வியர்வையின் ஸ்வரங்கள்
கதையாசிரியர்: சு.அப்துல் கரீம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2026
பார்வையிட்டோர்: 977
வீட்டு வாசலில் எப்போதும் ஒரு “கமகமப்பு” மணம் மாட்டிக்கொண்டு இருக்கும்.
அது மல்லிகை வாசனையல்ல; காய்ந்த உப்பின் உறைப்பும், முதல் மழைக்குப் புழுங்கிய ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் மண் நெடியும் பின்னிப் பிணைந்த ஒரு மணம்.
அந்த மணம் மூக்கைத் துளைக்கும்போதே, சிங்காரத்தின் விரல்கள் அவனது உடைந்த மொபைல் திரையில் எஃப்.எம். செயலியைத் தேடத் தொடங்கிவிடும்.
“பூபாளம் இசைக்கும்… பூமகள் ஊர்வலம்…”
அந்தக் காலத்து இளையராஜாவின் இசை உயிர்த்தது.
“சாந்தி…
இந்தச் சுருதி, விடியக்காலத்துல கேக்கறதுக்கு எவ்ளோ இதமா இருக்கு பாரு!”
சிங்காரம் காற்றை கைகளால் அளந்தபடி கூப்பிட்டான்.
“சுருதி இருக்கட்டும். நேத்து ஒங்க ஃபோன எதுக்கு உப்புக்குள்ள புதைச்சு வச்சீங்க?
காணுமின்னு தேடுனா மூட்டைக்குள்ளருந்து சவுண்டு வருது…”
கையிலிருந்த துடைப்பத்தின் அடியை ஒரு முறை தரையில் தட்டிக்கொண்டே, சமையலறைக்குள் நுழைந்தாள்.
“அது ஒண்ணுமில்ல சாந்தி… உப்புக்குள்ள போட்டா கெட்டுப் போகாதுன்னு சொல்லுவாங்க பாரு…”
அவன் கண் சிமிட்டினான்.
“ரொம்ப அறிவு! அந்தப் போன்ல சார்ஜ் கொஞ்சம்தான் இருக்கு. அது அணைஞ்சு போறதுக்குள்ள சார்ஜ் போடுங்க!”
சொல்லிவிட்டுச் சமையலறைப் புகைக்குள் அவள் மறைந்தாள்.
ஆண்ட்ராய்டு போனின் கரகரப்பைத் தாண்டி, இளையராஜாவின் புல்லாங்குழல் மெதுவாக இடம் பிடித்தது.
சிங்காரம் உதடுகளைச் சற்றே திறந்தான்.
ஒரு ஸ்வரம் தொண்டைக்குள் எழுந்தது.
பாதியிலேயே அது நின்றது.
உதடுகள் சிரிப்பாக மடிந்தன.
கண்கள் மூட, தலையசைவு ஒரு தம்புராவின் மென்மையான நடுக்கத்தைப் பிடித்துக்கொண்டது.
வாசலில் சாந்தி தெளித்த தண்ணீரின் “சளக்… சளக்…” சத்தமும், புல்லாங்குழலின் ஓட்டமும் சேர்ந்து, அவன் உள்ளங்காலில் ஒரு ஒழுங்கை கட்டிப் போட்டன.
***
குளித்துவிட்டு, ஈரத் துண்டால் தலையைத் துடைத்துக்கொண்டே வந்த சிங்காரம், திண்ணையில் அமர்ந்திருந்த தன் மகன் கார்த்திக் பக்கத்தில் உட்கார்ந்தான்.
“டேய் கார்த்தி…” என்று தொடங்கி, தலையைச் சற்றே சாய்த்துக் கொண்டு, தூரத்திலேயே ஏதோ பார்த்தபடி சிரித்தான்.
“உங்கப்பன் மட்டும் நினைச்சிருந்தா, இந்நேரம் பெரிய சங்கீத வித்வானா ஆயிருப்பேன்டா.”
கார்த்திக் சிரித்தான்.
“நீங்களா?”
அவன் கண்கள் விரிந்தன.
சிங்காரம் சிரித்துக்கொண்டே தூரத்தைப் பார்த்தான்.
“உனக்குத் தெரியாதுடா…
அப்போ நான் சின்னப் பையன்.
உங்க தாத்தா அந்தப் பெரிய வூட்டுல தோட்ட வேலை பாக்கும்போது, நானும் கூடவே போவேன்.
அவர் செடிக்குத் தண்ணி ஊத்துவாரு… நான் பூவாளியைத் தூக்கிட்டு, அங்கயும் இங்கயும் ஓடுவேன்.
ஆனா என் கவனம் எல்லாம் வேற இடத்துலதான் இருக்கும்.”
ஒரு கணம் நின்றான்.
அவன் உதட்டோரம் காரணமே இல்லாத ஒரு மென்மையான சிரிப்பு வந்து நின்றது.
“அந்தப் பெரிய வூட்டு மேமாடியில தினமும் சங்கீத கிளாஸ் நடக்கும்.
தம்புரா ‘ம்…’ன்னு ரீங்காரமா பாடும்…
அதுக்குள்ள வாத்தியார் ‘ஸா… ரி…’ன்னு இழுப்பாரு…
அந்தச் சத்தம் கேட்டாலே… கையில இருக்குற பூவாளி அப்படியே நின்னுடும்.
நான் கீழ நின்னுக்கிட்டு, செடிக்குத் தண்ணி ஊத்துற மாதிரி பாவ்லா பண்ணுவேன்…
ஆனா காது மொத்தமும் மேலதான் இருக்கும்!”
கார்த்திக் சிரித்தான்.
“சில நேரம்… நான் தண்ணி ஊத்துறதையே மறந்து நின்னிருக்கேன் டா”, சிங்காரம் கண்ணைச் சிமிட்டினான்.
“ஒரு நாள்… ஆர்வம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு.
கீழ நின்னுக்கிட்டே, வாத்தியார் பாடுறதுக்கு இணையா நானும் வாயைத் திறந்தேன்.
நான் ‘ஸா…’ன்னு அடித் தொண்டையில இருந்து ஒரு பிடி எடுத்தேன்—
மேல மாடியில இருந்த வாத்தியாரு என்னோட சத்தம் கேட்டு பயந்துட்டாரு.
‘யாருடா அது கீழ? செடிக்குத் தண்ணி ஊத்தி வளர்க்காம, பாட்டு பாடியே வளர்க்கப் போறனா?’ன்னு கேட்டாரு!”
கார்த்திக் வாயை மூடிக்கொண்டே சிரித்தான்.
சிங்காரமும் சேர்ந்து சிரித்தான்.
“நா விடலடா… பெரிய வித்வான் மாதிரி நெஞ்சைத் தூக்கிக்கிட்டு, ‘ஸா…’ன்னு மறுபடியும் இழுத்தேன்.”
அவன் சற்று இடைவெளி விட்டான்.
“வாத்தியார் முகத்துல சிரிப்பு வந்துருச்சு.
‘டேய் சிங்காரம், உன்னோட குரல் அப்படியே உப்பு விக்கிறவன் குரல் மாதிரி கணீர்னு இருக்குடா’ன்னு சொன்னாரு.”
சொல்லிவிட்டு, பலமாகச் சிரித்தான்.
அந்தச் சிரிப்பு ஒரு நொடி தாமதமாக வந்தது.
கார்த்திக் சிரிக்கவில்லை.
அவன் அப்பாவின் முகத்தை ஒரு நொடிக்கேனும் கூர்ந்து பார்த்தான். அந்தச் சிரிப்பில் எங்கேயோ ஒரு மெல்லிய கீறல்.
“அப்பா…
அவரு உங்களை அசிங்கப்படுத்தியிருக்காரு. அதை ஏன் இவ்வளவு பெருமையா சொல்றீங்க?”
சிங்காரம் தோள்சாய்த்தான்.
“அடப்போடா!
எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதுக்கு, அவருக்குத்தான் கொடுத்து வைக்கல.
அதுக்காக நான் ஏன் அசிங்கப்படணும்?
சங்கீதம்னா என்னடா? புத்தகத்த தூக்கிக்கிட்டு உட்காருறதா?”
ஒரு கணம் நின்றான்.
பிறகு வாயோரம் சிரிப்பு மீண்டும் முளைத்தது..
“அது கெத்து டா.
உள்ளருந்து வரணும்.
அவ்வளவுதான்.”
அவன் சிரித்தான்.
அந்தச் சிரிப்பு, கார்த்திக் முகத்தில் ஒரு நொடி ஒட்டியபடி வழுக்கி விழுந்தது.
அவன் பாதத்தில் உருத்திய உப்புத் துகள்களை, காலின் முனையால் மெதுவாக ஒதுக்கினான்.
***
வெயில் ஏறத் தொடங்கியது.
தார்ச் சாலையில், உப்பு கரிப்பது போல ஒரு மிரட்சி.
சிங்காரம் தன் டிவிஎஸ் எக்ஸல் வண்டியை, ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் நிழலில் தடுத்து நிறுத்தினான்.
மொபைலில் ஓடிக்கொண்டிருந்த ரீல்ஸை அலட்சியமாய் தள்ளி, எஃப்.எம். சத்தத்தைக் கூட்டினான்.
“கூந்தலிலே மேகம் வந்து…
குடி புகுந்தாளோ கவியெழுத…”
பாட்டு ஒலிக்க,
“என்ன பாட்டுடா இது!”
தனக்குள்ளே சிரித்தான்.
அளவுப்படியின் விளிம்பில்,
அவன் விரல்கள் ‘தக்கதிமி’ யைப் போட்டன.
மாடி வராந்தாவிலிருந்து எட்டிப் பார்த்த அந்தப் பெண்மணிக்கு, அந்தச் சத்தமே அழைப்பானது.
டப்பாவை நீட்டியவளின் முகத்தில் சுருக்கம் விழுந்தது.
“என்னப்பா இது?
போன வாரம் கொடுத்தது சுருக்குனு நாக்கைத் துளைக்குது. உப்புன்னா பக்குவம் வேண்டாமா?”
சிங்காரம் அளவுப்படியைச் சட்டென நிறுத்தினான்.
அவன் பார்வை,
ஒரு நொடி கடினமானது.
அளவுப்படியே அசையாமல் நின்றது.
“என்னம்மா இப்படிச் சொல்லிட்டீங்க?
போன வாரம் மழை, உப்பு நமநமத்திருக்கும்.
இப்ப இந்த உப்பை அள்ளிப் பாருங்கம்மா…
அப்படியே காத்துல மிதக்குற ‘கல்யாணி’ ராகம் மாதிரி கலகலன்னு பேசும்!”
ஒரு கைப்பிடி உப்பை அள்ளி, அவளிடம் காட்டினான்.
அவன் உள்ளங்கையில்,
அந்தத் துகள்கள் வைரங்களாய் மின்னின.
“எதுக்கும், உங்க வூட்டுக்காரரை சமையல்ல உப்பைக் கொஞ்சம் அளவாப் போடச் சொல்லுங்கம்மா……
அப்புறம் குறை சொல்லக்கூடாது!”
உதட்டின் ஓரத்தில், ஒரு சின்ன சிரிப்பு.
அவள் முறைக்க முயன்றாள்;
ஆனால் அவன் முகத்தில் இருந்த அந்த வெகுளித்தனமான சிரிப்பு, அவளையும் தொற்றிக்கொண்டது.
டப்பாவை வாங்கிக்கொண்டு திரும்பிய அவள் நடையில்,
ஒரு மெல்லிய லயம் சேர்ந்திருந்தது.
***
சாயங்கால மயக்கம் தெருவில் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.
சிங்காரத்தின் வண்டி தெருமுனையில் திரும்பியவுடனே, போனின் வானொலியிலிருந்து மனோவின் குரல் தேனாய் வழிந்தது—
“தூளியிலே ஆட வந்த…”
வண்டியின் வேகம் தானாகக் குறைந்து, ஒரு மெல்லிய மிதப்பில் தெருவுக்குள் நுழைந்தான் சிங்காரம்.
தூரத்திலிருந்தே அவன் வண்டி “கிச்… கிச்…” என்று தாளம் போட்டுக் கொண்டு வருவதைப் பார்த்தவுடனே, திண்ணையில் அமர்ந்திருந்த வெள்ளையம்மாளுக்கு ஒரு நமைச்சல் எடுத்தது.
“என்ன சாந்தி… ஒங்க வூட்டு வித்துவானு கச்சேரிய முடிச்சுட்டு வராரு போலருக்கே?
இன்னைக்கு எந்தெந்த ராகத்துல பாடி, யார் யாரையெல்லாம் ஏய்ச்சி உப்ப வித்தாருன்னு கேளேன்?”
என்று சொல்லி, சாந்தியை கண்ணால் குத்திவிட்டு ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
சிங்காரம் வண்டியை நிறுத்தினான்.
கையில் இருந்த உப்பை ஒரு நொடி பார்த்தவன், பிறகு வழக்கம்போல சிரித்துக்கொண்டே சொன்னான்…
“இந்தாங்கக்கா…
சுத்தமான கல்லுப்பு.”
வெள்ளையம்மாள் புருவத்தைச் சுருக்கினாள்.
“எனக்கெதுக்கு உப்பு?”
சிங்காரம் உப்பை டப்பாவில் ஊற்றிக்கொண்டே சிரித்தான்.
“இத வைச்சுப் பல்லு விளக்கிப் பாருங்க…
நல்லதா நாலு வார்த்த வாயிலருந்து வந்து விழும்…”
அந்த நொடியில், அருகிலிருந்தவர்களிடம் ஒரு சிரிப்பு பரவியது.
முதலில் முறைத்த வெள்ளையம்மாள், அந்தச் சிரிப்பின் காற்றில் தானும் கரைந்தாள்.
சிங்காரம் சாந்தியிடம் மெல்லக் கண் ஜாடை காட்டினான்.
“ஒண்ணும் வம்பு பண்ணல சாந்தி…
அவங்க தினமும் ‘பைரவி’ பாடுறாங்க.
நான் நம்ம ‘மோகனத்தை’ காப்பாத்திக்கிறேன்.
அவ்வளவுதான்!”
***
இரவு மழை பெய்யத் தொடங்கியபோது,
வானொலியின் சிக்னல் தட்டுத்தடுமாறி, ஒரு கரகரப்போடு மூச்சொலியை இழந்தது.
ஒரு கண நிசப்தம்.
பிறகு-
ஈரக் காற்றின் ஊடே ஒரு மெல்லிய இழை கசிந்து வந்தது.
“நீ பாதி…
நான் பாதி கண்ணே…”
சிங்காரம் போனை மடியில் வைத்தபடியே, கூரையைப் பார்த்துக் கிடந்தான்.
அருகே, கோரைப்பாயில் சாந்தி புரண்டு கொண்டாள்.
“க்ஹ்ர்…
க்ஹ்ர்…”
அவளது குறட்டை,
கூரையில் விழும் மழையோடு சேர்ந்து ஒரு ஒழுங்கு பிடித்தது.
அவளது கையை,
தன் கரடுமுரடான விரல்களால்
ஒரு நிமிடம் மென்மையாகப் பற்றி வருடினான்.
கைகளில் ஒட்டிய மசாலா வாசனை மட்டும்
ஈரத்தோடு கலந்து காற்றில் நின்றது.
ஒரு துளி.
இன்னொரு துளி.
கூரையின் ஓரத்திலிருந்து கசியத் தொடங்கிய நீர், தரையில் மெல்ல ஒரு கோடு இழுத்தது.
அந்த கோடு,
கோரைப்பாயின் ஓரத்துக்கு நெருங்கியது.
அதே நேரம்,
மறுபக்கம் மூலையிலிருந்த உப்பு மூட்டைகளின் மேல் ஈரம் மெல்லப் பரவியது.
உப்பின் மேல் ஒட்டியிருந்த காகிதச் சாக்கு,
ஒரு இடத்தில் சுருங்கத் தொடங்கியது.
சிங்காரம் எழும் முன்பே,
கார்த்திக் இருட்டில் பாய்ந்தான்.
ஒரு பழைய எவர்சில்வர் அண்டா.
ஒரு பிளாஸ்டிக் வாளி.
அண்டாவை உப்பு மூட்டையின் ஓரம் சரித்தான்.
வாளியை சாந்தியின் தலைமாட்டுக்கு அருகே லாவகமாக இறக்கினான்.
மழை வேகம் எடுத்தது.
அடுத்த நிமிடம்—
போனின் திரை அணைந்தது.
அறை முழுக்க இருள்.
டார்ச் ஒளிர்ந்ததும்,
மஞ்சள் வெளிச்சம் சுவர்களில் நடுங்கியது.
அண்டாவில் விழுந்த முதல் சொட்டு—
“டிங்…”
அதற்குப் பதிலாக,
வாளிக்குள்—
“டொக்… டொக்…”
தகரக் கூரையில் மழை இடைவேளையில்லாமல் தாளம் பிடித்தது.
சிங்காரம் தொடையில் விரல்களால் தட்டினான்.
சொட்டுகளின் ஒழுங்கோடு அவன் தாளம் மெல்ல ஒன்றிணைந்தது.
கார்த்திக் பக்கம்
அவன் ஒரு கண் சிமிட்டினான்.
“டேய் கார்த்தி…
இந்தச் சத்தத்தைக் கேட்டா, நாளைக்கு ஒரு கச்சேரிக்கே ஏற்பாடு பண்ணிடலாம் போலருக்கே!
எப்படி தாளம் தப்பாம விழுது பாரு…”
அண்டா மெதுவாக நிரம்பியது.
வாளியில் நீர் மேலேறியது.
உப்பு மூட்டையின் அடியில்
கரையத் தொடங்கிய துகள்கள்
தரையில் வெள்ளை கோடுகளாய் வழிந்தன.
கரையும் உப்பைக் கண்டு
ஒரு கணம் அவன் விரல்கள் நின்றன.
ஒரு ஸ்வரம் தொண்டைக்குள் எழுந்து,
பிடியாதபடி நின்றது.
உதடுகள் சற்றே இறுகின.
முகம் முழுக்க அமைதி.
அவன் மூச்சு கூட
ஒரு கணம்
தாளம் பிடிக்காமல் நின்றது.
அடுத்த நொடி—
தாளம் மீண்டும் தொடங்கியது.
கார்த்திக் தந்தையைப் பார்த்தான்.
அப்பாவின் முகம் அசையவில்லை;
உதடுகள் மட்டும்—
அந்தத் தாளத்தை விட்டுப் போகவில்லை.
கண்களில் மஞ்சள் டார்ச் வெளிச்சம்
மின்னி மறைந்தது.
கார்த்திக் கையில் இருந்த டார்ச்
ஒரு நொடிக்கு தள்ளாடியது.
திண்ணை முழுக்க சிதறியிருந்த உப்புத் துகள்கள்,
சிங்காரத்தின் காலடியில் மெதுவாக உரசியது.
அவன் கவனிக்கவில்லை.
***
மறுநாள் விடியற்காலை.
இரவு முழுக்கத் தன் பாட்டைக் கொட்டித் தீர்த்துவிட்டு, பூமிக்குத் தாகம் தீர்த்த திருப்தியில் மழை ஓய்ந்திருந்தது.
சாந்தி மெல்ல எழுந்தாள்.
நேற்று இரவு சார்ஜ் தீர்ந்து உயிரற்றுக் கிடந்த மொபைலை எடுத்தாள்.
“இவரு எப்பவுமே இப்படித்தான்…”
என்று முணுமுணுத்தவாறே, மின்சாரப் பிளக்கில் மாட்டினாள்.
அதில் வருத்தம் இல்லை.
திரையில் உயிர் வந்ததும்,
விரிசல் விழுந்த கண்ணாடி மேல் ஒட்டியிருந்த உப்புத் துகள்களை சேலைத் தலைப்பால் மென்மையாகத் துடைத்தாள்.
சற்று நேரத்தில் பேச்சும் மூச்சும் திரும்பிய மொபைலை மெல்லத் திறந்து, அவன் தலைமாட்டில் வைத்தாள்.
“உன்னிடம் மயங்குகிறேன்…
உள்ளத்தால் நெருங்குகிறேன்…”
யேசுதாஸ் குரல் அறை முழுக்க கசியத் தொடங்கியது.
சிங்காரம் கண் விழித்தபோது,
அவன் செவிகளில் விழுந்த முதல் சத்தம்—
அந்தப் பாடலும், வாசலில் சாந்தி தெளிக்கும் தண்ணீரின் “சளக்… சளக்…” சத்தமும்தான்.
சுருதி சுத்தமான அந்த அதிகாலையில்,
தண்ணீரின் தாளமும்
பாட்டின் ஸ்வரமும்
மௌனமாக ஒரே லயத்தில் சேர்ந்திருந்தன.
“இது மோகனமா… இல்ல பூபாளமா?”
உதடுகள் அசைந்தன.
ஒரு நொடி யோசித்து—
“பூபாளம்தான்.”
என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.
புன்னகையோடு கண்களைத் திறந்தான்.
***
வழக்கம்போல்.
இன்றும்.
வண்டி கிளப்பிய புகையினூடே அவன் குரல் கசிந்தது—
“உப்பூ… உப்பு…”
கிழக்கு வானம் இன்னும் நிறம் தேடிக்கொண்டிருந்தது.
சிங்காரத்தின் நெற்றி மெல்ல மின்னியது.
குளிர் இன்னும் காற்றில் இருந்தது;
ஆனால் உழைப்பின் வெப்பம் உடம்புக்குள் ஏறத் தொடங்கியிருந்தது.
வீட்டுக்குள்ளிருந்து கார்த்திக் ஓடி வந்தான்.
“அப்பா… நில்லுங்க… அப்படியே ராகமா ஒரு பாட்டு எடுத்து விடுங்க பாப்போம்!”
சிங்காரம் வண்டியின் கைப்பிடியில் விரல்களால் ஒரு தாளக்கட்டை மீட்டிவிட்டு, ஒரு கண் சிமிட்டினான்.
“டேய்…
உங்கப்பன் நான் பாட ஆரம்பிச்சா, தெரு முனையில இருக்கிற நாய் கூட சுதி பிசகாம குரைக்கும்டா!
அப்புறம் கச்சேரி முடிஞ்சு நான் கண்ணைத் திறக்கறதுக்குள்ள, நீயே இந்தப் படியை எடுத்துக்கிட்டு உப்பு அளக்கப் போயிடணும்…
பாத்துக்கோ!”
கார்த்திக்கின் சிரிப்பு காற்றில் சிதறியது.
வண்டி இன்ஜினின் “கிச்… கிச்…” சத்தம்,
ஒரு தம்புராவின் ஆதார சுருதியைப் போல நீண்டது.
சிங்காரம் தன் மார்புக் கூட்டை விரித்து,
ஒரு நீண்ட மூச்சை இழுத்தான்.
கண்கள் பாதி மூடியபடி,
புருவங்கள் மெல்ல உயர்ந்தன.
“இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே…
இன்பத்திலாடுது என் மனமே…”
பாடும் போது அவனது கீழ்தாடை சற்றே முன்செல்ல,
கழுத்தின் நரம்புகள் நுட்பமாகத் தெறித்தன.
குரல் அந்த அதிகாலை குளிரில் சற்று உடைந்தது.
ஆனால் அந்த உடைவுக்குள்ளும் ஒரு வசீகரமான இழை ஓடியது.
பாடல் ஒரு வரியிலேயே தடைப்பட்டபடி,
அவன் மீண்டும் கண்ணடித்தான்.
கார்த்திக் மொபைலைத் தூக்கினான். திரை ஒளிர, அவன் விரல் ‘ரெக்கார்டு’ பட்டன் மேல் நின்றது.
மொபைலைச் சற்றுத் தாழ்த்தி,
பாடிக்கொண்டே நகர்ந்த அப்பாவின் முதுகைப் பார்த்தான்.
வியர்வை உலர்ந்து, சட்டையில் வெள்ளையாகப் படிந்திருந்த உப்புக் கோடுகள் —
ஏறி இறங்கி,
மீண்டும் ஏறி —
ஒரு ஸ்வர வரிசை போல முதுகெங்கும் விரிந்திருந்தன.
அவன் பார்வை அங்கேயே நின்றது.
ரெக்கார்டு பட்டனைத் தொடும் விரல் அசையவில்லை.
ஏனோ, அதை அழுத்தணும்னு தோன்றவில்லை.
மெல்லப் புன்னகைத்தபடி,
மொபைலின் திரையைத் தட்டி இருட்டாக்கி, பையில் போட்டுக்
கொண்டான்.
“இன்பத்திலாடுது என் மனமே…”
சிங்காரம் பாடிக்கொண்டே தெருவின் முனையைத் தாண்டினான்.
குரல் மட்டும் மெல்லக் காற்றில் கரைந்தது.
சாந்தி வாசலில் நின்று,
அவன் மறைந்த திசையை ஒரு நிமிடம் பார்த்தாள்.
பின்னர் வீட்டுக்குள் சென்றாள்.
வாசல் தரையில்,
நேற்றிரவு கரைந்த உப்பின் கோடு —
உலராமல்,
வெள்ளையாகத் தங்கியிருந்தது.
அங்கே
ஒரு ராகம்
இன்னும் முடியாமல்
காலையின் ஈரத்தோடு கலந்து
மெல்ல ஒலித்துக்கொண்டிருந்தது.
![]() |
சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க... |

