கண்ணிலே என்ன உண்டு..?!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 3, 2024
பார்வையிட்டோர்: 3,487 
 
 

கால மாற்றத்தால் காணாமல் போய்வரும் எத்தனையோ பெயர்களில் எங்கள் ஊர் ‘மூணு கம்பமும், அஞ்சுமுக்கும் புளியமர ஸ்டாப்பும்’ எனக்கு ஏனோ அப்படியொரு அச்சத்தைத் தருகின்றன.

கால வளர்ச்சி நீடித்த பெயர்களை நிர்மூலமாக்குவதுதான் சகிக்க முடியவில்லை.

பெருகிவிட்ட ஜன சமுத்திரத்தில் வண்டி ஓட்டுவது சாகசமாய்ப் போய்விட்டது இன்று!. அதிலும், பகலுமில்லாமல் இரவுமில்லாமல் அந்தி கருக்கலில் வண்டி ஓட்டுவது அதிசய சாதனைதான்.

காரில் உட்கார்ந்து ஓட்டுகிறேன். அது ஒரு மூணு சந்து., நான் நேராய்ப் போக வேண்டும் என் இடது பக்கம் ‘எல்’ மாதிரி சந்திலிருந்து வண்டிகள் வந்து வலப்புறமாய்த் திரும்பிய வண்ணமாய் இருக்கின்றன. போலீஸோ, சிக்னலோ கிடையாது.

பிரத்தியாரை மதித்து, நின்று நிதானித்து வண்டி ஓட்ட வேண்டும். யார் அப்படி இன்றைக்கு பிரத்தியாரை மதிக்கிறார்கள்?! எல்லாருக்கும் அவசரம்…! என்ன அவசியமோ தெரியவில்லை.

என் இடது புறமிருந்து வரிசையாய் கார்கள் வருகின்றன. நிறுத்திக் காத்திருக்கிறேன். அந்த வரிசையின் இறுதியில் வருகிறது ஒரு இருசக்கர வாகனம். அதில் மூன்று பேர். வண்டி ஓட்டும் இளைஞர், பின் பக்கம் அமர்ந்திருக்கும் அவர் மனைவி, குழந்தை. நான் அவர்களைப் பயணிக்கவிடாமல் வேகமெடுத்துக் கடந்திருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும் அவர்கள்.

நான், நிதானமய் அவர்கள் கடந்து போக காரை நிறுத்துகிறேன். நானும் ஒருகாலத்தில் இருசக்கர வாகனத்தில் இப்படிச் சிக்கல்களைச் சந்தித்தவன்தான்.

‘கார்ல போனா என்ன கண்ணு தெரியாதா?’என அன்றைக்கு வாய்க்கு வந்தபடி திட்டியவன்தான். நான் நிதானமாய் காத்திருக்க என்னைக்கடந்து வலது புறமாய்த் திரும்பிய இளைஞர் கண்களில் ‘நன்றி’ மின்னலாய்த் தோன்றி மறைய மனசு லயித்தது. ’தாங்க்ஸ்’ என்கிறார். கண்களில் தெரிகிறது… ஆனால், கண்ணாடி வழியே அது கேட்கவில்லை!

வாய்க்கு வந்தபடி திட்டியபோது கிடைக்காத திருப்தி, வழிவிட்டுக் காத்திருக்கையில் முகத்தில் மின்னி மறைந்தது.

ஒரு காலத்தில் திமிராய் நடந்த என்னிடம் எப்படி திடீர் மாற்றம்?! இது, வயதின் பக்குவமோ?! இல்லை, வாடிய பயிரைக் கண்டு, வாடிய வள்ளர்ப்பெருமானின் வாஞ்சைதானோ?

‘கண்ணிலே என்ன உண்டு?… கண்கள்தான் அறியும்!. கல்லிலும் ஈரம் உண்டு கண்களா அறியும்?!’

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *