வாணியின் புதிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2026
பார்வையிட்டோர்: 390 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பிரியே!”

பிரம்ம தேவனின் அழைப்பு காதில் விழுந்தும் கேளாதவள் போலவே இருந்தாள் வாணி. வெண் தாமரை மலர் வண்ணம் சித்தரித்த மென் படுக்கையிலே கவலையுடன் சாய்ந்திருந்தாள் கலாவல்லி, சோர்ந்துபோய் மலரைச் சரணடைந்த அழகு அன்னம்போல.

”வாணி, நீ இன்னும் அந்த நினைவை அகற்ற வில்லையா? வாணிதாசன்… பாவம்!”

சிருஷ்டிகர்த்தா குறும்புத்தனமாகச் சிரித்ததை சரஸ்வதி கவனியாமலில்லை. உண்மையில் அவள் மனம் தனது தோல்வியை எண்ணித்தான் தவித்துக் கொண்டிருந்தது. தேவனின் குத்தல் மொழிகள் இதயக் குமுறலை அதிகரித்தது.

“இந்த ஆண்களே இப்படித்தான்! மென்மை இதயத்தின் தன்மையை உணரத் தெரியாதவர்கள்…. ஹுங் ஆண்மையாம்! கல்லுக்கும் வலிமை இருக்கத் தான் செய்கிறது. மெல்லியலாரின் மனம் நோவச் செய்வதில்….”

பிதா குறுநகை புரிந்தார், தேவியின் ஆத்திரத்தைக் கிளறிவிடுவதில் ஆனந்தம் கண்டவர்போல.

“அன்பே, நீ சொல்வது சரியாக இருக்கலாம். ஞானத்தின் அரசி தெரியாமலே பேசுவாள்! ஆனால்..”

“ஆனால் என்னவாம்?”

“தன் இனத்தின் உண்மை சொரூபத்தைத் தேவி மறந்துவிடுவது..”

“எங்கள் குலத்திற்கு என்ன குறை: என் கருணை பெற்ற அன்புச் செல்விகள் வாழ்வை வளம் செய்ய வந்தவர்கள். ஞான ஒளியேற்றும் அன்புச் சுடர்கள்….”

“ஆகாகா! தெரியுதே!” என்று எக்காளமாக மொழிந்து நகர்ந்தார் பிரம்மா. வாணி கோபமாகத் தலையைத் தொங்கப்போட்டாள். அவள் பார்வையில் இந்தக் காட்சிதானா படர வேண்டும்!

***

கிருஷ்ணபக்ஷப் பிரதமைச் சந்திரனது அமுதக் கிரணங்களை அள்ளி விழுங்கிக்கொண்டிருந்தான் ராமநாதன். மொட்டை மாடியில் நிலவொளியில் ஈஸி சேரில் சாய்ந்திருந்த அவன் விழிகள் யார் வரவையோ நாடுவது போல் துடித்தன. அவன் ஆசையுடன் வாங்கி வந்த மல்லிகைப்பூ, கட்டு அவிழ்க்கப்படாமல் இலைக்குள் பொதிந்து கிடந்தது.

கடியாரம் மணி எட்டு என்று அடித்துக் கூறியது. ‘இன்னுமா வரவில்லை!’ என்று முனங்கிவிட்டு கவனித்தான். யார் காலடி ஓசையும் கேட்கவில்லை. கடியாரத்தின் ‘டிக்டக்’ தான் ஒலித்துக்கொண்டிருந் தது, ஒழுங்காக முன்னேறும் காலதேவனின் அடி யோசைபோல.

”நான்சென்ஸ்! தினம் இதே எழவுதானா! வீட்டிலே ஒருத்தன் இருக்கானே, ஆபீசில் பகல் பூரா உழைத்து மனச் சோர்வுடன் வீட்டுக்கு வந்தால், என்ன வேணும், ஏது என்று கவனிக்கணுமே என்கிற கவலை கிடையாது. ஆபீசில் இருந்து நான் வருவதன் முன்னே, அம்மா கிளப்புக்குப் போயிடுவாள்! அப்புறம் பிரண்ட்சாம், பார்ட்டியாம், சினிமாவாம்! நல்ல ரூட்டி அடிக்கிறாளுக இந்தப் பெண்கள். நாம் உழைத்துச் சாகவேண்டியிருக்கு. எல்லாம் எதுக்கு? பெண்டாட்டி பிள்ளைகளைக் காப்பாற்ற. நமக்கு அதற்குரிய அன்பு உபசரணைகூடக் கிடைப்பதில்லை…”

அவன் சிந்தனையை அறுத்தது வாசலில் வந்த காரில் அழுத்திய பிரேக். இப்ப யார் வருகிறது காரில் என்று பார்க்கக் கிளம்பினான் ராமநாதன். காரருகில் வெடித்துக் காற்றில் கலந்த சிரிப்பொலி ராஜத்தை அறிமுகம் செய்தது. ‘சரி, போய் வரீங் களா? குட்நைட்..” என்று உற்சாகமாக வார்த்தை சிரிப்புடன் உதிர்த்து நின்றாள் ராஜம்.

”ஞாபகமிருக்கட்டும், மிஸஸ் ராஜம்….வரட்டுமா? குட்நைட்…” என்றது முரட்டுக் குரல். காருக்குள் ளிருந்து வந்த அதை அமுக்கி அலறியது கிளம்பிய மோட்டாரின் அலறல். கார் சென்றதும் ராஜ ம் குதித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

மாடியிலிருந்து தரிசித்த ராமநாதனுக்கு உள்ளம் கொதித்தது. ‘படிப்பும்! நாகரிகமும்….தூ’ எனக் குமுறினான். குறுக்கும் நெடுக்குமாக அவைந்த அவன் மனமும் ஊசலாடியது.

”பாரேன். இன்னும் வரவில்லை! நான் இருக்கிறேனா ஒழிந்தேனா என்றே எண்ணவில்லை…. ஊம், அவள் ஏன் நினைக்கிறாள். எதை எதையெல்லாமோ ஞாபகத்தில் நிறுத்த….”

கைவளைகள் கலகல என்று கட்டியம் கூற, நெளிந்து குதித்து நாகரிக நடனம் பயில்வதுபோல ஒரு நடை நடந்து வந்தாள் ராஜம்! “ஹல்லோ! இவ்வளவு நேரமா இங்கேதான் இருக்கீங்களா! படுத்து விட்டீர்களாக்கும் என்று நினைத்தேன்.”

அவள் பேச்சு அவன் மனதை அறுத்தது. மௌனமாக நீண்ட மூச்சொன்றை வெளியே தள்ளினான் அவள் பார்வை கீழே கிடந்த பொட்டணத்தின்மேல் சென்றது. “அது என்ன பூவா? கனகாம்பரந்தானே?” என்று ஆவலாகக் கேட்டாள்.

“இல்லை, மல்லிகை.”

“ப்ச்சு! ஏன், கனகாம்பரம் கிடைக்கல்லே?”

“மல்லிகைப் பூவுக்கு என்ன?” என்று கேட்டான் அவன்.

“சவம், மண்டையிடி தரும் அந்த வாசனை. ஆமா, நீங்க சாப்பிட்டாச்சா?” என்று கேட்டாள்.

“எல்லாம் ஆச்சு. உனக்கு ஏன் இவ்வளவு  நேரம்?””

“நேரமா! இவ்வளவு சீக்கிரம் வரதுக்கே ரொம்பக் கஷ்டமாகிவிட்டது. மிஸஸ் சாஸ்திரி, லேடி சீனிவாசன் இப்படி பலபேரும் ‘இருடீயம்மா, என்ன பறக்கிறே?’ என்று சொல்லி கிண்டல் செய்யும்போது எப்படி வரமுடியும்?…. இன்று ஒரு பார்டி….”

“தொலைகிறது. அது யார் காரு?” என்று அடக்க முடியாத ஆவலைச் சிந்திவிட்டான்.

“மியூஸிக் சொஸைடியின் செக்ரடரி பிளஷர். அவர் தான் என்னை அழைத்து வந்து இங்கு விட்டுச் சென்றார். அவரை உங்களுக்குத் தெரியாது – மிஸ்டர் சோமாஸ் என்றால்….”

அவள் சுபாவமாக பேசுவது கூட ராமநாதன் உள்ளத்தில் அரிப்புக் கொடுத்தது. ‘இதெல்லாம் என்ன கூத்து பெண்ணாய் லக்ஷணமாய் இரேன்’ என்று சொல்ல இதயம் துடித்தது. ஆனால் துணிவில்லையோ என்னவோ, நினைப்பு சொற்களாக மாறாமல் மன ஆழத்திலேயே மக்கி மடிந்தன.

அவன் பார்வை அவள்மீது வட்டமிட்டது. நவயுக மோஸ்தரில் கவர்ச்சிகரமாகத்தான் விளங்கினாள். நிலவொளி அழகற்ற இடத்திலும் அற்புதம் செய்யக் கூடியதாயிற்றே! அழகின் திவலைகள் படர்ந்த அவள் உருவம் அதிக எழிலுடன் விளங்காமல் போகு மா? அவன் உள்ளம் கிளர்ச்சியுற்றது.

”ராஜம்!” என்று அன்பைச் சொல்லில் குழைத்து உகுத்தான். ‘ஊங்’ என்ற சாரமற்ற பதில். அவன் ஆர்வமாக “ராஜம்! உனக்காக எவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருக்கிறேன்…”

“ஊம்… இந்தப் பனியிலும் குளிரிலும் மொட் டை மாடியில் உட்கார்ந்துகொண்டு! நான் வராமல் எங்கே போய்விடுவேன்… படுத்துத் தூங்குவது தானே!”

அவன் எதிர்பார்த்தது இந்த பதிலைத்தானா! அவன் மனம் அடிபட்டு விழுந்துவிடவில்லை. பூவை எடுத்துக்கொண்டு அவளை நெருங்கினான். “இந்தா ராஜம், நல்ல குண்டு மல்லிகை. மணம் கமகமக்கிறது. தலையில் சூட்டட்டுமா?”

அவள் எரிந்து விழுந்தாள், “என்ன இது! சும்மா போங்களேன்” என்றாள். “சரி, நீங்க படுத்துக் கொள்ளுங்கள்….”

“நீ?”

“நாளை ஒரு மீட்டிங். சென்ற வார மினிட்ஸ் எழுதலே. எழுதணும் வேறு சில லெட்டர்கள்….”

“இதுதானே! நாளை எழுதினால் போகிறது….ராஜம்….”

“இதென்ன இன்று!”

அவனைப் புரிந்துகொள்ள முயலாதவள்போல் நடித்தாள்.

”சரி சரி, போதும்! நான் போறேன்” என்று சடக் கென விலகி, வேகமாகக் கீழே இறங்கினாள் ராஜம். ‘கல்கலகல’ என அலறிய வளையொலிதான் ராமநாதன் செவிமடுத்த பதில்!

அவன் நாற்காலியில் சாய்ந்தான். ‘ஜடம்! பழிகாரி….கள்ளி’ என்று அர்ச்சனை செய்துகொண்டிருந்தது மனம்.

ராஜம் துள்ளி ஓடி தன் அறையை அடைந்ததும் ‘நல்ல வேளை! ஞாபகம் வந்தது. நாளை கர்ப்பத் தடை பற்றி நான் லெக்சர் செய்யவேண்டியிருக்குதே. நோட்ஸ் எடுக்கணும்…. செச்சே, எவ்வளவு வேலை இருக்குடீயம்மா!’ என்று காரியத்தில் ஈடுபட்டாள்.

அதே வேளையில் “நாகரிகமாம் கல்வியாம்….தூ! நல்ல கலாசாரம் நாசமாப்போக” என்று ஒரு ஆத்மா வாழிபாடுவது அவளுக்கு என்ன தெரியும்!

***

“தெரிந்து கொண்டாயா ப்ரியே?” என்று வினவினார் சிருஷ்டி தேவர்.

“போதுமே உங்கள் பிரலாபம்! நீங்களும் உங்கள் சிருஷ்டிகளும்!” எனச் சீறினாள் வாணி. என்றாலும் அவள் மனம் குறுகுறுத்தது.

“உண்மையிலேயே என் சக்தி விபரீதமான பலன்தான் கொடுக்கிறதா? எனது அன்பு என் குலத்தில் கூட வா கல் மனதை வளர்த்துவிடுகிறது?'”

அவள் புதிரை யார் விடுவிக்கப் போகிறார்கள்!

– இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளில் சில 1942ம் வருஷம் எழுதப்பட்டவை, 1943ல் சிலவும், 44, 45ல் மற்றவையும் உருவானவை.

– நாட்டியக்காரி, முதல் பதிப்பு: 1964, கவிக்குயில் நிலையம், தென் திருவிதாங்கூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *