கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,797 
 
 

பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிக் கொண்டிருந்த லட்சுமி பெருமூச்செறிந்தாள்.

‘ஒய்மா…ஒய் திஸ் பெருமூச்சு’ என்றாள் மகள் மதுமதி

பாரு…எல்லோரும் குரூப் குரூப்பா எடுத்துக்கிட்ட படங்கள் இருக்கு. ஆனா நானும் என் அம்மாவும் ஒண்ணா எடுத்துக்கிட்ட
படம் ஒண்ணு கூட கிடையாது. ‘ஏன்னா உன் பாட்டி நான் பிறந்தவுடன் இறந்து போயிட்டாங்க’ என்றாள் லட்சுமி.

‘பாட்டியோட படம் ஒண்ணு கூட கிடையாதாம்மா’ என்றாள் மதுமதி கனிவாக.

‘பாட்டியோட சீமந்தப் புகைப்படம் ஒண்ணு இருக்கு’ என்று அதைக் காட்டினாள் லட்சுமி.

தாய்மையின் பூரிப்பில், தலையில் நெற்றிசுசுட்டி, பூச்சடை…கண்களில் மையும் மிரட்சியும், கைகளில் ரேஷன் கடை…க்யூ
வரிசையாக கண்ணாடி வளையல்கள், பட்டுப் புடுவை , மேடிட்ட வயிறு, பின்புறம் கண்ணாடியில் பிம்பம், பக்கத்தில்
பூச்சாடி.

‘டோன்ட் ஒரிம்மா, நீயும் உன் அம்மாவும் சேர்ந்து எடுத்துக்கிட்ட படம்தான் இது,.பாட்டியோட வயித்துக்குள்ளே இருக்கிறது நீதானேம்மா…’கூல்’ என்றாள் லட்சுமியை இறுக்க கட்டி முத்தமிட்ட மதுமதி.

இளைய தலைமுறையின் புதிய கோணத்தைக் கண்டு லட்சுமியின் புருவங்கள் உயர்ந்தன.

– இரா.தேன்மொழி அண்ணாதுரை (மே 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *