விடைபெறுதல்
கதையாசிரியர்: ஆர்.சீனிவாசன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 4,654

வீதியின் இருபுறங்களிலும் சரி வர இடைவெளி இல்லாமல் சில மரங்கள் சமனின்றி நின்றன. மரங்களின் கிளைகள் வீடுகள் இருக்கும் பக்கத்தில் குறுகியும் வீதிப்பக்கம் நீளமுமாய் வளர்ந்திருந்தன. மரங்கள், நிறுத்தப்பட்டிருந்த கார்களைத் தவிர அந்த வீதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. மரங்களிலிருந்து உதிர்ந்த பூக்கள் வீதியின் இருபுறம் இருந்த வீடுகளின் மாடிகளிலும் முற்றத்திலும் அங்கங்கே திரட்டாய் பதிந்திருந்தன. மரங்கள் ஒரே இனத்தை சேர்ந்தவை அல்ல. அவை எந்த இனம் என சரியாக சொல்லமுடியவில்லை. அதில் ஒரு வகை உயரத்தில் ஓங்கி மஞ்சளும் சேற்று நிறச் சிவப்பும் கலந்த ஒரு விந்தை நிறத்தில் பரந்த இலைகளை கொண்டது, அது பூப்பதில்லை. இனொன்று சிறிதாய் இருப்பினும் கோவில் மணியைப்போல வடிவமுடைய மஞ்சள் நிற பூக்களை கொண்டது. இன்னோன்று நான்கு இதழ்களை கொண்ட சிவப்பு நிற பூக்களை புவித்தது. இரவு பத்தரை மணிக்கு ஊர் ஓரளவுக்கு அமைதியடைந்திருந்த நிலையில் அந்த வீதியில் நிலவியது மயான அமைதியெனக் கூறமுடியாது. கூர்ந்து கேட்டல் தூரத்து போக்குவரத்து சப்தத்துடன் சேர்ந்து அண்மை வீடுகளுக்கிலிறிந்து தொலைக்காட்சியின் மெல்லிய சப்தங்கள் கேட்கும். தென்றலில் இலைகள் அசையும் ஓசையை கேட்க இன்னும் நேரமாகும். தொலைக்காட்சி பேட்டிகள் அடங்கி அதன் பின் மானுடம் அடங்கும் வரை காக்கவேண்டும். அத்தருணம் வரை காக்க மனம் இருப்பவர்களுக்கு தென்றலில் உதிர்ந்த பூக்களை அத்தென்றல் மெதுவாய் வீதியில் நகர்த்தி செல்லும்போது தெருவிளக்குகளின் சோடியம் புகை வெளிச்சத்திற்கு அடியில் அவற்றின் வாழ்ந்து மடிந்த இதழ்களின் தோற்றங்கள் வேறு நிறங்களாக மாறுவதைக் காணலாம். சிவப்பு நிற பூக்கள் ஆரஞ்சாக, மஞ்சள் நிற பூக்கள் அம்பர் நிறமாக மாறுவது அக்காலம் வரை காப்பவர்களுக்கு மட்டும் காணக் கிடைக்கும் காட்சி. சிலப் பூக்கள் வெளிச்சத்தின் கீழ் ஒளி காய்வது போல அங்கேயே தங்கள் மாறிய நிறங்களை உலகிற்கு காட்டிக்கொண்டு கிடைக்கும். சில அந்த அற்ப சுகம்கூட வேண்டாமென அவசரமாய் நகரும். விடியும் போது இவை இரண்டின் நிறங்களும் மாறி உலர்ந்த கருப்பு நிறத்திற்கு மாறிவிடும். நகரத்தில் ஏகாந்த தருணங்கள் கிடைப்பதில்லை என புலம்புவார்கள் அடிப்படையில் சோம்பேறிகள்.
இன்னும் சிறிது நேரத்தில் போக்குவரத்து முழுவதும் நின்றுவிடும். ரயில், பேரூந்து நிலையங்களில் மட்டும் மனிதர்கள் போக்கிடம் தேடி காத்திருப்பார்கள். அவர்களுள் சிலர் போக இடமின்றி வானத்தின் கீழ் விதியின் பார்வைக்கு தங்களை சமர்ப்பித்து கிடப்பார்கள். அவர்களுக்கு இன்று நாளை என்ற வித்யாசங்கள் இல்லை. பார்களில் கடைசி குவளை கிடைக்கும்வரை காத்திருந்து அதன்பின் வெளியில் தள்ளப்படுபவர்களின் வீதி புறப்பாடு கிளம்ப இன்னும் சிறிது நேரம் இருக்கிறது. அயராது உழைக்கும் நகரம் தூங்குவதில்லை என்பார்கள் ஞானிகள். நகரம் சுவாசிக்கும் ஜீவி என்றும் சொல்வார்கள் அதே ஞானிகள். சுவாசிக்கும் ஜீவி யாவும் உறங்கவேண்டுமல்லவா? வாழும் ஜீவிகள் எல்லாம் உறக்கத்தில் கனாக்காணும். நகரங்கள் காணுமா?.
ஒரு புறம் முக்கிய தெருவும் இன்னோரு புறம் ஒரு ஏரியின் அணைக்கட்டும் வரையறைப்படுத்தியது அந்த வீதியை. முக்கிய தெருக்களுக்குத்தான் பெயர்கள் முற்றுசந்துகளுக்கு வெறும் எண்கள்தான். இடது வரிசையில் ஐந்தாம் வீடு இரு தெருவிளக்குகள் மத்தியில் நிலா வெளிச்சத்தில் மட்டும் தோய்ந்திருந்தது. தீவிர ஒளியும் மை இருட்டும் மாறி மாறி சீரான தளகதி இல்லா முகாரியை பாடின. ஒரு மாடிக் கட்டிடமான அந்த வீட்டின் குறுகிய தோட்டத்தில் பூத்து குலுங்கும் வீதி மரங்களின் பூக்கள் ஒன்றுகூட காணமுடியவில்லை. உதிர்ந்த மலர்களை ஏதோ ஒரு கை கவனமாய் எடுத்து எறிந்திருக்கவேண்டும். முகப்பு மதில் சுவற்றின் சிறிய இரும்பு ஒற்றை கதவைத் தாண்டி அத்தோட்டத்தை இரண்டாக பிரிக்கும் சிமெண்ட்டுப் பாதை. ஒரு பக்கத்தில் சில ரோஜாச் செடிகள் இன்னொரு பக்கத்தில் பருவமடையாத மாமரத்தின் அடியில் செங்கற்களால் சமச் சீரான சதுக்கம். பூத்திருந்த இரண்டு மூன்று ரோஜா மலர்களின் மேல் தெரு விளக்குகளின் வெளிச்சம் விழததினால் நிலா வெளிச்சத்தில் கருப்பாய் தோன்றின. சிமெண்ட்டு பாதை மூன்று படிகளின் மேல் உள்ள நிலையில் முடிந்தது. கதவின் மேல் சட்டத்தின் நடுவில் ஒரு சிலுவை ஆணியால் அறையப் பட்டிருந்தது. தோட்டத்தை ஒளிரவைக்க வெளி விளக்குகள் இல்லாமல் ஒரு மர்மமான தனிமையை உருவாக்கியது. நிலைக்கதவின் இடதுபுறம் கச்சிதமான இரண்டு மரத் தட்டுகள் கொண்ட செருப்பு ஸ்டாண்டில் மூன்று ஜோடி செருப்புகள், இரண்டு பெண் ஜோடிகள் மேல்தடத்தில், கீழ் தடத்தில் ஒரு ஆண் ஜோடி. மீதமிருந்த இடம் காலி.
நிலை தாழிடப்படவில்லை. நிலைக் கதவைத் தாண்டி பொது அறையில் ஒரே ஒரு மங்கிய ஸிரோ வாட் பல்பு ஒளியில் தெரிந்த அறையின் எளிமை மற்றும் சுத்தம் வீட்டாரின் கட்டுக்கோப்பாக வாழ்வதன் சாட்சி. மூன்றுக்கு இரண்டு சோபா செட், அதன் பின் சமையலறை சுவரோரம் மர உணவு மேஜை, அதில் இரண்டு நாற்காலிகள். சுவற்றில் தொங்கும் எப்பிஸ்கோப்பல் தேவாலயம் அச்சிட்டு வெளியிட்ட நாள்காட்டி ஜூன் மாத இதழில் நிலைகொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிக்கு பின் சுவற்றுடன் அடங்கிய கட்டுமான அலமிராவின் தள்ளும் கண்ணாடி கதவுகளுக்குள் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்கள். பெரும்பாலும் ஆன்மிகம் சம்பந்தப்பட்டவை. பதனிட்ட தோல் அட்டை கொண்ட பைபிள் அவற்றில் ஒன்று. மேல்தடத்தில் ஒரு அழகான இளம் ஜோடியின் திருமண புகைப்படம். ஜன்னலின் மேல் சட்டத்தில் கம்பியில் தொங்கும் நீல நிற திரை முக்கோணமாய் அதே நிற துணிப் பட்டையால் சுருக்கி பட்டனிடப்பட்டிருந்தது. மேஜையின் மேல் இரண்டு கண்ணாடிக் குவளைகள் அவற்றின் அடியில் ஒயின் கரை இன்னும் காயாமல் நீர் துளியாகவே இருந்தது.
முதல் படுக்கை அறையில் இரண்டு நபர் கட்டிலில் ஒரு பக்கம் அவள் வீற்றிருந்தாள். குவியல் குவியலாக ரோஜா மலர்களுக்குள். அந்த ரோஜாக்கள் நிச்சயமாக அந்த வீட்டு ரோஜாக்கள் அல்ல. ஒவ்வொன்றும் கூடைப் பூக்களிலிருந்து இதழ் கொட்டாமல் சீரான சிறிய காம்புகள் உடைய வாடாப் பூக்களாக மிக கவனத்துடன் பொறுக்கப்பட்டு, அவள் வீற்ற பின் கையினால் பரப்பப்பட்டவை. பூக்கள் அவள் உடம்பின் விளிம்பில் இடைவிடாமல் , ஒரு விளிம்பு வரைபடத்தை வரைந்தன. மெல்லிய வலை வேலைப்பாட்டால் நெய்யப்பட்ட வெள்ளை முக்காடு பின் தலையிலிருந்து தோள்கள் வரை கவனத்துடன் விரிக்கப்பட்டு, கிறிஸ்துவ வெள்ளை மண ஆடை அவளின்மேல் அணிவிக்கப்பட்டிருந்தது அல்லது அவளே அதை அணிந்த பின் படுத்திருக்கலாம் எனவும் தோன்றியது. ஆனால் பூக்கள் அவளே தன் மேல் நிச்சயமாக தூவிக்கொண்டவை அல்ல. உடலெங்கும் பரவிய மலர்கள், மார்பின் மீது மட்டும் நிற்கவில்லை. மார்பகங்களின் வளைவில் அவை நிலை கொள்ளமுடியவில்லை. அதைத்தவிர இடை, கால்களில் பூக்களின் குவியல் அழகாக அவளின் வெள்ளை ஆடையின் மேல் படிந்திருந்தது. இருகைகளும் வெள்ளை கை கவசத்தால் மூடப்பட்டு மார்புக்கு சற்று கீழ் கோத்து விரல்களை சுருட்டி அதில் ஒரு பூச்செண்டின் காம்பு பொருத்தப்பட்டிருந்தது. பூச்செண்டில் இருந்த ரோஜா பூக்கள் அவளின் மார்பகத்தின் நடுவில் கலையாமல் நிலை கொண்டிருந்தன. தலைக்கு மேல் இருந்த மர ஜன்னல்களிருந்து வீசும் தென்றல் அந்த பூக்களின் வாசத்தை அறையெங்கும் பரப்பியது. தலையணை பக்கத்தில் மேஜையின்மேல் அவளின் கல்யாண நாளன்று எடுத்த புகைப்படத்தில் அவள் முகத்தில் படர்ந்த புன்னகை இப்போது அவளின் உதடுகளில் காண முடியவில்லை. கணவனை அண்ணார்ந்து பார்த்த பார்வையில் இருந்த வெட்கம் கலந்த கனிவு இப்போது அவளுடைய மூடிய கண்களில் இருக்குமா என சொல்லமுடியவில்லை. ஒருவேளை பூச்செண்டின் வாசத்தை இப்போது அவள் ஸ்வாசித்துக் கொண்டிருந்தால் அந்த புகைப்படத்தில் இருப்பதுபோல அவள் புன்னகைத்திருக்கலாம் இல்லாமலும் போயிருக்கலாம். அவள் முகத்தில் தெரிந்த உணர்ச்சியின் விளக்கம் நிறைவா, நிராசையா என சொல்லமுடியவில்லை.
அவள் கால் அடியில் நாற்காலியில் முழு மணக் கோலத்துடன் அமர்ந்திருந்த அவள் கணவனின் முகதத்திலும் அந்த பதில் தெரியவில்லை. கருப்பு நிற சூட்- டை, நன்கு மெருகேற்றப்பட்ட ஷு அணிந்து இருக்கைகளை நாற்காலியின் மேல் வைத்து, தலைமட்டும் இடது தோளின்மேல் சாய்ந்திருந்தது. ஒருவேளை தன் அன்பு மனைவியின் கடைசி நிமிடங்களை காணமுடியாமல் தலையை திருப்பிக்கொண்டதன் விளைவுதான் இந்த கோலமோ? இருக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம், மனைவி இறந்த பின்தான் அவன் இறந்திருக்கிறான். இல்லையென்றால் அவள் கன்னங்களில் இல்லாத கண்ணீர் அவன் கன்னத்தில் மட்டும் எங்கிருந்து வந்திருக்கும்? மேஜையில் காகித இடைக்கு கீழே,
“இன்று எங்கள் இருபத்தி ஐந்தாவது திருமண நாள். இருபத்தி ஐந்து வருடங்கள் ரோசியின் காதலில் வாழ்ந்தது நூறு வருடங்கள் வாழ்ந்த உணர்வு என்னிடம் உள்ளது. அவளை முதல் கணம் பார்த்த போது என் மனதில் உதித்த காதல் அவள் கடைசியாக கண்களை மூடும் வரை குறையவில்லை. ரோஸி ஏன் ‘இன்று இறந்தால் முழுமை அடைவேன்’ என்றாள் என புரியவில்லை, ஆனால் அவள் கேட்டு நான் எதையும் மறுத்ததில்லை. அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என அவளுக்கு தெரியும். தெரிந்தேதான் அப்படி கேட்டிருக்கிறாள் என தோன்றுகிறது.
ஏஞ்ஜல், எங்களை பற்றி கவலைப்படாதே. மைக்கேலுடன் நீ நன்றாக இருப்பாய். சுவர்கத்திலிருந்து நாங்கள் உங்களை ஆசீர்வதிப்போம்”.