வண்மையும் வீரமும்




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

படக்காட்சிகளில் நுழைவுச் சீட்டுகள் பெறும் போதும், மின்னூர்திக்குள் இடம் பெறப் போட்டி யிடும்போதும் நம் நாட்டில் ஆண்களும் பெண் களும் நெருக்கித் தள்ளிக்கொண்டு அல்லலுறு வதைப் பலரும் பொதுப்படையான காட்சியாகக் கண்டிருப்பர். நமது தன்னலம், ‘பெண்டிருக்கும் பிள்ளைகளுக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும்’ என்ற அளவுக்கு இன்னும் பண்பட வில்லை. பொது நிகழ்ச்சிகளிலேயே இப்படியானால் உயிர்க்கு ஊறு நேரும் காலத்தில் நம் நடைமுறையைப்பற்றிக் கேட்க வேண்டியதில்லை. மின்னூர்தியில் தீ ஏற் பட்டுவிட்டால் பிற பெண்களும் பிள்ளைகளும் என்று மட்டுமல்ல ; நம் பெண்டு பிள்ளைகளைக் கூடப் பாராமல் நசுக்கித் தள்ளிவிட்டு உயிர் தப்பிப் பிழைக்க விரையும் நிலைக்கு நாம் பண்பாடுகெட்டு விட்டோம். வகுப்பு வேற்றுமை காட்டும் மனப் பான்மையின் ஈனத்தன்மை வேறு.
இந்நிலையில் கீழ்வரும் ஆங்கில மக்களைப் பற்றிய வரலாறு நமக்கு ஓர்அரியபடிப்பினை ஆகும்.
உலகின் மிகப் பெரிய கப்பல்களில் ஒன்றாகிய ‘பிர்க்கென்ஹெட்’ ஆபிரிக்காக் கரைக் கப்பால் ஒரு பாறையில் மோதி மிக விரைவில் நீரில் மூழ்கத் தொடங்கிற்று. கப்பலில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களில் முக்கால் பங்குப் பேர் போர்வீரர்கள். மற்றவர்கள் பெண்டு பிள்ளைகள் கப்பல்களிலிருந்து தப்பியோடுவதற்கான படகுகள் நூறு இருநூறு பேருக்குமேல் ஏற்றிச் செல்லத் தக்கவையாயில்லை. கப்பல் தலைவரும், போர்வீரர் தலைவரும் யாது செய்வதெனச் சட்டென்று ஆராய்ந்து முடிவுகட்ட வேண்டியிருந்தது. போர்த் தலைவர் யாதொரு அட்டியுமின்றிப் “பெண்டு பிள்ளைகளைமட்டும் காப்பாற்றுங்கள்; என் போர் வீரர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்,” என்றார்.
உடனே போர்வீரர் தலைவர், போர்முர சறைந்து வீரரை அழைப்பித்தார். கப்பல் மீகாமன் பெண்டு பிள்ளைகளை அழைப்பித்தார். சில வினாடிகளுக்குள் அவர் ஆணைப்படி பெண்டு பிள்ளை களும், சிலகிழவர்களும் படகுகளிலேறிக் கப்பலை விட்டு வெளியேறினர். போர் வீரர்கள் கப்பலின் மேல்தட்டில் அணிவகுத்து நின்று என்றுமில்லாப் பெருமகிழ்ச்சியுடன் அப்பெண்டு பிள்ளைகளிருந்த. படகு நோக்கிக் கைக் குட்டையை வீசி அவர்களை வழியனுப்பினர்.
தமக்கெனஉயிர்மறுத்த வீர மறவரை யெண்ணி, ஆங்கிலப் பெண்மணிகள் ஆராக் கண் ணீர் விட்டனர். ஆனால் மூழ்கும்கப்பலிலிருந்த வீரர், கப்பல் மூழ்குமுன்னரே இருகூறாக அணிவகுத்து நின்று ஒருவரை ஒருவர் இலக்குத் தவறாது தலைவர் உத்தரவுப்படி ஒரே நொடியில் சுட்டுக்கொன்றனர்.
பழந்தமிழ் வீரர் மரபில் வந்த நாம் இத்தகைய வீரராகும் நாள் எந்நாள்? நம் பெண் மக்கள், நம் பிள்ளைகள், நம்மிடையே முதியோர், நலிந்தோர் ஆகியவரைப் பேணித் தன்னல மறுத்துப் புகழ் பெறும் நாள் எந்நாள்? அதுவே நன்னாள், அதுவே நம் நாள் ஆகும் என்னலாம்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.