விடுதலை
கதையாசிரியர்: முனைவர் வெங்கடேஷ் கணபதி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2026
பார்வையிட்டோர்: 75
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3

திருநெல்வேலியில் வெய்யில் சுட்டெரித்தது. மார்ச் மாதத்திலேயே மே மாதம் மாதிரி சூடு. செந்திலும் நிர்மலாவும் ரயில் நிலையத்தில் இறங்கி ஒரு தானியங்கியைக் கூப்பிட்டனர். “பரணி லாட்ஜுக்கு விடப்பா” என்றான் செந்தில்.
பரணி லாட்ஜு ரயில் நிலையத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவே இருந்தாலும் ஆட்டோ காரர் நூறு ருபாய் வேண்டும் என்று கறார் ஆகச் சொல்லி விட்டார். சரி, போனால் போகட்டும் என்று செந்தில் ஒத்துக்கொண்டு விட்டான்.
அவர்கள் லாட்ஜை அடைந்த போது காலை மணி ஒன்பது.
“சார், நல்ல காத்தோட்டமா உள்ள ரூமாக கொடுங்க…நாங்க அடிக்கடி வர உங்க வாடிக்கையாளர் ” என்றான் செந்தில் முகத்தில் மெல்லிய புன்முறுவலுடன்.
“சரிங்க நிச்சயமா” என்றான் வரவேற்பில் உட்கார்ந்திருந்த முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன்.
“சார், இந்தாங்க சாவி. உங்க ஆதார் கார்டை ஸ்கேன் பண்ணிட்டோம். இந்தாங்க. உங்களுக்கு கார் ஏதாவது தேவையா?” என்று வினவினான்.
“இல்லை, இப்போதைக்கு இல்லை. வேண்டுமென்றால் சொல்கிறோம்” என்றாள் நிர்மலா.
அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மேலாக ரூம் பளிச் என்று இருந்தது. ஒரு நாள் வாடகை மூவாயிரம் ருபாய். ஆனால் கழிவறை துப்புரவாக இருந்தது. பெட் சீட் மற்றும் தலைகாணி மற்றும் போர்வை எல்லாமே வெள்ளை வெளேரென்று சுத்தமாக இருந்தது மனதிற்கு உவகையைத் தந்தது.
குளித்து முடித்து விட்டு திருநீறு மற்றும் குங்குமம் இட்டுக்கொண்டு இருவரும் பத்தமடைக்கு கிளம்பத் தயார் ஆகி விட்டனர். பிங்க் கலர் முழு நீல ச்சட்டை மற்றும் கிரீம் கலர் பாண்டில் செந்திலை ப்பார்க்கும் போது தான் நிர்மலாவுக்கு தன் கணவன் எவ்வளவு அழகு என்று (இன்னொரு தடவை) புரிந்தது. நிர்மலா நிறம் சுமார் தான். ஆனால் கிட்டத்தட்ட பாரதிராஜாவின் காதல் ஓவியம் ராதா சாயல். செந்தில் ஒரு கருப்புக்கண்ணாடியை அணிந்து கொள்ள நிர்மலா தன்னை அடக்க மாட்டாமல் சொல்லியும் விட்டாள் – ” என்னங்க, என் கண்ணே பட்டு விடும் போல் இருக்கிறது. உங்கள் அழகிற்கும் பொலிவிற்கும் நான் அருகதை அற்றவள் என்று தோன்றுகிறது” என்றாள் அவள்.
“அடச் சீ …உன்னை மாதிரி மஹாலக்ஷ்மியை அடைய நான் அல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும் நிம்மி” என்று அவள் கன்னத்தை செந்தில் தட்ட நிர்மலாவின் முகத்தில் செம்மை படர்ந்தது.
பத்தமடையில் அவர்கள் தூரத்துச் சொந்தம் – ஒரு அக்கா இருந்தாள். கணவன் மறைந்து தனியே வாழும் அவளைப்பார்க்காமல் செந்திலும் நிர்மலாவும் நெல்லையை விட்டுச் செல்வதே இல்லை. அவள் மகள் திருமணம் ஆகி கடலூரில் வசித்து வந்தாள். செந்தில் மீது அந்த அம்மாளுக்குத் தனி ப்பாசம். தூரத்து உறவு என்றாலும் உறவை விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் இருந்தாலே போதும். பிரச்னையே இல்லை.
பத்தமடையில் பெருமாள் கோவில் பிரசித்தம். நிறைய பேருக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. அந்த கோவிலில் விளக்கு ஏற்றி பெருமாளை க்கும்பிட்டால் தீராத பிரச்னையும் தீரும் என்பது திண்ணம்.
இருவரும் கீழே உள்ள சிற்றுண்டி நிலையத்தில் வரகரிசி உப்புமா மட்டும் பொங்கல் வடை ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தனர். அலை பேசி அழைத்தது. செந்திலின் அக்கா தான். அவள் பெயர் சுவலக்ஷ்மி.
“செந்தில் தம்பி, உனக்கு பிடிச்ச பருப்புத் தொகையலும் மிளகு ரசமும் வச்சிருக்கேன். நீ எப்ப கிளம்பர ?”
அக்கா வீட்டின் பொன்னி அரிசியும் அந்த குக்கிராமத்தில் விளையும் கலப்படமில்லாத காய்கறிகளும் உணவிற்கு கூடுதல் சுவையை ஊட்டக்கூடியவை.
“அக்கா, இன்னும் இரண்டு மணி நேரத்தில் அங்கே இருப்போம்” என்றான் செந்தில்.
சிற்றுண்டி உண்ட பின்னர் பில்டர் காபியை அவசரமாக அருந்தி விட்டு அவர்கள் வெளியே வந்தனர்.
நல்ல வேளையாக. ஆட்டோவிற்கு பஞ்சம் இல்லை.
அவர்கள் பத்தமடையை அடைந்த போது மணி பன்னிரெண்டை நெருங்கி க்கொண்டிருந்தது.
அக்காவிடம் தன் மனக்குறையை கூறினான் செந்தில்.
‘தம்பி நீ கவலையே படாதே. நீ நம்ம குலதெய்வக்கோவிலுக்கு போகிறாய். நல்லதே நடக்கும். வேலைக்காக உடலைக் கெடுத்துக்கொள்ளாதே. உடல் நிலை நன்றாக இருந்தால் தான் சம்பாதித்த பணத்தை அனுபவிக்க முடியும். ஆமாம், இப்படியே ஜோடியாக வந்தால் போதுமா? எப்பொழுது குவா குவா சத்தம் கேட்கப்போகிறது” என்றாள் சுவலக்ஷ்மி அக்கா.
“எங்கே அக்கா, அவள் வேலைக்கு ஓடிக்கொண்டு இருக்கிறாள். நான் வேறு வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்” என்று அலுத்துக்கொண்டான் செந்தில். நிர்மலாவிற்கு கூச்சமாக இருந்தது.
“இல்லை செந்தில். சில சமயங்களில் குழந்தை உண்டாகி விட்டால் கூட நல்லது நடக்க ஆரம்பித்து விடும். அதை மட்டும் ஒத்திப்போட வேண்டாம்” என்ற சுவலக்ஷ்மி அக்காவின் அறிவுரை நிர்மலாவை நெகிழச்செய்தது.
சாப்பாடு பிரமாதம் ஆக இருந்தது.
பருப்புத்துவையலும் மிளகு ரசமும் மரச் சீனிக்கிழங்கு அப்பளமும் இஞ்சி மற்றும் கறிவேப்பில்லை தட்டி போட்ட மோரும் உணவிற்கு சுவையைக்கூட்டின.
கொல்லைப்புறத்தில் வேப்ப மரமும் கிணறும் பார்ப்பதற்கே கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. வேப்ப மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டார்கள் செந்திலும் நிர்மலாவும். குளுமையான தென்றல் காற்று அவர்கள் உடலை வருடியது.
மூன்று மணிக்கு அவர்கள் பத்தமடையில் இருந்து கிளம்பி நெல்லை வந்த போது மணி ஐந்தரை. ஓட்டல் ஜானகிராமில் மாலை சிற்றுண்டி அருந்தி விட்டு அவர்கள் ஓட்டல் அறைக்குத் திரும்பினார்கள். உடையை மாற்றிக்கொண்டு அவர்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் வரும் போது மணி ஆறேகால். உடனே புது பஸ்ஸ்டாண்டுக்கு பேருந்து கிடைத்தது. ஆறரை மணிக்கெல்லாம் அவர்கள் சங்கரன் கோவில் போகும் பேருந்தில் பயணித்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் கோவிலை அடைந்த போது மணி எட்டு. நல்ல வேளையாக கூட்டம் அவ்வளவாக இல்லை. இல்லாவிட்டால் கோவிடுக்கு பிறகு எல்லா ஆலயங்களிலும் கூட்டம் அலை மோதுகிறதை மறுக்க முடியாது. மக்களிடம் பக்தி பிரவாகமாக ஓடுகிறது என்று தான் எண்ணத் தோன்றும்.
முதலில் சங்கரநாராயணஸ்வாமியைத் தரிசித்து விட்டு அவர்கள் சங்கரலிங்கம் ஸ்வாமி தரிசனம் பண்ண அடுத்த பகுதிக்கு வந்தனர். அங்கே சுவாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த போது ஒரு முதியவர்
அவர்களையே பார்த்தார்.
செந்திலும் நிர்மலாவும் அவரைக்கடந்த போது, ” ஒரு நிமிடம் நில்லுங்கள்” என்கிறார் அவர் – குரல் கணீர் என்று ஒலித்தது.
அவர் ஏதோ பணம் கேட்கப்போகிறார் என்று நினைத்தான் செந்தில்.
அவருக்கு எழுபது வயதிற்கு மேலே இருக்கலாம். நெற்றி நிறைய திருநீறு. வெற்று மார்பில் பூணூல். முகத்தில் பக்தி ஒளி தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.
அவரைப்பார்த்தால் தீர்க்கதரிசி என்று சொல்வார்களே அந்த மாதிரி இருந்தது.
“தம்பி, குழந்தை இருக்கிறதா” என்றார் அவர்.
“இன்னமும் இல்லை சாமி”
“செவ்வாய் தோறும் கோமதி அம்மனுக்கு விளக்கேற்றி மிளகுச் சாதம்
நைவேத்தியம் பண்ணுங்கள். ஆறு செவ்வாய்க்கிழமை இதைப் பண்ணுங்கள். வழி பிறக்கும். திருமணமான ஒரு ஏழைப்பெண்ணுக்கு வாழை இலையில் நீங்களே சமைத்து சாப்பாடு போட வேண்டும் – அதுவும் ஒரு வெள்ளிக்கிழமையில். வெற்றிலை பாக்கு வைத்துக்கொடுங்கள். முடிந்தால் ஒரு நூல் புடவை மட்டும் ப்ளவுஸ் துணி வாங்கிக்கொடுங்கள் ” என்று நிறுத்தினார் அவர்.
“உங்களுக்கு நல்ல காலம் பொறக்கும் வேளை வந்து விட்டது. தொட்டில் ஆட்டும் வேளையும் நெருங்கி விட்டது” என்று நிறுத்தினார் அவர்.
செந்திலும் நிர்மலாவும் அந்த முதியவர் காலில் விழுந்து நமஸ்கரித்தனர்.
இவர்கள் எவ்வளவோ சொல்லியும் அந்த முதியவர் எந்த வித காசோ பணமோ வாங்க மறுத்து விட்டார்.
கோமதி அம்மனை க் கண்குளிரத் தரிசித்து விட்டு
“தாயே ஜகன்மாதா நல்ல வழி விடம்மா. சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே சரண்யே த்ரௌம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே” என்று செந்திலின் வாய் தன்னிச்சையாக முணுமுணுத்தது.
அன்றிரவு அவர்கள் பரணி லாட்ஜுக்குத் திரும்பும் போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகி விட்டது.
சங்கரன்கோவிலிலேயே இரவு உணவை முடித்துக்கொண்டதால் நெல்லை வந்த பிறகு அவர்கள் அசதியோடு படுக்கையில் விழுந்தது தான் தெரியும்.
அடுத்த நாள் செந்திலும் நிர்மலாவும் பெங்களூருக்கு ச் செல்லும் பேருந்தில் ஏறி விட்டனர்.
செந்திலின் மனம் அமைதி அடைந்து இருந்தது.
பேருந்து பெங்களூரை அடைய ஒரு மணி நேரமே பாக்கி இருந்த போது
செந்திலின் அலைபேசி அழைத்தது.
“அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உள்ளாள்” என்று கவலை யுடன் மட்டும் பதட்டத்துடனும் அவன் மூத்த சகோதரன் மதிவாணன் கூறியபோது செந்தில் இடிந்து போனான்.
– தொடரும்…