கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 5,823 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேல் மாடி வெட்ட வெளியில் கைகள் இரண்டையும் சேர்த்துத் தலைக்கடியில் வைத்துக் கொண்டு இருந்தாள் கல்யாணி. 

நீல வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கண் சிமிட்டிக் கொண்டிருந்த நட்சத்திரங்களுக் கிடையில் பூர்ண சந்திரன் ஊர்ந்து கொண்டிருந்தான். அதில் பார்வை யைச் செலுத்திச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் அவள். உள்ளே இருந்தபடியே அவளுடைய தீவிர சிந்தனையைக் கவனித்துக் கொண்டிருந்த விசுவம் எழுந்து வந்து அவள் அருகில் அமர்ந்து, “என்ன மனோராஜ்யம் செய்துகொண்டிருக்கிறாய் கல்யாணி?” என்று அவள் கையைப் பற்றி யெடுத்தான். 

சாவதானமாகத் திரும்பிப் பார்த்தாள் கல்யாணி. 

“அதை உங்களைக் கூப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று வாயெடுத்தேன். அதற்குள் நீங்களே கேட்டு விட்டீர்கள்! உம்…வந்து…நாளைக் காலையில் அம்மா வருகிறாள்…!” 

”அம்மா வருகிறாள்!” என்று அவள் சொன்ன சொற் களுக்குள் முக்கிய காரியமாக ‘வரப் போகிறாள் ‘ என்பது தெளிவாகத் தெரிந்தது. இருந்தும் “என்ன விசேஷம்? வெறுமனே உன்னைப் பார்த்துவிட்டுப் போவதற்குத்தானே கல்யாணி?” என்று கேட்டான் விசுவம். 

“அவள் அந்த நினைவுடன்தான் வருவாள். ஆனால் அவள் புறப்படும்போது நானும் போகலாமென்று இருக்கிறேன். ஒரு வாரமாக மறுபடியும் ஜுரமும் முதுகு வலியும் ஆரம்பித்து விட்டன…” 

“ஏன் இவ்வளவு நாட்களாக என்னிடம் அதைச் சொல்லவில்லை?” 

“சொல்லி உபயோகம்? ‘நோய் திரும்பிக் கொள்ளாமல் பார்த்துக்கொள். ஆகார பலத்தில்தான் உன் ஆயுசு’ என்று எச்சரித்துத் தான் டாக்டர்கள் வெளியே அனுப்பினார்கள். ஆகாரத்தில் குறைவே யில்லாமல் இருக்கும் போதும் வியாதி திரும்பி விட்டால், நமக்கு அர்த்தம் புரியவில்லையா?” என்று கேட்டாள். 

“என்னமாவது பிதற்றாதே, கல்யாணி! நாளைக்கு ஆஸ்பத்திரிக்குப் போனால் போச்சு!” 

“பிரயோசனமே யில்லை! என் நிலைமை எனக்குத் தெரியாதா? அந்தப் பைசாச நோய் என்னை மட்டிலுமே உண்டு பசி தணியட்டும், உங்களொருவரையும் பற்றாமல்!” 

“இந்த மாதிரி என்னிடம் பேச உனக்கு எப்படி மனம் வந்தது கல்யாணி ? உன் இஷ்டப்படி யெல்லாம், நீ சொன்ன படி யெல்லாம் ஆடினேன்…” 

விசுவம் அழுதே விட்டான். 

தன் கண்களில் நீர் வழிய, அவன் கண்ணீரைத் துடைத்தாள் கல்யாணி. “வருத்தப்படாதீர்கள். ஒரு அளவோடு என் மீது நீங்கள் பாசம் வைத்திருந்தால் அது நீடூழி காலம் நாம் வாழ சம்மதித்திருக்கும்! அபரிமித ஆசை வைத்தீர்கள். தெய்வத்துக்கும் பொறுக்கவில்லை. உடைத் தெறிந்து விட்டது ! என் வரையிலும் என்னுடைய மனசை நான் திடப்படுத்திக் கொண்டு விட்டேன்…” 

“கல்யாணி! வீட்டிலுள்ள சகலமும் போகட்டும். நீ நீ பிழைத்தால் போதும். வைத்தியம் செய்கிறேன் – தைரியமாக இரு. நாம் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கை வை” என்று மனமுருகிச் சொன்னான் விசுவம். 

துக்கம் குடி கொண்டிருந்த கல்யாணியின் முகத்தில் புன்னகை பிறந்தது. “நீங்கள் உங்கள் உயிரையே கொடுப்பதானாலும், என்னைப் பிழைப்பிக்க இனி சாத்தியமில்லை. செய்யக் கூடியது என்ன என்றால், என் குழந்தையை அவனுடைய தாய் தகப்பனாரை இந்த பேய் பற்றி உறிஞ்சாமல் தடுக்க வேண்டும்.” 

“அவனுடைய தாய் அவனுடைய தாய் நீ தான் கல்யாணி…” 

“இல்லை லக்ஷ்மிதான் அவனுடைய தாய் இனிமேல் நான் ஊருக்குப் போன மறு நாள் அவள் வந்து விடுவாள். என் மீது வைத்திருக்கும் அன்பை, அவளிடம் வைத்துச் சுகமாக வாழுங்கள். குழந்தை மீது அவள் வாஞ்சை எனக்குத் தெரியும். குறைவில்லை…” 

“போதும் நிறுத்து, கல்யாணி! உன் பிடிவாதத்துக்குக் கட்டுப்பட்டு உன் மனசு நிம்மதியடைந்து, உடம்பு தேவலை யானால் போதும் என்று இன்னொரு கல்யாணம் என்ற பைத்தியக்காரக் காரியத்தையும் செய்து…” 

“நன்றாக இருக்கிறதே! பைத்தியக்காரக் காரியமா அது? செய்யவேண்டிய முக்கியமான காரியத்தை யல்லவா செய்திருக்கிறோம்? என்றைக்கு டாக்டர் டி. பி. என்றாரோ அன்றைக்கே நான் நிச்சயித்த காரியம் அது. என் குழந்தை யும், நீங்களும் சௌக்கியமாக இருப்பீர்கள் என்ற நிம்மதி யுடன் என் பிராணன் போகவேண்டாமோ?” 

“கல்யாணி?” என்று அவள் வாயைப் பொத்தினான் விசுவம். 

அவன் கையை விலக்கி விட்டு, “வாயை விட்டுச் சொல்லாமலிருந்தால் வருகிற யமன் திரும்பிப் போய்விட மாட்டான். அம்மாவிடம் ஒரு நாடகம் நடத்தி ஊருக்குப் புறப்பட வேண்டும். நீங்கள் ஏதாவது உளறி விடாதீர்கள்” என்றாள் கல்யாணி. 

“நீ சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை கல்யாணி! கண்மூடித்தனமாக நீ சொல்வதை யெல்லாம்…” 

“அப்படியில்லை. நமது வம்சம் விளங்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செய்கிறேன். தெளிவாகச் சொல் கிறேன் கேளுங்கள். நோய் திரும்பாமல் நான் நன்றாகவே இருப்பதாக வைத்துக் கொண்டாலும் மேற்கொண்டு புத்திரப் பேறு என்பதோ, வாழ்க்கையில் ஒரு மலர்ச்சி என்பதோ எனக்குக் கிடையாது. அப்படி இருக்க, வாழ்வு மலர என்று என் மனமார ஒரு பெண்ணை உங்களுக்கு மணம் புரிவித்து, அவளை வஞ்சிப்பது எவ்வளவு பெரிய பாவம் ? நினைத்துப் பாருங்கள்! பிழைத்து எழுவேன் என்ற நம்பிக்கை யில்லாத போது செய்ய வேண்டியதை செய்தேன். பெருந்தன்மைக்கும் என் ஆத்மசாந்திக்குமாக இப்போது மூன்று மாதங்களாக அசட்டுக் காரியம் செய்தோமே என்று வருந்தினேன். ‘இல்லை. நல்ல காரியம்தான் செய்தாய். நீ வருத்தப்படுவது தான் அசட்டுத்தனம்!’ என்கிறது விதி. டி.பி. என்றாலே ஆற்றங்கரைப் பிள்ளையார் சங்கதிதான். அதிலும் எனக்குப் பகவான் கொடுத்திருப்பது… ஐயைய எதற்காக இப்பொழுது அழுகிறீர்கள்? அழுது என்ன பயன்? அதோ குழந்தை எழுந்திருக்கிறான். அவனுக்குப் பாலைக் கொடுங்கள்” என்று கணவனைத் தூண்டினாள் கல்யாணி. 

வேதனை மண்டிய மனத்துடன் எழுந்து சென்று குழந் தைக்குப் பால் கொடுத்து படுக்க வைத்தான் விசுவம். 

பிறகு விடிய விடியத் தூக்கமற்றுப் பேசியதையே திரும்பத் திரும்பப் பேசிக் கணவன் மனத்தை ஒருவாறு ஆற்றி அவன் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டு பொழுது புலரும் சமயத்தில் துயிலில் ஆழ்ந்தாள் கல்யாணி. 

“கல்யாணி!” என்ற குரல் கேட்டுக் கண் விழித்துப் பார்த்தபோது தாயாரும், கணவரும் தலைமாட்டில் நிற்பதைக் கண்டு திகைத்துப் போய், “அடாடா! எவ்வளவு நேரம் தூங்கி யிருக்கிறேன் ? அப்பா வரவில்லையா அம்மா?” என்று தாயாரை வரவேற்றாள். 

அப்புறம் நான்கு நாட்கள் வரையில் சந்தோஷமாக அந்த வீட்டில் வளைய வந்தாள். கணவனுக்கு இஷ்டமான சமையல், சிற்றுண்டிகளைச் செய்யச் சொல்லிக் கையால் கொடுத்தாள். குழந்தைக்கு விதம் விதமான ஆடை அலங் காரம் செய்து கண்குளிரக் கண்டு மகிழ்ந்தாள்; ஆனந்தக் கண்ணீர் விட்டாள். ‘என் அப்பனே! என் ஆயுசையும் சேர்த்து நீ என்றும் சிரஞ்சீவியாக, மார்க்கண்டனாக இரு என்று தனது அருமை மகனுடைய தலையைத் தொட்டு ஆசீர்வதித்தாள். 


மறு நாள் காலையில் லக்ஷ்மி வரும் கடிதம் கிடைத்தது. அன்றிரவு குழந்தை தூங்கிய பிறகு போட் மெயிலுக்குக் கிளம்பினாள் கல்யாணி. பொங்கி வந்த துக்கத்தைத் துணி யினால் வாயில் அடைத்துக் கொண்டு கல்யாணியை டாக்ஸி யில் ஏற்றினான் விசுவம். 

குழந்தை மாடியில் தனியாக இருக்கிறான். போங்கள். நான் அடுத்த வாரம் வந்து விடுவேன்” என்றாள், ஏதோ அவசரமாகத் திரும்பி வருபவள் போல. 

விசுவம் ஒன்றும் பேசவில்லை. டாக்ஸிக்குள் இருந்த கல்யாணியைப் பார்க்கப் பார்வையைக் கூர்மையாக்கினான். கண்ணீர் மறைத்தது. டாக்ஸி டிரைவரிடம், “போகலாம், அப்பா!” என்றாள் கல்யாணி. 

பிரமை பிடித்து நின்று கொண்டிருந்த விசுவத்தைப் பிள்ளைப் பாசம் ‘மாடிக்கு வா!’ என்று அழைத்தது. 

வாசல் கதவைத் தாளிடும் போது “கல்யாணி! நீ க்ஷயரோகி என்பதற்காக உன்னைத் துரத்திவிட்டுக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு என் உயிரைக் காத்துக் கொள்கிறேனா? ஐயோ, சித்ரவதையே! இதைவிட நீ இறந்துபோய்-உன் சடலத்தை அனுப்பிவிட்டுத் தாள் போட்டால் எவ்வளவோ நிம்மதியாக இருக்கும் ! இதற்குத் தான் என் மேல் அவ்வளவு பாசம் வைத்திருந்தாயா?” என்று குலுங்கக் குலுங்க அழுது கொண்டு மாடிக்குப் போனான் விசுவம். 


இரவுப் பொழுது சிவராத்திரியாக இருந்தது அவனுக்கு. மை கொட்டாமல் குழந்தையைப் பார்த்தான். ஆமாம்- கல்யாணியின் முகம்தான்; நினைவுக்குக் கொஞ்சம் வைத்து விட்டுப் போயிருக்கிறாள்! 

எங்கோ கோழி கூவியது. 

‘ஓ! பொழுது விடிகிறதா! விடியட்டும். லக்ஷ்மீகரமாக வீடு விளங்க ஒரு லக்ஷ்மி வரப் போகிறாளாக்கும்! வரட்டும்! ஒருவருக்கொருவர் என்ன பேசிக் கொண்டார்களோ – கடிதத் தில், யாருக்குத் தெரியும்?’ 

“லக்ஷ்மி!” 

‘பெயர் அழகு ; பெண் அழகு; குணம் குரூபம்! என் கல்யாணியை வீடுவிட்டு ஓடும்படி செய்த கோரமான குரூபம்? கல்யாணி! வீட்டை விட்டு வேண்டுமானால் உன்னால் ஓடிவிட முடிந்தது-லக்ஷ்மிக்கும் துரத்த முடிந்தது; எங்கே, என் மனத்தைவிட்டு, ஓடு பார்ப்போம்! இல்லை-லக்ஷ்மியாமே, அவளால்தான் என் மனத்திலிருந்து அவளைத் துரத்த முடியுமா?’

இவ்வித எண்ணங்கள் தீவிர கதியில் சுழன்றன அவன் நெஞ்சில்! 

மனம் தெளியும் சமயத்தில், “அக்கா!” என்றுப் பதறிப் பயந்து கொண்டு மாடி அறைக்குள் விரைந்தாள் லக்ஷ்மி. 

உதறிக் கொண்டு எழுந்தான் விசுவம். 

“அக்கா எங்கே? போய்விட்டாளா ஊருக்கு” என்று படபடத்தாள் லக்ஷ்மி. 

 “போய் விட்டாள் ” என்று நிதானமாகப் பதில் சொன்னான் விசுவம்.

“நீங்கள் அனுப்பித்தானே போனாள்?”

”ஆமாம்!”

“அனுப்பலாமா?”

“தெரியாது.”

“தெரியாதா? நான் வருமுன்பு அக்காவை அனுப்ப வேண்டாம் என்று உங்களுக்கு எழுதியிருந்தேனே நான்; என் வார்த்தைக்கு மதிப்பே கிடையாதா ஆனால்?”

திடுக்கிட்டவனாக லக்ஷ்மியை ஏறிட்டுப் பார்த்து, “எப்பொழுது எழுதினாய், எனக்குத் தெரியாதே?” என்று கூறிவிட்டுத் திருதிருவென்று விழித்தான் விசுவம்.

“அந்தக் கடிதம் உங்கள் கைக்குக் கிடைக்கவில்லையென்று தெரிகிறது! தன்னைப் போன்ற பெண்தான் நானும் என்பதை மறந்துவிட்டாள் அக்கா! அப்பாவுக்கு ஜுரம் திருப்பிக் கொண்டதால் மேலும் ஒரு மாசம் தங்க வேண்டியிருந்ததை விபரீதமாகப் புரிந்து கொண்டு விட்டாள்! இருக்கட்டும். உலகத்தில் அன்புக்குக் கட்டுப்படாத உயிரே கிடையாது என்பார் அப்பா! என் அன்பு பாசத்தால் அவளை கட்டி இழுக்கிறேனா இல்லையா இங்கு பாருங்கள். என்ன கதையெல்லாம் எழுதினாள் எனக்கு? ‘நோய் திரும்பி விட்டதாம், இங்கு இருந்தால் உங்களுக்கும், குழந்தைக்கும் தொற்றிக் கொண்டு விடுமாம்!’ பொய்! நன்றாகக் குணமான பின்புதானே அழைத்து வந்திருப்பதாகச் சொன்னீர்கள், போன தடவை வந்திருந்தபொழுது?” என்றாள். பிறகு குழந்தையின் நினைவு வந்து. ”ஆமாம் ! குழந்தை பட்டினியாயிருக்குமே ! குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும்? பால் தானே. அடுப்பை மூட்டிப் பால் காய்ச்சட்டுமா?” என்று காரியத்தில் கருத்தைச் செலுத்தினாள் லக்ஷ்மி.

விசுவத்தின் பூஜாபலனோ என்னவோ, முசுடாக வந்த லக்ஷ்மி, இப்பொழுது ‘கிருஹ லக்ஷ்மி’ யாகி, கல்யாணியை மிஞ்சின குணவதியாக மாறியிருந்தாள். குழந்தையைத் தனது கண் எனக் காத்தாள். கல்யாணிக்கு அவ்வப்போது அன்பைச் சொரிந்து, அழுது, கெஞ்சி, கடிதங்கள் எழுதினாள்-புறப்பட்டு வரும்படியாக.

அவற்றைப் படித்துக் கல்யாணி கலங்கினாள். நல்ல பெண் பாவம், என் பங்கில் இருந்து அவள் வாழட்டும். அவர்கள் இன்ப வாழ்வில் நான் ஒரு இடறு கட்டையாக முளைக்க கூடாது. இதுதான் கடவுள் சித்தம்! இப்படியே நான் இருந்துவிடுவதுதான் உத்தமம், ஆனால் கபடு சூது இல்லாத அந்த உத்தமரை, பொய் சொல்லி ஏமாற்றினது என்னவோ பாபம்தாம். என்மீது இருந்த நம்பிக்கையில் ‘நோய் திருப்பிக் கொண்டுவிட்டது’ என்று நான் புளுகியதை நிஜமென்று நம்பினாரே! ஏமாற்றியது குற்றம்தான். ஆனால் ஒன்றுக்கும் உதவாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நான் ”நிரடி’க் கொண்டிருந்தால் அதுவும் குற்றம்தானே-? என் ஜீவியத்தைக் கண்டு உருகி உருகி அழுது உயிரைக் கொடுத்து விட்டாள் அம்மா. ஆரோக்கியம் போயிற்று, அதோடு ஆஸ்தியும் போயிற்று, ஆனந்தமான வாழ்க்கை போயிற்று. அம்மாவும் போய் விட்டான்! மிஞ்சியிருப்பது இந்த வீடும். வயோதிகத் தந்தையும்! அவரும் கண்ணை மூடிக் கொண்டால்?…அவ்வளவு தான் இந்த இருளடைந்த வாழ்க்கையில் ஒரே காரிருள் ! சூனியம் பிடித்த சூழ்நிலை! ஆஹா! என்ன பயங்கரமான எதிர்காலம்?’


“அப்பளம் வேணுமா கேளு, குழந்தை!” குரல் கேட்டு லக்ஷ்மி அம்மாள் எழுந்து வந்து, “கொண்டு வாருங்கள் மாமி” என்று அழைத்தாள்.

உள்ளே வந்து அப்பள டின்னை இடுப்பிலிருந்து இறக்கி வைத்துத் திறந்தாள்.

“அரிசி அப்பளம் என்ன விலை?”

“ஒண்ணரை ரூபாய்” என்றாள் அப்பளக்கார அம்மாள்.

“நூறு கொடுங்கள். அப்புறம் சமையலுக்கு யாரையாவது விசாரியுங்கள் என்று சொன்னேனே, மாமி!”

“உங்களுக்கு இது எத்தனை மாசம், எப்போ ஆள் வேணும்?”

“இதுதான் மாமி மாசம், அவர் கூட ஊரிலே இல்லை. தனியாக இருக்கிறோமே என்று திகிலாக இருக்கிறது….”

”அப்போ, நான் வேணுமானால்….”

“ரொம்ப சந்தோஷம் மாமி. எனக்கு உங்களைக் கேட்கத் தயக்கமாக இருந்தது-என்ன நினைத்துக் கொள்வீர்களோ என்று!'”

“அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்படிப் பட்ட சமயத்துக்குத்தான் ஒத்தாசை செய்ய வேண்டும் ஒருத்தருக்கு.”

“உங்க பேரு?”

“தர்மாம்பாள் என்று சொல்லுவார்கள்.”

”எனக்கு நீங்கள் வீட்டோடு வந்து இருந்தால் தான் செளகரியம்….”

“இருந்தால் போச்சி!” என்றாள் தர்மாப்பாள்.

ஊரிலிருந்து விசவம் திரும்பி வந்தபொழுது லக்ஷ்மி சமையலுக்கு ‘அம்மா’லை வைத்திருப்பதைக் கூறினாள். “ரொம்பத் தங்கமான கபாவம், பெற்ற தாயார் கூட இந்த மாதிரி செய்ய மாட்டார்கள் போங்கள். அதிலும் நம்ம ‘சுந்தா’ மேலே உசிரு அந்த மாமிக்கு. அவன் கதையைக் கேட்டதும் அப்படியே அழுது வீட்டாள் பாவம்! இங்கே சமையலுக்கு நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்!”

“உனக்கும்தான் வரவரத் தள்ளவில்லை என்கிறாய். இருந்து விட்டுப் போகட்டுமே”

“அந்த அமோளுக்குப் பெரியம்மை போட்டு முகம் விகாரமாயிருந்தாலும் குணத்திலே தங்கம். அம்மை வடுவைக் கண்டு அவள் கணவன் தள்ளி வைத்து விட்டான் போலிருக்கிறது-நமக்கே பார்க்க அருவருப்பாக இருக்கிறதே, தாலி கட்டின புருஷனுக்கு எப்படி இருக்கும்?” என்றாள் லக்ஷ்மி பரிதாபத்தோடு.


நல்ல நிசி வேளை. கூடத்தில் படுத்திருந்த தர்மாம்பாளின் தமைாட்டில் “உஸ்” என்ற சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தாள், விடிவிளக்கு வெளிச்சத்தில் பாம்பு சுந்தாவின் பக்கம் நெளிவது தெரிந்தது.

“அடடா, சுப்ரமணியம், நாகராஜா, நான் என்ன அபராதம் செய்தேன்! ஐயையயோ, சுந்தா!”

கூச்சலைக் கேட்டு பாம்பின்மீது புரண்டான் சுந்தா. புஸ்ஸென்று சீறிச் சாக்கடையில் புகுந்து ஓடிவிட்டது. பாம்பு.

“ஆ!” என்று அலறினான் சுந்தா. மாடியிலிருந்து விசுவமும், லக்ஷ்மியும் எழுத்து வேகமாக ஓடி வந்தார்கள். ‘”என் கண்ணே!” என்று கீழே சாய்த்திருந்த கந்தாவை வாரியெடுத்து மடியில் போட்டுக் கொண்டாள் லக்ஷ்மி.

‘என்ன என்ன?’ என்று பதறியபோது, “ஐயோ, நல்ல பாம்பு! பிடுங்கி விட்டதே என் குழந்தையை-” என்று தலையில் அடித்துக் கொண்டாள் தர்மு.

சுந்தாவைப் பாம்பு கடித்த ஆபத்து ஒருபுறமிருக்க, ‘அலறி அழும் இந்த அம்மாள் யார்?’ என்று தெரியாமல் தத்தளித்தான் விசுவம்! கல்யாணியா இவள்? சே! அவள் எங்கே இந்தக் குரூபி எங்கே?

“என்ன விழிக்கிறீர்கள்? மாந்திரீகளைப் பார்த்து அழைத்து ‘வாருங்களேன்?” என்று அழுதாள் அவள்,

“என் கல்யாணி அக்காவா? நீங்களா இந்தக் கோலத்தில்…?”

“ஆமாம், லக்ஷ்மி! குழந்தைக்கு எங்கே வியாதி வந்து விடுமோ என்று மனசிலே கல்லைப் போட்டுக் கொண்டு வீட்டை விட்டுப் போனேன்-அவனை மன்கிட்ட வாரிக் கொடுக்க வந்து விட்டேல் பாவி…”

விசுவும் விரைவாக ஓடி மாந்திரீகனை அழைத்து வந்தான். மாந்திரீகன் பரீட்சித்துப் பார்த்துவிட்டு, “நல்ல காலம் ! பாப்பு பையனைக் கடிக்கவில்லை. சத்தத்தைக் கேட்டுப் பாம்பு ஓடியிருக்கிறது. பையன் பயந்து விட்டான். அவ்வளவுதான்!” என்று கூறினான். அப்பொழுதுதான் அவளுக்கு உயிர் வந்தது.

அரை மணிக்கெல்லாம் புரண்டு கொடுத்து. பின்பு மெதுவாகக் கண்னைத் திறந்து பார்த்தான் சுந்தா.

விசுவும் அருகில் ஓடி வந்து, ”இது யார் தெரிகிறதா சுந்தா?” என்று கேட்டதும், “தெரிகிறதே, தர்மு மாமி!” என்று கூறினான் சுந்தா.

“கல்யாணி! உனக்கு பாவமாகத் தோன்ற வில்லையா இது?” என்று கேட்டார் விசுவம்.

“பாவமென்ன? என்னைவிட அதிகமான கரீசனத்தோடு அவளை வளர்க்க-லக்ஷ்மியைத்தான் நியமித்திருந்தேனே…” என்று கூறினாள் கல்யாணி.

“அது கிடக்கிறது கல்யாணி, அப்பா இறந்த பிறகு வீட்டை விற்று விட்டுத் தேசாத்திரம் போனதின் நோக்கமென்ன? சரி, போனாய், இந்த மாதிரி போகிறேன் என்று ஒரு வரி எழுதினாயோ எனக்கு?… பிறந்தகத்துக்குத் தானே உன்னை அனுப்பினேன்; பெற்றேர்கள் இழந்ததும் நீ இங்கு தானே வரவேண்டும்?” என்றான் விசுவம்.

காசியில் இருந்தபொழுது பெரியம்மை வார்த்து, விட்டதும், பிறகு பட்ட கஷ்டமும்-அதே சமயத்தில் கையிலிருந்த பணம் கரைந்ததும், அப்பளம் இட்டு ஜீவித்த கதையும் விவரமாகச் சொன்னாள் கல்யாணி.

“பார்த்தீர்களா? நான் சந்தோஷமாக வாழவேண்டும் என்ற காரணத்தால், பெற்ற குழந்தையைப் பிரிந்து இத்தனை துன்பங்களையும் அனுபவித்து விட்டாள் அக்கா!”

”லக்ஷ்மி! நீ வந்த அன்றே உன் அன்பு – உண்மையான அன்பு அவளைப்பற்றி இழுத்து வரும் என்றாய்! இழுத்துக் கொண்டு வந்து விட்டது. பல ஆண்டுகள் ஆகியும் கூட!” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினான் விசுவம்.

“டேய் சுந்தா, என்னடா பார்க்கிறாய்? உன் அம்மா வந்து விட்டாள்!” என்றாள் லக்ஷ்மி மகிழ்ச்சியோடு.

“இல்லைடா. அவள் கிடக்கிறாள்! பெரியம்மா அல்லவா நான்?” என்றாள் கல்யாணி!

– 1957-05-26, கல்கி.

– உயிரின் அழைப்பு, முதற்பதிப்பு: 1966, சாரதி பிரசுரம், சென்னை.

கு.ப.சேது அம்மாள் கு.ப.சேது அம்மாள் (1908 - நவம்பர் 5, 2002) ஒரு தமிழ் எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கை. வாழ்க்கைக் குறிப்புசேது அம்மாளின் முதல் சிறுகதை “செவ்வாய் தோஷம்” 1939 இல் காந்தி இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகத் தொடங்கின. 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு இவரது நூல்களை தமிழக அரசு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *