கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 880 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதல் குழந்தை பிறந்தபொழுது அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே கார்ந்து வேலை செய்யும்பொழுதுகூடச் சிதம்பரத்திற்கு அவன் ஞாபகந்தான். வீடெல்லாம் தவழ்ந்து வாசல் பக்கம் போய்விடப் போகிறானே என்ற கவலை. மாலையில் வீடு திரும்பியதும் அவனை எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சுவதைத் தவிர வேறு எதிலும் நாட்டம் இல்லை. 

கனகத்திற்கு மட்டும் என்ன? அவனுக்குப் பாலூட்டி, குளிப்பாட்டி, மையிட்டுத் திலகமிட்டுக் கழியும் நேரம் போக, அவனுக்குச் சட்டைகளை மாற்றிப் போடுவதைத் தவிர வேறு வேலை இல்லை. பன்னிரண்டு மாதக் குழந்தைக்கு இருபத்திரண்டு சட்டை தைத்து வைத்திருந்தால் சட்டைக்கு வேலை வேண்டாமா? 

எல்லாவற்றையும்விடக் கணவனும் மனைவியும் குழந்தையுடன் கொஞ்சுவதுதான் வெகு விநோதம். கனகத்தின் மடியில் குழந்தை இருக்கும்பொழுது, சிதம்பரம் கூப்பிடுவார்; அவன் வர மாட்டான். 

“திருட்டுப் பயல்! உன் மாதிரியே இருக்கிறான்.”

“நான் திருடியா? என்னைப்போல் இருக்கிறானாமே?” என்று கனகம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வாள். 

“உன்னை உரித்து வைத்திருக்கிறது. பாரேன்! அதைச் சொன்னால் விளக்கெண்ணெய் குடித்ததுபோல் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொள்கிறாயே!” 

“தாயைப் போலப் பிள்ளை இருந்தால் அதிருஷ்டம் என்பார்கள்.” 

”அதற்குத்தானே தவம் கிடக்கிறோம்?” 

“அதிருஷ்டம் இவனோடு நிற்காதென்று வேறு சொல்லுகிறார்கள்.” 

”யாரு?” 

”மருத்துவச்சி வந்திருந்தாளே, அவள் ஒரு நாள் சொன்னாள். 

“ஊம்.” 

“தொப்புள் கொடியில் எட்டு முடிச்சு இருந்தன வாம். எட்டுக் குழந்தைகள் பிறந்தால் அஷ்ட ஐசுவரியம் என்றாள்.” 

”பேஷ், பேஷ். எட்டுக் குழந்தையா?” என்றார். சிதம்பரம். 

சிதம்பரத்திற்கு விஞ்ஞானத்தில் நம்பிக்கை உண்டு. இருந்தாலும் மருத்துவச்சி ஜோசியத்தில் நம்பிக்கை வர வில்லை. புராணக் கதைகளைப்போல் விஞ்ஞானத்திலும் கதைகள் இருக்கலாம் என்று நினைத்தார். 


பையன் பிறந்த இரண்டு வருஷத்திற்குள் குடும்பத் தில் மற்றொரு ஜீவன் தலைகாட்டிற்று. அதுவும் பிள்ளை. ஆனால் சிதம்பரத்தைப்போல் இருந்தான். அவனாவது ஒரு வயசானால் கூப்பிட்டால் தாயிடமிருந்து தம்மிடம் வந்துவிடுவான் என்று எதிர்பார்த்தார்; வரவில்லை. முதல் குழந்தையைப்போல் அவனும் இருந்தான். 

தம்மிடம் குழந்தைகள் உடனே வராததற்கு என்ன காரணம்? தாய், பால் கொடுக்கிறாள்: வாஸ்தவம். ஆனால் அது மட்டும் காரணமாக இருக்க முடியாது. ‘காந்தத்தில் இரண்டு வடக்குத் தலைப்புகள் சேரா’ என்று விஞ்ஞா னிகள் சொல்லுகிறார்கள் மின்சாரத்திலும் அந்த  மாதிரி ஒரு தத்துவம் இருக்கிறது. ஆண் பெண் என்றமுரணில்தான் இதற்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டாகிவிட்டது. ‘அடுத்த குழந்தையாவது பெண்ணாக இருந்தால்?’ என்று எண்ணினார். 

என்ன தத்துவக் கோளாறோ, மூன்றாவது ஜீவனும் பையனாகவே வந்து சேர்ந்தான். 

இதுவரையில் சிதம்பரம் காணாத சங்கடம் இப் பொழுது தோன்றிற்று. முதல் இரண்டு ‘பயல்கள்’ நோய் நொடி என்று அதிகத் தொந்தரவொன்றும் கொடுத்துவிட வில்லை. நாட்டு வைத்தியருக்குக் கொடுத்த தெல்லாம் மொத்தத்தில் ஒரு நூறு ரூபாய்தான் இருக் கும். இந்த மூன்றாவது பயலுக்குத்தான் பணத்தில் அவ்வளவு கருத்துப் போதாது. கட்டி என்று ஒன்றைச் சம்பாதித்துக்கொண்டான். சிதம்பரத்திற்குச் ‘சனி’ பிடித்துக்கொண்டு விட்டது, அவர் நம்பாவிட்டால்கூட. காலை ஏழு மணிக்குக் குழந்தையை எடுத்துக்கொண்டு கனகம் வைத்தியர் வீட்டுக்குப் போனால் சிதம்பரம் காரியாலயத்திற்குப் போகும் நேரத்தில்தான் இரண்டு பொட்டலத்தையும் ஒரு சின்னக் கண்ணாடிக் குப்பியை யும் எடுத்துக்கொண்டு திரும்புவாள். அப்பொழு தெல்லாம் சிதம்பரத்திற்கு வீட்டில் காலைச் சாப்பாடு கிடைப்பதில்லை. 

தாம் மத்தியதர வகுப்பைச் சேர்ந்த நபர் என்ற பொருளாதார உண்மை இந்த நிலையில்தான் சிதம்பரத் தின் புத்திக்குப் புலப்பட்டது. உண்மை புலப்பட ஆரம்பித்தால் பலவிதத் தொல்லைகள் கூடவே முளைத்து விடும். சின்ன விஷயங்கள்கூட உண்மையின் புறத் தோற்றமாக மாறிவிடும். சிதம்பரம் போர்த்துக்கொண்டு வந்த கம்பளி ஒன்று, காலுக்கு இழுத்தால், தலைக்குப் போதாமல் போவதாக மனத்தை உறுத்தத் தொடங்கி விட்டது. எப்பொழுதோ மருத்துவச்சி சொன்ன விஷயம், குளத்தில் முழுகி முழுகி எழுந்திருக்கும் நீர்க் கோழியைப்போல் மனத்தில் தலைகாட்டிற்று. 

அந்தச் சமயத்தில்,சற்றும் எதிர்பாராத விதமாகச் சிதம்பரத்தைச் சென்னைக்கு நிரந்தரமாக மாற்றிவிட்டார்கள். இது வரையில் சிதம்பரம் இருந்தது, ஒரு பெரிய பஞ்சாயத்துக் கிராமத்தில் வாடகை வீட்டில். சென்னைக்கு மாற்றலான பிறகு, முழு வீட்டுக்கு மாதம் பன்னிரண்டு ரூபாய் கொடுத்தவர் இப்பொழுது முப்பது ரூபாய் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது; அது வும் ஒரு சின்ன அறைக்கும் கூடத்திற்கும்! 

அந்தக் கூடத்தைத் தொடர்ந்து ஓர் அறை இருந் தது. ஆனால் அதை வீட்டுக்காரர் பூட்டி வைத்திருந்தார். அது அவருடைய குற்றமன்று. அதற்கும் சேர்த்துச் சிதம் பரம் வாடகை கொடுத்தால் கிடைப்பதில் தடை இல்லை. முப்பது ரூபாயே, சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்க, இன்னும் ஒரு பத்து ரூபாயைக் கூடக் கொடுத்து அறையை வைத்துக்கொள்வதைப் பற்றி அவர் நினைக்கக்கூடவில்லை. 

ஒரு மாதத்திற்குள் குடியிருக்கும் இடம் சிறைக் கூடமாக மாறிவிட்டது. சரியான வெளிச்சம் இல்லை. சமையல் கட்டில் கனகம் வேலை செய்தால் ஏதேனும் பாத்திரங்கள் உருளாமலோ சாமான்கள் கொட்டிப் போகாமலோ வேலை செய்ய முடிவதில்லை. இரவில் கூடத் தில் படுத்துக்கொண்டால், பெட்டிகளும் தட்டு முட்டுச் சாமான்களும் காலிலோ தலையிலோ இடிக்காமல் இரா. தவிர இந்தப் பயல்கள் வேறு, பிரித்த கத்தரிக்கோல் மாதிரி குறுக்கும் நெடுக்குமாகத் தூங்க ஆரம்பித்து விட்டார்கள். போதாக்குறைக்கு மூன்றாவது பையனுக் குக் கட்டி வேறு, சீக்கிரமாகக் குணமடையவில்லை. 

மனிதன் தன்னுடைய சௌகரியத்துக்காகச் சிருஷ்டித்த பொருள்களும் அவனுக்கு இன்பத்தைத் தரும் என்று கருதிய பிற பொருள்களும் துன்பத்தின் உருக் கொண்டு விட்டால் குடும்பத்தில் சுகம் என்பது எங்கிருந்து வரும்? வருவது குடும்பப் பூசல்தான். 

இப்பொழுதெல்லாம் கனகத்திற்கும் சிதம்பரத் திற்கும் அநாவசியமாகக் கோபம் உண்டாயிற்று. ஒருவாால் மற்றவர் துன்பத்திற்கு உள்ளாகி விட்டது போல் குற்றம் சாட்டத் தலைப்பட்டார்கள். குழந்தைகள் ஒரு தொல்லை என்று கனகம் கருதத் தொடங்கினாள். பணம் ஒரு பீடை என்று சிதம்பரம் கருதத் தொடங்கினார். 

இப்படியே இரண்டொரு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் சிதம்பரத்துடன் ஓர் அழகிய பெண் வந்து சேர்ந்தாள். குடி இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து எத்தனை பிள்ளை குட்டி, என்ன மாதச் சம்பளம் என்றெல்லாம் விசாரித்தாள். 

குடியிருந்தவர்கள் அத்தனை பேரும் மத்தியதர வகுப்பினர். ஒருவருக்காவது ஐந்து குழந்தைகளுக்குக் குறைவாய் இல்லை. ஒரு குடும்பத்திற்கேனும் மாதம் நூற்றுமுப்பது ரூபாய்க்கு மேற்பட்ட வரும்படி இல்லை. இந்த விவரங்களை அறிந்துகொண்ட பிறகுதான் சிக்கல் இல்லாத வாழ்க்கைக்கும் சந்தோஷத்திற்கும் ஆதாரமான குடும்பப் பொருளாதார நுட்பத்தையும் அதற்கு வழி கோலும் கர்ப்பத் தடை முறையையும்பற்றி வெகு கவர்ச்சியாக அவள் கூறினாள். அவ்வளவு பெண்மணி களும் அந்தப் பிரசாரகியின் பேச்சை வெகு உற்சாகமாக ஏற்றுக்கொண்டார்கள். 

பிரசாரகி வீட்டை விட்டுப் போகும்பொழுது சிதம்பரத்தினிடம் சொல்லிக்கொண்டு போக வந்தாள். அந்தச் சமயம் கனகமும் அங்கே இருந்தாள். 

“கனகம், இந்த அம்மாள் யாரென்று இப்பொழுது தெரிந்திருக்குமே!” என்று மனைவியிடம் பேச்சைத் துவக்கினார். 

“கனகம்மா, என் பேச்சைக் கேட்கும் பெண்களில் பலர் என்னைப் பிசாசு என்கிறார்கள். இந்த வீட்டில் தான் அப்படி ஒருவரும் சொல்லக் காணோம். ஒருவேளை நீங்கள்” 

“அவள் சொல்ல முடியாது. எனக்குச் சம்பளம் நூற்று முப்பது ரூபாய். அவளுக்கு எட்டுக் குழந்தை உண்டு என்று சொல்லியிருக்கிறார்கள்” என்று சொல்லிச் சிரித்தார் சிதம்பரம். 

“வாஸ்தவந்தான்” என்று கனகமும் சுருக்கமாகக் கூறினாளே ஒழிய வேறொன்றும் சொல்லவில்லை. 

போர் முறையில் நேரடியான தாக்குதல் நல்ல பயனை விளைவிக்கலாம். ஆனால் பிரசாரகர்களும் இன்ஷியூரென்சு ஏஜெண்டுகளும் எறும்பு ஊர்ந்து கல்லைத் தேய்க்கும் முறையைத்தான் கடைப்பிடிப்பார்கள். 

“அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருகிறேன்” என்று சொல்லிச் சிதம்பரத்திடம் பிரசாரகி விடைபெற்றுக் கொண்டு சென்றாள். 

“இந்த அம்மாவை உங்களுக்கு முந்தியே தெரியுமா?”

“இல்லை; பட்டணம் ஜெயிலுக்கு மாறிய பிறகுதான் பரிசயம் உண்டாச்சு.” 

”ஜெயிலைத் திறந்துவிடுகிற சாவி அவளிடத்தில் இருக்கிறது என்று எனக்குச் சொல்வதற்காக அழைத் துக்கொண்டு வந்தீர்களா?” சிதம்பரம் பதில் சொல்வதற்குள் மூன்றாவது பயல் பலமாகச் சிணுங்க ஆரம்பித்து விட்டான். 

“நான் அழைத்துக்கொண்டு வரவில்லை. உலகத்தில் பிறக்காமல் இருக்கிற குழந்தைகள் எல்லாம் அவளை இந்தக் கதிக்கு ஆளாக்கியிருக்கின்றன. எனக்கு என்ன பைத்தியமா?” என்றார் சிதம்பரம். 

‘எனக்கு என்ன பைத்தியமா?’ என்று சிதம்பரம் கேட்டது அவளை என்னவோ செய்துவிட்டது. ஒரு வாரமாக அவள் மனத்தில் ஒரே குழப்பம். குடி இருந்த வர்களுள் ஒருத்தி என்னவோ கர்ப்பப்பை வைத்தியம் செய்துகொள்ளப் போகிறேன் என்று பெருமை அடித்துக்கொண்டே இருந்தாள். குழப்பத்தைக் கிளறுவதற்குத் துடுப்பு வேறு புகுந்துவிட்டால்… 

அடுத்த வாரம் அவ்வப்பொழுது சிதம்பரத்தினிடம் கனகம் கேட்ட கேள்விகள் சிதம்பரத்திற்குப் புது நம்பிக்கையை அளித்தன. ஐந்தறிவு ஆளும் உலகில் விதி வலிது. ஆறறிவு ஆளும் உலகில் மதிக்குத்தான் அரசுரிமை. மூன்று முடிச்சுள்ள தொப்புள் கொடி ஒன்று நடுவில் நடுவில் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தது. 

இதற்கிடையில் வீட்டுச் சொந்தக்காரர் ஒரு விஷ யத்தைக் கூறினார்: சிதம்பரம் விரும்பினால் பூட்டி இருந்த அறையை வைத்துக்கொண்டுவிட வேண்டும். இல்லா விட்டால் என்ன ஆகும் என்பதைப்பற்றி அவர் தெரிவிக்கவில்லை.சிதம்பரமும் கேட்கவில்லை. கைதிக்கு விடுதலை கிடைத்தால் போதும் என்றுதானே இருக்கும்? 

“கனகம், இந்த அறையையும் எடுத்துக்கொண்டு விடுவோம். பாத்திரம் உருளாமல் நீ வேலை செய்யலாம். நான் காலை டனா ஆக்கிக்கொள்ளாமல் நீட்டிப்படுத்துக் கொள்ளலாம்.” 

”அது சரிதான். இந்தச் சம்பளத்திலே”

”அந்த விசை உன்னிடந்தான் இருக்கிறது. வீட்டுக் காரர் சாவி கொடுத்தால் வாங்கிக்கொண்டு விடு. பார்த்துக்கொள்ளலாம்” என்று சிதம்பரம் உத்தரவு கொடுத்துவிட்டார். 

சனிக்கிழமை சிதம்பரம் காரியாலயத்திற்குச் சென் றிருந்தார். வீட்டுக்காரர் கனகத்திடம் அறையின் சாவியைக் கொண்டுவந்து கொடுத்தார். 

கனகத்திற்கு அளவு கடந்த சந்தோஷம். உடனே அறையைத் திறந்து பார்த்தாள். தெருப் புறத்தில் ஒரு ஜன்னல். ஜன்னலுக்கு மேலே வெளிச்சம் வரச் சாள ரங்கள் அமைந்திருந்தன. தரை எல்லாம் ஒரே தூசி. தூ சி சரிதான். வைக்கோல் எங்கிருந்து வந்திருக்கும்? ஒரு விநாடி யோசித்துவிட்டுக் கனகம் தலை நிமிர்ந்து பார்த்தாள். 

ஒரு மூலையில், மின்சார மரச் சட்டமும் மேல் தளத் தின் அட்டையும் கூடும் இடத்திலிருந்து வைக்கோலும் சணல் கயிறும் தொங்கிக்கொண் டிருந்தன. பிறகு ஊன் றிக் கவனித்தாள். குருவிக் கூடு! 

அந்த அறைக்குள்ளேயே ஒரு மேஜை இருந்தது. அதை இழுத்துப் போட்டுக்கொண்டு ஏறிப் பார்த்தாள். கூட்டண்டை எட்டிப் பார்த்ததும் உள்ளே ஒரு குருவிக் குஞ்சு தென்பட்டது. அத்துடன் கீழே இறங்கி மேஜையை ஒரு புறம் இழுத்துப் போட்டுவிட்டு அறையைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள். 

அறையைச் சுத்தம் செய்து முடித்த பிறகு கூடத்தில் இருந்த சில பெட்டிகளைக் கொண்டுவந்து அறைக்குள் வைத்தாள். பெரிய பையன்கள் இருவருக்கும் காரணம் இல்லாத குதூகலம். உடனே ஆளுக்கு ஒரு பெட்டியின் மேல் உட்கார்ந்து தாளம் போட ஆரம்பித்தனர். கனகத் திற்கும் விவரிக்க முடியாத மன அமைதி. மூன்றாவது பயலைப் பார்த்தாள். அவனுடைய நோய்கூடத் தெளிந் திருந்தது. அப்பொழுதுதான் இரண்டு சிட்டுக் குருவிகள் அறைக்குள் நுழைந்து கூட்டண்டை போய் அமர்ந்தன கீச்சுக் கீச்சென்று கத்திக்கொண்டும் இரண்டு சிறகுகளைப் பாய்மரத்தைப்போல் விரித்து ஆட்டிக்கொண்டும் பெற்றோர்களிடமிருந்து குஞ்சு உணவை வாங்கிக்கொண் டது. அதற்குப் பிறகு கூட்டின் வாசலில் இரண்டு பெரிய குருவிகளும் கறுப்புப் பாசிமணிக் கண்களை உருட் டிக்கொண்டு ஒரு நிமிஷம் உட்கார்ந்திருந்தன. இதைக் கண்ட கனகத்தின் மனம் நிறைந்து வழிந்தது. 

அன்று இரவு காரியாலயத்திலிருந்து சிதம்பரம் வீடு திரும்பினார். 

“இனிமேல் கவலை இல்லை. வானம் தெரியும். காற்று வரும். இடமும் போதும்” என்றார். 

”ஆமாம். ஆமாம்” என்று உற்சாகத்துடன் கனகம் கூறினாள். 

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. சிதம்பரம் அறையில் மல்லாந்து படுத்துக்கொண்டிருந்தார். இரண்டு சிட்டுக் குருவிகள் அறைக்குள் நுழைந்து தங்கள் குஞ்சுக்கு உணவளிப்பது கண்ணில் பட்டது. உடனே கீழே பார்த்தார். அறையின் ஒரு புறத்தில் வைக்கோலும் பஞ்சு போன்ற சிறிய இறகுகளும் எச்சமும் சிதறிக் கிடந்தன. 

“கனகம், அறை ஒரே அசிங்கமாய் இருக்கிறதே! அந்தப் பெண்கூட இன்று வருகிறேன் என்று சொல்லி யிருக்கிறாளே. கொஞ்சம் சுத்தப்படுத்து” என்றார். 

அறையை ஒரு தரம் சுத்தம் செய்துவிட்டு மூன்றாவது பையனையும் எடுத்துக்கொண்டு கனகம் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள், 

“அந்தப் பெண்ணுக்கு நாம் பயப்பட வேண்டுமென் றால் இந்தக் குருவிகள் கூடப் பயப்பட வேண்டுமா?’ 

“கூட்டை எடுத்துவிட்டால் போச்சு. ஒரு நாளைக்கு எத்தனை தரம் அறையைச் சுத்தம் செய்வது?”

கனகம் ஒரு நிமிஷம் மௌனமாக இருந்தாள். ‘அந் தப் பாவத்தை நாம் கட்டிக்கொள்ள வேண்டாம். எத் தனை தரம் வேண்டுமானாலும் நான் அறையைச் சுத்தப் படுத்துகிறேன்!” என்றாள். 

சிட்டுக்குருவிகளைப்பற்றி மட்டும் கனகம் பேசியதாகச் சிதம்பரத்திற்குத் தோன்றவில்லை. அதற்குப் பதில் கூறுவதற்கு முன், வணக்கம் என்று கூறிக் கொண்டே அந்தப் பிரசாரகி வந்து சேர்ந்தாள். சிதம்பரத்தினால் பேச்சைத் தொடங்க முடியவில்லை. 

சமயத்தில் சிட்டுக்குருவிகள் அறைக்குள் நுழைந்தன. வழக்கம்போல் போய் குஞ்சுக்கு உணவளித்தன. 

“அந்தக் குருவிகளைப் பாருங்களேன். எவ்வளவு அழகாகக் குடும்பத்தை நடத்துகின்றன! ஒரு வாரமாகப் பார்த்துக்கொண்டு வருகிறேன்” என்றாள் கனகம். 

பிரசாரகி தலை நிமிர்ந்து கூட்டைப் பார்த்தாள். சிதம் பரமும் மறுபடி பார்த்தார். 

அவர்கள் கண்ணெதிரே ஆயிரம் ஆயிரம் குருவிக் குஞ்சுகள் பறந்துகொண்டிருந்தன. ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் அவைகளைப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்தன. 

அதற்குப் பிறகு பிரசாரகி வரவே இல்லை. 

– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *