கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2024
பார்வையிட்டோர்: 4,093 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செண்பக ராஜலட்சுமிக்கு ஜனவரி பிறந்தால் முப்பத்தாறு வயது நிரம்பிவிடும். அரசு நிர்வாகத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில், ஒரு துறைத் தலைவராக வேலை பார்க்கிறாள். நிறைந்த சம்பளம் தான். இந்தியா போன்ற நாட்டில் அந்தச் சம்பளம், பெரிய தொகைதான். அவளிடம் கலர் டி.வி. மற்றும் வி.சி.ஆர்., ஒரு குட்டி ஃபிரிஜ் முதலான சகல வஸ்துக்களும் இருக்கின்றன. சமையல் அறையில், அரைவை மிக்ஸர், முதலான நவீன இயந்திரங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கின்றன. நூக்க மர பீரோவில், எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தும் படியான புடைவைகள் வைத்தி ருக்கிறாள். திருமணம், வரவேற்பு, புதுமனை புகுவிழா, புஷ்பவதிக்கு நீராட்டும் விழா, நண்பர் வீடுகளுக்கு மதிய அல்லது இரவு உணவுக் குச் செல்லும் வைபவம், கடற்கரை உலாவல், அலுவலகம் செல்லத் தக்க உடை, இரவு உடை, நெருங்கியவர் மரணச் சடங்குக்குச் செல்லும் வகை ஆடை அனைத்தும் ரக வாரியாக அடுக்கி வைத்தி ருக்கிறாள். வங்கியில், கணிசமான தொகை அவள் இருப்பில் உள்ளது. தவிர, அவள் சம்பளத்தில் பிடித்தமாகும் பணம் ஓய்வு பெறுகையில் கிடைக்கும். தவிர, நான்கு பீரோக்களில் ஏராளமான நல்ல புத்தகங்களைப் படித்துப் பாதுகாத்து வைத்திருக்கிறாள். படுக்கையறையில் இதமும், மென்மையும் குளிர்ச்சியும் கொண்ட ஓர் ஒற்றைக் கட்டில் வைத்துள்ளாள். தவிர, லோஷன் மணக்கும் குளியல் அறையும் உண்டுதான். 

மக்கள் பார்வையில், செண்பகாவின் வாழ்க்கை வெற்றி பெற்ற வாழ்க்கைதான். தஞ்சாவூரிலிருந்து வருஷத்துக்கு ஒரு மாசம் செண்பகாவோடு வந்து தங்கும் சித்தி சொல்வாள். ‘உனக்கென்னடியம்மா ராஜாத்தி! கைநிறையச் சம்பளம். பிக்கல் பிடுங்கல் இல்லாமே ஹாயா இருக்கே” என்பாள். அந்தச் சித்தி, இரண்டு பிள்ளைகள், அவர்களின் மனைவிமார்கள், பேரன் பேத்திகள் ஆகியோர்களோடு இருந்து கொண்டு, ஒரு சின்னஞ் சிறிய வீட்டில், சமைத்துப் போட்டுக்கொண்டு, புழுங்கி வியர்த்துக் கொண்டு இருப்பவள். ஆகவே செண்பகாவின் தனி வாழ்க்கை ஹாயாக இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் இதே சித்தி மற்ற உறவுக்காரர்களிடம் என்ன சொல்வாள்? 

செண்பகாவின் குணம் வாங்கிப் போட்டுக் கொள்வதல்ல. எதிரொலிப்பது. 

சித்தி ஒருமுறை இது மாதிரிப் பேசுகையில், செண்பகா சொன்னாள். 

“ஏன் சித்தி! என்கிட்டே நான் ஹாயாக இருக்கிறதாச் சொல்றே! ஆனா, விழுப்புரம் பெரியம்மாகிட்டே, ‘அவ கிடக்கிறா துடைகாலி, பொண்ணா அவள்? பொண்ணுன்னா காலா காலத்திலே ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டி பெத்து குப்பைக் கொட்ட வேண்டாமா? இது என்ன, சாமியார் வாழ்க்கை. பொண்ணு தனியா இருக்கிறதாவது, கண்ட கண்ட தடியனோடெல்லாம் சிரிச்சுப் பேசிக்கிட்டு, இளிச்சு இழைஞ்சுக் கிட்டே…? தூ..’ அப்படீன்னு சொன்னியாமே!” 

செண்பகா, முகத்துக்கு நேராக இப்படிச் சொன்னதும் சித்தியின் முகம் விளக்கை அணைத்ததைப் போலாகி விட்டது. சித்தி மறுநாளே ஊருக்குக் கிளம்பியவள், இரண்டு வருஷமாக செண்பகாவைப் பார்க்க வருவதில்லை. 

செண்பகா யோசித்தாள் “தான் தனியாக இருப்பது இவர்களை ஏன் இப்படி உறுத்துகிறது?” 

2 

அபிராமி நகரில், ஒரு மாடிப் போர்ஷன் காலியாக இருப்பதாக அறிந்து, தன்னுடன் பணியாற்றும், சகப் பேராசிரியை மதன கல்யாணியோடு அந்த வீட்டைப் பார்க்கச் சென்றாள் செண்பகா. 

பார்த்த மாத்திரத்தில், ஒரு மரியாதையைத் தோற்றுவிக்கத் தக்கதாய் இருந்தது வீடு. வீடுகளுக்கும் முகங்கள் இருந்தன. அழகிய முகங்கள். பணிவான முகங்கள். கர்வம் பொங்கும் முகங்கள். அலட்சியம் செய்யும் முகங்கள். செண்பகாவைப் பார்த்து, அந்த வீடு தன் இரு கைகளையும் கூப்பி வணக்கம் செய்வதாக தோன்றியது அவளுக்கு. காம்பவுண்டுக்குள் வேம்பும், நாலைந்து தென்னைகளும், ஒரு பவழ மல்லியும், புதராய்ச் செம்பங்கியும் இருந்தன. மாடிப் போர்ஷனுக்குத் தனியாகப் படிகள், வாசலிலேயே தொடங்கின. நுழைந்ததும் ஒரு சின்ன வரவேற்பறை. இரு பக்க ஜன்னல்களிலிருந்தும் காற்றும் வெளிச்சமும் வெள்ளமாய்ப் பிரவகித்தன. வரவேற்பறையை ஒட்டி, ஒரு ஹால். ஹாலை வெட்டிக் கொண்டு குளியல் இணைப்புடன் கூடிய ஒரு படுக்கையறை. ஜன்னலைத் திறந்ததும், தென்னங்குலைகள் தெரிந்தன. ஓலைகள் ஜன்னல்கள் கம்பிகளை உரசின. வீடு செண்பகாவுக்கும், செண்பகா வீட்டுக்கும் பரஸ்பரம் பிடித்துப் போனார்கள். 

வீட்டு உரிமையாளரிடம். செண்பகா தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டாள். உரிமையாளருக்குப் பின் நின்றிருந்த நடு வயதுப் பெண்மணி கேட்டாள். 

“எத்தனை பேர், நீங்க?” 

“நான் ஒருத்திதான்,” 

“அப்படீன்னா?”

“எனக்குக் குடும்பம் இல்லை. நான் ஒருத்திதான். எப்பவாவது, வருஷத்துக்கு ஒருமுறை என் உறவுக்காரர்கள் யாராவது வருவார்கள்.” 

வீட்டு உரிமையாளரும், அந்தப் பெண்மணியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

“நீங்க கல்யாணம் பண்ணிக்கலையா, இல்லை, அவர் இப்போ இல்லையா?” 

“கல்யாணம் பண்ணிக்காதவர்க்கும், விதவைக்கும் வீடு கிடையாதா?’ 

இடைமறித்து அந்தப் பெரியவர் சொன்னார். 

“அதுக்கில்லை. தனி பொம்மனாட்டிக்கு அவ்வளவு பெரிய போர்ஷன் வேண்டியிருக்குமா?” 

“அதைத் தீர்மானிக்க வேண்டியது நான்தானே சார். என்னாலே வாடகை கொடுக்க முடியும். உங்களுக்கு வீடு கொடுக்க முடியுமா, முடியாதா?” 

மதன கல்யாணிக்குத் தான் தலையிட வேண்டும் என்று தோன்றியது. 

“சார்… இவங்க டாக்டர் செண்பக ராஜலட்சுமி தமிழ்த் துறை தலைவராக இருக்காங்க. நிறைய புத்தகங்கள் எல்லாம் எழுதி யிருக்காங்க, நீங்கள் கூட இவங்க பெயரைக் கேள்விப் பட்டிருக்கலாமே!” 

“அம்மா… அது தெரிகிறது, இவங்க கௌரவப்பட்டவங்க என்கிறது தெரிகிறது. ஆனா, ஒரு தனியா இருக்கிற பெண்ணுக்கு, எப்படின்னுதான் யோசிக்கிறேன்…” 

பெரியவரை யோசிக்கவிட்டு, செண்பகாவும் மதன கல்யாணி யும் வெளியே தெருவுக்கு வந்தார்கள். தெருமுனை பஸ் நிறுத்தத் துக்கு வரும் வரை அவர்கள் மௌனமாகவே நடந்தார்கள். வெயில், மிக உக்கிரமாக இருந்தது. வாகனங்களின் புகை பூமியை விழுங்கி விட்டதாகத் தெரிந்தது. 

“இம்மாபெரும் உலகத்தில் வீடா கிடைக்காது செண்பகா வேறு வீடு பார்க்கலாம்…” 

“வீட்டுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் மனுஷர்? ஒன்று புரிகிறது, ஒரு பெண் தனியாக இருப்பதை யாராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

“தப்பாக நினைக்கிறார்களோ?” 

“அப்படி மட்டும் சொல்ல முடியாது, மதனா! பெண்ணைத் தாயாக, மகளாக, மனைவியாக மட்டுமே சமூகம் பார்க்கிறது, தாயாக இருந்தால் மகனோடு, மகளாக இருந்தால் பெற்றோர் களோடு, மனைவியாய் இருந்தால் ஒரு புருஷனோடு சேர்த்துப் பார்த்தே பழகிவிட்டார்கள். தனியாக, ஒருத்தி வாழ முடியும் என்பதை ஏற்க அவர்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. காரணம், பெண்ணை ஒரு தனி மனுஷியாகப் பார்க்க யாரும் தயாராக வில்லை.” 

அந்த வாரம் வேலை மிகக் கடுமையாக இருந்தது செண்பகா வுக்கு, ஆறு நாட்களின் கடின உழைப்பு அவள் கண்களில் தெரிந்தது. கண்கள் பஞ்சடைந்தது போலவும், கண்களுக்குக் கீழே திடீரென்று இரு கருவளையங்கள் வந்தது மாதிரியும் இருந்தது அவளுக்கு, 

அதோடு, அவளுக்குச் சிரமம் தரத் தொடங்கியிருந்த அந்த மூன்று நாட்களும் வேறு அந்த வாரத்தில் வந்து சேர்ந்து கொண்டது. உடம்பு, அவளைக் கெஞ்வது கேட்டது. செண்பகாவுக்குத் தலைவலி விட்டு விட்டு, மதியத்திலிருந்து அவளை வேலை செய்வதினின்றும் தடுத்தது. கடந்த இரண்டு மாதங்களாகவே டாக்டரைப் பார்க்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றிக் கொண்டிருந்தாலும் நான்காம் நாளில் கிடைக்கும் ஒருவகை வலிக் குறைவு, அவள் யோசனையை மாற்றியபடி இருந்தது. மணிக்கு ஒருமுறை சுரீரென்று குத்துவது போல் வரும் வயிற்றுவலி, அன்று அவளைப் படுத்தியது. கண்டிப்பாய் நாளைக் காலை டாக்டரைப் பார்க்க வேண்டும். என்று தீர்மானித்தாள் செண்பகா. மறுநாள் ஏதோ விடுமுறை. ஆங். மகாவீரர் ஜெயந்தி. 

வெயில் மரங்களின் தலையில் அமர்ந்திருந்தது. மணியைப் பார்த்தாள் செண்பகா, நான்குக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. 

“புறப்படலாமா?” என்றாள் செண்பகா மதன கல்யாணியைப் பார்த்து. 

“என்ன ஒரு மாதிரி இருக்கே? உடம்பு சரியில்லையா?”

“என்னென்னவோ கோளாறு. அதோடு அதுவும் சேர்ந்துடுச்சு. ஓவர் பிளீடிங்.’ 

“டாக்டரைப் பார்க்க வேண்டியதுதானே?” 

“நாளைக்குத்தான் போகணும்…” 

பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பினாள், செண்பகா. மதனா தொடர்ந்தாள். வராந்தாவைக் கடந்து, பிரின்ஸிபால் ரூமைக் கடந்து போகையில், பிரின்ஸிபாலின் அட்டெண்டர் வந்து, மேடம், புரொபசரைக் கூப்பிடுவதாகச் சொன்னான். 

“சரி, நீ போ, மதனா, நான் மேடத்தைப் பார்த்து விட்டுப் போய்க் கொள்கிறேன்…” 

மேடம் என்பவளுக்குச் சற்றேறக் குறைய செண்பகத்தின் வயதுதான் இருக்கும். செண்பகத்தைப் போலவே தனியள். பார்வைக்கு மிகவும் கிழண்டு போய், நரைத்த முடியோடும், இறுகிப் போன, சதா சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கும் மேடம் மேல் செண்பகாவுக்கு ஏனோ ஓர் ஒட்டுதல் இருந்தது. மேடத்தின் அறைக்குள் நுழைவதெனில், செண்பகத்துக்கு மிகப் பிடிக்கும். காரணம் அதன் தூய்மை. அனாவசியமான தூசும், துரும்பும், பேப்பர்களும், இல்லாது, பளிச்சென்று துடைத்து வைத்தாற் போல, தன்னை, தன் மேசையை, தன் அறையை வைத்திருப்பாள், மேடம். 

“மேடம், அழைத்தீர்களாமே…” என்றவாறு, மேடத்தின் முன் போய் அமர்ந்தாள், செண்பகா. 

“சாரி…போய்க் கொண்டிருந்த உன்னைக் கூப்பிட்டுட்டேன்.” “அதனால் என்ன, எங்கே செண்பகா வரல்லையேன்னு எதிர்பார்க்க யார் இருக்கா?” 

மேடம், செண்பகாவைக் கூர்ந்து பார்த்தாள். அவளுக்கே உரிய சோகம் கவிந்த முகத்தோடு, பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டாள். 

“நொந்துக்கிறையா?” 

“நோதல் என்ன, சந்தோஷித்தல் என்ன, இரண்டையும் கடந்து ரொம்ப நாளாச்சு…” 

செண்பகா சிரித்துக் கொண்டுதான் இதைச் சொன்னாள். “நாம் இருவருமே ஒரு படகில்தான் பிரயாணம் செய்கிறோம்..” என்றாள் மேடம். 

“இரு…” என்றவாறு, எழுந்து பாத்ரூம் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய், முகத்தைத் துடைத்தபடி வெளியே வந்தாள். 

“செண்பகா… நாளைக்குக் காலைலே ஒன்பது மணிக்கு வர முடியுமா?” 

“ஏன்?” 

“பாடப் பங்கீட்டை முடிச்சுடலாம்னு பார்க்கிறேன்.” 

“நாளைக்கு வேண்டாமே, மேடம். நாளை மறுநாள் வச்சுக்கலாமே.” 

“ஐயோ! நான் என் சொந்த வேலையா பாம்பே போறேன். திரும்ப ஒரு வாரம் ஆகுமே.” 

“அவசரம்னா, புரொபசர் மார்கரெட்டை வச்சு முடிச் சுடுங்களேன். அப்புறம், நான் ஏதாவது மாற்றம் பண்ண வேண்டி யிருந்தா, பண்ணிக்கறேன்.” 

“ஐயோ, நான் சும்மா உன்னைத் தொந்தரவு செய்வேனா? மார்கரெட்டை நான் கேட்டுட்டேன். அவங்க, ‘என்ன மேடம், என்னைச் சொல்றேங்களே. ஒரு கண்ணு தெரியாத மாமியார், நடக்க முடியாத மாமனார், நாலு பையன்கள், இதுகளுக்கெல்லாம் வடிச்சுக் கொட்டி, வெந்ததும் வேகாததுமா கொட்டிக்கிட்டுக் காலேஜ் வருகிறவ, நான். கிடைக்கிற ஒருநாள் விடுமுறையிலே அக்கடான்னு படுத்துப் புரளணும்போல இருக்கு எனக்கு. ஏன் செண்பகாவைக் கூப்பிட வேண்டியது தானே? குடும்பமா? குழந்தையா, குட்டியா, ஒண்டிக்காரி, வான்னா, வருவாள்!” அப்படீங்கறாங்க. என்ன பண்ண?” 

முள். 

வார்த்தைகள் ரோஜா இல்லை. பின், அவற்றுடன் முள் எப்படி ஒட்டிக் கொண்டு வரும்? வந்ததே? வலிக்கவும் செய்கிறது. கடுக்கவும் செய்கிறது, முள் குத்தினால் இரத்தம் வருமா? வந்ததே, ஆவி துடிக்குமா? துடித்ததே! 

செண்பகா சொன்னாள். 

“மேடம்… எனக்குக் குழந்தை, குட்டி இல்லை. ஒப்புக்கறேன். ஆனா, குடும்பம் இல்லாமே இருக்குமா? நான் நடத்துவது குடும்பம் இல்லையென்றால், பின் வேறு என்ன? நான் நடத்துவதற்கு என்ன பெயர்? விபச்சாரமா? விடுதியா? அல்லது சாராயக் கடையா?” செண்பகாவுக்கு இரைத்தது. பதற்றத்தில் உதடுகள் துடித்தன. கன்னங்கள், காதுகள் கோபத்தில் சிவந்தன. 

மேடம் தாக்கப்பட்ட உணர்வில் சொன்னாள். 

“அமைதி…அமைதி பொறு செண்பகா. கட்டுப்படுத்திக்கொள். உன் கோபம், மார்கரெட் மீதா? அல்லது வேறு யார் மீதா? மார்கரெட் மீதுதான் என்றால், இவ்வளவு கோபப்படும் அவசியம் இல்லை. மற்றவர்கள் மேல் என்றால், அது வீண். ஒன்று புரிந்து கொள், செண்பகா. மார்கரெட் உன்னைப் பற்றிச் சொன்னது எனக்கும் பொருந்தும் இல்லையா? நானும் உன்னைப் போல கோபப்பட்டிருக்கலாம் இல்லையா? ஏன் படவில்லை? நாம் மற்றவர்களைப்போல் இல்லை என்பதை நாம் அறிவோம். அதனாலேயே. மற்றவர்கள் நம்மைத் தூற்றுவார்கள் என்பதையும் நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும் தானே? அந்த மாதிரி, விமர்சனங்கள் எல்லாம் நமக்குப் பாதகமாகாமல் இருக்கும் படியாக நம் மனசை நாம் தயாரித்துக் கொள்ள வேண்டாமா? உன் போக்கு உனக்குச் சரியென்றால், நீ தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிற வாழ்க்கை முறை உனக்கு சம்மதம் என்றால், மற்றவர் உன் மீது வைக்கிற விமர்சனத்தை நீ ஒதுக்கித் தள்ள வேண்டும், அல்லவா? மற்றவர் அபிப்பிராயம் உன்னைத் தொந்தரவு படுத்துகிறது என்றால், என் மீதே உனக்கு நம்பிக்கை இல்லை என்பது பொருள்.” 

மேடம் எழுந்து வந்து செண்பகாவின் தோளை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள். 

ஸ்டேஷனை விட்டு இறங்கிக் காலாற கொஞ்ச தூரம் நடந்து, மேற்கைப் பார்த்துத் திரும்பி மீண்டும் நடந்தீர்கள் எனில், ஒரு வெட்ட வெளி வரும். வெட்டவெளி என்பது குப்பை கொட்டும் இடம். லாரிகளில் வரும் நகர சபைக் கழிவுகள் சேமித்து வைக்கும் இடமாகவும், சுற்றுப் புறத்துக் குடிசை வாழ் மக்கள் மற்றும் அப்பக்கம் நடந்து போக நேரிட்டோர் உபாதைகளைக் கழிக்கும் கழிப்பிடமாகவும் அது பயன்பட்டது. வெளியைக் கடந்து வந்தீர்கள் எனில், குபுக்கென்று மண்ணில் இருந்து பீச்சி அடிக்கும் நீர்ச்சுனை களைப் போல், குடியிருப்புப் பகுதியும், வீடுகளும் உங்கள் கண்களில் தட்டுப்படும். ‘சீதை அபார்ட்மெண்ட்ஸ்’ என்கிற பெயரில், ஒரு புதிய கொத்துப் பிளாட்டுகள், இதழோரம் முளைத்த சிங்கப் பல் மாதிரி துருத்திக் கொண்டிருக்கும். 

சீதை பிளாட்ஸ்களை ஒட்டிய பக்கத்து மனையில், கூரை போட்டுக் கொண்டு, தமிழரசன் மிதிவண்டி நிலையம் வைத்தி ருந்தான், அவன் அப்பா திருவாரூர்க்காரர். ஆகவே அழகாக அவனுக்குத் தியாகராஜன் என்று பெயர் சூட்டியிருந்தார். ஆனால், அவனோ, அரசியல் ஈடுபாடு காரணமாகவும், அரசியல்வழி ஏற்பட்ட தமிழ் ஈடுபாடு காரணமாகவும் தன் பெயரைத் தமிழரசன் என்று மாற்றிக் கொண்டான். ஏதோ ஒரு வகையில் அரசன்! 

தமிழரசன் மிதிவண்டி நிலையத்துக்கு இளைஞர்கள், இரு காரணம் பற்றிக் கூடுவார்கள். ஒன்று, அவன் வாங்கிப் போட்டி ருக்கும் சூடான செய்திகள் வெளிவரும் காலை, மாலைப் பத்திரிகைகள் படிக்க; இரண்டு, நிலையத்துக்குச் சற்று தூரத்தில் தான், ஒரு மகளிர் கல்லூரி இருந்தது. தமிழரசனின் நெருங்கிய நண்பன், எழில். வேலை தேடிக் கொண்டிருப்பவன். அவ்வப்போது கடைக்கு வந்து, நாட்டு நடப்பை வாசித்து அறிந்து, அவ்வப்போது ‘பராக்கு’ப் பார்த்துவிட்டுப் போகிறவன். 

மாணவிகள், கல்லூரிக்குள் சென்று அடைந்துவிட்ட, காலை பதினொரு மணி, தெரு வெறிச்சோடிக் கிடந்தது. எழில் அப்போது தான், அரசியல் தலைவர் ஒருவர், தலைவி ஒருத்தியைப் பார்த்து, ‘இழிமகள்’ என்று சொன்ன செய்தியை வாசித்து முடித்திருந்தான். அதையே அசை போட்ட வண்ணமாய் இருந்தான். சீதை குடியிருப்புக்களில் ஒன்றில் குடியிருக்கும் செண்பகா, கதவைப் பூட்டி, மீண்டும் பூட்டை இழுத்துச் சரி பார்த்துவிட்டு, சாவியைப் பைக்குள் போட்டுக் கொண்டு, படி வழி கீழே இறங்கினாள். கடை வாசலில் நின்று, தமிழரசனைப் பார்த்து, “தம்பி, பால்காரி வந்தா, இன்னைக்குப் பால் வேண்டாம்னு சொல்லிடுங்க. நாளைக் காலைலே போட்டா போதும் என்ன; சொல்லிடறீங்களா? ரொம்ப நன்றி’ என்றாள். 

“சொல்லிடறேன் மேடம்” என்றான் தமிழரசன். 

செண்பகத்தின் உருவகம் மறைந்ததும், எழில், தமிழரசனைக் கேட்டான். 

“ஏம்பா, இந்தப் பொம்பளை தனியாவா இருக்கு?” 

“உம்.’ 

“ஆம்பிளைத் துணை?” 

“எனக்குத் தெரிஞ்சு இல்லை.” 

“பார்த்தா பந்தயக் குதிரை மாதிரி இருக்கா, துணை இல்லாமே எப்படி?” 

“இதெல்லாம் கண்ணுக்கு மறைவா நடக்கிற சங்கதி, இல்லையா? நமக்கு எப்படிப்பா தெரியும்?” 

“அது சரி, புது பிரின்ஸிபாலுக்கும் அவளுக்கும் தொடுப்புன்னு, பேசிக்கிறாங்களே…” 

“நானும் பார்த்திருக்கேன். அவன் கார்லே, இவள் வந்து இறங்குவா ராத்திரி பத்து மணிக்கும் பன்னிரண்டுக்கும்.” 

“சுத்த பஜாரிங்க, கல்யாணம் கட்டிக்கிட்டு ஒருத்தனோட வாழறதுக்கு என்ன?” 

மண்ணெய்ணெயில் ஊறிய செயினைப் பல் சக்கரத்தில் மாட்டிய படியே தமிழரசன் சொன்னான். 

“கல்யாணம் கட்டிக்கிட்டா ஒரு புருஷன்தானே?’ 

இருவரும் சிரித்தார்கள்… 

செண்பகா, திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு நடந்தாள். சோதனையாக, ஆட்டோவே கிடைக்காமல் நடந்தே கல்லூரிக்குப் போக வேண்டியதாயிற்று. நிதானமாகச் சமைத்துச் சாப்பிட்டு விட்டே கிளம்பியிருந்தாள் அவள். ரஸம் நன்கு வாய்த்திருக்கவே, கூட இரண்டு பிடி உண்டுவிட்டாள் போலும், வயிறு களக் களக் கென்று இரைச்சல் இட்டதும். புதிய பிரின்ஸிபாலாய் வந்திருக்கும் சொல் விளங்கும் பெருமாள் நேற்றே அவளிடம் சொல்லியிருந்ததால், இன்று அவளுக்குப் “பேப்பர் திருத்தும் வேலை இருக்கும். ஒரேயடி யாகச் சாப்பிட்டு விட்டு மதியமே வந்துவிடு. மாலை காப்பி, டிபன் இங்கேயே பார்த்துக் கொள்ளலாம். இரவு சாப்பாடு சித்தி அனுப்பி வைப்பாள், ரெண்டு பேருக்கும். இரவு எத்தனை நாழிகையானாலும், உன்னை வீட்டில் சேர்ப்பது என் பொறுப்பு.” அவர் அவளின் ஒன்று விட்ட சித்தப்பா. அப்பாவுக்கு ஒரு காலத்தில் ஒரு நெருக்கமான நண்பராய் இருந்தவர். 

மிக மேட்டுப்பாங்கான அந்த மேம்பாலத்தில், சைக்கிளை மிதித்துக் கொண்டே யாரும் கடப்பதில்லை. இறங்கி உருட்டிக் கொண்டுதான் கடப்பது வழக்கம். சிவா, இறங்கத் தயாராக இல்லை. அவன் உடம்பில் பல குதிரைகளின் சக்தி இருந்தது. அச்சக்தியை வெளிக்காட்டும் ஆசையும் இருந்தது. ஆகவே மிதித்துக் கடந்தான். மக்கள் அனைவரும் அவன் ஆற்றலை வியந்திருப்பார்கள் என்றே மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அது தந்த உற்சாகத்தில் சைக்கிளை மிக வேகமாக மிதித்துச் சீதை குடியிருப்புக்கு வந்து சேர்ந்தான். சைக்கிள் ஸ்கூட்டர்களுக்கென்று கட்டியிருந்த நிழற்குடையில் வண்டியை நிறுத்தி, பூட்டி, ஹாண்டில் பாரில் தூக்கணாங்குருவிக் கூடு மாதிரி தொங்கிய காய்கறிப் பையை எடுத்துக் கொண்டு படிகளை நான்கே தாவலில் கடந்து முதல் மாடி, முதல் வீட்டுக்கு முன் கதவைத் தட்டினான். 

செண்பகா கதவைத் திறந்தாள். சீப்பு, அவள் முடியிலேயே பொருத்தி வைக்கப்பட்டு இருந்தது. சிவா, காய்கறிப் பையைச் சமையல் அறையில் வைத்துவிட்டு வந்தான். 

“என்ன வாங்கி வந்திருக்கே?” 

“கத்தரி, வெண்டை, வெங்காயம், பச்சை மிளகாய், கறி வேப்பிலை, இஞ்சி, ஹாங்… மறந்துட்டேனே… உருளைக் கிழங்கு…”. 

“குட்… இரேன்… அரை மணியிலே சமைச்சுடறேன்…” 

“வேணாம் மேடம். இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்..” 

“உட்காரேன்…” 

சிவா, செண்பகாவுக்கு முன் அடக்கமாக அமர்ந்தான். தலையை வாரி, ரப்பர் பேண்டால், முடித்துக் கொண்டு. ‘கொஞ்சம் இரு’ என்றுவிட்டு எழுந்த செண்பகா, குளியல் அறை சென்று முகம் கழுவி நெற்றிக்கு இட்டுக் கொண்டு மீண்டும் வந்து அமர்ந்தாள். 

“அப்புறம், புதுசா ஏதாவது எழுதினியா?” 

“கொண்டு வந்திருக்கேன், மேடம்” என்ற சிவா, தன் சட்டைக் குள்ளிருந்து ஊதுவத்திச் சுருணை மாதிரி ஒரு காகிதச் சுருளை எடுத்து அவள் முன் நீட்டினான். 

“என்ன இது?” 

“கதைதான் மேடம்.” 

“அது தெரியும். அதை இப்படியா கொடுக்கிறது? வியர்வை ஈரம்பட்டு, தாள் எல்லாம் நனைஞ்சிருக்கு. பார். உன் காரியத்திலே உசத்தியானது எழுதறதுன்னு நீ நினைக்கிறது உண்மையா இருந்தா, அந்தக் கதை எழுதறதுக்கு நீ உபயோகிக்கிற தாள், மை எல்லாம் கூட சுத்தமா, கௌரவமா இருக்க வேண்டும்தானே?” 

“சாரி மேடம். இனிமே இப்படிச் செய்யமாட்டேன்?” 

செண்பகாவுக்குச் சிரிப்பு வந்தது. அவள் சிரிக்கையில். அதிக மாகக் கண்கள் சிரிக்கும். அப்புறம் உதடுகள் விரியும், பல் வரிசைகள் புலப்படும். மேல் ஈறு தெரியாது. அவள் சிரிப்பது எதிராளியைத் தொற்றும். 

சிவாவும் சேர்ந்து சிரித்தான். 

“இத்தோடு ஆயிரம் வாட்டி, என்ன என்னத்துக்கெல்லாமோ ‘சாரி’ சொல்லிட்டே. பெரிய சாரி மன்னம்பா நீ…’ 

“நீங்க ‘ஃப்ரியா’ இருக்கும் போது படிச்சுப் பாருங்க மேடம்.”

“என்ன ‘ஃப்ரீ?’ இப்பவே…” என்றபடி கதையைப் படிக்கத் தொடங்கினாள் செண்பகா. அவ்வாறு பக்கக் கதையைச் சில நிமிடங்களில் படித்து முடித்தாள் அவள். சிவா, நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். 

“ப்ச்” இதுவும் காதல் கதைதானா? வாழ்நாள் பூரா, ஒரே கதையை எழுதிடறதுன்னு முடிவு பண்ணிட்டியா? பேரை மட்டும் மாத்தி. ஒரே முக்கோணக் காதலை, எத்தனைக் காலம்தான் எழுதப் போறே, திரும்பத் திரும்ப?… 

“நீங்கதானே மேடம் சொன்னீங்க..” 

“…..”

“சாரி மேடம். உனக்குத் தெரிஞ்சதைத்தான் நீ எழுதணும்னு நீங்கதானே சொன்னீங்க…?” 

“சொன்னேன் உலகத்துல, காதல் ஒண்ணுதான் உனக்குத் தெரியுமா? அப்பா அம்மாவைத் தெரியாதா? அக்கா தங்கச்சியைத் தெரியாதா? 

சினேகிதர்களைத் தெரியாதா? நல்ல மனுஷங்களை, அயோக்கியத் தனங்களைத் தெரியாதா? இதையெல்லாம் எழுதக் கூடாதா?” 

“ஒரு அரை மணி இரேன். ஒரு ரஸம் பண்ணி, வெண்டைக் காய் கறி பண்றேன். சாப்பிட்டுட்டுப் போயிடேன்…” 

“மதனா அக்காகிட்டே, சாப்பிட வர்றேன்னு சொல்லி யிருக்கேன், மேடம்.” 

செண்பகா எழுந்து நின்றாள். 

வெளிக் கதவைத் திறந்து, படி முனை வரை சென்று அவனை அனுப்பி வைத்தாள் திரும்பும்போது, எதிர் பிளாட் வாசலில் கோமு பிள்ளையை இடுப்பில் வைத்து, சோறு ஊட்டிக் கொண்டு நின்றிருந்தாள். செண்பகாவைப் பார்த்துச் சற்றே உதடு கோணலாக, “யாரு அந்தப் பையன்?” என்றாள் கோமு. 

உள்ளே வந்து கதவைச் சாத்திக் கொண்டு, கதவின் மேலேயே சாய்ந்து கொண்டு நின்றிருந்தாள் செண்பகா. அந்த இளம் குளிரிலும் வியர்த்தது. அவளுக்கு புகையும் சிகரெட்டை மிதித்தாற்போல, சுரீர் என்று ஒரு வலி, இதயத்தில் படர்ந்தது. 

கடவுளே! ஏன் எல்லோருமே இப்படி இருக்கிறார்கள் என்று மனம் அலறியது. 

அன்று அவள் சமைக்கவில்லை. உண்ணவும் இல்லை. 

உறக்கம் மனிதர்க்கு வாய்த்திருக்கிற பெருங்கொடை. உறக்கம். வலிகளைப் போக்குகிறது அல்லது குறைக்கிறது. சோகங்களின் அடர்த்தியை மென்மைப் படுத்துகிறது, துயரங்களைச் சந்திக்கும் புதுத்தெம்பை நல்குகிறது. 

செண்பகா விழித்துக் கொண்டு மணியைப் பார்த்தாள். பத்துக்கும் மேலாகியிருந்தது. இவ்வளவு நேரமா உறங்குவது என ஒரு லேசான வெட்கம்கூட அவளுக்கு ஏற்பட்டது. எழ மனம் இன்றி அப்படியே படுத்திருந்தாள். மீண்டும் கோமுவின் நச்சான முகமும் வார்த்தைகளும் நினைவு வந்து லேசாகக் கசந்தது. யார்தான் தன்னைக் கீழாக, அலட்சியமாய் நினைக்கவில்லை. எல்லோரும் தான். ஆண்களும்தான். பெண்களும்தான். படித்தவர்களும்தான், பாமரரும்தான். கல்வி, அறிவு, பற்றுதல். அன்பு, மரியாதை எல்லாம் இந்த இடம் வந்ததும் விடை பெற்று விடுகின்றன. மனிதனின் சகல நற்குணங்களையும் எரித்துப் போடும் உலைக்களம் அது. 

தலை லேசாக வலிப்பதாகத் தோன்றியது. சூடாக ஏதேனும் குடித்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது. எழுந்து, ஆடையைச் சரிப்படுத்தி, கண்ணாடியில் முகம் திருத்திப் பின் கதவைத் திறந்தாள். பால் பொட்டலம் கிடந்தது. குனிந்து எடுத்தாள். 

“இப்போதான் எழுந்திருக்கேளா?” என்றாள் கோமு. அவள் வீட்டு வாசலில் நின்றிருந்தாள் கோமு. 

“உம்…” 

“இன்னும் காபி கூட ஆகல்லையா?”

“இனிமேத்தான்.” 

“ஐயோ! இருங்களேன். ஒரு நிமிஷம், காப்பி கொண்டு வரேன்.” 

திடுமென்று பிடித்துக்கொண்டு பெய்யும் மழையில் நனைந்தது மாதிரி இருந்தது செண்பகாவுக்கு. என்ன மனிதர்கள் இவர்கள்? இந்தக் கரிசனம் உண்மைதானா, உண்மைதான். இதுவும் உண்மை. அது போலவே நேற்று இரவு, ‘அந்தப் பையன்’ என்று கேட்டதும் உண்மைதான். இது என்ன இரட்டை முகம் என்றால், அது இரட்டை முகம் இல்லை. ஒரு முகத்தின் இரு வெவ்வேறு பங்களிப்பு கள். சட்டென்று கோமுவின் மேல், இரக்கமும், வாத்சல்யமும் சேர்ந்தாற் போல் ஏற்பட்டது செண்பகாவுக்கு. 

“இருக்கட்டும் மாமி. ரொம்ப தாங்க்ஸ். ஒரு நிமிஷம் ஆகுமோ, காப்பி போட” என்று விட்டு உள்ளே வந்து புகுந்து கொண்டாள். 

காப்பியைப் போட்டாள். ஒரு கப் எடுத்துக் கொண்டு, படுக்கைக்கு வந்தாள். தலையணையில் சாய்ந்தபடி கொஞ்சம் கொஞ்சமாகக் காப்பியை அருந்தத் தொடங்கினாள். காப்பி நன்றாக வந்திருந்தது. இன்னும் ஒரு கப் காப்பி மிகுந்திருந்தது. இந்த நல்ல காப்பியைப் பகிர்ந்துகொள்ள யாருமே இல்லையே என்று இருந்தது அவளுக்கு. தான் தனியாக, யாரும் இல்லாமல், பகிர்ந்துகொள்ள ஓர் ஆத்மா இன்றித் தவிப்பதாக, அவளுக்குத் தோன்றியது. பசித்தது. சமைக்கவும் செய்தாள். நிதானமாகக் குளித்தாள். ஈரம் உலர மொட்டை மாடிக்குப் போனாள். இலேசாகக் காய்ந்து கொண்டி ருந்தது வெயில். கூந்தல் உலரும் மட்டும் மாடியில் இருந்தாள். அந்த உயரத்தில் இருந்து பார்க்கையில், மனிதர்கள் சிறுத்துப் போய், குள்ளம் குள்ளமான, அவர்களைப் போலவே குள்ளம் குள்ளமான வீடுகளில் வாழ்வதாகப்பட்டது அவளுக்கு. இந்நினைப்பு அவளுக் குள் ஒரு நகைப்பைத் தோற்றுவித்தது. ஆக, உயரம்தான் விஷயம். உயரத்தை அடைவது, உயரத்தில் திளைப்பதும் தான் பொருள். உயரத்தை அடைந்தவர்க்கு சூரியன் அண்மையாகி விடுகிறான். காற்று இதமாகிறான். கோமு இப்போது கீழே இருப்பாள். 

கவலைகளைத் துடைத்து, சுத்தமான சந்தோஷமான மனத்துடன் இறங்கி வந்தாள். சாப்பிட்டாள். லேசாகப் பவுடர் ஒத்திக் கொண்டு ஆடை மாற்றிக் கொண்டாள். 

பையில் போதுமான பணம் இருக்கிறதா என்று கவனித்துக் கொண்டு, கதவைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டாள். 

தமிழரசன் மிதிவண்டி நிலையத்தின் முன் நின்று, “தம்பி, ரெண்டு நாளைக்குப் பால் வேண்டாம்னு, பால் காரிக்கிட்டே சொல்லிடுங்க” என்றாள் தமிழரசனிடம். அவன் எழுந்து, மடித்துக் கட்டிய கைலியைத் தொங்க விட்டு கொண்டு, “சரிங்க, மேடம்” என்றான். 

கல்லூரியில் மதனாவிடம் செண்பகா சொன்னாள். 

“இன்னிக்கு சாயங்காலம், உன்னோட உன் வீட்டுக்கு வர்றேன் அடுத்த ரெண்டு நாள் விடுமுறையும் உன்னோடதான்…’ 

மதனா, எழுந்து ஜன்னல் வழியாக எட்டி வெளியே பார்த்தாள்.

“என்ன பாக்கறே?” 

“மழை கிழை வருதான்னு.”

“கிண்டலா?” 

“இல்லை. இல்லை. என்ன திடீர்னு…” 

“ஒரு அன்புதான். வீட்டுக்காரர் வெளியூர் போயிருக்கிறார்னு ஒரேடியா இளைச்சுத் துரும்பாப் போயிட்டே. தோழிக்கு ஒரு ஆறுதலா, ரெண்டு நாள் கூடத் தங்கணும்னுதான்…” 

“நீ வேறே….அவர் இல்லாமே இருக்கிறதினாலேதான் வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிட்டு, ரெஸ்ட் எடுத்துக்கிட்டு, அப்பா டான்னு இருக்கேன். நீ கவலைங்கறே… போயும் போயும் இந்த உடம்பைப் பார்த்துத் துரும்புங்கறியே… இது அடுக்குமா?” 

இருவருமே சிரித்தார்கள். 

மதனாவுடன் தங்க வேண்டி அன்று மாலை செண்பகா அவளுடன் சென்றாள். 

7 

காலம் முழுக்கத் தனியாகவே வாழ்ந்த செண்பகாவுக்கு, அந்த வீட்டுக்குள் நுழைந்தவுடனே விசித்திரமான எண்ணங்கள் தோன்றின. ஒவ்வோர் இடத்துக்கும் ஒரு வகை வாசனை இருக்கிறது. அந்த வீட்டுக்கும் அப்படித்தான். ஆண்கள் புழங்கும் இடத்துக்கும், ஆண்களும் பெண்களும் சேர்ந்து புழங்கும் இடத்துக்கும் தனித்தனி வாசனைகள் இருந்தன. நண்பர், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் இந்த வாசனைகளை அவள் அனுபவிக்க நேர்வது உண்டு. வீடுகளில் பண்ணும் சமையலைப் பொறுத்தோ, அவர்கள் பயன்படுத்தும் ஊதுபத்திகள் போன்ற மணப் பொருள்களைப் பொறுத்தோ உருவாகும் வாசனை அன்று, அது. மனித மனங்களின் வாசனை. மனங்களுக்கும் மணம் உண்டு. 

“என்ன யோசிக்கிற?”

“வாசனையைப் பற்றி.” 

செண்பகா, தன் யோசனையைப் பற்றிச் சொன்னாள். மதனா சிரித்தாள். 

“எங்க வீட்டுக்கு என்ன வாசனை?” 

“சொல்றேன்…” 

“குளிக்கறையா? எனக்குச் சாயங்காலமும் ஒருமுறை குளிக்கணும்.” 

“எனக்கும். முதலில் நீ முடி. எனக்கு மாற்றுக்கு ஒரு நைட்டி மட்டும் குடு.” 

குளித்தார்கள். வேலையைப் பகிர்ந்துகொண்டு சமைத்தார்கள். உண்டார்கள். 

“வா, மொட்டை மாடிக்குப் போவோம்” என்றாள் மதனா. ஜமக்காளம். தலையணைகளுடன் மொட்டை மாடிக்கு வந்தார்கள். ‘ஆ’ என்று கதறிக் கொண்டு, விரிந்து கிடந்தது வானம். கொடி மல்லிகையாய்ப் பூத்துக் கிடந்தது வானம். ஜமக்காளத்தை விரித்து மனம் ஒன்றிய ஓர் ஆத்மாவுடன், பேச்சை ஒழித்து அருகருகே, வானத்தைப் பார்த்துக் கொண்டு, மல்லாந்து படுத்துக் கிடப்பதில் ஒரு பேரின்பம் இருக்கத்தான் செய்கிறது. 

“செண்பகா” 

“சொல்லுடி.” 

“உனக்குக் கஷ்டமா இல்லை?” 

சில நிமிஷங்கள் யோசித்தவாறு இருந்தாள் செண்பகா.

“நீ எதைச் சொல்றே?” 

“இந்தத் தனி வாழ்க்கைதான்.” 

பதிலுக்கு செண்பகாவிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. சில கணங்கள் கழித்து, ‘முச் முச்’ சென்று கேட்ட சப்தங்களைக் கொண்டு மதனா யூகித்தாள். 

“அழறியாம்மா?” 

மதனா, ஒருக்களித்துத் திரும்பி, அவள் கண்களை ஊன்றிப் பார்த்தாள். அவை கலங்கியிருந்தன. 

செண்பகாவை அணைத்துக் கொண்டான் மதனா. 

“கஷ்டம்னு சொல்ல முடியாது. இதுதான் சந்தோஷம் அப்படின்னும் சொல்ல முடியாது. ஒரு மாதிரி இருக்கு. சரியா சொல்லத் தெரியலை. எனக்கு நான் வித்தியாசமா இல்லை. பார்க் கிறவங்களுக்குத்தான் வித்தியாசமா தென்படறேன். புருஷனோட, குழந்தை குட்டிகளோட இருந்தா – அப்படி எல்லாரும் இருக்கிறதனாலே அது இயல்பா தென்படும் போலும்- நான் வித்தியாசமா தெரியமாட்டேன். தனியா இருக்கேன் இல்லையா? அதனால, என்னை சுலபமானவளா நினைச்சுக்கறாங்க, எல்லோரும். ‘வான்னா வருவா, போன்னா, போவா. தனியா இருக்கிறாள். எவனோட வேணும்னாலும் போவாள், வருவாள்’ அப்படித்தானே? அதனாலே, எல்லோருக்கும் நான் ஒரு மாதிரிப்பட்டவளா தெரியறேன்.” 

“எனக்கு வேற மாதிரி படுது, செண்பகா!” 

“எப்படி?” 

“நீ தனியா இருக்கிறது, வேலைக்குப் போறது?, நிறைய சம்பாதிக்கிறது, நல்லா, கௌரவமா உடுத்தறது, பிச்சுப் பிடுங்கல் இல்லாமே வாழறது இதெல்லாம் மற்றவங்க மனசுக்குள்ளே பொறாமையை ஏற்படுத்தி, உன்னைப் பொருட்படுத்திப் பேசும் படியா ஆக்கி வச்சிருக்குன்னு நினைக்கிறேன்.” 

“அதாவது, மற்றவங்க என்னவா இருக்க நினைக்கிறாங்களோ, அப்படி நான் இருக்கிறதுனாலேயும், அப்படி அவங்க இருக்க முடியல்லை என்கிறதுனாலேயும், நான் புறம் பேசப்படறேன்.” 

“கரெக்ட் ஆக, இதுலே நீ நொந்து கொள்ள ஒன்றும் இல்லை.” 

செண்பகா, நட்சத்திரங்களையே பார்த்துக் கொண்டு இருந்தாள். உலகம் நிசப்தம் உற்றிருந்தது, தான் இழுத்து விடும் மூச்சுக் காற்றின் ஓசை தனக்கே கேட்டது அவளுக்கு. 

“தூங்கிட்டியா செண்பகா?” 

“ம்…. இல்லை…” 

“எங்க வீட்டுக்கு ஒரு வாசனை இருக்குன்னு சொன்னியே, அது என்ன?” 

“பசும் புல் வாசனை…” 

“ஏப்படி, எப்படி?” 

“மண்ணை ஒட்டிக்கிறது; மண்ணிலேயே வேர் விடறது, எப்பவும் பசுமையாவே வாழ முயலறது: யார் மிதி பட்டாலும் கசங்காமே, மீண்டும் நிமிர்ந்துக்கிறது; நிலத்தின் தன்மையைப் பார்க்காமே, ஈரத்தை மட்டும் பார்க்கிறது. யாரோடும் போட்டி போடாமே தான் உண்டுன்னு வாழறது; இது புல்லின் தர்மம். இந்த தர்மங்களோட வாழற வாழ்க்கை, புல் வாசனைதானே தரும்.” 

“நான் புல்லாய் இருந்தாலே, போதுமே செண்பகா.” 

“நீ மட்டும் என்ன, நானும்தான். நீ வீட்டுத் தோட்டத்திலே இருக்கே, நான் எங்கோ காட்டுக்குள்ளே இருக்கேன், வேறென்ன?’ மதனா, செண்பகாவின் கையை எடுத்து, உள்ளங்கையில் முத்தமிட்டாள். 

– 1988

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *