பின்னம்
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2026
பார்வையிட்டோர்: 93
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழியெங்கும் பெருமழை. ஆந்திராவில் கொஞ்சம் ரயில் பாதையை வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டது. பம்பாயில் இருந்து நேராகக் கோவை வழி கொச்சி போக வேண்டிய அந்த அதிவிரைவு ரயில், மராத்திய மாநிலத்தில் நீண்டதூரம் சுற்றிவிட்டு ஆந்திராவில் குண்டக்கல் பக்கம் நுழைந்து மேற்கொண்டு தெற்கு நோக்கிப் பயணமாயிற்று.
வழக்கத்தைவிட அதிகமான சாமான்கள். பதிவு போலான விற் பனைப் பயணமாக இல்லாமல், இது மாறுதல் பயணம். குடும்பம் பம்பாயில் இருந்தாலும் பின்னால் கோவை கொண்டு வந்தே தீர வேண்டு மானதால் முடிந்த வரை சாமான்கள். ஏற்றி இறக்குவதை நினைத்தால் அச்சம் ஏற்பட்டது.
பெருமழை காரணமாய் வண்டியின் தரையில் வெள்ளம் கசிவதும் காய்வதுமாக இருந்தது.
கட்டிக்கொண்டு வந்த சோற்றுப் பொட்டலங்கள் தீர்ந்து பன்னும் மாரி பிஸ்கட்டும் உருளைக் கிழங்கு வடையும் பச்சைப் பழமும் தின்று நீண்ட பயணம். புறப்பட்ட முப்பதாவது மணியில் கோவையில் இருக்க வேண்டிய வண்டி பத்தொன்பது மணி நேரம் தாமதமாக ஜோலார் பேட்டையைக் கடந்தது. இந்தக் கணக்கில் நள்ளிரவில் கோவை சேரும்.
பதினேழு ஆண்டுகளாகக் கோவை வழியாகப் பயணம் செய்திருக் கிறானேயன்றி, அங்கு இறங்கியதில்லை. ஸ்டேஷனில் இறங்கி, ஆட்டோ பிடித்து, தெரிந்து வைத்திருந்த லாட்ஜின் பெயர் சொல்லி, ரூமில் சாமான்களைப் போட்டதும் ஒரு நிம்மதி கிடைத்தது. ஒன்பதரை மணிக்கு அலுவலகம் போனபின் வீட்டுக்கு ஃபோன் செய்து சொல்லி விட்டால் போதும்.
கிளையின் மேலாளரும் விற்பனை மேலாளரும் யூனியன் செயலாளரும் மட்டும் முன்பு அறிமுகமானவர்கள். அறிமுகச் சடங்கு ஆகி,காபி பருகி, பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு… இன்னும் அவனுக்கென்று இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருக்கவில்லை. புதியதாக நியமனமான பதவி. தற்காலிகமாக அங்கும் இங்குமாக இருந்து கொள்ள வேண்டியதுதான்.
விற்பனைப் பொருட்கள் பற்றித் தெரிந்துகொள்ள ஏதுமில்லை. கிளையின் இயங்கு முறை தெரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பகுதி யின் வாடிக்கையாளர்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
எந்தப் பகுதியிலும் மூன்று விதமான வாடிக்கையாளர்கள் இருப் பார்கள். எப்போதும் நம்பத் தகுந்தவர்கள். நம்பினாலும் சற்று ஜாக்கிர தையாக இருக்க வேண்டியவர்கள். எப்போதும் நம்பவே கூடாதவர்கள். இதை எந்த விற்பனையாளனும் அனுபவத்தில்தான் தெரிந்து கொள்ள முடியும்.ஆளைப் பொறுத்து இந்தப் பட்டியலில் ஏற்றத்தாழ்வுகள் இருக் கும்.
வீடு பார்த்து, பள்ளிகள் தீர்மானித்து, குடும்பத்தைக் கொண்டு வரும் வரையிலான தங்கும் செலவுகளை, ஒரு மாதத்துக்கு அதிகப் படாமல் நிறுவனம் தாங்கிக்கொள்ளும். எட்டுப் பத்து நாட்களில் இந்த ஏற்பாடுகளைச் செய்துகொண்டு, மறுபடியும் பம்பாய் போய், சாமான் களை ஒதுக்கி, வண்டியேற்றி அனுப்பி, குடும்பத்தைக் கொண்டு வர வேண்டும்.
வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. புதிய ஊர் என்ற திகில் இன்னும் மறைந்தபாடில்லை. அலுவலக ஆட்களைத் தவிர வேறு நட் பென்று எவரும் இல்லை. கிழக்கும் மேற்கும் புலப்படவில்லை. ஆறு மணிக்கு அறைக்கு வந்த பிறகு செய்ய எதுவும் இல்லை. வேண்டு மானால் சென்ட்ரல் பஸ் நிலையம் அல்லது ரயில் நிலையம் என்று நின்று வரலாம். அல்லது சினிமா பார்க்கலாம். கமல், ரஜினி உட்பட எல்லா முகங்களும் புதுசாகத் தெரிந்தன.
இருபது ஆண்டுகள் வெளியூரில் வாழ்ந்துவிட்டுத் திரும்பியதால் கலாச்சார மாறுதல் முகத்தில் அறைந்தது.
மூன்றாவது நாள் காலை அலுவலகத்துக்குத் தர்மராஜ் வந்திருந்தார். அவருடைய தயாரிப்பு ஒன்று அவனது விற்பனைப் பட்டியலில் இருந்தது. பம்பாயில் இருந்தபோது அவனுடைய முயற்சியால் வெகு வாக அறிமுகமாகி இருந்தது. தர்மாராஜுக்கு அவன் மீது அபிமானம் உண்டு.
கோவை மாநகரச் ‘செம்புலிகள்’ சங்கத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அன்று இரவு எட்டு மணி அளவில் புதிய நிர்வாகக் குழுவைப் பொருத்துவதாக இருந்தனர். மேலாளரும் விற்பனை மேலாளரும் தம்மால் ஆகாது என ஒதுங்கிக்கொண்டனர்.
ஆறு மணிக்கு மேல் செய்யத் தனக்கு ஏதுமில்லை என்று தர்மராஜுக்குத் தெரியும். சரியாக எட்டு மணிக்கு ‘அமலா இன்டர் நேஷனல் ஓட்டல்’ ஏழாவது மாடிக்கு வரச் சொன்னார். தன்னை யாருக் கும் தெரியாது, தனக்கும் யாரையும் தெரியாது என்று தப்பிக்கப் பார்த்தான்.
பத்தாண்டுகளாகப் பழகிவரும் தொழில் காரணமாக அவைக் கூச்சம் இல்லை. முன்பின் தெரியாத ஆளிடம் கூட மூன்று மணி நேரம் உரை யாடல் கொள்ள முடியும். பண்பாட்டு மெல்லுணர்வுகள் எல்லாம் மழுங்க ஆரம்பித்து, அதை உணர ஆரம்பித்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
சின்ன வயதில் நெருங்கிய சொந்தக்காரக் கல்யாணத்துக்குப் போவதே கூடக் கூச்சம் ஏற்படுத்தும். நாலு பேர் முன்னால் அரைகுறை ஆடையுடன் நிற்பதைப் போல பந்தியில் இடம்பிடிக்க நடக்கும் அடிதடி யைப் பார்த்துச் சில சமயம் சாப்பிடாமலேயே கூடத் திரும்பியிருக் கிறான். அதெல்லாம் மரத்துப் போயிற்று.
ஆறேழு மாதங்களுக்கு முன்னால்… ‘நீங்கள் இன்னமும் எழுது கிறீர்களா மிஸ்டர் ஃபாக்னர்?’ என்றொரு ஆங்கில நாடகத்துக்கான அழைப்பு இருந்தது. அமெரிக்கன் சென்டரில், இரவு எட்டு மணிக்கு சலாவுதீன் கூட வருவதாக இருந்தார். ஆனால் அவருக்குப் பிற்பகல் நாலு மணிக்கு, வெளியாகப் போகும் புதிய இந்திப் படத்துக்கான, பத்திரிகை யாளருக்கான அழைப்பு இருந்தது.
இந்தியத் திரையுலகில் அந்த நிறுவனம் வார்னர் பிரதர்ஸுக்குச் சமமானது. சலாவுதீன் நன்கு எழுதும் ஆற்றலுள்ளவர். உருதுக் கவிதை களை அவர் மொழி பெயர்த்துச் சொல்வதைக் கண் மூடிக் கேட்டுக் கொண்டிருக்கலாம். குறிப்பாக ஃபயஸ் அகமது ஃபயஸ்.
ஒரு வேடிக்கை போலத் தமிழ் சினிமாப் பத்திரிகைக்குச் செய்திகளும் துணுக்குகளும் பேட்டிகளும் விமர்சனங்களும் பம்பாயி லிருந்து எழுதிக் கொண்டிருந்தார்.
வழக்கமான இந்திப் படம்தான். அறுபது எழுபது பேர் வந்திருந் தனர். நாயகனும் நாயகியும் புதுமுகங்கள். படம் முடிந்து சிற்றுண்டிக் கான ஏற்பாட்டில் கலந்துகொண்டபோது சற்றுக்கூச்சம் இருந்தது. சலாவூதீன் ஒரு பெருவெள்ளம் போலப் புரண்டு மறிந்து கொண்டிருந் தார். பொன்னிற முந்திரிப் பருப்பை அவ்வளவு ஒருச் சேர அவன் அதற்கு முன் கடைகளில் கூடப் பார்த்ததில்லை. பரப்பப்பட்டிருந்தவற்றில் மாதிரிக்கொன்றாக ருசி பார்த்தே வயிறு நிரம்பிவிட்டது.
மேடை போல் அமைக்கப்பட்ட இடத்தில் முக்கால் மணி நேரமாகக் கதாநாயகி புன்னகை பயின்று கொண்டிருந்தாள். தங்கையாக நடித்தவள் அதிகக் கவனிப்பின்றி, கவனிப்பை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தாள். இரண்டு பேரையும் இடம் மாற்றி வைத்து எண்ணிப் பார்த்தான். முடிந்து திரும்பியபோது எல்லோருக்கும் ஒரு பெரிய கவர் கையில் கொடுத்தனர்.
“இப்போது திறந்து பார்க்காதே!” என்றார் சலாவுதீன்.
நாடக அரங்கில் உட்கார்ந்தபோது, பின் அடிக்கப்பட்டிருந்த உறையைத் திறந்து பார்த்தான். முதலில் படப் பாடல்கள் அடங்கிய ஒரு கேசட் வந்தது. பிறகு நாயக நாயகியரின் குளோசப் கவர்ச்சிப் படங்கள் வந்தன. கதை விபரம் அடங்கிய ரைட்-அப் வந்தது. இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள் வந்தன.
“இது போக்குவரத்துச் செலவுக்கு!” என்றார் சலாவுதீன், பெருஞ் சிரிப்புடன்.
அறைக்கு வந்து சற்று நேரம் கட்டிலில் கிடந்து பிறகு குளித்து உடை மாற்றும்வரை ‘செம்புலிகள்’ சங்க விழாவுக்குப் போவதா வேண்டாமா என்ற தத்தளிப்பு. மணி ஏழே கால் ஆகியிருந்தது. ஐந்து நிமிட நடைதான். பகட்டாகப் போக வேண்டியது இருக்குமோ என்னவோ!
எதற்கும் ஒரு அனுபவமாக – சலாவுதீன் கூடப் போனது போல – இருக்கட்டுமே என்று புறப்பட்டுப் போனான்.
வாசலில் போர்டு வைத்திருந்தனர். நிகழ்ச்சி இன்னும் ஆரம்பித் திருக்கவில்லை. நிறைய மாருதிகள், கான்டசா, பிரிமியர் பத்மினி டிலக்ஸ்…
அரங்கில் சுமார் இருநூறு பேர்கள் – ஆணும் பெண்ணுமாக, சில குழந்தைகளும் இருந்தன. தர்மராஜ் வரவேற்று இரண்டொருவரிடம் அறிமுகம் செய்துவிட்டுப் போனார்.
எல்லாச் சூழ்நிலைகளிலும் இயல்பாகப் பொருந்திப் போகும் வட இந்தியத்தன்மை இல்லை. அடிக்கடி உள்வாங்கிப் போனார்கள்.
நிகழ்ச்சி தொடங்கி நடந்துகொண்டிருந்தது. இது போன்ற எல்லா நிகழ்வுகளுக்குமான மந்தத்தனத்துடனும் செயற்கை ஆரவாரத்துடனும்.
ஒன்பதரை மணிக்கு பார் திறந்தனர். பீர் இருந்தது, ஜின் இருந்தது, கன ரகங்கள் இருந்தன.
குழுக்களாக ஆண்களும் பெண்களும் நின்று பேசிக் கொண்டிருந் தனர். பெரும்பாலும் சிறு முதலாளிகள், பகட்டாக எளிய கதர் அணிந் திருந்தனர்.
தெரிந்த முகம் தேடிக்கொண்டிருந்தான். தர்மராஜ் அறிமுகம் செய்து வைத்த செல்வராஜ் மறுபடி தென்பட்டார். அவர் கையிலிருந்த கோப்பைத் திரவத்தின் அடர் நிறமும் வாசனையும் ‘ஒல்ட் மாங்க்’ என்று தோன்றியது. பணியாளர் தட்டில் சுமந்து வந்த உருளைக்கிழங்கு வேஃபரில் ஒரு கை அள்ளிக்கொண்டார்.
செல்வராஜுக்கு அறுபத்தைந்து வயது இருக்கும். பழைய கோணிகள் வாங்கி விற்க ஆரம்பித்த வாழ்க்கை. இன்று நகரில் கோணித் துணிக்கான மொத்த வியாபாரி.
அவனது நிறுவனம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதில் கோவையில் கிளை தொடங்கிய காலத்திலிருந்த மேலாளர்களை ஒருவர் பின் ஒருவராக நினைவு கூர்ந்து கொண்டிருந்தார். அவர்கள் பெயர்களைக் கூட அவன் கேள்விப்பட்டிருக்கவில்லை. காலிஃபிளவர் பஜ்ஜிகளை ஒரு கையில் அள்ளிக்கொண்டு, தாக நேரத்தில் சர்பத் குடிப்பதைப் போன்று கோப்பையைக் காலி செய்துவிட்டு, பார் தேடிப் போனார்.
முகத்தில் நிரந்தரக் குடிகாரனுக்கான தடயங்கள் இருந்தன. கோப்பையில் பாதிக்கு மேல் நிரப்பிக்கொண்டு கொஞ்சம்போல சோடா சேர்த்துக்கொண்டார்.
மணி பத்தரை ஆகிக்கொண்டிருந்தது. சாப்பிட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர் – சிலர் பீங்கான் தட்டத்தில் கரண்டிச் சத்தம் ஒலிக்கத் தின்றனர்… சிலர் இன்னும் கோப்பையை வைக்கவா என்ற யோசனையில்…
கூட்டம் மெலியத் தொடங்கியிருந்தது. பிளேட்டில் இருந்த புலாவை ஒதுக்கிக்கொண்டிருந்தபோது மறுபடியும் செல்வராஜ் எதிர்ப் பட்டார். கையிலிருந்த கோப்பை அமுதசுரபி போலும். கண்களில் போதைச் சிவப்பும் நடையில் லேசான வசமின்மையும். பேசும்போது தடித்த நாக்கு தொனித்தது.
செல்வராஜ் இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது. யார் சொல்வார் கள் என்று தெரியவில்லை. சொல்லும் அணுக்கம் இருப்பதாக அவன் நினைக்கவில்லை. மேலும் அதை அவர் எப்படி எதிர்வினை செய்வார் என்ற பழக்க நிச்சயமும் இல்லை.
“ஏனுங்க… இவ்வளவு சீக்கிரமே சாப்பிட்டீங்க…”
“இல்லை சார்… மணி பத்தே முக்கால் ஆகுதில்ல… காலைல ஆபீஸ் போகணும்…”
“என்ன பெரிய ஆபீஸ்… அந்தக் காலத்திலீங்க- நானும் உங்க மேனேஜர் சர்மாவும் குடிக்க உக்காந்தா ராத்திரி ரெண்டு மணியாகுங்க.”
அதுதான் சர்மா ஐம்பத்தாறு வயதில் புறப்பாடு கொண்டாராக இருக்கும்.
தர்மராஜைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று கண் களால் துழாவினான். கை கழுவப் போனபோது மூன்று லார்ஜும் கால் களில் இறங்கியிருப்பது புலப்பட்டது. கை கழுவி விட்டுத் திரும்பிய போதும் செல்வராஜும் அவர் மனைவியும் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.
“உங்களுக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் புரியாது… போரும்… வச்சிட்டு வாங்க…”
“இருடி, போகலாம்…”
‘இப்பவே மணி பதினொண்ணாகுது… வீட்ல போனா அவ மூஞ்சியை மொகரையை இழுப்பா…”
”அவ யாருடி என்னக் கேக்க… இரு… ஒரு ரவுண்டு எடுத்துக்கிட்டு வாறேன்…”
செல்வராஜ் நிரப்பிவிட்டுத் திரும்பியபோது தர்மராஜ் வந்தார்.
“அப்ப நான் வரட்டுமா?”
“இருங்க போகலாம்… பதினொண்ணுதானே ஆகுது… பக்கத்திலே தானே… வாங்க, ஒரு ரவுண்டு சாப்பிடலாம்…”
“ஐயையோ… இப்பதான் சீரா இருக்கு…” மேலும் ஒரு மணி நேரம்.
செல்வராஜ் கட்டுகள் கழன்ற திமிர்ப்பில் இருந்தார். குரல் உரத்தும் ஒழுங்கற்றும் வந்தது. அரங்கில் மொத்தம் இருபதுக்குள்தான் ஆட்கள் இருந்தனர். அவர் வீட்டு அம்மாள் பேசக்கூட ஆளற்று ஒரு மூலையில் அமர்ந்திருந்தார்.
மறுபடியும் சொல்லிக்கொண்டு புறப்பட யத்தனித்தபோது, செல்வ ராஜ் மனைவி தர்மராஜிடம் முறையிட்டுக் கொண்டிருந்தது கேட்டது.
”நீ என்ன வீட்ல கொண்டு விட்டிருப்பா… அவர் எங்காவது தூங்கி எந்திரிச்சு காலைல வரட்டும்… இந்த மாதிரி கூட்டிட்டுப் போயி அவ வாயிலே பேச்சுக் கேக்க முடியாது…”
செல்வராஜ் ‘மயிரே போச்சு’ என்பதுபோல் மறுபடியும் கோப்பையை நிரப்பப் போனார். தர்மராஜிடம் இன்னும் மன்றாடுவது கேட்டது.
“இருங்க… அம்மாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வந்துடறேன்…” என்று சொல்லிவிட்டுப் போனார்.
தர்மராஜ் திரும்பி வந்தபோது செல்வராஜ் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் அமர்ந்திருந்தார். ரதம் எப்போதும் புறப்படத் தயார் நிலையில்… குதிரைகள் மூசுமூசென்று மூச்சுவிட்டு, காலுதைத்து நிலம் பறிக்கத் தயாராக நின்றன.
பெரும்பாலும் எல்லோரும் அகன்றுவிட்டனர். பார் மூடியாகி விட்டது. மீதமிருந்த பதார்த்தங்களை அப்புறப் படுத்த முனைந்தபோது, தர்மராஜ் தன் தட்டில் கிடைத்ததை அள்ளிப்போட்டுச் சாப்பிட ஆரம்பித் தார்.
பேச ஆளற்று ஒரு நாற்காலியில் அமர்ந்த செல்வராஜ் ஒரு பக்கமாக, தோதற்ற நிலையில் தலை தொங்க, மயங்க ஆரம்பித்தார்.
கை கழுவிவிட்டு வந்த தர்மராஜ் சொன்னார் –
“நீங்க லாட்ஜிலேதானே இருக்கீங்க… ரூம்லே ஒரு எக்ஸ்ட்ராபெட் போடச் சொல்லலாம்… பெரியவர் தூங்கி எந்திரிச்சு காலைலே போட்டும்…”
அவனுக்குத் திக்கென்றிருந்தது.
“இருங்க, வந்திட்டேன்…”- செல்வராஜை அப்புறப்படுத்த ஆள் தேடப் போகிறார் போலும்.
தப்பித்துச் சென்று விடு என்றொரு கட்டளை உள் மனத்தில் ஒலித்தது.
அவன் தாமதிக்கவில்லை. லிப்டுக்குக் காத்திராமல் படிகள் இறங்கி, வேக நடையில் லாட்ஜை அடைந்து, சாவி வாங்கி, உடை மாற்றாமல் கட்டிலில் விழுந்தான்.
வேகமாக நெஞ்சு அடித்துக்கொண்டிருந்தது. இதமான குளிரிலும் நெற்றி. வியர்த்தது.
படப்படப்புத் தணிந்தபோதுதான் செய்தது நியாயமற்ற காரியம் என்று தோன்றியது. உறக்கம் வராமல் மனம் அலைந்து கொண்டிருந்தது.
– சீர்வரிசை, பிப்ரவரி 1992.
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கை கொடுத்த தெய்வம்
இரா.துரைமாணிக்கம்
November 4, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 4, 2026
தங்கக் கூண்டு
இரஜகை நிலவன்
November 4, 2026
