வாழ்க்கை எனும் கவிதை
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2025
பார்வையிட்டோர்: 55
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

மாலையும் கழுத்துமாக…
காலையிலே குளித்து முடித்து விட்டு புத்தாடை உடுத்திக்கொண்ட போது “அப்பா எங்கே கிளம்பிட்டே?” எழுந்து கண்ணைத் துடைத்துக் கொண்டு வந்தாள் திவ்யா.
“அப்பா வெளியே போயிட்டு வர்றேம்மா. நீ சித்தப்பாவுடன் போய் சாக்லேடு வாங்கிட்டு வர்றியா”
“ஏண்டா அவளையும் கூட்டிண்டுப்போலாமே” என்றாள் சிவாவின் அம்மா கோகுலம்மாள்.
“வேண்டாம்மா. தம்பி கோயிலுக்கு வர வேண்டாம். இவளைப் புறப்பட வைத்து நேரே புவனா வீட்டிற்கு வந்துடட்டும். நானும் புவனாவும் மாலைப் போட்டுக் கொண்டு நிற்கிறதும்… நான் தாலி கட்டிறதும் எனக்கென்னவோ திவ்யா பார்க்க வேண்டாம்னு தோணுது.”
“பரவாயில்லை. எப்போதாவது தெரிந்து தானே ஆகவேண்டும். இப்போதே அவளுக்கும் கொஞ்சம் புரிய வேண்டியதுதானே நல்லது என்று நினைக்கிறேன்.”
“வேண்டாம்மா. புவனா எங்களோட இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமா திய்வாவிற்கு புரியட்டும்.”
“சரி”
“பாப்பா அப்பா வெளியே கிளம்பறேன். நீ குளிச்சு புது டிரஸ் போட்டுக் கொண்டு சித்தப்பாக் கூடப் போய் சாக்லேட் வாங்கிக் கொண்டு வா. நாம போய் அத்தா வீட்டிலே சாப்பிட போகலாம். அங்கே பாயாசம், அப்பளம் எல்லாம் இருக்கும்.”
“ம்கூம்.. நானும் இப்ப உங்கூட வருவேன்”
“சொன்னாக் கேளு. அப்பாவுக்கு நெறய வேலையிருக்கு”
“நான் பாட்டிக் கூட நிக்க மாட்டேன். நானும் உங்கூடத்தான் வருவேன்.”
“சரி. குளிச்சு டிரஸ் பண்ணு கூட்டிட்டுப் போறேன்.”
“நீ என்னைத் தூக்கிக் குளிப்பாட்டு. இல்லேன்னா நீ என்னய உட்டுட்டு போயிருவே”
“திவ்யா அப்பா சொன்னா கேக்கணும்”
“ம்கூம். நானும் வர்றேன்”
கோகுலம்மாள் திவ்யாவை பிடுங்க முயற்சிக்க, “வரமாத்தேன் போ.” என்ற வாறு சிவாவின் கழுத்திக் கட்டிப்பிடித்துக் கொண்டது.
“சரி, நான் கிணற்றுக்கு வருகிறேன். உன் பக்கத்திலேயே நிற்கிறேன். பாட்டி உன்னைக் குளிப்பாட்டட்டும் சரியா கண்ணு” கோவத்தை அடக்கிக் கொண்டான் சிவா.
“ம்…ம் சரி.” என்று தலையாட்டினாள் திவ்யா.
திவ்யாவிற்கு புத்தாடை உடுத்தி அவளையும் தூக்குக் கொண்டான் சிவா. வீட்டின் முன்னால் வந்த டாக்ஸியில் எல்லோரு ஏறிக்கொள்ள கார் கோயிலை நோக்கி ஓடியது.
புவனாவின் குடுப்பம் ஏற்கனெவே கோயிலில் குழுமியிருந்தார்கள். திவ்யா இறங்கி ஓடிப்போய் “அத்தா” என்று புவனாவைக் கட்டிக் கொண்டாள்.
புவனா மாலையும் கழுத்துமாக நிற்கிறதால் முழந்தையை தூக்க முடியாமல் நின்றாள்.
“அத்தா இப்ப உன்னைத் தூக்க முடியாது வந்துரு” கோகுலம்மாள் திவ்யாவை தூக்கினாள்.
“விடு பாட்டி நான் அத்தா கிட்டயே நிற்கிறேன்” குழந்தை அடம்பிடித்தது.
“மாலையை மாத்திக்கோங்க” அர்ச்சகர் சொல்லவும் திவ்யா திரும்பிப் பார்த்து “அய்ய் அப்பாவும் மாலை போட்டிருக்கு” திவ்யா சிவாவிடம் கையை விரித்துக் கொண்டு ஓடினாள்.
“அப்பா பூஜை செய்யட்டும் தொந்தரவு செய்யாதே” சிவாவின் தம்பி குமார் திவ்யாவை தூக்கினான்.
“என்னை விடு சித்தப்பா. நான் அப்பாகிட்ட போறேன்” குழந்தை குமாரிடம் இம்சை பண்ணியது.
குமார் அவளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள “ஓ” வென்று அலறிய திவ்யா குமாரை உதறிக் கொண்டு சிவாவிடம் ஓடி வந்தாள்.
சிவா ஓடி வந்த திவ்யாவைத் தூக்கிக் கொண்டு அருகில் நின்ற புவனாவைப் பார்த்தான்.
புவனாவின் கண்களில் முட்டிக்கொண்டு நின்ற கண்ணீர் திரண்டு கன்னத்தில் வழைந்தது.
அருகில் வந்த சிவா வேறு யாருக்கும் கேட்காதவாறு “இப்போது வேண்டுமானாலும் திருமணத்தை நிறுத்தி விடலாம். புவனா இத்தனைப் பிரச்சினைகள் வருமென்று நான் எதிர்பார்த்ததுதான்” என்றான்.
கண்ணகளைத் துடைத்துக் கொண்டு பரவாயில்லை அத்தான்” என்றாள் புவனா.
“ராகு காலம் வருவதற்கு முன் தாலி கட்டி விட்டால் உத்தமமாக இருக்கும். முதலில் மாலையை மாத்திக்கோங்க” என்றார் அர்ச்சகர்.
எதிலும் ஈடுபடாமலிருந்த திவ்யா “அப்பா நீயும் அத்தாவும் ஏன் மாலை போட்டிருக்கீங்க?” என்றாள். பூ இதழ்களை மாலையிலிருந்து பிய்த்தவாறு.
“அது… கண்ணுக்குட்டிக்கு தெரியாதா? அத்தாவை உன் அம்மா ஆக்கிக் கொள்வதற்கு தான்” என்று பொறுமையாக திவ்யாவின் கன்னத்தில் முத்த மிட்டான்.
“அத்தா ஏன் அம்மாவாகணும். அம்மாதான் கடவுள் கிட்ட பொம்மை வாங்கிண்டு வரப் போயிருக்காயில்லியா?”
“அது..அது.. அம்மா வரதுக்கு நாளாகுமில்லியா கண்ணு”
“அப்படியா? ஆமா… நான் இப்ப என்ன செய்யணும்.. என்ன இப்படியே வச்சுகிறியா? ரொம்ப நல்லாயிருக்கு”
“இல்லை கண்ணு அப்பாவும் அத்தாவும் பூஜை பண்ணணும் கடவுள் கிட்டே கேட்டு இந்த திவ்யாவிற்கு சாக்லேட் கேட்டு வாங்கித் தரணும்”
“எனக்கு இவ்ளோ பெரிய சாக்லேட் தர்றியா” கையை விரித்துக் காட்டினாள்.
“கொஞ்சம் நீயும் சித்தப்பாவும் போய் கடையிலே சாக்லேட் வாங்கிட்டு வர்றீங்களா?” திவ்யாவை கீழே இறக்கி விட்டான்.
“அப்பா நான் இங்கேயே நின்னுகிறேன். சித்தப்பாவை சாக்லேட் வாங்கி வரச் சொல்றியா”
“சரி”
“சீக்கிரம் மாலையை மாத்திக்கோங்கோ” என்றார் அர்ச்சகர்.
திவ்யா, புவனாவிடம் வந்து “ஏன் அத்தா பூமாலை யெல்லாம் போட்டிடுக்கே” என்று திரும்பவும் பூதம் கிணறு வெட்ட ஆரம்பித்தாள்.
சிவாவிற்கு பொங்கி வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு மாலையை மாற்றினான். புவனாவும் மாலையை மாற்ற “அய்” என கை கொட்டி சிரித்தாள் திவ்யா.
புவனாவின் அம்மா அருகில் வந்து “ராகு காலம் வர்றதுக்கு இன்னும் பத்து நிமிசந்தான் இருக்கு. தாலியை எடுத்து கொடுங்க ”என்றாள்
அர்ச்சகர் திரும்பி சிவாவைப் பார்க்க “எல்லாம் கொஞ்சம் வேகமாக நடக்கட்டும்.” என்றான் பொதுவாக.
உடனடியாக அர்ச்சகர் தாலியை எடுத்து நீட்ட “அது என்னது?” அருகில் வந்த திவ்யா.
“இந்தா சாப்பிடு” என்று ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொடுத்தார் அர்ச்சகர்.
திவ்யா ”அந்தத் தட்டைக் காட்டு” என்றாள்.
‘‘பொண்ணு நீ ரொம்பத் தொந்தரவு செய்றே. அங்கே போய் நில்லு’’ என்றார் அர்ச்சகர்.
சிவாவிடம் ஓடி வந்த திவ்யா ‘‘அப்பா அந்தந் தட்டிலே என்ன இருக்கிறதுன்னு காட்டச் சொல்லேன்’’ என்றாள்.
அர்ச்சகரைப் பார்த்தான் சிவா. அவர் தட்டை எடுத்து நீட்ட, சிவா அதை வாங்கி திவ்யாவிடம் காட்டினான்.
மஞ்சள் கயிறு தேங்காய், பழம் எல்லாம் எதுக்கு வச்சிருக்குப்பா?’’
‘‘சும்மா‘‘
“அப்படியா. ஆமா இனி என்னச் செய்யப் போறே?’’
‘‘பார்த்துண்டேயிரு கொழந்தைன்னா….. போய் சித்தப்பா கூட சாக்லேட் வாங்கிண்டு வா. இப்படி ஏதாச்சும் வம்பு பண்ணிண்டே யிருந்தே உன்னை பூதத்திடம் புடிச்சி கொடுத்திட வேண்டியதுதான்.’’ என்றார் அர்ச்சகர்.
‘‘அப்பா‘‘ என்று பயந்து கொண்டே சிவாவிடம் வந்தாள் திவ்யா.
‘‘உண்மையிலே நீ பயப்படாதே கண்ணு’’ என்றான் சிவா.
’என்ன நினைத்தாளோ இல்லை பயந்து போனாளோ’ஓடிப் போய் சித்தப்பாவிடம் ஒட்டிக்கொண்டாள்.
சிரித்துக்கொண்டே தாலியை நீட்டினார் அர்ச்சகர். எடுத்துத் திரும்பிய சிவா புவனாவின் முகத்தைப் பார்த்தான்.
இவ்வளவு நேரம் நடந்த கலட்டாவையும் மீறி அவள் முகத்தில் புன்னகை படர்ந்தது.
அருகில் கண்ணால் அழைத்தான் சிவா. புவனா அருகில் வர, எல்லோர் முகத்திலும் சலனங்கள் கலைய தாலியைக் கட்டினான் சிவா.
எல்லோர் கைகளில் இருந்த அட்சதையை தூவ, அங்கே இறுகிப் போயிருந்த மௌனம் கலைக்கப் பட்டு மெதுவாக கலகலப்பு ஏற்பட்டது.
‘’சித்தப்பா இவ்ளோ பெரிய சாக்லேட்” என்று கையை விரித்துக் காட்டினாள் திவ்யா.
“கடைக்குப் போவோமா?” என்று கேட்டவாறு திவ்யாவைத் தூக்கிக் கொண்டு கிளம்பினான் சிவாவின் தம்பி.
“புவனா நான் பணம் புரட்டி வச்சிருக்கேன். வீணாகக் கவலைப் படாதே” என்றாள் அம்மா
“எப்படி?” என்றாள் புவனா.
“என் கழுத்தில் கிடந்த தாலியை அடகு வைத்தேன்” என்று அம்மா சொன்ன போதுதான் அம்மாவின் கழுத்து வெறுமனே இருப்பது புரிந்தது.
“இப்படியெல்லாம் இந்தக் கல்யாணம் நடக்க வேண்டுமா?”
“சீ! இந்த மாதிரி சும்மாச் சும்மா அழக்கூடாது. போய் புறப்படுகிற வழியைப் பார்.” என்று புவனாவை அனுப்பி விட்டு சிவாவின் அம்மாவிடம் வந்து “இந்தாங்க நான் சொன்னப் பணம் ரூபாய் இருபத்தையாயிரம்” என்று கொடுத்து விட்டு “புவனாவின் கழுத்தில் இருபத்தைந்து பவுனுக்கு தங்கம் போட்டிருக்கிறேன். அதைப் பார்த்துக்கொள்ளுங்கள். அப்புறம் புறப்படும் போது வீணாக சல சலப்பு காட்ட வேண்டாம்” என்றாள்.
“அதெல்லாம் சரி. மறு வீடு காண எத்தனை பெட்டி சரி செய்திருக்கே?”
“வாங்க, அதையும் காட்டி விடுகிறேன். அப்புறம் சீர் சரியாகச் செய்ய வில்லைன்னு என் பொண்ணு பெறகு கண்ணைக் கசக்கிக் கிட்டு வந்து நிக்க வேண்டாம்.” என்று சிவாவின் அம்மாவை அழைத்துச் சென்று சீர் வரிசையைக் காட்டினாள்.
“இந்தா இருக்கு”
“கட்டில் மெத்தை….
“வெளியே வண்டியிலே வச்சிருக்கேம்மா”
“சரி முறுக்குப் பெட்டி இருபத்திரண்டு வைக்கச் சொன்னேனே. இருபதுதானே இருக்கு”
“இன்றைக்கு சந்தையிலே பெட்டிக்கு அலைஞ்சேன் மைனி கிடைக்கலே. நான் வேணும்ணா பையிலே போட்டு அனுப்பறேன்.”
“அதெப்படி நான் எவ்வளவு நாளைக்கு முன்னாலே சொன்ன விசயம்? நீ எல்லாம் சிவா வீட்டுக்குத்தானேண்ணு இளக்காரமாக உட்கார்ந்திருந்தே அப்படித்தானே?”
“அய்யோ அப்படியெல்லாம் இல்லை மைனி” என்று புவனாவின் அம்மா பதற, அங்கே திருமணத்திற்கு வந்திருந்த பெண்மணி கூட்டத்திலிருந்து “என்னவோ புது மாப்பிள்ளை கல்யாணம் மாதிரி ரொம்பாத்தான் அலட்டிக்கிறாங்க. இரண்டாந்தரக் கல்யாணம் தானே” என்று சொல்ல “அது எவடி சொன்னது எம்பையன் எப்பவும் புது மாப்பிள்ளைத் தாண்டி” என்று கத்தினாள்.
பின் மெதுவாக “சரி..சரி பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒழுங்காக அனுப்பி வைக்க பார்” என்றாள்.
அத்தியாயம் – 8
முறுக்குப் பெட்டி இருபத்திரண்டு
திவ்யாவைத் தூக்கிக் கொண்டு கையில் பாலுடன் வந்தாள் புவனா.
“இண்னைக்கு அத்தா நம்மக் கூடவா படுக்கப் போறாங்க அப்பா”
“ஆமா”
“அத்தா எனக்கு கதை சொல்லுவியா?”
“ஓ! ராஜகுமாரி கதை சொல்லட்டுமா?”
“அய்… பழம் வச்சிருக்கு, லட்டு மைசூர் பாகு எல்லாம் வச்சிருக்கு என்னப்பா எதாவது விசேசமா?”
“ஆமா கண்ணு. அத்தா நம்மக் கூட வந்திருக்காங்க இல்லையா, அதற்காகத்தான் இதெல்லாம் சித்தப்பா கொண்டு வந்திருக்காங்க”
“திவ்யா பால் சாப்பிடுகிறாயா கண்ணு” புவனா கேட்டாள்.
“ம்கூம். நான் ஆப்பிள் சாப்பிடறேன்” என்று ஒரு பழத்தை எடுத்துக் கடிக்க ஆரம்பித்தாள்.
“ரொம்பா வருத்தமா புவனா?”
”எதற்கு?”
“இல்லை உன் முகத்தைப் பார்த்தால் ரொம்பா சோகமாக இருக்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். எங்க அம்மா சொன்னதிலே உனக்கு வருத்தமா? என்னாலே எடுத்துச் சொல்ல முடியாது புவனா. அவர்களுடைய தலைமுறை அவர்களை அப்படி வளர்த்து விட்டது. அவர்களை இனி மாற்ற முடியாது. நாம் தான் இனி அவர்களோடு மாறிப் போகணும். அவர்களை மாற்ற நினைத்தால் உடைந்து போவார்கள். அதனால் தான் சில விசயங்களை எதிர்த்து பேச முடியாமல் போய் விட்டது.”
“பரவாயில்லை அத்தான். எனக்கு எல்லாம் புரியுது. ஆனால் சோகமும் துக்கமும் அடக்க முடியாத படி அழுத்துகிறது. இதிலே வேற கல்யாண வேலைகள் செய்ததில் ஒரே களைப்புதான் என் முகத்திலே சோகமாக உங்களுக்கு தெரியுது.”
“இவ்வளவு புரிந்து வைத்திருக்கிற புவனா நீ எனக்கு மனைவியாக வந்ததிலே எனக்குச் சந்தோஷம்தான். இந்தக் கல்யாணம் உனக்கு எப்படித் தோணுதம்மா?”
“இவ்வளவு வெளிப்படையாக பேசறதால உங்களிடம் சொல்வதில் எனக்கு எந்த பயமும் தோன்ற வில்லை. திருமணம் முடியுமுன்னே ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு அம்மாவாகப் போகிறோமே என்ற குறை ஒரு கரையில் இருந்து அழுத்திக் கொண்டிருந்தாலும் சிவா அத்தான் எனக்கு கணவர் என்னும் போது எனக்குள்ளே ஒரு பெருமை, சந்தோஷம், மகிழ்ச்சி அது என்ன வென்று சொல்லத் தெரியாத புளகாங்கிதமாக இருக்கிறது.” பேசிக்கொண்டிருக்கும் போதே கொட்டாவி விட்டாள் புவனா.
“நீ என் மனைவி என்பதை விட இந்தக் குழந்தைக்கு அம்மாவாக மாற வேண்டும் என்பது தான் எனக்கு ஆசையாக இருக்கிறது.”
“இவள் என்னைச் சித்தி என்று கூப்பிட்டால் கூட சின்னம்மா என்கிற ஸ்தானத்திலாவது இருக்கிறோமே என்று சந்தோசப்
பட்டுக்கொள்ளத் தோன்றும். இவள் என்றைக்குப் பேச ஆரம்பித்தாளோ அன்றையிலிருந்து என்னை அத்தா என்றுதான் கூப்பிடுகிறாள். முன்னாலே ‘அக்கா’ என்று கூப்பிடுகிறாளோ என்று கூடத் தோன்றியது. ஆனால் இந்த இளம் பிஞ்சு இனி என்னை எப்போது அம்மாவாகப் பாவிக்கப் போகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.”
”நாம்தான் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமா? இல்லை நம் அரவணைப்பிலும் நாம் காட்டும் அன்பிலும் இவள் என்னை அம்மாவாக பாவிக்கப் போகிறாளா? இல்லையென்றால் வேறு ஏதாவது வழியில் நான் இவளைக் கவர வேண்டுமா? எனக்குப் புரிய மறுக்கிறது.”
அத்தியாயம் – 9
பெருமூச்சு விட்ட சிவா, சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டு கதவைத் திறந்து மேலேறி மொட்டை மாடியில் நின்று புகையை இழுத்து காற்றில் ஊதினான்.
மனதிற்குள் புன்னகை எழுந்தது. ‘திவ்யாவை எப்படி வளர்க்கப் போகிறோம்’ என்று தேவகி இறந்த போது திக்கித் திணறி நின்ற நேரத்தில் கூட புவனாவை திருமணம் செய்யப் போகிறோம் அவள்தான் திவ்யாவை வளர்க்கப் போகிறாள் என்பது தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் என்ன வெல்லாமோ நடந்து விட்டது.’ என்று எண்ணிக் கொண்டு திரும்பவும் புகையை இழுத்து விட்டான்.
கீழே நண்பர்களோடு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த சிவாவின் தம்பி மொட்டை மாடியில் புகை கருவதைக் கவனித்தவன் “ஒரு ஆட்டம் போடுங்கப்பா நான் இப்ப வருகிறேன்” என்று சொல்லி விட்டு மாடிக்கு வந்தான்.
“அண்ணா எனக்கொரு சிகரெட் கொடுங்க” என்றான். சிவாவின் அருகில் வந்து.
“எங்கிட்டயே சிகரெட் கேக்குற அளவுக்கு பெரியாளாகி வீட்டீர்கள் இல்லையா?” என்று பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து நீட்டினான்.
சிகரெட்டை வாங்கிக் கொண்ட பாலு “என்ன அண்ணா ஏதாவது பிரச்சினையா? நான் சின்னப்பையன் தான் எதுவும் கேட்கக் கூடாது தான். இருந்தாலும் இப்படி நீங்கள் மொட்டை மாடியில் வந்து சிகரெட் குடிப்பதைப் பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது.” என்றான் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. என்னடா வாடை அடிக்குது. கல்யாண பார்ட்டியா?; சரி சரி போய் சீட்டு விளையாடு கொஞ்சம் காற்று வாங்கத்தான் மொட்டை மாடிக்கு வந்தேன். வேற ஒன்றும் பிரச்சினை இல்லை.”
“என்னிடம் சொல்ல விருப்பமில்லை என்றால் சொல்ல வேண்டாம்”
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பாலு. ஒன்றும் பிரச்சினை இல்லை. அங்கே சிகரெட் குடித்தால் அரை முழுவதும் புகையாகும் என்றுதான் மொட்டை மாடிக்கு ………
“நான் போய் படுக்கிறேன். நீ போ” என்றான் சிவா.
சிகரெட்டை முடித்து விட்டு சிவா படுக்கையறைக்குள் நுழைந்த சப்தம் கேட்டு விழித்தெழுந்த புவனா “ஸாரிங்க திவ்யாவிற்கு கதை சொல்லிக் கொண்டிருந்தேனா களைப்பு வேறே உடம்பை அசத்தி விட்டது அயர்ந்து தூங்கி விட்டேன். ரொம்ப ஸாரி” என்று பதைப் பதைப்புடன் எழுந்தாள்.
‘’பரவாயில்லை புவனா தூங்கு.’’
‘’என் மேல் வருத்தமில்லையே’’
‘’கண்டிப்பாக இல்லை, சேலையை சரியாக மூடிக்கொண்டு தூங்கு” என்று சொல்லி விட்டு தலையணையை எடுத்து வெறுந்தரையில் போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டான் சிவா.
– தொடரும்…
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
