தெய்வம் நின்னறுக்கும்!




‘உபயோகமற்ற நபர்களாலும், உபயோகமற்ற விசயங்களாலும், தவறான புரிதல்களாலும் இந்த பூமியில் ஒரு மனிதன் தனது நிம்மதியை இழக்கின்றான்!’
எனும் தத்துவ வரிகளை காலையில் செல்பேசியைத்திறந்தவுடன் பக்திக்குழுவில் ஒருவர் பதிவிட்டிருந்ததைப்படித்து விட்டு, தனக்காகவே எழுதியது போல் இருந்ததால் மறு நொடியே எழுதியவருக்கு கும்பிடுவது போல ஒரு பதிவைப்போட்டு விட்டு, நேற்று உறவினர் ஒருவரால் தன்னை நோக்கி ஏவப்பட்ட கசப்பான வார்த்தைகளை நினைவுபடுத்திப்பார்த்த போது மன வேதனை அதிகரித்தது நிகனுக்கு.
நிகன் மிகச்சிறந்த புத்திசாலி. ஒழுக்கமானவன். தனது பணத்தையோ, பொருளையோ ஒருவர் அபகரித்து விட்டால் கூட பொறுத்துக்கொண்டு எதிர்த்து கேள்வி கேட்க மாட்டான். அதில் கற்றுக்கொண்ட பாடத்தால் ஏமாற்றிய நபர்களுடன் மறுபடி சகவாசம் வைத்துக்கொள்ள மாட்டான்.
சிறு வயதிலேயே தந்தை காலமாகிவிட படிப்பை விட்டு விட்டு சுய தொழில் ஆரம்பித்து தனது கடின உழைப்பால் தனக்கு முன் பிறந்த அக்கா, தனக்கு பின் பிறந்த தம்பி, தங்கை மற்றும் தாயாரையும் சிரமம் தெரியாமல் வாழ உதவி, சிறுவயதிலேயே ‘மிகவும் நல்லவன்’ என ஊரில் பெயரெடுத்து விட்டவன், தனது அக்காவிற்கு உறவிலேயே திருமணத்தை செய்து வைத்து தந்தையைப்போல சீர் முறைகளைச்செய்து தாயை மகிழ்வித்தான்.
இப்படிப்பட்ட நல்லவனுக்கு பெண் கொடுக்க பலர் முன் வந்தாலும் தாத்தா கட்டிவைத்த சிறிய ஓட்டு வீட்டில் வசிப்பதாலும் தங்கைக்கு திருமணம் நடத்துவது, தம்பியை படிக்க வைப்பது போன்ற கடமை இருந்ததாலும் பலரும் பெண் கொடுக்க விரும்பினாலும் தயக்கம் காட்டினர்.

தூரத்து சொந்தம் எனும் நிலையில் ஒருவர் மட்டும் தனது பெண்ணுக்கு சம தோச ஜாதகமாகவும், திருமணம் சீக்கிரம் நடக்காத நட்சத்திரமாக பெண்ணுக்கு இருந்ததாலும் பெண்கொடுக்க முன்வர, பெண்ணுக்கும் பிடித்துப்போக திருமணம் நடந்தது.
நிகன் நல்வனாக, உழைப்பாளியாக இருந்தாலும் தங்கைக்கு திருமணம் செய்யும் முன்பே திருமணம் செய்தது தனது தாயாருக்குப்பிடிக்காததால் மருமகள் நீரா மீது வெறுப்பைக்காட்ட , மனைவி நீரா நிகனிடம் சொல்லி அழ, தன் தாய் மீது வெறுப்பு வரத்துவங்கி மனைவிக்காக தனிக்குடித்தனம் சென்றான்.
வாடகை வீட்டிற்கு தனிக்குடித்தனம் சென்றவன் இது வரை தான் சம்பாதித்ததை, செய்த தொழிலை, சொத்துக்களை அப்படியே விட்டு விட்டு நகரத்தில் கடன் வாங்கி புதிதாக தொழில் துவங்கி, கணவன் மனைவி இருவரும் கடினமாக உழைத்து வீடு வாங்கி, தொழிலுக்கு கட்டிடம் அமைத்து தங்களுக்கு பிறந்த ஆண், பெண் குழந்தைகளை யாருடைய உதவியும் கேட்காமல் படிக்க வைத்து, மற்ற செலவுகளை சிக்கனமாக செய்து சேமித்து கார், மேலும் சொத்துக்கள் என வாங்கி மகிழ்ச்சியாக வாழ்ந்ததோடு ஊரில் தான் கஷ்டப்பட்டு , கடன் பட்டு சம்பாதித்ததைக்கூட தனது சகோதரனுக்கு சரி சமமாகப்பங்கிட்டு கொடுத்தான்.
மனைவி வகையிலும் உதவியென கேட்காமல் தனது மனைவியின் சகோதரனுக்கே அனைத்து சொத்துக்களையும் கையெழுத்துப்போட்டுக்கொடுத்த மனைவியைப்பாராட்டினான்.
ஆனாலும் தன் வீட்டிலும், தனது மனைவி வீட்டிலும் இருப்பவர்கள் தன் குடும்பத்துடன் இணக்கமாக வரவில்லையே என வருந்தினான்.
தனது சொத்துக்களை அபகரித்த ஒருவருடன் நெருங்கிப்பழகுபவர்கள் தங்களுக்காக விட்டுக்கொடுத்தவர்களை உதாசீனப்படுத்துவது பொறாமையின் வெளிப்பாடு என புரிந்து கொண்டான்.
இப்படிப்பட்டவன் சமுதாயத்திலும் ஒரு நல்ல மனிதரென பெயரெடுத்து வாழும் நிலையில் தனது மனைவி வகையில் ஒருவர் தன்னை தேவையற்ற வார்த்தைகளால், பேசியதை எண்ணி புரியாமல் வருந்தினான்.
இதை நெருங்கிய உறவுகளிடம் கூறியும் யாரும் பொருட்படுத்ததாது அவனது வருத்தத்தை அதிகரிக்கச்செய்தது.
‘ஒருவரை இன்னொருவர் திட்டுவதென்றால் திட்டுபவருடைய உரிமைகளையோ, உடமைகளையோ தட்டிப்பறித்திருக்க வேண்டும்.
அல்லது அவர்களைப்பற்றி இல்லாததும், பொல்லாததுமாகப்பேசியிருக்க வேண்டும். இப்படியெதுவும் பேசாமல், சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போல யாருக்கும் இடையூறு செய்யாமல் தன் போக்கில் வாழும் தன்னை அவதூறு வார்த்தைகளால் ஏன் பேசவேண்டும்?’ என விசாரித்த போது நிகனுடன் நன்றாகப்பழகும் ஒருவர் தான் ஏமாந்த தனது சொத்துக்களை நிகனைத்திட்டியவரிடம் திரும்பக்கேட்டதற்க்கு நிகன் குடும்பத்தினர் சொல்லிக்கொடுத்தது தான் காரணமாக இருந்திருக்கலாம் எனும் தவறான புரிதலால் இந்த வார்த்தகளின் வெளிப்பாடு என்பதை தெரிந்து வருந்தினான்.
‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினாற் சுட்ட வடு’ எனும் குறளை தெய்வப்புலவர் திருவள்ளுவர் அற்புதமாக எழுதி வைத்துள்ளதை படித்திருந்தால் தன்னை இப்படி விசாரித்தறியாமல் தரங்கெட்ட வார்த்தைகளை உறவினர் பேசியிருக்க மாட்டார்’ எனவும் நினைத்தான்.
பேசியவர்களை பழி வாங்க மனம் தூண்டினாலும் தனது அறிவெனும் சாணக்யத்தாலும், தெய்வ நம்பிக்கையாலும் ‘தவறு செய்பவர்களை, அரசு அன்னறுக்கும், தெய்வம் நின்னறுக்கும் எனும் பழமொழிப்படி தெய்வம் உரிய தண்டணையை, தவறை உணரும்படி பேசிய நபருக்கு ஒருநாள் கொடுப்பார் எனும் நம்பிக்கையில் எதிர் பேச்சு பேசாமல் ஒதுங்கி தான் வந்தது நல்லது’ என நினைத்து மனதை சாந்தப்படுத்தினான் நிகன்!
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |