ரோபோக்கள் வேலை இழக்கின்றன





நான் நுழைந்த போது மீட்டிங் அறை நிரம்பியிருந்தது. அரசாங்க அதிகாரிகள், வணிகத் துறை நிபுணர்கள், ரோபோடிக்ஸ் நிறுவனங்களின் CEOக்கள் என்று ஒரு இருபது பேர்கள் இருந்தனர். வணிகத் துறை மூத்த ஆலோசகர் என்று லேபிள் ஒட்டியிருந்த இருக்கையில் நான் அமர்ந்து கொண்டேன். எனது வலது பக்கம் அமர்ந்திருந்த வணிகத் துறை செயலாளர் கூட்டத்தைத் தொடங்கி ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு என்னிடம் ஒப்படைத்தார்.

நான் அறையை ஒரு நோட்டம் விட்டு என் பேச்சை ஆரம்பித்தேன். ரோபோடிக்ஸ் துறையில் உபயோகப் படுத்தும் எலக்ட்ரானிக் சில்லுகளின் கடுமையான பற்றாக்குறை பற்றி நான் விரிவாகப் பேசினேன். வரவிருக்கும் பேரழிவைக் காட்டும் பல புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்டேன். அடுத்த ஆண்டு நாட்டிற்கு பத்து மில்லியன் ரோபோக்கள் தேவைப்பட்டன. ஆனால் தற்போதைய சில்லுகளின் பற்றாக்குறை தொடர்ந்தால், நம்மால் இரண்டு மில்லியனை கூட எட்ட முடியாது. பிரச்சனையை சரி செய்யாவிட்டால், ரோபோக்களை பயன் படுத்தும் பெரும்பாலான நிறுவனங்கள் கதவுகளை மூட வேண்டியிருக்கும். அதனால் ஒரு சங்கிலி எதிர்வினை ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் பெரிதாக அடி வாங்கும் என்று விளக்கினேன்.
நான் நிறுத்தியவுடன், வணிகத் துறை செயலாளர் தொண்டையை கனைத்துக் கொண்டு, “சூழ்நிலையின் தீவிரத்தை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர் என்று நினைக்கிறேன். மேலும் இந்த சில்லு தட்டுப்பாடு சில காலம் தொடரும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.” என்றார். என்னிடம் திரும்பி, “இதற்கான தீர்வு ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்.
நான் அறையை நோக்கினேன். எல்லா முகங்களும் என்னை உற்றுப் பார்க்க, “ரோபோக்களின் வேலையைச் செய்யக்கூடிய வெளிநாட்டினரை நாம் அழைத்து வர வேண்டும்.” என்றேன் உறுதியான குரலில்.
அறையில் ஒரு முணுமுணுப்பு அலை பரவியது. ஒரு ரோபோ நிறுவன CEO உரத்த குரலில், “வெளிநாட்டவர்களா? அது மட்டும் நடக்காது.” என்றார்.
“ஏன் நடக்காது?” என்று கேட்டேன் அமைதியாக.
“வெளிநாட்டவர்கள் நம் ரோபோக்கள் செய்யும் வேலைகளில் பயிற்சி பெற வேண்டுமே.”
“நம் ரோபோக்கள் செய்வது அறிவு சார்ந்த வேலை அல்ல. உடல் சார்ந்த வேலையே. அதற்கு குறைந்த பட்ச பயிற்சி மட்டுமே தேவை.”
“வெளிநாட்டவர்களை இங்கு கொண்டு வருவதற்கு நேரம் பிடிக்குமே.”
“உண்மை தான். ஆனால் நமக்கு ஒரு வருடம் டைம் இருக்கிறது. திட்டமிட்டு வேலை செய்தால் ஒரு வருத்திற்குள் வெளிநாட்டவர்களை நாம் கொண்டு வந்து விடலாம்.”
“நம்முடைய குடியேற்றக் கொள்கை என்ன ஆவது? அது வெளிநாட்டவர்களுக்கு எதிரானது.” என்றார் ஒரு அரசாங்க அதிகாரி.
“குடியேற்றக் கொள்கையில் நாம் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்… எளிதான காரியம் இல்லை தான், ஆனால் நாம் அதைச் செய்யதாக வேண்டும்.”
வணிகத் துறை செயலாளர் குறுக்கிட்டு, “நாம் என்ன செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். வெளிநாட்டினரை விரைவில் இங்கு வரவழைக்க நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும். இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் சந்திப்போம்.” என்றார்.
இது ஒரு ஆரம்பமே என்று எனக்குத் தெரியும். எந்தவொரு பாதகமான கொள்கை மாற்றங்களையும் ரோபாட்டிக்ஸ் துறை தீவிரமாக எதிர்த்துப் போராடும். ஆனால் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. இறுதியில் வெளிநாட்டவர்கள் வந்தே தீருவார்கள்.
‘வெளிநாட்டினர்’ என்று அழைக்கப்படுபவர்கள் பூமியைப் போன்றதொரு கிரகமான KX-197ன் குடிமக்கள். அவர்கள் வலிமையானவர்கள். மிகக் குறைந்த புத்திசாலித்தனம் கொண்டவர்கள். கட்டளைகளை ஒழுங்காகக் கடைப்பிடிப்பவர்கள். அவர்களுக்கு ஓய்வு தேவையில்லை, உணர்ச்சிகள் இல்லை. நம்முடைய ரோபோக்களின் இடத்தை நிரப்ப அவர்களைத் தவிர சரியான ஆட்கள் வேறு யார் இருக்கிறார்கள்?
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |