விக்னேஸ்வரி






டேப் ரெக்கார்டர் சன்னமாகப் பாடிக்கொண்டிருந்தது. பாடலைக் கேட்டபடியே ஜன்னல் ஓரத்து நாற்காலியில் விக்னேஸ்வரி.
அப்பா கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். லாரி புக்கிங் ஆஃபீஸ் ஒன்றில் ஹெட்ரைட்டர் அவர். ஒரு நாள் முழுக்கவும் இரவு பகலாக வேலை, மறுநாள் விடுமுறை. அதன்படி இன்று காலையில் வந்திருக்கிறார். வந்ததுமே குளித்து, சாப்பிட்டுவிட்டுப் படுத்தது. எழுவதற்கு சாயந்திரம் ஆகிவிடும். கார்த்திகா துவைப்பதற்கு அழுக்குத் துணிகளை எடுத்துக்கொண்டு டிடர்ஜென்ட்டுடன் நகர்ந்தாள். குளியலறைக்கு எதிரேதான் துவைக்கிற கல். அதன் பக்கமாகவே தண்ணீர்த் தொட்டி. சிவப்பு பெயிண்ட் அடித்த இரண்டு ட்ரம்கள். துணிகளை இரும்பு பக்கெட் நீரில் நனைத்து வைத்தாள். யாரிடமோ விக்னேஸ்வரி பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன விக்கி, வெளையாடப் போகுலியா? உன்னோட ஃபரன்ட்ஸெல்லாம் பக்கத்து வீதில கிரிக்கெட் ஆடிட்டிருக்கறாங்களே…” கேட்டவள் பூர்ணிமா அம்மா என்பது திறந்திருந்த முன் கதவின் வழியே தெரிந்தது.
விக்னேஸ்வரி, “ப்ச்சு … போகலீங்க்கா” என்றதும் பூர்ணிமா அம்மா விலகிவிட்டாள்.
விக்னேஸ்வரி எட்டாவது படித்துக்கொண்டிருக்கிறாள். இது அரையாண்டு விடுமுறை. அவளது தோழிகளும் தோழர்களும் அடுத்த தெருவில் இருக்கின்றனர். வார விடுமுறைகளில் அவர்களுடன் போய்விட்டால்
நேரம் போவது கூட தெரியாமல் க்ரிக்கெட், சைக்கிள் பழகல் என்று பொழுது போக்கிக் கொண்டிருப்பாள். பல நாட்களில் கார்த்திகா போய் சாப்பிட அழைத்து வர வேண்டியிருக்கும். வீட்டு வேலைகளைச் சொன்னாலும் செய்யாமல் படிப்பதற்கு இருக்கிறது, தலை வலிக்கிறது என்பதாய் சாக்கு சொல்லித் தப்பிப்பாள். இதனாலேயே அனுராதா அவளை மிரட்டித் திட்டிக்கொண்டிருப்பாள். சில நேரங்களில் அதற்கு பயந்து சொன்னதைச் செய்வாள். மற்றபடி அதையும் சமாளிக்கிற உத்திகள் கைவசம்.
விக்னேஸ்வரியைப் பொறுத்தளவு அடிக்கவே தேவையில்லை. கடிந்து பேசினாலே அழுகை வந்துவிடும். விஜயாக்கா சொல்கிற மாதிரி, கண்ணீரை இமை விளிம்பில் வைத்துக்கொண்டு காத்திருக்கிறவள்.
அவள் அழுவது அப்பாவுக்குத் தாங்காது. “எதுக்கு அவள அளுக வைக்கற?” என அதட்டுவார்.
“பின்ன என்னங்ப்பா? இவ எப்பப் பார்த்தாலும் வெளையாட்டு, வெளையாட்டுன்னே சுத்திட்டிருந்தாப் போதுமா? இப்படியே விட்டுட்டா அவளுக்கு எந்த வேலைக்கும் ஒடம்பு வளையாது.” அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே விசும்பலுடன் கண்ணைத் துடைத்தவாறே விக்னேஸ்வரி முன் அறைக்கு மெல்ல நகர்வது தெரியும். அப்புறம் ஆளைக் காணாது.
“பாத்தீங்ளா? பேசி முடியில. அதுக்குள்ள எங்கயோ போயித் தொலைஞ்சிட்டா. நீங்க குடுக்கற செல்லத்துலதான் அவ கெட்டுப் போறதே!”
அதுவும் உண்மைதான். அப்பாவுக்கு அவள் செல்லக்குட்டி. எது கேட்டாலும் வாங்கித் தருவார். அவளது ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் சிவப்பு அடிக்கோடுகளுக்குத் திட்டமாட்டார். அவள் செய்ததே தவறாக இருந்தாலும் கண்டிப்பது இவர்களைத்தான்.
கார்த்திகாவுக்கும் அனுராதாவுக்கும் அவரிடம் சிறு வயதில் இந்த சலுகைகள் கிடைத்ததில்லை. என்றாலும் அவரது கனவுகளும் ஆசைகளும் இவர்களைப் பற்றியதாகத்தான் இருக்கின்றன. கவலையும் அதுவே. “உங்களை நம்ம வசதிக்குத் தகுந்த மாதிரியான நல்ல எடமாப் பாத்து கட்டிக்குடுக்கணும்மா.”‘
நாலைந்து வருஷத்துக்கு முன்பிருந்தே அதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. யார் யாரோ மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து கேட்பதும், தள்ளிப் போவதுமாய் நம்பிக்கைகள் இழந்துகொண்டிருக்கின்றன. வயது மட்டும் கூடிக் கூடி இவளுக்கு இருபத்து நான்கு ஆகிவிட்டது. அனுவுக்கு இதிலிருந்து மூன்று வயது குறைச்சல்.
பொண்ணுக்கு எவ்வளவு பவுன் போடுவீங்க, மாப்பிளைக்கு என்ன செய்வீங்க – என்கிற கேள்விகளின் பேரத்துக்கு அப்பா தயங்கிக்கொண்டே பதில் சொல்வார். நேர்மை, நாணயம் என்று வாழ்கிற ஒரு மனிதனுக்கு, சாதாரண ரைட்டர் வேலையின் மாத சம்பளத்தில் எதைச் செய்துவிட முடியும்?
*******
கார்த்திகா அடுத்ததாகத் துவைக்க எடுத்தது விக்னேஸ்வரியின் ஸ்லாக். சில விநாடிகள் அதையே உற்றுப் பார்த்தாள். இந்த ஸ்லாக்குகள்தான் அவளை எவ்வளவு படுத்திக்கொண்டிருக்கின்றன என்பதை நினைக்க சிரிப்பும் வந்தது, வேதனையாகவும் இருந்தது.
இயல்பாகவே பெண்களுக்கு நேர்கிற பருவ மாற்றம்தான் என்றாலும் விக்னேஸ்வரிக்கு வயதை மீறிய வளர்ச்சி. ஏழாவது படிக்கும்போதே தொடங்கிவிட்டது அது. அதை மறைக்கும் விதமாக ஸ்லாக்கின் நுனியை இழுத்துப் பிடித்தபடியே நடப்பாள்.
இதை விடலைப் பையன்களும் ஆண்களும் பார்ப்பதில் அவளுக்குக் கூச்சமும் அவமானமும். சட்டை நுனியை இழுத்துப் பிடிப்பதோடு, முதுகைக் குனிந்த வசத்தில் கூன் விழுந்தாற் போலவும் நடப்பாள். நிமிர்ந்து நட என்றால் கேட்பதில்லை. “எல்லாரும் பாக்கறது ஒரு மாதிரியா இருக்குக்கா” என்பாள்.
இது நாள்பட சரியாகிவிடும் என கார்த்திகா விட்டுவிட்டாள். ஆனால் விக்னேஸ்வரி ஒரு நாள் ராத்திரி தயங்கித் தயங்கி,”அக்கா நான் தாவணி போட்டுக்கட்டா?” என்று கேட்டபோது அனுராதாவும் இருந்தாள்.
“வயசுக்கு வந்ததுக்கப்புறம்தான் தாவணி போட்டுக்கணும் விக்கி.”
“அப்படின்னா… அது வரைக்கும் என்னக்கா பண்றது? ஸ்கூல் பசங்க, ரோட்டுல போறவங்க,… எல்லாருமே இதையே மொறைச்சுப் பாக்கறாங் களே…”
அனுராதாவின் யோசனையில் விக்னேஸ்வரிக்கு புதியதாக ஸ்லாக்குகள் சற்று அதிக லூசில் தைக்கப்பட்டன. அவற்றாலும் மறைத்துவிட இயலவில்லை. முன்பு போல இல்லாவிட்டாலும், பள்ளிக்கு ஸ்கர்ட்டில் இன் செய்துகொண்டு போகும்போது வாளிப்பு தெரியவே செய்தது.
ஒரு வெள்ளிக் கிழமை, கோவிலுக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலரின் ஜாடைப் பேச்சுகளை அப்போது கேட்க நேர்ந்தது.
ஒருவன் இவளது சிவப்புச் சேலையைக் குறிப்பிட்டு, “அலங்காரம் பண்ணி வெச்ச அம்மன் சிலை எந்திரிச்சு வந்த மாதிரி இருக்குதுடா” என்கிறான். உடன் சிரிப்பு எழுந்து அடங்குவதற்குள் அடுத்த கிண்டல். “பக்கத்துல பாத்தியா…” என்கிறவனின் பார்வை விக்னேஸ்வரியின் கழுத்துக்குக் கீழே பதிவதை கவனித்தாள்.
“அலங்காரம் பண்றதுக்கு முன்னால அய்யரு குளிப்பாட்டி விட்ட அம்மன் சிலை மாதிரி…”
வீட்டுக்குள் நுழைந்ததுமே முகம் பொத்தி ஆரம்பித்த விக்னேஸ்வரியின் அழுகை வெகு நேர ஆறுதலுக்குப் பிறகே நின்றது.
அதிலிருந்தே அவள் தெருப் டையன்களோடு விளையாடப் போவதை நிறுத்தினாள் என்றும் ஞாபகம்.
*******
நேற்றைக்குத் துவைக்கவில்லை என்பதால் இன்று நிறையவே அழுக்குத் துணிகள் சேர்ந்திருந்தன. கார்த்திகாவுக்கு கைகள் ஓய்ந்து போனது போலாயிற்று. வீட்டுக்குள் பார்த்து, “விக்கி… கொஞ்சம் இங்க வா” என்று அழைத்தாள்.
விக்னேஸ்வரி டேப் ரெக்கார்டரை நிறுத்திவிட்டு வந்தாள்.
“என்னக்கா?”
“இதையெல்லாம் அலாசிக் காயப் போட்டுறு. இன்னும் கொஞ்சம் துணிக இருக்குது, அதையும் தொவைச்சர்றேன்.”
“ம்…” சலிப்புடன் பக்கெட்டில் நீர் எடுத்து துணிகளை அலசலானாள். ஒவ்வொன்றாகப் பிழிந்து தண்ணீர் தொட்டியின் மூடி மீது வைத்தாள். இருந்தாற்போல அலசுவதை நிறுத்தி விட்டு இடுப்பில் கைகொடுத்து நிற்கவும், “என்ன?” என்றாள் கார்த்திகா.
“வயிறு வலிக்கறாப்புல இருக்குக்கா…” என்றவளின் கை விரல்கள் வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தன.
“வேலை சொன்னாப் போதுமே. உடனே உனக்கு தலைவலியும் வரும், வயித்து வலியும் வரும்.”
“இல்லக்கா. நெஜமாவேதான்…”
முகத்தில் வேதனையின் சுளிப்புகள். கார்த்திகா மறுபடியும் என்ன செய்கிறது என விசாரித்தாள். விக்னேஸ்வரி பதில் சொல்லவில்லை. வயிற்றைப் பிடித்தபடியே டாய்லெட்டிற்குச் சென்றுவிட்டாள்.
“இங்க வாக்கா…”
“நான் எதுக்குடீ அங்க?”
“அய்யோ… சீக்கிரம் வாயேன்…” என்றதில் தொனித்த பதற்றத்தை உணர்ந்து, கையைக் கழுவிவிட்டு அவசரமாகச் சென்றாள்.
டாய்லெட்டின் கதவை லேசாகத் திறந்து இவளை எதிர்நோக்கியிருந்தவளின் முகத்தில் அதிர்ச்சியும் குழப்பமும். சூழ்நிலையை கவனித்த கார்த்திகாவின் முகத்தில் புன்னகை மேலிட்டது.
*******
இருவரும் வீட்டைச் சுற்றியவாறு நடந்து முன் அறைக்கு வந்தனர். ஓரமாக விக்னேஸ்வரியை உட்கார வைத்தாள். சற்று முன்பிருந்த நிலை மாறி இப்போது அவளின் முகத்தில் வெட்கமும் தவிப்பும் தெரிந்தது.
“இரு… அப்பாவை எழுப்பிக் கூட்டிட்டு வர்றேன்.”
கார்த்திகா உள்ளே வந்து அப்பாவைத் தொட்டு எழுப்பினாள்.
கண்ணைச் சுருங்க விழித்துப் பார்த்தவரை எழ வைத்து விஷயத்தைச் சொல்லவும், “அப்புடியா?” என்றவாறே ஜன்னல் வழியாகப் பார்த்தார்.
விக்னேஸ்வரி தலையைக் குனிந்துகொண்டிருந்தாள். அப்பா அவளையே பார்த்தபடி யோசனையாக நின்றார். எதுவும் சொல்லவில்லை.
ஆண்களுக்கு இந்த விஷயத்தை எப்படி எதிர்கொள்ளத் தெரியும்? யாராவது பக்கத்து வீட்டுப் பெண்களைத்தான் போய் அழைத்து வர வேண்டும்.
“நான் போயி விஜயாக்காவையும் பூர்ணிமா அம்மாவையும் கூட்டிட்டு வர்றன்” என்று கார்த்திகா கிளம்பினாள்.
“ஒரு நிமிஷம் இரும்மா!” சிந்தனை கலைந்தார் அப்பா. “இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாதில்ல?”
“ஆமாங்ப்பா.”
தயங்கியவர் தணிந்த குரலில் சொன்னார். “இந்த விசியத்த இப்ப வெளிய யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். கல்யாண வயசுல இருக்கற உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் ஒரு வளி அமையக் காணம். பாக்கறவீகல்லாம், ‘என்ன, இன்னும் பெரியவளுக்கே முடியலையா?’ன்னு கேக்கறாங்க. அடுத்ததா இவளும் பெரியவளாயிட்டான்னு தெரிஞ்சா… ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாறப் பேசுவாங்க. அதனால,… கொஞ்ச காலத்துக்காச்சு இவ பெரியவளானத வெளிய சொல்லாம மறைச்சர்றது நல்லது. விக்கிகிட்டயும் சொல்லி, உள்ள கூட்டிட்டு வா.”
இவர்களின் பேச்சு விக்னேஸ்வரிக்குக் கேட்டிருக்கக்கூடும். கார்த்திகா போனபோது அவள் சலனமற்ற முகத்தோடு எழுந்து நின்றிருந்தாள்.
இவள் சொல்வதற்கு முன்பாகவே அவள் துயரத்தோடு கேட்டாள். “ஏங்க்கா,… அப்படின்னா நான் இப்பக் கூட தாவணி போட்டுக்க முடியாதா?”
கார்த்திகா அவளை நெருங்கி ஆறுதலாக அணைத்துக்கொண்டாள்.
– குமுதம், 4.9.97.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |