வெண்கலப் பானையின் கதை




(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வெண்கலப் பானைக்கு வந்த அலுப்புச் சலிப்பிற்கு அளவே இல்லை. ‘தினம் காலையில் எழுந்திருப் பது: வேலைக்காரி முகத்தில் விழிப்பது; அவள் சாம்பலையும் கல்லையும் போட்டுக் கர கரவென்று தேய்த்துக் குளிப் பாட்டி வைப்பது; அப்புறம் வீட்டு எஜமானி அம்மாள் விபூதி பூசினாற்போல் பச்சை மாவைத் தன் மேலே தடவி வைப்பது, பிறகு உடம்பெல்லாம் அடுப்புக் கரியைத் தீத்திக்கொள்வது, சாதம் சமைய லாகும்போதும் பிறகும் கரண்டியாலே குட்டுப்படுவது, கடைசியாக முன் மாதிரி வேலைக்காரி இடம் திரும்ப வந்துவிடுவது- இதுதானா ஜன்மத்திலே வேலை? ஓர் ஓய்ச்சல் ஒழிவு வேண்டாம்?’ என்று யோசித்து ஒரு தீர்மானம் செய்தது.

மத்தியான்னமாக வீட்டு வேலைக்காரி பத்துப் பாத்தி ரங்களை எல்லாம் சுத்தமாய்த் தேய்த்துக் கிணற்றங்கரை யில் வைத்திருந்தாள். எஜமானி அம்மாள் குழந்தைகளுக் குச் சடை போட்டுக்கொண் டிருந்தாள். இது நல்ல சகுனம் தான் என்று வெண்கலப்பானை வேப்பமரத்தைப் பார்த்து வணங்கிவிட்டு, நாலு வேப்பிலையை வாயில் போட்டுக் கொண்டு வெளியே கொல்லைவழியாகக் கிளம்பிவிட்டது.
வெளியே கிளம்புகிறதுதான் சிரமம். கிளம்பி விட்டால், வேகத்துக்குக் கேட்பானேன்? வெகுதூரம் அலைந்ததில் அதற்கு நோவு எடுத்து விட்டது.ஒரு வீட்டு வாசலில் மாடும் கன்றும் கட்டி இருந்தது.திண்ணையில் ஒரு கயிற்றைத் தவிர யாரையும் காணவில்லை. அப்பாடா என்று அங்கே போய் உட்கார்ந்தது; கால்மணி நேரம் வரையில் காற்றாட ஒரு வார்த்தைகூடப் பேசாமல் உட் கார்ந்திருந்தது. அதற்குப் பிறகு வியர்க்க விறுவிறுக்கக் கோனார் ஓடி வந்து கயிற்றை எடுத்ததும் முதலில் அதற்குப் பயமாகப் போய்விட்டது. நல்ல வேளை! கயிற்றை எடுத்து மாட்டின் பின்காலில் கட்டினான். ‘சொம்பு கொண்டா!’ என்று கத்தினான். பால்காரி இருந்தால்தானே! வெண் கலப் பானை சிரித்தது. பெண்ணும் புஷ்பமும் பாத்திரமும் சிரித்தால் உலகத்தில் விட்டு வைப்பார்களா?
கோனார் பாத்திரத்தை எடுத்து அணைத்துக்கொண்டு பாலைக் கறந்து திண்ணையில் வைத்துவிட்டுத் திரும்பினார். அதற்குள் பால்காரி வந்துவிட்டாள். பாலை அளந்து எல்லோருக்கும் கொடுத்த பிறகு வழக்கத்திற்கு அதிக மாகவே பால் மிச்சப்பட்டிருந்தது. ஆச்சரியத்துடன் ஒரு தரம் வெண்கலப்பானையைப் பார்த்தாள். இது ஏது என்று கேட்பதற்குள் கோனார் ஓடி விட்டார். வெண்கலப் பானை சிரித்தது. பால்காரியும் சிரித்துக்கொண்டே ாத்திரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பி விட்டாள்.
அன்று முதல் பால்காரி காலையும் மாலையும் வெண் கலப்பானையைப் பளபள வென விளக்கிப் பசுமாட்டுடன் எடுத்துச் சென்றாள். மற்ற வேளைகளில் அதை ஒரு மாடப்பிறையில் வைத்திருந்தாள். அடுப்பு வாசனைகூட அந்தப் பக்கம் வரக்கூடாது.
வெண்கலப்பானையின் வாழ்க்கை வெகு சுகமாக இருந்தது. ஆனால் வேறு கஷ்டம் ஒன்று முளைத்தது. மாடப்பிறையிலே போகிற கறப்பான்பூச்சி பிசுபிசு வென்று ஒட்டிக்கொள்ளும் தன் கால்களோடு இந்த வெண்கலப்பானையின் மேல் நடந்து போகலாயிற்று. ராமபாணப்பூச்சி அவ்வப்பொழுது வெள்ளித்தூள்களைக் கொண்டுவந்து மேலே உதறிவிட்டுப் போயிற்று. அந்தப் பூச்சிகளை வேட்டையாட ஒரு பல்லி பானையின் விளும்பில் ஒண்டிக்கொள்ள வந்தது. இந்த மாதிரி நல்ல இடம் கிடைத்ததே என்று பல்லியும் பூச்சிகளுமாகச் சேர்ந்து வெண்கலப்பானையை ரணகளம் ஆக்கிவிட்டன. வெண் கலப் பானைக்கு வந்த வெறுப்புக்கு அளவில்லை. மறுபடி யும் வெளியேறிவிட வேண்டும் என்ற வேட்கை பிறந்தது.
ஒருநாள் ஒரு பல்லியும் தேளும் ரணகளத்திற்கு வந்து சேர்ந்தன. எத்தனை தரம் வெண்கலப்பானையை வலம் இடம் வந்தன! முடிவிலே பல்லி தேளைப் பிடித்து விட்டது. எக்கச் சக்கமாகத் தேள் அகப்பட்டுக் கொண்டு விட்டது. வந்த கோபத்தில் வாலைச் சாய்த்து அடித்தது; பல்லியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்குப் பதில் வெண்கலப்பானை கொட்டை வாங்கிக் கொண்டது. லேசான துவாரம் அதில் விழுந்தது. அன்றைத் தினம் பால் கறந்து வைத்தபொழுது பால் காரிக்கு இந்த உண்மை புலப்பட்டுவிட்டது.
மறுநாள் தெருவிலே வெண்கல வியாபாரி போனான். பால்காரி அவனிடம் பாத்திரத்தை எடை போடச் சொன்னாள். பிறகு ஏதோ தஷிணையும் சேர்த்துக் கொடுத்துவிட்டு வேறு பாத்திரத்தை வாங்கிக்கொண் டாள். யுத்த களத்தை விட்டுக் கிளம்பிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் வியாபாரியின் மூட்டையுடன் வெண்கலப் பானை கிளம்பிற்று.
அன்று மாலை வியாபாரி வெண்கலப்பானையை எடுத் துக்கொண்டு கன்னான் பட்டறைக்கு வந்து சேர்ந்தான். “ஏன் தம்பி! இந்தப் பொத்தலுக்கு ஒட்டுப்போட முடியுமா?” என்றான். “முடியாது அண்ணே! தூங்கை யிலே வாங்குகிற மூச்சு, அது சுழிமாறிப் போனாலும் போச்சு; இதுக்குச் சுழி மாறிப்போச்சு” என்றான் கன்னான்.”ஆனால் சரி; நிறைபோட்டு எடுத்துக்கொள்..”
வெண்கலப்பானை கன்னான் கைக்கு வந்தது. அவன் அதை உடைத்துப் பஞ்சலோகத்துடன் கலந்து ஓர் அழகிய விக்கிரகத்தை வார்த்தான். ஆதியிலே வெண்கலப் பானை யாக வெளிக்கிளம்பியது இப்பொழுது விளக்குத் தாழி விக்கிரகம் ஆகிவிட்டது, இன்றைக்கும் வாராஹி கோவில் சன்னதியில் அது இருக்கிறது. அந்த விளக்கு நாச்சியாரை யும் அவள் விடும் சுடரையும் கண்டு மோகிக்காத பக்தர் களே இல்லை.
ஆனால் விளக்கு நாச்சியாருக்கு மட்டும் மனத்தில் திருப்தி இல்லை. ‘சதா நெய்யும் களிம்புமாக விளங்குகிற என் அழகு ஒன்றே போதுமே!’ என்று வருந்திக்கொண்டிருக்கிறது.
– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |