மச்சாளுக்கு ஒரு மலர்மாலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 3,947 
 
 

யார் இந்த மச்சாள்? இது யாழ்ப்பாணானத்து உறவு முறையில் தோன்றி மறைந்த ஒரு பெயர். அன்றைய கால கட்டத்தில், மாமன் மகளை இப்படித்தான் அழைப்பது வழக்கம். இது தவிர, தமையன் மனைவியையும் இவ்வாறே அழைப்பர். இப்போது அப்படியில்லை தமையன் மனைவியை, அண்ணி என்றே அழைக்கிறார்கள். வெளிநாட்டுக்குப் போன பின் உறவே திரிபு பட்ட , பின், அழைக்கும் பெயர் உறவு முறை பெயர் எப்படியிருந்தாலென்ன.

கனடாவில் இருந்து பெரிய எடுப்போடு வந்திருக்கும் நவமணியும் அவ்வாறே, அழைத்தபடி விசாரித்து விட்டுப் போக, வந்திருக்கிறாள், உறவு முறை கொண்டாடிக் கொணடு, மனோகரியைப் பார்த்து, குசலம் முன்பே போனில் அறிவித்து விட்டுத் தான் வந்திருக்கிறாள். சிக்கலாக முடிச்சு அவிழ்ந்து போகாமலே முடிந்து போன உறவின் இருள் விலகிப் போன மாதிரி, ஒளித் தேரேறி அவள் வந்திருக்கிறாள்.

அவள் முன்பு அதாவது மனோகரி அவர்கள் வீட்டில் வாழ்ந்து கரி தின்ற காலத்தில் தாதியர் கல்லூரியில் பயின்று, ஒரு நர்ஸாக பணி புரிந்தவள். படிக்கிற காலத்தில் ஓர் ஆண் நர்ஸையே காதலித்து கல்யாணம் செய்தவள். அவள் அப்படிருந்தும் முடி இழந்த சோகம் அவளுக்கு புனிதம் மிக்க காதலும் தோற்றது.

அப்படித் தோற்றுப் போனவளை வரவேற்க, தோலுரிந்து பாதிநடைப் பிணமாய் மனோகரி. அன்று அவர்கள் வீட்டில் இருந்தது வாழ்ந்தது எல்லாம் ஒரு கெட்ட கனவு போலாகி விட்டிருந்தது.

அவளுக்குத் தெரியும், எது நிஜமென்றும் பற்றைக் காடு என்றும் காடு பற்றி வெறிக்க அவள் ஒன்றும் காட்டிலில்லையே.

மகத்தான் இருப்புக் கொண்ட நாயகி, வாழ்கிற ஒரு கோவில் வீடு என்ற சிறையையும் தாண்டி அவள். அவள் காலடிக்கு வந்து சேர்ந்த புழு மாதிரி, அப்படி நவமணியைக் கண்டதும் உடல் பதற மனம் பதற ஒரு எழுகை அவளுக்கு எல்லாம் தள்ளாடுகிற வயசு தான. இருந்தாலும் கறை நீங்கினாற் போல, ஒரு தெளிவு கங்கை நான் என்று ஒரு பெருமிதம் கூட, தோன்றியது.

உடைந்து போன உறவை புதுப்பிக்க அது தான் நவமணி வந்திருக்கிறாளே, காதல் கணவனை கைகழுவி விட்டு விட்டு இப்போது அவள் கனடாவில் பிள்ளைகளோடு தான் இருக்கிறாள். ஏதோ பென்ஷன் அலுவலாக மகனோடு தான் வந்தாளாம்.

வரட்டுமே நன்றாக வரட்டுமே உறவிலே பழுது காணாத புண்ணியவதி அவள் அன்பையே வழிபடும் ஆதர்ஸ தேவதையான அவளுக்கு உறவை வெறுத்து போன மாதிரி ஒரு கீழ் நிலை இருப்பு பாச வேக்காடு எதுவும் வந்ததில்லையே அவளுக்கு. ஆகவே நல்லிணக்கத்தோடு தான் முகம் கறுக்காமல் அவளை வரவேற்று உபசரித்த போது நவமணியின், கண்களுக்கு அவள் ஒரு பாவியாகவல்ல, ஒரு யுகதேவதை போலவே தோன்றினாள்.

நவமணியும் வெகுவாக, உருக்குலைந்து போயிருந்தாள் நீரழிவு நோய் வந்து ஆளைத் தின்று விட்டது தடியூன்றித் தான் நடக்கிறாள். அவளைக் கைப்பற்றி அழைத்து வந்து சோபாவில் அமரச் செய்து விட்டு மனோகரி சகஜமாகவே குரலை உயர்த்திக் கேட்டாள்.

என்ன இவ்வளவு காலமும் ஒட்டாமல் இருந்திட்டு திடீர் விஜயம்?

குறை நினைக்காதேங்கோ மச்சாள். அப்ப நீங்கள் துரும்பை அசைத்தாலும், உங்களிலை குறை கண்டு பிடிச்சு அப்ப சண்டை போட்டதை நினைச்சு இப்ப, நான் வருத்தப்படுறன். உங்கள் கழுத்திலை நாங்கள் போட்டது, மாலையல்ல. கல்லை எறிஞ்சு காயப்படுத்துற வக்கிர புத்தி அண்ணனுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான் வந்து விட்டதே. அப்படி உங்களை தோலுரிச்சு நடுத்தெருவில் விட்டாலும் வானிலே ஒரு துருவ நட்சத்திரம் மாதிரி அப்பவெல்லாம் நீங்கள் இருந்தியளே. எங்களை மன்னிச்சு நீங்கள் ஏற்றுக் கொண்ட மாதிரி, இதுக்கு முன்னாலை சகதி குளிச்சு எழுந்ததை நினைச்சு இப்ப வெட்கப்படுறன். அதுக்கு பரிகார சித்தி செய்யிற மாதிரித் தான் இப்ப நான் வந்தது.

அது பழைய கதை ஒரு தெய்வீக இருப்பிலே நான் இருந்தது என்னவோ உண்மை தான். எனக்குத் தெரியும், ஒன்றும் சரியாய் நடக்கேலை. உங்கடை அண்ணா உட்பட எல்லோருக்கும் நான் எதிரி மாதிரித்தான் தெரிஞ்சன். இதைக் கடந்து வந்ததே, பெரிய சத்திய சோதனை மாதிரி எனக்கு இந்தக் கழுவாயை இறக்கி வைக்கத் தான் இப்ப வந்தீங்களோ?

இப்படி உங்களை புத்தி பிசகி நோகடிச்சதுக்காக இப்ப கழுவாய் சுமந்து நான் தான் சதா வருந்துறன். அதுக்கு ஒரு பரிகார சித்தி தான் இந்த சாமானகளெல்லாம், என்று ஒரு பெரிய பார்சலையே, மனோகரியிடம் நீட்டினாள்.

என்னது?

பிரித்துத் தான் பாருங்களேன். இதை விடப் பணப் பரிசு வேறு. உலகம் அவள் முன்னால் விரிந்து கிடக்க, அவள் கண்களைச் சிமிட்டியவாறே கரைந்து போய்ச் சொன்னாள்.

இப்ப நினைச்சாலும் எனக்கு மனவருத்தமாக இருக்கு சரியான புரிதல் இல்லாமல், போனால், வாழ்க்கை நரகம் தான், பதிலுக்கு நானும் பகையாளியாக மாறியிருந்தால், என்ன நடந்திருக்கும் ? நான் பூமாதேவியாக இருந்தன் நல்ல வேளை பிழைச்சு இருக்கிறன். இப்படி அன்பு வழிபாடு செய்யப் பிறக்கிறதே கடவுள் கொடுத்த வரம்.

அவள் அப்படி சொன்னதைக் கேட்டு நவமணி கதறி அழுது விட்டாள். இவ்வளவு அன்பு செய்யத் தெரிந்திருந்தும், அடுக்கடுக்காய் சோதனைகள் வந்து, மச்சாள் உயிருடனேயே சமாதியாகி செத்துப் போனாளே இது ஏன்? பாவகுளிக்குள் வீழ்ந்தவர்களெல்லாம் பளிங்கு மாளிகையில் குடியிருக்க, அன்பு செய்யப் பிறந்த என்ரை அன்பு மச்சாள் இப்படிக் கரை ஒதுங்கிப் போய் விட்டது குறித்து, கடவுளைத் தான் கேட்க வேண்டும் என்று மனதுக்குள் அவள் புலம்பித் தீர்க்க, கழுத்தில் மாலையோடு இப்போது மட்டுமல்ல என்றுமே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட பூரண நிறையொளியில் தன்னையே கடவுளாக உணர்ந்த, பாவனையில் உணர்ச்சி மேலீட்டினால், குரல் கம்ம தொண்டை அடைத்து மெதுவாக அவள் கூறினாள்.

நவமணி! சகதி குளித்து எழுவதில், இல்லை வாழ்வதில் எப்பவுமே எனக்கு உடன்படில்லை உயிர்களையே சமமாக நேசித்து நல்லதையே செய்ய நினைக்கிற என்னை கழுவாய் சுமக்க வைத்து தண்டிச்சு விட்டதாய் இன்று கூட நான் வருத்தபடேலை, எல்லோரும் கூடி, என்னைக் கடவுளாக ஜொலிக்க வைச்சதற்கு நான் தான் உங்களுக்கெல்லாம் கைமாறுசெய்து நன்றிக் கடன் தீர்த்தாலே, போதும் அடுத்தகட்டம் எனக்கு மோட்சம் தான்.

சுத்த அறிவோடு கொஞ்சமும் பொய் கலவாமல், அவள் கூறி முடித்த அப்பழுக்கற்ற, உண்மைக்கு முன்னால், தலை குனிந்து மனம் கூசினாள் நவமணி. பெயர் தான் நவமணிபாவச் சேற்றினுள்ளேயே, புதைந்து மீள முடியாமல் நிற்கிற தனக்கு இந்தப் பெயர் பிணத்துக்குச் சூட்டியது போல என்று உணர்கையில் அவள் முழுவதுமே பேச்சிழந்து ஸ்தம்பித்துப் போய் முகம் சிவந்து குழம்பி அவளை நிமிர்ந்து பார்க்கும் போது, கழுத்தில் மாலை சுமந்த, களையோடு மனோகரியைக் காண்கையில் அவள் அமர்ந்திருக்கும் இடத்தில் கடவுளையே காண்பது போல புல்லரித்து தன்னை மறந்து கரம் குவித்து வணங்கும் போது, இது ஏன் முன்பு நடக்கவில்லை, என்ற கேள்விக் கணை நெஞ்சைத் துளைக்க சுதாரித்துக் கொண்டு, திடீரென்று தனக்கே, சுபாவமான, விழிப்பு நிலையில் மனம் தெளிந்து போய் குரலை உயர்த்தி அவள் சொன்னாள் நான் தெய்வமாய் இருக்கிறதே, மோட்சம் கிடைத்த மாதிரி.

அப்படியென்றால். என்று இழுத்தே பதிலுக்கு கேள்வி எழுப்பிய நவமணியைப் பார்த்து உதடு நிறையப் புன்னகையோடு மனோகரி சொன்னாள். உங்களுக்கு இது புரியாது. உங்களுக்கு என்ன எல்லோருக்கும் தான். அது தான் இங்கே ஒரு மோட்சம். நீங்கள் நம்புகிற மோட்சம் இந்த வெளிநாட்டு வாழ்க்கையிலே அனுபவிக்கிற மோட்சம். அது போதுமே உங்களுக்கெல்லாம். அவள் சொல்லி முடித்த அந்த அபூர்வ சங்கதிளின் அர்த்தம் பிடிபடாமல், வெகு நேரமாய், மனம் குழம்பி இருந்து விட்டுதோற்றுப் போன கவலை மாறாமல் அசடு வழிய அவள் சொல்வதை ஒரு மாறுபட்ட கோணத்திலிருந்து அவள் உளறுகின்ற, ஒரு வரட்சி சித்தாந்தமாகவே, மனோகரியால் உணர முடிந்தது.

அதை விடுங்கோ மச்சாள். நாங்கள் எப்படியாவது இருந்திட்டுப் போறம். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்பார்களே?

ஓ! அப்படிச் சொல்ல வாறியா?

ஓம் மச்சாள்! எனக்கல்ல எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் இது தான்.

அதைக் கேட்டு விட்டு, சொல்லவில்லை. மனதுக்குள் நினைத்தாள் மனோகரி. யுகம் மாறினாலும் மனிதர்களுக்கெல்லாம் ஒரே புத்தி தான். இதை மாத்த நினைச்சு, மேலும் நான் பேசி குட்டையைக் குழப்பினால், அது இன்னும் கொடிய பாவம். இது மாறும் வரை கங்கை, குளித்து எழும் சந்தோஷத்தோடு நான் காத்திருக்க வேண்டியது தான். பாவக் கழுவாய் சுமந்து வருந்தி செத்த எனக்கு இது போதுமே.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *