கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2025
பார்வையிட்டோர்: 861 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு தெருக்களுக்கு அப்பால் சீன ‘வாயாங்’ கூத்து நடந்து கொண்டிருந்தது. பாட்டுக்கு இடையிடையே வெண்கலப் பாத்திரத்தைத் தட்டுகிற மாதிரி ஒலி லயம் கேட்டது. ராமசாமிக்கு நேற்றே தெரியும். வாயாங் நடத்தப் போவதாக அவருடைய சீன நண்பர்கள் கூறினார்கள். அந்தக் கம்பத்தில் சீனர்கள் அதிசும். ஆனாலும் அவருக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்ததில்லை. இப்பொழுதெல்லாம் ராமசாமி அதிகமாக எதிலும் கலந்து கொள்வதில்லை.

வாசலில் சாய்வு நாற்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த ராமசாமி, சாலையைப் பார்த்தார். எண்ணெய்ச் சட்டியில் கரண்டி தட்டப்படும் ஒலி கேட்டது. இப்ராகீம் “மீகோரிங்” வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார். அந்தச் சத்தம் கேட்டால் இரவு பத்து மணி என்பது அவருக்குத் தெரியும்.

‘மீகோரிங் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் “போடு இப்ராகீம்” என்று ஒரு சத்தம் கொடுப்பார். இன்றைக்கு அவருக்கு அது தேவைப்படவில்லை. இப்ராகீம் இரண்டு நிமிடம் சாலை ஓரமாக நின்று பார்த்தார். ராமசாமி குரல் கொடுக்கவில்லை. தள்ளு வண்டி நகர்ந்தது.

ராமசாமி ‘போத்தா’ தலையைத் தடவிக் கொண்டார். தலையில் வழுக்கை விழுந்து பல வருஷங்களாகி விட்டன. அறுபதை எட்டிக் கொண்டிருந்தார். வெள்ளைக் காரர்களின் நேவல் பேஸில் வேலை பார்த்த அவர். ரிடயர் ஆகி நாலு வருஷமாகி விட்டது கிராஜுட்டியும் மற்ற சலுகைகளும் அவருக்குக் கிடைத்தன.

இன்னும் சில வருஷங்களைப் போக்கி விட்டு நிரந்தரமாக உலகிலிருந்து ‘ரிடயர்’ ஆக வேண்டியதுதான் பாக்கி என்று ராமசாமி நினைத்துக் கொண்டிருந்தார். இது வாழ்க்கையின் கடைசிப்பருவம். சாதிக்க வேண்டிய ஒரு காரியம் மட்டும் பாக்கியிருக்கிறது என்று மனம் உறுத்திக் கொண்டிருந்தது. மனசில் தேக்கி வைத்திருக்கும் ஓர் ஆசை நிறைவேற வேண்டும் என்ற துடிப்பு!

இரவு பத்து மணி. அந்தியில் மனத்தில் நிறைந்திருந்த வர்ண ஜாலங்களெல்லாம் சிதறிக் கொண்டிருப்பது போன்ற மூட்டம். விளங்காத பதற்றம், சிட்டுச் சிறகாய் படபடப்பு.

கமலா இன்னும் திரும்பவில்லை. ஆறு மணிக்கு அவள் புறப்பட்டபோது ராமசாமி சொன்னார்.

“கமலாம்மா, சீக்கிரமாகவே திரும்பிடு. நேரத்தைப் போக்கிட்டா ராத்திரிலே பஸ் கெடைக்காது. எதுக்கும் லிம் கிட்டே சொல்லி வச்சிருக்கேன். பஸ் கெடைக்கலேன்னா லிம்மோட டாக்சியிலே வந்திடும்மா..”

“சரிப்பா.. எக்ஸிபிஷன் பார்த்திட்டு ஒம்பது மணிக்குள்ளார வந்துடுவேன்” என்று சொல்லி விட்டுத்தான் கமலா போனாள்

மகளை அவர் தனியாக செம்பவாங்கி டவுனுக்கு அனுப்புவதில்லை. அக்கம் பக்கத்தில் யாராவது பெண்களோ, உறவினர்களோ போனால் அனுப்பி வைப்பார். இந்தியக் கண்காட்சி ஒன்று ஒரு வாரமாக நடந்து கொண்டிருந்தது. போய் வர வேண்டும் என்று ஒரேயடியாகக் கமலாவுக்கு ஆசை. அவருக்கென்னமோ சினிமா, எக்ஸிபிஷன் என்று எங்கும் போகப் பிடிக்காத ஒரு மனநிலை. எல்லாம் சில வருஷமாகத்தான்!

“சாமி, நேரம் ஆகிறது. படுக்கச் செல்லுங்கள். உடம்பு ஒத்துக் கொள்ளாது’ மலாய் மொழியில் இதைச் சொல்லிவிட்டு செங் நகர்ந்தார். பதினைந்து வருஷத்திற்கு முன்பு அவருடைய மனைவி பாக்கியம் காலமானதிலிருந்து ஆதரவாகப் பேசுவதற்கு ஆள் கிடையாது. இப்பொழுது கடைசி மகள் கமலாவும், அறுத்துப் போன வயதான அவருடைய தமக்கையும் தான் இருந்தார்கள்.

தெருவில் பனி இறங்கிக் கொண்டிருந்தது. சிகரெட் புகை மூட்டமாக எழுத்து சுருள் பரப்பியது. மனத்திலும் ஒரு புகைச் சுருள். சுசீலா அங்கே தோன்றினாள்.

இயற்கையாக அழகு, கண்ணில் எப்பொழுதும் காந்தம். வேளைக் கொன்றாக ஒப்பனை. இரண்டாவது மகள் அவள். ராமசாமி சொல்வார்.-

“சுசீம்மா, நீ மினி ஸ்காட்டும். ஜீன்ஸும் போட்டுக்கறது எனக்குப் பிடிக்கலேம்மா. அடக்கமா ஒரு புடவையை உடுத்திக்கிறதிலே இருக்கிற அழகு இதிலே ஏதும்மா?”

“நீங்க சொல்றது வேடிக்கையா இருக்குப்பா. நம்ம கம்பத்திலே பாருங்க, வயசுப் பொண்ணுங்க யாராச்சும் சேலை கட்டிக்கிறாங்களா?”

“ஓ! நீ கணக்குப் பாக்கச் சொல்றியா? அது தப்பும்மா நீ சேலை கட்டறதைப் பார்த்தா நாலு பெண்ணுங்க உன்னை பின்பற்றுவாங்க.”

அவர் எவ்வளவோ சொன்னார். கண்டிப்புக்கு ஒரு நாள் கை மேல் பலன் கிடைத்து விட்டது. மூத்தவளைப் போலவே அவளும் ஒருவனைத் தேடிக் கொண்டு போய் விட்டாள். இரண்டாவது அதிர்ச்சி இது. இரண்டாவது கிளையும் முறிந்து போன துடிப்பு ஓய்வதற்கு அவருக்கு அதிக நாள் பிடித்தது

கமலாவுக்கு இருபது வயது பள்ளிப் படிப்புக்கு மேல் அவளை அவர் அனுப்பவில்லை இனியும் ஒரு பாடம் எதற்கு என்ற வைராக்கியம், வெறி, வேகம்.

“அப்பா, மாதர் சங்கத்திலே தையல் வகுப்பு நடத்தறாங்க. ராத்திரியிலே சொல்லித் தர்றாங்க.. நானும் சேர்ந்துக்கலாம்னு ஆசை” ஒரு முறை கமலா கேட்டாள்.

“வேணாம்மா…அதுக்கெல்லாம் வசதிப்படாது” அவர் கத்தரித்து விட்டார், ஆரம்பத்திலேயே.

“அப்பா, சுந்தரம் அண்ணன் நம்ம கம்பத்திலே சில பேருக்கு டியுஷன் சொல்லித் தருது. இன்னும் கொஞ்சம் படிச்சிக்கிடவா?”

யோசித்துப் பார்த்துவிட்டு, “அதை வேணும்னா செய்யும்மா” என்று பச்சை விளக்குப் போட்டார் ராமசாமி.

பக்கத்துத் தெருவில் சுந்தரம் சாயந்திர நேரத்தில் சிலருக்குப் பாடம் சொல்லித் கொடுத்துக் கொண்டிருந்தான். கமலாவும் போய் வந்தாள். அவன் எதுகை மோனை சொல்லிக் கொடுத்து. சிலர் பாட்டு எழுதத் தொடங்கி, உள்ளூர் தமிழ்ப் பத்திரிகையின் வார மலரில் அவை தலை காட்டிக் கொண்டிருந்தன. கமலாவுக்கும் கவிதை ஆசை வந்து விட்டது. சுந்தரம் அண்ணன்’ தான் இதற்குக் காரணம். இதில் அவளுக்குப் பெருமைதான். எக்ஸிபிஷனுக்கு அவன்தான் அவளை அழைத்துப் போயிருந்தான்,

வானத்தை வெறித்துப் பார்த்தார் ராமசாமி. இருட்படலம் திரண்டிருந்தது அவர் மனத்தைப் போலவே!.. பனிக்காற்று சிலு சிலுத்தது.

மாலையில் கமலாவும் சுந்தரமும் புறப்பட்டுப் போன காட்சியை நினைத்துக் கொண்டார். பொருத்தம் இருக்கவே செய்தது. புடவை உடுத்தினால் அவள் அழகெல்லாம் என்ன மாதிரிப் பூரித்து விடுகிறது! விழியோடு விழி மேவ இருவரும் பேசிக் கொண்டே, காரில் ஏறிப் போன நளினத்தை ஒரு முறைக்கு நாலு முறை அவர் நினைவில் கொண்டு வந்து நிறுத்திப் பார்த்தார் அவர் அவசர முடிவுக்கு வரக்கூடியவர் அல்ல ஆனால், நேரமும் காலமும். புஷ்பாவும் சுசீலாவும் போன பாதை, அடுக்கடுக்காக ஏற்பட்ட அதிர்ச்சி அலைகள், வசமிழந்து மனம் அரற்றிய அவலங்கள்- இன்னுமா வேண்டும்?

நாலு வருஷமாக கமலாவுக்கு அவர் வேலி அந்தப் பருவமும் அழகும் அவருக்குச் சுமை. அவளுக்கு ஒரு வழி ஏற்படும்வரை அந்தப்பாரம் அவருக்குத் தான். இதே எண்ண நெளிவு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்.

பீர் கிளாஸ் காலியாகி விட்டது. சீ வாயாங் முடிந்து விட்டது மணி பதினொன்றரை இருக்கும். மனத்தின் ஒரு பனிப்புயல். வெளியே சீதக்காற்று உடலில் நடுக்கம். கமலா திரும்பவில்லை. எழுந்து உள்ளே போனவர்.படுக்கையில் விழுந்தார். இமைகள் மூடுவதாக இல்லை.

விடிந்ததிலிருந்தே ராமசாமியின் முசுத்தில் வெளிச்சம் இல்லை. விரக்தி மூட்டம். எதையோ இழந்துவிட்டது போன்ற தவிப்பு. காலையில் எழுந்ததும் கம்பி வேலிப் பக்கம் நடப்பார். ஆர்க்கிட் மலர்ச் செடிகளை அங்கே வளர்த்திருந்தார். எழுந்தவர் ஜன்னலில் இருந்தே எட்டிப் பார்த்தார். காலைப் பனிக் குளிப்பில் அவை முறுக்குடன் இருந்தாலும் ஏதோ களங்கம் பிடித்திருப்பது போல உணர்ந்தார். நெஞ்சில் இருப்பது தானே நினைவாக முட்டிக் கொண்டு வரும்!

அவருக்குச் சோர்வாக இருந்தது. இரவுதான் தூக்கம் இல்லையே! நேற்றிரவு நேரம் இன்னதென்று தெரியாது, அப்பொழுதுதான் கமலா வந்தாள் அந்த நள்ளிரவில் கதவைத் தாழிட்டுவிட்டு அவள் பின் கட்டுக்குப் போனது ராம சாமிக்குத் தெரியும். அவர் அப்பொழுது எழுந்து உட்காரவோ, மகளிடம் இரண்டு வார்த்தை பேசவோ தயாராக இல்லை. மனசுதான் கண்ணை இழந்துவிட்டதே! கமலா குளியலறைக்குப் போனது, தண்ணீரைத் திறந்து விட்டது, உடை மாற்றிக் கொண்டது எல்லாவற்றையுமே படுக்கையில் கிடந்தபடி, கண்ணைத் திறந்து பார்க்காமலேயே அவர் உணர்ந்து கொண்டார்.

கண்டும் காணாத மாதிரி காலையில், கமலாவின் அறைவப் பக்கம் எட்டிப் பார்த்தார். அவள் ஆறரை மணிக்கு, அத்தையுடன் அடுப்படியில் நிற்பது பழக்கம். அந்த நேரம் கடந்தும் கமலா படுக்கையில் முடங்கியிருந்தாள்.

“அப்பா, பசியாறாமெ உக்காந்திருக்கீங்களே?” எட்டு மணிக்குக் கமலா கேட்டாள்.

ரொட்டித் துண்டுகளும் தேநீரும் மேசை மேல் இருந்தன. அவர் ஒன்றும் பேசாமல் ‘பசியாறத் திரும்பினார் எல்லாமே அனிச்சையாக நடந்தன. மத்தியானம் சாப்பிடும்போதும் அப்படித்தான்! ‘கட்டும் வேலியும் சிதைந்து விட்டன. இனி நான் செல்லாக் காசு — கமலாவும் என்னைக் கை விட்டு..” அவர் குமுறினார்.

அவர் ஓரிரு முறை, அவள் பார்க்காத போது கமலாவை ஏறிட்டுப் பார்க்கவும் செய்தார். முகத்தில் புரியாத சுவடுகள், தெளிவும் துலக்கமும் இல்லை போல் அவருக்குப் பட்டது மேற்கொண்டு அவருக்கு ஆதாரமோ, பிடிப்போ தேவைப்படவில்லை.

வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது இந்தச் சத்தம் கேட்டால் பிற்பகல் மூன்று மணி நியூஸ் பேப்பர் வெண்டர் கோபாலன் வாசலில் காலை ஊன்றியபடி தமிழ்ப் பத்திரிகையின் மாலைப் பதிப்பைப் போட்டான். ராமசாமி உள்ளே ஓய்ந்திருந்தார். கமலா முதலில் ஒரு ‘கிளான்ஸ்’ பார்த்து விட்டு அவரிடம் கொடுப்பாள்.

உள்ளே வந்த கமலா பத்திரிகையை நீட்டவோ, வாய் திறக்கவோ திராணி இல்லாமல் திணறிக் கொண்டு நிற்பதை அவர் ஜாடையாகப் பார்த்தார். அவள் முகம் இருள் கவிழ்ந்து போயிருந்தது. முத்து முத்தாக வேர்த்து விட்டிருந்தது.

“அப்பா”

நிமிர்ந்து பார்த்தார்.

“அப்பா, நான் ஒரு தப்பு செஞ்சிட்டேன்!” என்றபோது கண்ணீர் கன்னத்தில் உருண்டது.

‘இது எனக்குத் தெரியாதா? இதற்கு மேலுமா சித்தரவதை செய்யப் போகிறாய்?’ என்று அவர் மனசுதான் முணு முணுத்துக் கொண்டது. அவர் பேசவில்லை.

“அப்பா, என்னை மன்னிப்பீங்களா?”

ராமசாமி பேச விரும்பா விட்டாலும் கண்கள் தாரை பொழிந்தன. கமலாவின் கண்ணீர் அவர் நெஞ்சைச் சுட்டது.

“இந்தப் பேப்பர்லே போட்டிருக்காங்க, அப்பா.”

அவள் காட்டிய பகுதியைப் பார்த்தார் ஒருகணம் நடுங்கினார்.

“நிஜந்தாம்பா. அவர் என்னை என்னை.”

“..ம்.. சொல்லு, நடந்ததைச் சொல்லு!”

“எக்ஸிபிஷன் பார்த்தப்புறம் வீட்டுக்குப் போகலாம்னு காடியிலே ஏறச் சொன்னார் எங்கேயோ காடியை விட்டார். எங்கே போறீங்கன்னு கேட்டேன். சாப்பிட்டப்புறம் கொண்டு போய் விடறதாச் சொல்லி ஒரு பிளாட்டுக்கு அழைச்சிட்டுப் போனார். அங்கேதாம்பா அவர்.”

கமலா விம்மினாள்.

“மிருகத்தனமா நடந்துக்கப் பார்த்தப்போ நான். மேசை மேலே இருந்த சுத்தியை எடுத்து ஆவேசத்திலே நல்லாக் குத்திட்டேம்பா… குத்திட்டேன். பயத்திலே ஓடியாந்து ஒரு டாக்சியைப் பிடிச்சிகிட்டு வந்திட்டேன்.”

ராமசாமியின் கன்னத்தில் உவர்க்கோடு பதிந்தது. கண்ணீர் உருண்டது.

அந்தச் செய்தியை அவர் மீண்டும் பார்த்தார். ‘இளைஞருக்குக் கத்திக் குத்து’ என்ற தலைப்பு இருந்தது. ‘இளைஞர் சுந்தரத்தை யாரோ குத்திவிட்டு ஓடிவிட்டார்கள், குத்தியவர் யாரென்று அவருக்குத் தெரியவில்லை. ஆபத்து இல்லை. போலீசார் புலன் விசாரணை நடத்துகிறார்கள்.”

“அப்பா எனக்கு ஒரே பயமாக இருக்கு. நான் செஞ்சது தப்பா?”

சில நிமிஷ மௌனத்திற்குப் பிறகு ராமசாமி சொன்னார்.

”கமலாம்மா, நீ செஞ்சது சரிதாம்மா.. தப்பு இல்லை!”

– அந்த நாள்…(சிங்கப்பூர் சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

jmsali ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *