பசி




இன்றும் எதிர்பார்த்தது போல் அவன் வந்தான். என்னைப் பார்த்துவிட்டு எந்தச் சலனமும் முகத்தில் காட்டாமல் டோக்கன் கவுண்டருக்குச் சென்றான். நான் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அவனைக் கவனித்து வருகிறேன். அவனை எனக்குப் பிடிக்கும். இன்னும் சொல்லப் போனால் இந்த சாலையோர துரித உணவகத்திலேயே என் மனசுக்கு மிகவும் நெருங்கியவன் அவன் தான்.
என் குழந்தைக்குத்தான் அவனை பிடிக்காது என்று நினைக்கிறேன். அவன் வந்தவுடன் அவளுக்கு பால் புகட்டுவதைக்கூட நிறுத்திவிட்டு அவனருகில் செல்ல நான் துடிப்பதை அவள் உணர்ந்தே இருந்தாள். அப்பா இருந்தால் ஒரு வேளை முறையிட்டிருப்பாள். அந்த நாயைப் பற்றி ஏன் பேச்சு! ஓடிவிட்டான்.
” ஒரு சிக்கன் நூடுல்ஸ்! ஒரு சிக்கன் 65!” -என்று கேட்டு டோக்கன் வாங்கிக் கொண்டான். பெரும்பாலும் அவன் சிக்கன் வகையறா தான் ஆர்டர் செய்வான். அவனை எனக்கு பிடித்துப் போக இது கூட ஒரு காரணம். எனக்கும் சிக்கன் என்றால் உயிர்.
பிளாஸ்டிக் தட்டில் உணவை வாங்கிக் கொண்டு அவன் என்னைக் கடக்கையில், வாசமும் என்னைக் கடந்தது. ஒரே ஒரு கணம் என்னைப் பார்த்தான். அவனுக்கு என் மேல் ஒரு ‘இது’ உண்டு என்று நான் தீர்க்கமாக நம்பக் காரணமே அவன் இப்படி அவ்வப்போது என்னைக் கவனிப்பதனால் தான்.
வழக்கம் போல் நான் மெல்ல அவனருகில் சென்றேன். என் மகள் என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வைக்கு அர்த்தம் சத்தியமாக விளங்கவில்லை. நான் பின் தொடர்வதை அவனும் கவனிக்காமல் இல்லை. எல்லாம் தெரிந்தும், எதுவும் தெரியாதது போல் சாப்பிட ஆரம்பித்தான்.
சிக்கனை அவன் ருசித்துச் சாப்பிடுவதை நான் ரசித்துக் கொண்டிருந்தேன். அவன் இந்த முறை என்னை தீர்க்கமாகப் பார்த்தான்.
“என்ன?” – என்றான்.
நான் தலையைச் சிறிது ஆட்டினேன்.
“சிக்கன் வேணுமா?” என்றவன் என்னுடைய எந்த விதமான பதிலுக்கும் காத்திராமல், இரண்டு, மூன்று பெரிய சிக்கன் துண்டுகளை எடுத்து என் அருகில் வீசினான்(இங்கு வருகிறவர்களில் யாருமே அப்படிச் செய்வதில்லை, வெறும் எலும்பு தான். ஐ லவ் ஹிம்!)
நான் லபக்கென்று கவ்விக்கொண்டு, பலத்த விசுவாசத்துடன் வாலை ஆட்டினேன்.
![]() |
நான் குமுதத்தில் ஒரு பக்கக் கதைகள்(பல வருடங்கள் முன்பு) எழுதியிருக்கிறேன். ஜோக்ஸ் முயற்சி செய்திருக்கிறேன். குமுதம், கல்கி, குங்குமம் இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. இணையத்தில் கட்டுரைகள் எழுதி வருகிறேன். sivakumarasokan16.wordpress.com என்ற வலைப்பூவில் என்னுடைய சில கட்டுரைகளைக் காணலாம். ஃபேஸ்புக், ட்விட்டரிலும் சற்று இயங்கி வருகிறேன்.(https://www.facebook.com/sivakumar.asokan.9) ஷேர் மார்கெட்டில் வேலை.தஞ்சாவூர் வாசம்.மேலும் படிக்க... |