விதை நெல்




(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அது ஒரு கிராமம். சடையன், வாய்க்கால் கரையில் சேறுபட்ட மண்வெட்டியைக் கழுவிக்கொண்டிருந்தான்.
கறுப்பண்ணசாமியும் அதே வாய்க்கால் கரைக்குச் சோற்று மூட்டையை எடுத்துக்கொண்டு வந்தான்.

“நேரத்திலேயே வந்துவிட்டாயே. கிணற்றடிப் படுகை சேறாகிவிட்டதா?” என்று மண்வெட்டியைக் கழுவிக்கொண்டே சடையன் கேட்டான்.
“இல்லை. பாதிதான் ஆச்சுது. வேறு அவசர வேலை இருக்குது; அதைப் பார்க்க வேண்டும்.”
“என்ன தம்பி, இதைவிடத் தலை போகிற காரியம்?” “மந்திரி கிராமத்துக்கு வருகிறாராம். மாவிலை, பனை ஒலைக் குருத்துக் கட்டவேண்டும்” என்று ரெவினியூ இன்ஸ் பெக்டர் ஐயா சொன்னார்.
“அப்படியா? ஆமாம், மந்திரி என்றால் யாரு?”
“மந்திரி என்றால் தெரியாதா? நம் ராஜ்ய மந்திரி தான்.”
“அவர் வந்து என்ன செய்வார்?”
“ஏன்? எல்லோருக்கும் நல்லது சொல்லுவார்.”
“வயிறு இல்லாமல் போகும்படி செய்வாரா?”
“நம்மைப் படைத்த முக்கண்ணனாலேயும் அது முடி யாதே… நல்ல மனிதர்கள் நல்லதைச் சொல்லத்தான் சொல்வாங்க.”
“அதைத்தான் நானும் சொல்கிறேன். ஆலமரம் நிழல் தருகிறது. நிழலிலே வழிப்போக்கன் தூங்கினால், முடிச்சவுக்கிறவன்களுக்கல்ல அதிருஷ்டம் அடிக்குது!”
“முடிச்சவுக்கிறவன் மாத்திரம் என்ன? அவனுக்கும் இந்த வயிற்றுக் கொடுமைதான். திருடினால் பணத்தைக் கொண்டுபோய்ப் பூசையா பண்ணுகிறான்?’
“இந்த வயிறு இருக்குமட்டும் இந்த எழவு விட்டுப் போகாது. மந்திரி வரட்டும். அவர் பாட்டன் வரட்டும். நீ சாப்பிடு.”
மண்வெட்டியைக் கழுவிக் காம்பு நீரை வழித்து வீட்டுச் சடையன் கரையேறிப் போய்விட்டான்.
அன்றைப் பாக்கிப் பொழுதுக்கு அவனுக்கு வேலை இல்லை. மூன்றுமா நிலத்துக்கு வேண்டிய உழவு வேலை முடிந்துவிட்டது. வயலைப் பணம் கொடுத்து வாங்க வில்லை; அவன் தகப்பனார் விட்டுப்போன சொத்து. வெயிலை விலைக்கு வாங்கவேண்டிய அவசியமில்லை. வெயில் சரியாக அடிக்காவிட்டால் வயல்கள் பாளம் பாளமாக வெடிக்குமா? பாளங்களாக வெடிக்காத வயல் கள் விவசாயத்தில் ஒருபடி மட்டம் அல்லவா? பிறகு ஆடிக் காற்று… காவிரி ஆற்றுத் தண்ணீர்! நல்ல வேளையாக அவைகளை விலை கொடுத்து வாங்கவேண்டிய வேலை இல்லை! உழவு மாடு – பணம்! உழவுமாடில்லை என்றால் மண்வெட்டிகளாவது வேண்டுமே. மண் வெட்டிகள் – பணம்! விதை நெல் – விளைந்ததில் ஒதுக்கி வைத்திருந்தால் சரிதான். விளையாத வருஷத்தில் வாங் கித்தானே ஆகவேண்டும். வாங்குவது என்றால் பணம் தானே?
அன்றைத் தினம் பாக்கிப் பொழுதுக்கு அவனுக்கு வேலை இல்லை. ஆனால், கவலை இருந்தது. சென்ற வருஷத்து வறள் சேதத்தில் விதைக் கோட்டை கட்ட நல்ல நெல் இல்லாமல் போய்விட்டது. இப்பொழுது வாங்கி யாகவேண்டும். வாங்குவதென்றால் பணம்தானே! அவனிடம் கொஞ்சம் பணம் இருந்தது. ஆனால், விதைக் கோட்டை விலைக்குக்கூடச் சுரம் அடித்துக்கொண் டிருந்தது – 105 டிகிரி! அன்றத் தினம் அதைப்பற்றி யோசித் துக்கொண்டே இருந்தான்.
மாலை நாலுமணி சுமாருக்குத் தலையாரி மாணிக்கம், ரெவினியூ இன்ஸ்பெக்டர் ஐயா அழைத்துக்கொண்டு வரச்சொன்னதாக வந்து சொன்னான்.
சடையனுக்கு அகாரணமாகப் பயம். “எதற்காக?” என்றான்.
”என்னிடத்தில் சொல்லவில்லை. உன்னைக் கூட்டிக் கொண்டு வா என்றுதான் சொன்னார்.”
“எனக்குப் பயமாயிருக்கிறது. நான் இல்லை என்று சொல்லிவிடேன்.”
“நான் சொன்னால் நம்பமாட்டாரே. அவன் செத்தா போய்விட்டான் என்று கேட்பாரே. என்ன பயப்படு கிறாய்? திருடினாயா, குடித்தாயா, புதையலை மறைத்து வைத்துவிட்டாயா? – சும்மா வா” என்றான் தலையாரி.
ரெவினியூ இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் போனபோது, அங்கே கொஞ்சம் கும்பலாக இருந்தது. சடையனைப் பார்த்த இன்ஸ்பெக்டர், ‘அவர்களோடு இரு என்று கும்பலைக் குறிப்பிட்டுச் சொல்லிச் சென்றார். நல்ல வேளை! கோடை மழை திடீரென்று நின்றுவிடுவதுபோல அவன் பயமும் விட்டுப் போயிற்று. பயம் விட்டுப் போனாலும் குடைச்சல் விடவில்லை.
“ஏன் அண்ணே! நம்மை எல்லாம் எதற்காக இங்கே கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள் – கசாப்புத் தொட்டி யிலே ஆடுகள் நிற்குமே, அந்தக் கணக்காய் இருக் கிறதே!”
”ஊருக்கு மந்திரி வரும்பொழுது விவசாயிகளைப் பார்க்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறாராம். நம்மை எல்லாம் அவரிடம் அழைத்துப் போவார்கள். அதற் காகத்தான்.”
சடையனுக்குச் சந்தேகம் வந்துவிடது.
“சட்டை இல்லாமல் மந்திரியைப் பார்க்கலாமா?” என்றான்.
“நாங்கள் எல்லாம் சட்டையா போட்டுக்கொண் டிருக்கிறோம்?”
சடையன் அந்த விஷயத்தை அதோடு விட்டு விட்டான்.
பத்துப் பதினைந்து நிமிஷம் கழிவதற்குள் ரெவினியூ இன்ஸ்பெக்டர் கிளம்பி விட்டார். அங்கு நின்றிருந்தவர் களை எல்லாம் கிராமச் சாவடிக்கு அழைத்துக்கொண்டு வரும்படி கிராமக் கர்ணத்திற்கு உத்தரவிட்டு விட்டுப் புறப்பட்டார்.
அரை மணி நேரத்திற்குள் எல்லோரும் சாவடியை அடைந்தனர். சாவடியில் பெரிய கூட்டம். அந்தப் பக்கத்துப் பெரிய மனிதர்களும் உள்ளூர்ப் பிரமுகர்களும் குழுமி இருந்தனர். சடையனும் அவனைப் போன்றவர் களும் கும்பலில் மூலைக்கு ஒருவராக நின்றுகொண்டிருந்தார்கள்.
கிராமக் கர்ணம் பரபரப்புடன் கும்பலில் புகுந்து, விவசாயிகள் எல்லோரையும் ஒவ்வொருவராகக் கண்டு பிடித்து, ஒரு பக்கமாக நிறுத்திக்கொண் டிருந்தார். ‘புது நாட்டுப் பெண் கணக்காக நெளிந்துகொண்டு நிற்கிறாயே!’ என்று சொல்லி, சடையனையும் தேடிப் பிடித்து இழுத்து, மற்றவர்களுடன் ஒருபுறத்தில் கொண்டுபோய்க் கர்ணம் நிறுத்தினார். இதற்கிடையில் ரெவினியூ இன்ஸ்பெக்டர் பரபரவென்று வந்து ஒரு கண்ணோட்டம் விட்டுவிட்டுத் திரும்பினார்.
அதற்குள் மோட்டார் வரும் சத்தம் கேட்டது. மறு விநாடியில் மந்திரி சாவடிக்குள் புகுந்தார். ஆளுக்கு ஒரு மலர் மாலையாக அவருக்கு அணிவித்துத் தங்களை விளம்பரம் செய்துகொண்டார்கள். மந்திரி அவைகளை எல்லாம் அவசரமாகக் கழற்றிவிட்டுச் சாவடியில் போட் டிருந்த நாற்காலியில் உட்காராமல் கீழே போட்டிருந்த ஜமக்காளத்தில் எதிர்பாராத விதமாக உட்கார்ந்தார்.
சடையன், மந்திரி உட்கார்ந்த இடத்துக்கு வெகு அருகில் இருந்தான். மந்திரியை நன்றாகப் பார்க்க முடிந்தது. நல்ல முகம்தான். ஆனால் கழுத்தில் போட்ட மாலைகளை எல்லாம் அவர் ஏன் போட்ட அவசரத்துடனே கழற்றிவிட்டார் என்பது அவனுக்கு விளங்கவில்லை.
அதைப்பற்றி யோசித்துக்கொண் டிருந்தபோதே, மந்திரி விருட்டென்று எழுந்துவிட்டார்.
“நான் பார்க்கவேண்டும் என்று சொன்னவர்கள் தானே இவர்கள்?” என்று மந்திரி யாரோ ஓர் உத்தி யோகஸ்தரைக் கேட்டார்.
”ஆமாம்” என்றார் உத்தியோகஸ்தர்
அவ்வளவுதான். மந்திரி அந்த இடத்தை விட்டு இவர்கள் இருந்த இடத்துக்கு வந்துவிட்டார். மந்திரியை ஆவலுடன் சுற்றி நின்றுகொண் டிருந்த பெரிய மனிதர் கள் எல்லாம் வெட்கிப் போய்விட்டார்கள்.
மந்திரி அங்கே நின்றிருந்த விவசாயிகளைப் பொது வாக விசாரித்துவிட்டு, இங்கொருவர் அங்கொருவரிடம் குறிப்பாக ஏதோ கேட்டுப் பதில் பெற்றார். சடையன் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் மந்திரி வந்தபொழுது, சடையனுக்கு அநாவசியமாகப் பயம் ஏற்பட்டு விட்டது. என்னவென்று அவனுக்கே புரியவில்லை. அவசர அவசர மாக மேல் வேஷ்டியை எடுத்து முண்டாசு கட்டிக் கொண்டான். தன்னை ஒன்றும் மந்திரி கேட்காமல் போய்விட்டால் நல்லது என்று பிரார்த்தனை செய்து கொண் டிருக்கும்பொழுதே மந்திரி அவன் முன்பு வந்து நின்று விட்டார்.
“இந்த ஊர்தானா?” என்றார்.
தன்னைக் கேட்பதாக அவன் முதலில் நினைக்கவில்லை. மந்திரிக்குப் பின்னால் நின்றுகொண் டிருந்த ரெவினியூ இன்ஸ்பெக்டர் முழித்துப் பார்த்துக் கையைக் காட்டி யதன் பேரில்தான் பதில் சொல்ல ஆரம்பித்தான்.
“மூணு தலைமுறையா இந்த ஊரு தானுங்க.”
”நிலமிருக்கா?”
”கொஞ்சம் இருக்குதுங்க.’
“உழவு மாடு.”
“எங்க பாட்டனார் நாளிலே இருந்து மண் வெட்டி யாலேதான் கொத்துறோம்.”
“கடன் கிடன் இருக்கிறதா?”
“இல்லை.”
“பணம் சேர்த்திருக்கிறாயா?”
“இல்லை.”
“தேவல்லையே. உனக்கு ஏதாவது சொல்லவேண்டு மென்றால் சொல்லு.”
சடையன் ஒரு நிமிஷம் யோசித்தான்.
“போன வருஷம் சரியா விளையல்லை. விதைக் கோட்டை கட்டல்லை. விதை வேணும். பணம் இருக்கிறது. இங்கே ஊரிலெல்லாம் யானை விலை குதிரை விலை சொல்லுகிறார்கள்.”
மந்திரி திரும்பிப் பார்த்தார். கூட்டுறவுச் சங்கக் காரியதரிசி தென்பட்டார். ‘இவருக்கு விதை நெல் கொடுமையா” என்று சொல்லிவிட்டுச் சடையனை நோக்கித் திரும்பினார்.
“கடைத்தெருக் கோடியிலே கூட்டுறவுச் சங்கம் இருக்கிறதே,தெரியுமா?”
“தெரியாதுங்களே.”
“கும்பெனி என்றால்தான் இவர்களுக்குப் புரியும்”
என்று எடுத்துக் கொடுத்தார் தாசில்தார்.
“கும்பெனி தெரியுமா?”
“தெரியும்.”
“அங்கே போய் வாங்கிக்கொள். கொடுக்கச் சொல்லியிருக்கிறேன்.”
இதைச் சொல்லிவிட்டு மந்திரி நகர்ந்து விட்டார். சடையனைத் தட்டிக் கூப்பிட்டு, தவறாமல் மறுநாளைக்குக் கும்பெனிக்கு வந்து விதை நெல் வாங்கிச் செல்லும்படி நினைவுறுத்தினார் கூட்டுறவுச் சங்கக் காரியதரிசி.
மந்திரி இந்தப் பகுதியை விட்டு அப்புறம் சென்றதும் கிராம முனிசீப் ஏதோ ஜாடை காட்டினார். கூட்டத் தினர் அவ்வளவு பேரும் நழுவி விட்டார்கள்.
மந்திரியைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியோடு சடையன் வீட்டுக்குத் திரும்பினான்.
மறுநாள் காலையில் சடையன் கும்பெனி வாசலில் ஆஜரானான். கட்டிடத்துத் திண்ணையிலே இரும்புக் கலப்பைகளும், நவீன முறை விவசாயக் கருவிகளும் நிறைந்திருந்தன. தன்னைப்போன்ற குடியானவர்கள் இரண்டொருவரும் அங்கே உட்கார்ந்திருந்தனர்.
“இதுதானே கும்பேனி?” என்று அவசியம் இல்லாமல் கேட்டு வைத்தான்.
“ஆமாம். இங்கே என்ன வேலை?” என்றான் குந்தி யிருந்தவன்.
“விதை நெல் வாங்கப் போறேன். மந்திரி கொடுக்கச் சொல்லியிருக்கிறார்” என்று பெருமையோடு சொல்லிக் கொண்டான், சடையன்.
குந்தியிருந்தவனுக்கு இந்தப் பெருமை பொறுக்க வில்லை.”அதோ நின்றுகொண்டிருக்கிறாரே, வில்லை போட்ட சேவகர், அவரைக் கேட்டுவிட்டுப் போ. இல்லாவிட்டால் உள்ளே விடமாட்டான்” என்றான்.
மெய்தானென்று சடையன் சேவகனிடம் போனான். காக்கி உடுப்பும் சிவப்புத் தலைப்பாகையும் பளபளவென்று மின்னும் பித்தளை வில்லையுமாகப் பார்த்த உடனே தன்னை அறியாமலேயே தன் கைகள் சவுக்கத்தை எடுத்துச் சடையனுக்கு முண்டாசு கட்டிவிட்டன.
“என்ன வேண்டும்?”
‘விதை நெல் வேண்டும். மந்திரி இங்கு வந்து கேட்கச் சொன்னார்.”
சேவகனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“மந்திரியா? அது யாரு?”
“நேற்று வரவில்லையா, அவர்தான்.”
“நெல்லை வாங்கித்தர அவரை அழைத்துக்கொண்டு வரவில்லையா?” என்று நையாண்டி செய்தான்.
“அவர் சொல்லாவிட்டால் நான் வருவேனா?” என்று சடையன் ஏதோ சொன்னான். சேவகன் நம்பவில்லை. பைத்தியம் என்று முடிவு செய்துவிட்டு, அவனை உள்ளே போகவிடாமல் ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
காரியதரிசி அந்தச் சமயத்தில் அங்கே வந்து சேர்ந் தார். ‘விதை நெல் வாங்க வந்தாயா?’ என்று கேட்டுக் கொண்டே, உள்ளே அழைத்துக்கொண்டு போய் ஒரு குமாஸ்தாவினிடம் விஷயத்தைச் சொல்லி, ஒப்படைத்து விட்டுப் போய்விட்டார்.
காரியதரிசி சொன்னபொழுது சுறுசுறுப்புக் காட்டிய குமாஸ்தா, அவர் திரும்பிப் போன பிறகு இடையன் பூச்சியைப்போல் இடத்துக்கு இடம் தயங்கித் தயங்கி நிற்கத் தொடங்கினார். முதலில் மேஜைமேல் இருந்த கடுதாசுகளை அடுக்கி வைப்பதில் முனைந்தார்.
பிறகு, டிராயரில் உள்ள கடுதாசிகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, டிராயரை மூடினார். அதற்குப் பிறகு அலமாரிக் கடுதாசு களை ஒழுங்குபடுத்தினார். பிறகு கொத்துச் சாவியைத் தேடினார்.
கலப்பை பிடித்தால் மணிக்கணக்காக உழுகிற சடையனுக்கு, இந்த அரை மணி நேரம் நின்றதில் கால் கடுப்பெடுத்து விட்டது. கால் கடுப்பைவிடச் சூழ்நிலை மனத்துக்கு ஒவ்வவில்லை. சிறிது நேரத்திற்கு ஒருதரம் காலை மாற்றித் தேய்த்துக்கொண் டிருந்தான்.
இதற்குள் வாசல்புறத்தில் நின்ற சேவகன், இந்தக் குமாஸ்தா அண்டை வந்து சேர்ந்தான்.
“ஏனப்பா உன் பேரென்ன?” என்றான்.
“சடையன்.”
“என்ன சார்! இந்தச் சடையனுக்கு விதை நெல் கொடுக்கச் சொல்லி மந்திரி உத்தரவிட்டிருக்கிறாரு. சும்மா நின்றுகொண்டிருக்கிறீர்களே. அப்புறம் மந்திரி இடத்தில் போய் சொல்லிவிடப் போகிறான். இப்பொழுதெல்லாம் குடியானவர்களுக்கும் ஹரிஜனங்களுக்கும் அடிக்கிறது யோகம்” என்றான் சினிமா நடிகர் மாதிரி.
“அப்படியா சங்கதி? சடையருக்கு எவ்வளவு விதை நெல் வேண்டுமோ அளந்து விடு” என்று கூறிவிட்டுச் சடையனிடம் கணக்குக் கூறிப் பணம் வாங்கிக்கொண் டார். சடையன் சேவகன் பின்னே போனான்! ஓர் அறையில் சாக்கு மூட்டைகளாகக் கட்டிக் கிடந்தன. அங்கங்கே எலிகளோ அணில்களோ மூட்டைகளைக் கடித் திருந்த அறிகுறிகள் தென்பட்டன.
”ஆனால், விதை நெல்லைக் கோட்டை கட்டுவ தில்லையா? சாக்கில் கட்டினால் நன்றாக முளைக்காதே” என்றான் சடையன்.
“அதை எல்லாம் மந்திரியைத்தான் கேட்கவேண்டும்” என்று சொல்லிவிட்டு, சேவகன் நெல்லை அளந்து போட்டான்.
சடையனுக்குக் கட்டிடத்தை விட்டு வெளியேறினால் போதும்போல் இருந்தது.
ஒருவாறாக நெல்லை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
அன்றிரவு விதை நெல்லைச் சடையன் ஊற வைத் தான், நெல் தண்ணீரில் மிதந்ததைக் கண்டதும் வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘எலியும் அணிலும் நுழையக் கூடிய இடத்தில் சாக்கில் கட்டிப் போட்டால், இந்த மாதிரி ஆகாமல் போகுமா?’ என்று நினைத்துக்கொண்டு மேலே காரியத்தைப் பார்த்தான்.
விதைவிட்ட ஒரு வாரத்திற்கெல்லாம் சடையன் பயிரைப் பார்த்தான். பயிர் தெளிவாக இல்லை. பக்கத்து வயல் குடியானவர்களைக் கூப்பிட்டுக் காட்டினான்.
“இதென்ன சோறில்லாத பிச்சைக்காரன் மாதிரி இருக்கிறதே!”
“விதை நெல் எங்கே வாங்கினாய்?”
“கும்பெனியில்.’
“அட பாவமே! என்னைக் கேட்டால்கூடக் கொடுத் திருப்பேனே. ஆபீஸ்காரங்களுக்கு என்ன தெரியும்? நம்மைப்போல் இருக்கிறவர்களிடமிருந்து வாங்கித்தானே அவர்கள் விற்கிறார்கள்? ஆபீஸ் கொல்லையிலா விதை நெல் முளைக்கிறது?… நாம் மாத்திரம் என்ன யோக்கிய மாக இருக்கிறோம்?…”
”ஏன்?” என்று திடுக்கிட்டுக் கேட்டான் சடையன்.
“இந்த மளிகைக் கடை இருக்கிறதே, அதிலே நேற்று ஒரு சண்டை. சட்டைபோட்ட ஒருவர் ஒரு டம்ளரைக் கொண்டுவந்து, ‘இதிலென்ன பாருங்க?’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
”காபிப் பாத்திரம்” என்றார் கடைக்கார சாயபு.
“அது தெரியும். அடியிலே இருக்கிறதைப் பாருங்க.”
“என்ன தெரியல்லியே?’
“தெரியவில்லையா? நாளைக்குக் கண்ணாஸ்பத்திரிக்குப் போய்விட்டு வாங்க; உங்கள் கடையில் வாங்கின சர்க் கரைதான் இப்படிக் குந்தி இருக்கிறது. காபிக்குச் சர்க்கரை கேட்டால், பாயசத்து ரவாவையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறீர்களே” என்று கத்திக்கொண் டிருந்தார். சர்க்கரையில் ரவாவைக் கடைக்காரர் கலந்துவிட்டார் என்று புகார்…அதைப்போலத்தான் நாமும்…”
“எனக்குப் புரியவில்லையே.”
“நீ ஒரு மண்ணுள்ளிப் பாம்பு! ஒரு எழவும் தெரி யாது…அந்த ஆபீசர்களுக்கு என்ன தெரியும்? விதை நெல் என்று நாம் கொடுக்கிறதுதானே! விதை நெல்லில் கருக்காய் இருந்தால், அவர்கள் கண்ணுக்குத் தெரியுமா? விதை நெல்லே மழை விழுந்து கெட்டுப் போயிருந்தால் கண்டுபிடிக்க முடியுமா? சர்க்காரில் பணம் கொடுத்து வாங்கச் சொன்னால் நம்மை ஒத்தவர்களிடம் வாங்கு கிறார்கள். நாம் நல்ல பொருள் கொடுத்தால்தானே உண்டு? சர்க்கரையோடு ரவாவைக் கலந்தால்?”
”விதை நெல் என்று கேட்டால் குடியானவன் அக்கிரமம் பண்ணலாமா?”
”நாம் செய்யாவிட்டால் ஆபீஸிலே செய்யறாங்க… எத்தனை சின்னச் சம்பளம் வாங்குகிற ஆளுங்க இல்லை அங்கே! நல்ல விதை நெல்லை அவன் கூட மாற்றி விடலாமே..”
“இதெல்லாம் கதைமாதிரி இருக்கிறது; கவைக்கு உதவாது. இப்போ வழி சொல்லு. போன வருஷம் விளைவே சரி இல்லை. விதை நெல் இல்லாமல் போய் விட்டது. இந்த நாத்துப் பயிரானால் நெல்லே இருக்காது.. நாத்து வளருமா என்றுகூடத் தோணவில்லை.”
“ஒழிஞ்சு போ. நான் தருகிறேன் நாற்று’ என்ற தைக் கேட்டதும் பால் வார்த்தால்போல் இருந்தது, சடையனுக்கு.
கொதிப்படங்கி வீட்டுக்குப் போனான். திண்ணையில் உட்கார்ந்தவுடன் வேறு ஒரு கொதிப்பு எழுந்தது. இந்த நாத்துக்குப் பணம் கொடுக்க வேண்டுமே! அவனிடம் பணம் கிடையாது. எப்படிக் கொடுப்பது? யோசித்து யோசித்துப் பார்த்தான். ஒன்றும் புரியவில்லை.
கும்பெனிக்குப்போய்ச் சண்டை போடலாமென்று போனான். அங்கே அதே குமாஸ்தா உட்கார்ந்து கொண்டிருந்தார். அதே சேவகனும் சிவப்பு முண்டாசுடன் அவரிடம் நின்று கொண்டிருந்தான். அவர்கள் அருகில் போனதும் வந்த வேகம் ஏனோ அடங்கிவிட்டது. அதற்குப் பதிலாக, “மந்திரி எப்பொ வருவார்?” என்று கேட்டான்.
குமாஸ்தாவுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. ஒருதரம் சடையனை மேலும் கீழும் பார்த்தார்.
”நாளைக்கு வருவார்” என்று நிதானமாகக் கூறினார்.
உண்மை என்று நம்பிக்கொண்டு சடையன் திரும்பினான்.
“சடையா!” என்று கூப்பிட்டார் குமாஸ்தா.
சடையன் திரும்பினான்.
”எதற்காக மந்திரியைப் பார்க்கவேண்டும்?”
“கும்பெனியிலே கொடுத்த விதை நெல் நல்லா முளைக்குதென்று காட்டவேண்டும். அதற்குத்தான்” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.
“குமாஸ்தாவுக்கு விஷயம் புரிந்துவிட்டது. சின்னச் சம்பளம் வாங்குகிற கோஷ்டியில் சேர்ந்த அவனும் சேவகனும் கூட்டாகச் செய்த காரியத்தின் விளைவுதான் இது என்று புரியாமலா போகும்? திருட்டு அம்பலமாகிவிடுமே என்று திருடன் பயந்தால், திருட முடியுமா? செய்வதைச் செய்ய வேண்டியதுதான்; நடப்பது நடக்க வேண்டியது தான் என்பதுதானே சின்னச் சம்பளக்காரர் வேதாந்தம்.
“இதற்காகத்தானா! நாளைக்குச் சாயங்காலம் மந்திரி வருகிறார்.நீ நேரே சாவடிக்கு வந்துவிடு. நானும் வருகிறேன்” என்று நயமாகக் கூறினார்.
அவர் சொல்வது உண்மை என்று சடையனுக்குத் தோன்றவில்லை. பொய்யென்றும் தோன்றவில்லை.சிவனே என்று வீட்டுக்குத் திரும்பினான்.
– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |