கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2023
பார்வையிட்டோர்: 7,392 
 
 

சாரு தன் கணவர் மாதவனைப் பற்றி இப்படித்தான் புலம்புவாள்…

‘பெரிய கம்பெனியில் ஜெனரல் மேனேஜர்னு பேர். என்ன சம்பளம் வாங்கி என்ன புண்ணியம்? மனுஷன் எச்சில் கையால் காக்கா ஓட்ட மாட்டார். வீட்டுக்கு அரிசி, பருப்பு கூட கெமிக்கல் பேலன்ஸில் அளந்து அளந்து வாங்குவார்…’

தரித்திரம்! மாப்பிள்ளை, பொண்ணுங்க விசேஷம்னு வந்தா கூட இருக்கறதுலயே மலிவான ரகத்துல துணிமணி வாங்கித் தருவார்.

“ஏங்க, போகும்போது பணத்தை தலையில கட்டிக் கிட்டா போகப் போறோம்? கொஞ்சம் தாராளமாத்தான் செலவழியுங்களேன்!” என்றாள்.

ஒரு நாள். மாதவன் புன்னகைத்து பதில் சொன்னார்…

“என் குடும்பம் ரொம்பப் பெருசு!”

“இருந்த ரெண்டுபொண்ணுங்களையும் கட்டிக் கொடுத்தாச்சு. இதுக்கு மேல யாருக்கு சம்பாதிக்கணும்? சாக்கு போக்கு சொல்றீங்களே தவிர நீங்க மாறவே மாட்டீங்களா?”

பதில் சொல்லாமல் உள்ளே சென்றார் மாதவன்.

அடுத்த நாள் மாதவனின் செல்போனில் அழைப்பு…சலித்தபடி எடுத்தாள் சாரு. “லீலா எஞ்சினியரிங் காலேஜிலிருந்து பேசறேன். பட்டமளிப்பு விழாவுக்கு கொடை வள்ளல் மாதவன் சாரை அழைச்சிருந்தோம். மாலையில் விழா… ஞாபகப்படுத்தத்தான் இந்த போன்!” என்றது மறுமுனை.

“என்னது! கொடை வள்ளலா? ராங் நம்பர் சார்!”

“இல்லை மேடம்… நீங்க வேணும்னா விழாவுக்கு நேர்ல வந்து பாருங்க!”

மாலையில் மாதவன் கிளம்பும்போது, “ஏங்க, நானும் விழாவுக்கு வரேன்!” என்றாள் சாரு.கொஞ்ச நேரம் யோசித்து, “சரி, வா” என்றார் மாதவன்கல்லூரியில் ஏகப்பட்ட வரவேற்பு. மாணவர்கள் மலர்க்கொத்து கொடுத்து ராஜமரியாதையுடன் மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

முதல்வர் தன் வரவேற்புரையைத் தொடங்கினார்…

“மாதவன் சார் செய்திருப்பது சாதாரண காரியமில்லை. ஒவ்வொரு வருடமும் நன்றாகப் படிக்கும் 20 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கோர்ஸ் முழுக்க டியூஷன் ஃபீஸ், புக், ஹாஸ்டல் ஃபீஸ் எல்லாம் கட்டுகிறார். இந்த ஆண்டு முடித்த 20 பேரும் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனாலும் இவர் கையால்தான் டிகிரி வாங்குவேன் என ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். இவர் இன்னும் நூறாண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்!” என்றார்.

சாருவுக்கு தூக்கி வாரிப் போட்டது. அவளால் நம்ப முடியவில்லை. மாணவர்கள் எல்லோரும் மாதவன் கையால் சான்றிதழ் வாங்க, மீண்டும் தொடர்ந்தது பாராட்டு மழை.”வலக்கை செய்யும் தர்மம் இடக்கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். இவர் செய்யும் தர்மத்தை மனைவியிடம் கூட சொன்னதில்லை என்பது இன்று காலை தொலைபேசியில் அழைத்தபோதுதான் தெரிந்தது. வானம் கூட மழை பெய்தால் இடி இடித்து சொல்லிக் காட்டுகிறது. ஆனால் இவர் கிரேட்!” என்று ஒருவர் பாராட்ட, ஒரு மிதப்பிலேயே சாரு வீடு வரை வந்தாள்.

“என்ன பேசமாட்டேங்கறே?’’ என்று மாதவன் கேட்க, சாருவிடம் பொலபொலவென்று கண்ணீர்.

“உண்மை தெரியாம கஞ்சன், கருமினு திட்டியிருக்கேன். அப்பகூட ஒரு வார்த்தை சொல்லலையே!”

“தர்மம் செய்தால் வெளியே சொல்லாம நாம மறந்துடணும். அப்பத்தான் கடவுள் மறக்க மாட்டார்!”

“உங்களை அடிக்கடி மாறுங்க, மாறுங்கனு திட்டுவேன். இப்ப சொல்றேன். நீங்க இனிமே மாறாதீங்க. ப்ளீஸ்!” – தழுதழுத்த குரலில் வேண்டினாள் சாரு.

– மார்ச் 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *