வீட்டில் நிராகரிக்கப்பட்ட மாணவன்
(கொரிய நாட்டுப்புறக் கதை)
முன் குறிப்பாக சில விஷயங்கள்.

கொரியாவில் எலி, செழிப்பு மற்றும் வளமையின் குறியீடாகக் கருதப்படுகிறது. பழங்காலத்தில் கொரிய விவசாயிகள் சிறந்த மகசூலுக்காக எலி உருவம் பொறித்த தாயத்துகளை அணிவது வழக்கம். வெள்ளை எலியைப் பிடிப்பது போலக் கனவு கண்டால் அது அதிர்ஷ்டத்தின் அறிகுறி எனவும் அவர்கள் நம்பினர்.
சீன மற்றும் அந்தக் கலாச்சாரம் சார்ந்த ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் 12 ஆண்டுகளுக்கான ராசிகள் முறையே எலி, எருது, புலி, முயல், ட்ராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி ஆகியவையாகும். (ஜப்பானில் கடைசி ராசி மட்டும் பன்றிக்கு பதிலாக காட்டுப் பன்றி). புராண காலத்தில் பேரரசர் மிருகங்களுக்கிடையே ஓட்டப் பந்தயம் வைத்து அதில் முன்னதாக வரும் 12 மிருகங்களின் உருவங்களை, அவற்றின் வரிசைப்படி ஆண்டு ராசிகளாகக் கொள்வதென ஏற்பாடு செய்திருந்தார். எலி எருதின் கொம்பில் ஏறிக்கொண்டு சவாரி செய்து, பந்தய எல்லைக் கோட்டருகே சென்றதும் தாவி, இலக்குக் கோட்டைக் கடந்து முதல் இடம் பெற்றுவிட்டது.
இதன் காரணமாக எலிகள் மனிதனுக்கு அடுத்தபடியான அறிவுக் கூர்மை பெற்ற பிராணியாகக் கிழக்காசிய நாட்டு மரபில் கருதப்படுகின்றன.
இனி கதைக்கு வருவோம்.
முற்காலத்தில் கொரியாவில் மாணவர்கள் கல்வி கற்பதற்காக மலைகளில் இருக்கும் தனிமையான ஆலயங்களுக்குச் செல்வது வழக்கம். அவர்கள் அங்குள்ள மடாலயத்தில் தங்கி, குருமார்களிடம் பழங்கால குருகுலக் கல்வி முறையில் கல்வி கற்றும், நூலகத்தில் உள்ள ஞான நூல்களை வாசித்தும், தியானம் செய்தும் கற்றுத் தேர்வார்கள்.
அவ்வாறு கற்று சிறந்த அறிஞனாக ஆக விரும்பிய ஒரு சிறுவன், தனது குடும்பத்தை விட்டு, தூரத்தில் உள்ள மலையில் இருக்கும் ஆலயத்திற்குச் சென்று, அங்குள்ள மடாலயத்தில் தங்கி கல்வி கற்றுவந்தான். கல்வியை முடித்துவிட்டு, மூன்று ஆண்டுகள் கழித்து வீடு திரும்பினான்.
வீட்டில் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியடையச் செய்தது. அங்கே அச்சு அசலாக அவனைப் போலவே ஒரு மாணவன் இருந்தான். அவனது உருவம், உடை, பேச்சு, அசைவுகள் யாவும் அவனைப் போலவே இருந்தன. மாணவனுக்கு அது மிகுந்த ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கியது. இது எப்படி சாத்தியம் என்று அவனுக்குப் புரியவில்லை.
அவனைக் கண்ட பெற்றோர்களும் திகைத்துப்போய் அவனை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
“நீங்கள் செய்வது மிகவும் அநியாயம். நான்தான் உங்களுடைய சொந்த மகன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? கல்வி கற்பதற்காக மலைக் கோவிலுக்குச் சென்றுவிட்டு, எனது படிப்பை முடித்து, மூன்று ஆண்டுகள் கழித்து இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறேன். ஆனால், என்னைப் போலவே இருக்கும் இவன் யார்? எப்படி இங்கே வந்தான்? இவனை எப்படி வீட்டுக்குள் அனுமதித்தீர்கள்? அவன் ஆள் மாறாட்டம் செய்கிறான். அவனை வெளியேற்றுங்கள்!” என்றான்.
பெற்றோர்களுக்கும், உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. கல்விச் சாலையிலிருந்து விடுமுறையில் வந்ததாகச் சொல்லியே அவன் உருவில் இருக்கும் இன்னொருவன் அவ்வப்போது இங்கு வந்து சில தினங்கள் தங்கிச் செல்வான். அப்படி ஏற்கனவே வந்து போய்க்கொண்டிருந்த அவன் நிஜமா, அல்லது இப்போது வந்திருக்கும் இவன் நிஜமா என்று தெரியாமல் குடும்பத்தவர்கள் குழம்பினர்.
முன்னதாகவே அங்கே இருந்த, அவனைப் போன்ற உருவமுடைய போலி மாணவன், இவனைப் பார்த்து, “மோசடிக்காரனே! நீதான் ஆள் மாறாட்டம் செய்யப் பார்க்கிறாய்! நீ ஒரு கிழட்டு சூனியக்காரன். உன்னுடைய மந்திர தந்திர வேலைகளால் மக்களை முட்டாள்களாக்குகிறாய். இப்போது என்னைப் போலவே வேடம் போட்டுக்கொண்டு வந்து, எனக்கும் என் குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கலாம் என்று பார்க்கிறாயா? அது நடக்காது! ஒழுங்காக இங்கிருந்து ஓடிப் போய்விடு!” என மிரட்டினான்.
அவனது குரலும் அச்சு அசலாக இவனுடையதைப் போலவே இருந்தது. இந்த அசாத்தியமான ஒற்றுமையால் குடும்பத்தவர்கள் இன்னமும் குழம்பித் திகைத்தனர். சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அவர்களாலேயே அந்த இருவரில் யார் உண்மையானவன், யார் போலி என்று கண்டுபிடிக்க இயலவில்லை.
அவர்கள் அவ்விருவரையும் மிக கவனத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். இரு மாணவர்களும் அச்சு அசலாக ஒரே மாதிரியாக உருவமும், உடைகளும் கொண்டு இருந்தனர். அவர்களின் அங்க அடையாளங்களும் ஒரே மாதிரியாக இருந்தன. அவர்களுக்கிடையே வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க இயலாததால் பெற்றோர்கள் அவர்களிடம் அவர்களது பிறந்த நாள் எது, அவர்களின் குழந்தைக் கால நினைவுகள், முன்பு நடந்த சிறப்பு சம்பவங்கள் உள்ளிட்ட பலவற்றையும் கேட்டு, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முற்பட்டனர். ஆனால் அந்த இரு பையன்களும் ஒரே பதில்களை ஏக காலத்தில் கூறினர்.
இறுதியாக பெற்றோர்கள் அவர்களிடம் அந்த வீட்டிலுள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் கூறுமாறு கேட்டனர். உண்மையான மகன் மூன்றாண்டுகளாக வெளியூரில் இருந்ததால் அவனால் இதற்கான பதிலை எளிதாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், போலி மகன் இடைக் காலத்தில் இங்கே அடிக்கடி வந்துகொண்டிருந்ததால் அந்த வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருட்களையும் சிரமமின்றிப் பட்டியலிட்டுக் கூறினான். அதனால் அவனே உண்மையானவன் எனக் கருதிய குடும்பத்தார், உண்மையான மகனை மோசடிக்காரன் என்று கூறி விரட்டினர்.
அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதற்கு மேல் அவர்களிடம் வாதிப்பது பயனற்றது என்பதால் அங்கிருந்து மௌனமாக வெளியேறினான். தங்குவதற்கு இடமின்றி அங்குமிங்குமாக சுற்றித் திரிந்து நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவன் ஒரு பூசாரியைச் சந்தித்தான். அவனது சோகமான முகத்தைக் கண்ட அவர், “எதையோ பறிகொடுத்தது போலக் காணப்படுகிறாயே! என்ன விஷயம்?” என்று பரிவோடு கேட்டார். அவனும் நடந்த சம்பவத்தை முழுமையாகக் கூறினான்.
“நீ மலை ஆலயத்தில் படித்துக்கொண்டிருந்தபோது உன்னுடைய விரல் நகத் துணுக்குகளை வெளியே எங்காவது போட்டாயா?”
“ஆமாம். கோவிலுக்கு அருகே ஓடிக்கொண்டிருக்கும் நதியில் அதை எறிந்தேன். நான் அந்த நதியில்தான் குளிப்பது வழக்கம். குளித்து முடித்த பிறகு அருகே உள்ள கல்லில் அமர்ந்து எனது நகங்களை வெட்டுவேன். நறுக்கிய துணுக்குகளை நதியில் எறிந்துவிடுவேன்.”
“நீ எறிந்த நகங்களை விழுங்கிய துர்ஆவிதான் உன்னுடைய உருவம் எடுத்து வந்திருக்கிறது. நீ மீண்டும் உன் வீட்டிற்குச் செல். ஆனால் இப்போது உன்னுடன் ஒரு பூனையையும் கொண்டு போ. நீ பூனையை வைத்திருப்பது யாருக்கும் தெரியக்கூடாது. அதை உன்னுடைய அங்கிக்குள் மறைத்துக் கொள். வீட்டுக்குள் சென்றதும் அந்த மோசடிக்காரன் முன்பாகப் பூனையை எடுத்து விடு. அதன் பிறகு நடப்பதைப் பார்!”
மாணவனும் அவர் சொன்னது போலவே ஒரு பூனையைத் தனது அங்கிக்குள் மறைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். பெற்றோர்களும் மோசடிக்காரனும் வந்தனர். அவர்கள் அவனிடம் எதுவும் பேசுவதற்குள் அவன் தன்னிடம் இருந்த பூனையை எடுத்து மோசடிக்காரன் முன்பாக விட்டான்.
அவன் பூனையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். பூனை அவன் மீது தாவி அவனுடைய குரல்வளையைக் கடித்தது. இருவருக்கும் இடையே பலத்த போராட்டம். முடிவில் அந்த மோசடிக்காரன் பூனையின் கூரிய பற்களால் கடிக்கப்பட்டு அறையின் மத்தியில் விழுந்தான்.
மெல்ல அவனது உருவம் மாறியது. அவன் ஓர் எலியாக இறந்து கிடந்தான்.
எலிகள் மனிதர்கள் போல உருமாறக் கூடியவை. அவ்வாறே மாணவனின் நகத் துணுக்குகளைத் தின்ற எலி, அவனது உருவத்தை எடுத்துக்கொண்டு அவனுடைய வீட்டிற்கு வந்திருந்தது. மற்றவர்களுக்கு அது தெரியவில்லை. ஆனால், பூனைகள் எலியைக் கண்டறிந்துவிடக் கூடியவை. ஆகவேதான் பூசாரி அந்த யோசனையைச் சொல்லியிருந்தார். மாணவனும் அவ்வாறே செய்து, பிரச்சனையை எளிதாகத் தீர்த்துவிட்டான்.
இந்தக் கதை இப்படியிருக்க, மனிதர்கள் பூனைகளாக மாறக் கூடியவர்கள் என்று எலிகளின் உலகில் ஒரு கதை உண்டாம்.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |