெரிவிக்கவேண்டுமென்றும் அதில் உத்தரவிடப் பட்டிருந்தது. 

அதைப்படித்த சிவசங்கர முதலியார் மனம் கொதித்து விட்டது. “அயோக்கியப் பயல், வேண்டுமென்று வம்பு செய்வதற் காகவே இப்படிச் செய்திருக்கிறான். அவனை விடுவதில்லை, ஒருகை பார்த்து விடுகிறேன்” என்று இரைச்சல் போட்டார்: 

குமுதம் “எதற்காக அப்பா இப்படிப் பேசுகிறீர்கள்? அவர் மகனை அவர் கேட்டால் நாம் ஒப்படைத்து விடவேண்டியவர்கள் தானே” என்றாள். 

“நீ பேசாமலிரு. வாயா வார்த்தையாகக் கேட்டால் போதா தோ ? திடீரென்று கோர்ட்டுக்குப் போவானேன்? என்னை யாரென்று நினைத்திருக்கிறான்? நான் போய் நல்ல வக்கீல் ஒருவரைக் கலந்து பேசுகிறேன். இவனைச் சும்மாவிடப் போவ தில்லை குழந்தைக்கும் உனக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமென்று எதிர் வழக்குப் போடுகிறேன்” என்று சீறினார். 

ஆனால் அவர் சொன்னபடி எதிர்வழக்குப் போடவில்லை. குமுதம் அதற்கு இணங்கவே முடியாதென்று சொல்லிவிட்டாள். குழந்தையை ஒப்படைக்கும் விஷயத்தில் மாத்திரம் அவள் தந்தையின் போக்கை ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவளுடைய தாய்மை உணர்ச்சி தீவிர வேகத்துடன் எழுந்து குழந்தையைத் தன்னிடம் இருத்திக்கொள்ளத் தூண்டியது, 

குமுதமே நேரில் கோர்ட்டுக்குப் போய்த் தன் கட்சியைச் சொல்லவேண்டுமென்று விரும்பினார் முதலியார். என்ன காரணத் தினால் இந்த விபரீத வழக்கு வந்திருக்கிறதென்பதை விளக்கிச் சொன்னால், சுலபமாக ஜயித்துக்கொண்டு வந்து விடலாமென்று வக்கீலும் யோசனை சொன்னார். குமுதம் அதற்கு இசையவில்லை. தன் பெயரால் ஒரு வாக்குமூலம் பதிவு செய்வதற்கும், அதில் தான் குழந்தையை எவ்விதக் குறைவுமின்றி வளர்க்கமுடியும், அது தன் தாயுடன் வளர்வதால் எவ்விதக் கோளாறும் நேர்ந்து விடாது என்று சொல்வதற்கும் மாத்திரம் அனுமதியளித்தாள். 

இந்த வழக்கைப்பற்றிய விஷயங்களைக் குழந்தையிடம் யாரும் பேசக்கூடாது. அவனெதிரில் பெரியவர்கள் அதைப் பற்றிக் குறிப்பிடவும் கூடாது என்று கண்டிப்பான நிபந்தனையும் விதித்தாள். பெரியவர்கள் குரோதத்தில் காட்டும் ஆபாச மனப்பான்மை குழந்தைக்கும் படிந்துவிடக் கூடாது, என்று தன் தாய்க்கு விளக்கிச் சொன்னாள். 

வழக்கு இழுத்துக்கொண்டே போயிற்று. ஷண்முக சுந்தரம் வேண்டுமென்றே வளரவிட்டான். குமுதத்தின் உள்ளத்தை வதைத்து அவளைப் பணியவைத்துவிட வேண்டுமென்ற பேய் வெறி அவனை ஆட்டிவைத்துக் கொண்டிருந்தது. அதனாலேயே வழக்கை இழுக்கடித்தான்? 

சிவசங்கர முதலியார் சென்னையிலேயே ஒரு தனி வீடாகப் பிடித்துக் குடும்பத்துடன் வசிக்க வந்துவிட்டார். 


அன்றுதான் தீர்ப்பு. சிவசங்கர முதலியார் பாபுவுடன் கோர்ட்டுக்குப் போயிருந்தார். வக்கீல் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், பெற்றோர்கள் எவ்வளவோ வற்புறுத்தி மன்றாடி யும், குமுதம் தன் கட்சி சம்பந்தமாகப் பல தகவல்களைக் கோர்ட்டில் வெளியிட அனுமதியளிக்கவேயில்லை. 

அதனாலேயே அன்று தீர்ப்பு அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கப்போகிறது என்று மற்ற எல்லோரும் நம்பினார்கள். ஆனால் குமுதம் மட்டும் தன் கட்சியிலிருந்த சத்தியமும் தாய் உரிமையும்தான் ஜயிக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தாள். 

அந்த நம்பிக்கையையும் மீறி அவள் உள்ளம் பதைத்தது. மற்றவர்கள் எல்லோரும் கருதுவதுதான் சரியாக இருந்து விடுமோ என்ற சந்தேகம் அடிக்கடி எழுந்து அவளை வதைத் தது. தான் பதியையும் இழந்து, பாபுவையும் இழந்துவிட நேர்ந்தால் அப்புறம் வாழ்க்கை சர்வ சூன்யமாகிவிடுமே என்ற எண்ணம் எழுந்து எழுந்து அவளைத் துடிக்க வைத்தது. 

தாயின்மேல் சாய்ந்து அவள் மனத்திற்குள்ளாகவே தியானம் செய்தாள். 

கடிகாரம் ஒரு மணியடித்தது. குமுதம் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். டெலிபோன் மணியும் கிணுகிணுவென்று ஒலித்தது. அவசரமாக எழுந்துபோய் ‘வாங்கி’ யுறுப்பைக் கையிலெடுத்தாள். அவள் கை நடுங்கியது. உறுப்பைக் காதரு கில் கொண்டுபோகத் தயங்கினாள். மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு உறுப்பில், “சிவ சங்கர முதலியார் வீடு. யார் வேண்டும்?” என்றாள், 

“நீதான் வேண்டும்” என்று பதில் வந்தது மறுபக்கத்திலிருந்து. 

“நீங்களா?” என்றாள் குமுதம். 

எழுந்து அவளிடம் வரப்புறப்பட்ட மங்கையர்க்கரசி அவள் குரலைக் கேட்டவுடன் தயங்கி நின்றாள். 

மறுபக்கத்திலிருந்து ஷண்முகசுந்தரம் பேசினான். “குமுதம், உனக்குக் கடைசியாக ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறேன். நீங்கள் சொல்லுகிறபடி நடக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லி யிடு: எல்லாம் சரியாகிவிடும்” என்றான். 

குமுதம் பணிவுடன் ” இதுவரை உங்கள் சொல்லை மீற வேண்டுமென்று நான் நினைத்தது கூட இல்லை” என்றாள். 

“அதனால் தான் நகைகள் வாங்கக்கூடச் சம்மதிக்க மாட்டே னென்கிறாயோ” என்று ஏளனமாய்க் கேட்டான் ஷண்முக சுந்தரம், 

“அதற்கு நான் இசைந்தால் என் வாக்கைமாத்திரமல்ல, உங்கள் வாக்கையும் காப்பாற்றாத பாவம் சேரும். உங்களுக்கு நான் என்ன சொல்வதற்கிருக்கிறது” என்றாள். 

ஷண்முகசுந்தரம் “ஓகோ! என்னை அரிச்சந்திரனாக்கிவிட வேண்டுமென்றுதான் கோர்ட்டில்கூட எதிர்வழக்காடுகிறாயா? சரிதான். தீர்ப்புச் சொல்லியாகிவிட்டது. பாபு என்னுடன் வந்துவிடுவான். இனிமேல் அவனைத் தூரத்திலிருந்து கூடப் பார்க்க முடியாது நீ. அந்த ஆசை ஏதாவது இருந்தால் இப் போதே அதை விட்டுவிடு ” என்றான். 

குமுதம் பிரமையடித்தவள் போலக் கேட்டுக்கொண்டு நின்றாள். முடிவில் “சரி” என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு உறுப்பைத் திருப்பி வைத்தாள். 

அதுவரை அவள் கட்டுப்பாட்டுக்கடங்கியிருந்த துக்கம் பீறிட்டுக்கொண்டு எழுந்தது. ‘அம்மா!’ என்று கதறிக்கொண்டு தாயிடம் ஓடினாள். அவள் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கோவென்று குரலிட்டு அழுதாள். 

மங்கையர்க்கரசிக்கு ஒன்றும் புரியவில்லை. குமுதம் தன் கணவனுடன் பேசினாள் என்று யூகித்துக் கொண்டாள். ஆனால் முடிவில் அவள் அப்படிக் கதறிக்கொண்டு வருவானேன்? குமுதத் திடம் பேச்சுக் கொடுக்கவும் அவள் விரும்பவில்லை. வாய்விட்டுக் கதறினால் நெஞ்சையழுத்தும் துக்கத்தின் வேகம் குறையுமென்று பேசாமல் இருந்தாள். 

நாலைந்து நிமிஷங்கள்வரை அழுதுகொண்டிருந்த குமுதம் மெள்ள எழுந்து ”அம்மா! பாபுவை அவரிடம் ஒப்புவிக்கும்படித் தீர்ப்பாகிவிட்டதாம். அவரே சொன்னார்” என்றாள்; 

மங்கையர்க்கரசி மகளை இழுத்துக் கட்டியணைத்துக் கொண்டாள். 

வாசலில் மோட்டார் வந்து நின்ற சத்தம் கேட்டது. குமுதம் தாயின் அணைப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு எழுந்தாள். “அம்மா! நானாக வெளியே வரும்வரை என்னை யாரும் கூப்பிடவேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவசரமாக வீட்டினுள்புறம் சென்றாள். 

அவள் கூடத்தின் மறுபுற வாசலருகில் போனபோது பின்னா லிருந்து *”அம்மா!” என்று அழைத்த பாபுவின் குரல் வந்தது. துள்ளித் திரும்பினாள். எதிர்ப்புர வாசலிலிருந்து பாபு அவளை நோக்கிப் பாய்ந்தான். 

குமுதமும் கட்டவிழ்த்துக்கொண்டு வரும் பசுவைப்போல ஓடிவந்தாள். அவனை நெருங்கியவுடன் அவள் முழங்கால்கள் சடக்கென்று முறிந்ததுபோல மடிந்தன. தன் நெஞ்சத்திலே பொங்கிய ஆசை- பாசத்தையெல்லாம் கொட்டி அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள். 

பாபுவின் தோளின் மேல் சாய்ந்து குமுதம் கண்களை மூடிக் கொண்டாள். குழந்தை தாயின் தலையை வருடிக்கொண்டே ”அம்மா! நான் அப்பா கூடத்தான் இருக்கணும்னு ஜட்ஜு தீர்ப்புச் சொன்னாரு எல்லோரும் சரின்னுட்டாங்க, தாத்தா கூடத்தான். நான், ஜட்ஜு தொரைகளே!. என்று கூப்பிட்டேன்.” 

‘கோர்ட்டுச் சேவகன் ‘ஷ்! சைலன்ஸ்னு’ அதட்டினான். ஜட்ஜு ரொம்ப நல்லவரு அம்மா. “என்ன வேணும் தம்பி” ன்னு கேட்டாரு. 

“எங்கம்மா காந்திக் கட்சி. எங்கப்பா அதுக்கு எதிர்க்கட்சி. அதுதான் அவங்களுக்குள்ளே சண்டை: நானும் காந்தி கட்சி யிலேதான் இருக்கப் போகிறேன்னேன்.”

“எல்லாரும் திருதிருன்னு முழிச்சாங்க. அப்பா வக்கீல் எழுந்து நின்னு இங்கிலீஷிலே என்னவோ படபடான்னாரு. ஜட்ஜு அவர் சொன்னதைக் கேக்கவேயில்லே. என்னை நடுவிலே ஒரு பெட்டிமாதிரி இருக்குதே அங்கே வந்து நிக்கச் சொன்னாரு. நான் பயப்படாமே போயி நின்னேன்.”

“தம்பி! உனக்கு எது நல்லது இல்லேன்னு தெரிஞ்சுக்கிற வயசு வரல்லே இன்னம். நீ குழந்தை, ஆகையினாலே சட்டப்படி உனக்கு எது நன்மையோ அப்படித் தீர்ப்புச் செய்திருக்கோம்” 

“நான், எங்கப்பா என்னைக் காட்டிலும் கொழந்தையா இருக்காருங்களேன்னேன். அது தப்பா அம்மா? பின்னே அங்கே யிருந்தவங்கள்ளாம் எதுக்காக அப்படிச் சிரிக்கணும்? 

“ஜட்ஜு உனக்கு யாருகிட்ட இருக்கப் பிரியம்னு கேட்டாரு. அம்மா கூடத் தான்னேன். தீர்ப்பை மாத்திப் போட்டாரு அம்மா” என்றான். 

குமுதம் வியப்பில் விரிந்த தனது பெரிய கண்களால் அவன் முகத்தைத் தாகத்துடன் பருகிக் கொண்டே அதையெல்லாம் கேட்டான். 

அவன் முகத்தை இரு கைகளாலும் பற்றி இழுத்து முகம் முழுவதும் முத்த மழை பெய்து தள்ளிவிட்டாள். 

கூடத்தின் வெளிவாசலருகில் நீர் துளித்த கண்களுடன் நின்று பார்த்துக்கொண்டிருந்த சிவசங்கர முதலியார், “குமுதம்! இந்த தேசத்திலிருந்து வெள்ளைக்காரன் வெளியேறியதுடன், காந்தி மேற்கொண்டு வந்தவேலை முடிந்துவிட்டதென்று எல்லா ரும் நினைக்கிறார்கள். அது தவறு. காந்தி சக்தியின் வேலை இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது என்பாயே. அது அப்படி யே சரியென்பது இன்றுதான் எனக்கு விளங்குகிறது. வாசலில் ஷண்முகசுந்தரம் வந்து காத்திருக்கிறான். நீ உத்தரவு கொடுத் தால் உள்ளே வருவான்” என்றார். 

குமுதம் பாபுவைக் கொஞ்சம் விசையுடனேயே ஒதுக்கித் தள்ளிவிட்டு எழுந்து வாசல்புறம் ஓடினாள்.

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *