வேலன்-அரக்கர் மறலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 20, 2025
பார்வையிட்டோர்: 4,393 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஐயோ, எங்கள் ஆட்டுக் கிடைகளை அடித்துக் கொண்டு போய்விட்டானே ! எங்கள் வயிற்றில் மண் விழுந்ததே!” என்று, காட்டிற்கு ஆடு மேய்க்கச் சென்ற இடையர்கள் திரும்பிவந்து அலறுவார்கள். “எங்கள் உழவுமாடுகள் போயினவே! எங்கள் குடும்பம் இனிப் பிழைப்ப தெப்படி!” என்று, குடி யானவர்கள் கூக்குரலிடுவார்கள். “தப்பித் தவறிக் காட்டின் பக்கம் விறகொடிக்கச் செல்வதுகூடக் கெடுதலாகிவிட்டதே! இந்தக் கொடிய படுபாவி கழுதையுதடனை அடக்குவார் ஒருவருமிலரோ? கடவுளுக்குக்கூடக் கண்ணில்லையா?” என்று, பெண் மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறுவார்கள். 

கழுதையுதடன் ஒரு கொடிய அரக்கன்; பதினா றடி உயரம் வளர்ந்தவன்; மலைபோலத் திரண்ட தோள்களையுடையவன்; மிகவும் அருவருக்கத் தக்க உருவினன்; அவன் கீழுதடு அளவுக்குமீறித் தடித்து, மடிந்து தொங்கும்; அதனாலேயே அவனை மக்கள் கழுதையுதடன் என்று கூறிவந்தார்கள். 

அவன் இழைத்துவந்த அளவற்ற தீங்குகளைப் பொறுக்க முடியாமல், ஊர்மக்கள் மிகவும் வருந் தினர்; இன்னுஞ் சிறிது காலத்தில் உண்ண உண வின்றி எல்லோரும் மடிய வேண்டியதுதான் என்ற முடிவிற்கு வந்தனர். 

அவ்வூரில் வேலன் என்ற சிறுவனொருவன் இருந் தான். அவன் பதினெட்டு வயதுக் காளை; நல்ல உடற்கட்டுடையவன்; அஞ்சா நெஞ்சு படைத்தவன்; அறிவிற்சிறந்தவன்; பொதுநலத்திற்கு உழைப்பதே தன் கொள்கையாகக் கொண்டவன். அவன், ஒரு நாள், “இனியும் பொறுத்திருத்தல் தகாது; எப்படி யாவது ஈவிரக்கமற்ற இந்த அரக்கக் கழுதையைக் கொன்று ஒழிக்கவேண்டும்,” என்ற முடிவிற்கு வந்தான். அன்றிரவே தன் கைவாளையும், ஒரு மண் வெட்டியையும் எடுத்துக்கொண்டு அவன் அரக்கன் இருப்பிடத்தை நாடிச் சென்றான். 

அரக்கனின் கோட்டை வாயிலை நள்ளிரவில் வந் தடைந்தான் வேலன் ; ஓசை செய்யாமல் வாயிற்புறத் தில் பர பர என்று பெரியதொரு பள்ளத்தைத் தோண்டினான்; தோண்டி முடித்தவுடன், வாயிற் கதவில் தொங்கிக் கொண்டிருந்த ஊதுகொம்பை எடுத்தான்: “பூம், பூம், பூம்” என்று உரக்க ஊ தினான்; ஊதினவன் சட்டென்று ஒருபுறமாக ஒதுங்கி, இரு ளில் மறைந்து கொண்டான். 

புலி உறுமுவது போல் கோட்டையின் உள் ளிருந்து ஓசை யொன்று கேட்டது; பின், தடதட என்ற காலடியோசை! படாரென்று கோட்டை வாயிற்கதவு திறந்தது. கோப மிகுந்தவனாய், “யாரடா அவன்?” என்று அதட்டிக் கேட்டுக் கொண்டே கழுதையுதடன் வேகமாக வெளியே வந்தான்; வந்தவன் தட்டெனப் பள்ளத்தினுள் குப்புற வீழ்ந்தான். உடனே, வேலன், மறைந்திருந்த இடத்திலிருந்து மின்னலைப் போலப் பாய்ந்தான்; தன் கை வாளினால் ஒரே வெட்டாக அரக்கனை வெட்டி வீழ்த்தினான். 

பொழுது விடிந்ததும், கழுதையுதடன் இறந்த செய்தி ஊர்மக்கட்குத் தெரிந்தது. எல்லாரும் வேலனைப் புகழ்ந்து கொண்டாடினார்கள்; தங்களைப் பிடித்திருந்த சனியன் தொலைந்ததென்று களிப் படைந்தார்கள். 

நாட்கள் சில கழிந்தன. அயலூரொன்றில் எருமைக் கழுத்தன் என்ற ஓர் அரக்கன் மக்களுக்குப் பெருந் தீங்கு இழைத்து வருவதாக வேலனுக்குச் செய்தி எட்டியது. உடனே, தன் கைவாளை ஏந்திப் புறப்பட்டான் வேலன்; காடு மலைகளைக் கடந்து நெடுந்தொலை சென்றான். களைப்பு மேலிட்டது. ஒரு மரத்தடியில் படுத்து அவன் அயர்ந்து தூங்கி விட்டான். 

இந்த நேரத்தில், எருமைக் கழுத்தன் எங்கி ருந்தோ அங்கு வந்து சேர்ந்தான்; தூங்கிக்கிடந்த வேலனைக் கண்டான்; மகிழ்ச்சி கொண்டான்; கீழே குனிந்து ஒரு கையால் வேலனை அள்ளிப் பற்றி மேலே தூக்கினான்; கடகட என்று சிரித்தான்; “நாளைக் காலை உணவுக்கு இவன் போதும்,” என்று வாய் விட்டுக் கூறினான்; மீண்டும் அடங்கா மகிழ்வுடன் சிரித்தான். 

இதற்குள் விழித்துக்கொண்ட வேலன், தன் நிலைமையை ஒருவாறு உணர்ந்து கொண்டான்; “கழுதை யுதடனைவிட வலிமை மிகுந்த இவன் எருமைக் கழுத்தனாகத்தான் இருக்கவேண்டும்; எதிர் பாராத வகையில் இவனிடம் சிக்கிக்கொண்டு விட்டோம்; ஏதாவது சூழ்ச்சி செய்து தப்ப வழி தேட வேண்டும்,” என்று முடிவு கட்டினவனாய் அசைவற் றிருந்தான். 

வேலனைப் பந்துபோல் தூக்கிக்கொண்டு அரக் கன் தன் கோட்டைக்கு வந்து சேர்ந்தான்; பெரிய தொரு கயிறுகொண்டு வேலனுடைய கைகால்களை இறுகக் கட்டினான்; ஓர் அறையிற்போட்டு அவனைப் என்று சிரித்துக் பூட்டினான்; மீண்டும் கடகட கொண்டே வெளியே சென்றான். 

தனியே விடப்பட்ட வேலன் இப்படியும் அப் படியும் புரண்டு எப்படியோ கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டான்; தானிருந்த அறையைக் கூர்ந்து எங்கும் கவனித்தான். உயரத்தில் கம்பியில்லாத சாளரம் ஒன்று தென்பட்டது. உவகை மேலிட்டவனாய்க் கயிற்றைக் கையிலெடுத்துக்கொண்டு சாளரத்தின் மீது தாவி ஏறி உட்கார்ந்து, வெளியே நோக்கினான். நோக்கினவனுக்குத் தூக்கி வாரிப்போட்ட எருமைக்கழுத்தன் கொடிய விலங்கு போன்ற அரக்கன் மற்றொருவனை அழைத்துக்கொண்டு கோட்டையை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஒரு நொடிநேரம் வேலன் திகைத்தான்; பின் தெளிவுற்றான்; தன் கையிலிருந்த கயிற்றின் ஒரு முனையில் பெரிய சுருக்கு முடி யொன்று போட்டான்; அந்த முடியைக் கையிற் பற்றிக்கொண்டு அரக்கர்கள் வரவை எதிர்நோக்கி யிருந்தான். 

நடக்கப்போவது இன்னதென்று அறியாதவர்க ளாய் அரக்கர்கள் இருவரும் உரக்கச் சிரித்துக் கொண்டே சாளரத்தின் ஓரமாக வந்தார்கள். பெரிய பாம்பு வந்து விழுவதுபோல், சுருக்குமுடி அவர்கள் இருவர் கழுத்தையும் சுற்றி விழுந்தது. வேலன், மேலிருந்து கயிற்றைச் சுண்டி யிழுத்தான். சுருக்கு முடி இறுகிற்று. அரக்கரிருவரின் கண்களும் பிதுங் கின; நாக்குகள் வெளியே வந்தன. உயிரற்றவர்க ளாய் இருவரும் உருண்டு விழுந்தனர். 

வேலன் கீழே இறங்கிவந்து பார்த்தான்; இருவ ரும் இறந்து கிடக்கக் கண்டான்; அடங்கா மகிழ்ச்சி கொண்டான். மீண்டும், அவன் கோட்டைக்குட் சென்று, எங்கும் சுற்றிப் பார்த்துவந்தான். ஒரு கிடங்கில் யாரோ சிலர் அழும் குரல் கேட்டது. கதவைத் திறந்தான்; மூன்று அரசிளங் குமரிகள் சிறையிடப்பட்டு இருந்தனர். 

“ஐயா, நீர் யார்? எங்கே அக் கொடும்பாவி உள்ளே அரக்கன் ? உங்களை எப்படி உயிரோடு விட்டான்?” என்று அவர்கள் வேலனைத் திகைப் புடன் வினவினர். 

நடந்த செய்தியை வேலன் அவர்களுக்கு எடுத் துரைத்தான்; “இனி நீங்கள் அஞ்சவேண்டுவதில்லை. இக் கோட்டையும் இதிலுள்ள பொருள்கள் யாவும் உங்களுடையனவே. எக் கவலையு மில்லாமற் களிப் புடன் வாழ்ந்திருங்கள்!” என்று கூறினான். 

“தாங்கள்?” என்று கேட்டனர் அப் பெண்கள். “எருமைக் கழுத்தனைப்போன்ற கொடிய அரக் கர்கள் இன்னும் சிலர் இருக்கிறார்களென அறிகிறேன். அவர்களையுங் கொன்று அரக்கர் குலத்தையே வேர றுக்க முடிவுகட்டி யிருக்கிறேன். ஆகையால், நான் இங்கே தங்கமுடியாது,” என்று வேலன் கூறி மறு நாளே புறப்பட்டான். 

வேலன் பல நாட்கள் வழிநடந்தான்; பல ஊர்களைக் கடந்து சென்றான்; இறுதியில் ஒரு தலைநகரை அடைந்தான். அவ்வூர் மக்கள் அழுத கண்ணும், சிந்திய மூக்குமாய்க் காணப்பட்டார்கள். “ஐயா, ஏன் இவ்வூரில் எல்லாரும் கவலை யுடையவர் களாகக் காணப்படுகிறார்கள்?” என்று வேலன் பெரியவர் ஒருவரைக் கேட்டான். 

“ஏனா? எல்லாம் அந்தக் கரடித் தலையன் படுத்தும் பாடுதான். இரவில் கண்ணை மூடக்கூட அச்சமாக இருக்கிறது,” என்றார் பெரியவர். 

“கரடித் தலையனா?” 

“ஆம், அவன் தான் ! அதோ அந்த மலைக்கோட் டையில் இருக்கும் கல்நெஞ்சக் கொடியன். கழுதை யுதட டனையும், எருமைக் கழுத்தனையும் ஒரு பங்கிற் சேர்த்துக் கொள்ளலாம். இவன், கொடுமையே உருவாக வந்துள்ளவன். இவ்வூர் அரசனுடைய ரே மகளையுந் தூக்கிச் சென்றுவிட்டான். அவளை மீட்டுத் தருபவர்க்கு அவளையே. மணமுடித்துக் கொடுப்பதாக அரசன் பறையறைந்துள்ளான். எந்தப் புண்ணியவானும் இதுகாறும் முன் வர வில்லை!” 

பெரியவர் சொற்களைக் கேட்ட வேலன் நொடிப் பொழுதுகூடத் தாமதிக்கக் கருதவில்லை; மாலைப் பொழுதாய் விட்டது என்பதைக்கூடப் பொருட் படுத்தவில்லை. தன் கைவாளை எடுத்துக்கொண்டு உடனே அவன் மலைக்கோட்டையை நோக்கிப் புறப் பட்டான்; விரைவில் கோட்டையை அடைந்து கதவைத் தட்டினான். 

பொழுது சாய்ந்தபின் தன் கோட்டைக் கதவை வந்து தட்டக்கூடியவன் யாரென்று எண்ணின வனாய்க் கரடித் தலையன் கதவைத் திறந்தான்; வேல னைக் கண்டான்: “அரக்கர் மறலியாகிய வேலனாகத்தான் இருக்கவேண்டும்,” என்று ஊகித்துக்கொண்டான். 

“ஆ, வரவேண்டும், வரவேண்டும்!” என்று நல்வரவு கூறி அவன் வேலனை உள்ளே அழைத்துச் சென்றான். “இவன் கழுதையுதடனையும், எருமைக் கழுத்தனையும் கொன்றவனாயிற்றே! தன்னையும் கொல்ல என்ன ஏற்பாடு செய்து வந்திருக்கிறானோ தெரியவில்லையே,” என்று அவன் சற்றுக் கவலை கொண்டான்; பின், ஒருவாறு தேறினவனாய், “நெடு வழி நடந்து மலையேறி வந்த உனக்குக் களைப்பு மிகுதியாயிருக்கும், ஆகையால், உடனே நீ சிறிது பசியாறி நன்றாகப் படுத்துறங்கு! காலையில் பேசிக் கொள்ளலாம்,” என்று வேலனை நோக்கிக் கூறினான். வேலனும் தடைசொல்லாமல் இணங்கினான். 

சிறிது உணவருந்தியபின், வேலனை அரக்கன் மேன்மாடிக்கு அழைத்து வந்தான். ஓரறையிலிருந்த படுக்கை யொன்றைக் காட்டி அதிற் படுக்கச் சொல்லி விட்டு, அவன் கீழே சென்றான். 

வேலனா ஏமாறுபவன்! படுக்கையை விட்டெழுந் தான்; கீழே கிடந்த ஒரு மரக்கட்டையைத் தூக்கிப் படுக்கையின்மேற் கிடத்தினான்; அதன்மேல் தன் போர்வையைப் போர்த்தினான். பக்கத்துச் சுவரிற் காணப்பட்ட பெரிய அலமாரியிற் புகுந்து அவன் ஒளிந்துகொண்டான். 

நாலைந்து நாழிகைப் பொழுது கழிந்தது. அரக் கன் மேலேறி வரும் ஓசை கேட்டது. அறைக்கதவு மெல்லத் திறந்தது. அரக்கன் ஓசை காட்டாமல் உள்ளே வந்தான்; தன் கையிலிருந்த பெரிய முண்டுக் கட்டையால் படுக்கையின் மீது ஓங்கி இரண்டு மூன்று முறை தாக்கினான். பின், அவன் மெள்ளச் சிரித்துக் கொண்டே திரும்பிக் கீழே இறங்கிச் சென்றான். 

கோழி கூவிற்று. மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த வேலனைக் கண்ட கரடித்தலையனுக்கு மூச்சுத் திணறி விட்டதென்றே சொல்லலாம், “வ…ர.. வேண்…டும்” என்று வாய் குழறிக் கூறிவிட்டு, “நன்றாகத் தூங்கி…னா…யா?” என்றுமெலிந்தகுரலிற் கேட்டான். 

“ஏன்? தூக்கத்திற்கென்ன குறை? அயர்ந்து தூங்கினேன்; ஆனால் ஈயோ, கொசுவோ என்மீது உட்கார்ந்து, ஒருமுறை என் தூக்கத்தைச் சற்றுக் கலைத்தது போலிருந்தது,” என்று வேலன் விடை யளித்தான். 

“முண்டுக் கட்டையின் அடி, உட்கார்ந்தது போலிருந்தது என்று கூறுகிறானே”, என்று அரக்கன் சற்று உள்நடுங்கினான். பிறகு, தன் கையி லிருந்த முழு ரொட்டி ஒன்றை வேலன் கையிற் கொடுத்து, “இதைத் தின்றுகொண்டிரு! இதோ வருகிறேன்,” என்று சொல்லி உள்ளே சென்றான். 

வேலன் ரொட்டியை எடுத்துத் தன் உட்சட் டைக்குள் ஒளித்து வைத்துவிட்டு, வெறும் வாயை மென்று கொண்டிருந்தான். உள்ளே சென்ற அரக் கன் பெரியதொரு ரொட்டியுடன் திரும்பி வந்தான். 

வந்த அந்த அரக்கன் வேலனைப் பார்த்து, “ஆ, ரொட்டி முழுதையும் அதற்குள் விழுங்கிவிட்டாயா? என்ன பசியப்பா உன் பசி!” என்று வியந்து கேட்டான். “ஆம், அதை அப்பொழுதே ஒரே வாயாக விழுங்கிவிட்டேன். நீ நம்பாவிட்டால், அதை இப்பொழுது அப்படியே வெளியே எடுத்துக் காட்டு கிறேன் பார்!” என்று கூறினான் வேலன். 

பிறகு, அவன் தன் கைவாளை எடுத்துத் தன் விலாப்புறத்திற் குத்திக்கொண்டான்; அவ்வளவில், உள்ளே இருந்த ரொட்டி வெளியே உருண்டுவந்து விழுந்தது. அரக்கன் அப்படியே அதிர்ச்சி யடைந்து விட்டான். 

முதலில் அரக்கனுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. பின், “இந்தச் சிறுவனுக்கு நாம் பின் வாங்குவதா?” என்ற எண்ணம் எழுந்தது. “இதோ நானும் அதே மாதிரி செய்து காட்டுகிறேன் பார் !” என்று அவன் தன் கையிலிருந்த ரொட்டியை வாயிற் போட்டு ஒரே விழுங்காக விழுங்கினான்; வேலன் கையிலிருந்த வாளைக் கரடித்தலைவன் வாங்கி, விசை யுடன் தன் விலாப்புறத்திற் குத்திக்கொண்டான்; உடனே வெட்டின மரம்போல், உயிரற்றுக் கீழே விழுந்தான். 

“ஒழிந்தான் கசடன்,’ என்று கூறினவனாய், வேலன் அரசன் மகளைத் தேடினான். கோட்டையின் அடிப்பகுதியிலிருந்த ஓர் இருட்டறையில் அவள் சிறைவைக்கப்பட்டிருந்தாள். மகிழ்ச்சியுடன் அவளை அவன் வெளியே அழைத்துவந்தான். 

அரசன் மகளுக்கும், வேலனுக்கும் சிறப்பாக மணவினை நடந்தேறியது. 

– கழகக் கதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: ஜனவரி 1951, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *