விவாக சூழ்ச்சி!





வளவ தேசத்து மன்னன் மதியனிடமிருந்து வந்த ஓலையைப்படிக்கும் போது மகிழ்ச்சி பொங்கியது கொங்கு தேசத்து மன்னன் அதியனுக்கு. தான் படித்த ஓலையைக் கொடுத்து சபையிலேயே மந்திரி மங்கனைப் படிக்கச் சொன்னவர் இனிய செய்தியால் ஏற்பட்ட மகிழ்ச்சியை திரும்பவும் பெற மீண்டும், மீண்டும் மூன்று முறை படிக்கச்சொன்னார்.
‘கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் எனும் பழமொழி கொண்ட மேன்மை மிகுந்த கொங்கு தேசத்தை சிறப்பாக ஆட்சி புரியும் மன்னர் அதியனுக்கு, அணைகள் பல கட்டிய முன்னோர்கள் வழி வந்த வளம் மிகுந்த, தற்போது வறட்சியின் பிடியில் இருக்கும் வளவ தேசத்து மன்னன் மதியன் எழுதிய ஓலை. எனது மகன் ஆதித்யன் ஒரு மாவீரன். அவனுடைய பன்னிரண்டாவது பிராயத்திலேயே போரில் எதிரி நாட்டு மன்னனின் தலையைக்கொய்து வந்தவன். அந்த மாவீரனுக்கு தேவலோகத்து ரம்பையே பொறாமை கொள்ளும் அழகும், சரஸ்வதியின் பரிபூரண அருளைப்பெற்று கவிதைகளைப்புனையும் ஆற்றலோடு தங்களுக்கே அறிவுரை வழங்கக்கூடிய சாணக்யமும், ஆடல் கலையில் மனதை மகிழ்ச்சிப்படுத்தும் நான் வணங்கும் நடராஜருடைய ஆசீர்வாதமும் ஒரு சேரப்பெற்ற தங்களது மகள் தேவசேனாவை பெண் கேட்கலாமென முடிவு செய்துள்ளேன். நமக்குப்பின் வாரிசாக ஒரு வீரன் நமது நாட்டை ஆள முடியாமல் போய் விடுமே….? எனும் கவலை ஆண் வாரிசு இல்லாத தங்களுக்கு வரக்கூடாது என்பதால் தங்கள் மகளின் மனதையறிந்து பதில் செய்தி சாதகமாக அனுப்புவீர்கள் என நம்புகிறேன்’ இந்த ஓலையைக்கொண்டு வந்த எனது நாட்டு ஒற்றனிடமே தங்களது ஓலையைக்கொடுத்து அனுப்பவும்’ ஓலைச்செய்தியால் மகிழ்ந்து போனார்.
“தந்தையே…. தங்களுக்கு இது வரை நமது கொங்கு தேசத்தில் போர் எதுவும் நடக்காததால் சூழ்ச்சியும், தந்திரமும் சிறிதும் இல்லாதவராகவே ஒரு குழந்தை மனநிலையோடு சிறிய விசயங்களுக்கும் மகிழ்ந்து வாழ்ந்து வருகிறீர்கள். தங்களுக்கு வரப்போகும் மருமகன் வீரமானவன் என நினைத்து மகிழ்ச்சியடைகின்றீர்கள். வீரமானவனை விட விவேகமானவனைத்தான் என் மனம் விரும்புகின்றது. வளம் மிகுந்த நமது தேசத்து மக்களே வறுமையின்றி செழிப்புடன், முக அழகுடன் வாழும் நிலையில், தங்களது ஒரே மகளான இளவரசி நான் அழகில் சிறந்தவளாக இருப்பதில் வியப்பேதுமில்லை. ஆடல் கலையைக்கற்பதும், அறிவைத்தரும் நூல்களைப்படிப்பதும் இயல்புதான். இதையெல்லாம் பெரிதாகப்புகழ்ந்து ஒரு மன்னர் தன் மகனுக்கு பெண் கேட்கிறார். அதுவும் வீரத்தை முன்னிருத்திக்கேட்கிறார் என்றால் அவரிடம் சூழ்ச்சி நிறைந்துள்ளது. ஆம் அது தான் விவாக சூழ்ச்சி” எனக்கூறிய மகளை அதிர்ச்சியுடன் ஏறிட்டார் அதியன்.
“விவாக சூழ்ச்சி என்பது இது வரை நான் கேள்விப்படாத வார்த்தை. விவாகம் என்பதே மகிழ்ச்சி தானே… அது எவ்வாறு சூழ்ச்சியாகும்…?”
“வறுமையின் பிடியில் இருக்கும் ஒரு நாட்டின் மன்னருக்கு பக்கத்தில் இருக்கும் நாடு வளம் மிகுந்து காணப்பட்டால் பயம் வரும்”
“எதற்கு பயம்…? காரணம்…?”
“வளம் மிகுந்த நாடு வறுமையில் உள்ள நாட்டைப்போரிட்டு வெல்ல வாய்ப்புள்ளது என்பது தான் காரணம்” என்றாள்.
“நமக்கு இதுவரை பக்கத்து நாட்டைப்பிடிக்கும் எண்ணம் தோன்றவில்லையே….?”
“தங்களுக்குத்தோன்றாது. இதுவே வளவ தேசம் வளம் மிகுந்து, நம் தேசம் வறுமை மிகுந்து இருந்திருக்குமானால் மன்னரிடமிருந்து வந்த ஓலை பெண் கேட்பதாக இருக்காது. மண் கேட்பதாக இருந்திருக்கும். அது வீழ்ச்சிக்கான நிலை. இது சூழ்ச்சிக்கான நிலை. என்னை மருமகளாக்கி இரண்டு நாடுகளையும் போரின்றி இணைத்து வளவ நாட்டின் வறுமையைப்போக்கிவிடலாம் எனும் சூழ்ச்சிதான் அது. பதில் ஓலையில் மகளுக்கு விவாகத்தில் விருப்பமில்லை என எழுதுங்கள் ” கூறி விட்டுச்சென்ற மகள் தேவசேனாவின் பேச்சின் உறுதித்தன்மையை பறைசாற்றும் வகையில் பதில் ஓலையில் விபரங்களை அனுப்பினார் அதியன்.
அதியனிடமிருந்து வந்த ஓலையைப்படித்த மதியன் தமது எண்ணம் நிறைவேறாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். தமது நாட்டில் மழையின்மையால் ஏற்பட்டுள்ள வறுமை நிலையைக்கருத்தில் கொண்டே தன் மகனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளார் என புரிந்து கொண்டவர், தனது மகன் ஆதித்யனை அழைத்து போருக்கு ஆயத்தமாகும் படி கட்டளையிட்டார்.
“ஒரு தேசம் வளம் மிகுந்தாலும், வறுமை நிலைக்குப்போனாலும் போர் புரியாமல் இருக்கக்கூடாது. வறுமையைப்போக்க போரிட்டு வளமிக்க தேசத்தைக்கைப்பற்றினால் வறுமையை ஒழித்து விடலாம். அதோடு வளம் மிகுந்த தேசத்து வீரர்களை விட வறுமையிலுள்ள தேசத்து வீரர்கள் வெற்றி பெற்றால் தான் வாழ முடியும் என துணிந்து போரிடுவார்கள். வென்றும் விடுவார்கள்” என அறிவுறுத்திச்சொல்ல வீரர்களுடன் போருக்கு ஆதித்யன் தயாரானான்.
தந்தை அனுப்பிய ஓலையைப்படிக்கும் வளவ தேசத்து மன்னன் போருக்குத்தயாராவார் என்பதை புரிந்து வைத்திருந்த தேவசேனா ஒரு நூதன பாதுகாப்புக்குத்தயாரானாள்.
கொங்கு நாட்டின் எல்லைப்பகுதிக்கு வந்த வளவ நாட்டு வீரர்கள் பாதுகாப்பிற்காக எல்லையில் வீரர்கள் யாரும் இல்லாததைக்கண்டு எளிதில் கொங்கு தேசத்தைக்கைப்பற்றி விடலாம் என நினைத்து மகிழ்ந்தனர்.
எல்லையைக்கடக்க முயன்ற போது சுவை மிகுந்த உணவின் வாசனை மனதை மயக்க பெரிய விருந்து நடப்பதைக்கண்டனர். வறட்சி மிகுந்த காட்டு வழி வந்ததாலும், நல்ல உணவு உண்டு வருடங்கள் பல ஆனதாலும் விருந்து நடக்குமிடம் வந்து உணவுகளைக்கேட்டு வாங்கிச்சுவைத்தனர். சுவை மிகுதியால் அளவுக்கு அதிகமாக உண்ட வீரர்களுக்கு உணவைத்தயாரித்தவர்கள் தென்னை மரக்கள்ளை ஊற்றிக்கொடுக்க அதையும் வாங்கிக்குடித்து போதையில் மயங்கினர். அவர்களை மேலும் சில உணவு வகைகள் இருப்பதாகக்கூறி பாதாளச்சிறைக்கு அழைத்துச்சென்று அடைத்து வைத்தனர் கொங்கு வீரர்கள். போதை தெளிந்த பின்பே தாம் ஏமாந்ததை அறிந்து வருந்தினர்.
போர் படை வீரர்கள் சென்ற குதிரைகளின் காலடி மண்ணைப்பின்தொடந்து வரும் வளவ இளவரசன் ஆதித்யனை மடக்கும் பொருட்டு தங்களது வீரர்களை வைத்து அக்குதிரைகளை நீலகிரி மலைப்பகுதிக்கு திசை மாறிச்சென்று அங்குள்ள சுரங்கப்பகுதி சிறையில் சிறைபிடிக்க ஏற்பாடு செய்யச்சொன்ன தேவசேனாவின் திட்டம் கச்சிதமாக நிறைவேறும் படி ஆதித்யனும் குதிரைகள் சென்ற பாதையில் சென்று கொங்கு வீரச்சிங்கங்களிடம் சிறைப்பட்டுச்சினந்தான்.
பல வீரர்கள் சென்றும் செய்தி ஏதும் வராதது கண்டு கலங்கினார் வயதான மதியன். ஒற்றர்களாலும் கண்டு பிடிக்க இயலாமல் போனதால் வீரர்களின் மனைவிகளும், அவர்களின் உறவுகளும் அரண்மனையைச்சூழ்ந்து மன்னருக்கு எதிராக கலகம் செய்தனர்.
நிலைமை இவ்வாறிருக்க ஆயிரக்கணக்கான அந்நிய படையான வளவ தேசத்து வீரர்களுக்கு உணவளித்து ஓய்வெடுக்க வைக்க விரும்பாத தேவசேனா அவர்களை வைத்தே நீர் போகும் பெரிய வாய்க்காலை வெட்ட வைத்தாள். அந்நிய தேசத்தைப்பிடிக்க வந்து அடிமையானதை நினைத்து கலங்கினாலும், மூன்று வேளையும் உணவு கிடைப்பதை நினைத்து கடுமையாக உழைத்தனர் வளவ வீரர்கள்.
கொங்கு தேசத்தில் மழை கொட்டித்தீர்த்தது. அணைகள் நிரம்பியது போக உபரி வெள்ளம் எப்போதும் போல் கடலுக்குள் கலக்காமல் கைதிகளை வைத்து தோண்டிய வாய்க்கால் மூலமாக வளவ நாட்டிற்குள் திருப்பி விடும்படி கட்டியிருந்த மதகுகளைத்திறக்கச்சொல்லி இளவரசி தேவசேனா கட்டளையிட சீறிப்பாய்ந்து சென்ற வெள்ளம் அங்குள்ள வளவ தேசத்து அணைகளை நிரம்பின.
இந்தக் கண்கொள்ளாக்காட்சியைக்கண்ட வளவ தேசத்து மக்கள் பல வருடங்களாக வறட்சியின் பிடியிலிருந்து மீளப்போவதை எண்ணி மகிழ்ந்தனர். அதே சமயம் ‘தம் தேசத்தில் மழையே பெய்யாமல் திடீரென காட்டாற்று வெள்ளம்போல் ஆற்றில் நீர் வந்தது எப்படி?’ என மன்னர் உள்பட பலரும் ஆராய்ந்த போது தான் கொங்கு தேசத்திலிருந்து வாய்க்கால் வெட்டியதில் நீர் வந்ததை அறிந்து நன்றி தெரிவித்து ஓலை அனுப்பினார் வளவ தேசத்து மன்னர் கொங்கு மன்னருக்கு.
ஆதித்யன் உள்பட அனைத்து வீரர்களையும் எல்லையில் கொண்டு வந்து விடுதலை செய்து வளவ தேசத்துக்கு அனுப்பிய போது தேவசேனாவை கடவுளாக நினைத்து அனைவரும் வணங்கினர். ஆதித்யனோ வீரத்தை முற்றிலும் துறந்து தேவசேனாவின் காலில் வீழ்ந்தான்.
“வீரத்தால் வெல்ல முடியாததை விவேகத்தால் வெல்லலாம். சிறு வயதில் எதிரி நாட்டு மன்னனின் தலையை வெட்டியது பெருமை அல்ல. அதை தகுதியாக வைத்து ஒரு நாட்டு இளவரசியை மணம் முடிக்க ஓலை அனுப்பியது கோழைத்தனம். நீங்கள் போர் தொடுக்க வந்த போது நாங்களும் எதிர்த்து போரிட்டிருந்தால் இரண்டு பக்கமும் பல வீரர்கள் மாண்டிருப்பர்.
எங்கள் தேசத்து செல்வங்களைக்கொள்ளையடித்துச்சென்றிருப்பீர்கள். என்னை தங்களுக்கு மனைவியாக்கி பத்தோடு பதினொன்றாக அரண்மனை அந்தப்புரத்தில் அடைத்து விட்டிருப்பீர்கள். அவை சில காலம் மட்டுமே உங்களுக்கு பயன்பட்டிருக்கும். மீண்டும் வேறொரு நாட்டின் மீது போர் புரியத்தோன்றும். நல்ல மனிதநேயம் மிக்க மன்னராக ஆட்சி புரியாமல் கொள்ளைக்காரர்களாக மாறியிருப்பீர்கள். நிரந்தரமாக உங்களது வறுமையைப்போக்க எங்களிடம் மிகுதியாக இருக்கும் தண்ணீரை கடலுக்குப்போய் வீணாகாமல் தடுத்தாலே போதும் என யோசித்து இந்த முடிவெடுத்தேன். இனி மண் வளம் மிகுந்த உங்கள் வளவ நாட்டில் பூமி உள்ளவரை உலக நாடுகளுக்கெல்லாம் உணவளிக்கும் அளவுக்கு விவசாயம் செழிக்கும். வளம் மிகுந்த நாடாக மாறும். இதற்கு கைமாறாக எந்த நாட்டின் மீதும் இனி போர் தொடுக்க மாட்டோம் என என்னிடம் எழுதிக்கொடுங்கள்” எனக்கூறியவள், அதியனிடம் ஓலைச்சுவடியில் எழுதி கையெழுத்து வாங்கிக்கொண்டாள்.
தம் தேசத்து போர்படைத்தளபதியும், தமக்கு தற்போது வரை ஆலோசகராக இருப்பவருமான பரஞ்சோதியை மணக்கப்போவதாக தம் நாட்டு மக்களிடம் அறிவித்தாள் கொங்கு தேசத்து மன்னர் அதியனின் மகள் இளவரசி தேவசேனா.
சூழ்ச்சி விவாகத்தை ஒதுக்கி மகிழ்ச்சி விவாகத்தை ஏற்ற தமது தேசத்து இளவரசியை கொங்கு தேசத்து மக்கள் மலர் தூவி வாழ்த்தினர். வளவ தேசத்து மக்களும் தண்ணீர் கொடுத்த தாரகை என மனதார வாழ்த்தினர்.
கதையாசிரியர்:
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |