365 நண்பர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 978 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மவுன்ட்ரோடில் பஸ் நிற்கும் இடத்தை நோக்கிப் போய்க்கொண் டிருந்தேன். வழுக்கை மண்டையும் வாணக்குழாய் மூக்கும், அமைந்த ஓர் உருவம் கண்ணில் பட்டது. எனக்கு நன்றாய்ப் பழக்கமான முகம். அவர் என்னைப் பார்க்கவில்லை. ‘யாரது? யாரது?’ ஒரு விநாடி கழித்து ஞாபகம் வந்துவிட்டது. 

அந்த ஊரில் இருந்தபொழுது என் நண்பர் கோர்ட் குமாஸ்தாவுடன் என் வீட்டுக்கு வந்தாரே சோமு, அவரே தான்! இன்னார் என்று தெரிந்தவுடன் அவர் கண்ணுக்குப் படாமல் தப்பித்துக்கொள்ள வேண்டுமே என்று கவலை உண்டாய்விட்டது 

கவலைப்படுவானேன் என்றால் மத்திய வகுப்பாரின் பொருளாதாரம் அப்படி இருக்கிறது! விருந்தினர்கள் வீட்டிற்கு வரமாட்டார்களா. வந்தால் சில நாட்கள் தங்கமாட்டார்களா என்று ஏங்கிய காலம் ஒன்று உண்டு. ரூபாய்க்கு ஐந்து பட்டணம் படி அரிசி விற்றகாலம் அது. ஆனால் இப்பொழுதோ? பிறக்கும் குழந்தை குடும்பத்திற் குப்பளுவாகிவிடப் போகிறதே என்று கணக்குப் பார்த்து, குழந்தையே பிறக்காமல் செய்வதற்கு வழி வகுக்கும் கால மாயிற்றே! கொடிக்குக் காய் கனமாகிவிட்டதே! இந்த யுகத்தில் விருந்தினர்களாவது, இல்லறத்தின் தர்மமாவது! தட்டுத் தடுமாறி விருந்தினர்கள் வந்துவிட்டாலும், மின்னுவதெல்லாம் பொன்னாகாது என்று சொல்வார்களே அந்த மாதிரியும் நேர்ந்துவிடுவது உண்டல்லவா.? 

சோமு ஒரு நாள் சாயங்காலம் என் நண்பர் ஒரு வருடன் என் வீட்டிற்கு வந்தார். ‘இவர்தான் சோமு என்னுடைய நண்பர். என்னைப் பார்க்க வந்திருக்கிறார். என்று என் நண்பன் அறிமுகப்படுத்தி வைத்தான். சோமுவின் வழுக்கை மண்டையும் வாணக்குழாய் மூக்கும் அரைக்கைச் சட்டையும் பார்க்கக் கொஞ்சம் தமாஷாய் இருந்தது. ஆனால் தோற்றத்தைக் கொண்டு ஒருவரை மதிப்பிடலாகாது என்ற எண்ணம் எழவே புத்தியை வேறு திசையில் திருப்பினேன். அதற்குள் குழந்தைகள் எங்கள் எல்லோருக்கும் காபி கொண்டுவந்து கொடுத் தனர். நாங்கள் எல்லோரும் காபி சாப்பிட்டோம். சோமு பொடியை இரண்டு முறை உறிஞ்சிவிட்டுக் காபிக்கொட்டை உற்பத்தியிலும் விற்பனையிலும் நடந்துவரும் பித்தலாட்டங்களைப்பற்றிச் சிரிக்க சிரிக்கப் பேசினார். நான் பிரமித்தே போய்விட்டேன். பிறகுதான் சோமுவின் கண்ணோட்டம் அறையைச் சுற்றிச் சென்றது. மூலையில் ஒரு ஹார்மோனியம் இருந்தது. 

“இது எதற்கு?” என்றார். 

“குழந்தைகள் பாடும். அதற்காக” என்றேன்.

”தம்புரா?” 

“அந்த இலாகாவே என் சம்சாரத்தைச் சேர்ந்தது” என்று சொன்னவுடன் என் நண்பரும் சோமுவும் சிரித்து விட்டார்கள். 

‘பாட்டைக் கேட்கக் காலையில் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சோமு என் நண்பருடன் போய் விட்டார். 

சொன்னபடியே மறுநாள் காலையில் சோமு மட்டும் வந்தார். வந்தவர் சுவாதீனமாக ஈஸிசேரில் உட்கார்ந்த தைப் பார்த்ததும் எனக்கே மகிழ்ச்சி உண்டாகிவிட்டது. வித்தியாசமில்லாமல் வறட்டு ஜம்பமில்லாமல் நட்புக்கு லாயக்காய் உலகத்தில் அதிகம் பேர் அகப்படுவதில்லை. அந்தச் சிறுபான்மைக் கோஷ்டியைச் சேர்ந்தவர்தான் சோமு என்ற எண்ணம் தலை தூக்கிற்று. காபி சாப்பிடும் வேளையில் ஒருவர் வந்தால் காபி கொடுக்காமல் எப்படி இருக்கமுடியும்? 

காபி சாப்பிட்ட பிறகு குழைந்தைகளைப்பற்றிச் சோமு விசாரித்தார். இருக்கிறார்கள் என்று சொன்னதும், “எவ் வளவு வர்ணம் வரும்? எவ்வளவு உருப்படிகள் வரும்? ஸ்வரம் பாடுவார்களா? பல்லவி இரண்டு களைச் சவுக்கம் பாடமுண்டா?” என்று ஓர் அடுக்குக் கேள்விகளைச் சொரிந் தார் .நான் ஔரங்கசீப்பின் கோஷ்டியைச் சேர்ந்தவன். சங்கீதம் என்றால் ஆறடி ஆழம் தோண்டிப் புதை என்று சொல்லக்கூடியவன். போதாக் குறைக்கு என் குழந்தை களின் சாரீரத்தைப்பற்றி அவ்வளவு நல்ல அபிப்பிராயம் கிடையாது. இருந்தாலும் பாசம் என்று ஒன்று இருக்கிற தல்லவா? 

“எல்லாம் ஏராளமாக வரும்” என்றேன். 

“கூப்பிடுங்களேன். பாடச் சொல்லுவோம்.” 

தங்கள் பாட்டைப்பற்றிப் பேச்சு வார்த்தை நடந்த காரணத்தாலோ என்னவோ நான் கூட்பிட்டவுடன் குழந்தைகள் வந்துவிட்டனர். பாட்டைப்பற்றிப் பேச்சு வந்தால் சம்மன் இல்லாமல் ஆஜராவதற்குக் குழந்தை களின் தாயார் தயங்குவதில்லை. 

“இரண்டு பாட்டுப் பாடுங்களேன்; கேட்போம்” என்று சோமு சொன்னதும் என் மனைவியும் ஒத்துப் பாடினாள். மூன்று நான்கு பாட்டுக்கள் பாடினார்கள். 

“அபாரமாகப் பாடுகிறார்களே! எனக்குப் பாட்டென் றால் உயிர்.இன்னும் கேட்கவேண்டும்போல் இருக்கிறது. ஆனால் பொழுதாகிவிட்டது. நாளைக்கு வருகிறேன்” என்று போய்விட்டார். 

அதுமுதல் ஒருவாரம் தினந்தோறும் காலையிலோ, மாலையிலோ என் வீட்டுக்கு வருவதும் அபிராம் மார்க் மூக்குப்பொடி செய்யும் விதம் முதற்கொண்டு, எப்படி அகப்பட்டுக்கொள்ளாமல் பாக்குப் பொடியில் கலப்படம் செய்யலாம் என்பது வரையிலும், சந்திரமண்டல யாத் திரை முதற்கொண்டு ஆற்றுமணலில் இருக்கும் இரும்பை எடுக்கத் தொழிற்சாலை அமைப்பதைப் பற்றிய வரையிலும் எல்லா விஷயங்களைப்பற்றியும் அலசிப் பேசாமல் போகமாட்டார்.’இவ்வளவு உலக அறிவு உள்ள வரைப் பார்த்ததில்லையே!” என்று வியப்படைந்தேன். பார்த்துத்தான் என் நண்பன் தனக்கொரு நண்பனைப் பிடித்துக்கொண் டிருக்கிறான் என்ற பொறாமைகூட எனக்கு ஏற்பட்டுவிட்டது. 

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை பகல் பன்னிரண்டு மணிக்குச் சோமு வீட்டிற்கு வந்தார்.

“என்ன, சாப்பா டாகிவிட்டதா?” என்று குசலம் விசாரித்தேன். 

“இன்னும் இல்லை.” 

“ஏன்?” 

“பின்னே என்ன சார்! அதனால்தான் எனக்கு உற வினர்கள் என்றாலே பிடிப்பதில்லை. வருஷம் 365 நாளும் சிநேகிதர்களுடனே இருப்பதற்கு வழி இருக்கிறது. இந்தப் பிள்ளையாண்டானுடைய பெண்டாட்டி என் னவோ பிரமாதப்படுத்துகிறாள் நான் டிகாணா போட் டிருக்கிறேன். என்று சொல்வதுபோல முகத்தை வைத் துக்கொண்டு எனக்கு உணவு பரிமாறுகிறாள். எனக்கு இன்று காலை கிடைத்த காபி, வக்கீல் விடும் நோட்டீஸைப் போல் இருந்தது. அவ்வளவுதான். சாயங்காலமாக ஊருக்குப் போகலாம் என்று பார்க்கிறேன்” என்றார். 

“அதற்காகப் பட்டினி கிடப்பானேன்? இங்கே சாப் பிட்டு விட்டு இஷ்டம் போலச் செய்யுங்களேன்” என்றேன். 

உடனே சாப்பாடு ஆயிற்று. ஆனால் சாயங்காலமாக அவர் ரயிலுக்குப் போகவில்லை. என் வீட்டிலேயே இருந்தார். ஒரு வேளை காலையில் போவார்போல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். 

மறுநாள் காலையில் நான் சிறு வேலையாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது சோமு, கூடத்தில் ஹார்மோனியத்துக்குச் சுருதி போட்டுக்கொண்டிருந்தார் குழந்தைகள் பாடிக்கொண்டிருந்தன. என் மனைவி சமையல்கட்டு வாசலில் நின்றுகொண்டு ரசித்துக் கொண்டிருந்தாள். பாட்டு முடிந்தது; “உங்களுக்குப் பாட்டு ரொம்ப நன்றாக வரும்” என்று ஆசீர்வாதம் செய்தார். 

அன்றும் அவர் ரயிலுக்குக் கிளம்பவில்லை. என்ன அவ சரம்? நாளைக்கு ரயிலுக்குப் போனால் போயிற்று என்று மனைவி சொல்லியிருக்கக் கூடும். குழந்தைகளின் பாட்டை ரசிப்பவர் அல்லவா? முதல் நாள் சாப்பாட்டுடன் இருந் தது; இரண்டாவது நாள் டிபனும் சேர்ந்துகொண்டது. இப்படியே விளையாட்டுப்போல் ஒரு வாரம் ஆகிவிட்டது. காலையிலோ மாலையிலோ வீட்டில் சங்கீதம் முழங்காமல் இருக்காது.சோமு சுருதி போடத் தவறுவதில்லை. 

இதற்கிடையில் இரண்டாவது நாள் என் வீட்டுக்கு நண்பர் வந்தார். சோமு சுருதி போட்டுக்கொண் டிருந்தார். “ஏன் சோமு! ஊருக்குப் போவதாகச் சொல்லி விட்டுச் சென்றாயே, இங்கேயா இருக்கிறாய்?” 

”ஆமாம்; சொன்னேன். இவரிடத்தில் சொல்லிக் கொண்டு போகலாம் என்று வந்தேன். ‘ஒருவேளை சாப் பிட்டு விட்டுப் போகக்கூடாதா? என்ன அவசரம்?’ என்று இவர் சொன்னார். அதான்” என்று பதில் சொன்னார். 

இந்தக் கப்சா என்னைப் பிரமிக்க வைத்துவிட்டது. சோமு பெரிய பேர்வழி என்ற சந்தேகம் ஊர்ஜிதம் ஆகி விட்டது. அவருக்குத் தங்கத்தின் பக்கபலம் இருக்கும் பொழுது நான் என்ன நினைத்தால் என்ன? 

ஒருவாரம் கழிந்தபிறகு என் மனைவி ஒரு ரகசியத்தை என்னிடம் தெரிவித்தாள். ‘வீட்டுவரி அவசரமாக அனுப்ப வேண்டி இருக்கிறது. முதலாளியிடமிருந்து வரவேண்டிய பணம் வரவில்லை’ என்று சொல்லி ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவதாகப் பதினைந்து ரூபாய் தன்னிடம் சோமு கைமாத்து வாங்கிக்கொண் டிருப்பதாக மனைவி சொன்னாள். “கோவிந்தா!” என்று சுருக்கமாகப் பதில் கூறினேன். 

“அப்படியா செய்வார்?” என்று மனைவி வெட்கிப் போய்விட்டாள்! 

இனியாவது ஊருக்குப் போய்விடுவார் என்று நினைத்தேன். அவர் அப்படிச் செய்யவில்லை. பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டுத்தான் ஊருக்குப் போகவேண்டும் என்று என் மனைவியிடம் சொல்லிவிட்டார் பணம் கொடுத்துவிட்டே ஊருக்குப் போவதிருக்கட்டும். வரா விட்டால் இங்கேயே இருந்துவிடுவது என்று அர்த்தமா என்று நான் விரித்துக் கூறியபொழுது என் மனைவி அயர்ந்தே போய்விட்டாள். 

மறுநாள் சோமு ஹார்மோனியத்தை எடுத்து வை துக்கொண்டு குழந்தைகளுக்காகக் காத்துக்கொண் டிருக் கும்படி ஆகிவிட்டது. என் மனைவி சமையல்கட்டின் வாசற்படியில் வந்து நிற்கவில்லை. “எங்கே குழந்தைகளைக் காணோமே?” என்று சோமு கேட்டபொழுது, ‘பாடிப் பாடிக் குழந்தைகளுக்குத் தொண்டை புண்ணாகிவிட்டது” என்று மனை வி சமையல்கட்டிலிருந்தே பதில் சொன்னாள். 

விஷயம் அதோடு நிற்கவில்லை. அன்றைத் தினம் சமையலும் வயணமாக இல்லை. வெறும் வேப்பம்பூ ரசம் எனக்கே பிடிக்காது. 65 சிநேகிதர்கள் உள்ள சோமு வுக்கு எப்படிப் பிடிக்கும்? அன்றைத் தினம் சாயங்காலம் விடை பெற்றுக்கொண்டு ரயிலேறி விட்டார்… 

இவ்வளவு பிரதாபம் நிறைந்தவரைக் கண்டதும் அவர் கண்ணில் படாமல் தப்பிக்கவேண்டுமே என்று நினைத்ததில் என்ன பிசகு? மெதுவாக நகர்ந்து ஒரு வேப்பமரத்துடன் போய் ஒட்டிக்கொண்டேன். 

அதுவரை தன் 365 நண்பர்களில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தது முடிவடைந்து விட்டது. இருந்தாலும் அவர் பஸ்ஸை எதிர்பார்த்துக்கொண்டு நிற்கத் தொடங் கியதும் எனக்குத் திகிலே உண்டாகிவிட்டது.10-ஆம் நம் பர் பஸ், 11, 21, 3 எவ்வளவோ பஸ்கள் வந்துபோயின. அவர் ஒன்றிலும் ஏறவில்லை; நின்று நின்று அலுப்போ என்னவோ? மெதுவாக நான் இருந்த பக்கத்தை நோக்கி நடந்து வந்தார்.ஓணான் மரத்தில் ஏறும்பொழுது மனித னைக் கண்டால் மறையுமே அதுபோல நான் வேப்பமரத் தின் மறுபக்கம் நகர்ந்தேன். அப்பொழுதும் மனத்திற்குச் சமாதானம் உண்டாகவில்லை. குடையைப் பிரித்து முகத்தை மறைக்கும்படி பிடித்துக்கொண்டு நிம்மதியாக நின்றேன். என்னை இப்பொழுது நிச்சயமாக அவர் பார்க்க முடியாது. ஆனால் என்னால் அவரைப் பார்க்க முடியும். அடுத்தாற்போல் ஒரு பஸ் வந்தது சோமு பஸ் கண்டக்ட ரிடம், போய், ‘இது அடையாறு போகுமா?’ என்று கேட்டார். ‘போகாது’ என்று சொன்னவுடன் திரும்ப நடை பாதைக்கே வந்துவிட்டார். 

இவர் அடையாறு போகிறார் என்ற தகவல் ஒரு புதிய சங்கடத்தை உண்டாக்கிவிட்டது. ஏனென்றால் நானும் அதே பஸ்ஸில்தான் ஏறி ஸ்ரீராம் நகர் போகவேண்டும். அவரும் நானும் ஒரே பஸ்ஸில் போகவேண்டிய நிலைமை ஏற்பட்டால் எப்படி இருக்கும்! துணியைப் பிடித்துக் கொள் என்று ஒட்டுப்பில்லுக்குச் சொல்லியா தெரிய வேண்டும்? இதற்காக என் ஜாகைக்கு நடந்து போய் விடுவதென்றால் நடக்கக்கூடிய காரியமா? ஆனால் ஒரு நம்பிக்கை; புளிமூட்டைபோல் அடைந்திருக்கும் பட்ட ணம் பஸ்ஸில் முன் சீட்டில் இருப்பவரைக்கூடச் சரியாகத் தெரிவதில்லையே. பார்த்துக்கொள்ளலாம் என்று மனத் தைச் சமாதானப்படுத்திக்கொண்டேன். 

ஆழ்வார்ப்பேட்டைக்குச் செல்லும் பஸ் ஒன்று வந் தது. விர்ரென்று சோமு அதில் போய் ஏறிக்கொண்டு சென்றுவிட்டார். அடையாற்றுப் பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிருந்தவர் ஏன் ஆழ்வார்ப்பேட்டைப் பஸ்ஸில் ஏறிப் போனார் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. யோசித்துக்கொண்டே இருந்தேன். பிறகு தென்ன மரத்தில் தேள் கொட்டினால் புன்னை மரத்துக்கு நெறி ஏறுவானேன் என்ற பழமொழி ஞாபகம் வந்தது. அத் துடன் என் பஸ்ஸும் வந்துவிட்டது. 

கவலையின்றிப் பஸ்ஸில் ஏறிக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தேன். வீட்டிற்குள் நுழைந்ததும் நிலை வாசற்படி தலையில் இடித்தது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. ஏனெனில் வழுக்கை மண்டைச் சோமு என் வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்துகொண் டிருந்தார். அவருக்கு முன்னால் கடிதாசியில் கட்டிய பொட்டலம் ஒன்று இருந் தது. என்னுடைய ராசி பலனைப்பற்றிய யோசனை உண் டாகிவிட்டது. 

”என்னைத் தெரிகிறதா?” என்று அவர் கேட்டதும் என் ஆராய்ச்சி கலைந்து போய்விட்டது. “தெரியாமல் என்ன?” என்றேன். 

“நீங்கள் இங்கே வந்துவிட்டீர்கள் என்று அம்மா அன்று மயிலாப்பூர்க் கோவிலில் கண்டபோது சொன்னார். உடனே குழந்தைகளைப் பார்க்கவேண்டுமென்ற ஞாபகம். இன்று வரையில் முடியவில்லை. சௌக்கியந்தானே?” 

“சௌக்கியம்தான்” என்று பதில் சொன்னேனே ஒழிய நினைப்பெல்லாம் என் மனைவியின் அசட்டுத்தனத் தின் மேல்தான். ஆனால் பானை உடைந்த பிறகு பர தவிப்ப தில் என்ன பயன்? மனிதர்களுடன் பழகுவது என்றால் மனத்தின் சலனங்களைப் பிறர் காணமுடியாமல் நடக்கக் கற்றுக்கொள்ளுவது என்றுதானே பொருள். இந்த வித்தை பெண்களுக்கு எங்கே வரப்போகிறது. ஆண்கள் தான் பிறந்தவர்கள்! 

“நீங்கள் வந்ததில் ரொம்ப சந்தோஷம்’ என்றேன். “நான் ஊரைவிட்டுப் போன திலிருந்தே குழந்தை களின் ஞாபகந்தான். மறுபடியும் எப்பொழுது பார்க்கப் போகிறோம் என்ற தவிப்பு. ஆண்டவனாகப் பார்த்து இந்தச் சந்தர்ப்பத்தைக் கொடுத்துவிட்டான்.’ 

இப்படிச் சொல்லிக்கொண்டே எதிரிலிருந்த பொட்டலத்தை அவிழ்த்தார். நார்ப்பட்டுத் தாவணி ஒன்று. சில்கோ என்னவோ ஜாக்கெட் ஒன்று: குழந்தை களைக் கூப்பிட்டு அவற்றை நீட்டினார். 

“இதெல்லாம் அநாவசியமாக எதற்கு?”

“என்ன பிரமாதம்!” 

சோமுவைப்பற்றிய என் எண்ணம் எல்லாம் தவறு என்று சொல்வதுபோல் அவர் காரியத்தைச் செய்திருந்தார். அதே மாதிரிதான் என் மனைவியும் நினைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்த நிமிஷம் எங்கள் இரு வருக்கும் டிபன், காபி வந்து சேர்ந்தது. 

“உங்கள் வீட்டுக் காபியை மறக்கமுடியாது” என்று சொல்லிக்கொண்டே காபியைக் குடித்தார். 

அவருடைய அமெரிக்கையைப் பார்த்தபிறகு எனக் கு ஓர் உண்மை புலப்பட்டது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி உழலும் மக்கள் எந்த விஷயத்தைப் பற்றியும் உண் மையான மதிப்பீடு செய்யமுடியாது பொருளாதாரச் சிக்கல் கண்ணை அவ்வளவு தூரம் மறைத்துவிடும் அப் பொழுது மனம் பிழையுள்ள கண்ணாடியைப்போல் உரு வங்களைச் சப்பையாகவும் உப்பலாகவும் கோணலாகவும் திரித்துக் காட்டிவிடுகிறது. இந்தமாதிரி எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்த உடனே சோமுவைப் பற்றி நான் முன்பு நினைத்திருந்ததை எல்லாம் வாபஸ் பெற்றுக் கொண்டுவிட்டேன். 

சோமு அணுகுண்டுகளைப் பற்றிப் பேசத் தொடங் கினார். சோதனைகளை எதிர்ப்பதற்குப் பதிலாக பிர மிக்கும் வகையில் ஆதரவு காட்டிப் பேசிவிட்டு விருட்டென்று எழுந்திருந்து விடைபெற்றுக் கொள்ளலானார். 

“சாப்பிட்டுவிட்டு நாளைக்குப் போகலாமே” என்றேன். 

“நான் சாப்பிடுகிற சாப்பாடெல்லாம் உங்கள் சாப் பாடுதான். அன்புதான் சாப்பாடு. மனுஷனுக்கு வேறு என்ன வேண்டும்?’ என்று சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டார். ‘நல்லவனைக் கெட்டவன் ஆக்கி விட்டாயே பாழும் மனமே!’ என்று என் மனத்தைக் கடிந்துகொண் டேன். 

ஆசிரியர் குறிப்பு; 

(இந்த வரலாறு அச்சேறிய பிறகு கதாசிரியரிட மிருந்து ஒரு தபால் வந்தது. அதை இங்கே பிரசுரித்திருக்கிறோம்): 

நான் எழுதி அனுப்பியதுடன் தயவுசெய்து இதையும் சேர்த்துக்கொள்ளவும். மனத்திற்கு அதிசயிக்கத்தக்க சக்தி இருக்கிறது. தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்ச்சி ஒன்று இருக்கிறது. மனத்தில் தோன்றிய எண்ணம் பொய்யானதுபோல் வெளிப்படையாக முதலில் தோன்றினாலும் பின்னர் மனத்தின் உள்ளுணர்ச்சியே உண்மை என்பதைக் காண்போம். அதாவது சோமு எங்கள் வீட்டில் இப்பொழுது ஒரு வாரமாகத் தங்கி வருகிறார். அவருடைய 36 நண்பர்களில் நானும் ஒருவன் ஆகிவிட்டேன். குழந்தைகளின் பாட்டுக்கு அவர் ஹார் மோனியச் சுருதி போட்டுக்கொண்டிருக்கிறார். 

– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *