கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2026
பார்வையிட்டோர்: 254 
 
 

(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இதழ் 32-34 | இதழ் 35-37 | இதழ் 38-39

இதழ் 35 – ஃபிரஞ்சுப் புரட்சி

உலகில் புரட்சிகள் பல நிகழ்ந்துள்ளன. ஆனால் ஃபிரங்சுப் புரட்சி தனக்கு முன்னுள்ள எந்த நிகழ்ச்சி களிலிருந்தும் தனக்குப் பின்னுள்ள எந்தப் புரட்சியி லிருந்தும் தனிப்பட்டே நிற்கிறது. ஏனெனில் அதுவே முதல் புரட்சி; ஆனால் புரட்சிகளின் தாய். அதற்கு முன்னைய நிகழ்ச்சிகள் எல்லாம் நாட்டுக்கு நாடு, கட்சிக் குக் கட்சி ஏற்பட்ட புரட்சிகள். ஃபிரஞ்சுப் புரட்சி எந்தநாட்டுக்கும் எந்தக் கட்சிக்கும் எவருக்கும் எதிராக நடைபெற வில்லை. அது ஃபிரஞ்சில் நடைபெற்றாலும், ஃபுரஞ்சுப் புரட்சி என்று நிகழ்ச்சியிடம் பற்றிப் பெயர் பெற்றாலும், உண்மையில் அது ஒரு உலகப் புரட்சியின் முதல் அலையே. தொடக்கத்தில் ஒரு கிளர்ச்சி போலத் தோன்றியிருக்கக் கூடும். ஆனால் அது கிளர்ச்சி யன்று. ஏனெனில் கிளர்ச்சி செய்தவர் கிளர்ச்சிக்கு ஆட்பட்டு, பின் அவரும் அதே படியாக மறுகிளர்ச்சிக்கு ஆட்பட்டனர். புரட்சிக்காரர் யார், அவர்கள் எதிர்ப்புக்கு ஆளானவர் யார் என்பதை நிலவரமாக யாரும் அறிய முடிய வில்லை. ஒரு நாளைய புரட்சிக் காரர்கள் மறு நாள் எதிர்ப்புக்காளாயினர். ஆயினும் புரட்சியின் போக்கில் ஒன்றை மட்டும் தெளிவாகக் காணலாம். புரட்சிக்காரர் எதிர்ப்புக்களாக முடிந்ததே யன்றி, எதிர்ப்புக்காளானவர் புரட்சிக்காரராக என்றும் ஆனதில்லை. புரட்சித்தீ கீழிருந்து தாக்கியது. அது கீழ் நோக்கவில்லை. ஏனெனில் புரட்சியின் போராட்டம் மனிதருக்கும் மனிதருக்கும் உள்ள போராட்டமோ, அல்லது நன்மை தீமைகள் ஆகியவற்றிடையே அல்லது கருத்துக்களிடையே உள்ள போராட்டமோகூட அல்ல. அது உண்மையில் வாழ்க்கை வளமுடையவர் நனவுலகிற்கும் வளமற்றோர் கனவுலகிற்கும் இடையே நடந்த போராட்டம். அதில் உயிரிழந்தவர் அழிந்தவர் மனிதர் மட்டுமல்லர்; நிலையங்கள், கருத்துக்கள், கலைப் பண்புகள். ஒழுக்க முறைகள் யாவுமே அதில் பட்டுக் கருகி உருமாறிக் கலைவுற்றன. ஏனெனில் இவை யாவும் நனவுலகின் சரக்குகள். அவை கனவுலகத் தீயில் அழிய முடியும். ஆனால், புதிதாக அத்தீயில் முளைத்து வளர முடியாது. 

ஃபிரரெஞ்சுப் புரட்சி கோரமிக்கக் காட்சிகளை யுடையது மட்டுமன்று. மற்றப் புரட்சிகளிலுள்ள காட்சி களைப்போல அவை மனித சக்திக்கு, மனித அழிவுக்குக் கட்டுப்பட்டவையல்ல, மனிதர் செயலுமல்ல. மற்றப் புரட்சிகளில் புரட்சியின் உருவம் உலகுக்கு விளங் கிற்று. ஆதரிப்பவர், ஆதரியாதவர் என்ற பிரிவினர் உருவாக முடிந்தது. ஃபிரெஞ்சுப் புரட்சி முதல் புரட்சியாதலால் அத்தகைய கட்டுப்பாடான நிலையான பிரிவு இல்லை. எதிர்ப்பவர் ஆதரிப்பவர் ஆய்க் கொண்டு வந்தனர், முதலில். ஆதரிப்பவர் எதிர்ப்புக் களாய் வந்தனர், பின்னால். குறிக்கோள்கள், கூச்சல்கள் வரவர மாறின. சில சமயம் அவை தெளிந்து உருவிழந்து உருக்குலைந்தன. ஆனால் ஒரு அடிப்படை- வளமற்றோர் கனவு நனவுலகில் பேயுருவம் தாங்கி ஒழுக்கம், திட்டம், மனித உணர்ச்சி ஆகிய எவற்றின் கட்டுக்கும் உட்படாமல் கோர தாண்டவமாடியது. 

காதலின் பிடி-மனித நல்லுணர்ச்சியின் படி ஆகிய இரண்டினாலும் மட்டுமே லாரைன் தன் இனத்தவ ரிடையே தனிப்பட்டு விளங்கினாள். செல்வச் செருக்கு, இன்ப வேட்டை, சமூக ஆணவம், அடக்குமுறை ஆகிய உயர் குடியினர் மாசுகள் இதனால் அவளைத் தீண்ட வில்லை. புரட்சி வராதிருந்தால், அவள் உயர் குடி யினளாய், அதே சமயம் மக்கள் சார்பில் நிற்கும் உணர்ச்சியுடையவளாய் இருந்திருக்கலாம். உயர்குடி வாய்ப்பை வைத்துக்கொண்டே, அதன் நற்பயனாம் கலைச்சுவையையும் அறிவுத் திறத்தையும், மனித உணர்ச்சியின் வசமாக்கி அவள் பொது மக்களிடம் அனுதாபம் காட்டி இருதிறத்தும் அன்புத் தெய்வமாக இயங்கியிருக்க முடியும். ஆனால் அவள் உள்ளார்ந்த இடம் உயர் குடியினர் நனவுலகம். அவள் நன வில் கனவின் கவின் நிலாக் காணமுடியும். கனவைக் கோர நனவுருவாகக் காணமுடியாது. புரட்சிப் புயலின் தொடக்க அதிர்ச்சி இதனை வெளிக் கொணர்ந்தது. 

அவள் மக்களை மதித்தாள், அவர்களிடம் அன்பு கொண்டாள். அதில் தான் மாறுவதன்றி வேறு மாற்றம் விரும்பவில்லை. ஃபிரெஞ்சு அரசவைக் கோலத்தை அவள் மனித உணர்ச்சியுடன் கலக்க விரும்பியதுண்டு.- ஆனால் அக்கோலத்தை அறுக்க முடியவில்லை. ஆகவே தான் மக்கள் வெறுப்பலையிலும் போட்டி உயர் குடியினர் பொறாமையலையிலும் அவள் சிக்கவில்லை. ஃபிரஞ்சுப் புரட்சிக் கருத்துக்களைக் கனவுருவில் ஓரளவு சுவைத்த அவள் அது நனவுருவெடுக்கத் தொடங்கியதே அதனைத் தெளிவாக வெறுத்து ஒதுங்கத் தொடங்கினாள். 

ஆனால் ஆக்டேவ் மூரட் நிலை இது அன்று. அவனும் உயர் குடியிற் பிறந்தவன்தான். ஆனால் அதன் இன்பக் கோலத்தை ஒழிக்க அவன் ஒருப்பட்டே யிருந்தான். அவன் மனிதனாக, தங்குதடையில்லாமல் வாழ விரும்பினான். உயர் குடியாட்சியை, மக்கள் துய ரிடையே உயர் குடியினர் நடத்தும் இன்ப ஆட்சியை வீண் ஆரவாரச் செலவுகளை அவன் வெறுத்தான். ஆகவேதான் புரட்சியில் ஈடுபட்ட அறிஞர் கலைஞர்கள் உணர்ச்சிகள் அவனையும் இயக்கின. அவன் புரட்சித் தெய்வத்தின் புகழ் பாடினான். அவன் போக்கை லாரைன் வெறுக்கவில்லை, எதிர்க்கவில்லை, ஆனால் அவள் தன்னாலியன்ற மட்டும் எச்சரித்தாள். ஆக்டேவ் மூரட்டின் தொடக்க ஆர்வத்தை அது சிறிதும் தடைப் படுத்தவில்லை. ஆனால் அவனும் ம் நீடித்துப் புரட்சிப் போக்குடன் ஒத்துப்போக முடியவில்லை. சமூகக் கருத்துக்களையும் சமூக அமைப்பையும் எதிர்த்த அப்புரட்சி, சமூக அமைப்புடன் இணைந்த மனித உணர்ச்சிகளையும் நடைமுறை ஒழுக்கத்தையும் கூடத் தொடக்க வெறியில் மதியாது அழித்தது. இது மூரட்டைப் பெரிதும் புண்படுத்தியதனால் அவன் அதன் அழிவுச் சுழலில் இருந்து விலகவேண்டி வந்தது. 

அவனுக்கு இப்போது வயது ஐம்பத்தொன்று. சமயப் பயிற்சி மாணவன், புனைகதையாசிரியன்; வசைத்திறக் கவிஞன், இலத்தீனப் புலவன், நடிகன், விடுதலைப் படைவீரன், மனிதயுணர்ச்சியுடனாண்ட ஆட்சியாளன் என்ற பல துறைகளில் அவன் மனித உலகுக்குப் பொதுவாகவும், புத்தார்வக் காதல் வேட னாகப் பெரும்பாலான பெண்மை உலகுக்கும், ஏழைபங் காளனாகப் பொது மக்களுக்கும் நன்கு தெரிந்தவனா யிருந்தான். ஒரே ஒரு பெண்ணுக்கும் கடவுளுக்கும் மட்டுமே அவன் முழுநிறை காதல் வேகம் தெரியவரும். ஆனால் இத்தனை அனுபவங்களுக்குப் பின்னும் அவன் இயற்கையான இளமைத் துடிப்புச் சிறிதும் கெட வில்லை. உள்ளக் கிளர்ச்சியும் தளரவில்லை. 

அவன் இப்போது தன் பிறப்பிடமாகிய லோரேன் பகுதியிலுள்ள பெருமக்களின் பேராளாய் ஃபிரஞ்சு அரசியல் மன்றில் இடம்பெறவிரும்பித் தேர்தலுக்கு நின் றான். இதில் அவன் வெற்றிபெறவே மன்ற உறுப்பின னாய்த் தன் புத்தார்வங்களைக் கொட்டினான். இச்சமயத் தில் லாரைன் அவனுக்கு எழுதிய கடிதம்ஒன்றில் “வெர் ஸேல்ஸும் பாரிஸும் மிகமிக விழிப்பாயிருக்க வேண்டும். சென்ற சில நாட்களில் எழுந்துவரும் அரவம் பெரும் புயல் நிகழ்ச்சிகளுக்கான முன்னறிகுறி களாகத் தோற்றுகின்றன” என்று எழுதியிருந்தாள்.- ஆனால் மூரட்டின் உள்ளத்தில் நாட்டுப்பற்றார்வமும் மனிதப் பற்றார்வமும் புரட்சிக் கனவார்வமாகக் கொழுந்துவிட்டெரிந்தது. 

1789-ல் நடைபெற்ற அரசியல் மன்றக் கூட்டத் திற்கு அரசனும் அரசியும் மன்றஉறுப்பினர்களும் ஊர் வலமாகச் சென்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினன் என்ற முறையில் மூரட்டும் இடம்பெற்றிருந்தான். மன்னர் ஆடைதான் பொன்னாடையாயிருந்ததே தவிர அவர் நடையிலும் தோற்றத்திலும் ஃபிரெஞ்சு அரசின் பெருமிதம் இல்லை. அவர் வெள்ளையுள்ளமும் கனவும் உடையவர். ஆனால் அவருடைய கூச்சம் அவர் நய நாகரிகமற்ற தோற்றத்தை இன்னும் வற்புறுத்திக் காட் டியது. அரசி எப்போதும் பகட்டும் தளுக்கும் உடைய வளேயாயினும் இப்போது அவள் முகத் தோற்றம் முற்றிலும் பொலிவிழந்ததாகவே இருந்தது. 

அவள் மூத்த மகள் நோய்வாய்க் கிடந்தாள். சாவு அவளுடன் கொஞ்சிக் கொண்டிருந்தது. ஆனால் அவள் பொலிவின்மை இதனால் மட்டுமல்ல. அவள் முகத்தில் வருத்தம் மட்டுமன்றிக் கலக்கமும் அச்சமும் குடிகொண்டிருந்தன. அவள்மீது பெருமக்கள் கொண்ட பொறாமையும் அதன் பயனாக அவள் பொதுமக்கள் உள்ளத்தில் இழந்துவந்த மதிப்பையும் அவள் அறிந்து கொண்டுதானிருந்தாள். அத்துடன் அரசர் போகும் போது மக்கள் காட்டிய சிறு சலசலப்பு அவள் கடந்த போது சட்டென நின்றுவிட்டது. பிணங்காணும் மக்கள்போல அவள் செல்லும் வழியில் அவர்கள் முழுதும் சிலையாக நின்றிருந்தனர். ஓரிடத்தில் புதுமைக் கிளர்ச்சியிலீடுபட்ட பெண்கள் கூட்டம் “வாழ்க ஆர்லியன்ஸ் கோமான்” என்று கத்திற்று. அது அவளுடைய பழங் காதலனின் பெயராதலால், அது அவள் நெஞ்சை ஊடுருவி அறுத்தது. மக்களின் ஆரவாரத்தினிடையே பாரிஸ் புகுந்த அந்நங்கைக்கு இவ்வரவேற்பு அவள் வருங்கால இன்னல்களை முன் னறிவிப்பவையாகத் தோன்றின. 

மன்றத்தில் மன்னருக்கு எதிர்ப்பு தொடக்கத்தி லிருந்தே மிகுதியாயிருந்தது. மன்னர் பெருமக்கள் உதவியை நாடினார். இது நிலைமையை இன்னும் மோச மாக்கிற்று. பொதுமக்கள் பெருமக்கள் எதிர்த்து ஆர வாரம் செய்தனர். சற்றுப் பொறுமை இழந்த மன்னர் மன்றத்தை இனி கூட்டாமலே ஆளப்போவதாக உறுக் கினார். இது உண்மையில் எதிர்ப்பு வேகத்தைப் பெருக் குவதாக முடிந்தது. அரசியலமைப்பையே மாற்றிச் சட்டமமைத்தன்றிக் கூட்டங் கலைய விடுவதில்லை என்று மன்ற உறுப்பினர் முடிவு செய்தனர். மன்னர் மீது சீற்றம் பொங்கி ஆரவாரித்தது. 

இச்சமயம் லாரைனுக்கும் ஆக்டேவ் மூரட்டுக்கும் பெருத்த வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தடவை வாக்கு வாதம் வழக்கம் போலக் காதல் பற்றியதாயில்லை. அர சியல் தொடர்பு பற்றியதாக இருந்தது. மன்னரையே எதிர்க்கத் துணிந்த மன்றத்தில் மூரட் இன்னும் ஏன் இருக்க வேண்டும் என்று அவள் வாதாடினாள். ஆனால் நிலையில் மன்றத்தி லிருந்து விலகுவதால், மன்னர் மாறுதல் ஏற்படாது என்ற காரணம் காட்டி அவன் அங்கேயே இருந்தான். 

உள்ளே இருந்த கொந்தளிப்பு வெளியே மக்கள் கடலிடையே இன்னும் பெருத்த கிளர்ச்சியைத் தூண் டிற்று. அதன் முழக்கம் நகரினின்று தொலைவிலுள்ள லாரைன் மாளிகைவரை எட்டியது. கடைத்தெருவில் கடைகள் கொள்ளையிடப்பட்டன. பணக்காரர் மாளி கைகளும் உயர்குடியினர் அரண்மனைகளும் அடித்து நொறுக்கப் பட்டன. கட்டுமீறிய கிளர்ச்சிக்காரர் அரசன் ஆட்கள், பெருமக்கள் என்று ஐயுறவு கொண் டவர்களையெல்லாம் வெட்டியும் மிதித்தும் அடித்தும் வீழ்த்திச் சென்றனர். பெண்கள் கூக்குரல் ஒருபுறம் சிறுவர் சிறுமியர் அழுகுரல் ஒருபுறம் கிளர்ச்சிக்காரர் ஆரவாரத்தையும் மீறிக் கிலியூட்டியது, 

மூரட் வெர்ஸேல்ஸில்கூடிய மன்றத்தில் ஆர்வத் துடன் வாதஞ்செய்து கொண்டிருந்தான். அதேசமயத்தில் வெளியே சென்றிருந்த அகஸ்டி என்ன நேருமோ என்ற கவலையுடன் லாரைன் மாளிகையினுள் துடிதுடித் துக்கொண்டிருந்தாள். ஆனால் நெடுநேரம் அகஸ்டியை பற்றிக் கவலை கொள்வதற்கின்றி, சந்தடி அவள் இல் லத்தினை அணுகுவது கேட்டாள். அச்சத்தால் அவள் வாயில்களையும் பலகணிகளையும் அடைத்து உள்ளே அஞ்சி ஒடுங்கிக் கிடந்தாள். கிளர்ச்சிக்காரர்கள் பந்த மேந்தித் தெருவில் ஆர்ப்பரித்துச் சூழ்வதை ஒளியாலும் கம்பலையாலும் அவள் அறிந்து நடுங்கினாள். அவள் தோட்டங்களில் மக்கள் வெள்ளம் புகுந்து அழிவு செய்தது. பலர் வாயில்களையும் பலகணிகளையும் கல்லால் தாக்கினர். பலகணி விளிம்பு வழியாக நோக்கிய போது அவள் கண்களை அவளால் நம்பமுடியவில்லை. பிச்சைக்காரர் நிலையிலுள்ள நடுத்தரக் குடும்பப் பெண் டிர் கையில் சுத்தியும் தடியும் கல்லும் ஏந்தித் தலைவிரி கோலமாகப் பேய்கள் போல் அலறிக்கொண்டு பாய்ந்த னர். அவளால் இத்தோற்றத்தைத் தாங்கமுடியவில்லை கண்ணை உள்ளே இழுத்துக் கொண்டாள். ஆனால் விழிப்பு நிலையிலும் அக்கோரக் காட்சி அவள்மனத்தை விட்டு அகலாது பீதியுறுத்தியது. இரவுமுழுதும் அவள் உறக்கம் இத்தகைய காட்சிகளும் காட்டு விலங்குகளும் நிறைந்த ஒரே கனவுக் கோவையாயிருந்தது. 

மறுநாள் காலையில் அவள் தன் அணிகளில் முக்கிய மானவற்றை மட்டும் தன்னுடலிலேயே மறைத்துக் கொண்டு வீட்டைத் தன் தலைமை வேலையாளின் பொறுப்பில் விட்டுவிட்டு நகரைவிட்டு வெளியேறினாள். சிலநாள் நாட்டுப்புறத்தில் தங்கிப் பின் ஸ்விட்ஸர்லாந் தில் சென்று தங்கினாள். ஆக்டேவ் மூரட்டை உடன் ழைத்துச் செல்வது வீண் என்பது அவளுக்குத்தெரியும் அதற்கு நேரமுமில்லை-அவனுககுக் கடிதம் எழுதக் கூட அவளுக்குப் போதிய அமைதியில்லை. விரைந்த விளங்காத கையெழுத்துடன் அவள் சிறு துண்டு எழுதி அவனுக்குக் கொடுக்கும்படி வைத்துச் சென்றாள். “ஜுலை 13. திங்கள் 11 மணி. புயல் பொங்கி வருகிறது. இனிக் காலதாமதம் செய்வது பேரிடர் தரக்கூடும். இ போதே நிலைமை முற்றி விட்டிருக்கக்கூடும். ஆனால் உங்களைப் பற்றி எதுவும் அறியாமல் போவதா? அதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆயினும் அகஸ்டியை நினைத்து நான் ஓடவேண்டியவளாகிறேன். கொலையும் கொள்ளையும், வஞ்சனையும் கொடுமைகளும் நிறைந்த இச்சூழ்நிலையில் தீங்குகள் வராமல் எச்சரிக்கையாய் இருங்கள். தங்களுக்காக ஆயிரமடங்கு கவலைப்படும் இந்தத் தங்கள் மனையாட்டியைக் குறித்து-சிந்தியுங் கள். இதோ நான் தங்கள்எண்ணத்தை நெஞ்சிலிருந்து எடுத்தெறிந்து செல்ல வேண்டியிருக்கிறது.’ 

பாஸ்டில் சிறை வீழ்ந்தது-மன்னர் இதைக் கேட் டதும், ‘ஆ, இது என்ன, அரசியலுக்கு எதிரான கிளர்ச் சியா?’ என்றனராம். அந்த அளவு சூழ்நிலையை அவர் உணராதவராயிருந்தார். அருகிலிருந்த ஒருவர் கிளர்ச் சியல்ல அரசே, புரட்சி என்றனர். அந்தச் சொல்- அதுவரை உலக மக்களுக்கு வெறும் சொல்லாயிருந் தது; இப்போது அவர் நேரடி அனுபவித்தால் புதுப் பொருள் விளக்க இருந்தது. அவர்கள் பொன்னுலகு அழிவுற்றது. மக்களிடம் அதனிடமாக வாக்களிக்கப் பட்ட பொன்னுலகை எங்கும் காணவில்லை. இடையே நகைத்தீ புகை கக்கும் குழம்பாறாக ஓடிற்று. 

மூன்று நாட்கள் கழித்து நிலைமை ஆக்டேவ் மூரட் டின் நம்பிக்கைகளையும் குலைத்தது. இருவரும் ஒரு ஒதுப்புறத்தில் குடிசை கட்டி வாழ்ந்தால் என்ன என்ற திட்டம் இப்போதும் அவன் மனக்கண்முன் நிழலாடியது. 

பாரிசை மறப்போம். 
இதன் இன்ப வாழ்வைத் துறப்போம், 
கலை பெரிதே 
ஆனால் இயற்கை அதனிடம் அரிதே 
காதலும் நீயும் கவினுற உலவும் 
காட்சியே எனது கருத்திடை நிலவும்
இன்பம், பிறவெலாம் துன்பம்! 

என்று பாட்டிசைத் தனுப்பினான். புறப் புய லிடையே யிருந்து அவன் அகப் புயலிடையே வந்து விழுந்த நறுமலராயிருந்தது அது அவளுக்கு! 

“என்ன எதிர்பாராப் புரட்சி! கண் தொடர்ந்து கண்டும் மனம் நம்ப முடியவில்லை. இது ஒரு பயங் கரக் கனவோ என்ற ஐயம் அகலமுடியவில்லை. இது களைத் துடைத்துத் துடைத்துப் பார்க்கிறேன். ஆனால் கைகள் நடுங்குகின்றன. வருக, வருக என் இன்ப உயிரே. தாம் கூறியபடியே தனிக்குடில் வாழ்வு வாழ லாம். பாரிஸ் நரகை விட்டு வருக” என்று அவள் அவசர அவசரமாக எழுதினாள். 

லாரைன் அவா நிறைவேறவில்லை. புரட்சி மீதுள்ள மூரட் மனக்கசப்பு நீடிக்கவில்லை. மயானக் கசப்பு முதற் காட்சியின் மயானத்துடன் மடிவதுபோல, வெறுப்பு பழக்கத்தால் மழுங்கிற்று. மன்றச் சார்பி லேயே கலைக்கழக மொன்றில் அவன் மறுபடி கருத் தியல் விளக்கங்களில் இறங்கினான். “கிரேக்கர்கள் அறிந்த ஓர்உண்மையை நாமும் அறிந்து கொண்டோம். தனிமனிதன் தன்னாண்மையின்றி மனித வாழ்வில்லை- தனித் தன்னாண்மையில்லாத சட்ட ஆட்சி விடுதலை ஆட்சி ஆகாது” என்று அவன் முழங்கினான். ஆனால் அக்டோபரில் மன்னரும் அரசியுமே குற்றவாளிகளைப் போல் கொண்டுவரப் பட்டபோது, அவன் விடுதலைக் கோட்டின் எல்லை கடந்து விட்டது. அரசியின் குற்றச் சாட்டையும் தண்டனையையும் லாரைன், ஸ்விட்சர் லாந்திலுருந்தே கேள்விப்பட்டாள். மூரட் அருகிலி ருந்தே கண்டான். ஆயினும் அவள் துயரங்களை முற் றிலும் அவன் அப்போது அறிய முடிய வில்லை. அரசி யாய்ப் பொதுமக்கள் உள்ளங்களிலும் அழகரசியாகக் கலையுலகினர் உள்ளங்களிலும் ஆண்ட அவ்வுயர் குடி யின் உயர் பெண்மணி மக்கள் கடுஞ் சீற்றத்தின் முன் புலிகளிடையே அகப்பட்ட மான்போல் மருள மருள விழித்தாள்-மறுகினாள்-புலம்பித் துடித்தாள். ஆனால் புலிகளிடையே மானுக்குக் கிடைக்கும் கருணைகூட அம்மனிதப் புலித்திறள்களிடையே அவளுக்குக் கிட்ட வில்லை! புலிகள் மானைத்தின்னும்; அதன் துயரை ஒரு விளையாட்டாக, ஒரு பழிக்குப் பழியாக, தம் வாழ்வின் நீண்ட நாளைய குறைபாட்டை நினைவு படுத்தும் விழா நிகழ்ச்சியாகக் கருதியதில்லை. 

அக்டோபர் 31-ம் நாள் இரவின் கடைசி நள்ளிரவு மணி உறங்காது விழித்திருந்த மக்கள் உள்ளத்தில் ஓர் இறுதி எச்சரிக்கை மணியாக அலறிற்று. அம்மணியோ பிற மணிகளோ அதன் பின் நெடுங்காலம் அடிக்க வில்லை. சாவி கொடுப்பவன்கூடத் தங்கமுடியாமல், உயிருக்கு விலை தந்தவர்களெல்லாம் நகரைவிட்டு ஓட லாயினர். 

மூரட் புரட்சியைக் கண்டு அஞ்சும் கூட்டத்திலும் இல்லை. புரட்சியில் முற்றிலும் கலந்துகொள்ளவுமில்லை. அவன் புரட்சியார்வப் பேச்சுக்கள் அவன் முகத்தில் நடமாடி அவனைக் காத்திருக்க வேண்டும். புரட்சிப் பெரும்புயல் சுழன்றடிக்கும் இடங்களில் அவன் அச் சுழலின் சுழலா மையமாய் உழன்றான். அவன் கண் முன் புதுமைக் கோலத்தின் பெயரால் தங்கள் கந்தை களின்மீது உயர்குடி நங்கையர் பூவாடையை அரை குறையாகப் போர்த்த விடுதிப்பெண்கள், தொழிலாளப் பெண்கள் ஆகியவர்கள் மன்றப் பேரவையில் அமளி செய்து மன்ற மேடையில் நடனமிடும் காட்சிகள், புரட் சிக் களிப்புடன் போட்டியிட்டு உயர் விடுதிகளில் புகுந் தடித்து உண்ட உயர்குடி வெறியுடன் புரட்சிப் பாடலை அரைகுறையாகக் கம்மிய குரலில் பாடும் இளைஞர் காட்சி ஆகியவை கூத்தாடின. 

புரட்சிகரமான பாட்டுகள் பாடிய குற்றத்திற்காகச் சமயத் துறையிலிருந்து துரத்தப்பட்டவன், அப்பாடல் களுக்காகவே அரசவையினின்று விலக்கி வைக்கப்பட் டவன், இப்போது புரட்சி ஃபிரான்சில் அந்த நாட்களை எண்ணி வருந்துவதா மகிழ்வதா என்றறியாமல் மயங் கினான். துன்பத்திடைத் தளராத அவன் உள்ளம்; அன்று உள்ளூரப் புன்முறுவல் பூத்தது. அந்தோ ஆட்சிக் குழுவே! அந்தோ சமயத் தலைமையே! உன் அறிவு இருந்தவாறு-நண்பர் யார், பகைவர் யார் என் பதைக்கூட உன்னால் உய்த்தறியமுடியாமற்போயிற்று. நீ இந் நிலைக்கு வருவதில் என்ன வியப்பு! என்று அவன் மனம் எண்ணிற்று. அதே சமயம் கட்டவிழ்ந்த மக்கள் பாய்ச்சல் எந்த எல்லைக்குச் செல்லும் என்றும் அவனால் அறிய முடியவில்லை. 

இவ்வழிவுப் புயலிடையேயும் அவர்கள் காதல் வாடா மலராகவே இருந்தது-புயல் அதன் அழகைப் பெருக்கவே உதவிற்று. “என் குழந்தையே! என் காதல் சிறு தெய்வமே! நம் பணியாள் வண்டியோட்ட அடிலியும் அகஸ்டியும் நம்மிடையே புகுந்து நெளிய, பாரிஸிலும் பெர்லினிலும் வண்டியில் பயணம் செய் தோமே ஓர் ஊழியில். அந்த ஊழி, அந்த நாள் இனி என்று வரும்” என்று அவன் அங்கலாய்த்தான். “உன் ஆவல் சிறுபிள்ளைத்தனமானது. என் ஆழ்ந்த இன்ப துன்ப உணர்ச்சிக் குப்பையினருகே அது இரக்கப்படத் தக்கது. ஆயினும் இவ்வுணர்ச்சியைத் தூண்டும் அரிய ஆற்றல் அந்தச் சிறுபிள்ளைக்கு இருக்க வேண்டும்” என்று அவள் மறுமொழி தெரிவித்தாள். 

இப்போதுகூட அவர்களிடையே பிணக்கும் ஊடலும் துனியும் இடம் பெறாமலில்லை. அவள் கடிதங் கள் சிறிதுதாமதித்தால் அவன் “இதுவே என் கடைசிக் கடிதம். இனி என்றென்றைக்குமாக உன்னிடம் விடை பெற்றுக்கொள்கிறேன். இனி அடுத்த உலகில் சந்திப் போம்” என்று எழுதிவிடுவான். ஆனால் அடுத்த உலகம் அடுத்த அறையாகவும் அடுத்த ஊழி மறு நாளாகவுமே அமையும்! “உங்கள்மீது எனக்கு வரும் கோபம் பெரிது. உங்களை ஒருதடவை கொன்றால்கூடப் போதாது. அதனால்தான் கொல்லத் துணியாது, மீண்டும் கடிதம் எழுதிக் கோபத்தைத் தெரிவிக்கிறேன். ஆனால் கா தலிப் பவர் கோபத்தைச் சரிசமக் காதலுணர்ச்சியறியாதவர் எப்படி மதிக்க முடியும்?” என்று அவள் பிதற்றுவாள். “நல்ல காற்று உங்கள் நெஞ்சில் வீசும் நேரம், சற்றும் தயங்காது என்னிடம் வருக. என்றையும்விட இன்று உம் பிழைகளைப் பொறுத்து உங்களை ஏற்க விதிர் விதிர்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று அவள் அடிக்கடி அவனை அழைப்பாள். 

அடிலி திருமண வாழ்வின் முதல் ஆண் மகவு ஐந் தாவது ஆண்டில் அம்மை கண்டு இறந்தது. ஸ்விட்ஸர்லாந்தில் வைத்து இரண்டாவது சிறுவன் பிறந்திருந்தான். அதன் பெயரீட்டு விழாவில் கலந்து கொண்ட ஸ்விட்ஸர்லாந்துக் குடியானவர்களுடன் நட் பாடி லாரைன் தன் வாழ்வின் நெடுநீண்ட இன்பத் துயரத்திலிருந்து சிறிது விடுதலைப் பெற்றாள். “ஏழை மக்கள் தம் வறுமைக்குக் காரணமானவர்கள் என்று செல்வர் இல்லங்களையும் மாளிகைகளையும் தீக்கிரை யாக்கி, அவர்கள் குருதி வெள்ளத்தில் குளித்து மகிழும் இந்தநாளிலும், உலகில் இங்கே மனநிறைவும் இயற்கை யமைதியுமுடைய ஏழைக் குடியானவர்களைக் காண வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன். என் கடைசிக் கையிருப்பான வெள்ளியை அவர்கள் பிள்ளைகளுக்குத் தின்பண்டம் வாங்கிச் செலவு செய்தேன். ஆ! அறச் செயல் நம் உள்ளத்தை எவ்வளவு தூய்மைப்படுத்து கிறது- இறைவன் ஒளியுடன் அது எத்தனை நெருக்க முடையது. கொடுப்பவனையும் உயர்த்திப் பெறுப வனையும் உயர்த்தும் இந்நற்செயல் தழைக்கவாவது உலகில் ஏழையும் செல்வரும் இருப்பது நல்லதென்றே எண்ணுகிறேன்” என்று லாரைன் தன் உள்ளார்ந்த புரட்சி எதிர்ப்புக்கு விளக்கம் தருகிறாள். அந்தோ! செல்வர் விருப்பம் இது. ஏழைகள் இதே விருப்பம் உடையவராயிருந்தால், தாம் செல்வராகவும் பிறர் ஏழையாகவும் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவர் என்பதை லாரைன் நினைத்துப்பார்க்கவில்லை! 

அடுத்த ஆண்டு புரட்சி வேகத்தில் சிறிது ஓய்வு காணப்பட்டது. துடிப்பும் படபடப்பும் ஆர்வமாக நிலவிற்று. மன்றம் எல்லாம் பட்டம் பதவிகளையும் நீக்கும் தீர்மானம் நிறைவேறிற்று. லாரைன் “இனி நான் கோமாட்டி சிராம்மோனல்ல; நீங்களும் இப்போது, வெறும் திருவாளர் மூரட் தான். ஆகவே நம் சமத்து வத்தைப் புரட்சி மன்றம் ஏற்படுத்திவிட்டது” என்று பாதி கேலி கலந்த களிப்புடன் கூறினாள். நிலைமை சரிப் பட்டுவிட்டது என்ற எண்ணத்தில் லாரைன் இப்போது பாரிஸுக்கே மீண்டு வந்தாள். ஆனால் அடுத்த ஆண்டு தொடங்கியும் பழையபடி புதிய கார்முகில்கள் தோன்றின. 

லாரைனுக்குத் தனிப்பட்ட அச்சுறுத்து வேறு ஏற்பட்டது. ஏனெனில் சிறை உடைத்தபோது வெளிப்பட்ட ஆசிரியர் பெர்னார்டு இப்போது புரட்சித் திரைக்குள் புகுந்து அதன் சீற்றத்தைக் கிளறி அவனைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கி யிருந்தார். புரட்சி யியக்கம் போய்க்கொண்டிருந்த போக்கில் யார் வேண்டுமானாலும் எவரை வேண்டு மானாலும் தாக்கி அழிக்க மக்கள் சீற்றத்தைப் பயன் படுத்தலாம். லாரைன் மீண்டும் வெளிநாடு செல்ல எண்ணமிட்டாள்., ஆஸ்டிரியா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளிலுமிருந்து நண்பர்கள் “எங்கள் மனை உங்களது. இங்கு வந்து எம்மைப் பெருமைப் படுத்துக” என்று அழைப்பு விடுத்தனர். அவள் சிறிது தயக்கத்தின்பின் பெர்லினில் வாழ்ந்த இளவரசர் ஹென்றியின் அழைப்பை ஏற்றனள். மன்னர், அரசி உறவினர் பல பெருமக்கள் ஏற்கனவே வெளிநாடுகளை நோக்கிப் புறப்பட்டனர். விரைவில் பாரிஸிலிருந்து வெளிநாடு செல்லும் மக்கள் அணி ஒரே சங்கிலித் தொடராய்ச் சென்றுகொண்டேயிருந்தது. 

1891 மே 14-ல் லாரைன் தன் காதலன் மூரட்டி னிடமும் மகளிடமும் மருமகன் அர்மந்திடமும் பிரியா விடை பெற்றுக்கொண்டு பெர்லின் புறப்பட்டாள். இத் தடவை அவள் பிரிவை ஒவ்வொரு சிறு பொருளும் தடைப்படுத்துவதாக அவளுக்குத் தோற்றிற்று; ஒவ் வொருவரிடமிருந்து பிரியும்போதும் அவள் மனம் தனித்தனி கவலையுற்றது. இதற்குக் காரணம் என்ன வென அவள் மதித்துணர முடியவில்லை. ஆனால் இப் பிரிவு உண்மையில் பலவகையில் பலரிடமிருந்தும் பல பொருள்களிடமிருந்தும் நிலையான பிரிவாகவே முடிந் தது என்பதை அவள் பின்னர்தான் அறிய முடிந்தது. புரட்சித் தீ அவள் சுற்றுச்சார்பு முழுவதையும் மாற்றிற்று. மருமகனை அவள் கண்டது அதுவே கடைசி. அவள் திரும்பி வரும்போது இருந்த உலகம், காட்சி, ஆட்கள் ஆகிய யாவற்றிலும் பெருமாறுதல் ஏற்பட்டன. 

ஆகவே சாவை விட்டுச் செல்லும் உயிர்போல அவள் பிரிவுற்றது பின்னாட்களின் நிலைநோக்கப் பொருத்தமேயாகும். 

அவள் பெரிய பயண வண்டியில் வருவாள், பெருந் திரள் பணியாட்கள், துணையாட்கள் புடைசூழ வருவாள் என்று இளவரசன் ஹென்றி எதிர்பார்த்திருந்தான். ஆகவே தன் வண்டியுடன் மிகையாக ஏழு குதிரைகள் இட்டு வந்திருந்தான். லாரைன் பளுவற்ற சிறு வண்டியில் ஏழுகுதிரைகள் பூட்டியதும் அது காற்றாய்ப் பறந்தது. 

இவ்வாண்டு ஜூனில் மன்னனும் அரசியும் குற்ற வாளிகள்போல் அடைபட்டிருந்த இடத்திலிருந்து தப்பி யோட முயன்று நேரிடையாகவே பெருங் குற்றவாளி களாகப் பிடிபட்டனர். 

மூரட்டுக்குப் புரட்சிமீதிருந்த ஆர்வமெல்லாம் இதற்குள் ஆவியாய்ப் பறந்து போயிற்று. லாரைன் தந்த எச்சரிப்பும் அறிவுரையும் இப்போது அவனுக்கு முற்றிலும் சரி எனப்பட்டது. ஆகவே “என் வாழ்க்கை முற்றிலும் ஒரே தோல்விமயமாய்ப் போய்விட்டது- உன் காதலொன்றைத் தவிர …அதையே நாடி வருந்து கிறேன்” என்று எழுதினான். 

காதலர் இருவரும் இப்போது பெர்லினில் தங்கினர். புயலிலிருந்து தப்பி ஒதுங்கி ஒரு பாறை யிடுக்கில் தங்கும் பறவைகள்போலப் புரட்சி அர சாங்கம் தம் பிடியிலிருந்து விலகிய அவர்களை ஆசிரியர் பெர்னார்டின் தூண்டுதலால் நாடு கடத்தியது. அதன் தொடர் வேகத்தை-அதன் முதற்பீடிகையையே அவர்கள் நேரிடையாகக் கண்டனர். 1793க்கும் 1795க்கும் இடையே மன்னர், அரசி, அவர்கள் உறவினர் போக பாரிஸில் மட்டும் இரண்டாயிரத்து முன்னூறு பேர் கொலைப் பொறிக்கு இறையாயினர். கருத்துப் புரட்சியாக இது தொடங்கி அரசியல் புரட்சியாக மாறி இறுதியில் தனி மனிதர் பொறாமை பகைமைப் புரட்சி களாக உருவெடுத்ததனால், பெருமக்களும் தலைமக் களும் மட்டுமேயன்றிப் பொதுமக்களும், அரசியல் வாதிகள் மட்டுமன்றித் தனிப்பட்டவர்களும் எழுத் தாளர்களும் கலைஞர்களும் அதில் சிக்குண்டு மாண்டு மடிந்தனர் அல்லது அவதியுற்றனர். 

இதழ் 36 – ஐம்பதும் அறுபதும்

முதலில் லாரைனை வருக, வருக என்றழைத்த ஹென்றி இளவரசன் அதே ஆர்வத்துடன் 1791-ல் மூரட்டையும் வரவழைத்தான். நீண்டநாள் இயற்கைச் சூழ்நிலையினாலும் தத்தம் மனப்போக்குகளாலும் பிரிந் திருந்த காதலர் இருவரும் வாழ்க்கையின் மாலைப் போதில் ஒருங்குகூடி வாழ்ந்தனர். ஆனால் அவர்கள் கூடிய நேரம் அவர்கள் தாய்நாட்டின் வாழ்விலிருந்து அவர்கள் பிரிவுற்ற நேரமாயிருந்தது. அவர்கள் ஒருங்கே பங்குகொண்டது காதல் பிரிவுத் துயரைத் தான். ஆனால் அவர்கள் தாய்நாட்டுத் தோழர் பலரின் துயர்களைப் பார்க்க அவர்கள் துயர் குறைவே. 

காதலர்களைப் பிரித்த புரட்சி அவர்களை இணைத்தது. பகட்டாரவார வாழ்வை ஒழித்த புரட்சி அவர்கள் பகட்டாரவாரமற்ற வாழ்க்கையைத் தீண்டவே இல்லை. உண்மையில் பட்டம் பதவிகள் நெப்போலியனால் ஒழிக்கப்பட்டபோது இருவரிடையேயும் சமூக அடிப்படையில் இருந்த ஒரு பிரிவுத் தட்டி அகற்றப்பட்டதாகவே அவர்கள் எண்ணினர். அவர்கள் பொருளியல் வாழ்வு தகர்ந்தது; காதல் வாழ்வு மலர்ந்தது. இளைஞர் காதலைக் கலைத்த புரட்சி இங் ஙனம் அவர்களுக்கு முதுமையில் காதலின் இன்கனி வளம் நல்கிற்று. 

மூரட்டுக்கு இப்போது 59 ஆண்டுகள் நிறை வுற்றன. லாரைனுக்கு நாற்பத்தெட்டாண்டுகள் கழிந்தன. சுற்றத்தார், கண்பர், தோழர் பலர் அவர்கள் அருகிலிருந்து மறைந்தனர், அல்லது தொலை சென்று பிரிந்தனர். அவர்கள்மீது இதன் தடமும் காலத்தின் தடமும் பொறிக்கப்பெற்றே இருந்தன. ஆனால் இருவர் உள்ளத்தின்மீதும் இளமையின் சாயல் மறைய வில்லை-அது மேன்மேலும் பொலிவுற்றது. சிறப்பாக மூரட் பேச்சும் நடையும் முகத் தோற்றமும் இளமை யைக் கழித்துவிட்ட ஒருவனைவிட இளமையை அணுகும் ஒருவனையே நினைவூட்டுவனவாயிருந்தன. அவன் உரையாடல் எப்போதும்போலவே பொதுநலங் கனிந்த வையாகவும் இருந்தன. அவன் ஒரே துன்பம் தாயகம் விட்டுப் பிரிந்திருப்பதே. தனித்திருக்கும் வேளைகளி லெல்லாம் இப்பிரிவுத்துன்பம் அவனை முற்றிலும் ஆட் கொண்டது. 

“பாரிஸிலே பிறந்து வளர்ந்த நானே பிரிந்து வாழும்போது போலந்தில் அதுவும் பாதையிற் பிறந்த அகதிக்கு ஏன் பாரிஸைப் பற்றி இத்தனை பரிவு” என்று லாரைன் அடிக்கடி கிண்டல் செய்வாள். அந்தக் கிண்டல்கூட அவன் முகத்தில் வழக்கமான புன்சிரிப்பைக் கொண்டுவருவது அருமையாயிருந்தது. பாரிஸ் எல்லையையும் ஃபிரான்சு எல்லையையும் தாண்டி உலகெலாம் பரந்த இயற்கை எழில், ஏழைக் குடியான வர் வாழ்வின் இன்னலம் ஆகியவற்றில் ஈடுபட்ட லாரைனை இப்பிரிவு அத்தனை பாதிக்கவில்லை. அவன் மனப்பாங்கும் போக்கும் அறிந்து அவனைத் தேற்ற அவள் தன் முழு ஆற்றலையும் நேரத்தையும் வழங்கினாள். அவர்களுக்கென ஹென்ரி இளவரசர் மெரிக்காட்ஸ் என்ற நாட்டுப்புறப் பண்ணை ஒன்றைப் பரிசாக அளித் திருந்தார். அதனைப் பண்படுத்திப் பயிரிடும் வேலை யில் இருவரும் பங்கு கொண்டனர். லாரைன் எவ் வளவு வற்புறுத்தியும் மூரட் மண்வெட்டுதல், களைகட் டல் முதலியகடுவேலைகளை வேலைக்காரர்களுக்கேவிட்டு விட ஒருப்படாமல் தானும் பேரளவு பங்கு கொண் டான். அவனைப்பற்றிய செய்திகளில் லாரைன் விருப் பமே அவன் விருப்பமாயிருந்தது. ஆனால் அவளைப் பற்றிய செய்திகள் எதிலும் அவன் விருப்பத்துக்கு அவள் சிறிதும் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமா யிருந்தாள். காதல் ஒன்று தவிர அவளை அடக்கும் வகை துறை எதுவும் அவனுக்கு இல்லை. அவன் இதற் காக அவளிடம் மல்லுக்கு நிற்பான். ஆனால் தனித்து இருக்கும் வேளைகளிலெல்லாம் பிடிவாதங்களே அவள் உள்ளத்தில் அவனைப்பற்றிய இன்ப நினைவுகளை வளர்த்தன. பெண்ணுள்ளம் அடிமைப்படுத்த விரும் பும். ஆனால் அடிமையை விரும்புவதில்லை. வேறெ தற்கும் பணியாத ஆண்மையைக் காதலொன்றில் பணிய வைக்கும் வெற்றியையே பெண்மை நாடு கின்றது: மூரட்டும் அவள் காதல் ஒன்றன் முன்பே முற்றிலும் தன் ஆண்மை இழந்தவனாகத் தன்னை மறந்து ஓய்வு பெற்றான். சில சமயம் அவளுடைய வழக்கமான கடுமை லாரைனின் நீண்ட நாள் காதல் தன் மறுப்பில் எண்ணத்தில் ஈடுபட்டுச் சிறிது தளர் வுறும். அப்போது லாரைன் கை கொட்டிச் சிரிப்பாள்… சிறு வெற்றிகள்கூட அவளுக்கு அவள் காதலின் விலையை எடுத்துக்காட்டிற்று. அவள் அதை விற்க விரும்பவில்லை. அதன் மதிப்பை அறிந்து சேமித்து வைக்கவே விரும்பினாள். 

அவர்கள் இரண்டாண்டுகள் மெரிக்காட்ஸில் வாழ்ந்தனர். இதற்குள் பொறாமை என்னும் குறளி இளவரசனுக்கும் மூரட்டுக்குமிடையே சிறிது மன உவர்ப்பைத் தூண்டிவிட்டான். இச்சமயம், பிரஷ்யா அரசன் வின்ஸ்லங் என்ற இடத்தில் மூரட்டுக்கு ஒரு நிலப் பண்ணை அளித்து வரவழைத்தான். 

மெரிக்காட்ஸில் இருக்கும்போது ஒரு நாள் மூரட் லாரைனைத் தேடிச் சென்று அவளைத் தோட்டத்தின் கோடியில் கண்டு பிடித்தான். அவள் கையில் உறை கிழிந்த ஒரு கடிதம் இருந்தது. அவள் முகம் எல்லை யற்ற களிப்பில் மூழ்கியிருந்தது. “என்ன கடிதம், என்ன மகிழ்ச்சியான செய்தி?” என்று கேட்டுக் கொண்டு அவன் அவளை அணுகினான்; அவள் முகம் சிவந்தது. கைகள் கடிதத்தை மறைத்தன. அவள் பின் வாங்கினாள். “அது ‘இப்போது உங்களுக்குத் தெரிய வேண்டாம். நாளடைவில் தானே தெரியும்,’ என்று அவள் கத்தினாள். அவன் ஆவல் பெருகப் பெருக, அவள் மறுப்புவலுத்தது. இறுதியில் அதனை எட்டிப் பறிக்க அவன் முயன்றான். அவள் தோட்டப் பண்ணைகளைச் சுற்றிச் சுற்றி ஓடினாள். அவள் மெல் லுடல் அவள் ஓட்டத்தை முயலோட்டமாக்கிற்று. ஆக்டேவ் மூரட்டின் வாட்டசாட்டமான கால்கள் அந்த அளவு வளைந்து சுற்றி ஓடமுடியாமல் குறுக்கே சென்று பிடிக்க முயன்றன. 

அவளை அவனால் பிடிக்கவே முடியவில்லை. ஆனால் இறுதியில் முற்றிலும் சோர்வுற்றபின் அவள் கடிதத் தைக் கீழே எறிந்து அவனைச் சுற்றிச் சுற்றி ஓடினாள். அவன் அத்துடன் அவளைத் தொடர்வதை விட்டுக் கடிதத்தை எடுத்து வாசித்தான். அவள் ‘ஆகா, என்ன மகிழ்ச்சிகரமான செய்தி! இதைக் கேட்க என்ன ஆர்வம்” என்று தாளமிட்டாள். 

நாடு கடத்தப்பட்டவர் செல்வம், பட்டம் யாவும் புரட்சி அரசியலாரால் பறிமுதல் செய்யப்பட்டன என்ற செய்திதான் அக்கடிதத்தில் காணப்பட்டது. இதில் என்ன மகிழ்ச்சி என்று அறியாமல் அவன் விழித்தான். 

”உங்களுக்கும் எனக்கும் இடையே இருந்த தடை விலகிற்று. நம் மணத்திற்கு இனி என் செல்வமோ என் பிள்ளைகளோ முட்டுக்கட்டைகளல்ல” என்று அவள் கூறியபோதுதான் அவனுக்கு அவள் மகிழ்ச்சி யின் குறிப்புப் புலப்பட்டது. காதலுக்கெனவே வாழ்ந்த அப் பெண் தெய்வத்தை அவனால் அதன்பின் எச்சமயத்திலும் கடிந்து சொல்ல மனம் வந்ததில்லை. அவன் அவளைக் குழந்தைபோல் வாரிச் சுருட்டி மடி மீது வைத்து ஆங்காங்கு வெள்ளிக் கம்பிகள் தளிர்த்த, ஆனால் இன்னும் நீலநிறம் முற்றிலும் கெடாத அவள் தலை முடியை நீவி, தன் நீண்ட நாள் கொடுமையை நினைந்து வெப்பேறிய கண்ணீரால் அவற்றை நனைத் தான். அவன் எண்ணங்களை ஊடுருவி உணர்ந்தவள் போல அவள் வழக்கமாகத் தன் வெற்றிகளிடையே கூறும் சொற்களால் அவனைக் கிண்டல் செய்தாள். “குற்றங்கள் யாவும் உன்னுடையவைதான். இதை நீ அறிந்து கொண்டால் நான் உன்னை மன்னித்துவிடத் தடையில்லை: என் உள்ளம் அத்தனை பெரிது.” தன்னை விட அவளுக்கு இச்சொற்கள் முற்றிலும் பொருத்த மானவை என்பதை இன்று அவன் கண்டான். அவன் அவள் மெல்லிய கைகளால் தன் முகத்தை மறைத்து அவள் தோளில் சார்ந்து “நீ குற்றமற்றவள். நான் உனக்குச் செய்த கொடுமைகள் மன்னிக்க முடியா தவை. ” என்றான். “எனக்கு மன்னிக்கத் தெரியாது மறக்கத் தெரியும்” என்றாள் அவள். 

“நீ என்னை மணந்து என் மனைவியாக இருப்பாயா? என்னுடன் உன் வாழ்க்கையை ஒன்றுபடுத்தி னால் என் வாழ்வு நிறைவடையும். இல்லாவிட்டால் என் வாழ்வு வற்றற் பாலையாகவே இருக்கும். என் காதலை ஏற்றேன் என்று ஒரு சொல் கூறி என்னை இன்ப உலகுக்கு இட்டுச்செல்வாயா? வாய் திறந்து ஒரு சொல் கூறு. ஆம் என்று கூறு. என் கவலை தோய்ந்த உள்ளத்திற்கு ஓர் ஆறுதல் அளி.” 

“ஆம், நான் உங்களைக் காதலிக்கிறேன்.” 

எல்லாக் காதல் கதைகளுக்கும் ஏற்படும் இயல்பான முடிவு இது. இந்த “ஆம்” என்ற சொல்லின் மறுபடி வமே மணவினையில் மணப்பெண் இதழிலிருந்து மீண் டும் “ஆம்” என்ற உருவம் பெறுகிறது. அடிலியின் திருமணத்தின் போது லாரைன் இச்சொல்லைப் பற்றி முதல் முதலாகச் சிந்தித்திருந்தாள். தானும் ஒருமுறை இதனை முன்பு கூறியிருந்தாலும், அது காதலறியாக் குழந்தைப் பருவத்துக் கதையாக அவளுக்குத் தோற் றிற்று. இப்போது பிள்ளையும் பேரனும் வந்ததன்பின் அவள் வாழ்வில் இதே காதல் வளையம் மீண்டும். சூழ்ந்தது. 

அவள் மூரட் இப்படி மீண்டும்தன் காதல் வாழ்வை தொடங்க வேண்டுமென்று விரும்பினாள். விருப்பம் கனவாயிற்று. கனவு கற்பனையாக உருவெடுத்தது. இறுதியில் அது சிறிது சிறிதாக அவள் உள்ளுலகில் செயல் திட்டமாக வளர்ந்தது. அதனை நிறைவேற்ற அவள் நாளும் ஓரையும் வரையறுத்து விட்டாள். இடம் நிகழ்ச்சி வரிசை யாவும் ஒழுங்கு படுத்தப் பெற்றன. ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இருவரில் ஒரு வர்- முக்கியமான செயல் செய்யப்பட வேண்டியவர் ஒருவருடன் கலக்காமலே திட்டமும் நிறைவேறிச் செய லும் தொடங்கிற்று. அந்த ஒருவர் ஆக்டேவ் மூரட் தான் என்று கூறத் தேவையில்லை. 

அன்று அவள் தன்னை மணப்பெண்ணென உடுத்தி அணிமணி ஒப்பனை செய்து கொண்டாள். அதைக்கண்டு மூரட் ஏன் இந்த ஒப்பனை யென்றான். அவள் “இன்று நம் காதல் மணம் நிறைவேறிய நாள். இன்று காதல ராக உடுத்துக் கொண்டு தோட்டத்தில் உலவி வரு வோம்” என்றாள். அவனும் “சரி” என்று உடையுடுத்தி வந்தான். ஆனால் அவள் முகத்திலுள்ள களிப்பும் குறும்புநகையும் கண்டவுடன் அவன் “என்ன, புதிய செய்தி ஏதேனும் உண்டா?” என்றான். 

“எனக்கென்ன தெரியும்? என்னை நீங்கள் தோட்டத் திற்கு இட்டுச் செல்கிறீர்கள். அழைத்துச் செல்கிறீர் கள். என்ன உட்கருத்து வைத்திருப்பீர்களோ, யார் கண்டார்” என்றாள். 

அவள் ஏதோ திட்டமிட்டிருக்கிறாள் என்பதை. அவன் உய்த்துணர முடிந்தது. அது என்ன என்று அப்போதும் அவனுக்குப் புரியவில்லை. 

அன்று அவள் காதலனாக நடித்தாள். அவனைக் காதலியாக்கினாள். மாலை மதியையும் வானத்தின்சிவப்பு வண்ணத்தையும், பறவைகளின் கலகல ஒலிப்பையும், மலர்களின் மணத்தையும் அவள் அவனுக்கு இட்டுச் சென்று காட்டி நினைவூட்டினாள். அவன் உள்ளத்தில் புதுக்காதல் மலர்வித்தாள். அவள் கைகள் அடிக்கடி அவன் கன்னத்தை வருடின. அவள் கண்கள் அவன் கண்களை ஊடுருவிப் பனித்தன. 

அவள் நாடகத்தின் உட்பொருளறியாமல் அவன் விழித்தான். 

“செயலற்ற காதலன்பரே! எல்லாம் என்னால் திட்ட மிட்டுச் செய்யப்படும். ஒன்றே ஒன்று மட்டும் என் வாயிலிருந்து வரமுடியாது, வரப்படாது. அதைமட்டும் நிறைவேற்றி விடுங்கள்” என்று அவள் கூறியபோதும் அவனுக்குத் தன் கடமை, தன் உரிமை புலப்பட வில்லை. 

“ஊம்…சொல்லுங்கள். எல்லாம் சரியாக நடந்து விட்டன. அந்த ஒரு கேள்விதான் பாக்கி” என்றாள். 

“எந்தக் கேள்வி?” 

“இவ்வளவு தெரியாதா? காதலில் எவைகள் கேட்கக் கூடாதோ அந்தக் கேள்வி” என்றாள் அவள். 

அவன் மூளையில் மின்னொளி பாய்ந்தது; 

“நான் உன்னைக் காதலிக்கிறேன். மனமாரக் காத லிக்கிறேன். நீயில்லாமல் நான் வாழ முடியாது. நீ என் காதலை ஏற்று என் மனைவியாகி என்னை இன்பத்தி லாழ்த்துவாயா?” என்றாள் அவள்.

“ஆம்” என்றான் அவன். 

நாடகம் முடிவடைந்தது. ‘ஆ, ஒப்பற்ற நடிகை நீ’ என்று அவன் அவள் காதைத் திருகிக் கொண்டு கூறினான். “நான் ஒப்பற்ற நடிகையல்ல, நீங்கள்தாம் ஒப்பற்ற நடிகர். நான் இயற்றிய நாடகத்தைப் படித் துப் பார்க்காமலே உங்கள் பகுதியை நீங்கள் நிறை வேற்றி விட்டீர்கள்” என்றாள் அவள். 

கடவுள் இப்படித்தான் நாடகமியற்றி அதன் குறிப்பறியாத நம்மை நடிக்க வைக்கிறார்” என்றான் அவன். 

“கடவுளாவது, கத்தரிக்காயாவது. கடவுள் என்று ஒருவர் இல்லை. காதல் என்ற ஒன்றுதான் உண்டு” மன்னவைக்கும் மதகுருவுக்கும் மாறுபாடு எண்ணாத மங்கையின் காதற்கூற்று இது. 

“அன்பே! இத்தகைய வாசகம் மூரட் போன்ற மத எதிரிகளின் வாயில் வரலாம். உன்னைப்போல மதவாதி களும் தலைவணங்கும் நல்லெழுத்தாளர் வாயில் வரலாமா?” 

இது இப்போது என் வாய்மொழியல்ல. என் நாட கத்தில் அந்த ஒரு கேள்வி நீங்கலாக நான்தானே நீங்க ளாக நடித்தேன். இதுவும் அதன் ஒரு பகுதிதான்” என்று அவள் கூறிக் குறுநகை புரிந்தாள். 

“இதன் பொருள்?” என்றான் அவன். 

“இந்த ஆண்களுக்கே எதை உணரவும் ஒரு புரோகிதத்தின் விளக்கம் தேவை. பெண்களைப்போல தெய்வத்தையும் உட்பொருள்களையும் அவர்கள்நேரிடை யாக அறிய முடிவதில்லை. சரி, விளக்கி விடுகிறேன். ஆனால் விளக்கியபின் முன் விளங்காததற்காக அதன் படி நடக்க வேண்டிய பொறுப்பு உங்களது” பீடிகையிட்டு. 

“நான் கத்தோலிக்கராகவே இருக்கிறேன். சீர்திருத்தத்தையும் புரட்சிகளையும் நான் வெறுக்க வில்லை, எதிர்க்கவில்லை. கத்தோலிக்கராகவே நான் மணந்து கொள்ள வேண்டும். உங்கள் பகுத்தறிவுப் புரட்சிக் கொள்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனக்காக என் கத்தோலிக்க நெறியை ஒரு நாள் தாங் கிக் கத்தோலிக்கக் கோயிலில் வந்து என்னை மணந்து கொள்ளுங்கள்” என்றாள். 

பெண்கள் திட்டம் கடவுள் திட்டத்தைப் போலவே கற்பனை கடந்ததென அவன் அறிந்தான். 

மணமகன் திருக்கோயிலுக்கே என்றும் சென்ற தில்லை. மணமகளும் புரட்சியினால் துரத்தப்பட்டது முதல் சென்றதில்லை. ஆனால் கத்தோலிக்க மதகுருக்கள் இப்போது புரட்சிப் புயலால் சிதறடிக்கப்பட்ட நிலையில் இருந்தனர். லாரைன் போதிய கழுவாயும் தண்டங்களை யும் தர முன்வந்தபோது அவற்றை ஆர்வத்துடன் ஏற் றனர். மன்னரும் மதமும் ஆட்சி செய்தபோது இரு குறைகளிலுமிருந்து துரத்தப்பட்ட கவிஞன் இரு துறைகளிலும் ஊடாடிய கலை நங்கையுடன் அவ்விரு துறைகளின் பெயர்களுக்கும் ஒரு சிறிது உயிர் கொடுத்துப் பாழடைந்த ஒரு கோயிலில் எளிய இனிய திருமணம் செய்து கொண்டான். 

திருமண விருந்தினரை வரவேற்பதில் அகஸ்டி இப்போது பெரும் பங்கு எடுத்துக் கொண்டான். அவனுக்கு இப்போது வயது 27 ஆயிருந்தது. 

காதலர் தங்கள் பிள்ளைகளுடன் பிரஷ்ய அரசன் அளித்த வின்ஸ்லோப் பண்ணையில் சென்று புதுமண வாழ்வு வாழ்ந்தனர். 

இதழ் 37 – வின்ஸ்லோப் பண்ணை

பெர்லினில் பெரும்பாலும் மெர்க்காட்ஸில் மூரட் டுக்கு உடலுழைப்பற்ற சோம்பல் வாழ்வே வாழ வேண். டியதாயிருந்தது. நாடோடியாக வளர்ந்த அவனுக்கு, அதன் கட்டுப்பாடு மிகவும் தொல்லையாக இருந்தது. இப்போது வின்ஸ்லோவில் அவனுக்கு வாய்ப்புக் கிடைத்ததுமே அவன் உப்பாளிகளுடன் உழைப் பாளியாய் இருந்து உழைத்தான். அவன் பண்பறிந்து. லாரைன் இதில் அவனை ஊக்கத் தவறவில்லை. வின்ஸ் லோப் பண்ணையில் அவர்கள் நாடு பெயர்ந்த ஃபிரெஞ் சுப் பெருங்குடி மக்களைக் கொண்டு வந்து பிரஷ்ய அரசன் இணக்கம் பெற்றுக் குடியேற்றினர். உயர் குடியிலிருந்து வீழ்ச்சியுற்றும் இன்ப வாழ்க்கையே நாடிய அந்த ஃபிரெஞ்சுக் குடியேற்றம் நீண்டநாள் வெற்றிகரமாக நடக்கமுடியவில்லை. ஆனாலும் எல்லார் உழைப்பையும் தான் நின்று பொதுமக்களைத் தூண்டி மூரட் சிலகாலம் அதனை வளமுடையதாக வைத்துப் பேணினான். பொது மக்கள் அவனையும் அவனைப் போலவே அரும் பண்பு படைத்த அவன் துணைவி லாரைனையும் போற்றிப் புகழ்ந்தனர். தகுதி பற்றி எழுந்த இப் புகழ்மீதுகூட உயர்குடி மக்களுக்குப் புழுக்கமும் பொறாமையும் ஏற்பட்டது. ஒவ்வொரு வராகக் குடியேறியவர் விலகலாயினர். பண்ணை முன் போல் குடியானவர் உரிமைக்குள்ளேயே நின்றது. 

“நம் காதல் வாழ்வில் காணாத ஒரே ஒரு இன்பத்தை இன்று மணவாழ்வு நமக்குத் தங்குதடை யின்றித் தந்துள்ளது. முன்பெல்லாம் எப்பொழுது இரவு வரும் என்று இருப்போம். ஆனால் எப்பொழுது விடிந்து விடுமோ என்று அஞ்சியஞ்சிச் சாவோம். ஏனெனில் விடியற்காலம் நமக்குப் பிரிவுச் சின்னமா யிருந்தது. இப்போது அந்த அச்சமில்லை. இது-மண வாழ்வின் மகத்துவம்” என்று ஒரு நாள் லாரைன் தன் தற்போதைய வாழ்வின் நலம் பாராட்டினாள். 

அச்சிறு பிரிவினால் அவள் உள்ளத்தில் ஏற்பட்ட வடு அவள் அவாவின் ஆழத்தை அவனுக்கு எடுத்துக் காட்டிற்று. 

“நீ இல்லா விட்டால் நான் வானுலகின் நிறை நம்பியே இன்பம் என்ற ஒன்று உண்டு என்பதை இருக்கமாட்டேன். அதனை நீதான் எனக்குக் காட்டி வருகிறாய். ஆயினும் அதனை நான் என்றும் முற்றி லும் கைப்பற்றிவிட முடிவதில்லை. பார்த்துப் பார்த்து ஏங்குகிறேன், அல்லது சிறிது பற்றி விட்டுவிடுகிறேன்” என்றான் அவன். 

“இருக்கலாம். ஆனால் நீ இல்லாவிட்டால் ஒரு *வேளை நான் அந்த இன்பத்தை நோக்கிப் பறந்து சென்றுவிடக் கூடும். நீதான் என்னை நிலத்தில் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நான் இன்ப உலகுக்கு உன்னால்தான் பறந்து போகாமல் இருக் கிறேன். நீ அங்கே வராவிட்டால் எனக்கு அங்கே. இன்பம் ஏது?” என்று அவள் கட்டுரைத்தாள். 

மூரட்டின் நெட்டை உடல் இப்போது சிறிது கூனத் தொடங்கிற்று. அவன் கவிழ்ந்த நடை நடக்கலானான். அவன் தலைமயிர் முற்றிலும் வெண்ணிறமாய், வெண்பஞ்சு போர்த்ததுபோல் இருந்தது. ஆனால் அவள் தலை இன்னும் பாதிக்குமேல் மங்கிய நீல நிறமாகவே இருந்தது. அவள் தூய வெண்ணிறமோ முதுமையிலும் மாசற்றே இருந்தது. முதுமையின் சின்னம் சிறிது நரையாலன்றி வேறு எவ்வகையிலும் அனைத்திலும் -அவள் நடையில் கூடப் பழய நயம் இன்னும் தொக்கி நின்றது. ஆகவே அவன் படிப்படி யாக வலுவிழந்து அவள் வலுவைச் சார்ந்து வாழ வேண்டியவனானான். அவன் இதற்காக வருந்தினான். ஆனால் அவள் இப் பொறுப்பை விரும்பி ஏற்றாள். ஆண்கள் ஆணவம் இளமையில்தான். முதுமையில் பெண்ணின் தாய்மை அவளுக்கு ஆணைப் பாது காக்கும் உரிமை தருகிறது” என்று அவள் தன் னிலையை விளக்கினாள். அவன் எதுவும் கூறவில்லை. ஆயினும் உள்ளூர “நம் ஆட்சி தற்பெருமையில் மகிழ்ந்திருந்தது. அதில் அவா உண்டு. அன்பில்லை. ஆட்கொள்ளும் இன்பமுண்டு. ஆனால் இன்பம் இல்லை, பெண்மையின் ஆட்சி அன்பாட்சி; அருளாட்சி. அது கடவுள் தன்மையுடையது,” என்று அவன் எண்ணாம லிருக்க முடியவில்லை. 

அவர்கள் பேச்சு அடிக்கடி நெப்போலியன் வந்த போதுதான் அவர்கள் இருவரிடையே வேறுபாடு விளைவித்த உயர்குடிப் பட்டம், செல்வம் ஆகியவை தகர்ந்து, அவர்கள் மணவினைக்கு வழிவகை ஏற் பட்டது. இது அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட நன்மை. இது போக மூரட், லாரைன், ஆகியவர்களின் அனுப வம் ஆராய்ச்சியால் வேறும் பல நன்மைகள் புலப் பட்டன. உயர்குடியினருக்குப் பெருஞ் செல்வம் முன்பு பல வகையில் ஒரு பெருஞ் சுமையாகவே இருந்தது. மூத்தவனைச் செல்வம் சாரும். அவன் அதைத் தனியே வைத்துக்கொண்டு கொடுங்கோலாட்சி செய்ய வேண்டும். மற்ற இளவல்களோ செல்வமில்லா மலே அச்செல்வ மதிப்பைக் காக்க வழி காண வேண்டும். அதாவது போர் முதலிய துறைகளில் பயிலப்பெற்று, பிற கொடுங்கோலாட்சிகளுக்கு வலுத் தந்து வாழ வேண்டும். பெண்களோவெனில், போதிய செல்வர் கைக்குக் காத்திருக்க வேண்டும். அழகின்மை, பொருளின்மை காரணமாக அது கிடைக்காவிட்டால் அவர்கள் தம் நிலைவிட்டு இறங்கி மணம் செய்யவோ, அல்லது தொழிலிலீடுபடவோ முடியாது. ஒன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அல்லது மதிப் போடு உயிருடன் தற்கொலை செய்து கொள்வது போலக் கன்னிமடங்களில் கன்னித்துறவியாகச் செல்ல வேண்டும். நெப்போலியன் புதிய ஆட்சி உயர்குடி யினருக்குப் பொதுமக்கள் வாழ்வின் உரிமைகள் வழங்கிற்று. 

மூரட்டின் இவ்விளக்கம் லாரைனுக்குக்கூடப் பிடித்த மாயிருந்தது. புரட்சியை வெறுத்த அவள் இப்புரட்சிக் கருத்தை வெறுக்க முடியவில்லை. காதல் அக்கருத்தை அவளிடம் இயல்பாகவே புகுத்தியிருந்தது. 

புரட்சித் தீக்கு இறையாகி வாடி வதங்கி யழிந்த மலராகிய அரசியிடம் லாரைன் இன்றும் பற்றுடைய வளாய் இன்றும் அவள் இனிய பண்புகளை நினைந்து வருந்தாமலில்லை. ஆனால் மூரட் அவளை இதற்காகக் கடிந்துகொண்டான். அவள் குற்றம் இன்ப நாட்டம் மட்டுமல்ல. மட்டற்ற இன்ப நாட்டமும், பொது வாழ்வு, அரண்மனை வாழ்வு ஆகியவற்றின் தகுதியை அவமதித்ததும் அவளிடம் மன்னிக்க முடியாத குற்றங் களென அவன் எடுத்துக் காட்டினான். “மன்னர் முன் னிலையிலேயே அவள் ஒருநாள் தன் இளங்காதல் நண்ப ருடன் பேசிக்கொண்டிருந்தாள். அவன்மீது உண்மை யாகவே தனக்கு உள்ள உள்ளத் துடிப்பை அவள் எடுத் துரைத்து, இதோ, நீ கைவைத்துப் பார் என்று அவனை வற்புறுத்தினாள். மன்னர் அதற்குமேல் வாளா இருக்க முடியவில்லை. ‘அம்மணி, நீங்கள் சொல்லும் சொல்லில் அவர் நம்பிக்கை கொள்வார். உன் உள்ளத் துடிப்பை அறியாதவர் யார்?” என்று கூறவேண்டி வந்தது. மூரட் எடுத்துக்காட்டிய இக்காட்சி அரசியிடம் உள்ள பற்றின் குறைபாட்டை நன்றாகச் சுட்டிக்காட்டிற்று. “ஆம். புரட்சி வரம்புமீறி மிகைப்பட்டிருக்கலாம். ஆனால் பழைய வாழ்வு சென்ற திசை தவறான திசை தான்” என்று அவள் ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

– தொடரும்…

– வாடாமல்லி (நாவல்), முதற்பதிப்பு: ஜூலை 1965, சேகர் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *