ஆகாய விரிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 8, 2026
பார்வையிட்டோர்: 253 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆடி அமாவாசை ரொம்ப விசேஷம். தமிழ் கிராமத்து ஜனங்கள், லாரிலாரியாகப் புறப்படுகிற கோலாகலம். ஏகப்பட்ட லோடுவேன்களில் கூட்டம் கூட்டமாக ஜனப் பெருக்கு. 

ஆணும் பெண்ணும்… கிழடுகளும் இளவட்டங்களுமாக உற்சாகக் கூப்பாடுகள். எல்லாம் கிராமத்தாள்கள். எண்ணெய் வழிகிற கருப்பு முகங்கள், கண்ணில் அடிக்கிற வண்ணச் சேலைகள். 

தென் மாவட்டம் பூராவும் ஒட்டுமொத்தமாகப் படையெடுக்கிற ஜனத் திருவிழா. தாணிப்பாறை சுந்திரமகாலிங்கம் கோவில், மலைமேல் ஏழுமைல் உயரத்தில் இருக்கிறது. தரைமட்டம் பூராவிலும் ஜனத்தலைகள். ஆற்று மணல் பூராவும் மாட்டு வண்டிகள்… லாரிகள்… வேன்கள். வாகன நெரிசல்கள். 

அதிலும்… இந்த வருஷ ஆடி அமாவாசை, சரியாக வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டது. ஜனங்களுக்கு சாமியே அருள் இறங்கிய மாதிரி… பக்திப் பெருக்கில் ஆடித் திளைக்கின்றனர். 

சிவகாசி பஸ் ஸ்டாண்டில் எல்லா பஸ்களிலும் ‘தாணிப்பாறை’ என்ற காகித போர்டுகள். 

வெவ்வேறு ஊர்களுக்குப் போய்க் கொண்டிருந்த பஸ்களெல்லாம்… பக்தர்கள் நலம் நாடி… ‘ஸ்பெஷல்’ அடிக்கின்றன. ‘தாணிப்பாறை’ என்ற காகித போர்டை ஏந்துகின்றன, நெற்றிப் பொட்டாக. 

இன்றைக்குப் பார்த்து… நான் இந்தப் பயணத்தில் மாட்டிக் கொண்டேன். ஒரு முக்கியமான கூட்டம். ஆடி அமாவாசை வெள்ளியன்று… தமிழ் ஜனமே, சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு இடம் மாறும் அளவுக்கு கூட்டம் திமிலோகப்படும் என்று எனக்குத் தெரியாது. 

ஆடியைக் கண்டேனா… அமாவாசையை நினைத்தேனா… வெள்ளியை யோசித்தேனா… ஒண்ணடியும் மண்ணடியுமாக வாழ்கிற சாமான்ய மக்களின் உணர்வுகளை உணர்ந்தேனா? ஓர் இழவும் இல்லை. 

எனக்குத் தெரிந்ததெல்லாம்… ஒப்புக்கொண்ட தேதி, ஒப்புக் கொண்ட கூட்டம். அதில் பேச வேண்டிய உரை. அதன் தலைப்பு. அதைச் சுற்றியே யோசிப்பு. யோசிப்புகள். 

என் உலகமே, இதுதான்… 

சிவகாசி பஸ் ஸ்டாண்டில்… அலை மோதிப் பார்க்கிற ஜனக்கூட்டமும், எல்லா வண்டிகளிலும் அப்பிக் கொண்டு போகிற ஆவேசமும்… ‘தாணிப்பாறை… தாணிப்பாறை என்ற சத்தப் பேரலைகளும் தான்… எனக்கு ‘பொது உலகம்’ ஒன்று இருப்பதை உணர்த்துகிறது. 

சிவகாசிக்கு பஸ்ஸில் வருகிறபோது… எதிரில் வருகிற லாரிகளில் நெருக்கமாக நின்று கொண்டு போகிற கிராமத்தாட்களைப் பார்க்கிறேன். வேன்களில்… லோடு வேன்களிலெல்லாம் ஜனப் பேரலைகள். கிராமத்து வியர்வைக் கருப்பு மனிதர்கள். 

நான் வந்து கொண்டிருந்த டவுன் பஸ்ஸில்கூட வழக்கமான போர்டை எடுத்து ஓரங்கட்டிவிட்டு, ‘தாணிப்பாறை’ என்கிற அட்டையை சொருகுகிற கண்டக்டர். 

‘அடுத்து… நம்ம ரூட்டுக்கு டயமெடுக்கலியா?” 

‘இல்லே சார்… தாணிப்பாறை ஸ்பெஷல் அடிக்கச் சொல்லி… ஆர்டர்.” 

சிவகாசி பஸ் ஸ்டாண்டில்… மக்கள் அலை மோதிப் பரபரக்கிற ஆவேசத்தையும். வருகிற எல்லா பஸ்களையும் சுள்ளென்று ஓடிப்போய் அப்புவதையும் ஓடுகிற பஸ்களிலும் ஓடிப்போய் ஏறுகிற சாகசங்களையும் பார்த்ததுமே மிரண்டுவிட்டேன். 

இந்த பயங்கர உக்கிரத்துலே… நா எந்த பஸ்லே ஏறுவது? எப்படி ஏறுவது? நடக்கிற காரியமா? 

மலைப்பும் மருட்சியுமாக நான் திகைத்து நிற்கிறேன். 

“கூட்டத்திற்கு வர இயலாது” என்று செல்போனில் சொல்லி விடலாமா என்றொரு மின்னல் கூட்டப் பேரலைகளின் சுனாமி ஆர்ப்பரிப்பு கண்டு ‘டர்ர்ர்’ ராகி விட்டேன். 

சொல்லியும் பிரயோசனமில்லை. இனிமேல்… ஊர் திரும்பவும் பஸ்ஸில்லை. ‘என்னடா வம்பாப் போச்சு’ என்று திண்டாடித் தவிக்கிறேன். மலைத்து மருகுகிறேன். 

என் முகத்தையே பார்க்கிற ஒருவர். வெள்ளை வேட்டி. காலில் ஷு போன்றதொரு செருப்பு. சந்தனக் கலர் சட்டை. சற்று பெரிய சட்டை. கனிந்த சிவப்பிலான முகம். புன்னகைக்கிற இனிய கண்கள். உதடுகளின் ஈரமின்னலாக அன்புணர்ச்சி. 

பதைப்பும், திகைப்புமாக… மருட்சியும் புலம்பலுமாக… முள்மேல் நிற்கிறவனைப்போல தத்தளித்துப் போயிருக்கிற என்முகத்தில்… என் மன இருட்டு. கவலைநிழல். குழப்ப ரேகைகள். 

“என்னங்க…” என்கிறார் தயக்கமாக. என்னை என்ன சொல்லி அழைப்பது என்ற திகைப்பு, அவருக்கு. 

“என்ன?” என்கிறேன். 

“பஸ்லே ஏற முடியுமான்னு பயப்படுறீகளா?” 

அசட்டுத்தனமாக சிரிக்கிற என் உதடுகள். 

“பயப்படுறதா? நடுங்குதேன்…” 

“எங்க போகணும்?” 

“ராஜபாளையம் போகணும்.”

“முக்கியமான விஷயமா?” 

“ரொம்ப ரொம்ப முக்கியமான கூட்டம்.” 

“நானும் பஸ்ஸுக்குத்தான் வந்தேன்… பஸ்லே ஏறமுடியும்னு தோணலே. எங்க வீட்டுக்குப் போன் பண்ணி, காரை வரச் சொல்லியிருக்கேன்…’ 

“அப்படியா?” 

“நீங்க விரும்புனா… எங்கூட வரலாம்.” 

எனக்குள் மூச்சுமுட்டிக் கொண்டிருந்த மனக் கதவு பளாரென்று திறந்து கொண்ட மாதிரியோர்… ஆசுவாசம். சளாரென்று வெளிச்சமும், காற்றும் உள் பாய்ந்த பரவசம். 

“ரொம்ப, ரொம்ப நல்லதாப் போச்சு… ரொம்ப தேங்க்ஸ்… எனக்கு இப்பத்தான் உயிரே வந்த மாதிரியிருக்கு…” 

எனது மகிழ்ச்சியையும், மன நெகிழ்ச்சியையும் வார்த்தைப்படுத்த முடியாமல் தத்தளிக்கிற நான் தடுமாறுகிறேன். 

“நீங்க எங்க போறீக?” 

“தென்காசி. நீங்க ராஜபாளையம் தானே?” 

“ஆமா…” 

நானும் அவரும் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு நடுவயதுக்காரர் “நாங்களும் சீல்த்தூர் (ஸ்ரீவில்லிபுத்தூர்) வரைக்கும் கூட வரலாமா?” என்று பதைப்புடன் கேட்கிறார். 

“நாங்கன்னா…?” 

“நானும் என்னோட மச்சினரும். ரெண்டு பேரு.” 

“எங்க போறீக?” 

“தாணிப்பாறைதான் போகணும். ஆடி அமாவாசை வெள்ளி. நல்ல நாள். சாமி கும்பிடப் போறோம். சீல்த்தூர் போய்ட்டா… அங்க இருந்து பக்கம்தான்.” 

“சரி… வாங்க. சீல்த்தூர் பஸ் ஸ்டாண்டுலே எறக்கி வுட்டுடுறேன்…” 

“நீங்க… தெய்வம்போல. நல்லாயிருக்கணும். நாங்க கும்புடுற சாமி ஒங்களையும் காப்பாத்தணும்.” 

நடுவயதுக்காரர் நெகிழ்ந்து குழைந்த மனசுடன் வாழ்த்துகிறார். அவர் நன்றி சொல்கிற பாங்கே… ரொம்ப இயல்பாக இருந்தது. ‘ரொம்ப தேங்க்ஸ்’லேயிருக்கிற உயிரற்ற சம்பிரதாயம் – உணர்வில்லாத யந்திரத்தனம் – இல்லாமல், வாழ்த்தாக அமைகிற நன்றி. மனசின் குழைவே, வார்த்தை வடிவம் எடுத்த மாதிரியிருக்கிறது. 

சந்தனச் சட்டைக்காரரின் பெருமிதப் புன்னகையில் சிறிய மீசை விரிகிறது. 

அடுத்த சில நிமிஷங்களில் வெளி வாசலோரம் வந்து நின்ற அம்பாஸிடர்கார். பால்நிற வெள்ளை. முன்பக்கம் அவர். பின்சீட்டில் நாங்கள் மூவர். ஓசி டிக் கட்கள். 

டிக்கட்டேயில்லை. ஓசிகள். 

நடுவயதுக்காரர், நடுவில். அந்த ஓரம் அவரது மச்சினர் இந்த ஓரம், நான். எனது மடியில் எனது பேக். 

கார் புறப்பட்டவுடன், 

எனக்குள் ஏற்பட்ட ஆசுவாசம், பக்தி விமர்சனமாக வெளிப்பட்டது. 

“யப்ப்ப்பா…ஆ! தப்பிச்சாச்சு. அப்பவும், சாமி கும்புடுறதுங்குற பேர்லே இம்புட்டுக் கூட்டமா? இம்புட்டு நெருக்கடிகளா? இம்புட்டு சீரழிவுகளா?” 

நடுவயதுக்காரர் சுர்ரென்று கோபத்துடன் குறுக்கிட்டார். சீண்டப்பட்டு விட்ட ஆத்திரம். 

“கல்யாணம் காட்சி முடிச்சாலும் கூட்டம் இருக்கும். நெருக்கடி இருக்கும். சங்கடம் இருக்கத்தான் செய்யும். அதுக்காக… கல்யாணம் மூய்க்காம இருந்துர முடியுமா? சாமி கும்புடாம இருந்துர முடியுமா?” 

அவர் கேள்விக்கு என்னுள் பதிலற்று, வெறுமையாகியிருந்தேன். பதிலைத் தேடி, வாக்குவாதம் வளர்க்கவும் விருப்பமில்லை. ஓசிப் பயணத்தில்… ஒரேயடியாக உரிமை எடுத்துக் கொள்வதா? தோற்றுவிடவும் சம்மதமில்லை. 

“ஆடி வெள்ளிங்குறது வருஷத்துலே ஒருநாள். ஆடி வெள்ளியிலேயே அமாவாசை அமையுறது, அதைவிட அதிசயம்… இப்படிப்பட்ட நாள் பொருத்தம் அமையுமா?” 

நெகிழ்ந்து போகிற அவரைச் சீண்டிப் பார்க்கிற ஆசை, என்னுள் முள்ளாக நீள்கிறது. வாக்குவாதமாக நீண்டாலும் பரவாயில்லை. 

“ஆடி மாசமே, ஆட வைக்குற மாசம். அமாவாசையும் இருட்டு. நல்லதுல்லே. இதுலே அமங்கலம் தானே, ரொம்ப இருக்கு?” 

“மண்ணுலே பாடுபடுற மனுசருக்கு ஆடிப்பட்டம் தேடிக் கிடைக்குற அபூர்வம். ஆடிமாசம், நஞ்சைக் காரனுக்கும், புஞ்சைக்காரனுக்கும் அள்ளிக்குடுக்குற விதைப்பு மாசம். முந்திக்காலத்துலேயெல்லாம் புதுசா கல்யாணமான தம்பதிக்கு, தலைதீவாளியெல்லாம் கிடையாது. தலையாடிதான், ரொம்ப ரொம்ப விசேஷம். ஆடி மாசம், ஆட வைக்குற மாசம்னு இடையிலே யாரோ எப்படியோ ஆக்கிட்டாக…! ஆடித்தபசு… ஆடிவெள்ளி…ன்னு ரொம்ப ரொம்ப முக்கியமான பண்டிகையெல்லாம் இந்த மாசம்தான் வருது, சிவனை, முருகனை, அம்மனைக் கும்புடுறவுகளுக்கு.” 

“சாமிகும்புடுறதே… மன அமைதிக்குத்தானே? இந்த இடிபாடுலேயும், தள்ளு முள்ளுலேயும் மன அமைதி எங்குட்டு வரும்?” 

“மன அமைதிக்காகப் பூஜைபண்றதெல்லாம் அறிவாளி, ஒசந்த சாதியாளுக செய்யறது. நாங்க சாமி கும்புடுறது, எங்க சொகத்துக்குத்தான். காடுகரை வெளையணும்; மாடுகன்னு செழிக்கணும்; மனுச மக்க நோய் நொடியில்லாம, நொம்பலமில்லாம்… செல்வசுபிட்சத்தோட வாழணும்னுதான்.” 

“ஒழைச்சாத்தான் இதெல்லாம் நடக்கும். சாமியை கும்புட்டுட்டா…நடக்குமா?” 

“ஒழைக்காம சாமி கும்புடுறவன்தான், முட்டாப்பயக. உடல் நிறைய ஒழைக்கவும் செய்யணும். மனசு நிறைய சாமி கும்புடணும். பொழைப்பை நேராக்க மல்லுக்கட்டுற மனசுக்கு தைர்யம் தர்றது, சாமி.” 

கார், ஸ்டேட் பாங்க் தாண்டி… பள்ளி, கண் ஆஸ்பத்திரி, தண்ணீர்த்தொட்டி என்று விரைகிறது. காருக்குள் காற்று மோதுகிறது. 

“காரை நிறுத்தப்பா… ஓரங்கட்டு…’ 

சந்தனச் சட்டைக்காரர் இளநீர்க் கடையில் இருக்கிற இளைஞரை அழைக்கிறார். 

“தம்பி…” 

“என்னங்க?” 

“அஞ்சு எளநி வெட்டு…” 

நான் பதறுகிறேன். ஒரு வேகத்தில் குறுக்கிடுகிறேன். 

“கார்லே ஏத்துனதே… பெரிய புண்ணியம். இது வேற செலவா? வேண்டவே வேண்டாம். தம்பி, எளநி வெட்டாதே…” 

“நீ, வெட்டு” என்கிற சந்தனச் சட்டை. 

“வீட்டுக்கு வர்றவுகளை ஆகாரம் குடுத்து உபசரிக்கணும். இது மனுச நாகரிகம். என்னோட காருக்குள்ளே வந்துருக்குற உங்களை… வெறும் வயிற்றோடா… எறக்கி வுடுறது?” 

அவரது புன்னகையும், முகவிரிவும் பெருந்தன்மைப் பூமலர்வுபோல ஒளி வீசுகிறது. 

பக்கத்தில் ஒரு வெற்றிலை பாக்குக்கடை. தொங்குகிற புத்தகங்கள். பெட்டிக்கு முன்னால் தொங்குகிற நாளிதழ் போஸ்டர்கள். 

“பெங்களூருவில் தொடர் குண்டு வெடிப்பு. பதற்றம் தொடர்கிறது.” 

“குஜராத்தில் சங்கிலித் தொடர் குண்டு வெடிப்பு. சாவு எண்ணிக்கை உயர்கிறது.” 

“மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு ஆபத்தா?” 

விதம் விதமான வாசகங்கள். ரத்த பயங்கரமான வாசகங்கள். சதைச்சிதறல்களையும் மனித உயிர்கள் துடிப்புகளையும் நினைவூட்டுகிற ரத்த வாசகங்கள். திகிலூட்டுகிற வாக்கியங்கள். 

நடுவயதுக்காரரின் மச்சினர், எரிச்சலும், கடுப்புமாக முணுமுணுக்கிறார். 

வண்டி புறப்பட்டு, ரெயில்வே கேட்டைத் தாண்டி, ரிசர்வ் லைனுக்குள் பிரவேசிக்கிறது. 

“என்ன முணுமுணுக்குறீக?” 

“ராவுத்தமாருக்கு இதே சோலியாப் போச்சு. குண்டு வைச்சு கொலை பாதகம் செய்றதே பொழைப்பாய்ப் போச்சு…” 

எனக்குள் பிரமிப்பாக இருக்கிறது. அமெரிக்கா, ஆசைப்படுகிறது, அனைத்து இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்த. 

அதை வெற்றிகரமாக ஊடகங்கள் நிறைவேற்றி விட்டதே… ஒரு கிராமத்தாளைக்கூட… ஒட்டு மொத்த ராவுத்தமாரையும் திட்ட வைப்பதில் வெறுக்க வைப்பதில். ஜெயித்து விட்டதே… 

“டெல்லியிலே குண்டு… குஜராத்லே குண்டு… நாடு பூராவும் குண்டு வெடிப்புகள். குண்டு வைக்குற கொடுமையெல்லாம், குல்லாக்காரங்க செய்றாங்க. அப்புராணி சனங்க செத்து மடியுது…” 

சந்தனச் சட்டைக்காரர் கழுத்தை இடது பக்கமாகத் திருப்பி… அந்த இளைஞரைப் பார்க்கிறார். பார்த்து விட்டு என்னைப் பார்க்கிறார். அப்புறம், டிரைவரிடம் சொல்கிறார். 

“வண்டியைப் பாத்து ஓட்டுப்பா…” 

“தாணிப்பாறை போற லாரி, வேன்களாலேதான் டிராபிக் சிக்கலாகுது.” 

“எல்லாம்… இன்னைக்கு ‘ஒருநா’த்தானே? நீ பொறுமையா… ஒதுங்கிப் போ…” 

நான் அந்த ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் இளைஞரை எட்டிப் பார்க்கிறேன். எனக்குள் பொங்கிப் பெருகும் கோபத்தை… சற்றே மென்மைப்படுத்த யத்தனிக்கிறேன். 

“அல்லாவைக் கும்புடுற எல்லா ராவுத்தர்களையும் ஒட்டு மொத்தமா… சகட்டுமேனிக்கு… திட்டாதீக. அவுக எல்லாருமே பாதுகாப்பற்ற பயத்துலே யோக்கியமா… மனுச ஈரத்தோட இருக்காக…” 

“அப்ப… குண்டு வைக்குறதெல்லாம் தீவிரவாதிக இல்லியா? அவுக ராவுத்தமாரு இல்லியா?” 

“ஒண்ணு ரெண்டு தீவிரவாத இயக்கங்க இதே சோலியா இருக்குறது, உண்மைதான். இல்லேங்கல்லே… ஆனா… எல்லா குல்லாக்களும் குண்டு வைக்குதுன்னு சகட்டுமேனிக்கு சொல்லக் கூடாதுல்லே?” 

“எல்லா குல்லாக்களும் குண்டு வைக்காட்டாலும்… குண்டு வெடிச்சு சாவுற மனுச உயிர்களைப் பாத்து… ரகசியமா ரசிக்கத்தானே செய்றாக?” 

“பாபர் மசூதியை இடிச்சது யாரு…? இந்துக்களா, இடிச்சாக? இல்லே… இந்து மதத்தைப் பயன்படுத்தி தீவிரவாதம் வளர்க்க நினைக்குற பயங்கரவாதிகதானே, இடிச்சது?” 

“ஆமா…” 

“அதேமாதிரிதான்… எல்லா ராவுத்தர்களும் குண்டு வைக்கலே. மதத்தைப் பயன்படுத்தி பயங்கரவாதம் வளர்க்குற ஒண்ணு ரெண்டு இயக்கங்கதான் குண்டு வைக்குதுக.” 

இளைஞர் சற்றே திகைக்கிற தருணம். நான் தீவிரமாக முன்னேறுகின்றேன். தேடாமலேயே ஓடி வருகிற வார்த்தைகள். சீறிப் பாய்கிற வாக்கியங்கள். 

“பெரும்பான்மை பயங்கரவாதம் மூர்க்கமா முன்னேறுறதாலேதான், சிறுபான்மை பயங்கரவாதம் வளருது. பாபர் மசூதியை இடிக்குற மூர்க்கம் நடந்ததை யாரு தடுக்க முடிஞ்சது? ஆப்கானிஸ்தானை நாசப்படுத்துன அமெரிக்கா ராணுவத்தை யாரு தடுக்க முடிஞ்சது? ஈராக்கை சீரழிச்ச ஐ.நா. ராணுவத்தை யாரு தடுக்க முடிஞ்சது? தடுக்க முடியாத இயலாமையினாலேதான்… சிறுபான்மை பயங்கரவாதம் முளைக்குது.” 

நான் பேசுகிற உணர்ச்சிவேகத்தில் எச்சில் தெறிக்கிறது.

கார், மல்லியைத் தாண்டி விட்டது. 

இளைஞர் புரியாமையில் திகைக்கிறார். நான் கூறிய வேகம் அடர்த்தி அவருக்குப் புரியவில்லை. ஆனால், எதிர்வாதம் செய்வதற்கான வார்த்தைகளற்ற வெறுமையில் மௌனமாகிறார். 

அதே கணத்தில்- 

செல்போனில் சிணுங்கல் இரைச்சல். சந்தனச் சட்டைக்குத்தான். எடுத்துப் பேசுகிறார். 

“யாரு…? கதீஜாவா? நாந்தான் மீரான் மைதீன் பேசுறேன்… ஆமாமா… தாணிப்பாறைக் கூட்டம் ரொம்பத்தான். அதான்… பஸ்லே வராம, கார்லே வர்றேன்… கட்டாயமா வந்துருவேன்… இதோ, சீல்த் தூரை நெருங்கிட்டேன்… வந்துகிட்டேயிருக்கேன்.” 

இளைஞர் முகம் கறுத்து விட்டது. 

பெருமிதமும், அன்பும், உபசரிப்புப் பண்புமிக்க ஒரு ராவுத்தரின் வாகனத்தில் வந்து கொண்டே… ராவுத்தர்களைத் திட்டித் தீர்த்த… குற்ற உணர்வில் தடுமாறித் தத்தளிக்கிற அவர்… 

என்ன சொல்ல… ஏது சொல்ல… என்றறியாத குழப்ப இருட்டு. ‘என்ன வார்த்தையில், மன்னிப்புக் கோருவது’ என்று புரியாத திகைப்பு. 

அந்த இளைஞரின் மனத்தவிப்பை நான் பரிவுடன் பார்க்கிறேன். 

அதற்குள்- 

ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் வந்து விட்டது. அங்கும் ஜனத்தலைகள். கூட்டப் பரபரப்புகள். பஸ்களை மொய்க்கிற மனிதப் பேரலைச் சமுத்திரம். 

“எறங்குறீகளா?” 

டிரைவர், காரின் கதவைத் திறக்க… நடுவயதுக்காரரும், அந்த இளைஞரும் இறங்க… இளைஞர் சந்தனச் சட்டையைக் குனிந்து நோக்குகிறார். மனக் குனிவு. 

“தெரியாம… பேசிட்டேன். பாய், தப்பா… நெனச்சிக்கிடாதீங்க…” 

“தப்பா நெனைக்க என்ன இருக்கு? தப்புத்தப்புகளா நாட்டுலே நடக்கு. அதைத்தப்புத்தப்பா புரிஞ்சுக்கிடுற நாம்… தப்புத்தப்பாத்தானே பேசுவோம்? தப்பு, உங்க மேலே இல்லே…” 

“அமெரிக்க ஏகாதிபத்தியமும், உலக ஊடகங்களும் பண்ணுறதுதான்… தப்பு.” 

நடுவயதுக்காரரும் குழைந்த குரலில் தளுதளுக்க ‘நல்ல வார்த்தைகள்’ சொல்ல… கார் புறப்பட்டது. 

நான், மீரான் மைதீனை ஆச்சரியமாகப் பார்த்தேன்.

“நெசமாவே… உங்களுக்குக் கோபமில்லியா?” 

“நம்மகிட்டே கோபமும் இருக்கு. அன்பும் இருக்கு. எதை வெதைக்குறோமோ… அதுதான் வெளையப் போகுது? நாம்… அன்பையே வெதைப்போமே…! அதுதானே… எல்லாம் வல்ல இறைவனுக்கு இன்பமாக இருக்கும்?” 

அவரது பெருந்தன்மையிலும், அன்பிலும், உபசரிப்பிலும் பிரமித்துக் கிடந்த நான், இப்போது… அவரது ஆன்மாவின் ஆகாய விரிவைப் பார்த்துப் புல்லரித்துப் போயிருக்கிறேன். 

– செப்டம்பர் 2008, ஓம் சக்தி.

– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *