ரெயில் வண்டியில்
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1

மதுரை ஸ்டேஷன். இரவு பத்து மணி. திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் ராமசாமி தன் நண்பனுடன் உட்கார்ந்திருக்கிறான். ஜன்னல் கதவுகளெல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. பிளாட்பாரத்தின் மீது போடப்பட்டிருந்த தகரக் கொட்டகையின் மீது மழைத் துளிகன் கல்மாரி பொழிவதுபோல் சட சடவென்று விழுந்து கொண்டிருக்கின்றன. மழையுடன் வந்த புயற் காற்று, மனிதனால் நிர்மாணிக்கப்பட்ட பொருள்களைச் சிதற அடிப்பதுபோல் அத்தனை வேகத்துடன் அடித்துக் கொண்டிருந்தது; இவ்வுலகத்தை உடைத்துச் சிதைந்து, விடும்போல் இருந்தது அதன் கொடூரம். ராமசாமி ஒரு ஜன்னல் கதவைத் திறந்தான். வாடைக் காற்று ‘சில்’ என்று உள்ளே வந்தது.
“ராமு, இப்படி வந்து படுத்துக்கொள்ளேன். குளிர் காற்று அடிக்கிறதே!” என்றான் தியாகராஜன்.
ராமசாமி ஒன்றும் பதில் சொல்லவில்லை. ஆனால் அவன் தியாகராஜனைப் பார்த்த பார்வையினின்றும், மீண்டும் அவனுக்கு ஏதாவது சொல்லத் தைரியம் வரவில்லை. பிளாட்பாரத்தில் ஒருவன், “மாம்பழம்! மாம்பழம்!” என்று கத்திக்கொண்டு போனான். வண்டியில் இருந்த குழந்தை ஒன்று மாம்பழம் வேண்டுமென்று அழுதது. ‘பாவம்! குழந்தையின் பாட்டி இறந்து விட்டாள் போலும்! குழந்தை அழுகிறது!’ என்று நினைத்தான் ராமசாமி.
வண்டியும் புறப்பட ஆரம்பித்தது. தூரத்தில் இஞ்சின் ‘சீட்டி’ அடிக்கும். சப்தம் கேட்டது. “ஐயோ! ரெயிலுக்கும் பாட்டி இறந்துவிட்டாள்; வீரிட்டு அலறுகிறது” என்று மெல்ல முனகினான் ராமசாமி. வண்டி புறப்பட்டது. மழை மிகுந்த உக்கிரத்துடன் அடித்துக் கொண்டிருந்தது. அவன் கண்களில் கண்ணீர் ததும்பி மாலை மாலையாக வடிந்தது. இயற்கையன்னை தன் முன்றானையை நீரில் நனைத்து அவன் கண்ணீரைத் துடைப்பதுபோல் மழை அவன் கண்களைக் கழுவியது. “நீ ஏன் அழுகிறாய்? உன் பாட்டியும் இறந்து விட்டாளா?” என்று ராமசாமி மேகத்தைக் கேட்பது போல் இருந்தது அவன் பார்வை.
உலகமே பாட்டியை இழந்துவிட்டதுபோல் அவனுக்குத் தோன்றிற்று. ராமசாமி ஏங்கிப் பெருமூச்சு விட்டான்.
2
இருபத்திரண்டு வருஷங்களுக்கு முன்னால் நடந்த விஷயம். சுந்தரி கட்டிலில் படுத்திருக்கிறாள். ஜன்னி பிறந்துவிட்டது. டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள். உறவினர்கள் எல்லோரும் கட்டிலைச் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள். “யாரோ என்னைக் கூப்பிடுவது போல இருக்கிறதே!” என்கிறாள் சுந்தரி.
“ஒன்றுமில்லை, அம்மா! பயப்படாதே” என்கிறாள் சுந்தரியின் மாமியார்.
“என்னைக் கட்டிலை விட்டு இறக்கிப் போடுங்கள். நான் இனிமேல் பிழைக்க மாட்டேன்” என்கிறாள் சுந்தரி.
கட்டிலை விட்டு இறக்கிக் கீழே படுக்கப் போடுகிறார்கள். சுந்தரி பரக்கப் பரக்க விழிக்கிறாள், யாரையோ தேடுவது போல. அவளுடைய பார்வை தன் தாயின் மீது விழுகிறது. ‘ஆனால் அவள் பட்டிக் காட்டில் இருக்கிறாளே. எப்படிப் படிக்க வைப்பாள்?’ என்ற எண்ணம் அவளுடைய மனத்தில் உதிக்கிறது. பின்பு அவளுடைய பெரியம்மா மீது அவள் பார்வை செல்லுகிறது. ‘அன்பாய்த்தான் வளர்ப்பாள்; இருந்தாலும் இவளுக்குப் பிள்ளை அடங்கி,சொன்னபடி கேட்காதே’ என்று நினைக்கிறாள். இறுதியில் அவள் பார்வை தன் மாமியாரின் மீது விழுகிறது.
மெல்லிய குரலில், “அத்தை!” என்று கூப்பிடுகிறாள்.
“என்ன, அம்மா?”
சுந்தரி ஒன்றும் பேசவில்லை. ஏதோ பேச யத்தனித்தாள்; ஆனால் அவள் கண்களில் கண்ணீர் ததும்பியது. பேச முடியவில்லை. கடைசியில் தன்னிடம் மீதியிருந்த சக்தியெல்லாம் சேர்த்து, “ராமு” என்றாள். அவ்வளவுதான்!
பன்னிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன.
ராமசாமி ஒன்பதாவது வகுப்பில் படிக்கிறான். பரீக்ஷை முடிந்துவிட்டது. ‘இந்த இரண்டு மாதங்களிலும் டவுன் ஹால் வாசக சாலைக்குச் சென்று, ஆங்கில நாவல்கள் நிறையப் படிக்கவேண்டும். ஆங்கில அறிவை வளர்த்து, அடுத்த வருஷம் எஸ்.எஸ்.எல்.ஸி. பரீக்ஷையில் ராஜதானியில் ஆங்கிலத்தில் முதன்மையாகத் தேர்ச்சி பெற வேண்டும்’ என்று நினைக்கிறான் ராமசாமி. அதன் பின்னால் சென்னை ராஜதானிக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது அவனது அவா.
ஆனால் அவனுடைய தாத்தாவின் எண்ணம் வேறு. அவருக்குப் பூர்விகமான ஒரு பலசரக்குக் கடை உண்டு. அதில் பசியென்றும் பாராமல், தாகமென்றும் பாராமல் இரவு பகலாய் உழைத்து இருபதினாயிரம் ரூபாய் சம்பாதித்திருந்தார். ஆனால் வயசு ஏற ஏற அவருடைய மனம் வேதாந்த விஷயங்களில் செல்ல ஆரம்பித்தது. இப்பொழுது நாலைந்து வருஷமாய்க் கடைக்குப் போவதையே விட்டுவிட்டார். கைவல்ய நவநீதமும் ஞான வாசிட்டமும் படிக்க ஆரம்பித்தார். ஆனால் பூர்விகமான கடையை விட மனமில்லை. அது கூடிவந்த கடை. ஆகையால் வேலைக்காரர்களைக் கொண்டு அதை நடத்திவந்தார். இப்பொழுது கடையில் லாபமில்லை. ‘தன் ஆள் இல்லாத கடையில் லாபம் எப்படிக் கிடைக்கும்?’ என்று தம்மைத் இப்பொழுது தாமே திருப்தி செய்துகொண்டார். ராமசாமி பெரியவனாகிவிட்டான். அடுத்த வருஷம் பத்தாவது பரீக்ஷையில் தேர்ச்சி பெற்றுவிட்டானானால், பின்னர் கடை ஒழுங்காக நடக்குமென்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்தார்.
ராமசாமி சாப்பிட்டுவிட்டுக் கை கழுவிக் கொண்டிருந்தான். தாத்தா கூப்பிட்டார்.
“லீவு எத்தனை மாதத்துக்கடா, குழந்தை?” என்று கேட்டார்.
“சுமார் இரண்டு மாதம்.”
“இந்த இரண்டு மாதமும் கடைக்குப் போய், கடை வேலை கொஞ்சம் கற்றுக்கொள்ளேன்? அடுத்த வருஷம் பத்தாவது பாஸ் பண்ணிவிட்டால் கடைக்குத்தானே போகணும்? இப்பவே வியாபாரம் எப்படிப் பண்ணுவதென்று கொஞ்சம் படித்துக்கொண்டால் நல்லது அல்லவா?” என்றார் தாத்தா.
“நான் காலேஜுக்குப் போக விரும்புகிறேன்”
“காலேஜிக்குப் போய் பி.ஏ. பாஸ் பண்ணி என்ன செய்யப் போறே? செட்டிப் பிள்ளைக்குச் சர்க்கார் உத்தியோகம் கூடி வராது?”
“நான் மேலே படிக்கத்தான் போகிறேன்” என்று பிடிவாதமாய்ச் சொன்னான் ராமசாமி.
“அப்படியானால் ஒரு க்ஷணங்கூட நீ இந்த வீட்டில் இருக்க முடியாது” என்று தாத்தாவும் கண்டிப்பாய்ச் சொன்னார்.
ராமசாமியின் கண்களில் கண்ணீர் ததும்பியது. எப்படியோ ஆரம்பித்தது எப்படியோ முடிந்து விட்டதே என்று விசாலாக்ஷி பரபுரப்புடன் பாதி சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக வெளியே வந்தாள். ராமசாமி வாசற்படியை விட்டு இறங்கிக் கொஞ்சதூரம் போய்விட்டான். விசாலாக்ஷி “ராமு” என்று கூப்பிட வாயெடுத்தாள். ஆனால் தொண்டை அடைத்துக் கொண்டது. அவள் கண்களில் கண்ணீர் தத்தளித்தது. இதற்குள் ராமசாமி தானே திரும்பிப் பார்த்தான். பாட்டி வாசலில் எச்சில் கையுடன் நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்த்த பார்வை பரிதாபமாக இருந்தது. அந்தப் பார்வையை மீறி முன்னால் ஓர் அடி கூட எடுத்து வைக்க அவனால் முடியவில்லை. திரும்பி வந்தான்.
“நீயும் ஏண்டா உங்கப்பனைப்போல் பிடிவாதம் செய்கிறாய்? ‘கடைக்குப் போறேன்’ என்று சொல்லித் தொலையேன். கிழட்டு நெஞ்சம் வயிர நெஞ்சு. அடுத்த வருஷம் நீ பத்தாவது பாஸ் பண்ணிக் கடைக்குப் போகிற போது தெரியாதா? அதற்குள்ளே யார் எப்படியோ?” என்று விக்கி விக்கிச் சொன்னாள்.
“நான் எங்கப்பா வீட்டுக்குப் போகிறேன்” என்று ராமசாமி சொல்லிப் போய்விட்டான்.
ராமசாமியின் தகப்பனார் இரண்டாவது விவாகம் செய்துகொண்டு அதே ஊரில் தனிக் குடும்பம் நடத்தி வந்தார்.
3
மீண்டும் சில மாதங்கள் சென்றன.
இன்று தீபாவளி. ஊரெல்லாம் கொண்டாட்டமாக இருக்கிறது.விசாலாக்ஷிக்கு ஏன் இந்தத் தீபாவளி வந்தது என்று இருந்தது.
விசாலாக்ஷிக்கு மேக வர்ணப் பட்டு எடுத்திருந்தது. அவளுக்கு உடுத்த மனமில்லை. “நான் சாவகாசமாய்க் குளித்துவிட்டுப் பிறகு உடுத்துக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டாள். செட்டியார் புது வேஷ்டி உடுத்துப் பலகாரம் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றார். கத்திரிக் காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, உளுந்து வடை, மசால்வடை, பாசிப்பயறு லட்டு இத்தனையும் செய் திருந்தது. விசாலாக்ஷி சாப்பிட உட்கார்ந்தாள். உளுந்து வடையைப் பிய்த்து ஒரு வாய் வைத்தாள். பற்கள் மென்று கொண்டே இருந்தன. ஆனால் உள்ளே இறங்கவில்லை. ராமசாமியின் உருவம் அவள் கண் முன்னால் தோன்றியது.
“பாட்டி, எனக்கு இன்னொரு லட்டு கொடு” என்று அவன் கைகளை நீட்டிக் கேட்பதுபோல இருந்தது.
‘ஐயோ, தீபாவளி ஆச்சே! பிள்ளை ஏதானும் பலகாரம் சாப்பிட்டதோ என்னமோ? அவள் பலகாரம் செய்தாளோ இல்லையோ? பிள்ளைக்கு அவன் அப்பன் கோடி எடுத்தானோ? அவன் கஞ்சனாச்சே!’ என்று பலவாறாக நினைத்தாள். கண்களினின்றும் இரண்டு மூன்று துளிகள் கீழே விழுந்தன. உடனே எழுந்து வாசலுக்குப் போனாள்.
“ஏ சகுந்தலா! எங்க ராமசாமியைக் கொஞ்சம் கூட்டிக்கொண்டு வரமாட்டே? உனக்குப் புண்ணிய மாய்ப் போகுது!” என்றாள்.
சகுந்தலா நல்ல பெண். உடனே ஓடினாள். தெருவில் ராமசாமி பந்து விளையாடிக்கொண்டிருந்தான்.
“ஏ ராமு, ஒங்க பாட்டி உன்னை வரச் சொன்னாள்” என்றாள் சகுந்தலா.
“எதற்கு?”
“அதென்னமோ எனக்குத் தெரியாது.”
“அந்த வீட்டு வாசற்படியைக் கூட இனிமேல் மிதிக்க மாட்டேன் என்று போய்ச் சொல்” என்றான்.
“அடே ராமு! இங்கே வாப்பா!”
“அதோ உன் பாட்டியே வந்துவிட்டாள், போ” என்று சொல்லிவிட்டுச் சகுந்தலா ஓடினாள்.
பிள்ளையார் கோவில் வாசற்படியில் ராமசாமி உட்கார்ந்திருக்கிறான். அவனுடைய பாட்டி மேற்படியில் உட்கார்ந்துகொண்டு அவன் கிராப்பைத் தடவிக் கொண்டிருக்கிறாள். அவன் அவள் மடியில் சாய்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறான். திடீரென்று இரண்டு துளி நீர் கிண்ணத்தில் விழுந்தது. ராமசாமி ஏறிட்டுப் பார்த்தான். அவள் கண்களினின்றும் கண்ணீர்
மாலை மாலையாக வடிந்துகொண்டிருந்தது. அதை மறைப்பதற்காக முன்றானையால் முகத்தை மூடினாள்.
“என்ன பாட்டி?” என்றான்.
“ஒன்றுமில்லை. கோடி வேஷ்டி உனக்கு எடுத்திருக்கிறார்களோ?” என்று பாட்டி கேட்டாள்.
“ஆம்.”
“இந்தா” என்று மடியிலிருந்து ஒரு வெண்பட்டை எடுத்து அவன் கையில் கொடுத்து, “ஒருவரிடமும் சொல்லாதே!” என்றாள்.
மறு நாள் சாதம் போட்டுக்கொண்டிருந்தபோது தாத்தா, “உன் விரலில் இருந்த மோதிரம் எங்கேடி?” என்று விசாலாக்ஷியைக் கேட்டார்.
“நேற்றுத் தண்ணீர் இறைக்கும்போது கிணற்றில் விழுந்துவிட்டது.”
4
இரண்டு வருஷங்கள் செல்கின்றன.
“அடியே, மூட்டையைக் கட்டு! திருப்பரங்குன்றம் போவோம். நாளை தை கார்த்திகை, ரொம்ப விசேஷமாக இருக்கும்” என்று விசாலாக்ஷிப் பாட்டியிடம் செட்டியார் சொல்லுகிறார்.
“நாளை ராமுவிற்கு முகூர்த்தம் வைத்திருக்கிறார்களே! மறந்துவிட்டீர்களோ?”
“அதுதாண்டி திருப்பரங்குன்றம் போகலாம் என்கிறேன். உள்ளூரில் இருந்துகொண்டு பேரன் கல்யாணத்திற்குப் போகவில்லை என்றால் நாலு பேர் நாலு வார்த்தை சொல்லமாட்டார்களா? புறப்படு, ஜல்தி!”
“போகாமல் இருந்தால்தானே நாலு பேர் நாலு வார்த்தை சொல்வார்கள்? போகாமல் ஏன் இருக்க வேண்டும்?”
“அந்தப் பயல் நம்மை வந்து கூப்பிட்டானா?”
“பத்திரிகை அனுப்பியிருக்கிறான் அல்லவா? அதற்கு மேல் என்ன செய்வான்? எல்லோரையும் தானே நேரில் போய்க் கூப்பிட முடியுமா?”
“அவன் வந்து கூப்பிட்டாலொழிய, நான் போக மாட்டேன்.”
“அப்ப நான் மட்டும் போகிறேன்.”
“என்னைச் சுடுகாட்டில் கொண்டுபோய் வைத்து விட்டுப் போ.”
ராமசாமியின் வீட்டில் கொட்டும் மேளமும் ஆர்ப்பாட்டமாக இருக்கின்றன. நூற்றுக்கணக்கான ஜனங்கள் வந்திருக்கிறார்கள். காலை 9-30 மணிக்குத் திருமங்கல்யதாரணம். பெண்ணும் மாப்பிள்ளையும் மணவறையில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். மணி 9-15 ஆகிவிட்டது. எல்லாக் கிரியைகளும் முடிந்து விட்டன. திருமங்கல்யத்தை எல்லோரும் ஆசீர்வதித்துக் கொடுத்துவிட்டார்கள்.
கெட்டி மேளம் கொட்டுகிறது. ஐயர் ராமசாமியிடம் திருமங்கல்யத்தைக் கொடுக்கிறார். ஆனால் இன்னும் அவன் பெண் கழுத்தில் கட்டவில்லை. சுப முகூர்த்தம் தவறிவிடுமே என்று ஐயர் அவசரப்படுத்துகிறார். ராமசாமி திருமங்கல்யத்தைக் கையில் வைத்துக்கொண்டு தயங்கிக் கொண்டிருக்கிறான். அவன் கண்களில் கண்ணீர் ததும்புகிறது. யாருடைய ஆசீர்வாதத்துக்காக இவ்வளவு நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தானோ, அவள் இன்னும் வரவில்லை!
திடீரென்று, “ராமூ!” என்று கூப்பிட்டுக் கொண்டே, கூட்டத்தை இடித்துத் தள்ளிவிட்டுக் கொண்டு ஒரு கிழவி மணவறைக்கு முன்னால் வருகிறாள். அவள் தான் விசாலாக்ஷிப் பாட்டி! ராமசாமி உடனே திருமங்கல்யத்தை அவளிடத்தில் நீட்டுகிறான். அவள் என்ன சொல்லி ஆசீர்வாதம் செய்வாள்? அவளா ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவளுடைய கண்கள் இரண்டு நீர்த் துளிகளைச் சொரிந்தன. அவ்வளவுதான் ராமசாமி விரும்பியதும்.
5
மூன்று வருஷங்களுக்குப் பின்.
செட்டியார் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். “வருகிற வெள்ளிக்கிழமை மதுரையில் தெப்பத் திருநாளாம்” என்று விசாலாக்ஷிப் பாட்டி சொன்னாள்.
“ஆம், அதற்கு இப்ப என்ன?”
“நானும் உங்களை மாலையிட்டு முப்பது வருஷமாச்சு. ஒரு தேரா திருவிழாவா ஒன்றும் கிடையாது. நான் அப்படி வரம் வாங்கி வந்திருக்கிறேன்.”
“இப்ப என்ன சொல்கிறாய்? தெப்பத் திருநாளுக்குப் போகவேண்டும் என்கிறாயாக்கும்!”
“ஆம்.”
“சரி, அதற்கென்ன? இரண்டு பேரும் போவோம்.”
“நீங்களும் வந்துவிட்டால், வீட்டைப் பார்த்துக் கொள்வது யார்? மாடு கன்று இருக்கிறதே, அவைகளை என்ன செய்வது? மேலும் நாம் இருவரும் போனால், ‘புது மாப்பிள்ளையும் புதுப் பெண்ணும் திருவிழாப் பார்க்க வந்திருக்கிறார்கள்’ என்று ஊரார் சிரிக்கப் போகிறார்கள்!”
“நான் முதலிலேயே அப்படித்தான் நினைத்தேன். அந்தப் பயலுக்கு நாளைக்குச் சாந்தி கல்யாணம். அதற்காக மதுரைக்குப் போகணும் என்கிறாய். உண்மை அதுதானே?”
“ஆம், சாந்தி முகூர்த்தத்திற்குத்தான் நான் போகிறேன். பொய் எதற்காகச் சொல்ல வேண்டும்? எனக்கு ஐம்பது ரூபாய் கொடுங்கள்.”
செட்டியார் மனம் சிறிது இரங்கியது. “தொலை, தொலை! எதை வேண்டுமானாலும் தொவை. அவன் என்ன உனக்கு, மூட்டை மூட்டையாய்க் கட்டிக் கொடுக்கப் போகிறான் என்று நினைத்து இத்தனையும் செய்கிறாயோ, தெரியவில்லை.”
“பூமி ஏதோ தனக்குக் கொடுக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டா மேகம் மழை பெய்கிறது?”
“வட்டியும் முதலும் சேர்த்து அது கடலிலிருந்து உறிஞ்சிக்கொள்கிறதடி. உனக்குத் தெரியாதா?” என்றார் செட்டியார். செட்டியாருக்குக் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் அதிகம் உண்டு.
6
இது நாலு நாளைக்கு முன்னால் நடந்த விஷயம்.
சித்திரை மாதப் பிறப்பு. அடை மழை பிடித்துக் கொண்டதுபோல், அன்று காலையிலிருந்து மத்தியான்னம் வரையில் நல்ல மழை. வருஷத்துக்கொரு நாள் வருஷப் பிறப்பாச்சே, குளிக்காமல் இருக்கக்கூடாதே என்று விசாலாக்ஷிப் பாட்டி கிணற்றில் குளித்துவிட்டு வந்தாள். பலத்த மழை அடிக்கிறது. நனைந்துகொண்டே வந்தாள். நன்றாய் ஜலதோஷம் பிடித்துக்கொண்டது. அன்றிரவே மண்டை இடியும் காய்ச்சலும் வந்தன. டாக்டர் வந்து, “டபிள் நிமோனியா” என்றார்.
“ராமுவுக்குத் தந்தி கொடுத்தீர்களா?” என்று கேட்டாள் விசாலாக்ஷிப் பாட்டி.
“அந்தப் பயல் வரமாட்டான்” என்றார் செட்டியார்.
“நீங்கள் தந்தி கொடுங்கள்” என்றாள் பாட்டி.
மறுநாள் காலை ஜூரம் முற்றிவிட்டது. புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.
“ராமு இப்ப வீட்டுக்குள் வந்தாப்பல இருந்ததே. அதற்குள்ளே எங்கே போனான்? ராமூ! ராமூ! இன்னும் வரவில்லையா?…” அவ்வளவுதான்.
விசாலாக்ஷிப் பாட்டிக்குச் சொர்க்கவாசல் திறந்து விட்டது. சுவர்க்க வாசலில் சுந்தரி நின்று பூமாரி பொழிந்துகொண்டிருந்தாள். “வாருங்கள். அத்தை” என்று மாமியாரை வரவேற்றாள்.
7
திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் காற்றாய்ப் பறக் கிறது. காற்று, ‘ஜில் ஜில்’ என்று அடிக்கிறது. ராமசாமி ஒரு பெஞ்சியில் படுத்திருக்கிறான். கனவு காண்கிறான்.
உலகத்தின் ஒரு மூலையில் ஒரு மாமரம் தனியாக இருக்கிறது. அதைச் சுற்றிலும் கனத்த இருள். அதன் ஒரு கிளையில் மட்டும் பிரகாசம் கண்ணைப் பறிக்கிறது. அக்கிளையில் ஒரு பழம், ஒரு காய். பழம் காயைப் பார்த்துச் சொல்லுகிறது:-
“நான் இன்று போகிறேன்.”
காய் கேட்கிறது:- “எங்கே போகிறாய்?’
“நான் பழுத்துவிட்டேன். என்னைக் கூப்பிடுகிறான்”.
“என்னையும் கூடக் கூட்டிக்கொண்டு போ.”
“உன்னை இன்னும் அவன் கூப்பிடவில்லை.”
“நீ போன பின்பு நான் எப்படி இங்கே தனியாய் இருப்பேன்?”
“இப்போது உனக்குப் பயம் இல்லை. நான் சென்று வருகிறேன்.”
பழம் பொத்தென்று தரையில் விழுந்தது.
அரைத் தூக்கத்தில் இருந்த ராமசாமியின் உதடுகள் மெல்ல அசைந்தன. “பாட்டி இறந்துவிட்டாள்” என்று மெல்லிய குரலில் சொன்னான்.
ரெயிலின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்தது. தியாகராஜன் ராமசாமியை எழுப்பினான்.
“ராமு! ஸ்டேஷன் வந்துவிட்டது, எழுந்திரு!”
ராமசாமி’ எழுந்திருந்தான். “பாட்டி இறந்து விட்டாளா? நிஜமாகவா?” என்று கேட்டான்.
– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 9, 2025
பார்வையிட்டோர்: 61
