சுவாமிநாதன்




முத்துக்குமரன், 10ம் வகுப்பு ‘உ’ பிரிவில், கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தக் கணிதக் குறிப்புகளைக் குறிப்பேட்டில் விரைவாகப் பதிவுச் செய்துகொண்டான். பதின்ம வயதிற்குறிய சுறுசுறுப்பும், குறுகுறுப்பும் அவனிடம் சற்று மிகையாகவே இருந்தது.
‘குறிலே நெடிலே குறிலிணை குறில் நெடில்
ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி
நேரும் நிரையும் என்றிசின் பெயரே.”
தமிழய்யா இன்றைய தினம் ஒப்பிக்க வேண்டும் என்று சொல்லியத், தொல்காப்பியம், பொருளதிகாரம் 312 வது செய்யுளை மனதிற்குள் மீண்டும் மீண்டும் மனனம் செய்தபடி இருந்தான் முத்துக்குமரன்.

இதுபோல, வாயிலே நுழையாதக் கரடு முரடானப் பாக்களையும், நன்னூல் சூத்திரங்களையெல்லாம்கூடப் பிஞ்சு உள்ளங்களில் ஏற்றிவிடுவார் தமிழாசிரியர் வரதராசனார் அவர்கள்.
“பொருள் புரியவில்லையே அய்யா…?” என்று ஒரு முறை வகுப்பில் ஒரு மாணவன் கேட்டபோது, “இப்போது மனனம் செய்…! புரியும்போதுப் பொருள் புரியும்…!” என்றார்.
‘எழுதாக் கிளவி’யான மறைகளைத், திரும்பத் திரும்பச் சொல்லி, உருப் போடுவதைப் போலத் தமிழ்ச் செய்யுள்களையும், நன்னூல் சூத்திரங்களையும், உருப்போட ஊக்குவிப்பார் அவர்.
வரதராசனாரின் மாணவர் எவரும், வாழ்வில் சோடை போனதாக வரலாறில்லை.
முது நெல்லிக் கனி போல, முதலில் கசந்தாலும், முடிவில் இனிப்பைச் சுவைப்பர் அவரின் மாணவர்கள்.
தமிழய்யாவின் மீதுப் பெருமதிப்பு வைத்திருக்கும் முத்துக்குமரன், தொல்காப்பியச் செய்யுளை ஒப்பித்து, வழக்கம்போல, இன்றும் அய்யாவிடம் பாராட்டுப்பெற ஆவலுற்றான்.
மனனம் செய்தான் தொடர்ந்து.
“டிங்…;
டிங்…
டிங்…”
மும்முறை ஒலித்தது மணியோசை.
நான்காவதுப் பிரிவேளைத் துவங்கியது.
மாணவர்கள் கணிதப்பாடப் புத்தகத்தையும், கணிதக் குறிப்பேட்டையும், வீட்டுப் பாடத்திற்கானக் குறிப்பேட்டையும் தங்கள் புத்தகப் பைக்குள் அனிச்சையாகத் திணித்தார்கள்.
மூன்றாவதுப் பிரிவேளை, கணிதம் கற்பித்த, ஆசிரியை வளர்மதியம்மாள், அடுத்தப் பிரிவேளை வரும் ஆசிரியரின் வசதிக்காக, சுத்தமாகக் கரும்பலைகையை அழித்துவிட்டு, பத்தாம் வகுப்பு ‘உ’ பிரிவிலிருந்து வெளியேறினார்.
தமிழாசிரியரின் வருகையை எதிர்ப்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனர் மாணவச் செல்வங்கள்.
தமிழ்ப் பாடநூல், தமிழ்க் குறிப்பேடு, தற்காலிகக் குறிப்பேடு, கட்டுரை ஏடு, கையெழுத்து ஏடு, அனைத்தையும் தயாராக வைத்துக் கொண்டு, தமிழாசிரியரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்களுக்கோ எதிர்பாரா ஏமாற்றம்.
மணியொலித்து ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும் தமிழய்யா வராமையால் மனச்சோர்வடைந்தனர் மாணவர்கள்.
“நண்பர்களே…! பாரதியின் ‘புதிய ஆத்திச்சூடி’யான ‘கெடுப்பது சோர்வு’ என்பதை நினைவில் கொள்வோம்.” – எனக்கூறி அனைவரின் சோர்வையும் போக்கினான் முத்துக்குமரன்.
‘தமிழுன் தாய்மொழி…” – பாவேந்தரின் ‘இளையார் ஆத்திச்சூடி’, முத்துக்குமரனுக்குள் முழக்கமிட்டது.
‘தூக்கி வினை செய்..’ – முத்துக்குமரன் ‘ஔவையின் ஆத்திச்சூடி’க்கு உதாரணமாய் உருமாறினான்.
தமிழாசிரியர் வரதராசனார் மிகச் சிறந்தத் தமிழ்ப் புலவர். பண்பாளர்.
காலந்தவறாமை என்பது அவர் குருதியில் கலந்தவொன்று.
ஒரு நாளும் காலந்தவறி வந்தாரில்லை அவர்.
வகுப்பில் சோம்பி அமர்ந்தவரில்லை.
வெண்கல மணியைப்போல் ஒலிக்கும் கணீரென்றக் குரல்வளம் அவருடையது.
மகுடிக்கு மயங்கும் பாம்புகளாய்ச் சிறுவர்கள், மெய்மறந்துத் தமிழ்க் கற்பர் அவரிடம்.
தடித்த நாக்கிலும், தமிழின் சிறப்பாம் ‘ழ’கரத்தை லாகவமாக ஏற்றிவிடுவார் வரதராசனய்யா.
‘கல்வியே கருந்தனம்’ என்பதைப் பல வழிகளிலும் மாணவர் மனதில் பதியவைப்பார்.
“மாணவர்களே…! கல்வியென்பது உங்கள் உரிமை…! ;
தேடிப் பெற வேண்டியது கல்வி…! ;
ஐயம் திரிபறக் கற்பதே, நீங்கள் கல்விச்சாலைக்கு வரும் நோக்கம்…! ;
எத்தனையெத்தனை முறை ஐயம் கேட்டாலும், சலிப்பேயின்றி, மாணவர் மனதில் ஏறும் வரை கற்றுத் தரவேண்டியது ஆசிரியர்களான எங்கள் கடமை…! ;
உரிமைகளைக் கோர என்றுமே வெட்கமோ அச்சமோ வேண்டாம்….! ;
முண்டாசுக் கவிஞன், சொல்வதைப்போல ‘அச்சம் தவிரு’ங்கள்…! ;
‘மிடுக்காய் இரு’ங்கள்…! ;
‘குன்றென நிமிர்ந்து நில்’லுங்கள்…!”
இப்படியெல்லாம் ஆக்கமும், ஊக்கமும், உற்சாகமும் தந்துத், தன்னிடம் படிக்கும் குழந்தைகளுக்கு நாள் தவறாது விழிப்புணர்வூட்டுபவர் அவர் ;
கல்வி நீங்கலாக, வாழ்கைக் கல்வியையும் ஊட்டும் திறத்தினர் வரதராசனார்.
காலந்தவறாமைக்கு இலக்கணமாக இருந்து, குழந்தைகளின் மனதில் நீங்கா இடம்பெற்ற தமிழய்யா அவர்கள், ஐந்து மணித்துளிகள் கடந்த பிறகும் வகுப்புக்கு வராமல் காலம் தாழ்த்தியது கண்டு, குழந்தைகளுக்கு ஆயாசமாக இருந்தது.
சின்னக் குழந்தைகள்தானே…! பரபரப்பாகவும், சற்றே அச்சமாகவும் உணர்ந்தார்கள்.
வகுப்புத் தலைவன் முத்துக்குமரன்; தமிழாசிரியர் வரதராசனார் மீது மிக்க அன்பு கொண்ட மாணவன்.
அவன் ஒரு முடிவெடுத்தான்.
தன் முடிவை வகுப்பில் அறிவித்தான்.
“நண்பர்களே! நம் தமிழாசிரியர் ஒரு போதும் தாமதமாக வருபவர் அல்ல. காலந்தவறாமைக்கு இலக்கணமானவர் அவர். அவர் வருகை தராமைக்கு ஏதோ ஓர் அழுத்தமான காரணம் இருக்க வேண்டும்…! ;”
வகுப்புத் தலைவன் சொல்லச்சொல்ல, ‘ஆம்…! ஆம்…! ஆம்…!” என்று வழிமொழிந்தனர் மற்றவர்கள்.
“அடுத்தாற்போல் அமைந்திருக்கும் வகுப்பிற்கு எவ்வகையிலும் இடையூரின்றி, அமைதியாகக் “கையெழுத்தேட்டில்’ எழுதிக்கொண்டிருங்கள்…! நான் சென்று தலைமையாசிரியைரைக் கண்டுத் தெளிந்து வருகிறேன்…!” – புறப்பட்டான் முத்துக்குமரன்.
“சரித் தலைவா…!” – வகுப்பில் நான்கைந்து குரல்கள் எழுந்தன.
தலைமை ஆசிரியர், குனிந்தத் தலை நிமிராமல், பலப்பலக் கோப்புகளையும், பதிவேடுகளையும் பார்த்துப் பார்த்துப் படிவத்தில் புள்ளி விவரங்களை நிரப்பிக் கொண்டிருந்தார்.
அவ்வப்போது, தன் முன்னொளிர்ந்த கணினியில் தோன்றிய கட்டங்களில் விபரங்களைப் பதிவேற்றமும் செய்துகொண்டிருந்தார்.
பள்ளிக் கல்வித்துறையினரால் வழங்கப்பட்டப் பணியது.
அதைத் தலைமையாசிரியர் கவனமாகச் செய்துகொண்டிருந்தார்.
ஏதோ ஒரு பணியில் ஒருவர், கவனமாக இருக்கும்போது, இடையூறுச் செய்யவேக் கூடாது என்ற பண்பாடு அறிந்த முத்துக்குமரன் , தலைமையாசிரியரின் முன்பு, பார்வைத் தன் மீது வீசும் தொலைவில் நின்றான்.
கணினித் திரையிலிருந்து சற்றே விலகிய தலைமை ஆசிரியரின் கண்கள் முத்துக்குமரனைப் பார்த்தன.
எழுதுகோலை மேசைமேல் வைத்தார்.
கை விரல்களை இறுகக் கோர்த்து, வெளிபுறமாய்ப் புரட்டித் திரும்பி, முன்புறம் நீட்டி, ‘ம்ம்ம்ம்ம்…’ என்று முனகல் ஒலித்தபடி , நெட்டி முறித்துக் கொண்டே கைகளை மேலேத் தூக்கிச் சோம்பலும் முறித்தார்.
வேலை மும்மரத்தில், நாற்காலியில் சற்றே சரிந்தபடியிருந்தவர், இப்போது நிமிர்ந்து அமர்ந்தார்.
“என்ன வேணும் தம்பீ…?”
முத்துக்குமரன், கூப்பிய கையுடன் “அய்யா…!” வென விளித்தான்.
“சொல்லுங்கள் தம்பி…!” – தலைமையாசிரியர் குரலில் அன்பும், கனிவும் ததும்பின.
“என் பெயர் முத்துக்குமரன். பத்தாம் வகுப்பு ‘உ’ பிரிவு மாணவன் அய்யா…!”
“அப்படியா?”
“ம்…!”
“நன்று…! உனக்கு என்ன வேண்டும் ? எதற்காக என்னைப் பார்க்க வந்தாய்?”
“இன்று எங்கள் தமிழய்யா பள்ளிக்கு வரவில்லையா அய்யா?”
“ஆம் தம்பி…! அவருக்கு உடல் நலமில்லை. மருத்துவரின் ஆலோசனைப் படி, அவருக்குச் சிகிச்சையும் ஓய்வும் தேவைப்படுவதால், ஒரு வார காலம் மருத்துவச் சான்றுடன் கூடிய ஈட்டா விடுப்பிலுள்ளார் அவர்…!”
“அப்படியானால்…, வரும் வாரம் முழுக்க பள்ளிக்கு வரமாட்டாரா சார்..?”
“ஆம் தம்பி…!”
“……………………………..”
அமைதியாக நின்றான் முத்துக்குமரன்.
“தம்பி…!”
“சொல்லுங்களய்யா?”
“வகுப்பை அமைதியாகப் பார்த்துக்கொள்…! சரியா…?”
“………………………………”
இப்போதும் அமைதியாக நின்றான் முத்துக்குமரன்.
இப்போது, தற்காலிகமாக நிறுத்திவைத்தப் பணியைத் மீண்டும் தொடர, எழுதுகோலை மேசையிலிருந்து எடுக்கக் கை நீட்டினார் தலைமை ஆசிரியர்.
“……………………………..”
இப்போதும் அமைதியாகவே நின்றான் முத்துக்குமரன்.
‘உள்ளதைப் பேசு…!’
‘ஊமைப்போலிராதே. …!.’
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இளையோர் ஆத்திச்சூடி, முத்துக்குமரனை முடுக்கிவிட்டது.
“அய்யா, ஒரு விண்ணப்பம்…!” என்றான்.
வியப்பு மேலிட நோக்கினார் தலைமையாசிரியர். “இன்னும் நீ இடத்தைக் காலி செய்யவில்லையா?” என்று கேட்டன தலைமை ஆசிரியரின் கண்கன்.
“சொல்லுங்கள் தம்பி?” என்றார்
“தமிழய்யா விடுப்பு முடிந்து, மீளப் பணியில் சேரும் நாள் வரை எங்கள் வகுப்பில் பாடம் நடத்தப்படாமல்தானிருக்குமா அய்யா?”
தலைமையாசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது. வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசினார்.
“தம்பீ…! ஒரு வாரம்தானே…! அடுத்த வாரம் வந்துவிடுவார், விட்டுப் போன அனைத்துப் பாடங்களையும் சேர்த்துக் கற்பித்துவிடுவார் உங்கள் தமிழாசிரியர்.”
“மன்னியுங்களய்யா…!
மாணவனின் மறுப்புக் கண்டுத் துணுக்குற்றார் தலைமை ஆசிரியர்.
“அய்யா…! ஓராண்டுக்கான உணவை ஒரே நாளில் உண்ண முடியுமா..? ; உண்டால் செரிமானம்தான் ஆகுமா? ;
அதுபோலத்தான் படிப்பும், என்றீர்களே…! ; அன்றையப் பாடங்களை அன்றன்றேப் படித்துவிடவேண்டும் எனவுரைத்தீர்களே…! ;
ஒன்றே செய் ! நன்றே செய் !! அதுவும் இன்றே செய் !!! – என்றெல்லாம் இன்றைய இறைவணக்கக் கூட்டத்தில்கூட, அறிவுரை வழிங்கினீர்களே அய்யா…!”
“…………………………” – பேச வாயெழவில்லை தலைமையாசிரியருக்கு.
பத்தாம் வகுப்பு மாணவனாக முத்துக்குமரன் தெரியவில்லை.
தந்தைக்கே உபதேசித்த ‘சுவாமிநாதனாய்’த் தெரிந்தான்.
தலைமையாசிரியருக்குள் வேதிமாற்றங்கள் நிகழ்ந்தன ;
இருபத்தியோராம் நூற்றாண்டு பதின்ம வயது மாணவர்களின் நுண்ணறிவையும், விழிப்புணர்வையும், ‘நேர்படப் பேசு’ம் துணிவையும் கண்டு வியந்தார் ;
அனிச்சையாக அவர் வலது கை விரல்கள் ‘சுட்டி’யை இயக்கிக், கணினியின் செயல்பாட்டை நிறுத்தின ;
மேசை மேலிருந்த புள்ளி விபரக் காகிதங்கள் பறக்காமலிருக்க, அதன் மேல் கனம் வைத்தார் ;
இருக்கை விட்டெழுந்தார் ;
சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியை நிறுத்தினார் ;
“தம்பீ நான் உங்கள் வகுப்புக்கு வருகிறேன். உங்கள் தமிழாசிரியர் வரும்வரை நான் வந்து தமிழ் கற்பிக்கிறேன்…!” என்று வாக்களித்தார்.
“அய்யா…!”
“ம்…!”
“கல்வித்துறைக்காகப் புள்ளி விவரங்கள் தயார் செய்துகொண்டிருந்தீர்களே ?”
“தம்பீ…! பள்ளிநேரத்தில் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தல்தான் ஆசிரியர்களின் முதல் வேலை. புள்ளி விவரங்களை, பள்ளி வேலை நேரம் முடிந்ததும், ஓய்வு நேரத்தில், தயார் செய்துக் கல்வித்துறைக்கு அனுப்பிவிடலாம்…!”
பிருகு முனிவரின் சாபத்தால், சிவன் இழந்திருந்த சக்திகள் அனைத்தும் ‘சுவாமிநாதனின்’ உபதேசத்தின் மூலம் ஈசனுக்குத் திரும்பக் கிடைத்ததைப் போல ;
கொரோனா எனும் கொடும் தொற்றால், பலவீனமடைந்திருந்த, பள்ளிக் கல்வித்துறையின் சக்தி, செயல்பாடுகள் அனைத்தும் புதுப்பொலிவு பெற்றுவிட்டதாய் உவகை கொண்டார் தலைமையாசிரியர்.
“விரைந்து வகுப்பிற்கு வருகிறேன் சுவாமிநாதா…!” என்றார் தலைமை ஆசிரியர்.
“மிக்க நன்றி அய்யா…! மன்னிக்கவும், என் பெயர் முத்துக்குமரன்…!”
“என்னைப் பொருத்தவரை நீ சுவாமிநாதன்தான் தம்பீ…!’- வாய்திறந்து சொல்லவில்லை. மனதில் நினைத்தார்.
பத்தாம் வகுப்பு ‘உ’ பிரிவை நோக்கி நடந்தார்.
தமிழ்க் கற்பிக்கத் தலைமையாசிரியரே வகுப்புக்கு வரப்போவதை ஆர்வத்துடன் முன்னறிவித்தான் முத்துக்குமரன். அதோடு, அன்றையதினம் தமிழய்யா, ஒப்புவிக்கச் சொல்லியிருந்தத், தொல்காப்பியம், பொருளதிகாரம் 312 வது செய்யுளை மனதுக்குள் உருவேற்றிக்காண்டிருந்தான்.
– 25.05.24, விகடகவி.
![]() |
இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க... |