ஹைடெக் திருடர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 25, 2024
பார்வையிட்டோர்: 6,187 
 
 

மூளையைக் குடைந்து கொண்டிருந்தது போலீஸ், கடந்த சில நாட்களாக நடந்த திருட்டு பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை! மயக்க மருந்து கலந்த பிஸ்கட் பயன்படுத்தவில்லை. வேறு ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தவில்லை.. ! ஆனாலும், எல்லா வயதுப் பயணிகளும் தங்கள் உடைமைகளைப் பறிகொடுத்திருக்கிறார்கள். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஓடும் ரயில், பஸ் என எல்லா இடங்களிலும் திருடர்கள் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

உயரதிகாரி செந்தாமரை கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தார். எந்த முடிவுக்கும் வர முடியவில்லை எதைப் பற்றியும் கவலைப்படாமல், சாம்பசிவம் மட்டும் தொடர் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார். அவர் அடுத்த மாதம் ரிடையர்டு ஆகப்போகிறவர்.

“கையாலாகாத போலீஸ் என்று நம்மை நாளைக்கு மீடியா நாறடிக்கப் போகிறது மிஸ்டர் சாம்பசிவம், நீங்கள் எதுவும் சொல்லாமல் ‘கொட்டாவி’ விட்டுக் கொண்டு, ஏதோ யோசனையில் இருக்கிறீர்கள்? என்ன துப்பறியும் சாம்பு மாதிரி எதாவது செய்யப் போகிறீர்களா?” செந்தாமரை சீறினார். அப்போது வேறு சிலர் கொட்டாவியைத் தடுக்க வாயை மென்று விழுங்குவதும், சொடக்குப் போடுவதுமாக இருந்தார்கள். சொந்தாமரைக்குப் பொறி தட்டியது. ‘எஸ்! நாளை சந்திப்போம்!’ என கோபமாக எல்லாரையும் அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள், உதவியாளரிடம் சொல்லி, ‘சிசிடிவி பதிவுகளை ஓடவிட்டுப் பார்க்கலாம், எதாவது கிடைக்கும்’ என்று தேடினவர். ‘ஷாக்’ ஆனார். இப்படியும் ஏமாற்ற முடியுமா? ஆச்சர்யமாக இருந்தது. மூன்று பேர்… பயணிகளைக் குறி வைத்து, அவர்களைச் சுற்றி, எதிரும் புதிருமாய் உட்கார்ந்து கொண்டு, மாறி மாறி தொடர் கொட்டாவி விட்டுத் தூக்கம் வருவதுபோல பாவலா பண்ண, அதனால் பயணிக்கும் தூக்கம் வந்து தூங்க… உடைமைகளைத் திருடிக் கொண்டு ஓடுவது தெரிந்தது.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *