ஸதாநந்த போதக சாமியார்





(1933ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

(பாதியில் இருந்து)
மாக நீங்கள் கொள்ளும் சந்தேகங்களைப் பகுத்தறிவிற்கு ஒத்தபடி நான் விளக்க வேண்டாமா?
நான் இதற்கு முன் வேறு சில கிராமங்களுக்குப் போய்த் தாமஹித்திருந்த காலத்தில் என்னிடம் சிலர் சில கேள்விகள் கேட்டனர். “ஸ்வாமிகளுக்கு ஒரு விக்ஞாபனம், நாம் அம்பிகை யென்றும், ஈசுவரி என்றும் பெண் தெய்வங் களை வைத்துக்கொண் டிருக்கிறோம்.பார்வதி சிவனை மணந்து கொள்வதற்காகத் தவம் செய்து,ஹிமவானுக்குப் புத்திரி யாகப் பிறந்து, சிவனை யடைந்து சுப்பிரமணியக் கடவுளை உற்பத்தி செய்ததாகக் கந்தபுராணம் சொல்லுகிறதே. இந்த பிரம்மாண்டங்களுக் கெல்லாம் இறைவனான கடவுள் ஹிமய மலையின்மே லுள்ள கைலாசமென்னும் சிகரத்தில் இருக்கி றாரா? அவர் பார்வதி என்ற ஒரு ஸ்திரீயைக் கல்யாணம் செய்து கொண் டிருக்கிறாரா? மனிதர்களுள் ஸ்திரீ புருஷர் சம்போகம் செய்வதுபோலத் தெய்வங்களும் செய்கிறார்களா? மகா விஷ்ணு இலக்ஷக்ஷ்மியை ஹிருதய கமலத்திலும், பிரம்மா சரஸ்வதியை முகத்திலும், சிவன் பார்வதியைத் தமது உடம் பின் பாதிபாகத்திலும் வைத்துக்கொண்டிருப்பதாக புராணங் கள் சொல்லுகின்றனவே! அவைகளின் அர்த்தமே விளங்க வில்லையே. அதுவன்றி, ஸ்மார்த்தர்களாகிய நாம் அம்பிகை, மாரியம்மன், சரஸ்வதி, காமரூபிணி, காமாக்ஷி, குந்தலாம் பாள் என்ற ஸ்திரீ தெய்வங்களைத் தனியாக வைத்து, அவை களையே பிரதானமாக வணங்குகின்றோம். நம்முடைய குரு பீடங்களெல்லாம் காம பீடங்களா யிருக்கின்றன. வைஷ் ணவர்கள் இலக்ஷ்மி, தாயார், பிராட்டி, நாச்சியார். என்ற பெயர்களாலேயே ஸ்திரீ தெய்வத்தைக் குறிக்கிறார்கள்; அந்த தெய்வத்தைத் தனியாகவும் பிரதானமாகவும் பூஜிப்பதில்லை. அந்தப் பெயருடைய குருபீடமும் இல்லை. நாராயண னுக்குள் அடங்கியதாகவே அந்தப் பெண் தெய்வத்தை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் பரனுக்கு பக்தி செலுத்து கிறார்களேயன்றி பரைக்கு பக்தி செலுத்துவதில்லை. இதை யெல்லாம் ஸ்வாமிகள் தயை செய்து விளக்கவேண்டும்” என்று என்னிடம் ஒருவர் கேட்டார் நான் அதற்குச் சொன்ன உத்தரம் அடியில் வருமாறு:
இச்சந்தேகங்கள் நிரம்பவும் முக்கியமானவைகளே. இவைகள் உங்கள் மனதில் மாத்திரம் இப்போது உண் டானதில்லை தெய்வங்களைப்பற்றி சிந்தனைசெய்து பார்க் கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்விதமான சந்தேகங்கள் உதிப்பது சகஜமே. பிற மதஸ்தர்கள்கூட, நாம் ஸ்திரீதெய் வங்களை வைத்துக்கொண் டிருப்பதைக் கண்டு, நம்மை தூஷிப்பதுண்டு. இதைப்பற்றி விஷ்ணு புராணத்தில் எழுதப்பட்டுள்ள சில வாக்கியங்களை நான் முதலில் உங்களுக் குச் சொல்லிவிட்டு, பிறகு மற்ற சந்தேகங்களை விளக்கு கிறேன்
“லோகமாதாவான பிராட்டியானவள் என்றைக்கும் ஸ்ரீவிஷ்ணுபகவானோடு பிரிவற்றவளாய் நித்யையாயிருக்கிறவ ளேயன்றி ஜனனாதிகளுள்ளவளன்று. எம்பெருமான் விபு வாய் எங்கும் நிறைந்து தம் சுபாவத்தை விடாமல் சத்ய ஞான ஆநந்தாதி சகல கல்யாண குணங்களோடும் விளங்குவதுபோல், பிராட்டியும் எங்கும் நிறைந்து சகல கல்யாண குணங்களோடும் விளங்குவாள். இப்படி சகல பூதங்களுக்கும் தாயும் தந்தையுமான அந்த திவ்ய தம்பதிகளுடைய மகா விபூதி வைபவத்தைச் சொல்லு கிறேன் ஒரு பதத்தின் பொருள் பெருமான், பொருளைத் தெரிவிக்கும் பதம் பிராட்டி; அவள் நீதி, அவர் அந்த நீதியின் உபாயமான நயம்; அவள் புத்தி, அவர் அந்த புத்தியால் ஆகும் போதம், தருமமே ஸ்ரீமந்நாராயணன், தருமத் திற்கு சாதகமான சத்கிரியையே அவருடைய ஹிருதயமா கிய தாமரையில் வசிக்கும் இலக்ஷ்மி; சிருஷ்டிக்கிறவன் விஷ்ணு தேவன், அந்த சிருஷ்டியிலடங்கிய சக்தி, ஸ்ரீதேவி; அவள் பூமி, அந்த பூமியைத் தரிப்பவர் அந்த எம்பெருமான்; அந்த பகவான் சந்தோஷம், அந்த சந்தோஷத்தை உண் டாக்கும் சந்துஷ்டியே பிராட்டி; யக்யமே மாதவன், தக்ஷிணை யாவது ஜெகன்மாதா; புரோடாசமானது ஜனார்த்தனன், ஆஜ்யாகுதியானது கமலை; பிராக்வம்சமென்பது மது சூத னன், பத்தினிச்சாலை யென்பது ஸ்ரீதேவி; யூபஸ்தம்பம் என்பது ஸ்ரீஹரி, யாக சயனம் ஸ்ரீ லக்ஷ்மி; எம்பெருமானே தர்ப்பை, பிராட்டியே ஸமித்து; ஸாம வேதமானது பகவான், அதில் சேர்ந்த ஓங்காரமென்பது இலக்ஷ்மி; ஜெகத்பதியான வாஸுதேவன் அக்னி பகவான், இந்திரை யானவள் ஸுவாஹாதேவி ; ஸ்ரீ விஷ்னு ணு பகவானே சங்க ரன்,ஸ்ரீ மகா லக்ஷ்மியே கௌரி தேவி; கேசவனே சூரி யன், அந்தச் சூரியனுடைய பிரபை கமலை; ஸ்ரீ விஷ்ணு தேவன் பிதுர்தேவதா ஸ்வரூபி, ஸ்ரீதேவி ஸ்வதா ஸ்வரூபி; ஜெகன்மாதாவே ஆகாசம், அதி விஸ்தாரமான அதன் பரப் பே விஷ்ணு; அந்த ஸ்ரீயப்பதியே சந்திரன், சந்திரனுடைய காந்தியாகிய நிலவு ஸ்ரீதேவி; ஸர்வகதனான ஸ்ரீ ஹரியே வாயு, மேகாதிகளைத் தரிக்கத்தக்க அந்தக் காற்றின் செய்கை திருமகள்; சமுத்திரம் கோவிந்தன், ஸ்ரீதேவி அந்த சமுத் திரத்தின் அலை முதலான விகுருதி; மதுசூதனனே தேவேந் திரன், இந்திரையே இந்திராணி; சக்கரதரனான பகவானே யமன், கமலாலயையே யமபத்தினியான தூமோரணை ; ஸ்ரீதரனான தேவனே குபேரன், ஸ்ரீதேவியே அந்தக்குபேரனுடைய செல்வம்; கேசவனே வருணன், இலக்ஷ்மியே வருண பத்னியான கௌரி; கோவிந்தனே தேவ சேனாபதி யான ஸ்கந்தன், இந்திரையே தேவசேனை; கதாதரனே பிடிப்பு, அதற்குக் காரணமான சக்தியானது ஸ்ரீதேவி ; நிமிஷ ஸ்வரூபம் நாராயணன்; காஷ்டையின் ஸ்வரூபம் இலக்ஷ்க்ஷ்மி; முகூர்த்தம் ஸ்ரீவாஸுதேவன், அந்த முகூர்த்தத் தின் அவயவமான கலை ஸ்ரீ லோகமாதா; திருவிளக்கு ஸர் வேசுவரன், அதன் காந்தி லோகநாயகி ; ஸ்ரீ மகா விஷ்ணு விருட்சம், ஸ்ரீ தேவி அதன் கொடி; சக்கரதரன் பகல், காந்தை இராத்திரி; வரப்ரதனான விஷ்ணுவே மணமகன், தாமரைக்காட்டில் வாசம் செய்பவளே மணமகள்; நதஸ்வரூபன், ஸ்ரீதேவி நதி ஸ்வரூபை, புண்டரீகாக்ஷன் அரசருடைய கொடி, புண்டரீகத்தில் வாசம் செய்பவளே பகவான் காலடியின் சீலை; நாராயணன் லோபம்; இலக்ஷ்மி ஆசை; கோவிந்தன் இராகம், ஸ்ரீதேவி அதன் காரணமாகிய காதல்; அநேக வாக்யங்களால் விளக்கிக்கொண்டே போவதைவிட அந்த திவ்ய தம்பதிகளின் லீலா விபூதியை சுருக்கத்தில் சொல்லி விடுகிறேன் : தேவதைகளுக்குள்ளும், மனிதர்களுக் குள்ளும்,திரியக்குகளுக்குள்ளும், மற்றுமுண்டாகிய வஸ் துக்களுக்குள்ளும் புல்லிங்கமான பெயருடைய பதார்த்தங்க ளெல்லாம், ஷட்குண ஐசுவரிய ஸம்பன்னனான ஸ்ரீ ஹரியே, ஸ்திரீ லிங்கமான பெயருடைய பதார்த்தங்களெல்லாம் ஸ்ரீ மகா லக்ஷ்மியே; இவ்விருவருக்கும் வேறான வஸ்து ஒன்று மில்லை; எல்லாம் அவர்களால் வியாபிக்கப்பட்டு, அவர்களு டைய லீலா விபூதியாயிருக்கின்றன. எல்லாம் திவ்ய தம் பதிகளுடைய விபூதியாயிருந்தாலும், சில பொருள் எம்பெரு மான் விபூதியாகவும், சில எம்பெருமாட்டி விபூதியாகவும் நித்யத்தினால் என்றறிய வேண்டும். விபூதி என்பது ஸர்வ விதத்திலும் அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட வஸ்து ; காரிய காரணாதி ரூபமாயிருக்கிற இந்த விபூதி அவ்விருவ ருடைய அனுக்கிரக ஆதீனத்தை அடிப்படையாக உடை யது என்பது கருத்து.
என்று விஷ்ணு ணு புராணம் சொல்லுகிறது. ஆதி காலத்தில் ஆண் பெண் தெய்வங்களை ஏற்படுத்திய மக ரிஷிகள் என்ன கருத்தோடு அப்படிச் செய்தார்கள் என்பது இதிலிருந்து நமக்கு ஒருவாறு தெரிகிறது. இன்னும் நாம் வானசாஸ்திரத்தை ஆராய்ந்து பார்த்தால், தெய்வங் களை ஆணாகவும், பெண்ணாகவும் எந்தக் காரணத்தினால் பிரித்திருக்கிறார்கள் என்பது நன்கு விளங்கும். அவை களை நான் இன்னொரு சமயத்தில் விளக்குகிறேன்.
நம்முடைய ய ஹிருதயம் தாமரை மலர்போன்ற வடிவமுடையதாகவும் சிவப்பாகவும் இருக்கிறதென்பது எல் லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த லீலா விபூதியி லடங்கிய சகலமான வஸ்துக்களும் பரமாத்மாவின் ஹிருதயத்தி லிருந்து அவருடைய இச்சா மாத்திமாய்த் தோன்றி எங்கும் எப்போதும் நிரந்தரமாயிருந்து வருகிறதாகையால் மகா லக்ஷ்மி நாராயணனுடைய மார்பிலுள்ள செந்தாமரை மலரில் வசிக்கிறாள் என்று வேதங்கள் சொல்லுகின்றன. இலக்ஷ்மி என்பது ‘இலக் கிழமி’ என்ற சொல்லின் திரிவு. அதா வது, பகவானுடைய இல்லமாகிய அநந்தமான இந்த லீலா விபூதியின் கிழமி அல்லது சொந்தக்காரி என்பது அதன் கருத்து. சைவர்கள் விபூதி பூசுவது இந்த அநந்தமான லீலாவிபூதி அடியோடு எரிந்து சாம்பலாய்ப் போய்விட்ட தாகவும், முடிவில் சிவன் மாத்திரம் தவம் செய்துகொண்டு ஆண்டிபோல் இருப்பதாகவும் குறிக்கிறது. அதையே, நந்தன் சரித்திரமெழுதிய நம் கோபாலகிருஷ்ண பாரதி, “முப்பாழுந்தாண்டி அதற்கப்பாலே சென்றவர்க்கு இப்பார்வை கிடையாது, அப்பால் திருநடனம் ” என்று பாடி இருக் கிறார். சர்வமும் பாழ் அல்லது சூன்யம் என்றும், முடிவில் ஆண்டிபோல் ஒருவர்தனியாய் இருக்கிறார் என்றும் கடவுளைக் கருதுவதே, பாழாண்டி அல்லது பாஷாண்டி மதம் என்று குறிக்கப் படுகிறது. அதன் கருத்து பாழும் ஆண்டியும் மிச்சம் என்பது. இந்த லீலாவிபூதி எப்பொதாவது எரிந்து சாம்பலாய்ப் போனதாக வேதங்கள் சொல்லுகின் றனவா. பிரளய காலத்தில்கூட, எல்லாம் ஜலமயமாய் நிறைந்து போவதாக அல்லவா பிரமாணங்கள் சொல்லு கின்றன. எதையாவது நாம் கொளுத்தி சாம்பலாக்கினா னால், அந்த சாம்பலுக்குள் சகலமான சத்துகளும் அப்படியே மறைந்திருக்கின்றன. அதை எருவாகப் போட்டால், மறுபடி சிருஷ்ட்டிப் பொருள்கள் முன்னிலும் அதிக மும்முரமாய்க் கிளம்புகின்றன. தண்ணீர் நெருப்பினால் ஆவியாக மாறு கிறது; மறுபடி குளர்ச்சியினால் தண்ணீராகத் திரும்பி வந்து சேருகிறது. உலகத்தில் எதுவும் உருமாறுகிறதே யன்றி அழிகிறதே இல்லை யென்பதே மேல்நாட்டு சாஸ்திரக் கொள்கை. அதுவே வைஷ்ணவர்களின் கொள்கை. அப்படி இருக்க, ஒரு நாளும் நெருப்பினால் அழியாத இந்த லீலா விபூதி அழிந்து சாம்பலாய்ப் போவதாய்க் கருதுவது வேதத்தி லுள்ள பரமாத்மாவும், வைஷ்ணவ தெய்வமுமாகிய நாராய ணுடைய அமைப்புக்கு முற்றிலும் விரோதமான கொள்கை ஆகையால், நாராயணனோடும், வைஷ்ணவர்களோடும் சாம் பலை சம்பந்தப் படுத்தினால், அது எவ்வளவு தூரம் பொருந்து மென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
என்று நமது மன்மதபீட மகாயோகீசுவரர் சொல்லிக் கொண்டே வந்த காலத்தில், அவர் இருந்த இடத்தில் ஓர் ஆச்சரிய சம்பவம் நேர்ந்தது. இந்தப் பிரஸங்கத் தொடக் கத்தில் அவர் ஒரு பெரிய பீடத்தின்மேல் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் பேசிக்கொண்டே இருக்க இருக்க, அந்தப் பீடம் பூமிக்குமேல் உயர்ந்து, பூமியில் படாமல் அலாக்காய் நிற்பதுபோலக் காணப்பட்டது. அவர் பேசி முடித்த காலத்தில் அந்தப் பீடம் பூமிக்கு ஒரு முழ உயரத் திற்குமேல் அந்தரத்தில் நிற்பதுபோலக் காணப்பட்டது. அந்தப் பீடம் பூமியில் படவே இல்லை. ஆனால் யோகீசுவார் அதற்கு மேலேயே உட்கார்ந்துகொண்டிருந்தார்.
எதிரில் உட்கார்ந்திருந்த ஜனங்கள் எல்லோரும் அதையே கவனித்து, பிரமைகொண்டு பேச்சு மூச்சற்று ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தன ராதலால், அவர்களுடைய கவனம் யோகீசுவரருடைய உபந்நியாசத்தில் சிறிதும் செல் லவே இல்லை. ஸ்வாமிகள் வாயுஸ்தம்பனம் செய்து பிரம் மாண்டமான பீடத்தோடு மேலே உயர்ந்து நின்ற தெய்விகக் காட்சியும், பிரத்தியக்ஷ தேவிகளின் காட்சியும் ஒன்று கூடி, அங்கிருந்த பக்த கோடிகளின் ஐம்புலன்களையும் அறிவையும் மயக்கி, அடியோடு கொள்ளைகொண்டுவிட்டன வாதலால், எல்லோரும் கற்சிலைகள்போல வியப்பே வடிவாய் உட்கார்ந்திருந்தனர்.
– தொடரும்…
– ஸதாநந்த போதக சாமியார் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1933, எம்.எஸ்.ராமுலு கம்பெனி, மதராஸ்.
![]() |
வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன.…மேலும் படிக்க... |