வரிசை விளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 1,362 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஊருக்குப் போகணும்னா, இவ்வளவு சீக்கிரம் வந்துட்டேளே! வரிசைச் சாமானெல்லாம் இனி மேல் எப்பொ கட்டறது?” 

“நான் என்ன செய்ய? அவசரம் அவசரமாக ஆபீஸ் காரியத்தை எல்லாம் ரெண்டு மணிக்கே முடிச்சேன். அந்த எழவெடுத்த மானேஜர், ‘ஏதோ கணக்குத் தட்டுக் கெட்டுப் போச்சு. சரி செஞ்சுட்டுப் போடா’ன்னு வேலை வச்சூட்டான். சிடுக்கான நூலைப் பிரிக்கிறதுபோல இத்தனை நாழி ஆயிடுத்து..உம்; எடு சாமானை எல்லாம் கட்டுவோம். 

“வெள்ளம் வந்தப்புறம் அணை போடறாப்போல நன்னாயிருக்கு! எப்போ மூட்டை கட்டறது! எப்போ நாலரை மணி பஸ்ஸுக்குப் போறது! ஓங்க சமாசாரமே சுவத்திலே ஆணி அடிச்சாப்போல தான். ஒண்ணுக்கும் அசையறதில்லை. இதெல்லாம் தெரிஞ்சுதான் மூட்டை முடிச்செல்லாம் சுட்டி வச்சிருக்கேன். நீங்க சட்டை கிட்டே மாத்துங்கோ. 

“எனக்குத்தான் தெரியுமே. நீயும் போறாக்குறைக்கு உங்க அக்காவும் இருந்துவிட்டால் எல்லாம் ஏரோப் பிளேன் வேகத்திலே நடக்கும். அதான் மெதுவா வந் தேன்.” 

பேசினது வெங்கடாசலமும் அவன் மனைவியும்; கும்பகோணத்திலிருந்து திருவையாற்றுக்குப் போக வேண்டியவர்கள். சின்ன மைத்துனியின் சாந்தி கல் யாணத்திற்காகப் படுக்கை, வாசனை சாமான், வெள்ளிப் பாத்திரம் எல்லாம் கும்பகோணத்திலிருந்து வாங்கிக் கொண்டு வரவேண்டுமென்று ஏற்பாடு. 

புறப்பட வேண்டிய தினத்திற்கு முதல் நாள் சாயங்காலம் பெரிய மைத்துனி கும்பகோணம் வந்து சேர்ந்தாள். தாயாரும் தகப்பனாரும் தானும் அன்று காலையிலேயே திருவையாற்றுக்கு வந்துவிட்டதாகவும், ஒரு கிருஷ்ண படம், கண்ணாடி விளக்கு. தாழம்பூ இவை களையும் சேர்த்து வாங்கி வரும்படி தகவல் சொல்லியனுப் பியதாகவும் தெரிவித்தாள். வெங்கடாசலம் கடைத் தெருவுக்குக் காலையில் போய்ச் சாமான்களை வாங்கி வந்து விட்டான். சாயங்காலமாகப் புறப்படுவதென்றும். அதற் காக இரண்டு மணிக்கே ஆபீஸிலிருந்து வந்துவிடுவதாக வும் திட்டம் போட்டிருந்தான். 

இந்தத் திட்டத்திற்குத்தான் குறுக்கே முளைத்தார். அந்த எழவெடுத்த மானேஜர். பத்திரமாக மூட்டை கட்ட வேண்டிய ‘மிராண்டா’ விளக்கிருந்தும், நேரத் திற்கு அவனால் வீட்டுக்கு வர முடியவில்லை. அதற்குப் பதிலாகத்தானோ என்னவோ, “சாமான்களை எல்லாம் கட்டினீர்களே, விளக்கை ஜாக்கிரதையாகக் கட்டி வைத்தீர்களா? கண்ணாடி சாமான்” என்றான். 

“ஆமாம்! அதான் இவ்வளவு சுருக்க வந்துட்டேள்! உள்ளிப்பூண்டுத் தோல் மாதிரி இருக்கு டோம். தெரிஞ்ச மட்டும் பத்திரமாக என் டிரங்குப் பெட்டியிலே வச்சிருக்கேன்.’ 

“பெட்டியிலே அதை வச்சிருக்கப்படாது” என்று சொல்வதற்கு வாயெடுத்தான். ஆனால் சொல்லவில்லை. குற்றம் கண்டுபிடிப்பதுபோல் ஆகிவிடும் அல்லவா? 

“மூட்டை கட்டறத்துக்கு நீங்க வந்திருக்கணும்’ என்று குத்தலாகப் பேசினாள் பெரிய மைத்துனி. 

“ஆமாம்” என்று ஒப்புக்கொண்டு விட்டு வெங்கடா சலம் பஸ்ஸுக்குக் கிளம்பினான். நல்ல வேளை: பஸ் தவறவில்லை. ஆனால் ஊசி குத்துகிற இடம்தான் அகப் பட்டது. அது கூட இல்லாதிருந்தால்? 

திருப்பந்துருத்தி வரையில் ஒரு தகராறும் இல்லை அதற்குப் பிறகு கழுதையைப்போல மோட்டார் அழும்பு செய்ய ஆரம்பித்தது. அத்துடன் கொடிக்கால் மூலையில் கையகலம் கருமேகம் எட்டிப் பார்த்துக்கொண் டிருந்தது. பெரிய மைத்துனியின் படபடப்புக்குத் தூண்டுகோ லாயிற்று அந்த மேகம். 

“காலம்பரவே சாமான்களையெல்லாம் எடுத்துக் கிண்டு போரேன்னு சொன்னேன். ஒத்தரும் கேக்கல்லே. மெத்தை, டிரங்கெல்லாம் மேலே போடாதேன்னேன்; கண்டக்டரும் கேக்கல்லே” என்றாள். 

“சும்மா லொடலொடங்காதீங்க. வண்டியிலே புளி அடைகிறாப்போல் ஆளைப் போட்டிருக்கேன். சர்க்கிள் வேறே வழியிலே எங்கேயோ இருக்கானாம். மெத்தை, டிரங்குக்குக்கூட இடமில்லேன்னு வருத்தப் படறீங்க’ என்றான் கோணமுஞ்சிக் கண்டக்டர். 

“பஸ்ஸிலே வந்தாலே இந்த எழவுதான்” என்று பஸ்தொழிலைப்பற்றிய அநுபவத்தை எடுத்து விட்டாள் பெரிய மைத்துனி. 

”கல்யாணத்துக்குப் போற பேர் எழவெடுக்காதீங்க’ என்றான் கோணமூஞ்சி, கண்ணைச் சிமிட்டி, நாக்கை நீட்டிக்கொண்டு. 

இதற்குள் கையகலமாய் இருந்த மேகம் ககன மெங்கும் விரிந்துகொண்டது. ‘டொப்டொப்’பென்று இரண்டொரு மழைத்துளிகள் விழுந்தன. 

‘அப்பா கண்டக்டர்! இப்போதாவது மெத்தையை உள்ளே எடுத்துப் போடலாமா?” 

“மழை உங்க பங்கிலேதான் இருக்கு’ என்று சொல்லிக்கொண்டு மெத்தையையும் டிரங்கையும் இதர சாமான்களையும் எடுத்துப் பலர் கையிலும் காலிலும் மடியிலுமாக வண்டிக்குள் போட்டான் கண்டக்டர் 

சகுனத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக்கூட மனத்தில் தைக்கும்படியாக இருந்தது கண்டக்டர் குரல். 

“பஸ் ரொம்ப மெதுவாகப் போகிறதே. இருட்டாகி விட்டால்?” என்று கவலையின் அடுத்த படலத்தைத் துவக்கினாள் மைத்துனி. 

“மத்தியான்னம் ஓசிலே பக்கவடா அகப்பட்டது. ஓசிலே கடவுள் காபியை எப்போ கொடுக்கிறாரோ? என்று கவலையின் தத்வத்தைக் கிண்டல் செய்தான் கண்டக்டர். 

வெங்கடாசலத்திற்குக்கூட ரோஸம் பொத்துக் கொண்டது. 

“நாம் பறக்கா விட்டால் பஸ் பறந்திருக்கும். நாம் அவசரப்படறதைப் பாத்தூட்டுப் பஸ்ஸுக்குக்கூட இடக்குப் பண்ணவேணும்னு தோணறது” என்றார். 

பேச்சு வளர முடியாதபடி பஸ் திருவையாற்றை அடைந்தது. மெத்தை முதலிய சாமான்களை ஒற்றை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கிக் கால் பர்லாங்குகூடப் போயிருக்கமாட்டார்கள். மழை சோவென்று பிடித்துக்கொண்டது. போதாக்குறைக்கு வண்டியின் கம்பி கழன்று, மெத்தை கீழே உருண்டு விழுந்தது. அதை வண்டியில் எடுத்துப் போட்டுக்கொண்டு கடைசியாகக் கொட்டுகிற மழையில் வீடு போய்ச் சேர்ந்தார்கள். 


முகூர்த்த நாளன்று பகல் சாப்பாட்டிற்குப் பிறகு வெங்டாசலத்தின் மாமியாருக்கு வரிசையை எல்லாம் பார்க்கவேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று.மாப்பிள்ளை ஒவ்வொன்றாகக் காண்பித்து வந்தான். 

“இதான் மெத்தை; வெல்வெட் கெஜம் மூணரை ரூபாயாக்கும்.” 

“நன்னாயிருக்கே!” 

“இது நாகப்பட்டினம் டிரங்கு. யானை ஏறி மிதிச்சா லும் எள்ளு முனைகூட நசுங்காது. 

“பரவாயில்லை.” 

“அதெல்லாம் பித்தளை சாமான், இதெல்லாம் வெள்ளிப் பாத்திரம்.’ 

“அப்பறம்!” 

“இது கிருஷ்ண படம். ருக்மிணி சத்யபாமை நிக்கிற ஜோர் ஒண்ணே போதும்.”

வர்ணனையுடன் சாமான் ஜாப்தா முடிந்தது.வாய் திறவாமல் மாமியார் ஒவ்வொரு சாமானாக மாறிமாறித் தொட்டுத் தடவிப் பார்த்தாள். 

“எல்லாம் தேவலை. ஒண்ணு மாத்திரம் விட்டுப் போச்சு. விளக்கைக் காணோமே!” 

வெங்கடாசலத்திற்குப் பழைய பயம் திரும்பி வந் விட்டது. ஆனால் அவன் மனைவி, “நன்னா மறந்து போவோமே! பத்திரமாய் என் பெட்டியிலே வச்சிருக் கேன்; காட்டட்டுமா?” என்று தன் சாமார்த்தியத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு விட்டுப் பெட்டியைப் போய்த் திறந்தாள். மாமியார் நின்ற இடத்திலேயே இருக்க வெங்கடாசலம் மட்டும் பெட்டியண்டை போனான். விளக்கு வைத்திருந்த அட்டைப் பெட்டியை மெதுவாகத் தூக்கினாள், அவன் மனைவி. ஏதோ ‘கல கலவென்று பவுன் புரளும் சத்தம் கேட்டது. வெங்கடாசலம். அவன் மனைவி, பெரிய மைத்துனி அவ்வளவு பேருக்கும் விஷயம் விளங்கிவிட்டது. ஆகையினாலே அவன் மனைவி கெட்டிக்காரத்தனமாகப் பொய் சொன்னதில் அவர்கள் வியப்படையவில்லை. 

“அடாடா! விளக்கை வச்சூட்டுப் பெட்டியை மாத் திரம் பந்தோபஸ்துப் பண்ணியிருக்கு. இவர் சமாசாரமே இப்படித்தரன். இப்பொ என்ன செய்யலாம்?” என்று சந்தர்ப்பத்தில் குதிரை கீழே தள்ளினதல்லாமல் குழியை யும் பறித்தால்போல் பெசினாள் மனைவி. 

”சிவனேன்னு தஞ்சாவூருக்குப் போய் உன் ஆம்படை யானையே இன்னொன்னு வாங்கிண்டு வரச்சொல்லு. பந்தல் மூளியாய் இருக்கப்படாது.”

இந்த யோசனையைச் சொல்லிவிட்டு மாமியார் உள்ளே போனாள் “அந்த எழவு விளக்கைப் பெட்டியில் வச்சுத் தொலைக்கப்படாது. பஸ்ஸின் பேயாட்டத்திலே நொறுங்கிப் போச்சு. இப்பொ தஞ்சாவூருக்குப் போக ணும்” என்று மொண மொணத்துக் கொண்டே தஞ்சாவூருக்குக் கிளம்பினான். “ரெண்டு ரோஜாப்பூ மாலையும் வாங்கிண்டு வாங்கோ” என்று உள்ளே சென்ற மாமியார் திரும்பி வந்து உத்தரவிட்டாள். 


தஞ்சாவூர் ஐயன் கடைவீதியைச் சுற்றிச் சுற்றிச் சலித்துவிட்டு ஒரு டோமும் சிம்னியும்’ வாங்கினான். குரங்குப் பிடியாக அவைகளைக் கொண்டுவந்து ஒரு புஷ் பக்கடையில் வைத்துவிட்டுக் காபி சாப்பிடப் போனான். திரும்பி வந்து ரோஜாப்பூ மாலையுடன் கிழக்கு ராஜவீதிக் காளிகோயிலண்டை திருவையாற்றுப் பஸ்ஸுக்காகக் காத்திருந்தான். கண்கள் குறிப்பின்றி அதையும் இதை யும் பார்த்தன. இரண்டு விரல் அகலத்திற்கு டோம் விண்டிருந்தது. அவன் மனமும் அப்படியே விண்டது. ஒரே சாமான் ஆதி முதல் தகரார் செய்வதென்றால் கல்லான மனங்கூடச் சஞ்சலப்படாமல் என்ன செய்யும்? 

ஒரு வேளை ஷாப்பிலேயே மூளி டோமைத் தன் தலை யில் கட்டிவிட்டானோ என்று நினைத்து அங்கே போனான். ‘கடையிலேயே மூளி சாமான் யாதொன்றும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. கடவுள் கொடுத்த கண்ணை உபயோகிப்பதுதான் வியாபாரத்தில் திறமை’ என்று ஈரோட்டாகப் பேசினான் கடைக்கார சாயபு. புஷ்பக் கடையில் விசாரிப்பது நியாயமாகப் படவில்லை. வேறு டோம் வாங்கப் போதுமான பணமில்லை. ஆகையால் காளி கோவிலுக்கே திரும்பி வந்தான். 

இரவு ஏழு மணிக்குத் திருவையாற்றை அடைந்தான். அவன் வந்ததும் வராததுமாகப் பெரிய மைத்துனி எதிர்ப் பட்டாள், 

“டோம் எங்கே?” 

“இதோ.” 

பெரிய மைத்துனி வஞ்சம் தீர்த்துக்கொண்டாள். 

“இப்போ எல்லாம் மூளி டோம்தானா கம்பெனியிலே செய்யறா?” 

மனைவியும் சேர்ந்துகொண்டாள். 

“ஜாக்கிரதையாய்க் காரியம் செய்யற பேர் காரியமும் என்னைப்போலத்தான் இருக்கு,” 

திருடனைத் தேள் கொட்டினாற்போல் இருந்தான் வெங்கடாசலம். 

“இப்போ வரிசையிலே விளக்கை வெக்கறேளோ இல்லையோ?” 

“ஒடைஞ்சது வேணாம்னு பார்க்கிறேன்” என்றாள் பெரிய மைத்துனி, 

“அதை வச்சூடுவோம். யார் கவனிக்கப்போறா? விளக்கு இல்லை என்ற குறை எதுக்கு?” என்றாள் மனைவி. 

இரவு மேளமும் தாளமும் வேதமும் பாட்டும் உறவினரும் சூழ்ந்திருக்க வரிசை எல்லாம் எடுத்து வைக்கப்பட்டன. சொல்லி வைத்தாற்போல் மூளி டோம் மாமியார் கண்ணில் பட்டது. 

“இதென்னடி, மூளி டோம் வாங்கி வச்சிருக்கேள்” என்று ரகஸியமாக நடுப்பெண்ணைக் கேட்டாள். 

“எதோ பட்டுவிட்டாற்போல் இருக்கிறது.’ 

முதலில் விளக்கை ஊரில் விட்டுவிட்டு வந்தார்கள். இப்பொழுது மூளி டோம் வாங்கி வந்திருக்கிறார்கள். இதெல்லாம் மாமியார் மனத்தில் ஏதோ திகிலை உண்டாக் கிற்று. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ள முடியாத சந்தர்ப்பமாக இருந்தது. 


தம்பதிகளுக்கு இன்பத்திலும் உறவினர்களுக்கு விருந்திலும் தூக்கத்திலும் இரவு கழிந்தது. மாமியார், பெரிய மைத்துனி, வெங்கடாசலம், அவன் மனைவி இந் நால்வருடைய உள்ளத்தில் மட்டும் இன்பம் காணவில்லை. 

அதிகாலையில் பள்ளி எழுச்சி பாடிவிட்டுப் பெண்ணை விடுதிக்கு அழைத்துப்போகத் தாயாரும் மைத்துனியும் வந்தார்கள். படுக்கை அறையில் மட்டிப்பால் ஊது வத்தி, ஸென்ட், புஷ்பம் இவைகளின் மணம் வீச எல்லாம் சரியாக இருந்தன.ஆனால் விளக்கின் டோமும், சிமினியும் மட்டும் காணோம், அவர்கள் நெஞ்சு ‘பக்’ கென்று எரிந்தது. 

“விடுதிக்கு வந்ததும், ‘டோமும் சிம்ளி’யும் எங்கே?” என்று பெண்ணைக் கேட்டாள். 

முதல் முதலாகக் கணவனைப் பார்க்கும் பெண்ணுக்கு இது ஒரு முக்கியமா? 

“அதை யாரு கவனிச்சா! ராத்திரி வச்சதைக் காலம்ப ரத்தான் பார்த்தேன். இரண்டும் வெடிச்சு ஓட்டை யாய் இருந்தது. எடுத்துக் கண் மறைவா வச்சிருக்கேன்.” 

தாயார் கண்ணில் நீர் துளித்தது. 

‘எதற்காக இந்த விளக்குக்கு இவ்வளவு கேடுகாலம்! அல்லது தனக்குத்தானா என்ற கேள்வி மாமியார் உள்ளத்தில் கொதித்தெழுந்தது. 


மணி பத்திருக்கும். வீட்டுக்கூடத்திலே’ பேபரை வைத்துக்கொண்டு புருஷர்கள் பேசிக்கொண் டிருந்தார் கள். எம்.ஏ, நம்பர், மாப்பிள்ளை என்ற வார்த்தைகள் அடிபட்டன. பிறகு மாப்பிள்ளையின் தகப்பனார் உதட்டைப் பிதுக்கினார். 

அப்பொழுதுதான் மாமியாருக்கு விஷயம் விளங் கிற்று; மாப்பிள்ளைக்கு எம். ஏ. தேறவில்லையென்று. விளக்கு உடைந்தது இதற்குத்தானா என்று நினைத்துக் கொண் டிருக்கும்பொழுதே தெருப்புறத்தில் ஏகச் சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷத்தில் நான்கு ஐந்து ஆட்களாக மாப்பிள்ளையைப் பிடித்துத் தூக்கிக் கூடத்தில் கொண்டு வந்து போட்டார்கள். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. வந்த ஆட்கள் மட்டும் பையன் எதிர்ச் சரகிலிருந்து இந்தச் சரகுக்கு வரும்பொழுது மோட்டார் மோதுண்டு விழுந்த தாகச் சொன்னார்கள். 

டாக்டர் வந்து பார்க்கும் ைைரயில் மாப்பிள்ளைக் காவது மற்றவர்களுக்காவது பிரக்ஞை இல்லை. வர்த டாக்டர் நன்றாகப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு. வெறும் அதிர்ச்சி என்று சொன்ன பிறகுதான் அங்கிருந்தவர்களுக்கு மூச்சு வந்தது. ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் பையன் தெளிவடைந்து உட்கார்ந்தான். “பெண் வந்த வேளை நல்லவேளைதான்? இன்னும் என்ன வேணும்?” என்றாள் பையனின் தாயார். 

“ஒங்க வாயாலே அப்படிச் சொல்லாதீங்கோ. மாப்பிள்ளைக்குக் கண்டம். இவ தாலி பாக்கியம் பரீக்ஷை யோடு போச்சு” என்றாள் பெண்ணின் தாயார். 

“அந்த மூளி விளக்கு வரிசைக்கு வச்சப்பவே எனக் குத் தெரியும்” என்றாள் பெண்ணின் மாமியார். 

பேச்சுத் தடித்தது. ஆனால் இருந்தவர்கள் முற்றும்படி விடவில்லை. இருந்தாலும் சம்பந்திகளுக்குள் காரணமின்றிப் பெண்ணின் மீது ஒரு கசப்பு முளைத்துவிட்டது. 

பாவம்! பெண் என்ன செய்வாள்! 

– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *